ஸ்டெர்லைட்-கோவிட் அரசியல்: ஐயங்கள்

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படப் போகிறது. நான்கு மாதங்களுக்கு மட்டும், அதுவும் ஆக்சிஜன் கிடைக்காமல் செத்து விழும் கோவிட் நோயாளிகளைக் காக்கும் பொருட்டு, ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் என்று தொடங்கியிருக்கிறார்கள். இது இப்படியே முடியுமா என்றால், அதற்கான விடை நம் எல்லோருக்குமே தெரியும். இது எதில் போய் முடியும் என்பதும் நமக்குத் தெரியும்.

இப்போதைய கோவிட் நோயின் பரவல் வேகத்தையும் கொடூரத்தையும் வைத்துப் பார்த்தால், இந்தியா இதைவிட்டு முழுமையாக வெளியே வர இன்னும் ஓர் ஆண்டாவது ஆகும் போலத் தெரிகிறது. நோம் சோம்ஸ்கியின் சொற்களில் சொல்வதானால், ஒரு கோமாளியின் கையில் சிக்கிச் சீரழிந்துகொண்டிருந்த அமெரிக்கா இப்போது வெகுவேகமாக அந்தக் கொடுங்கனவிலிருந்து மீண்டு வெளியேறிக்கொண்டிருக்கிறது. அது போலவே சென்ற ஆண்டில் கோவிட் வரைபடங்களில் முன்னணியில் இருந்த மற்ற பல நாடுகளும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டன.

“பிறப்பிலேயே எதிர்ப்பு சக்தியோடு பிறந்தவர்கள், எங்களை எந்தக் கிருமியும் நெருங்க முடியாது” என்று சொல்லிக்கொண்டு திரிந்தோம். நம் கேடு கெட்ட அரசியலும் அடிப்படை அறிவற்ற நம்பிக்கைகளும் சேர்ந்து விளையாண்ட விளையாட்டில், திடீரென்று ஒரே மாதத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இதுவரை எந்த நாடும் பார்த்திராத அளவுக்குக் கொடுமையான பரவலையும் சாவுகளையும் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். இது இன்னும் அதன் உச்சத்தை நெருங்கிவிட்டதா என்று தெரியவில்லை. முழுமையாக ஓர் உலுக்கு உலுக்கிவிட்டுத்தான் அடங்கும் போலத் தெரிகிறது. அதற்குப் பல மாதங்கள் ஆகும். இந்தியாவில் முடிந்துவிட்டாலும், நம்மால் பாதிப்புக்கு உள்ளாகப் போகும் வேறு பல நாடுகள் அதற்குப் பின்பும் பல மாதங்கள் எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ‘சீனா வைரஸ்’ என்று சொன்ன வாய்கள் ‘இந்தியா மாற்றுரு’ என்றோ இந்தியத் தலைவரின் பெயரையோ அதற்குச் சூட்டி அழைத்துப் பெருமைப்படலாம். அதற்கும் கூட நம் பீத்தல் பேர்வழிகள் வெட்கமின்றிப் பெருமைப்படவும் வாய்ப்பிருக்கிறது. எனவே நான்கு மாதங்களில் இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டாலும், உலக நாடுகளுக்கெல்லாம் உதவும் பொருட்டு என்று சொல்லி மேலும் பல மாதங்கள் இது நீடிக்கப்படவே செய்யும். உலகத்துக்கு உதவுவதற்காகத் தொழில் செய்கிற மரபில் வந்தவர்கள்தானே வேதாந்தா குழுமம்!

இது தமிழகத்தில் அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சியைப் பொறுத்து மாறும் என்று நம்பலாமா? நம்மில் அப்படி நம்புவோரும் இருக்கிறோம். “அப்படியெல்லாம் நம்புவதற்கு நாம் என்ன ஈனா வானாவா?” என்று கேட்போரும் இருக்கிறோம். தமிழகத்தில் ஆட்சி மாறினால் எத்தனையோ கோமாளித்தனங்கள் முடிவுக்கு வரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. கோமாளித் திருடர்களை விட அறிவாளித் திருடர்கள் எந்நாளும் கீழ் இல்லை. அதுவும் அறிவாளித் திருடர்களை விடவும் அதிகமாகத் திருடும் கோமாளித் திருடர்கள் - தன்மானமற்ற திருடர்கள் மிக மிக ஆபத்தானவர்கள். ஆனால் தமிழகத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் இவையெல்லாம் இப்படியேதான் தொடரும் என்கிற ஒரு பெரிய பட்டியலும் இருக்கிறது.

அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, தமிழகம் இந்தியாவுக்குள் இருக்கிறது. தேசபக்தியோடு இந்தியாவைச் சுரண்டும் அமைப்பு அப்படியேதான் இருக்கப் போகிறது. அதற்குள் இருக்கும் தமிழகத்தைச் சுரண்டும் அமைப்பு மட்டுமே மாறப்போகிறது. நடுவண் அரசு அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டிருப்பவர்கள் யாருக்கு வலிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதை மிக எளிதாகச் சாதித்துக்கொள்வார்கள். அதற்கு எதிலும் இறங்கி அடிக்கும் மம்தா பானர்ஜியும் உத்தவ் தாக்கரேயுமே ஈடு கொடுக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கிற போது, அதை விடப் பெரிய எதிர்ப்பு அரசியலை இங்கே அமையப் போகும் திராவிட அரசு செய்ய முடியுமா என்று தெரியவில்லை. அப்படி அவர்கள் துணிந்து இறங்கும் வேளையில், அவர்களை எதை வைத்துக் கட்டிப்போட முடியும் என்ற சூத்திரத்தைக் கை தேர்ந்த ஒரு கூட்டந்தான் மேலே அதிகாரத்தில் இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும்.

அடுத்தது, ஸ்டெர்லைட் போன்ற ஒரு நிறுவனம் நடுவண் அரசு அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களை மட்டுமே கைக்குள் போட்டுக்கொண்டிருக்கும் என்று நம்புவதும் கற்றுக்குட்டித்தனம். வெளிப்படையாக ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் பேசும் பல அரசியல்வாதிகளே அவர்களிடம் நன்கொடை வாங்கியவர்களாக இருப்பார்கள் என்பதும் நமக்குத் தெரியும். இருக்கிற எட்டு அல்லது ஒன்பது கட்சிகளில் இரண்டே இரண்டு கட்சிகளைத் தவிர எல்லோருமே ஸ்டெர்லைட்டிடம் கை நீட்டியிருக்கிறார்கள் என்றொரு தகவல் முன்பு கசியவிடப்பட்டது. அப்படிக் கை நீட்டிப் பணம் வாங்கிவிடுபவர்கள் எப்படி எதிர்நிலை எடுக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் புரிவதில்லை. கை நீட்டிப் பணம் வாங்கிவிட்டால் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டும் என்றில்லை. அது தனிமனிதச் சமன்பாடுகளிலேயே வேலை செய்வதில்லை. அரசியலில் அப்படி இருக்கவே முடியாது. அரசியல் ஆதரவு என்பது கறுப்பு-வெள்ளை நிலைப்பாடு அல்ல. அது வானவில் போன்று பல்வேறு நிறங்கள் கொண்ட நிறமாலை. கண்மூடித்தனமாக ஆதரிப்பது, கண்மூடித்தனமாக எதிர்ப்பது ஆகிய இரண்டுக்கும் நடுவில் எத்தனையோ நிறங்கள் இருக்கின்றன. நடுநிலையாகப் பேசுவது போன்றே ஆதரிப்பது, கடுமையாக எதிர்ப்பது போல் ஆதரிப்பது, சிறிய சிறிய கோளாறுகளை எதிர்த்துக்கொண்டு பெரிய பிரச்சனைகளில் ஆதரிப்பது, எல்லாத்திலும் எதிர்த்துவிட்டு அவர்களின் இருப்பை மட்டும் ஆதரிப்பது, பொதுவாக ஆதரித்துவிட்டுப் பெரிய பிரச்சனைகளில் பின்வாங்குவது என்று பல விதமான நிலைப்பாடுகள் இருக்கின்றன. இவர்கள் எல்லோருமே தொழில் செய்பவர்களுக்கு வேண்டும். இவர்களுக்கும் நிதி ஆதரவு கொடுக்க முதலாளிகள் வேண்டும். முதலாளித்துவக் கட்டமைப்பில் இதுவொரு தவிர்க்க முடியாத நச்சுக் கூட்டணி.

“ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட்டைத் திறக்க வேண்டும்” என்ற செய்தி கசியவிடப்படும் போதே, அதற்கான கைக்குள் போடும் (லாபியிங்) வேலைகளும் தொடங்கியிருக்கும். சட்டத்தின் படி, இது போன்ற ஒரு பெரிய முடிவை ஓர் இடைக்கால அரசு தான்தோன்றித்தனமாக எடுக்க முடியாது என்று வைத்துக்கொண்டாலும் (“அப்படியே சட்டத்தின் ஆட்சிதான் இங்கே நடந்துகொண்டிருக்கிறதாக்கும்!” என்று வேறு கேட்பீர்கள்), இது மக்களின் உயிர் தொடர்பான பிரச்சனை என்பதால், மக்கள் நலன் கருதி அவசர கால முடிவாக இதை அறிவித்திருக்க முடியும். அதுவும் இந்தியச் சட்டமன்றங்களில் எந்தச் சட்டமன்றமும் கண்டிராத அளவில் மக்களாட்சிக்கு எதிரான கோமாளித்தனங்களைக் கண்ட வரலாறுடைய நம் சட்டமன்றத்தில், அக்கோமாளித்தனத்தின் வழிவந்த அடிமைக் குஞ்சுகள், அப்படியெல்லாம் செய்யாமல், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி எல்லோருமாகச் சேர்ந்து முடிவெடுத்து அறிவித்திருப்பதை நாம் வரவேற்கத்தான் வேண்டும். சட்டத்தின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது என்று நம்புவதற்கு இதற்கு மேலும் உங்களுக்கு என்ன வேண்டும்?

நீங்கள் எல்லாம் சொல்கிற மாதிரி, நோய்ப் பரவலைக் காரணமாக வைத்து மாநிலத் தேர்தல் முடிவுகளையோ வாக்கு எண்ணிக்கையையோ ரத்து செய்து உத்தரவிட்டு மக்களாட்சியைப் படுகொலை செய்யும் அளவுக்கு மனச்சாட்சி இல்லாத மோசமான நடுவண் அரசல்ல நம்முடையது. நம்புங்கள். இதுவே செய்யாதவர்கள், மொத்த நாட்டையுமே அவசர நிலை அறிவித்து விழுங்கிவிடுவார்கள் என்றெல்லாம் நீங்கள் பேசுவது ஏற்கத்தக்கதாக இல்லை. அதற்கான அவசரமும் இல்லை. இது போன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாட்டு நலன் கருதிச் சொன்ன பேச்சைக் கேட்கிற எதிர்க்கட்சிகள் இருக்கும் வரை சட்டத்தின் ஆட்சியே நடத்த அனுமதிக்கப்படும்.

நான்கு மாதங்களாகத் தொடங்கி, ஏழு மாதங்களாகவோ பத்து மாதங்களாகவோ நீட்டிக்கப்படும் ஆக்சிஜன் தயாரிப்பு, அடுத்து அது தாமிர ஆலையாக இல்லாமல் நிரந்தர ஆக்சிஜன் ஆலையாக மாற உதவினால் அதையும் வரவேற்போம். ஆனால் மெதுவாகத் தாமிரம் தயாரிக்கும் வேலையும் தொடங்கும் அல்லது தாமிர உற்பத்தியைத் தொடங்குவதற்கான தயாரிப்பு வேலைகள் தொடங்கும். முதலில் ஆலையை அரசு கையகப்படுத்தி இருக்க வேண்டும். இப்போது தொடங்கும் வேலையையும் அரசு நடத்தியிருக்க வேண்டும். அதுதான் மக்களுக்காக ஆளும் எந்த அரசும் செய்யும்.

“செத்து மண்ணாகிப் புல் முளைத்திருக்குமே! ஏழு கோடி உயிர்களையும் அவர்கள்தானே காப்பாற்றினார்கள்! அவர்கள் போட்ட உயிர்ப் பிச்சையை வைத்துக்கொண்டு வெட்கமில்லாமல் அவர்களையே ஆலையை மூடச் சொல்கிறீர்களே!” என்று நாளை தமிழர்களின் மனச்சாட்சியை உலுக்குவார்கள் விலை போன மனச்சாட்சிக்காரர்கள். “வேண்டும் வேண்டும்! ஸ்டெர்லைட் வேண்டும்!” என்று வீதிகளிலும் செய்தித் தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் ஆதரவு பெருகுவது போல் கூலிக்கு மாரடிப்பவர்கள் இறக்கிவிடப்படுவார்கள். அப்போது, நீங்களும் நானுமே நமக்கே தெரியாமல், “அவர்கள் சொல்வதும் நியாயந்தானே?” என்று சொல்லத் தொடங்கியிருப்போம்.

அடுத்து வரும் ஆட்சியில் தூத்துக்குடியில் 13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு விசாரணைக் குழு அமைக்கப்படுமா? “நீ ஏழு கோடி உயிரைக் காப்பதாக இருந்தாலும் சரி, எழுநூறு கோடி உயிரைக் காப்பதாக இருந்தாலும் சரி, உப்புத் தின்றதற்குத் தண்ணீர் குடித்தாக வேண்டும்” என்று சொல்கிற கறார் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட எந்தக் கட்சிக்காவது இருந்ததா? இழவு வீட்டில் அரசியல் செய்யக் கூடாது என்பார்கள். கொலைகாரனை வீட்டுக்குள் விடுவது, அதுவும் உங்கள் உயிர் காக்க வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு வருகிற திருட்டுப் பயலான கொலைகாரனை வீட்டுக்குள் விடுவது மட்டும் சரியா என்ன? இதை அதிகாரத்துக்கு வருபவர்கள் நினைவில் வைக்கவும் மாட்டார்கள்; மக்களுக்கும் மறக்கடிக்கவே முயல்வார்கள். அதுதான் அவர்களின் பிழைப்புக்கான வழி. ஆனால் மக்கள் மறக்கக் கூடாது. நீங்களும் நானும் மக்கள்.

இந்நேரம் தமிழக அரசு வேதாந்தா நிர்வாகத்தை அழைத்து, “அடுத்த நான்கு மாதங்களுக்கு ஒழுங்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொடுங்கள்” என்று சொல்லியிருந்தால், அதற்கு வேதாந்தாவும் பயந்து போய் வந்து வேலையைத் தொடங்கியிருந்தால், அதுதான் வலிமையான அரசாங்கம் நடப்பதற்கான அறிகுறி. அவ்வளவு கூட வேண்டாம். “உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க, மக்கள் நலன் கருதி, நாங்கள் வேலையைத் தொடங்குகிறோம். நாங்கள் இப்போது செய்யும் உதவியைக் கருத்தில் கொண்டு எங்களின் பழைய பாவங்களுக்கு மன்னிப்பு கொடுக்க வேண்டும்” என்று பேரம் பேசியிருந்தால் கூட ஒரு வியாபாரியின் கோரிக்கையாக ஏற்றுக்கொள்ளலாம். இவர்கள் எல்லோருமாக விளையாடும் விளையாட்டுதான் நமக்குப் பெரும் எரிச்சலூட்டுவது. அவர்கள் வந்து, “நாங்கள் மக்கள் உயிரைக் காக்கத் துடிக்கிறோம்; எங்களுக்கு அனுமதி வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்திடம் போய்த் துடிப்பார்களாம். “ஐயா, நீங்களே திறக்கக் கூடாது என்று பூட்டிப் போடச் சொன்ன பாதகர்களின் ஆலை ஐயா இது. இதைத் திறக்க மாட்டோம் ஐயா” என்று அதைத் தமிழக அரசு எதிர்த்து வாதிடுமாம். உச்ச நீதிமன்றம் உடனே தமிழக அரசிடம், “இதை நீங்களே ஏன் எடுத்து நடத்தக் கூடாது?” என்று கேட்டுவிட்டு, அந்தப் பக்கம் திரும்பி, “நீங்கள் நடத்துவீர்களோ அவர்கள் நடத்துவார்களோ யார் நடத்துவார்களோ அது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் ஆக்சிஜன் உற்பத்தி இப்போதே தொடங்க வேண்டும்” என்பார்களாம். இந்த வேகத்தை ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் செத்து விழுந்துகொண்டிருக்கும் மாநிலங்களில் ஆளும் அரசுகளைக் கேட்பதிலும் காட்டியிருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்!

“ஆக்சிஜன் பற்றாக்குறை என்று ஒன்றே இல்லை; கோவிடால் இந்தியாவில் நடக்கும் சாவுகளே மிகவும் குறைவு; இது எல்லாமே இந்தியா வல்லரசாகி விட்டதைச் சகிக்க முடியாத எதிரிகள் கிளப்பிவிடும் புரளிகள்” என்று ஒரு கூட்டம், சமூக வலைத்தளங்களில் உதவி கேட்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கூட மிரட்டி அவர்களின் பதிவுகளை நீக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதையே இன்னும் பெரிய அளவில் அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. இந்தியா வல்லரசானதை விடக் கொடுமை, தமிழகத்திலும் கேரளத்திலும் உ.பி. மாடல் பற்றியும் குஜராத் மாடல் பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் கோமாளித்தனம். இதில் அறிவில்லாமல் ஈடுபட்டிருக்கும் கூட்டமும் இருக்கிறது; தான் செய்கிற பரப்புரை எவ்வளவு பெரிய மோசடி என்று தெரிந்தே செய்யும் கூட்டமும் இருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்றும் நமக்குத் தெரியும்.

இவ்வளவு கீழான வேலைகளையும் கடவுளின் பெயரால் செய்ய முடிகிறது என்றால் இவர்கள் எப்படிக் கடவுளை நம்புபவர்களாக இருக்க முடியும் என்றுதானே உங்களுக்கு வியப்பாக இருக்கிறது! “அது கடவுள் நம்பிக்கையெல்லாம் இல்லைங்க, மத வெறி” என்கிறார்கள் சிலர். “மத வெறியெல்லாம் இல்லைங்க, ஒரு சிலரின் சாதி வெறிக்கு அப்படிப் பெயர் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்” என்கிறார்கள் இன்னொரு சாரார். “ஒரு வெறியும் இல்லைங்க, எவனோ பிழைப்புக்குப் பண்ற திருட்டு வேலைகளுக்கு ஏமாளிப்பயலுக இந்தப் பெயர்களைச் சொல்லிக்கிட்டுப் பின்னால் போகிறார்கள்” என்றும் சிலர் சொல்கிறார்கள். இதில் எதுதான் உண்மை என்று புரிந்து தொலைய மாட்டேன் என்கிறது நமக்கு. பற்றாக்குறையே இல்லாத ஆக்சிஜனைத் தயாரிக்கவா இவ்வளவு அவசரம்? அதுவும் அதிகம் பாதிக்கப்படாத தமிழகத்துக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுமாம். அடுத்த நிமிடமே மாடியிலிருந்து ஒரு கத்துகிறான்: “முன்னுரிமையும் கிடையாது. மண்ணாங்கட்டியும் கிடையாது. ஒழுங்காத் தயாரிக்கிற ஆக்சிஜனைப் பூராம் எங்கட்டக் குடுத்துட்டுப் போயிட்டே இரு.”

தூத்துக்குடி மக்கள் நினைத்தால் இதையும் போராடித் தடுக்கலாம். அப்போது என்ன நடக்கும்? ஏற்கனவே ஏற்பட்ட எல்லாத் தோல்விகளுக்கும் கொரோனா மேல் பழியைப் போட்டுத் தப்பியது போல் இந்தியாவில் ஏற்படும் எல்லாச் சாவுகளுக்குமான பழி தூத்துக்குடி மக்கள் மீது போடப்படும். ‘சாகக் கிடக்கிற மக்களுக்குக் கூட உதவ மனசில்லாத இந்தக் கூட்டம் இருந்தால் என்ன கொல்லப்பட்டால் என்ன?’ என்கிற பிம்பம் கட்டியெழுப்பப்படும். அதற்கும் பக்கத்து ஊர்க்காரர்களே பலியாகி ஏசுவார்கள் பேசுவார்கள். எப்படி ஒரு சூழ்நிலையில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள் பாருங்கள். அடுத்து தாமிரம் தயாரிக்க வேண்டிய கட்டாயத்தையும் உருவாக்கிவிடக் கூட வாய்ப்பிருக்கிறது.

ஆலை வேலையைத் தொடங்கும் போது, அவர்கள் என்னென்ன உற்பத்தி செய்கிறார்கள் - என்னென்ன தகிடுதத்தங்கள் செய்யாமல் இருக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவில் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் துறைக் கண்காணிப்பாளர், சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆகியோரோடு சேர்த்து, ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சூழலியலாளர்கள், உள்ளூர் மக்கள் போன்றோரின் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும் என்று பேசப்பட்டிருக்கிறது. முதலாளி சார்பாகவும் பிரதிநிதிகள் இருக்க வேண்டும், மக்கள் சார்பாகவும் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற நியாய உணர்வோடு செயல்பட்டிருக்கிறார்கள். பாராட்டத்தான் வேண்டும்.

ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது என்ற செய்தி வந்தவுடன் வேதாந்தாவின் பங்குச்சந்தை மதிப்பு 5% ஏறியது. அதாவது அதிலிருந்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஏதோ நம்பிக்கைக் கீற்று தென்பட்டிருக்கிறது. அதனால்தான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கைக் காசைப் போட்டு ஊருக்கு நல்லது செய்யும் நிறுவனத்துக்கு நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஆதரவு அளிப்பவர்களா இந்த முதலீட்டாளர்கள்? பங்குச் சந்தை எப்படி வேலை செய்கிறது பங்குச் சந்தையில் பணம் போடுபவர்கள் எப்பேற்பட்டவர்கள் என்பதைத் தெரிந்தவர்களுக்கு இது நன்றாகப் புரியும். கடந்த ஐந்தாண்டுகளில் 2018 தொடக்கத்தில்தான் வேதாந்தாவின் பங்கு அதன் உச்ச மதிப்பை அடைந்தது. அந்த ஆண்டு நடுவில்தான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போதிருந்து அவர்களுக்குப் பிடித்திருந்த சனி இப்போதுதான் நீங்குவதற்கான அறிகுறி தென்பட்டிருக்கிறது. அப்போதிருந்து 2020 மார்ச் வரை குறைந்துகொண்டே வந்த பங்கு மதிப்பு, அதிலிருந்து மீளத் தொடங்கியது. கடந்த நவம்பரிலிருந்து ஏறுமுகமாக இருக்கிறது. இப்போது எல்லோரும் எழுந்து மூஞ்சியைக் கழுவி நம்பிக்கையோடு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நம் உயிரை எடுக்காமல் நன்றாக இருந்தால் நமக்கென்ன கஷ்டம்! ஆனால் இந்தக் கணக்கு அப்படி இல்லையே! அதுதானே நமக்குப் பிரச்சனை.

கடைசியாக ஒரு தகவல். சென்ற மாதந்தான் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் தாமிர உருக்காலை கட்டுவதற்கு இந்திய மாநில அரசுகளில் ஒரு தகுந்த கூட்டாளி தேடிக் கொண்டிருப்பதாக வேதாந்தா குழுமம் அறிவித்தது. அந்த மாநிலம் எதுவாக இருக்கப் போகிறதோ தெரியவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நாட்டை விட இப்போதைய தமிழ் நாடு நிறையவே விழித்துக் கொண்டிருக்கிறது. அதனால் அது நாமாக இராது என்று நம்புவோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி