கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 3/7


கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

நான் இருக்கும் பகுதி பெடாக். தமிழில் பிடோக் என்பதை ஆங்கிலத்தில் பெடாக் என்று உச்சரிக்கிறார்கள். ஆனால், அங்கேயே காலம் காலமாக வசிக்கும் தமிழர்கள் "பிடோ" என்று 'க்' விட்டு விடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு பெயருமே ஆங்கிலத்தில் ஒரு விதமாகவும் தமிழில் ஒரு விதமாகவும் அதையே எழுத்தில் ஒரு விதமாகவும் பேச்சில் ஒரு விதமாகவும் என்று வெவ்வேறு விதமாக உச்சரிக்கப் படுகின்றது. ஒருவர் பெடாக் போன்ற ஒரு வார்த்தையை எப்படி உச்சரிக்கிறார் என்பதை வைத்தே அவர் எவ்வளவு காலம் சிங்கப்பூரில் இருக்கிறார் என்று சொல்லி விடலாம். அதாவது, பழைய ஆளா புது ஆளா என்பதைச் சொல்லி விடலாம். தமிழிலும் எல்லா இடங்களிலும் எழுதிப் போட்டிருப்பதால் உச்சரிப்பு பெரிய அளவில் தப்பாமல் சமாளித்துக் கொள்ள முடிகிறது. பிடோ மட்டுமில்லை. நீண்ட காலமாக இங்கே வாழும் தமிழர்களுக்கென்றே பல தனிப்பட்ட உச்சரிப்புகளும் பெயர்முறைகளும் இருக்கின்றன. லிட்டில் இந்தியாவைத் தேக்கா என்பார்கள். சிங்கப்பூர்ப் பணத்தை வெள்ளி என்பார்கள். புதிதாக வந்திருக்கும் நம் போன்றோர் டாலர் என்றே சொல்கிறோம். இதில் டாலருக்கு வெள்ளி என்று தமிழ்ப் படுத்தியிருக்கும் புத்திசாலித்தனம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இது போலவே அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ இருக்கும் தமிழர்களும் வெள்ளி என்று சொன்னால் எவ்வளவு அழகாக இருக்கும்? சொல்வார்களா? சொல்ல முடியுமா? அதுதான் சிங்கப்பூர் நமக்குக் கூடுதல் உரிமையுடைய ஓர் ஊர் என்பதற்குச் சான்று. இது போலப் பல இடங்களில் அவர்களின் தனித்தன்மையைக் காண முடியும். இதில் 'பழைய பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்', 'புதிய பஞ்சம் பிழைக்க வந்தவர்'களை மதிப்பதில்லை என்று வேறு ஒரு புகார் கேள்விப் பட்டேன். ஒருவேளை அவர்கள் பல தலைமுறைகளுக்கு முன்பே உலகமயமாகி விட்டதால் இன்னும் மாறாமல் இருக்கும் நம்மைக் கண்டால்அருவருப்பாக இருக்கிறதோ என்னவோ. ஒருவேளை அந்தப் புகாரே உண்மையில்லாமல் இருக்கவும் வாய்ப்புண்டு.

தமிழர்கள் இங்கே ஏழு தலைமுறைகளுக்கு முன்பே குடியேறி விட்டதாகக் கேள்வி. சிங்கப்பூர் என்ற தனி நாடு உருவாகும் முன்பே - அது மலேசியாவிலேயே ஓர் ஊராக இருக்கும் போதே இங்கு வந்து விட்டார்கள். மலேசியாவிலும் தமிழர்கள் நிறைய இருக்கிறார்கள். வெள்ளைக்காரர்களால் வேலைக்குக் கொண்டு வரப்பட்டோர் என்போர் ஒருபுறம். அப்போதே திரைகடலோடித் திரவியம் தேடி வந்தோர் இன்னொரு புறம். செட்டிநாட்டு ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். தமிழர்களில் இங்கே அதிகம் என்று பார்த்தால் - அப்படியெல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை எனினும் - செட்டியார், முகமதியர் மற்றும் இதர பாட்டாளி மக்கள் என்று மூன்று குழுக்களாகப் பிரித்து விடலாம்.

செட்டியார்கள் பெரும்பாலும் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள். அவர்களும் எல்லோரையும் போல் ஒரு குழுவாக - எங்கும் இருப்பது போல் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலும் தொழில் செய்கிறவர்களாக - பெருந்தொழில் செய்கிறவர்களாக இருக்கிறார்கள். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வசூல் ராஜாக்களாகி, இதை விடப் பத்து மடங்காகக் கூரையைக் கொட்டிக் கொண்டு கடவுள் திரும்பக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில், ஆங்காங்கே கோயில்களைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள். நமக்கென்று இருக்கும் பண்பாட்டை கடல் கடந்த பூமியில் கட்டிக் காப்பதில் இவர்களின் பங்கு பெருமைப் பட்டுக் கொள்ளப் பட வேண்டியது.

முகமதியர் அனைவரும் பச்சைத் தமிழ் முகமதியர். உருது பேசும் வட தமிழ்நாட்டவர் அல்லர். அவர்களும் ஒரு பெருங்குழுவாக இருக்கிறார்கள். இந்திய முஸ்லிம் (INDIAN MUSLIM) என்று ஓர் அங்கீகரிக்கப் பட்ட தனி இனக் குழு அடையாளத்தோடு வாழ்கிறார்கள். அதை எல்லா இடத்திலும் "நான் இந்திய முஸ்லிம்!" என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்கள். பெரும்பாலும் ஒருத்தருக்கர் சொந்தக்காரராக - சம்பந்தப் பட்டவராக - ஒரே ஊர்க்காரராக, ஒரே பகுதியிலேயே வாழ்கிறார்கள். மலேசியர்களும் முகமதியர் என்பதால் அவர்களோடு எளிதில் நெருங்கி விடுகிறார்கள். மலேசியர்களும் அறிமுகத்தின் போதே இந்தியர் என்றதும், "இந்திய முஸ்லிமா?" என்று  கேட்கிறார்கள். மொத்தத்தில், மதங்களுக்கு அப்பாற்பட்டும் இந்தியரும் மலேசியரும் எளிதில் நெருங்கி விடுகிறார்கள். இரு சாராருக்குமே ஒரு பரஸ்பர மரியாதை இருப்பது தெரிகிறது. சீனர்கள் அவ்வளவு எளிதில் நம்மோடு கலப்பதில்லை. அந்த பயம் இருக்கட்டும் ராஸ்கலா!!! :)

பாட்டாளி மக்கள் இனங்கள் இங்கே எப்படி வந்தார்கள் என்பதற்கு ஒரு சில கதைகளும் சொல்லப் படுகின்றன. ஆனால் அவை எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. வெள்ளைக்காரன் ஒரு கப்பலைக் கொண்டு வந்து நிறுத்தி, "சாப்பாடு இலவசம், தங்குமிடம் இலவசம், வசதியான வாழ்க்கை முறை... வாருங்கள்... வாருங்கள்..." என்று கூவி அழைத்ததாகவும் பஞ்சத்தில் நலிந்து கிடந்தோர் அனைவரும் பாய்ந்து ஏறிக் கிளம்பி வந்து விட்டதாகவும்  நண்பன் ஒருவன் சொன்னான். எப்படியிருப்பினும் அது ஒரு நல்ல முடிவு என்பதில் மட்டும் மாற்றமில்லை. அங்கேயே இருந்திருந்தால், அவர்களுடைய வாழ்க்கை இன்றுவரை மாறியிராது. அவ்வளவு எளிதாக மாற விட்டிருப்பார்களா (விட்டிருப்போமா!?) என்ன!தமிழ் இனத்தின் இருப்பு உலக வரைபடத்தில் இவ்வளவு விரிவடைந்திருக்கவும் செய்யாது.

இது மட்டுமின்றி, அரசுக்கு எதிரான குற்றம் புரிந்தோர் என்று வெள்ளைக்காரர்களால் நாடு கடத்தப் பட்ட ஒரு பெரும் குழுவும் உண்டு. சிவகங்கை மன்னர் குடும்ப வாரிசுகளும் படையினரும் கூட அப்படிக் கடத்தப் பட்டவர்கள் என்று நம் வரலாற்றில்தான் இருக்கிறதே. அவர்களும் தம் பெண்களோடும் குழந்தைகளோடும் விலங்குகள் மட்டும் வாழும் தீவுகளில் வந்திறங்கி, கிட்டத்தட்ட ஒரு வேற்றுக் கிரகத்தில் இறக்கி விடப் பட்டது போலப் புத்தம் புதிதாக வாழ்க்கையைத் தொடங்கி, பலவற்றை இழந்து, விலங்குகளுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி கொண்டு, தமக்கென்று ஒரு வாழ்க்கையை நிறுவி, பின்னர் அருகில் வாழும் மக்களோடு இரண்டறக் கலந்து, இன்று மண்ணின் மைந்தர்கள் ஆகி இருக்கிறார்கள். இங்கே ஈழத் தமிழர்களை விட தமிழகத் தமிழர்களே அதிகம் இருப்பது போலத் தெரிகிறது. ஆனால், மலேசியாவில் ஈழத் தமிழர்கள் அதிகம் இருக்கக் கூடும் என நினைக்கிறேன்.

சிங்கப்பூர் ஒரு கலவையான பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் கொண்டிருக்கிறது. இந்திய-சீன-மலேசிய மக்களின் இருப்பை விடுங்கள். மேற்கத்தியத் தாக்கம் நிறைய இருக்கும் ஊராக இருக்கிறது. மேற்கத்தியத் தாக்கம் என்றால், அமெரிக்காவினுடையதா இங்கிலாந்தினுடையதா என்று குறிப்பிட்டுச் சொல்லும் படியாக இல்லாமல் இரண்டும் கலந்த கலவையாக இருக்கிறது. சில விசயங்கள் இவர்களைப் போலும் சில விசயங்கள் அவர்களைப் போலும் இருக்கின்றன. ஒரு காலத்தில் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஓர் ஊர் என்பதால் சில பகுதிகளின் பெயர்கள் பிரிட்டிஷ் தாக்கம் உள்ளவையாக இருக்கின்றன. அதிகாரபூர்வமான இடங்களில் பயன்படுத்தப் படும் ஆங்கிலம் நம்ம ஊரில் போலவே பிரிட்டிஷ் ஆங்கிலமாகவே இருக்கிறது. சாலையில் இடது புறமே வண்டி ஓட்டுகிறார்கள். வலது புறமே ஓட்டுனர் இருக்காய் உள்ளது. ஆனால், அவர்களின் பணம் டாலர்-சென்ட் என்று அமெரிக்க முறையைப் போல் உள்ளது. தரையில் இருப்பது தரைத் தளம் (GROUND FLOOR) எனப் படாமல் முதற் தளம் (FIRST FLOOR) எனப் படுகிறது.

அடிக்கடி இன்னொரு காட்சியையும் இங்கே காண முடிகிறது. வெள்ளைக்காரக் கிழவர் ஒருவரோடு அவருடைய மகள்-பேத்தி வயதுடைய ஆசிய முகம் கொண்ட இளம் பெண் ஒருவர் கொஞ்சிக் குலாவிக் கொண்டு திரிவார். இவர்கள் இருவருக்கும் என்ன உறவிருக்க முடியும் என்று குழம்பிக் கொண்டிருந்த போது இந்த மாதிரி விசயங்களில் ஆர்வமுள்ள நண்பர் ஒருவர் அது பற்றி விளக்கிச் சொன்னார். அதற்குப் பெயர் எஸ்கார்ட் சர்வீஸ் (வழித்துணை வசதி) என்று சொல்வார்களாம். விடுமுறையை அனுபவிக்க வரும் வெள்ளைக்காரர்களுக்கு இப்படி ஓர் ஏற்பாடு செய்து கொடுத்து விடுவார்களாம். அந்தக் கிழவர்களுக்கு வேண்டிய எல்லாமும் செய்து கொடுக்க வேண்டியதுதான் இந்தப் பெண்களின் முக்கியப் பணியாம். இதைக் கேள்விப் பட்ட பிறகு வெள்ளைக்காரப் பாட்டிகளோடு வரும் தாத்தாக்களைக் கண்டாலே ஒரு மரியாதை. ஒருவேளை, ஒருமுறை இப்படி; ஒருமுறை அப்படி என்று வந்து செல்பவர்களும் அதில் இருக்கலாம். :)

மேற்குலகின் தாக்கம் இருக்கிற அளவு அங்கே இல்லாத ஆனால் நம் போன்ற ஆசிய நாடுகளில் மட்டும் இருக்கும் பழக்கங்களும் நிறைய இருக்கின்றன. சார், மேடம், அங்க்கிள், ஆண்ட்டி என்பவை ஆங்கிலச் சொற்களே என்ற போதும் அவர்கள் பிறரை அதிகம் அப்படி அழைப்பதில்லை. நம்ம ஊரில் இவை மிகச் சாதாரணம். அது சிங்கப்பூரிலும் இருக்கிறது. இங்குள்ள குழந்தைகள் பெரியோரை அங்க்கிள்-ஆண்ட்டி என்றே அழைக்கிறார்கள். கடைகளில் வாடிக்கையாளர்களை சார்-மேடம் என்று அழைக்கிறார்கள். இன்னும் கொடுமையாக தாத்தா பாட்டி வயதுப் பெரியோர் கூட மாமா-மாமி வயதுப் பெரியோரை அங்க்கிள்-ஆண்ட்டி போட்டு அழைக்கிறார்கள். அது ஓர் அடிப்படைப் பண்பாடாகவே இருக்கிறது.

சீனர்கள் எல்லோருமே சீனப் பெயர் ஒன்றும் ஆங்கிலப் பெயர் ஒன்றும் கொண்டிருக்கிறார்கள். சீனப் பெயர் வாயில் நுழையாதவர்களுக்கு வசதியாக இருக்கட்டும் என்று வைத்துக் கொள்கிறார்கள் போலும். சிங்கப்பூருக்கும் மேற்குலகுக்கும் காலம் காலமாகவே நெருங்கிய தொடர்பு இருந்து வருவதாகச் சொல்கிறார்கள். அதனால் இந்தப் பழக்கம் இன்று-நேற்றல்ல, பல தலைமுறைகளாகத் தொடர்கிறது என்றும்  சொல்கிறார்கள்.

இங்கே சிறுவர்கள் எல்லோருமே கண்ணாடி அணிந்திருக்கிறார்கள். ஏன் தெரியுமா? ஒவ்வொரு குழந்தையும் கையில் ஒரு செல்போனை வைத்துக் கொண்டு எந்த நேரமும் ஏதாவது நோண்டிக் கொண்டே இருக்கின்றது. பின் என்ன ஆகும்? இங்கே இருக்கும் எல்லோருமே ஐ-ஃபோன் (I-PHONE) வைத்திருக்கிறார்கள். அல்லது அதை விட விலை கூடுதலான சாம்சங் ஃபோன் வைத்திருக்கிறார்கள். அதனால் பள்ளி-கல்லூரி-அலுவலகம் சென்று திரும்பும் நேரத்திலேயே பல படங்கள் பார்த்து முடித்து விடுகிறார்கள். படம், பாடல், விளையாட்டு, குறுந்தகவல் பரிமாற்றம் என்று ஏதாவதொன்று விறுவிறுப்பாக ஓடிக் கொண்டே இருக்கும். இதைப் பார்த்து நாமும் ஏதாவது செய்தாலென்ன என்று தினமும் பயணத்தின் போது பாடல்கள் கேட்க ஆரம்பித்து விட்டேன். அதன் விளைவுதான் "இசை - எனக்குத் தெரிந்த கற்பூர வாசனை" என்ற இந்த இடுகை. ஆனால் இப்படி மூழ்கிப் போவதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. வேடிக்கைத் தொழில் முழுக்க முழுக்க நட்டப் பட்டுப் போகிறது. கையகலப் பெட்டிக்குள் சுருங்கிக் கொண்டால் வெளி உலகில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் போய்விடும். மற்ற எல்லாத்தையும் விட அதுதானே முக்கியம் நமக்கு. அதனால் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர்த் தமிழர்கள் நடத்தும் வசந்தம் தொலைக்காட்சி தமிழ் நாட்டில் நடத்தப் படும் பல தொலைக்காட்சிச் சேவைகளை விட பல மடங்கு சிறப்பாக உள்ளது. இங்கே இருக்கும் தமிழ் அமைச்சர்கள் அனைவரும் அருமையாகத் தமிழ் பேசுகிறார்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் நம்ம ஊரிலேயே பிறந்து வளர்ந்த நடிகைகளை விட நன்றாகப் பேசுகிறார்கள். இது ஏன் பெரிய ஆச்சரியம் என்றால் இங்கே அவர்கள் தமிழ் பேசி வாக்குச் சேகரிப்பவர்கள் அல்லர். மற்ற நேரங்களில் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருப்பவர்கள். விக்ரம் நாயர் என்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். அவரும் கூட அருமையாகத் தமிழ் பேசுகிறார். அதுவும் செந்தமிழில் பேசுகிறார். அவர் பேசுவதில் அப்படி என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? அவர் பெயரை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். புரியும். அடிக்கடி அவரைத் தமிழ் நிகழ்ச்சிகளில் காண முடிகிறது. கூடிய விரைவில் சிங்கப்பூர் அரசியலில் அவர் ஒரு பெரிய ஆளாக வருவார் என்றே படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

 1. நான் சிங்கபூர் குடிமகன். நீங்கள் சிங்கபூர் பற்றி குறிப்பிட்ட சில விடயங்களுக்கு எனது கருத்தையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
  சீனர்கள் அவ்வளவு எளிதில் நம்மோடு கலப்பதில்லை. அந்த பயம் இருக்கட்டும் ராஸ்கலா!!!
  காரணம் பயம் அல்ல வேறு ஒரு காரணம் அதை கூறி தங்களுக்கு மன வருத்தத்தை அளிக்க விரும்பவில்லை.

  "மலேசியாவில் ஈழத் தமிழர்கள் அதிகம் இருக்கக் கூடும் என நினைக்கிறேன்." சிங்கபூரிலும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தனி குழுவாக இருக்கின்றார்கள். தமது திருமண உறவுகளை தமக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள். தற்போது ஓரளவு நிலைமை மாறி வெளியிலும் திருமண உறவுகளை வைக்கின்றார்கள். அவர்களுக்கு தனியாக ஒரு கோயிலும் உண்டு (செண்பக விநாயகர்)

  "ஆங்கிலம் நம்ம ஊரில் போலவே பிரிட்டிஷ் ஆங்கிலமாகவே இருக்கிறது. " தமிழ் நாட்டில் உள்ளது பிரிட்டிஷ் உச்சரிப்பு அல்ல. இங்கு எனது பணியிடத்தில் பல தமிழ்நாட்டவர் பணி புரிகின்றனர். ஆனால் அவர்கள் என்ன ஆங்கிலத்தில் பேசுகின்றார்கள் என்பதை இன்றும் என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. குறை சொல்லவில்லை. எனக்கு ஏற்பட்ட அனுபவம்.

  "இது ஏன் பெரிய ஆச்சரியம் என்றால் இங்கே அவர்கள் தமிழ் பேசி வாக்குச் சேகரிப்பவர்கள் அல்லர். மற்ற நேரங்களில் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருப்பவர்கள். "
  அப்படி அல்ல நாங்கள் வீடுகளிலும் நண்பர்களுடனும் தமிழில் பேசுவோம். இது பெரும்பாலான இந்தியர்களுக்கு பொருந்தும். ஆனால் சிங்கப்பூர் குடிமக்கள் (இந்தியர்) தற்போது பணிக்காக வரும் இந்தியர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும் போது ஆங்கிலத்தில் உரையாடுவதாக குற்ற சாட்டு உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Ethicalist E, வாசிப்புக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

   "அந்த பயம் இருக்கட்டும் ராஸ்கலா!!!" என்று சொன்னது ஒரு விளையாட்டுக்காக. எனக்குத் தெரியும் அவர்கள் ஏன் நம்மைக் கண்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள் என்று. அதைச் சொன்னால் நான் வருத்தப் படவும் போவதில்லை.

   ஈழத் தமிழர்கள் பற்றிய தங்கள் கருத்துக்கு நன்றி. நல்ல மாற்றம்தான் அது.

   "ஆங்கிலம் நம்ம ஊரில் போலவே பிரிட்டிஷ் ஆங்கிலமாகவே இருக்கிறது" என்று சொன்னது உச்சரிப்பை மனதில் வைத்தில்லை. எழுத்தாங்கிலம் பற்றிச் சொன்னேன். அப்படிப் பார்த்தால் இங்கு பேசும் ஆங்கிலத்திலும் பிரிட்டிஷ் உச்சரிப்பு இல்லையே!

   அது போலவே, "இது ஏன் பெரிய ஆச்சரியம் என்றால் இங்கே அவர்கள் தமிழ் பேசி வாக்குச் சேகரிப்பவர்கள் அல்லர். மற்ற நேரங்களில் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருப்பவர்கள்!" என்று சொன்னதும் அரசியல்வாதிகளைப் பற்றியும் அவர்கள் அலுவல் ரீதியாகப் பேசிக் கொள்வது பற்றியும் சொன்னேன். வீடுகளில் தமிழ் பேசிக் கொண்டுதான் வருகிறார்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. சிங்கப்பூர்த் தமிழர்கள் புதிதாக வரும் இந்தியத் தமிழர்களிடம் ஆங்கில் பேசுவது குற்றச்சாட்டாக இருக்க வேண்டியதில்லை. காலம் மாறிவிட்டது. எல்லோரும் அலுவலகத்தில் ஆங்கிலத்தில் பேசுவதுதான் முறை என்றாகி விட்டது. அதற்குக் காரணம் மற்ற மொழி பேசுகிறவர்களும் நம் அலுவலகங்களில் இருக்கிறார்கள். மற்றவர்களை வைத்துக் கொண்டு தனித்தமிழ்க் கூட்டம் சேர்ப்பதுதான் தவறென்று படுகிறது எனக்கு.

   நீக்கு
 2. " இங்கு பேசும் ஆங்கிலத்திலும் பிரிட்டிஷ் உச்சரிப்பு இல்லையே!" சிங்கப்பூருக்கு என்று தனியான ஒரு கொச்சை ஆங்கில உச்சரிப்பு ஒன்று இருக்கிறது. அதை singlish என சொல்வோம். சிங்க்ளிஷ் உச்சரிப்பில் எங்களுக்குள் பேசிக்கொள்வோம் ஆனால் அலுவலகங்களில் பிரிட்டிஷ் உச்சரிப்பே உள்ளது. நாங்கள் படித்ததும் பிரிட்டிஷ் உச்சரிப்பு முறையில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம்... அந்த வகையில் எங்களுக்கும் பிரிட்டிஷ் ஆங்கிலம்தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். நல்ல பள்ளிகளில் படித்தோர் பெரும்பாலும் நன்றாகத்தான் பேசுகிறார்கள். எம்மைப் போல் புதிதாகக் கிளம்பியிருக்கும் பட்டிக்காட்டுப் பசங்கதான் தங்க்லீஷ் (உங்கள் சிங்க்லிஷ் போன்றது!) பேசிக் கொல்கிறோம். அடுத்த தலைமுறையில் எம் பிள்ளைகள் சரியாகி விடுவார்கள் என நினைக்கிறேன். :)

   நீக்கு
 3. "சிங்கப்பூர்த் தமிழர்கள் புதிதாக வரும் இந்தியத் தமிழர்களிடம் ஆங்கில் பேசுவது குற்றச்சாட்டாக இருக்க வேண்டியதில்லை" இரண்டு வருடங்களுக்கு முன் வசந்தம் தொலைக்காட்சியில் ஒரு talk show நடத்தப்பட்டது. அதில் பங்கு கொண்ட இந்திய தமிழர்கள் இந்த விடயத்தில் கடுமையாக குற்றம் சாட்டினர். அதுதான் அவ்விடயத்தை குறிப்பிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் மீண்டும் வந்து வாதிடுவதற்கு மிக்க நன்றி.

   நானும் அதைக் கேள்விப் பட்டிருக்கிறேன். அது பெரும்பாலும் அலுவலகங்களில் பணி புரியும் எம் போன்றோர் வைக்கும் குற்றச்சாட்டல்ல என்று நினைக்கிறேன். தமிழ் மட்டும் பேசும் இதர பணி செய்யும் மக்கள், 'நம்மிடம் வந்து இப்படி ஆங்கிலம் பேசுகிறார்களே!' என்று வெதும்பிச் சொல்வது. இது எல்லாமே இன்னும் ஓரிரு தலைமுறைகளில் சரியாகி விடும்.

   நீக்கு
 4. பொதுவாக தென்னிந்தியர்கள் ஆங்கிலம் பேசும்போது, ஓ சப்தத்திற்கு பதிலாக ஆ சப்தம் உபயோகிப்பர். டொக்டர் என்பதை டாக்டர், சேர் என்பதை சார், லொறி என்பதை லாரி என்பர். இது பிரிட்டிஷ் ஆங்கிலம் அல்ல. அமெரிக்க ஆங்கிலத்தை ஒத்தது. மேலும் சீரோ என்பதை ஜீரோ என்பர். ஆனால் தென்னிந்தியர்களின் இலக்கணம் மிகவுயர்ந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதன் முறை வருகைக்கு நன்றி, அவதானி. அடிக்கடி வாருங்கள்.

   நீங்கள் சொல்வது புரிகிறது. அது 'ஆ'வுக்கும் 'ஓ'வுக்கும் இடையிலான ஓர் உச்சரிப்பு. தென்னிந்தியா, வட இந்தியா இரண்டிலுமே நல்ல பள்ளிகளில் படித்தவர்கள் அதைச் சரியான முறையில் உச்சரிக்கிறார்கள். லோக்கல் பள்ளிகளில் படித்து வருவோரே உச்சரிப்பின் மூலம் வேற்றுமை காட்டுவது. நீங்கள் குறிப்பிடும் படி இலங்கையிலும் கேரளாவிலும் மட்டுமே பேசப் படுகிறது ('ஓ' மேலோங்கிய பேச்சு!). இங்கே பிலிப்பினோக்கள் அது போலப் பேசுகிறார்கள்.

   நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்