சாதி தேவதை

அந்த அழகான - சிறிய கிராமத்தின் மேலக் கடைசியில் கிழக்காகப் பார்த்துத் திரும்பிய பெருமாள் கோயில்... உயரமான கோபுரம்... உள்ளே பணக்காரச் சாமி. கோயிலுக்கு முன்னால் அடி குழாய். அந்தத் தெருவுக்கே குடிநீர் அந்தக் குழாயில் இருந்துதான் கிடைக்கிறது. கோட்டைச் சுவருக்கு உட்புறம் கோயிலைச் சுற்றி முழுவதும் துளசிச் செடி. மணம் மூக்கைத் துளைக்கும். முன்பெல்லாம் ஆண்டுக்குப் பன்னிரண்டு திங்கட்களும் எப்போதும் அப்படித்தான் இருப்பது போலத் தோன்றியது. இப்போது அதுவும் பெரும்பாலும் பட்டுப் போய், அங்கே துளசிச் செடிகள் வாழ்ந்ததற்கான தடயங்களாக அங்கொன்றும் இங்கொன்றும் என்றுதான் சில செடிகள் இருக்கின்றன. குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும் பசுமையும் மணமும் கூடுதலாக இருக்கும். கோயிலுக்குப் பின்புறம் வேலி மரங்கள் நிறைந்த கரிசற் காடு. கோயிலுக்கு முன்புறம் அடிகுழாய்க்கு அருகில் சிறியதாக ஒரு விளையாட்டுக் களம். அதுதான் அந்தக் கிராமத்து அசாருதீன்களும் தெண்டுல்கர்களும் கிரிக்கெட் விளையாடும் இடம். சனிக்கிழமை கோயிலில் பாதரச விளக்கு எரியும் போது பகலிரவு ஆட்டமும் நடைபெறும். சில நேரங்களில் அடிகுழாய்க்குத் தண்ணீர் அடிக்க வரும் பெண்கள் மீது விழுந்து பிரச்சனைகளும் வருவதுண்டு. கோயிலுக்கும் விளையாட்டுக் களத்துக்கும்  இடது ஓரத்தில் முகமதியர்களின் பள்ளிவாசல். அது போலவே கோயிலுக்கு வலது புறத்தில் கிறித்தவ தேவாலயம். அங்கிருந்த மக்களைப் பொருத்தவரை, கோயிலில் தேங்காய் உடைக்க வருபவர் இந்துவாகவோ, பள்ளிவாசலுக்கு நோன்புக் கஞ்சி குடிக்க வருபவர் முகமதியராகவோ, தேவாலயத்துக்குப் பாதிரியாருடன் கைப்பந்து விளையாட வருபவர் கிறித்தவராவோ இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. நல்லவேளை இதெல்லாம் சில புத்திசாலிகளின் கண்களில் படவில்லை. இல்லாவிட்டால், எப்போதோ மதக் கலவரத்தை உண்டு பண்ணி ஊரையே கொளுத்தியிருப்பார்கள்.

புரட்டாசி மாதத் திருவிழாவின் போது ஊரே களை கட்டிவிடும். திரும்பிய திசையெல்லாம் மின்விளக்குகள் கண்ணைப் பறிக்கும். தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வில்லுப்பாட்டு, கரகாட்டம், ஒயிலாட்டம், குறத்தியாட்டம் என்று ஒரே அமர்க்களமாக இருக்கும். சனிக்கிழமை சப்பரம் சுற்றி வரும்போது சிவகாசிப் பட்டாசுச் சத்தம் காதைக் கிழிக்கும். சாமிக்கு முன்னால் கொடி பிடித்து நடந்து வருவதற்கு சிறுவர்கள் சண்டை போட்டுக் கொள்வதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். சிறுவர்களின் சண்டை பல நேரங்களில் பெரியவர்களுக்கு இடையிலான சண்டைகளாகவும் மாறிய வரலாறு உண்டு அந்த மண்ணுக்கு. குழாய் கட்டிப் பாட்டுப் போட்டு, கூத்து நடத்தி, கிடாய் வெட்டிப் படையலிடுவதே இறைவன் எதிர் பார்க்கும் பக்தியின் அடையாளங்கள் என்று  கொண்டிருக்கும் பாமர மக்கள் அவர்கள். பெருமாள் கோயிலைப் பொருத்தவரை கிடாய் வெட்டு மட்டும் இராது. மற்ற எல்லாம் சிறிது பணக்காரத்தனமாக அப்படியே இருக்கும்.

நகரங்களில் வாழும் பணக்காரர்கள் எல்லாம் வந்து தங்கியிருந்து கொண்டாடிவிட்டுப் போவார்கள். இந்த ஆண்டு ஊரில் சாதிக்கலவரம் நடந்திருந்ததாலோ என்னவோ, நிறையப்பேர் வந்திருக்கவில்லை. மழையும் சரியாகப் பெய்யாததால் திருவிழா ஏதோ சுமாராக நடந்து முடிந்தது. வேகமான கால ஓட்டத்தில் திருவிழா முடிந்து இரண்டு மாதங்கள் ஆனது போற் தெரியவில்லை. ஏதோ போனவாரம்தான் முடிந்தது போல் உள்ளது. கோயிலில் இருக்கும் ஐம்பொன் சிலை, தங்கக் கவசங்கள் எல்லாமே நகரவாசிகளின் உபயம்தான். கோயில் திறந்திருக்கும் போது கீழக் கடைசியில் பள்ளிக்கூடத்து முச்சந்தியில் இருந்து பார்த்தாலும் தங்கக் கவசங்கள் தகதகவென்று மின்னியபடி விழிகளுக்கு விருந்து படைக்கும்.

நடுயிரவு,.. நேரம் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. குறட்டைச் சத்தம் கூடக் கேட்கவில்லை. மயான அமைதி என்பார்களே, அப்படி ஓர் அமைதி. தெருவிளக்குகள் கூட யாருக்கும் தொல்லையில்லாமல் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தன. ஆங்காங்கே அரிக்கன் விளக்குகள் அரைகுறையாய் எரிந்து கொண்டு ஆடிக் கொண்டிருந்தாலும் அன்றைய அமாவாசை இரவுக்கு அந்தக் கிராமம் அடிமையாகவே கிடந்தது. காடுகரைக்குப் போய்விட்டு வந்த அலுப்பில் அனைவருமே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். பட்டாளத்துக்காரர் வீட்டுட் டைகர் நாய் கூட அந்தக் கார்த்திகை மாதக் கடுங்குளிரில் சுவரைமுண்டிக் கொண்டு நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் அவர்கள் நான்கு பெரும் கோயிலை நோக்கி நடந்து வந்தனர். சுற்றுச் சுவரில் ஒவ்வொருவராக உள்ளே குதித்தனர். சுவரோரம் கிடந்த ஒரு பெரிய கல்லைத் தூக்கி, மீண்டும் மீண்டும் கதவில் போட்டனர். கம்பியால் பூட்டைக் குத்தினர். ஆனாலும் கதவு திறந்தபாடில்லை. அந்தச் சத்தத்தில் அருகில் இருந்த மடத்தில் தூங்கிக்கொண்டிருந்த பால்க்காரர் மகன் நாராயணன் விழித்து விட்டான். கோயிற் பக்கம் சத்தம் கேட்பதை உணர்ந்த அவன் திரும்பிப் பார்த்தான். யாரோ நான்கு பேர் பூட்டைக் கம்பியால் குத்திக் கொண்டிருந்தனர். உடனே மடத்தில் படுத்திருந்த அனைவரையும் எழுப்பி, ஒரு படையையே திரட்டி விட்டான். கூட்டம் கோயிலுக்குள் புகுந்து திருடர்களைப் பிடிப்பதற்குள் இருவர் கோயிலின் பின்புறம் இருக்கும் கோட்டையில் ஏறிக் குதித்துத் தப்பி விட்டனர். மற்ற இருவரும் மக்கள் கூட்டத்திடம் மாட்டிக் கொண்டனர்.

அதற்கு மேல் சொல்லவா வேண்டும்?! கோயில் முன்னால் உள்ள தூண்களில் கட்டி வைத்து... அப்பப்பா... அடி விளாசி விட்டார்கள். ஒருத்தனுக்கு வாய்வழியே இரத்தம் வருகிறது. இன்னொருத்தனுக்கு மூக்கு வழியே இரத்தம் வருகிறது. செருப்பு, கம்பு, கட்டை... கண்டதை எல்லாம் கையில் எடுத்து அடித்தார்கள். வல்லவர்களுக்குப் புல்லும் ஆயுதம் அல்லவா? உண்மையிலேயே அப்படிப் பட்ட அடிகளை வாங்கிய பின்பும் அவர்கள் இருவரும் உயிரோடிருப்பதே பெரும் ஆச்சரியந்தான்.

"ஊரை ஏய்த்துப் பிழைக்கும் திருடர்களும் பல பேர் ஆளோடு ஆளாக இந்தத் திருடர்களைப் போட்டு அடிக்கிறார்களப்பா!" என்று தனக்கே உரிய பாணியில் போட்டுத் தாக்கினார் வம்புக் கண்ணப்பன்.

"இவங்கதாம்பா போன வருசம் மாரியம்மன் கோயில் நகையையும் திருடுன கூட்டமா இருக்கும்!" என்று ஒரு குரல் கூட்டத்துக்குள் கொளுத்திப் போட்டது.

"இப்பிடித் திருடுறவங்களையெல்லாம் அந்தக் கடவுள் ஒன்னும் செய்ய மாட்டேங்கிறார். நம்மள மாதிரிப் பாவப்பட்டவங்களைத்தான் போட்டுப் பாடாப் படுத்துறார்!" என்றது இன்னொரு குரல்.

விடியத் தொடங்கியது. வாட்டசாட்டமாகப் பெரியவர் ஒருத்தர் வேப்பங்குச்சியை வாயில் கடித்தபடியே வந்தார். எல்லோரும் மரியாதையோடு ஒதுங்கினார்கள். கூட்டத்தில் புகுந்து உள்ளே போனார். இருவருக்கும் பளார் பளார் என்று பல அறைகள் விட்டார். கோபம் தீராதவராக கண்ணுமூக்குத் தெரியாமல் கண்ட இடங்களில் எத்தினார். கிட்டத்தட்ட மயங்கிப் போன நிலையில் ஈனக்குரலில் கத்தினர் இருவரும்.

பக்கத்தில் கிடந்த கட்டை ஒன்றை எடுத்து மேலும் சில அடிகளைப் போட்டு விட்டு, "எந்த ஊருடா? திருட்டு நாய்களா?" என்றார்.

ஊர்ப் பெயரைச் சொன்னார்கள். திரும்பவும் அறைகள், எத்துகள், அடிகள்...

"ஏன்டா, பிச்சைக்காரப் பயபிள்ளைகளா! உங்களுக்கு வேற தொழிலே இல்லையா? திருடுறதுதான் திருடுறீங்க, வேற எங்கயாவது போய்த் திருட வேண்டியதுதானே! கோயிலில் வந்தா திருடுவீங்க? அதுவும் எங்க ஊர்க் கோயிலில்... உங்களையெல்லாம் சும்மா விட்டா அந்த ஆண்டவனுக்கே பொறுக்காதுடா! பொறுங்க. சாப்புட்டு வந்து பாத்துக்கிறேன். போலீசைக் கூட்டு வந்து ஒங்க ரெண்டு பேரையும் நார் நாரா உரிக்க விடுறேன் பாருங்கடா, பொறுக்கி நாய்களா!" என்று கூறி விட்டு வந்த வழியிலேயே சென்று விட்டார்.

"பெரிய வீட்டுக்காரர் அடிக்கிறது கூட ஒரு தோரணைதாம்ப்பா!" என்றார் ஒரு சின்னவீட்டுப் பேர்வழி.

பெரிய வீட்டுப் பெரியவர் சாப்பிட்டு முடித்து வந்தார்.

"ஒதுங்குப்பா... ஒதுங்குப்பா..." என்று எல்லோரையும் விலக்கி விட்டு வேகமாக உள்ளே போனார்.

என்ன செய்யப் போகிறாரோ என்று எல்லோரும் ஆவலோடு பார்த்தார்கள்.

ஏதோ கேட்க விரும்பியவர் போல, "சரி, நீங்க ரெண்டு பெரும் என்ன சாதிடா?" என்று கேட்டார்.

சுற்றியிருப்போர் எல்லோரும் அவர் சாதிதான் என்பதால் அந்தக் கேள்வியைக் கேட்பதில் கூச்சமே இல்லை அவருக்கு. அவர்களும் தம் சாதியைச் சொன்னார்கள். பெரியவர் மட்டுமல்ல. கூட்டத்தில் இருந்த எல்லோருமே திகைத்துப் போனார்கள். எல்லோருடைய முகத்திலும் பாவனை மாறியது. அது மனத்திலும் ஏற்பட்ட மாற்றத்தின் தோற்றம்தான். பெரியவர் சற்று நிதானமாகப் பேச ஆரம்பித்தார்.

"என்னப்பா நீங்க... ஆரம்பத்துலேயே சொல்லியிருந்தா இவ்வளவு அடிச்சிருக்க மாட்டோம்ல! இப்பிடில்லாம் நடந்துக்கிட்டா நம்ம சாதிக்குத்தானே கேவலம். சரி சரி போங்க!" என்று கூறிக் கொண்டே இருவரையும் அவிழ்த்து விட்டார்.

இந்த முடிவு எல்லோருக்குமே திருப்தியளிப்பதாக இருந்தது. கூட்டத்தை நோக்கிப் பெரியவர் தன் உரையை ஆரம்பித்தார்.

"கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கிற ஆளுங்களுக்குத்தானே திரும்பத் திரும்ப ஓட்டுப் போடறோம்? இவனுகளப் போயி என்ன செய்றது? அதுவும் நம்ம பயலுகளா இருக்கானுக. பஞ்ச காலத்துல - பசிக் கொடுமையில ஏதோ தெரியாமச் செஞ்சிட்டானுக. பாவம், பெரிய குடும்பத்துப் பயக போலத் தெரியுது வேற. போகட்டும். வழிய விடுங்கப்பா!" தன் சாதித் திருடர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பாதுகாப்பாக வழியனுப்பியும் வைத்தார்.

சற்று நேரத்துக்கு முன்பு, "பிச்சைக்காரப் பயபிள்ளைகளா!" என்று விளிக்கப் பட்டவர்கள், இப்போது "பெரிய குடும்பத்துப் பயலுக" ஆகி விட்டார்கள். காரணம் - எண்ணற்ற மனித இரத்தங்களில் இணைந்தோடும் சாதிப் பித்து. நரம்புகளில் பின்னிப் பிணைந்து விட்ட சாதி வெறி. இதையெல்லாம் எங்கோ ஒரு மூலையில் நின்று கொண்டு பார்த்த நீதி தேவதை கவலையோடு கண்ணீர் வடித்தாள். "சாதிகள் இல்லையடி பாப்பா" என்ற பாரதியின் அந்த வரிகள் அடிக்கடி மனதுக்கு வந்து நிம்மதியைக் கெடுத்தன. ஆனால், சாதி தேவதை???

* கல்லூரியில் படிக்கிற காலத்தில் விடுதியில் வெளியிடப்படும் "விடுதி ஒளி" இதழில் எழுதிய சிறுகதை. இப்போது படிக்கையில் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. ஆனாலும் பதிவு செய்து வைக்க வேண்டியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி