போர் இலக்கியங்களும் சிங்காரம் தாத்தாவின் படைப்புகளும்
போர் இலக்கியங்களும் சிங்காரம் தாத்தாவின் படைப்புகளும் சில நூல்களைப் படித்து முடித்ததும் அவற்றின் மாந்தர்கள் நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடுகின்றனர். சில நூல்களோ, நாம் நூலை மூடிய பிறகும் நம்முடன் பயணிக்கின்றன. அவற்றின் மாந்தர்கள் நம்முடைய நினைவுகளில் நடமாடுகிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலம், எதிர்கொண்ட நெருக்கடிகள், எடுத்த முடிவுகள், இழந்த உறவுகள், சொல்லாமல் விட்டுச் சென்ற உண்மைகள் என அனைத்தும் நம் உள்ளத்துக்குள் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றன. ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி , கடலுக்கு அப்பால் ஆகியவை அத்தகைய இரண்டாம் வகையைச் சேர்ந்த புதினங்கள். ஆழமான இலக்கியத் துய்ப்பைத் தன்னுள் கொண்டிருந்தும், அதற்குரிய வாசகர்களையும் மதிப்பீட்டு ஏற்பையும் அவை இன்னும் முழுமையாக அடையவில்லை. போர் என்பது படைகள் மோதும் நிகழ்வு மட்டுமல்ல. அது மனிதர்கள் வாழ்ந்துவந்த உலகத்தின் அமைப்பையே மாற்றுகிறது. பணத்தின் மதிப்பு மாறுகிறது. தொழில்கள் சிதைகின்றன. குடும்பங்கள் பிரிகின்றன. வரலாற்றின் பெரிய சக்கரங்கள் சுழலும்போது, அவற்றுக்குக் கீழே சிக்கிக்கொள்ளும் எளிய மனிதர்களின் வாழ்க்கையே சிறந்த போர் இலக்கியங்களின் மையம...