புரட்சி ஓங்குக

வேயன்னா மகன் பெங்களூருக்குப் படிக்கப் போனவன், ஊர்ப்பக்கமே வரவில்லை. படிப்பாளி படிப்பில் மூழ்கியிருப்பான் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள் ஊரில். “அவன் அப்பனப் போலவே ஆளண்டாத பயப்பா. தாய், தகப்பன் கூடப் பெறந்ததுக பத்தியெல்லாம் கவலப்பட்டுக்கிட்டு இருந்தா வாழ்க்கைல உருப்பட முடியுமான்னு கேக்குறவன். இந்தப் புழுதியத் தட்டிட்டுப் போக முடியாதனாலதான நம்ம பிள்ளைகள்லாம் மூக்க வடிச்சிக்கிட்டு இந்தக் கருசக் காட்டுக்குள்ளயே சுத்திக்கிட்டுத் திரியுதுக. எல்லாத்தையும் தூக்கி வீசிட்டுப் போற மாதிரி இருக்கிறதனாலதான் வேயன்னாவும் அவர் பிள்ளைகளும் ஊர் ஒலகமெல்லாம் போய்ப் படிச்சு, சம்பாரிச்சு, அள்ளிக் கொண்டு வந்து ஊருக்குள்ள வீடு மேல வீடும் காடு மேல காடும் வாங்கிக்கிட்டுருக்காங்க” என்று ஊருக்குள் எல்லோரும் வேயன்னா மற்றும் அவருடைய குடும்பத்தினரின் வாழ்க்கை முறைகளைப் பெரும் ஏக்கத்தோடும் வியப்போடும் பேசுவது மிக இயல்பான ஒன்று.

“எம்மகன் ஒழுங்காப் பிடிச்சு ஒன்னுக்கு அடிக்கப் பழகும் முன்னாடியே, அவன் ஒக்காளி தமிழ் மாசம், இங்கிலீஷ் மாசங்களை எல்லாம் தலைகீழா ஒப்பிப்பானய்யா, எமகாதகப்பய! வேயன்னாவுக்குப் பெறந்தானா? வெள்ளைக்காரனுக்குப் பெறந்தானான்னு அப்பவே அவனப் பாத்து மெரளுவேன்” என்பார் வெள்ளைச்சாமி மாமா.

அப்பேற்பட்டவன் வேயன்னா மகன் பேயன்னா – அதாவது, பேரின்பம். ஊரில் அவனை யாரும் பேயன்னா என்றழைப்பதில்லை. அவன் பேரு – ‘பேரு’. பேரின்பத்தின் சுருக்கம்! நாராயணனுக்குச் சுருக்கம் ‘நாரு’ என்பது போல. ‘பேரின்பா’ என்று முழுசாக இழுத்துச் சொல்லாத யாரையும் இழுத்து உயிரை எடுக்காமல் விட மாட்டார் வேயன்னா. ‘கருப்பசாமி, வெள்ளைச்சாமின்னு வச்ச பேரையே வச்சுக்கிட்டுருந்த காலத்துல இப்படியும் பெயர் வைக்கலாம் என்று புரிய வைக்கிற மாதிரி வச்ச பேரை இப்படி ‘பேரு’ ‘ஊரு’ன்னு சொல்லிக் கெடுத்துக் கேவலப்படுத்துறாய்ங்க” என்று கொதிப்பார். பேருக்கு பெங்களூரில் என்ன பேராக இருக்கும் என்று தெரிந்து கொள்ளத் துடிக்கிறீர்களா? கண்டிப்பாக, ‘பேரின்பம்’ இல்லை. ஊர்ப்பக்கம் கேட்பவர்களிடம் இல்லாம் அழுத்தம் திருத்தமாக நெஞ்சை நிமிர்த்திச் சொல்வான் – ‘பேர் இன்பம்’ என்று. பெங்களூர் வந்த புதிதில் அதே மாதிரித்தான் சொல்லிக் கொண்டிருந்தான். கொஞ்சங் கொஞ்சமாக அந்தப் பெயரைச் சொல்லவே கூச்சப்பட ஆரம்பித்து விட்டான். ரமேஷ், சுரேஷ், கணேஷ், ராஜேஷ் போன்ற ‘ஷ்’-களுக்கு மத்தியில் ‘பேரின்பம்’ பெரிதும் இன்பமளிப்பதாக இல்லை.

வந்தவன் படிப்பில் மூழ்கியிருப்பானென நினைத்தால், அத்தோடு பல தேவையில்லாத வேலைகளிலும் மூழ்கியிருந்தான். அதில் ஒன்று, காதல். அதுவும் பொருந்தாக் காதல். ‘கர்நாடகத்துக்கு வந்து காதலித்தாலும் தமிழ்ப் பெண்ணையே காதலிப்பேன்’ என்று கொள்கைப் பிடிப்போடு இருந்தமைக்காக கர்நாடகத் தமிழ்ச் சங்கத்திலிருந்து பாராட்டு மழை பொழிந்தார்கள் பல பெரியவர்கள். அதுவும் பக்கத்து ஊர்ப்பிள்ளை. “ஓடையைத் தாண்டினால் வரும் ஊரிலிருக்கிற பெண்ணைப் பெங்களூரில் போய்ப் பிடித்திருக்கிறானே! எல்லாம் அதது பெறக்கும் போதே எழுதுனதுப்பா” என்று கம்மாக்கரையில் உட்கார்ந்து கொண்டு, ஊர்க்காரர்களெல்லாம் பேசுவார்கள். வேலையில்லாத காலத்தில், தின்ற கம்மஞ்சோறு செரிக்க வேண்டுமானால், கம்மாக்கரையில் உட்கார்ந்து கதை பேசாமல் முடியாது. அதுவும் வேயன்னா வீட்டுக் கதை இல்லாமல் முடியுமா? ஆனால் சிக்கல் என்னவென்றால், ஓடைக்கு அந்தப் பக்கம் இருக்கிற ஊர் என்றாலும் – பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டாலும், வீட்டுக்குள் வேறொரு மொழி பேசுகிற வேற்று சாதிப் பெண் அவள். பேரின்பம் என்று பெயர் வைத்த வேயன்னாவுக்கு அது ஒரு பிரச்சனையே அல்ல; இன்பந்தான் அடைவார். ஊருக்குள் மட்டும் வெள்ளையுஞ் சொள்ளையுமா வணக்கம் வாங்கிக் கொண்டு அலைகிற குண்டுச்சட்டி விளையாட்டுக் குதிரை அல்ல அவர். மாகாணம் முழுக்கப் பெரிய பெரிய மனிதர்களின் தொடர்பு உடையவர். பெரும் பெரும் முதலாளிகள், வக்கீல்கள், தலைவர்கள் எல்லாம் வந்து தங்கிச் செல்கிற சரணாலயமாக இந்த ஊர் இருக்கிறதென்றால் யார் உபயம்? அவங்க எல்லோரும் வந்து, புல்லரித்துப் போய் வாழ்த்துரை வழங்குவார்கள். “இவர்தான் உண்மையான தலைவர்யா. நாக்கு நரம்பு தெறிக்கத் தெறிக்க மேடையில் பேசிவிட்டு, எல்லாத்தையும் சோடாக் குடிக்கும் போது ஏப்பம் விட்டுட்டுப் போற ஆளில்லை இவர். சொல்லும் செயலும் ஒரே சொல்லின் இரு அர்த்தங்கள் என வாழ்ந்து காட்டிக் கொண்டிருப்பவர்” என்று எல்லோரும் வேயன்னா தலையைக் குளிர வைத்து விடுவார்கள். அவருடைய தாய் செத்த போது, “எந்தச் சடங்கும் செய்யக் கூடாது. ஒரு புரட்சியாளனின் தாய் மரணத்தில் மூடப் பழக்கங்களா?!” என்று கொதித்து விட்டார். வந்திருந்த தோழர்கள் எல்லாம் புல்லரித்துப் போனார்கள். வருசாவருசம் குலதெய்வம் கும்பிடப் போய்விடுகிற தோழர்கள் முதற்கொண்டு எல்லோரும் பாராட்டினார்கள். அடுத்த வருசமே அவருடைய வீட்டில் ஓர் அகால மரணம் நிகழ்ந்த போது எல்லோருமே வேயன்னாவின் தலையை உருட்டி விட்டார்கள். போன வருசம் அவருடைய ஆத்தாவுக்கு முறையாகச் செய்ய வேண்டிய காரியங்கள் செய்யாததால், “ஆண்டவன் பொறுக்காமல் இன்னொரு உயிரை வாங்கிவிட்டான்” என்று சிலரும், “அவருடைய ஆத்தாவே தண்டித்து விட்டாள்” என்று சிலரும் பொருமினார்கள். இந்த முறை பெரும்பாலான தோழர்கள் பின்வாங்கி விட்டார்கள். “அவன் சம்சாரம்-பிள்ளைகள் விருப்பப்படி எல்லாக் காரியங்களையும் செஞ்சுக்குங்க” என்று சொல்லி அமைதி காத்து விட்டார். அல்லது பின்வாங்கி விட்டார். பேரு மட்டுந்தான் பிடிவாதமாக அப்பாவை ஆதரித்தான். “வேயன்னா மாதிரியே இருக்கான்”-னு ஊரே சொல்லும். அதைவிட மகிழ்ச்சி – “இவன் ஒருத்தந்தான் என் உண்மையான வாரிசு” என்று அப்பாவே சொல்லிப் பெருமைப்பட்டபோது கிடைத்தது பேருக்கு. அதற்கான பதிலுதவி வேயன்னாவிடம் இருந்து இப்போது கிடைக்கும் என்று நம்பினான்.

முதன்முறை, “புரட்சி செய்கிறார்... பெரிய மனுசன்... படித்தவர்” என்று ஊமையாக இருந்தவர்கள், இரண்டாம் முறை அதை வேறு பெயரில் அழைத்தார்கள். இந்த முறை கண்டிப்பாக ஊர்க்காரர்களும் உறவுக்காரர்களும் வேயன்னாவை உலுக்க முயல்வார்கள். தோழர்கள்தாம் வந்து கைகொடுக்க வேண்டும். சடங்குகளற்ற சீர்திருத்தத் திருமணம் என்றால் இரண்டு மாங்காய்கள் ஆகிவிடும். கலப்புத் திருமணம் என்பதே பெரிய சீர்திருத்தம் அல்லவா? ஊரெல்லாம் ஒரே புரட்சிப் புழுதியாக இருக்கும். ஒருவேளை பழமைவாதிகளின் கை ஓங்கினால், கொள்கைக்கு எதிராகக் கோயிலில் வைத்துக் கூடத் தாலி கட்டத் தயங்கக் கூடாது. ‘இப்போதைக்குக் காரியம். அப்புறந்தான் வீரியம்’ என மல்லிகாவை மணந்து விடுவதற்காக எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தான் பேரு. படிப்பு முடிந்தது. பேரும் மல்லிகாவும் பெங்களூரிலிருந்து கிளம்பினார்கள். சித்திரை மாதக் கத்தரி வெயிலில் செக்கச் செவேர்னு ரெண்டு பெரும் வந்து இறங்கினார்கள். பேருந்தில் வரும்போதே ரெண்டு பேரும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த ஊர்க்காரர்கள் எல்லாம் பேயறைந்தது போல மூஞ்சி வெளிறிப் போனார்கள். அதிர்ச்சியுடனேயே சிலர் வழக்கமான விசாரிப்புக் கேள்விகளைக் கேட்டு அடங்கினர். அதிர்ச்சியாலேயே ஒன்றும் பேச முடியாமல் சிலர் சும்மா திரும்பிக் கொண்டார்கள். இரண்டுமே தெரிந்த முகங்கள்தாம். ஆனால், ‘இப்படியொரு பொருத்தமுள்ள முகங்களா?’ என்று யாருமே எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள். “நம்ம ஆளுகள்ல இம்புட்டுச் செவப்பா ஆம்பளப் பிள்ளயப் பெத்து வச்சுக்கிட்டு வேயன்னா எங்கிட்டுப் போயி பொண்ணு பிடிக்கப் போறாரோன்னு சொந்தக்காரங்களெல்லாம் பேசிக்கிட்டுருந்தாங்க. அந்த வேலையே ஒங்களுக்கு வேண்டாமப்பு”-ன்னு புளியங்கொம்பாப் பிடிச்சிட்டு வந்துட்டான் பேரு என்று பேசிக்கொண்டார்கள். கம்மாக்கரையில் இருந்து வீடு போய்ச் சேரும் முன் வேடிக்கையான வேடிக்கை. அத்தனை குசுகுசுப்பு. பார்த்தவர்கள் எல்லோருமே தான் பிறந்ததில் இருந்து பார்த்த காட்சிகளிலேயே அதிர்ச்சியான காட்சி அதுதான் என்பது போலப் பார்த்தார்கள். மல்லிகாவுக்கோ கூச்சமான கூச்சம். பேர்ஸ் (இப்போது புரிகிறதா? பெங்களூரில் இதுதான் அவன் பெயர்!) இதற்கெல்லாம் கலங்கியவனாகத் தெரியவில்லை. “இவய்ங்க எப்பவுமே இப்பிடித்தான். நடக்க விட மாட்டாய்ங்க. மனுசன் கருகிச் சாம்பலாகுற மாதிரிப் பாப்பாய்ங்க. கண்ட்ரி ஃபெல்லோஸ்!” என்று அவளுடைய பதற்றத்தைப் பதங்கமாக்க முயன்றான். தெரு முனையிலேயே சித்தப்பா கானா நின்றார். பார்த்து அவர் பங்குக்கு அவரும் ஒரு முறைப்பைப் போட்டுவிட்டு விறுவிறுவென வீட்டுக்குள் போனார். பின்னால் அங்கொன்றும் இங்கொன்றுமாக கூத்துக்காரர்கள் பின்னால் கூடுவது போல ஆட்கள் கூட ஆரம்பித்தார்கள். பஸ்ஸை விட்டு இறங்கி, வில்லுவண்டிக்குள் நுழைந்து, திரையைப் போட்டு மூடிக் கொண்டு, ஓடையைக் கடந்து பக்கத்து ஊருக்குப் போக வேண்டிய ஆள், நம்ம ஊர்ப்பய பக்கத்துல ஒக்காந்து வந்திறங்கி, அவன் கூடவே – அவன் வீட்டுக்கே போவது இந்தப் பிறப்பில் ஒருமுறைதான் பார்க்க முடிகிற காட்சி. இருக்காதா பின்னே?!

வீட்டு வாசலில் காலடி எடுத்து வைக்கும் முன்பே, வீட்டுக்குள்ளிருந்து எல்லோரும் மளமளவென்று வாசலுக்கு வந்து விட்டார்கள். சித்தப்பா உபயம். ஆத்தாவுக்கு மளமளவென்று கண்ணீர் கொட்டியது. வேயன்னா கண்ணாடியை மடித்துக் கொண்டு அருகில் வந்தார். எல்லோரும் மௌனமே மொழியாகக் ‘குர்’ரென்று பார்த்தார்கள். மல்லிகாவுக்கு ஏதோ தன்னைச் சுற்றி நெருப்பு வளர்த்துத் தனியாக நடுவில் நிற்பது போன்ற தகிப்பு. தனியாக வந்தாலே ஆரத்தி எடுக்கலாம் என்று இருந்தவர்கள்... தங்கை இன்பம் சடசடவென அடுப்பங்கரைக்குள் ஓடி, தாம்பாலத்தோடு வந்தாள்.

பேரின்பம் கொடுத்த அதிர்ச்சியை, இன்பத்தின் மீது கோபமாக உருமாற்றிக் கத்தினாள் ஆத்தா. “பாதகத்தி! இந்தக் கோலத்துல வந்து நிக்கிறவனுக்கு ஆரத்தி எடுக்கவா ஒன்னப் பெத்தேன்!?” என்று கத்திக் கதறித் தாம்பாலத்தைத் தட்டிவிட்டாள்.

மயான அமைதி இழவு வீட்டு இரைச்சலாக மாறியது. இன்பம் உடைந்து அப்படியே திண்ணையில் உட்கார்ந்தாள்.

வேயன்னா சுதாரித்தார். “நேரே இங்கதான் வாரீகளாப்பா?” என்று மௌனங்களையும் இரைச்சலையும் உடைத்தார்.

“ஆமாப்பா” என்றான் பேரு.

“இது கிட்ணன் மகதானே?!” என்றார், அவளைப் பார்த்து. “இதைப் பிடிக்க அவ்வளவு தூரம் போகணுமாக்கும்?” என்று அமைதியாக ஒரு பெரிய கேள்வியைச் சர்வ சாதாரணமாகக் கேட்டுவிட்டு, இருவருடைய முகத்தையும் முந்தைய கேள்விக்கான பதிலை உறுதி செய்து கொள்வதற்காகப் பார்த்தார்.

இருவரும் ஒரே திசையைப் பார்த்துக் கொண்டு – தரையைத்தான் – “ம்ம்!” என்றனர், உடலிரண்டு சொல்லொன்றாக.

“எதுவுமே தப்பில்லை. நம்ம ஊர்ப்பயக ஏகப்பட்ட பேர் அவுக ஊருக்குள்ள புகுந்து இதே வேலயப் பண்ணிட்டாய்ங்க. எல்லாப்பயலும் கூட்டீட்டு மதுரைக்கும் மெட்ராசுக்கும் போவான். அதுக்கு நீ பண்ணுனது பரவாயில்ல. வீட்டுக்கே கூட்டீட்டு வந்துட்ட. ஆனாலும் அடுத்த வீட்டுப் பிள்ளய இந்த மாதிரிப் பட்டிக் காட்டுல தெரு நெடுக வேடிக்கை காட்டிக் கூட்டி வந்திருக்க வேண்டியதில்ல. அவுக அப்பனும் சாதாரணப்பட்ட ஆளில்ல. பெரிய மனுசங்களுக்குத் தேவையில்லாத அவமானத்தக் குடுத்தது போல ஆயிருச்சேன்னுதான் கவலையாயிருக்கு...” என்று வாசலைப் பார்த்தால் கூட்டம் கூடிவிட்டது.

சிறுசு முதல் பெருசு வரை ஊரே வேயன்னா வீட்டு வாசலில்தான் நின்றது. “போங்க பயபிள்ளகளா. என்ன பாவக் கூத்தா காட்டுறாக?! போயி ஒங்க சோலிகளப் பாருங்க. தொங்கப் போட்டுக்கிட்டு வந்துருச்சுக வேடிக்கை பாக்க...” என்று கானா போலிஸ் வேலை பார்த்தார்.

மேலத்தெருவில் இருந்து தங்கச்சி பார்வதி தலைவிரி கோலமாகத் தலையிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு, ஒப்பாரி வைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள். இருக்காதா பின்னே?! வரிசையாக மூணு பொம்பளப் பிள்ளைகள் வைத்துக் கொண்டிருப்பவள். அண்ணன் பிள்ளைக ஒன்னொண்ணுக்கும் கோர்த்து விடலாமென்று கிட்டத்தட்ட இருபது வருடங்களாக வளர்த்த கனவு ஒரு நாளில் கரைந்து காற்றில் போய்விட்டது. கரைந்தா போனது? வெடித்துச் சிதறிவிட்டது என்றல்லவா சொல்ல வேண்டும்!

“பேரு, தோரனைக்கும் படிப்புக்கும் இவ பிள்ளைக பக்கத்துல நிக்க முடியுமா? இப்பிடி ஆசப்பட்றதே பாவமப்பா!” என்று ஊரே சொன்னாலும், பனை மர ஒசரத்துக்கு நம்பிக்கை வைத்திருந்தாள் பார்வதி அத்தை.

“எம்பிள்ளைகளுக்கு என்ன கொறை? அவுக அப்பா போலக் களையான மூஞ்சி! படிப்பென்ன பெரிய படிப்பு? எங்கண்ணன் படிச்சவருதான். அதுக்காகப் பட்டதாரியவா கெட்டுனாரு?!” என்று பதிற் கேள்விகளோடு தயாராக இருந்தாள்.

‘இதற்காகவே இவ பிள்ளைகளக் கட்ட விடக் கூடாது’ என்று தீர்க்கமாகத் தீர்மானித்திருந்தாள் வேயன்னா மனைவி தங்கம். தங்கமும் பார்வதியும் அப்படியொரு பொருத்தம்! நாத்தனா-மதினியாச் சண்ட நாலு தலமொறைக்கு முன்னால எப்பிடி இருந்திருக்கும் என்பதைச் சொல்லவே வேண்டியதில்லையே. இயற்கை செய்த கொடுமை – ரெண்டு பேருமே சேர்ந்து அழுது கொண்டிருக்கிறார்கள் இன்று. பார்வதியின் அழுகைதான் தங்கத்துக்கு ஆறுதலானது. ‘நல்ல வேளை, எப்படியோ இந்தப் பாதகத்தி வலையில் சிக்காமல் தப்பி விட்டானே! நல்லா ரதி போலப் பிடிச்சிட்டு வந்துட்டான். அடுத்த சாதிப் பிள்ளையா இருந்தாலும் பக்கத்து ஊர்ப் பிள்ளதான! அங்கயே இருந்து வேற எதாவது ஒரு அசலூர்ப் பிள்ளயக் கூட்டு வந்திருந்தா எம்புட்டுக் கஷ்டமாயிருக்கும்!” என்று கொஞ்சங்கொஞ்சமாக மனதைத் தேற்றத் தொடங்கினாள். பார்வதி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மதினியாரிடம் நெருங்கி வந்து அழுகையைப் பெரிதாக்கினாள்.

“நாசமாப் போற @#$% @#$%. செவப்பா செருக்கா ஒரு ஆம்பளயப் பாத்துட்டா விட மாட்டாளுக. அப்பிடியே முந்தானிக்குள்ள முடிஞ்சு போட்ருவாளுக. வீட்ல சோறு போடும்போதே சொல்லிக் குடுத்து வளப்பாய்ங்க போல!” என்று வீங்கிய வார்த்தைகளை வீசினாள்.

மல்லிகாவுக்கு சுருக்கென்றது. கண்ணீர் மேலும் பெருக்கெடுத்துக் கொட்டியது. பேரு சீறி விட்டான். “எத்தே, வார்த்தய அளந்து விடுங்க. குண்டக்க மண்டக்கப் பேசுனீகன்னா நாக்க அறுத்துப் போடுவேன். வயசுக்கு மரியாத குடுத்துப் பாத்துக்கிட்டு இருக்கேன். அப்பறம் சீரழிஞ்சு போவிக!” என்றான்.

எங்க போயிப் பட்டம் விட்டாலும் இந்தக் கருசக் காட்டு மண்ணத் தின்னு வளந்தவந்தானே! அந்தப் புத்தி எப்பிடி இல்லாமப் போகும்!

“அய்யய்யோ, எப்பிடி இருந்த எம் மருமகன் இப்பிடி ஆயிட்டாரே! ஆயிட்டாரோ ஆக்கிட்டாளோ!!” என்று கூவினாள்.

திரும்பவும் பேரு, “எத்தே!” என்று சத்தமாகக் கத்தினான்.

மல்லிகாவுக்கு வீட்டுக்காரர் போட்ட சத்தம் கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும், ‘இத்தனையையும் அனுபவிக்கணும்னு என்ன தலவிதியா? இப்ப நேர வீட்டுக்குப் போயிர்றேன். அப்பறமாப் பாக்கலாம்னு சொன்னதுக்கு விட மாட்டேன்னாரே மனுசன்! இப்ப யாருக்குமே நிம்மதி இல்லாத மாதிரி ஆயிருச்சே!” என்று எண்ணி தேம்பித் தேம்பி அழுதாள்.

தங்கம் சிறிது வித்தியாசமான பொம்பளை. பெரிய குடும்பத்தில் பிறந்து, பெரிய மனுசனுக்கு வாக்கப்பட்டு, பெரிய குடும்பத் தலைவியா இருப்பதால், சிறிது பெரிய மனுசத்தனம் இருப்பவள். அவளால் பார்வதி போலப் பேச முடியவில்லை. அவள் பேசுவதையும் தாங்க முடியவில்லை. மல்லிகாவின் அழுகையையும் ஓரளவுக்கு மேல் வேடிக்கை பார்க்க முடியவில்லை.

“இவள இப்பிடியே விட்டா, அப்படியே அண்ணனையும் மதினியையும் வளைச்சுப் போட்டு, அடுத்த பிள்ளைகளுக்கெல்லாம் இப்பவே பரிசம் போட்டுட்டுப் போயிறலாம்னு நெனைக்கிறா” என்று தங்கச்சி மாணிக்கத்திடம் சொல்லிக்கொண்டே சத்தத்தைக் கூட்டினாள் – “ஈனச் சிரிக்கி! என்ன பேசணும்னே தெரியாதா ஒனக்கு? சோத்தத் திங்கிறியா, இல்ல வேற என்னத்தையும் திங்கிறியா? அடுத்த வீட்டுப் பிள்ளய எப்பிடி நடத்தணும்கிற அறிவு கூடக் கெடையாதா ஒனக்கு? ஒழுங்கா ஒஞ் சோலியப் பாத்துக்கிட்டுப் போ! இல்ல, நான் இருக்கிற வெறில இந்த எடத்துலயே ஒங் கொதவளையக் கடிச்சுத் துப்பீருவேன்!”.

இப்பத்தான் கொஞ்சம் நிம்மதி பிறந்தது எல்லாத்துக்கும். வேயன்னா, பேரு, மல்லிகா, மாணிக்கம்... எல்லோருக்குமே. பிரச்சனை திசை திரும்பி விட்டதற்காகவும் சரியான திசையில் திரும்பி விட்டதாகவும் நிம்மதிப் பெருமூச்சு. கானா பிள்ளைகள் அவரைப் போலவே படிக்கவில்லை – கரடு முரடானவர்கள் என்று சொல்லிப் பெரியண்ணன் பிள்ளைகளுக்குத்தான் பெண்ணைக் கொடுப்பேன் என்று பிடிவாதம் பண்ணியதால், ஒரு நாளாவது பார்வதியைப் போட்டுப் புரட்டி எடுக்க வேண்டும் என்று கானா மனைவி மாணிக்கமும் குறி வைத்துக் கொண்டுதானிருந்தாள். அந்த நிம்மதிதான் அவளுக்கு இப்போது. தங்கமும் பார்வதியும் வெவ்வேறு பட்ட குணாதிசயங்கள் கொண்டவர்கள். அதனால் அவர்கள் இருவருக்கும் ஒத்து வராது. ஆனால் மாணிக்கமும் பார்வதியும் ஒரே மாதிரிப் புத்தி கொண்டதுகள். அதனால் இதுக இரண்டுக்கும் ஒத்து வராது.

மீண்டும் ஒருமுறை வேயன்னா தன் இருப்பை அழுத்தமாக உணர்த்தினார் – “இப்ப என்ன நடந்துருச்சுன்னு ஒப்பாரி வச்சுக்கிட்ருக்கீக? போயி வேல வெட்டியப் பாருங்க வெட்டிக் கழுதைகளா!”.

மகனையும் மருமகளையும் பார்த்து, “மத்தியானச் சாப்பாடு, இன்னும் சாப்புடலைல்லப்பா?” என்று கேட்டு விட்டு, வழக்கம் போல் பதிலுக்குத் தாமதியாமல், “ஏம்மா இன்பம், அண்ணனுக்கும் மதினுக்கும் சாப்பாடு தயார் பண்ணு சீக்கிரம்!” என்றார் சர்வசாதாரணமாக!

முடிந்த அளவு மல்லிகாவை இயல்பு நிலைக்குக் கொண்டு வர முயன்றார் – “அப்பாவுக்குத் தபால் எதுவும் போட்டயாம்மா?, “அங்க ஒன்னப் பாக்க வந்திருந்தானா?” போன்ற கேள்விகளைக் கேட்டு அவளை வசதிப் படுத்தினார். சொந்த வீட்டைப் போல உணர வைக்க முயன்றார். பெரிய மனுசன் அல்லவா?

அந்த நேரம் வீட்டு வாசலில் திரும்பவும் சத்தம். பார்வதி மண்ணை வாரித் தூற்றினாள். அண்ணன் இருக்கும் போது அடக்கி வாசிப்பவள்தான். தாங்கொணாத் துயரத்தில் சுயநிலை மறந்து துடித்துக் கொண்டிருந்தாள். எதிர்காலத்தில் மிச்சமிருக்கிற வாய்ப்புகளையும் கெடுத்துவிடக் கூடாது என்ற உணர்வு கூட இல்லாமல் கத்தினாள் – “இனி இந்தப் பக்கம் தல வச்சுக்கூடப் படுக்க மாட்டேன். எங்கப்பன் என்னைக்குச் செத்தாரோ அன்னைக்கே நான் அனாதிதான். இன்னைக்கு அத நல்லாப் புரிய வச்சுட்டான் ஆண்டவன்!” என்று வேயன்னாவை உணர்வுபூர்வமாகத் தட்ட முயன்றாள். அவர் எதுக்கும் மசிகிற மாதிரித் தெரியவில்லை.

இருட்டுவதற்குள் மல்லிகாவை வீடு கொண்டு போய்ச் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளில் தீவிரமானார். வண்டி எந்த நேரமும் தயார் நிலையில் இருக்கும். யார் யாரை உடன் அனுப்பலாம் என்று யோசித்தார் – ‘தங்கத்தை உடன் அனுப்ப முடியாது. மாமியாரே (!) போவது சரிப்பட்டு வராது. இது போன்ற வேலைகளுக்குப் பார்வதியும் மாணிக்கமுந்தான் சரியான ஆளுக. பார்வதி அனாதையாகிப் போயிட்டா. கானா மகன் கருப்பை வண்டி கட்டச் சொல்லீற வேண்டியதுதான். மாணிக்கம் மட்டும் போய் விட்டுட்டு வந்துறட்டும்” என்று முடிவு செய்தார்.

‘தகவல் ஏற்கனவே போய்ச் சேந்துருக்கும். கிட்ணன் வீட்ல ஆள் இருந்திருந்தா வண்டியப் பூட்டிக்கிட்டு நாலு பேரோட அவனே வந்திருப்பான். வெளிய எங்கயாவது போயிருப்பான் போலத் தெரியுது. அங்கயும் பொம்பளைக ஒப்பாரி வச்சுக்கிட்டு இருப்பாக. கிட்ணன் வந்து சேர முன்னாடி அவன் பிள்ளயப் போயி வீடு சேத்துறணும். நாளைக்குக் காலைல நம்ம போய்ப் பேசுற வரைக்கும் பிள்ளைக்கும் தொல்லை இல்லாமப் பாத்துக்கணும். பேசுறதுக்கு யாராவது விவரமான ஆள அனுப்பலாம்னு பாத்தா, அது சரிப்பட்டு வராது போலத் தெரியுது...’ எனக் குழம்பித் தன் நெடுநாள் நண்பன் பேனாவை (பெரியசாமி) நாடினார். தனக்கும் கிட்ணனுக்கும் மட்டும் புரிகிற ஆங்கில மொழியில் எப்போதும் போலச் சுருக்கமாக சில சொற்றொடர்கள் மட்டும் எழுதினார்.

“மாப்ள, பதறும்படியாக ஒன்றும் ஆகிவிடவில்லை. மல்லிகா தங்கமான பெண். பொறுமை பற்றி உனக்கு யாரும் பாடம் நடத்த வேண்டியதில்லை. நாளை காலை வரை பொறுத்திரு. காலைச் சாப்பாட்டுக்கு நான் அங்கு இருப்பேன். பேசிக் கொள்வோம். ஒரேயொரு நாள் ஊரார் பேச்சைக் கண்டுகொள்ளாதிரு. நாம் படித்தவர்கள். நன்றி.”

மறுநாள் காலை ஓடையைக் கடந்து சம்பந்தம் பேச வந்து விட்டார் வேயன்னா. எல்லோர் மூஞ்சியிலும் ஈ ஆடவில்லை. கிட்டத்தட்ட சுற்றியிருந்த முகங்கள் அனைத்துமே அழுதழுது வீங்கியிருந்தன. ‘இரவெல்லாம் என்னவெல்லாம் நடந்ததோ!’ என்று கற்பனை பண்ணிக் கலங்கினார் வேயன்னா.

முதல் கேள்வி – “மல்லிகா எங்கப்பா?”

“விடிய விடிய அழுதுட்டு, இப்பத்தான் தூங்குது மச்சான்!” என்றார் கிட்ணன், மிகுந்த துக்கத்தோடு – கம்மிய குரலில்.

எப்படித் தொடங்குவதென்றே தெரியவில்லை வேயன்னாவுக்கும். எப்படியோ தொடங்கிவிட்டார்கள். இத்தனைக்கும் நடுவில் வேயன்னாவுக்குப் பிடித்த மாதிரி சட்னி, சாம்பார், பொடியோடு இட்லி அவித்துப் படைத்தார்கள். இதுதான் அவர்களுக்கிடையே இருந்த உறவுக்கான விளக்கவுரை. சாதி மட்டும் ஒன்றாக இருந்திருந்தால் சரியான சம்பந்தமாக அமைந்திருக்கும். கொடுமை என்னவென்றால், அவர்கள் இருவரும் சிறு வயதில் சம்பந்தம் செய்து கொள்வது பற்றியெல்லாம் விளையாட்டாகப் பேசியிருக்கிறார்கள். அந்த நினைவுகள் இருவருக்குமே இப்போது வந்திருக்க வேண்டும். அதுதான் இப்போது நிலைமையை எளிதாக்கியது. அது மட்டுமில்லை, இருவருமே அவரவர் ஊர்களில் பெரிய மனிதர்கள், படித்தவர்கள், உலகம் தெரிந்தவர்கள், புரட்சித் துண்டு போடுபவர்கள் என்பதால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது.

கூடிய விரைவில் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து, வைகாசியில் வரும் முதல் முகூர்த்தத்தன்றே திருமணம் நடந்தது. முகூர்த்த நாள் குறித்துச் செய்தாலும் மற்ற சடங்குகள் எதுவும் இல்லை. மாகாணத்தில் இருக்கிற பெரும் பெரும் தலைவர்கள் எல்லாம் வந்து வாழ்த்துரை வழங்கினார்கள். குலம், கோத்திரம், பிரிவு, உட்பிரிவு, கிளை, வேர் – எதிலும் சமரசம் செய்து கொள்ளாது தம் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்த தோழர்கள் உட்பட எல்லோருமே வேயன்னாவையும் கிட்ணரையும் புளிக்கப் புளிக்கப் புகழ்ந்தார்கள்.

“சாதி பேதங்களின் சுவடுகளே இல்லாத மாநகரங்களில் வாழும் நாங்களே செய்யாத புரட்சியை, இந்தியத் திருநாட்டின் தென்கோடி மூலையில் கருவேல மரங்களுக்கு மத்தியில் தொலைந்து கிடக்கும் இரு குக்கிராமங்களில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் – வாழும் வரலாறுகள் – தோழர் வேயன்னாவும் தோழர் கிட்ணனும் செய்யத் துணிந்திருக்கிறார்கள். இது வெறும் திருமண வாழ்த்துரையல்ல. புரட்சிப் பிரகடனம். ரஷ்யாவிலும் பிரான்சிலும் வெடித்த புரட்சி பெரிதல்ல. ஆங்கில நாடாளுமன்றத்தில் குண்டு வீசிய பகத் சிங்கின் புரட்சி பெரிதல்ல. நம்மைப் பொருத்தமட்டில் இதுதான் மாபெரும் புரட்சி. புத்தகத்தில் படிக்கும் எரிமலையை விட கண் முன்னால் வெடிக்கும் பட்டாசு பெரிது. நாங்களல்ல தலைவர்கள். கல் தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டு இந்த மண்ணில் இதுவரை நடந்திராத மாதிரியான ஒரு பெரும் புரட்சியை நடத்திவிட்டு அடக்கமாக அமர்ந்திருக்கிறார்களே! அவர்கள்தாம் தலைவர்கள் – உண்மையான தலைவர்கள். அவர்களுக்காக, மனமாற – தலைவணங்கி என் மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!” என்று நிறைவாகப் பேசிய தலைவர், உரையை முடித்துத் தரையிறங்கும் போது, வேயன்னாவும் கிட்ணரும் ஓசோன் மண்டலத்துக்கும் மேல் – மேலே மேலே – பறந்து கொண்டிருந்தார்கள்.

கணீர்க் குரலில் ஒலித்த அந்த உரை, கருவேலங்காடுகளுக்குள்ளும் – கல்யாணத்துக்கு வந்து விட்ட அத்தனை சுத்துப்பட்டிக்காரர்களின் காலியான வீடுகளிலும் “கணீர்... கணீர்...” என்று எதிரொலித்தது. ஊர்க்குருவிகளும் காகங்களும் இதற்கு முன் எப்போதும் கேட்டிராத கம்பீர ஒலியில் மிரண்டு தெறித்தன. திருமணத்துக்கு வந்திருந்த எல்லோரும் – புரிந்தோரும் புரியாதோரும் – அந்த உரையின் முடிவில் ஒருவிதக் கிளர்ச்சிக்கு உள்ளாக்கப் பட்டது போல் உணர்ந்தார்கள்.

“இப்பிடித்தான் வேயன்னாவும் வெளியூர்க் கலியாணங்கள்ல போய்ப் பேசுவார் போல!” என்றொரு வினோதமான கண்டுபிடிப்பைப் பற்றிச் சொன்னார் பக்கத்துக்கு ஊர்க்காரர் ஒருத்தர்.

சாப்பாடு முடிந்தது. எல்லோரும் திருப்தியாகப் பிரிந்து சென்றார்கள். திருமணத்தின் பிரம்மாண்டமும் அங்கு நடந்த உரைகளும் அதன் பின்னரும் பல நாட்களாகப் பலரையும் கிளர்ச்சிக்குள்ளாக்கின. மணமக்களை மட்டுமல்லாது, வந்திருந்த எல்லோரையும் கிளர்ச்சியுறச் செய்த திருமணம் அல்லவா? சும்மாவா?

காலச்சக்கரம் சுழன்று சுழன்று தேய்ந்தது. வேயன்னா, கிட்ணர், உரை நிகழ்த்திய பெரியோர்கள் எல்லோரும் இறந்து விட்டார்கள். பேரின்பமும் ஒரு விபத்தில் இறந்து போனார். அவருடைய திருமணம் முடிந்து கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ஆனபின்பு, என்ன நடத்து கொண்டிருக்கிறது தெரியுமா?

எல்லாம் மாறிவிட்டது. உலகம் சிறிதாகி விட்டது. தொழில்நுட்பம் கற்பனைக்கு எட்டாத அளவு வளர்ந்து விட்டது. அதே சின்னக் கிராமத்தில் இருந்து குறைந்த பட்சம் பத்துப் பேர் பெங்களூரும் வெளிநாடும் போயிருக்கிறார்கள். வீட்டில் உட்கார்ந்த படியே கணிப்பொறியைத் தட்டி, இணையத்தில் ஆயிரக்கணக்கான பெண்களைப் பார்க்க முடிகிறது. எண்ணிலடங்காக் கலப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால், முப்பத்தி ஐந்து வயது கடந்து விட்ட பேரின்பத்தின் பிள்ளைகள் இருவர் (ஒரு பெண், ஓர் ஆண்) மணப்பொருத்தம் கிடைக்காமல் பெருந்துன்பத்தில் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.


“அப்பா இல்லை. சாதகம் இல்லை. உட்பிரிவு தெரியவில்லை. அம்மா வேற சாதி. இதெல்லாம் நமக்கு ஒத்து வராதுப்பா!” என்று அலறி ஓடுகிறது, அறிவியற் புரட்சி செய்த புதிய தலைமுறை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்