ஐ. நா. ஆட்சி மற்றும் அலுவல் மொழிகள்

உலகில் மொத்தம் 6500 மொழிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் பெரிதளவில் பேசப்படும் மொழிகள் (பெரிய மொழிகள் என்று வைத்துக்கொள்வோம்) அனைத்தும் மொத்தமாக 11 மொழிக் குடும்பங்களுக்குள் அடைக்கப்படுகின்றன. அவற்றுள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பமே மிகப் பெரியது. உலக அளவில் அதிகமாகப் பேசப்படும் மொழி என்றால் முதலில் ஆங்கிலம் வருகிறது. அடுத்ததாக மாண்டரின், இந்தி ஆகியவை வருகின்றன. ஆங்கிலத்துக்கும் இந்திக்கும் மற்றவர்களும் பேசுவதால் இந்த இடம். தாய்மொழி என்ற கணக்குப்படி பார்த்தால், முதலில் மாண்டரினும் அடுத்து ஸ்பானியமும் வருகின்றன. அதன் பின்னரே ஆங்கிலமும் இந்தியும்.

இது ஒரு புறம் இருக்க, உலக நாடுகளையெல்லாம் ஒன்றிணைக்கும் ஐக்கிய நாடுகள் (ஐநா) மன்றம் தன் ஆட்சி (official) மற்றும் அலுவல் (working) மொழிகள் என்று சிலவற்றை அறிவித்திருக்கிறது. அதில் தம் மொழியையும் புகுத்திவிட வேண்டும் என்று எல்லா நாடுகளும் அவர்களால் முடிந்த வேலைகளைச் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். ஆனாலும் ஐநா சில அடிப்படைகளின் அடிப்படையிலேயே இம்மொழிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது. அம்மொழிகள் யாவை? அவ்வடிப்படைகள் யாவை?

மொழிகள்:
1. அரேபியம்
2. சீனம்
3. ஆங்கிலம்
4. பிரெஞ்சு
5. ருசிய மொழி
6. ஸ்பானியம்

ஐநா மன்றத்தின் ஆவணங்கள் அனைத்துமே இந்த ஆறு ஆட்சி மொழிகளிலுமே இருக்க வேண்டும். அலுவல் மொழி என்பது ஐநா ஊழியர்கள் தமக்குள் தகவல் தொடர்பு வைத்துக்கொள்வதற்கான மொழி. ஐநா செயலகத்தின் அலுவல் மொழிகளாக ஆங்கிலமும் பிரெஞ்சும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஆறு மொழிகளில் ஒவ்வொரு மொழிக்கென்று ஆண்டில் ஒரு நாள் தேர்ந்தெடுத்துக் கொண்டாடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஷேக்ஸ்பியர் பிறந்த நாளன்று ஆங்கில நாள் கொண்டாடப்படுகிறது. ருசியக் கவிஞர் அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்த நாளன்று ருசிய மொழி நாள் கொண்டாடப்படுகிறது.

1946-இல் ஐநா மன்றம் அமைக்கப்பட்ட போது அரேபியம் தவிர்த்து மற்ற ஐந்து மொழிகளும் ஆட்சி மொழிகளாகவும் ஆங்கிலமும் பிரெஞ்சும் அலுவல் மொழிகளாகவும் அறிவிக்கப்பட்டன. பின்னர் வெவ்வேறு காலகட்டங்களில் மற்ற மூன்று மொழிகளும் ஐநாவின் வெவ்வேறு உறுப்புகளுக்கு அலுவல் மொழிகளாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

1973-இல் அரேபியம் ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஐநாவில் மற்ற மொழிகளைவிட ஆங்கிலமே அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்று அவ்வப்போது பிரச்சனை எழுந்திருக்கிறது. ஸ்பானிய மொழி பேசும் நாடுகள் அனைத்தும் சேர்ந்து ஒரு முறை இதை எழுப்பினார்கள். “ஆறு மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கும் நிலையை அடைவது சாத்தியமே இல்லை, ஆனாலும் முடிந்த அளவு முயற்சிப்போம்” என்று சொல்லி அப்போதைக்கு அதை முடித்து வைத்தார்கள்.

ஐநாவில் மொத்தம் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றுள் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், அதாவதுகிட்டத்தட்ட 120 நாடுகள், இந்த ஆறு மொழிகளில் ஏதேனும் ஒன்றில் அலுவல் செய்பவை. ஆனால் மக்கட்தொகை என்று எடுத்துக்கொண்டால் உலக மக்களில் பாதிப்பேர் கூட இந்த ஆறு மொழிகளையும் பேசுபவர்கள் அல்லர். எனவே அரை ஆட்சி (semi-official) மொழி என்று சிலவற்றைச் சேர்க்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதில் வங்கம், பர்மியம், ஜெர்மன், குஜராத்தி, இந்தி, இந்தோனேசியம், இத்தாலியம், ஜப்பானியம், கன்னடம், கொரியம், மலாய், மலையாளம், மராத்தி, பாரசீகம், போர்ச்சுக்கீசியம், பஞ்சாபி, தாய், தமிழ், தெலுங்கு, துருக்கியம், வியட்னாமியம், உருது, பன்னாட்டுச் சைகை மொழி, பன்னாட்டு பிரெய்லி என்று ஒரு பெரிய பட்டியலே அடக்கம்.

இது இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனினும், ஐநாவின் ஊடகப் பிரிவு சில மொழிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. சமீப காலங்களில் ஊடகப் பிரிவின் பெரும்பாலான ஆவணங்கள் வங்கம், இந்தி, உருது, மலாய், ஸ்வாஹிலி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இது ஒரு புறம் ஓடிக்கொண்டிருந்தாலும், ஆட்சி மொழியாகவே தம் மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சில நாடுகள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

வங்கதேசம் வங்க மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை இந்தியாவிலிருந்தும் மேற்கு வங்கம், அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் ஆதரித்தன. இந்தி ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்பதற்கு நேபாளம் ஆதரவு கொடுத்தது. இன்னொரு புறம், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பேசப்படும் மலாய் மொழியை ஆதரித்தும் சில நாடுகள் குரல் கொடுக்கின்றன. ஐந்து கண்டங்களில் பேசப்படும் மொழி என்று போர்ச்சுக்கீசியமும், ஆப்பிரிக்காவில் பல நாடுகளில் பேசப்படும் மொழி என்று ஸ்வாஹிலியும், அந்தப் பகுதியில் பேசப்படும் பல்வேறு மொழிகளின் சகோதர மொழி என்ற முறையில் துருக்கியமும் என்று ஐநா ஆட்சி மொழிக்கான இந்தப் போட்டியில் நிறைய மொழிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி