பிற

"கட்டுனா அவளத்தான் கட்டுவேன். இல்லன்னா இப்பிடியே இருந்துட்டுப் போறேன்."

"ராசா அப்பிடிப் பேசாத ராசா. உங்கப்பா இதெல்லாம் கேட்டாத் தாங்க மாட்டாரு. நானே மாமாவ விட்டுப் பேசச் சொல்றேன். நானும் உங்கம்மாட்டப் போய்ப் பேசுறேன். ரெண்டு பேர்ல ஒருத்தரு எறங்கி வந்துதானே ஆகணும். ரெண்டு பேரும் நாம் பிடிச்ச மொசலுக்கு மூணு கால்னு நின்னா எப்பிடி?"

“நான் என்ன சீமைலயா போய்ப் பொண்ணு கட்டணுங்கறேன்? இந்தாருக்கு மாதலப்புரம். ஒன்ற மைல் தொலவட்டு. அதுக்கு எதுக்கு இம்புட்டு வீம்பு? பாத்துருவமே. நானா அவரான்னு. நாப்பத்தஞ்சு வயசுக் கெழவனுக்கு அம்புட்டு மொரண்டு இருந்தா இருபது வயசு எளவட்டம் எனக்கு எம்புட்டு இருக்கும்? நீங்க ஒன்னும் உங்கொண்ணங்கிட்ட எனக்காகப் பரிஞ்சு பேச வேணாம். நான் பாத்துக்கிறேன் எம் பிரச்சனய.”

“இல்ல, ராசா. அவர் என்ன சொல்றாரு? நம்ம ஊர்ல இல்லாத பொண்ணா? நம்ம வம்சத்துலயே அந்தப் பழக்கம் இல்லையே ராசா. உள்ளூர்லயே சாதி மாறிக்கூட சம்பந்தம் செஞ்சிறலாம். ஊரு விட்டு ஊரு போயிச் செய்யிறது சாதாரணப்பட்ட வேலையா? நமக்கும் அவங்களுக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது ராசா. அவங்க பேச்சு, பழக்கவழக்கமே வேற மாதிரி. இது ஒத்தே வராது ராசா.”

மணிக்கணக்காக நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் என் தாத்தன் கடைசியில் இப்படித்தான் தரை இறங்கினார்: “சரி, விடுங்க. ஒங்க ஆசப்படியே உள்ளூர்லயே கட்டிட்டுச் சாகறேன்.”

***

“படிக்கட்டும். யாரு வேண்டாஞ்சொன்னா? அதுக்காக மதுரை வரைக்குல்லாம் விட முடியுமா? நம்ம வீட்ல எதுக்காகவும் இதுவரைக்கு ஒருத்தர் கூட இந்த ஊரவிட்டு வெளியேறுனதில்ல.” ஒன்றரை மைல் தொலைவில் இருக்கும் பக்கத்து ஊர்ப் பெண்ணையே தான் கட்ட முடியாமல் போனது இன்னும் அவருக்கு மறந்துவிடவில்லை.

“எய்யா… ஒங்கப்பாவுக்கு நீ மதுரை வரைக்குல்லாம் போறதுல விருப்பமில்லய்யா. எனக்கும் அம்புட்டுத் தொலவட்டு போயி அப்பிடிப் படிக்கணுமான்னுதான் இருக்கு. நல்லா யோசிச்சுப் பாருய்யா. இங்க எதாவது ஒண்ணுன்னா நாங்க எல்லாரும் இருக்கோம். அங்க போனா ஒனக்கு யார் இருக்கா? ஒரு காச்சல் மண்டயடின்னு வந்தா என்ன செய்ய முடியும்?”

“என்னம்மா, அவருதான் அறிவு கெட்டதனமாப் பேசுறாருன்னா நீயும் இப்பிடிக் கூறில்லாமப் பேசுற? அவனவன் எங்கெங்கேயோ போயி என்னென்னமோ சாதிச்சிக்கிட்டு இருக்கான். மூணு வருசம் இந்தா இருக்கிற மதுரைல போயிப் படிச்சுட்டு வர்றதுக்கு ஒங்களோட இம்புட்டு மாறடிக்க வேண்டியிருக்கு. அவரு அன்னைக்கு ஒன்ற மைல் தூரத்துல பொண்ணு கெட்ட முடியாத கோவத்த இன்னைக்கு எம்மேல காட்டுறாரு போல.”

இப்படி 50 மைல் தொலைவில் இருக்கும் மதுரையில் போய்ப் படிப்பதற்குப் பல நாட்கள் போராடித்தான் அதைச் சாதித்தார் என் அப்பன். படித்து முடித்து ஊர் திரும்பியவர், முதல் நாளே எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்தியைத் தன் தந்தையின் தலையில் இறக்கினார்.

வடக்கு வாசலில் மாலை ஆறரை மணிக்குப் நெல்லுச்சோற்றில் புளிக்குழம்பு ஊற்றி இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தவரிடம், “எப்பா, எங்கூட ஒரு கோவில்பட்டிக்காரப்பிள்ளை படிச்சது. நம்மாளுகதான்…” என்று துணிந்து இறக்கினார்.

சோற்றைவிட்டுக் கண்ணை எடுக்காமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தவர், குரலை உயர்த்தி, “இதுக்குத்தான் அன்னைக்கே சொன்னேன். மொதல்ல படிக்கப் போறேம்பிக. அப்பறம் அங்கயே ஒரு பொண்ணப் பிடிச்சுப் போச்சு; முடிக்கப் போறேம்பிக. இதெல்லாம் தெரிஞ்சுதான அன்னைக்கே இந்தச் சோலியே வேண்டாம்னேன்.”

“இப்ப நான் என்ன யாரோ ஒருத்தியவா கூட்டி வந்துட்டேன். இந்தா இருக்கிற கோயில்பட்டி. காலக் கஞ்சிய முடிச்சுட்டுக் கிளம்புனா மத்தியானச் சோத்துக்குப் போய்ச் சேந்துறலாம்.”

“இதுவரைக்கு இந்த வம்சத்துல யாரும் வெளியூர் போய்ப் பொண்ணு கெட்டுனதில்ல. மிஞ்சி மிஞ்சிப் போனா பத்து மைல் தூரம் போகலாம். அதுக்கு மேல போக முடியாது. கொலகாரியாக்கூட இருக்கட்டும். ஆனா அது உள்ளூர்க்காரியாவோ பக்கத்து ஊர்க்காரியாவோ இருக்கணும். ஏற்கனவே நான் நாலாரத்துல ஒரு பொண்ணு பாத்து வச்சிருக்கேன். இதுக்கு மேல இதப் பத்தி வளவளன்னு பேசுறதுக்கு ஒண்ணுமில்ல. அவ்ளதான்.”

படிப்பதற்குச் சண்டை போட்டு மதுரை வரை செல்ல முடிந்த அப்பனுக்குப் பெண் கட்டுவதற்குப் பத்து மைலைத் தாண்ட முடியவில்லை. கடைசியில் தாத்தா பார்த்த நாலாரத்துப் பெண்ணைக் கட்டிக்கொண்டுதான் என்னைப் பெற்றுப் போட்டார்கள்.

***

இப்போது என் முறை.

“கம்ப்யூட்டர் வேலைக்குப் பெங்களூர்தான் சரியான எடம்ப்பா. எங்கூடப் படிச்ச பயலுக எல்லாம் அங்கதான் போறானுக. அதான் சொல்றேன்.”

“வெறி பிடிச்ச பயலுக. தண்ணி குடுக்க மாட்டேங்கிறவனுக. வருசவருசம் இங்க இருக்கிறவன் தண்ணி குடுங்கடான்னா அங்க இருக்கிற தமிழனை எல்லாம் போட்டு அடிக்கிறவனுக. அந்த ஊர்ல போய் அடிபட்டுச் சாகவா அந்தப் பாடு பட்டு பிள்ளையப் பெத்து வளத்து ஆளாக்கி வச்சிருக்கோம்! தமிழ் நாட்டுக்குள்ள எங்க வேணாலும் போய்க்கோ. அதுக்கு வெளிய போறதுல எனக்கு விருப்பமில்ல,” என்ற சொல்லுக்கு நானும் அடங்கித்தான் போனேன்.

அடுத்தடுத்து எல்லோருமே பெங்களூரில் நல்ல வேலையில் அமர்ந்துவிட்டார்கள். பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த சரவணன் கோவில்பட்டியிலிருந்து வந்து ஒரு நாள் தங்கியிருந்து அப்பாவுக்கும் அம்மாவுக்கும் புத்தி சொல்லிச் சம்மதிக்க வைத்தான். “சரவணா, ஒன்னை நம்பித்தாம்பா அனுப்புறோம். எது நடந்தாலும் நீதான் பொறுப்பு” என்று உதவ வந்தவனைப் பீதியூட்டி அவனோடே அனுப்பி வைத்தார்கள்.

‘தை’யில் போனவனுக்கு ‘மே’யில்தான் வேலை கிடைத்தது. ஆனால் அத்தோடு பெங்களூர்தான் என்றாகிப் போனது. பெங்களூர்க்காரன் என்று பேருக்குச் சொல்லிக்கொண்டாலும் பழகுவதெல்லாம் தமிழர்களோடு மட்டுந்தான். தங்கியிருப்பது தமிழ் நண்பர்களோடு. பணி செய்யும் இடத்திலும் தமிழ் நண்பர்களோடு மட்டுமே பழக்கம் வைத்துக்கொள்வது. அடுத்தபடியாக, தமிழ் பேசும் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்களிடம் கொஞ்சம் இறங்கிப் பழகுவதுண்டு. மற்றவர்களோடு நெருங்குவதே இல்லை.

தங்கியிருந்த வீட்டில் பிரச்சனை. நண்பர்களோடு ஒத்துவரவில்லை. வேறு வீடு பார்க்கலாம் என்று தமிழ் நண்பர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்த போது, கன்னடத்துப் பிரசன்னா அடக்கவே முடியாமல் கேட்டே விட்டான்: “எங்களோடெல்லாம் தங்க மாட்டாயா? கன்னடத்துக்காரர்களோடுதான் தங்க மாட்டாயா அல்லது தமிழ் அல்லாத யாரோடும் தங்க மாட்டாயா?”

“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நான்லாம் பெங்களூர் வந்ததே பெரிய விஷயம். நம்மைப் போல இருப்பவர்கள், பேசுபவர்கள், நடந்துகொள்பவர்களோடு இருப்பது எளிதாக இருக்கும் இல்லையா? அதனால்தான்.”

“புரிகிறது. நான் தனியாகத்தான் இருக்கிறேன். இப்போதைக்கு வேண்டுமானால் என்னுடன் வந்து இருந்துகொள். ஒரு மாதம் பார். ஒத்துவந்தால் தொடர்ந்து இரு. இல்லாவிட்டால் யாராவது தமிழ் நண்பர்களிடமே போய்ச் சேர்ந்துகொள். பயப்படாதே, என் வீட்டில் கத்தி கித்தி எதுவும் இல்லை. தைரியமாக வா!”

எந்த நேரமும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருக்க வேண்டுமே என்பதைத் தவிர்த்து வேறு ஏதோவொரு தயக்கமும் இருந்தது. தெரியாத தமிழ்ப் பையன்களைவிட தெரிந்த கன்னடனோடு இருப்பது என்ன அவ்வளவு பெரிய பிரச்சனையாகவா ஆகிவிடப் போகிறது என்று மனத்தைச் சரிக்கட்டிக்கொண்டு பெட்டிகளோடு ஒரு சனிக்கிழமை காலையில் போய் இறங்கினேன். அதன் பிறகு அமெரிக்காவுக்கு வண்டியேறும் வரை ஆயிரக்கணக்கான நாட்கள் பிரசன்னாவோடுதான் ஓடின.

பெங்களூருக்கே பிதுங்கிப் போன அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அமெரிக்கா போகப் போகிறேன் என்று கொடுத்த அதிர்ச்சி சாதாரணப்பட்டதல்ல. “பக்கத்து ஊருக்குப் போனாக்கூட இருட்டுறதுக்குள்ள ஊர் திரும்பீறணுங்கிற ஊர்ல பெறந்துட்டு இப்பிடியெல்லாம் பண்ணி எங்களக் கொல்றியே! எங்களத் தூக்கி அமுக்கீட்டு நீ எங்க வேணாலும் போ!” என்று ஒப்பாரியான ஒப்பாரி வைத்தார் அம்மா. “நான் என்ன அங்கயே போய் அடக்கமாயிறவா போறேன்? ஆறே ஆறு மாசந்தானம்மா!” என்று கத்தி, சத்தம் போட்டு, கெஞ்சி, எல்லோரையும் சரிக்கட்டிவிட்டுப் புறப்பட்டும் விட்டேன்.

வந்திறங்கியது கலிஃபோர்னிய விரிகுடாப் பகுதியில். இந்தியர்களுக்குப் பஞ்சமில்லாத இடத்தில் வந்து இறங்கியது நன்றாகத்தான் இருந்தது. பழைய புத்தி போகவில்லை. பெரும்பாலும் தமிழர்களோடும் கொஞ்ச நஞ்சம் மற்ற இந்தியர்களோடும் மட்டுமே பழகிக்கொண்டிருந்தேன். பிரசன்னா புண்ணியத்தில் மற்ற இந்தியர்கள் மீதான பயம் அறவே போயிருந்தது. ஆனாலும் வெளிநாட்டவர்களோடு பழகப் பயம். துப்பாக்கியை எடுத்துப் பொட்டென்று போட்டுக்கீட்டு விட்டால் என்ன செய்வது!

பக்கத்து வீட்டில் மைக் எனும் ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞன் ஒருவன் இருந்தான். முதல் முறை வீட்டின் முன்னே வைத்துப் பார்த்தபோது, அவன் ஏதோ சொல்ல வர, ஏதோ பேயைக் கண்டது போல வெடுக்கென்று வீட்டுக்குள் வந்து கதவை மூடிக் கொண்டேன். அடுத்த சில நாட்களாக, என்ன வேலை செய்தோம் என்று எனக்கே என் மீது அருவருப்பாக இருந்தது. அடுத்த முறை அவனைப் பார்க்கும் போது இதற்கு ஈடு செய்துவிட வேண்டும் என்று எண்ணிக் காத்திருந்தேன்.

‘ஆனாலும் அதற்காக நெருங்கிப் பழகும் அளவுக்கெல்லாம் இடம் கொடுத்துவிடக் கூடாது; அளவாக வைத்துக்கொள்ள வேண்டும்; தெரியாத நாட்டில் தெரியாத ஆட்களிடம் கவனமாக இருப்பதுதானே நல்லது; யார் எப்படிப்பட்டவர்கள் என்று எப்படித் தெரிந்துகொள்வது.’

அவனும் விடுகிற பாடாய் இல்லை. விரட்டி விரட்டிப் பழகியே விட்டான். கொஞ்சம் பேசியதுமே கேட்டான்: “அன்று ஏன் என்னைப் பார்த்ததும் அப்படிப் பயந்து ஓடினாய்?”

“எங்கே துப்பாக்கியை எடுத்துப் பொட்டென்று போட்டு விடுவாயோ என்று ஒரு பயந்தான்!” என்றதும் கெக்கேபிக்கேவெனச் சிரித்தான். அந்தச் சிரிப்புக்கு நோயைக்கூடக் குணமாக்கும் சக்தி இருப்பது போல இருக்கும். அதன் பின்னர் மைக் இன்னொரு பிரசன்னாவானான். கலிஃபோர்னியா கர்நாடகம் ஆனது. எந்த ஊர் ஒருக்காலத்திலும் என் ஊராக முடியாது என்று நினைத்தேனோ அந்த ஊரே என் சொந்த ஊர் போல் ஆனது. இரண்டாம் முறையாக.

பின்னர் திருமணம் ஆகி மனைவி வந்து சேர்ந்த போது வேறொரு வீட்டில் குடியேறிவிட்டோம். முதல் சனிக்கிழமையே புதிய வீட்டில் வேலைகள் நிறைய இருக்கும் என்பதால் உதவுவதற்கு மைக் வந்திருந்தான். ஏற்கனவே அவளிடம் எவ்வளவோ மைக் புகழ் பாடியிருக்கிறேன். இருந்தாலும், சொல்லி வைத்த மாதிரி அவளும் முதல் முறை நான் செய்தது போலவே மைக்கிடம் மிரண்டு மிரண்டு நடந்துகொண்டாள்.

“ஏய், என்னைப் பார்த்து ஏன் இப்படிப் பயப்படுகிறாய்? என்னிடம் துப்பாக்கி எல்லாம் இல்லை. இருந்திருந்தால் அன்றே இவனைப் பொட்டென்று போட்டிருப்பேன்” என்று சொல்லி அவனுக்கே உரிய ஸ்டைலில் கெக்கேபிக்கேவெனச் சிரித்தான். அது முதல் அவளுக்கும் பயம் போய்விட்டது.

***

“என்னடி, ஒம்பதாவது மாசமா? இன்னும் எத்தனை நாள் இருக்கு? அத்தனை கடல் தாண்டிப் போய் அங்க ஒக்காந்துக்கிட்டுத் தனியாச் சமாளிச்சிறுவியா?” யாரோ மனையாளைப் பீதியூட்டிக்கொண்டிருந்தார்கள்.

“எனக்கென்னடி கவல? மைக் வீட்டுக்காரி இருக்காளே, அவ பத்துப் பேருக்குச் சமம். ஒரு பிள்ள இல்ல. இன்னும் ஒம்பது பிள்ள பெத்துக்கலாம். அவள நம்பி. ஊர்ல இருந்தாக் கூட இவ்ளோ தைரியமா இருக்க மாட்டேன்.”

***

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி