பெண் பாவம்!

அடிக்கடிக் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொள்வதில் இருந்து, இந்திப் படம் பார்த்து விட்டு வந்து மீசையை மழித்துக் கொள்வது வரை, தன் ஒவ்வொரு அசைவிலும், ‘இப்பவாவது அழகாக இருக்கிறேனா?’ ரீதியிலான அழகு சார்ந்த ஏக்கங்கள் அடிக்கடி ஏற்படுகிற சராசரி ப்ளஸ்டூ இளைஞன் கபிலன். தன்னை அழகான – அல்லது கொஞ்சம் அழகான – பெண் ஒருத்தி கடந்து போகிற போதெல்லாம் தன் அழகைப் பற்றி ஒருமுறை பரிசீலனை பண்ணிக் கொள்கிற அரும்பு மீசை உணர்வுகளும், அவளே திரும்பிப் பார்த்து விட்டால், ‘நானும் அழகுதானோ?!’ என்றும், பார்க்காமல் போய்விட்டால், ‘நான் அசிங்கமோ?!’ என்றும் குழம்புகிற - பதின்மத்தின் தவிப்புகள் நிறைந்த இளைஞன். காதலிப்பது தகுதி சார்பான ஒன்றாகவும் காதலிப்பவன் நாயகனாகவும் கருதப்படுகிற, இந்தத் திரைப்படத் தாக்கம் நிறைந்த, கற்பனைக் களிப்புகளை ஊக்குவிக்கிற காலச் சூழ்நிலையில், பெண் ஒருத்தியைக் கவர்ந்து விட்டால், தான் தகுதியும் தராதரமும் உடைய முழுமையான ஆண்மகனாக அங்கீகரிக்கப் பட்டுவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கிற இளைஞர் சமுதாயத்தில், “என்னையும் ஒருத்தி காதலிக்கிறாள்!” என்று பெருமைப் பட்டுக் கொள்ளவாவது காதலி ஒருத்தி தேவைப்படுகிறாள் இன்றைய இளசுகளுக்கு.

‘எதிரெதிர்த் துருவங்கள் ஈர்க்கும்’ என்கிற காந்தவியற் தத்துவம் தாய்ப்பாசத்திலேயே ஆரம்பித்து விடுவதாகச் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை. ஆனால் ஒரு சின்ன வயசுச் சம்பவம் இன்னமும் நினைவிருக்கிறது அவனுக்கு. அஞ்சு வயசுக் கூட ஆகியிராத அந்தச் சின்னஞ்சிறு பால்யப் பருவத்தில், அம்மா-அப்பா விளையாட்டு விளையாடுகிற போது, பக்கத்துக்கு வீட்டுப் போலிஸ் மாமா மகள் சீதா யாருக்குப் பெண்டாட்டி என்று எதிர்வீட்டு மார்டினிடம் சண்டை போட்டபோது, உண்மையான அப்பா-அம்மாச் சமாச்சாரங்கள் எதுவுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை அவனுக்கு. சீதாவில் தொடங்கி, நாலாம் வகுப்புத் தோழி விமலா, ஏழாம் வகுப்பில் வசந்தி, பத்தில் அனிதா, மாடி வீட்டு மாலதி, வடக்குத் தெருக் கவிதா... என்று எத்தனையோ பேர் மீது ஒரு மாதிரியான இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த மாதிரியான ஒரு மனச் சித்திரவதை செய்கிற சமீபத்திய கதாபாத்திரந்தான் நீலா. இவர்கள் எல்லோருமே, அந்தந்தப் பருவத்தில் அவள்தான் உலகத்திலேயே அழகானவள் என்று தோன்ற வைத்தவர்கள். ஆனால் ஆள் மட்டும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. 

நீலாதான் அந்த வகுப்புக்கு தேவதை. வாத்தியார் தன்னை மறந்து பாடம் நடத்திக் கொண்டிருக்கிற நேரத்தில், ‘டக்’கென நிமிர்ந்து சுற்றி ஒரு நோட்டமிட்டால், இருபத்தி மூவரில் எவனாவது ஒருத்தன் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பான். விழிகள் முட்டியவுடன், ‘படக்’கெனத் திருப்பிப் பாடத்தைக் கவனிக்கத் தொடங்கி விடுவார்கள். பையன்கள் யாருமே பார்க்கணும்னு பார்க்கிறதில்லை. அனிச்சையாகவே பார்வை அங்கே பாயும். அது அந்த வயசுக்குரிய பார்வை. ‘எட்டுப்பேர் இருக்கிற வகுப்பில் என்னைத்தானே எல்லோரும் பார்க்கிறார்கள்?!’ என்று அடிக்கடி எண்ணிப் பார்ப்பாள். இத்தனை பேர் தன்னிலை மறந்து பித்துப் பிடித்த மாதிரி ஆகிவிடுகிறார்களே, அப்படி என்னதான் இருக்கிறது என்னிடம். என்னுடன் பேசுவதில் என்ன சுகம் அவர்களுக்கு. ஆறாம் வகுப்புச் சிறுவன் முதல் கேண்டீன் தாத்தாவரை எல்லோருமே இப்படி வழிகிறார்களே, ஏன்?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்வாள். அவளுடன் பேசுவதற்காக - கடலை போடுவதற்காக ஒவ்வொருத்தனும் பண்ணுகிற முயற்சிகளைக் கண்டு மகிழ்ச்சிப் பெருமிதம் கொள்வாள். சிலரைப் பார்த்தால் அவளுக்குச் சிரிப்புத்தான் வரும். சில ஆட்கள் மிக விவரமாக, அவளுடன் கடலை போடுவதற்காகவே அலைகிற மாதிரி அல்லாமல், பேசவும் சந்திக்கவும் தற்செயலான சூழ்நிலைகளை உருவாக்குகிற மாதிரி மாஸ்டர் ப்ளான்கள் போடுவது கண்டு அசந்து போவாள். ஜூனியர் பையன்களெல்லாம் வைத்த கண் மாறாமல் பார்ப்பார்கள். ஏழாம் வகுப்புப் பையன்கள் கூட கடந்து போகும் போது, முடியை அலும்பாகக் கோதி விட்டுக் கொண்டு, அம்புப் பார்வை வீசுவார்கள். இந்தப் பொடியங்களுக்கெல்லாம் எப்படித்தான் இந்த மாதிரியான உணர்வுகளெல்லாம் வருகின்றனவோ என்று தலையில் அடித்துக் கொள்வாள். கணிப்பொறி வகுப்பில் கல்லூரி மாணவர்கள் நிறைய இருக்கிறார்கள். வழி வழி என்று வழிவார்கள். ஜொள்ளு நதியே ஓடும். அதில் சில பேர்வழிகள், “நீ என் தங்கச்சி மாதிரி” என்று சொல்லிக் கொண்டு அள்ளி அள்ளி உதவிகள் செய்வார்கள். இவள் இது மாதிரி அண்ணன் செண்டிமெண்ட்கள் எத்தனை பார்த்திருக்கிறாள் என்பது அவர்களுக்குத் தெரியாது. உதவிகள் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அந்த ஜொள்ளுகளுக்காகத்தான் பாவப்பட வேண்டியிருக்கும். பதிலுக்குப் பாசத்தைக் கொட்ட முடியாது. மொட்டை மாடியில் சாயந்தரம் படிக்கப் போனால் எதிர் வீட்டு ஜிம் பாடி சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு அவன் பயிற்சியை ஆரம்பித்து விடுவான். அந்த உடம்பையும் அவளையும் மாறி மாறிப் பார்த்துக் களிப்பான். பேருந்தில், வீதியில், வகுப்பறையில்... இப்படி எல்லா இடங்களிலும் சுற்றம் சூழ எல்லோரையும் வழிய விடுவதை விட இளம்பெண் ஒருத்திக்கு வேறென்ன பெருமிதம் இருக்கப் போகிறது? ஆனால், எந்த நேரமும் எல்லோராலும் பார்க்கப்படுவது ஒன்றும் அவ்வளவு எளிதாகச் சமாளிக்கக் கூடியதில்லை. அதில் இருக்கிற சங்கடம் இருக்கிறதே, அப்பப்பா... வீடியோவில் தொடர்ச்சியாக க்ளோஸ்-அப் எடுக்க விட்டுக் காத்துக் கிடப்பது போன்ற கொடுமையானது. நடப்பது, பார்ப்பது, சிரிப்பது, பேசுவது... எல்லாவற்றிலுமே ஒரு செயற்கைத்தனம் கலந்திருக்கும். ஒவ்வொரு வினாடியும், ‘நீ கவனிக்கப்படுகிறாய்!’ என்று உள்மனம் சொல்லிக் கொண்டே இருக்கும்.

நீலாவுக்கும் கபிலன் மேல் ஒரு கண் இருக்கத்தான் செய்தது. எந்த நேரமும் புன்னகை, துருதுருப்பு, படிப்பிலும் பாட்டிலும் ஆட்டத்திலும் விளையாட்டிலும் என்று எங்கும் நிறைந்திருக்கும் திறமை, பேச்சு முழுக்கக் கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும் இப்படி ஒருத்தன்தானே எந்த இளம்பெண்ணுக்கும் கனவு நாயகனாக இருக்க முடியும். அவனை அடிக்கடித் திரும்பிப் பார்க்கத் தோன்றும். சில நேரம் அவனை எதிரில் வைத்துப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும் அவளுக்கு. ஆனால், “தான் அழகானவள், தன் தகுதிக்குத் தகுந்தவனா அவன்?!’ என்பது போன்ற எண்ணங்கள் அவளைத் தரையிறங்க விடாது. அவனுக்கோ நடக்கையில், படிக்கையில், படுக்கையில் என்று எந்த நிமிடமும் இவள் முகந்தான் வந்து விட்டுப் போகிறது. எத்தனையோ பேர் இதுவரை கிறுக்காக்கி இருக்கிறார்கள். ஆனால் இவள் என்னவோ இன்னும் கொஞ்சம் அதிகமாக இம்சிக்கிறாள். இதுவரை இல்லாத ஒரு தைரியம், முதிர்ச்சி புரிபட்டது அவனுக்கு. ‘இதுவரை நடந்ததெல்லாம் ஏதோவொரு கவர்ச்சி. இது காதல். இவள்தான் எனக்காகப் பிறந்தவள்’ என்று தீர்க்கமாக நம்பினான். ‘கோழைக்குக் காதல் உணர்வே வரக்கூடாது. நான் கோழையில்லை. சொல்லாமலேயே புதைந்து போகப் போகிற காதல் அல்ல என்னுடையது. நாளையே வெளிப்படுத்தப் போகிறேன்!’ என்றெல்லாம் புலம்பி ஒரு முடிவுக்கு வந்தான் கடைசியாக. ஞாயிற்றுக் கிழமை, ஒரு காதற் படம் வேறு பார்த்து விட்டு வந்திருந்ததால் தீயாகப் பற்றி எரிந்தது மனம். மூன்று மணிவரை தூக்கமே இல்லை. மொட்டை மாடி நிலா வேறு கனவுகளைக் கிளறி விட்டுத் தூக்கத்தைக் கெடுத்தது. ஒரு வழியாக எப்படியோ தன்னையே மறந்து தூங்கிவிட்டான். அதிகாலை ஆறு மணிக்கே முழிப்புத் தட்டிவிட்டது. படபடவென எழுந்து, காலைக் கடன்கள் அனைத்தும் முடித்து ஏழு மணிக்கே தயார் ஆகி விட்டான். ஆச்சரியமான ஒன்றுதான். எட்டு மணிக்கு எழுந்திருக்கவே கடிகாரத்தில் அலாரம் வைத்துவிட்டுத் தூங்கும் பேர்வழி. நீலா எட்டரைக்கே பள்ளிக்கூடம் வந்து விடுவாள். மைதானத்தில்தான் அரச மரத்தடியில் உட்கார்ந்திருப்பாள். ‘இன்று கண்டிப்பாக அவளிடம் பேசி விட வேண்டியதுதான். இன்றுதான் ஒருத்தருக்கொருத்தர் அன்னியராக இருக்கிற கடைசி நாள்!’ என்றெல்லாம் கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான். 

எட்டு மணிக்கே அரச மரத்தடியில் வந்து உட்கார்ந்து விட்டான். மனசெல்லாம் படபடக்கிறது. பதற்றம், துடிப்பு, காற்றில் மிதக்கிற மாதிரி ஓர் உணர்வு. எட்டரை மணிக்குச் சொல்லி வைத்தது மாதிரி நீலா வந்தாள். சின்னதாய் ஒரு பார்வையை வீசி விட்டு, அமைதியாக ஓர் இடத்தில போய் உட்கார்ந்து விட்டாள். மெதுவாகப் பையைத் திறந்தாள். இந்தப் புறத்தில் மனசைத் திறக்கப் போகிறவன் எச்சில் விழுங்கினான். “எப்படித் தொடங்க?! என்ன பேச?!’ என்று ஒத்திகை பார்த்தான் மனசுக்குள்ளேயே. ‘இன்னும் அஞ்சு நிமிசமாகட்டும்’ என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனான். மணி ஒன்பதைக் கடந்து  போய்க் கொண்டிருந்தது. கடைசியாக மனதைத் திடப் படுத்திக் கொண்டு அவளை நெருங்கினான். பேச்சைத் தொடங்கினான்.

“நீலா... பரிச்சை என்னைக்கு ஆரம்பிக்குது?”

அவ்வளவுதான். அதன்பின் அவள் என்ன சொன்னாள் என்பது கூடக் காதில் விழவில்லை. பதற்றம் கூடி விட்டது. தலை ஏதோ ‘கிர்’ என்றது. “ஓகோ... ஓகோ...” என்று இழுத்துவிட்டு வகுப்பறையை நோக்கி வந்து உட்கார்ந்தவன்தான். முழு நாளும் உணர்வில்லால் ஓடியது. தன்னைத்தானே நொந்து கொண்டான். கோபப்பட்டான். புலம்பினான். மீண்டும் அதே மொட்டை மாடி, முழு நிலா, சிந்தனை என மூணு மணி வரை ஓடியது. அதிகாலை ஆறு மணிக்கே எழுந்தான் இன்றும். வேலைகளை முடித்து விட்டு, எட்டு மணிக்கே பள்ளி நோக்கி நடையைக் கட்டினான். நுழைவாயிலுக்கருகில் இருக்கும் கருப்பசாமி கோயிற் திண்டில் போய் உட்கார்ந்தான். அவளுக்கு முன்பே சென்று, அந்த அரச மரத்தடியில் ஒரு புறத்தில் உட்கார்ந்து, அதன்பின் இவன் அவளை நோக்கி நகர்ந்து போனால் ஏற்படப் போகிற ஒரு சிறிய இமேஜ் பாதிப்பைத் தடுக்கத்தான் இந்தக் கருப்பசாமிக் கோயிற் திண்ணை நாடப்பட்டிருக்கிறது. அவள் உள்ளே நுழைந்ததும் அவள் பின்னாலேயே சென்று, அருகில் உட்கார்ந்து கடலையை ஆரம்பிக்கலாம் என்று திட்டமிட்டான். ஏழு ஆண்டுகளாக இந்தப் பாதையில்தான் போக்குவரத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒருநாள் கூட – தேர்வு நேரங்களில் கூட கருப்பசாமியைத் தேடி வந்ததில்லை. இன்று சரணாகதி அடைந்து, பயபக்தியோடு வேண்டுதலும் செய்தான். காதற் திட்டம் நிறைவேறுவதற்காக. ‘திக் திக்’ என அரை மணி நேரம் ஐந்தே நிமிடங்களில் ஓடி விட்டது. எதிர் பார்த்த படியே நீலா வந்தாள். ‘நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை’ – பாரதியின் வரி உன்னை மாதிரிப் பெண்களால்தான் இன்னும் வாழ்கிறது என்று கவிதைத்தனமாகச் சிந்தனை ஓடியது. காதலின் அறிகுறி.

நல்லவேளை திரும்பிப் பார்க்கவில்லை. சிவப்பான பெண்களுக்குக் கருப்பசாமியைப் பிடிக்காதோ என்னவோ?! அவளும் நடந்தாள். அண்ணலும் நடந்தார். அரசமரத்தை நோக்கி. பையை இறக்கி வைத்துவிட்டு, சூரிய ஒளியின் பார்வையில் படாத படி மேற்கே திரும்பி உட்கார முயன்றாள். கபிலன் கண்ணில் படும் தொலைவில் நெருங்கிக் கொண்டிருந்தான். ‘இவன் ஏன் இன்னைக்கும் இவ்வளவு சீக்கிரம்?!’ – எண்ணத் தொடங்கும் முன்பே எதிரே வந்து உட்கார்ந்தான். அதே நேற்றைய அசட்டுப் புன்னகை. அதையும் ரசித்தாள் அவள். பதிலாக ஒரு சொட்டுப் புன்னகை உதிர்த்தாள். ஏதோவொரு நிகழ்வின் – உறவின் தொடக்கம் போலத் தோன்றியது மனதில் அவனுக்கு.

“இப்பத்தான் வாரியா?”

ஏதோ தினமும் கோழி கூவும் முன்பே பள்ளிக்கூட வளாகத்துக்குள் நுழைந்து விடுகிறவனைப் பார்த்துக் கேட்கிற மாதிரி இருந்தது. எல்லாம் சும்மா சம்பிரதாயத்துக்குத்தான். மௌனப் பனிக்கட்டியை உடைக்க வேண்டுமே!

‘நான் எதற்கு இப்படித் தேவையில்லாமல் பேச வேண்டும் இவனிடம்?! சும்மா இருந்தால் அவனே வழிய வந்து ஆரம்பிப்பானே!’ என்று உள்ளூர ஓர் உடனடிக் கேள்வி வந்து கண்டித்தது. ஏதோவொரு வரலாற்றுத் தவறு நிகழ்ந்து விட்ட அளவுக்கு வருந்தினாள்.

‘சரி, இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான். அவனே வரட்டும்!’ என்று நினைத்துக் கொண்டிருக்கையில், “ம்ம்ம்...” என்றான்.

அவளுடைய அவனுக்குப் பதற்றத்துக்கிடையே சில மகிழ்ச்சியான மணித்துளிகளை அளித்தது.

“பரிச்சை நெருங்கி விட்டது. ப்ளஸ்டூ முடிச்சப் பெறகு என்ன பண்ணலாம்னு இருக்க?”

நாலைந்து படிகள் மேலே போய் ஒரு கேள்வியைப் போட்டான். நிறையவே நெருங்கி விட்டது போல் ஓர் உணர்வு. ‘என்னடா இது? மித வேகமா? மிக வேகமா??’ என்று அவனுக்குள்ளேயே கேட்டுக் கொண்டான். ‘லப்டப்’ மட்டும் அதே வேகத்தில் இருந்தது. ‘இன்றே சொல்லி விடலாமா? விடக் கூடாது. ஒரு மாசம் வேகமாக ஓடிவிடும். பிரிந்தபின், தேடித் பிடித்துக் காதலை வெளிப்படுத்தி, வளர்த்தெடுப்பது அவ்வளவு ஈசியாக இராது. சொல்லிவிட வேண்டியதுதான்!’ என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தான். பார்வை மட்டும் அவள் முகத்தை நோக்கியே இருந்தது. புத்தகத்தைப் பார்த்துக் கொண்டே அவள் பேசியதெல்லாம், காதுக்குள் ஒழுங்காக நுழைந்ததாய்த் தெரியவில்லை. ஏற்கனவே மூளை நரம்புகள் இரண்டு வேலைகளில் மூழ்கிப் போய் இருக்கின்றன. ஒன்று – அவள் முகத்தையே தின்று கொண்டிருக்கிற பார்வை. இன்னொன்று – தனக்குள்ளே நடக்கிற பதற்றம் கலந்த சிந்தனை ஓட்டமும் உரையாடலும். எல்லாம் சொல்லி முடித்து, “நீ என்ன செய்யப் போற?” என்று அவள் முகத்தைப் பார்த்து அழுத்தமாகக் கேட்ட போதுதான் தலைவன் தன்னிலை மறந்து, கேள்வியை உள்வாங்கினான்.

“நான்...” என்று தொடங்கி ஒரு நீண்ட கதை சொன்னான்.

கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் வர ஆரம்பித்தது. சுற்றிப் பார்த்து விட்டு, திடீரென தன்னினைவு வந்தவள் போல பட்டென்று எழுந்து, “சரி, பார்க்கலாம்!” என்று கூறிவிட்டு வகுப்பறையை நோக்கி நடையைக் கட்டினாள். 'என்னடா இது? நன்றாகப் பேசிக் கொண்டே இருந்தாள். வெடுக்கென வெட்டி விட்டுப் போகிறாள்!' என்று குழப்பம் பிடித்தது இவனுக்கு. யோசித்துக் கொண்டே பின்னாலேயே அவனும் வகுப்பறை வந்து சேர்ந்தான். இன்றும் தான் அடைய வேண்டிய இலக்கை அடையவில்லை என்ற அதிருப்தியுடனேயே. வழக்கத்தை விடக் கூடுதலாகவே பார்வை அவள் பக்கம் போனது இன்று.

வீடு வந்தான். இன்றும் தூங்காவிரதந்தான்.

மறுநாள். இன்றும் எட்டரைக்கே வந்து சேர்ந்தான். அவள் இருந்தாள். அவன் வருவதைப் பார்த்து விட்டுப் பையன் ஏதோ முடிவோடுதான் இருக்கிறான் போல என்று தோன்றியது அவளுக்கு. மிக நெருக்கமாகச் சென்றமர்ந்தான். எச்சில் விழுங்கினான். ‘இதற்கு மேலும் சொல்லாமல் விட்டுவிட்டால், வாழ்க்கையே வீணாகிப் போகும்’ என்று எண்ணிக் கொண்டு, டமாரென்று போட்டு உடைத்தான்.

“நீலா, ஒன்ட ஒரு முக்கியமான விசயம் பேசணும். அதுக்குத்தான் மூணு நாளா ஒன்னையே சுத்திச் சுத்தி வர்றேன்!”

இப்போது அவளும் எச்சில் விழுங்கினாள். அவன் கண்களை உற்றுப் பார்த்தாள். கண்டிப்பாக என்னவென்று புரிந்திருக்க வேண்டும். இரண்டு ப்ளஸ்டூ இளசுகள் சேர்ந்து பேசும் முக்கியமான விசயம் வேறு என்னவாக இருக்க முடியும்?! காஷ்மீர்ப் பிரச்சனை பற்றியா பேசிவிடப் போகிறார்கள்?! இவனுக்கும் அவள் முகத்தைப் பார்க்கவே கூசியது. அவளும் தலை குனிந்தாள். சட்டைப் பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து, அவளிடம் கொடுத்தான்.

“சாயந்தரம் பள்ளிக்கொடம் முடிஞ்ச பெறகு, எல்லாரும் போன பெறகு, இதே எடத்துல வந்து ஒன் முடிவச் சொல்லு!” என்று சொல்லிவிட்டு, அவள் முகத்தையே நோக்கினான்.

ஏதாவது புரிகிறதா என்று முயற்சித்தான். அதிர்ச்சி கலந்த ஆனந்தம் தெரிந்தது. அதற்கு மேலும் அங்கே அமர்ந்திருக்க அவனுக்கு விருப்பம் இல்லை. எழுந்து நடந்தான். நடக்கிற போது, அவள் பின்னாலிருந்து இவளையே பார்த்துக் கொண்டிருப்பது போல ஓர் உணர்வோடே நடந்தான். வகுப்பறையில் வந்து உட்கார்ந்தான். தமிழ்ப் பாடவேளையோடு அன்றைய தினம் தொடங்கியது. வழக்கமாக அவள் உட்கார்ந்திருக்கும் பக்கம் பார்வை அடிக்கடிப் போய்வரும். இன்று மட்டும் இவனைத் தவிர எல்லோருடைய விழிகளும் அந்த வேலையை ஒழுங்காகச் செய்து கொண்டிருந்தன. இவனுக்கு மட்டும் என்னவோ புதிதாக அவள் முகத்தைப் பார்க்கவே கூசியது இன்று. அவனுக்கே அவனை நம்ப முடியவில்லை. ‘பெண்களிடம் அவசியமில்லாமல் பேசக்கூடத் தயங்குகிற நானா இன்று இந்தப் பெரும் வேலையைச் செய்து முடித்திருக்கிறேன்?!’ என்ற கேள்வி திரும்பத் திரும்ப மனதுக்குள் ஒலித்தது. இப்போதே அரசுத் தேர்வு எழுதி முடித்து விட்டது மாதிரியான திருப்தி. முடிவுதான் இன்னும் வரவில்லையே! வழக்கத்தைக் காட்டிலும் உயரே பறந்தது கற்பனைப் பறவை. ‘இந்தக் காதல் பூமிக்குள் புதையுண்ட கனிமங்கள் போல வெளியே சொல்லாமல் யாருக்கும் தெரியாமல் என் மனதுக்குள்ளேயே கிடந்து புழுங்கி மட்கிப் போகப் போகிற ஒன்றுதான் என்றுதானே இத்தனை நாட்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். எங்கே இருந்து வந்தது இந்த தைரியம்? இன்று மாலை முதல் இது ஓர் இருதலைக் காதல்! இவளே என் மனைவியாகப் போகிறவள்! இவளோடு பேரப் பிள்ளைகளோடு விளையாடுவது வரை கனவு கண்டுவிட்டேன். எதுவுமே வீண் போகப் போவதில்லை!” என்று பூரித்தான்.

அவளும் குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்து கொண்டிருந்தாள். இடி விழுந்த மாதிரியும் இருக்கிறது. அத்தோடு சில்லென்று காற்றுக் கலந்து தூய்மையான மழை பெய்தது மாதிரியும் இருக்கிறது. ‘என்ன தைரியம் இருக்கும் இவனுக்கு?! வெளியில் சொன்னால் என்ன ஆகும் என்ற பயம் கூட இல்லாமல் இவ்வளவு துணிச்சலாக வந்து நீட்டி விட்டானே!’ என்று வியப்பும் அதிர்ச்சியுமாக யோசித்துக் கொண்டிருந்தாள். நடந்து முடிந்து விட்டதை விட நடக்கப் போவதைப் பற்றிய படபடப்புதான் கூடுதலாக இருந்தது. ‘என்ன சொல்ல இவனிடம்?!'... 'இதெல்லாம் நம் குடும்பத்துக்கு ஒத்துப் போகிற வேலையா?! பேசாமல் வேண்டாஞ்சாமி! என்று கழன்று கொள்வதுதான் உத்தமம்!' என்று ஒரு நினைப்பும், ‘இதென்ன நான் துளியும் நினைத்தே பார்த்திராததா?! அவ்வப்போது வாய்ப்பில்லாத ஒன்றாகக் கற்பனை செய்து பார்த்துக் கொண்ட ஒன்றுதானே?! பின் ஏன் பட்டென்று கதவைச் சாத்த வேண்டும்?!’ என்று இன்னொரு நினைப்பும் மாறி மாறி இம்சை செய்தன. இவன் முகத்தோடு வீட்டில் இருக்கிற பல முகங்களும் மனதில் மாறி மாறி வந்து சென்றன.

மதியச் சாப்பாட்டுக்கு மணி அடித்தது. இதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே மெதுவாக நடக்கத் தொடங்கினான். எதிரே அவள் தோன்றினாள். இப்போது எதிர் பார்க்காத தோற்றம் அது!

“இங்க பாரு, கபிலா! இத மட்டும் நான் எங்க வீட்ல போய்ச் சொன்னன்னா, பிரச்சனை எவ்வளவு பெருசா ஆயிரும் தெரியுமா?!” என்று சொல்லி ஒரு முறை முறைத்தாள்.

சற்றும் எதிர் பார்த்திராத, முற்றிலும் வேறுபட்ட முகபாவனையாக இருக்கிறதே என்று பையன் ஆடிப் போனான். ஆனால் அந்த முறைப்பில் கண்டிப்பாக ஒரு செயற்கைத்தனம் தெரிந்தது.

“இந்த லெட்டர மட்டும் இப்பப் போயி எட்மாஸ்டர்ட்டக் குடுத்தா ஒன் வாழ்க்கையே நாறிரும். பாவம்னு விட்றேன். இத்தோட இந்த வேலையெல்லாம் நிறுத்தீரு!” என்று தொடர்ந்து பொரிந்தாள்.

வேகமாக நடந்து மறைந்தாள்.

பையனுக்குக் குபுக்கென்று வியர்த்தது. சுவைத்துச் சுவைத்துக் கட்டிய கட்டடமொன்று சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தது. ‘அவளுக்கு உண்மையிலேயே என்னைப் பிடிக்கவில்லையா?! அப்புறம் ஏன் அவ்வப்போது அப்படிக் காந்தப் பார்வை வீசினாள்?!’ என்று குழம்பினான். உள்ளுக்குள்ளேயே புலம்பினான். ‘ஒருவேளை அவளுடைய தகுதிக்கு நாம் குறைவோ?! எப்படி?!’ என்று விதவிதமான கேள்விகள். எதற்கும் விடையில்லை.

அவளும் ஒருபுறம் தூக்கமின்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தாள். ‘எனக்கும் அவனைப் பிடிக்குந்தானே! அப்புறம் ஏன் இப்படிப் பேசினேன் இன்று?! பெண் அப்படித்தானே பேச வேண்டும்?! வழிகிற ஆண்களிடம் பதிலுக்கு வழிவது ஒரு நல்ல பெண்ணுக்கு உரிய பண்பாகாதே! அவனும் சற்றுத் தன் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு விட்டான். பிடிக்கும் என்பதற்காகக் காதலா செய்துவிட முடியும்?! இந்த ஊரே என்னைப் பித்துப் பிடித்தது போலப் பார்க்கிறது. அதில் இவனும் ஒருத்தன். அவ்வளவுதான். இவனைப் பிடித்தது. ஆனால் என் அழகுக்கும் தகுதிக்கும் இவனைவிடப் பல மடங்கு அழகான – அறிவான - திறமையான ஆண்மகன் ஒருத்தன் எங்கோ ஏற்கனவே பிறந்திருப்பான். அதற்க்கு முன் அவசரப்பட்டுக் காதல் – கத்தரிக்காய் என்று விழுந்து விட்டால், பின்னர் வாழ்க்கை மிகவும் சிக்கலாகிவிடும்!’ என்று ஆறுதல் செய்து கொண்டாள். எல்லாவற்றுக்கும் மேலாக அவளுடைய அழகு அவனை விடப் பல மடங்கு மேலே உயர்த்திக் காட்டியது அவளை - அவளுக்கு. அதுவே அவள் முடிவு சரியே என்று அடித்துக் கூறுவதாக இருந்தது அவள் மனதுக்கு.

ஆண்டுகள் பல ஓடின...

கபிலன் அமெரிக்காவில் நல்ல பணியில் இருக்கிறான். இரண்டு மாத விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தான். இந்த இரண்டே மாதங்களில் பெண் பார்த்துத் திருமணம் முடித்து ஊர் திரும்ப வேண்டும் என்கிற கெடுபிடியான பயணத் திட்டத்தோடு வந்திறங்கியிருக்கிறான். பெண் பார்க்க வேண்டியதில்லை. ஏற்கனவே ஏகப்பட்ட பெண்கள் வரிசையில் இருக்கிறார்கள். புகைப்படத்தையும் மற்ற விபரங்களையும் பார்த்து அதிலிருந்து ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துப் புன்னகைக்க வேண்டியது மட்டுந்தான் மிச்சம். ஒரு பெரிய பை நிறைய இதைத்தான் நிரப்பி வைத்திருக்கிறார் அவனுடைய அப்பா. கல்லூரியில் இருந்து குற்றாலம் சென்றிருந்த போது கை சோதிடர் ஒருத்தர், “ஒனக்குப் பொண்ணு குடுக்க ஒரு பெருங்கூட்டமே ஒன் வீட்டு வாசல்ல வரிசை கட்டி நிக்குமப்பா!” என்று சொன்னபோது அதைச் சற்றும் நம்பவில்லை அன்று. 

‘இதுதானா அது?! எத்தனை பெண்கள்?! இதிலிருந்து ஒரே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மீதி எத்தனையோ பேரை வேண்டாம் என்று சொல்லி விலக்க வேண்டும். ச்ச... பெண்ணாகப் பிறப்பது பாவமா? பெண்ணைப் பெற்றவர்கள் பாவப்பட்டவர்களா? தூரத்துச் சொந்தக்காரர்கள் எத்தனையோ பேர் புதிது புதிதாக உறவு கொண்டாடிக் கொண்டு வருகிறார்கள். நெருக்கமாக முயற்சிக்கிறார்கள். எல்லாம் எதற்காக? வசதி, பணம், வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கிற மாப்பிள்ளை என்பதால்தானே! நாளை அமெரிக்காவில் வேலையில்லை என்று விரட்டி விட்டுவிட்டால் – வெறுங்கையோடு வீடு திரும்பினால் – கதை என்னவாகும் இங்கே?! எல்லாமே தலைகீழ் ஆகிவிடும். பெண் வீட்டார் மாப்பிள்ளையை வேண்டாம் என்று நிராகரிப்பார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அதென்ன பேராசையா? தன் பிள்ளை நல்ல முறையில் வாழ வேண்டும் என்கிற நியாயமான ஆசைதானே! நான் ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தால் இதைத்தானே என் அப்பாவும் செய்து கொண்டிருப்பார்?!’ என்று யோசித்துக் கொண்டிருக்கையில் சட்டென்று நீலாவின் நினைவு வந்தது. நிராகரிப்பு என்கிற சொல்தான் அவனுக்கு அவளை நினைவு படுத்தியிருக்க வேண்டும் அந்த வேளையில்.

‘நீலா என்ன செய்கிறாளோ?! எங்கிருக்கிறாளோ?! அவளுடைய கணவன் எப்படியும் நம்மை விட நான்கைந்து ஆண்டுகள் வயது மூத்தவனாக இருப்பான். இதையெல்லாம் யாரிடம் கேட்கலாம்?! கூடப் படித்ததில் உள்ளூரில் இருக்கும் ஒரே ஆள் இளங்கோதான். அப்போதே எழுந்து இளங்கோ வீட்டுக்குக் கிளம்பினான். 

தான் வெளிநாடு போய் எவ்வளவோ சம்பாதித்து விட்ட பின்னும், வேறு பல நேரங்களில் அதை வைத்துத் தன் தந்தையார் பந்தா செய்து கொண்ட போதிலும், அந்தப் பழைய சைக்கிள் வண்டியை மட்டும் விடாமல் அப்படியே வைத்துக் கொண்டுள்ளார். ஒன்றும் இல்லாத காலத்தில், தன் மகன் படித்துச் சம்பாதித்துத் தனக்கொரு மோட்டார் பைக் வாங்கிக் கொடுப்பான் என்று பீற்றித் திரிந்தவர், இவன் வாங்கிக் கொடுக்கத் தயாராக இருந்த போது வேண்டவே வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். அவருக்கென்று ஏதோ காரணம் இருக்க வேண்டும். அவரே சொன்னால்தான் புரிந்து கொள்ள முடியும் அதை. 

இவனுக்கும் அந்தப் பழைய சைக்கிளைப் பார்த்த போது எத்தனையோ பழைய நினைவுகள். அவை யாவற்றிலும், புரோட்டா வாங்கப் போன இடத்தில் சைக்கிளை மறந்து அப்படியே விட்டுவிட்டு, திரும்பி வரும்போது நடந்தே வீடு திரும்பிய அந்த நினைவு தலையாயதாகத் தலை தூக்கிக் காட்டியது. அந்த நினைவுகளோடு சைக்கிளை எடுத்து இளங்கோ வீட்டை நோக்கி மிதித்தான். அத்தனை ஆண்டுகள் கழித்து அந்தச் சைக்கிளை ஓட்டுவதில் ஏதோ ஒருவிதமான வேறுபட்ட உணர்வு. அந்த உணர்வைச் சுவைத்துக் கொண்டே மிதித்துச் செல்கையில், பாதி வழியில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. இடுப்பில் தண்ணீர்க் குடத்துடன் எதிரே வந்து கொண்டிருந்தாள் நீலா. இவனுக்கு வெடவெடத்தது.

‘அதே நீலா! அதே இளமை! அப்படியே இருக்கிறாள்! இன்னும் திருமணம் ஆகவில்லையோ?! இருபத்தி ஒன்பது வயது ஆணுக்கே அதிகமென்று தினம் தினம் அழுது கொண்டிருக்கிறாள் அம்மா. என்ன கொடுமையான வாழ்க்கையடா இது, பெண்களுக்கு?! அப்படியானால், முதிர்கன்னி என்றல்லவா அழைக்கப்படுவாள்?! கண்கள் சந்தித்தன. அவள் சிறிது யோசித்து, அடையாளம் கண்டு, தடுமாறியது புரிந்தது. பையன் பன்றி மாதிரி ஆகியிருந்தான். குளிரில் கிடந்து திரும்பியிருப்பதால் நிறம் நன்றாகக் கூடியிருக்கிறது. அதுவும் ஒரு மாதத்தில் போய்விடும் என்று யாருக்குத் தெரியும்?! அவள் ஆள் அப்படியே இருந்தாலும் முகத்தில் பழைய துருதுருப்பு இல்லை. சிரிக்கலாமென நினைத்தான். பதிலுக்குச் சிரிப்பாளா அல்லது முறைப்பாளா என்ற கேள்வி வந்து தடுத்தது. இருவருடைய நினைவிலும் பழைய நினைவுகள் வேகமாக ஓடின. ஒரே நேரத்தில். ‘இப்போது போய்க் காதலிக்கிறேன் என்றால் அவளுடைய பதில் என்னவாக இருக்கும்?’ என்று யோசித்துப் பார்த்தான். நீலாவுக்குப் பின், வெளியில் போய் எத்தனையோ அழகிகளையும் தேவதைகளையும் பார்த்து விட்டான். பெருநகர – வெளிநாட்டு வாழ்க்கைகளில், பெண்களுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்கிற சூட்சுமங்கள் எல்லாம் நிறையப் படித்துப் பயன்படுத்தி விட்டான். ஊரில் இருந்து கொண்டுசென்ற தாழ்வு மனப்பான்மை எல்லாம் தரைமட்டம் ஆகிற மாதிரி, இவனுக்காகவே கிறுக்காக அலைந்த பெண்களை எல்லாம் சந்தித்து விட்டான். எனவே, நீலாவைப் பார்க்கிற போது பழைய மாதிரி மனம் சஞ்சலப் படவில்லை. ஆனால் அவளுக்கென்று ஓர் இடம் அவன் வாழ்க்கையில் இருந்ததை அவன் எப்படி எளிதாகத் தூக்கி வீசிவிட முடியும்?! அத்தோடு அவனுக்குள் இருந்த ஆண் ஈகோ அவளுக்காகப் பரிதாபப் பட்டது. ‘எத்தனை பேரைப் பைத்தியமாக்கியவள்! இன்று நீயே வந்து கேட்டாலும் நான் உன்னை மதிக்கிற நிலையில் இல்லை!' என்கிற திமிரான சிந்தனை ஒருபுறமும், அதே வேளையில் 'இதுதான் இந்த மண்ணில் பெண்ணாகப் பிறப்பதற்கான தண்டனையோ?! இதற்குத்தான் பெரியவர்கள் பெண்பிள்ளை என்றால் அவ்வளவு பதறுகிறார்களோ?!’ என்று அக்கறை ஒருபுறமுமாக யோசித்தான்.

அதே மாதிரியே அவளும் யோசித்தாள். முதிர்கன்னி என்பதால் சிந்தனையில் முதிர்ச்சி இருந்தது. பழைய பகட்டு இல்லை. எப்போதும் யோசிப்பதுதான். இன்று மீண்டும் அது பற்றிச் சிந்தித்து நொந்து கொள்ள அழுத்தமான ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. அவ்வளவுதான். 

‘எத்தனையோ பேர் விரட்டி விரட்டி வழிந்தார்கள். அன்றைக்கு ஒரு பெண்ணைத் தன்வயப்படுத்த முயன்று, தோல்வியுற்று வெளியேறியவர்கள் நிறையப்பேர் இன்று அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். குறைந்த பட்சம் அப்படித் தெரிகிறது வெளியில். நல்ல பெரிய இடத்துப் பெண்ணைத் திருமணம் செய்து மகிழ்வான இல்லற வாழ்க்கை வாழ்வது போலத் தெரிகிறது. அன்று அவர்களையெல்லாம் புழுப் பூச்சிகளைப் போலப் பார்த்திருக்கிறேன். மனதுக்குள் நக்கலாய் நினைத்து நகைத்திருக்கிறேன். அதற்கான தண்டனைதானா இது கடவுளே?! ஏன், எனக்கும் ஒரு நல்ல கணவன் – வாழ்க்கை என்பதெல்லாம் அமையாதா?! அன்றைக்கு இதே கபிலனிடம் சரியென்று சொல்லியிருந்தால் வாழ்க்கைப் பாதை எவ்வளவு மாறியிருக்கும்?! நானும் ஓர் அமெரிக்கக்காரியாகவே மாறியிருப்பேன். நூற்றுக்கணக்கில் புகைப்படங்களைக் குவித்து வைத்துக் கொண்டு எந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பது என்று குழம்பிப் போய்க் கிடக்கிறானாம்! இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். இப்போது போய்க் கெஞ்சினால் கூட ஒத்துக் கொள்வானா என்று தெரியவில்லை. சிரிக்கலாமா?! சிரித்தால் என்ன நினைப்பானோ?!’ என்றெல்லாம் மனம் துடியாய்த் துடித்தது.

‘கபிலன் என்றில்லை. இவனைப் போல் எத்தனையோ பேர் இருந்தார்கள். அவர்களில் எவனோ ஒருத்தனைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகை உதிர்த்திருந்தால் போதும். இன்று ஒரு குடும்பப்பெண்ணாக வாழ்ந்து கொண்டிருப்பேன். குழந்தைகளைப் பள்ளிக்கனுப்புகிற – கணவனை வேலைக்கனுப்புகிற – வேலைகளில் அவசரத்தோடும் பரபரப்போடும் ஒன்றிப் போயிருக்க வேண்டியவள், அப்பா பார்த்துக் கொடுக்கிற மாப்பிள்ளையைத்தான் கட்ட வேண்டும் என்று அன்று எண்ணிய ஒரே காரணத்துக்காக, இன்று அப்பாவின் முகத்தைக் காண்கிறபோதெல்லாம் கூனிக் குறுகி, அவருக்குப் பாரமாக இருக்கிறோமே என்று எண்ணித் துடிக்க வேண்டியுள்ளதே!’ என்று எண்ணும் போது கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. 

'அடக்கிக் கொள்ள வேண்டும். அதற்குந்தான் ஓர் இடம் இருக்கிறதே வீட்டில்! தண்ணீர்க் குடத்தைப் போய் இறக்கி வைத்து விட்டு, யார் கண்ணிலும் படாமல் ஓடிப் போய், அழுக்குப் பிடித்த அதே நான்கு சுவர்களுக்கும் ஒற்றைக் கதவுக்கும் மட்டும் தெரிகிற மாதிரிக் கதறிக் கதறி அழ வேண்டும்! இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு அழ வேண்டும் இன்று!'

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி