உயிர் பிழைத்தவர்களின் சான்றுரை (Survivors of the Holocaust)
உயிர் பிழைத்தவர்களின் சான்றுரை
Survivors of the Holocaust: A Graphic Novel
ஒரு வரலாற்று நிகழ்வை எண்களின் வழியாகப் புரிந்துகொள்வதற்கும், அந்த நிகழ்வுக்குள் வாழ்ந்த ஒரு மனிதரின் வாழ்க்கையின் வழியாகப் புரிந்துகொள்வதற்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது. வரலாற்றைப் படிக்கும்போது எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். ஆனால் கொல்லப்படாமல் எஞ்சியவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், எதை இழந்தார்கள், எதை நினைவில் சுமந்துகொண்டு வாழ்நாள் முழுவதும் பயணித்தார்கள் என்பதற்கு வரலாற்றுப் பாடநூல்களில் அதிக இடமிருப்பதில்லை.
உயிர் பிழைத்துவிட்டார்கள் என்பதாலேயே அவர்களுடைய துயரமும் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கொள்ள முடியுமா?
இந்தக் கேள்வியை முன்வைத்து Survivors of the Holocaust நூலை அணுகுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆறு சிறுவர்களின் வரலாறு
கேத் ஷாக்கில்டன் (Kath Shackleton) தொகுத்துள்ள இந்த நூல் ஒரு புனைவு அல்ல. இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்களின் கொடுமைகளிலிருந்து உயிர் பிழைத்த ஆறு யூதச் சிறார்களின் உண்மை வாழ்க்கைப் பாடுகளின் தொகுப்பு. ஹைன்ஸ் ஸ்கைட், ட்ரூட் சில்மன், ரூத் ரோகாஃப், மார்ட்டின் காபெல், சுசான் ரிப்டன், ஆரெக் ஹெர்ஷ் ஆகிய அறுவரும் தங்களுடைய முதுமைக் காலத்தில் நினைவுகூர்ந்த குழந்தைப் பருவப் பாடுகள்தாம் இந்த நூலுக்கான அடிப்படை.
இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் வாழ்ந்த இவர்கள் அறுவரிடமும் 2013-ஆம் ஆண்டு நேர்காணல்கள் நடத்தப்பட்டன. அவற்றின் அடிப்படையில் பிபிசிக்காக 2014-ஆம் ஆண்டு Children of the Holocaust என்ற அசைவூட்ட (animated) ஆவணப்படத் தொடர் உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2016-ஆம் ஆண்டு இந்தப் படநூல் வெளிவந்தது. 2019-ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கப் பதிப்பு 96 பக்கங்களைக் கொண்டது. ஸேன் விட்டிங்ஹாமின் (Zane Whittingham) ஓவியங்களை ரயன் ஜோன்ஸ் படக்கதை வடிவத்துக்கு மாற்றியமைத்திருக்கிறார்.
Graphic novel என்பதற்குப் படப்புதினம் என்று தமிழில் சொல்லலாம். ஆனால் புதினத்துக்குரிய புனைவுத் தன்மை இல்லாத இத்தகைய நூல்களை "வரைபட ஆவணம்" என்று அழைப்பதே எனக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது. இங்கே கதைமாந்தர்களைப் படைப்பதற்கான உரிமை ஓவியருக்கோ தொகுப்பாளருக்கோ இல்லை. ஏற்கெனவே வாழ்ந்த மனிதர்களின் பாடுகளைக் காட்சிப்படுத்துகிறார்கள். அந்த வகையில் இவர்களுடைய பணி ஒரு வரலாற்றாசிரியரின் பணிக்கு நெருக்கமானது.
அறுவரும் யூதர்கள் என்பதைத் தவிர அவர்களுடைய பாடுகள் ஒரே விதமானவை அல்ல. சிலருக்கு நாட்டைவிட்டுத் தப்பிச் செல்ல முடிந்திருக்கிறது. சிலருக்குப் பெற்றோரைப் பிரிந்து வாழ வேண்டியிருந்திருக்கிறது. சிலருக்கு யார் தங்கள் பெற்றோர் என்பதையே மறைக்க வேண்டியிருந்திருக்கிறது. வதை முகாம்களிலிருந்து உயிர் பிழைத்தவரின் பாட்டையும், அந்நிய நாட்டில் அடைக்கலம் புகுந்த சிறுமியின் பாட்டையும் ஒரே நூலுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள்.
இதுதான் இந்நூலின் அமைப்பில் எனக்குப் பிடித்தமான கூறு. இனப்படுகொலைக்கு ஒரேயொரு முகம் இல்லை.
அடைக்கலம் புகுந்தவனே எதிரி!
ஹைன்ஸின் கதையிலுள்ள ஒரு வரலாற்று முரண் கவனத்துக்குரியது. ஜெர்மனியில் யூதராக இருந்ததால் அந்நாட்டில் வாழ முடியாமல் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றவர் அவர். ஆனால் இங்கிலாந்தில் அவருடைய ஜெர்மானியப் பின்னணியே அவரை எதிரி நாட்டைச் சேர்ந்தவராக வகைப்படுத்துவதற்குக் காரணமாகிறது. அவரும் அவரது குடும்பத்தினரும் தடுப்புக் காவலுக்கு உள்ளாகிறார்கள்.
Enemy alien என்ற ஆங்கிலச் சொற்றொடரை இங்கே கவனிக்க வேண்டும். எதிரி நாட்டவர் என்பது இதன் பொருள். அந்த இரண்டு சொற்களுக்குள் ஒரு மனிதருடைய முழு வாழ்க்கையையும் அடைத்துவிட முடியுமா?
ஜெர்மனியில் அவரை யூதர் என்று அடையாளப்படுத்தினார்கள். இங்கிலாந்தில் அவரை ஜெர்மானியர் என்று அடையாளப்படுத்தினார்கள். இரண்டு அடையாளங்களுமே அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன.
நாஜிக்களுடைய இனப்படுகொலைக் கொள்கையையும் பிரிட்டனுடைய போர்க்காலப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஒன்றெனச் சொல்ல முடியாது. ஆனால் அரசாங்கங்கள் மனிதர்களை வகைப்படுத்துகிற விதத்தில் உள்ள ஒரு சிக்கலை ஹைன்ஸின் வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது. ஒரு நாட்டின் அரசாங்கத்தையும் அந்நாட்டிலிருந்து தப்பியோடி வருகிற ஒருவரையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு நிருவாக நடைமுறைகள் இயந்திரத்தனமானவையாகிவிட முடியுமா?
இன்றும் குடியேற்றம், குடியுரிமை, அடைக்கலம், நாட்டுப்பற்று ஆகியவற்றைப் பற்றிய உரையாடல்களில் இக்கேள்விக்குப் பொருள் இருக்கிறது.
பிறக்கும்போது ஒருவர் தேர்ந்தெடுக்காத ஓர் அடையாளம், அவர் எங்கே வாழலாம், எந்தப் பள்ளியில் படிக்கலாம், எந்த நாட்டுக்குள் நுழையலாம் என்பதையெல்லாம் தீர்மானிக்கிற ஒன்றாக மாறிவிடுகிறது.
பெற்றோரைப் பிரித்துக் காப்பாற்றப்பட்ட குழந்தைகள்
இந்நூலின் வழியாகத் தொடர்ந்து படிக்க வேண்டிய வரலாற்றுத் தகவல்களில் ஒன்று "சிறார் மீட்புப் பயணம்" (Kindertransport).
Kinder என்றால் ஜெர்மானிய மொழியில் குழந்தைகள் என்று பொருள். 1938 டிசம்பர் முதல் 1939 செப்டம்பர் வரையிலான காலத்தில் நாஜிக்களின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளிலிருந்து ஏறத்தாழ பத்தாயிரம் குழந்தைகள் இங்கிலாந்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் யூதக் குழந்தைகள். குழந்தைகளுக்கு ஒப்புதல் அளித்த பிரிட்டன், அவர்களுடைய பெற்றோருக்கு அதே ஒப்புதலை அளிக்கவில்லை.
ஒன்பது வயதில் செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட ட்ரூட் அப்படிக் காப்பாற்றப்பட்டவர்களில் ஒருவர். அதன் பிறகு அவள் தன்னுடைய பெற்றோரைப் பார்க்கவே இல்லை. ஆங்கிலம் தெரியாத நிலையில் அறிமுகமற்ற குடும்பங்களோடு வாழ வேண்டியிருக்கிறது. உணவு, மொழி, பழக்கவழக்கங்கள் என்று எல்லாமே புதிது.
குழந்தைகளைக் காப்பாற்றிய வரலாற்றுச் சாதனையாகசிறார் மீட்புப் பயணம் பற்றிப் பேசுவது முறையானதுதான். ஆனால் அந்தச் சாதனையின் பின்னால் பெற்றோர்கள் எடுத்திருக்க வேண்டிய முடிவையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தம் குழந்தைகளைத் தம்மோடு வைத்துக்கொள்வதா அல்லது இனி அவர்களைப் பார்க்க முடியாமல் போகலாம் என்று தெரிந்தும் வேறொரு நாட்டுக்கு அனுப்பி வைப்பதா?
பெற்றோரிடமிருந்து குழந்தைகளைப் பிரிப்பதைவிடப் பெரிய கொடுமை என்ன இருக்க முடியும்? அதுவே அக்குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வழியாகவும் இருந்திருக்கிறது என்பதுதான் அக்காலத்தின் அவலம்.
மொழியைப் பொறுத்தவரை ட்ரூட்டின் அனுபவம் இன்னொரு கோணத்திலும் சிந்திக்க வைக்கிறது. அயல்மொழியைக் கற்றுக்கொள்வது பொதுவாக அறிவுப் பெருக்கமாகவும் புதிய வாய்ப்புகளுக்கான திறவுகோலாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் அடைக்கலம் புகுகிற குழந்தைக்கு அயல்மொழியைக் கற்றுக்கொள்வது உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவையாகிவிடுகிறது.
பசி எடுக்கிறது என்பதைக்கூடத் தனக்குத் தெரிந்த மொழியில் சொல்ல முடியாத இடத்தில் வாழ நேர்கிற குழந்தைக்கு மொழி என்பது வெறுமனே கருத்துப் பரிமாற்றக் கருவியா?
போர் முடிந்தது யாருக்கு?
ரூத்தின் கதையில் அவளுடைய தாயின் துணிச்சலுக்கு முக்கிய இடமிருக்கிறது. பல்வேறு வெளிநாட்டுத் தூதரகங்களின் உதவியை நாடி, இறுதியில் பிரிட்டனுக்குச் செல்வதற்கான வழியை அந்தத் தாய் ஏற்படுத்துகிறார்.
மார்ட்டினின் அனுபவம் வேறு விதமானது. ஜெர்மனியிலிருந்து போலந்துக்கு வெளியேற்றப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன். தன் சகோதரியுடன் இங்கிலாந்துக்குச் சென்று அடைக்கலம் புகுகிறான். ஆனால் இங்கிலாந்திலும் போரின் தாக்குதல்களிலிருந்து அவனால் தப்ப முடியவில்லை.
வரலாற்றுப் புத்தகங்களில் நாடுகளின் எல்லைகள் தெளிவாக வரையப்பட்டிருக்கின்றன. எந்த ஆண்டு எந்த நாடு எந்த நாட்டைக் கைப்பற்றியது என்றும் தெளிவாக அட்டவணைப்படுத்த முடிகிறது. ஆனால் அந்நாடுகளுக்கிடையே அலைக்கழிக்கப்படுகிற மனிதர்களுடைய வாழ்க்கையில் அத்தகைய தெளிவு இருப்பதில்லை.
சுசானின் கதை இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு.
பாரிஸில் வாழ்ந்த யூதச் சிறுமியான சுசான், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட பிறகு பிரான்சின் நாட்டுப்புறப் பகுதியில் மறைந்து வாழ்கிறாள். அவளுடைய உயிரைக் காப்பாற்றுவதில் அண்டை வீட்டுப் பெண்ணொருவர் முக்கியப் பங்காற்றுகிறார். அச்சிறுமிக்குக் கல்வியும் குடும்ப வாழ்வும் மறுக்கப்படுகின்றன. போர் முடிவுக்கு வந்த செய்தியே சுசானுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் தெரியவந்ததாக நூலைப் பற்றிய பதிவுகள் குறிப்பிடுகின்றன.
இரண்டாம் உலகப் போர் எப்போது முடிந்தது என்ற கேள்விக்கு வரலாற்றுத்தாளில் சரியான விடை எழுதிவிடலாம். ஐரோப்பாவில் போர் முடிவுக்கு வந்தது 1945-ஆம் ஆண்டு. ஆனால் சுசானுக்கு எந்த ஆண்டு போர் முடிந்தது?
ஒரு வரலாற்று நிகழ்வுக்கு நாம் குறிப்பிடுகிற முடிவுத் தேதிக்கும் அதனால் பாதிக்கப்பட்ட மனிதர்களுடைய துயரம் முடிவுக்கு வருவதற்கும் தொடர்பே இல்லாமல் இருக்கலாம்.
போர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிற நாளில், காணாமல் போன பெற்றோர் திரும்பி வந்துவிடுவதில்லை. இடிக்கப்பட்ட வீடுகள் எழுந்து நிற்பதில்லை. பறிக்கப்பட்ட குழந்தைப் பருவத்தை யாராலும் திரும்பக் கொடுத்துவிடவும் முடியாது.
சுசானுடைய அனுபவத்திலிருந்து இன்றைய அகதிகளுடைய வாழ்க்கையையும் சற்றுப் புரிந்துகொள்ள முடிகிறது. போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டாலே அகதிகளின் சிக்கல் தீர்ந்துவிட்டதாகக் கருதுகிறோம். அவர்கள் திரும்பிச் செல்வதற்கு வீடுகள் இருக்கின்றனவா, உறவுகள் இருக்கின்றனவா, வாழ்வழி இருக்கிறதா என்பதெல்லாம் வேறு கேள்விகள்.
இனப்படுகொலையும் அடையாள அரசியலும்
Holocaust என்ற சொல்லைத் தமிழில் எப்படிக் குறிப்பிடுவது என்பதிலும் ஒரு மொழிபெயர்ப்புச் சிக்கல் இருக்கிறது.
படுகொலை, பெருங்கொலை, இனப்படுகொலை என்று பல சொற்களைப் பயன்படுத்தலாம். ஆனால் வரலாற்றில் குறிப்பிட்ட ஓர் இனப்படுகொலையைக் குறிக்கிற சொல்லாகவே Holocaust நிலைபெற்றுவிட்டது. அதை இரண்டாம் உலகப் போரின்போது நிகழ்ந்த கொலைகள் அனைத்தையும் குறிக்கிற பொதுச்சொல்லாகப் பயன்படுத்துவது தவறு. யூதர்களை முற்றாக அழித்தொழிக்க நாஜி அரசால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் தனித்துவத்தைப் புரிந்துகொள்வது இன்றியமையாதது.
ஆரெக் ஹெர்ஷின் பாடுகளின் வழியாக வதை முகாம்களின் உலகம் நூலுக்குள் வருகிறது. போலந்தைச் சேர்ந்த ஆரெக், ஆஷ்விட்ஸ் முகாமின் கொடுமைகளிலிருந்து உயிர் பிழைத்தவர். மற்ற ஐவருடைய அனுபவங்களிலிருந்து இவருடையது வேறுபடுகிற இடமும் இதுதான்.
மனிதர்களை இனம், சமயம், பிறப்பு போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்துவது எங்கே போய் முடியும் என்பதற்கு நாஜிக்களின் வரலாறு மிகக் கொடிய எடுத்துக்காட்டு.
ஆனால் ஹிட்லரை வரலாற்றில் தோன்றிய ஒரு தனிப்பட்ட கொடிய மனிதனாக மட்டும் புரிந்துகொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படிப் புரிந்துகொள்வது நமக்கு ஒரு வகையில் வசதியானது. ஹிட்லர் போன்ற ஒருவர் மீண்டும் தோன்றாமல் பார்த்துக்கொண்டால் போதும், அத்தகைய கொடுமைகள் மீண்டும் நிகழாது என்று நம்பிவிடலாம்.
ஓர் இனப்படுகொலையை ஒரு தனிமனிதனால் மட்டும் நிகழ்த்திவிட முடியாது. வல்லமை அமைப்புகள், சட்டங்கள், அரசு அலுவலர்கள், காவற் துறை, பரப்புரை ஊடகங்கள் என்று ஒரு பெரும் கட்டமைப்பு அதற்குத் துணை நிற்க வேண்டியிருக்கிறது. வெறுப்பையும் பகை பரப்பலையும் ஏற்றுக்கொள்கிறவர்களோடு, அவ்வெறுப்பு விளையாட்டுகளும் பகை பரப்பலும் தங்களைப் பாதிக்காதவரை அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறவர்களும் அக்கட்டமைப்பைச் செயல்பட விடுகிறார்கள் - ஊக்குவிக்கிறார்கள்.
தமிழ்ச் சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை வகைப்படுத்துகிற சாதியமைப்பைப் பற்றிச் சிந்திக்கும்போதும் இந்தச் சிக்கலின் ஒரு கூறைப் பார்க்க முடிகிறது.
சாதிய ஒடுக்குமுறையையும் யூத இனப்படுகொலையையும் நேரடியாக ஒப்பிடுவது வரலாற்றுப் பிழையாகிவிடும். இரண்டுக்கும் வெவ்வேறு வரலாறுகளும் நோக்கங்களும் செயல்முறைகளும் இருக்கின்றன. ஆனால் ஒருவர் தேர்ந்தெடுக்காத பிறப்பு அடையாளம் அவருடைய வாழ்வுரிமைகளைத் தீர்மானிப்பது என்ற அடிப்படையில் இரண்டையும் பற்றிய உரையாடலுக்குப் பொதுவான ஓர் அறக் கேள்வி இருக்கிறது.
ஒருவருடைய பிறப்பு எவ்வாறு அவருடைய தகுதியையும் உரிமையையும் தீர்மானிக்க முடியும்?
ஐரோப்பிய வரலாற்றில் நிகழ்ந்த கொடுமைகளைப் படித்துத் திகைக்கிற அதே நேரத்தில், நம்மைச் சுற்றி நிலவுகிற பிறப்புசார் பாகுபாடுகளை இயல்பானவையாக ஏற்றுக்கொள்கிறோமா என்றும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
படங்களால் எழுதப்படும் வரலாறு
படக்கதைகள் என்றாலே குழந்தைகளுக்கானவை, பொழுதுபோக்குக்கானவை என்கிற எண்ணம் இன்னும் நம்மிடையே இருக்கிறது. அதிலும் தமிழில் படக்கதை இலக்கியம் அடைய வேண்டிய இடத்தை இன்னும் அடையவில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
வரைபட வடிவத்தில் ஒரு படைப்பை உருவாக்குவதால் அதன் இலக்கியத் தன்மையோ அறிவுத் தன்மையோ குறைந்துவிடப் போவதில்லை. சிலவற்றைச் சொற்களைவிட ஓவியங்களால் சிறப்பாகச் சொல்லிவிட முடியும்.
ஒரு குழந்தை அஞ்சிக்கொண்டிருக்கிறது என்பதை எழுத்தில் விளக்க முடியும். அக்குழந்தை தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை எவ்வளவு பெரியதாகவும் அச்சுறுத்துவதாகவும் உணர்கிறது என்பதை ஓவியத்தில் வேறொரு விதத்தில் காட்ட முடியும்.
ஸேன் விட்டிங்ஹாமின் ஓவியங்களில் கூர்மையான கோடுகள், இயல்புக்கு மாறான உருவ அளவுகள், இருண்ட வண்ணங்கள் ஆகியவை அச்ச உணர்வை உருவாக்குவதாக நூலைப் பற்றிய விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன. நாஜிக்களின் அதிகாரத்தையும் குழந்தைகளின் கையறு நிலையையும் உருவங்களின் அளவுகளில் உள்ள வேறுபாட்டின் வழியாகக் காட்டுகிற உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
வரைபடப் படைப்புகளுக்குரிய இன்னொரு வலிமை, அவற்றில் சொல்லப்படாதவற்றுக்கும் இடமிருப்பது. இரண்டு சித்திரங்களுக்கு இடையே நடந்திருப்பதை வாசகனுடைய கற்பனை நிரப்புகிறது. வரலாற்று ஆவணப்படங்களிலும் திரைப்படங்களிலும் இயக்குநரால் தீர்மானிக்கப்படுகிற காட்சி நேரத்தை, படநூலில் வாசகனே தீர்மானிக்கிறான். ஒரு காட்சியைத் தாண்டிச் சென்றுவிடலாம். அல்லது அதையே நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருக்கலாம்.
யூதப் பேரழிப்பு பற்றிய வரைபட இலக்கியம் என்றதும் இயல்பாகவே நினைவுக்கு வருகிற இன்னொரு படைப்பு ஆர்ட் ஸ்பீகல்மனின் Maus.
Maus நூலில் யூதர்கள் எலிகளாகவும் ஜெர்மானியர்கள் பூனைகளாகவும் உருவகப்படுத்தப்படுகிறார்கள். இன அடையாளங்களையும் மனிதர்களை இனத்தின் அடிப்படையில் வகைப்படுத்துகிற அரசியலையும் விமர்சிப்பதற்கு அந்த உருவகம் பயன்படுகிறது. தந்தையின் போர்க்கால அனுபவங்களோடு அவற்றைப் பதிவு செய்யும் மகனுடைய உறவுச் சிக்கல்களும் அந்நூலில் இடம்பெறுகின்றன.
Survivors of the Holocaust நூலின் நோக்கம் வேறு. குழந்தைகளிடம் நேரடியாக வரலாற்றைக் கொண்டுசெல்வதற்கான எளிமையும் சுருக்கமும் இதில் முக்கியமாகின்றன. இரண்டு நூல்களும் உயிர் பிழைத்தவர்களுடைய சான்றுரைகளைப் பயன்படுத்துகின்றன. ஆனால் நினைவுகளை மீட்டெடுக்கிற செயல்முறையே Maus நூலின் பேசுபொருள்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நூலில் நினைவுகளின் வழியாக வரலாற்றை அடுத்த தலைமுறையிடம் கொண்டுசேர்ப்பது முதன்மை பெறுகிறது.
குழந்தைகளிடம் எவ்வளவு உண்மையைச் சொல்லலாம்?
இந்த நூலின் அமைப்பில் எனக்குச் சில கேள்விகளும் இருக்கின்றன.
குழந்தைகளுக்காக இனப்படுகொலையின் வரலாற்றை எழுதுகிறபோது எவற்றைச் சொல்ல வேண்டும், எவற்றைச் சொல்லாமல் விட வேண்டும்? நடந்தவற்றை முழுமையாகச் சொன்னால் குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியாமல் போகலாம். தாங்கிக்கொள்ளக்கூடியதாக மாற்றும்போது நடந்தவற்றின் கொடுமை குறைத்துக் காட்டப்படுகிறதா?
இந்நூலின் ஒவ்வொரு கதையும் குழந்தை ஒப்பீட்டளவில் சற்றுக் கூடுதலான பாதுகாப்பான நிலையை அடைகிற இடத்தில் முடிவடைவதை Kirkus Reviews சுட்டிக்காட்டுகிறது. சில கதைகள் போதிய தொடர்ச்சியின்றி முடிந்துவிடுகிற உணர்வை இது ஏற்படுத்துவதாகவும் அந்த மதிப்புரை குறிப்பிடுகிறது.
சிறார்களுக்காக எழுதப்பட்ட நூல் என்பதால் இந்த அணுகுமுறையைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனினும் உயிர் பிழைத்ததையே கதையின் நல்ல முடிவாகக் காட்டுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது.
ஆறு பேரும் உயிர் பிழைத்தவர்கள் என்பதால்தான் அவர்களுடைய கதைகளை நம்மால் இன்று கேட்க முடிகிறது. உயிர் பிழைக்காத குழந்தைகளுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை.
பொதுவாக வெற்றியாளர்களின் வரலாற்றையே நாம் அதிகம் படிக்கிறோம். அதே போலப் பேரழிவுகளின் வரலாற்றிலும் உயிர் பிழைத்தவர்களின் குரல்களைத்தான் நம்மால் அதிகம் கேட்க முடிகிறது. உயிர் பிழைத்தவர்களின் மனத்துணிவையும் மீண்டெழுந்த திறனையும் கொண்டாடும்போது உயிர் பிழைக்காதவர்கள் அத்தகைய மனத்துணிவு இல்லாதவர்கள் என்ற பொருள் வந்துவிடக் கூடாது. பல நேரங்களில் ஒரு மனிதர் உயிர் பிழைக்கிறாரா இல்லையா என்பதை அவருடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளே தீர்மானிக்கின்றன.
மறத்தையும் உளத்துணிவையும் மட்டுமே மையப்படுத்தி இத்தகைய பாடுகளைப் புரிந்துகொள்ள முயல்வது போதுமானதாக இருக்காது. தற்செயல் நிகழ்வுகள், மற்றவர்களின் உதவி, காலம், இடம் போன்றவற்றின் பங்கையும் உணர வேண்டும்.
இன்னொரு சிக்கல் வரைபடங்களின் வரலாற்றுத் துல்லியம்.
யூதப் பேரழிப்பு ஆய்வாளரும் எழுத்தாளருமான பார்பரா கிராஸ்னர் (Barbara Krasner), ஹைன்ஸின் ஓவியத்தில் யூதர்களுக்கான நட்சத்திர அடையாளம் கட்டாயமாக்கப்படுவதற்கு முந்தைய காலத்திலேயே அவன் அதை அணிந்திருப்பதாகக் காட்டப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
இது சிறிய ஓவியப் பிழைதானே என்று கடந்து சென்றுவிடலாம். ஆனால் வரலாற்றை அறிமுகப்படுத்துகிற நூலில் ஓவியங்களும் வரலாற்றுத் தகவல்களே. சொற்களில் ஒரு பிழை இருந்தால் எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறோமோ அவ்வளவு அழுத்தம் ஓவியங்களில் உள்ள பிழைகளுக்கும் கொடுக்க வேண்டும்.
புனைவில் ஓவியருக்குக் கிடைக்கிற படைப்புரிமையும் வரலாற்றுச் சான்றுகளை ஓவியமாக்கும்போது கிடைக்கிற தன்னுரிமையும் ஒன்றல்ல.
ஈழப் போரும் பதிவு செய்யப்படாத நினைவுகளும்
இந்நூல் எழுப்புகிற இன்னொரு கேள்வி நம்முடைய அண்மைக்கால வரலாற்றோடு தொடர்புடையது.
ஈழப் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடைய அனுபவங்கள் எவ்வளவு விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன? அவற்றில் எவ்வளவு அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றன?
ஈழப் போருக்கு உள்ளானவர்களுடைய பாடுகள் இலக்கியமாகவும் ஆவணப்படங்களாகவும் நேர்காணல்களாகவும் வெளிவந்திருக்கின்றன. ஆனால் போர், இடப்பெயர்வு, பெற்றோர் இழப்பு, அகதி முகாம்கள், புதிய நாட்டில் வாழ்க்கையைத் தொடங்குதல் போன்ற பாடுகளைச் சிறுவர்களுக்கான படநூல்களாகவும் தமிழில் உருவாக்க முடியும்.
போரைப் பற்றிய நம்முடைய உரையாடல்களில் அரசியற் தலைமைகளும் போரின் வெற்றி தோல்விகளும் அதிக இடத்தைப் பிடித்துவிடுகின்றன. அக்காலத்தில் பள்ளிக்கூடத்துக்குச் சென்றுகொண்டிருந்த குழந்தைகள் என்ன ஆனார்கள்? அவர்களுடைய கல்வி எப்படிப் பாதிக்கப்பட்டது? அவர்கள் என்னென்ன மொழிகளைப் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது? குடும்பங்கள் மீண்டும் ஒன்றுசேர முடிந்ததா?
போர் பற்றிய வரலாற்று ஆவணங்களுக்கு இத்தகைய கேள்விகளும் முக்கியமானவை.
ஐரோப்பாவில் நிகழ்ந்த யூத இனப்படுகொலையையும் ஈழப் போரையும் ஒரே வரலாற்று நிகழ்வாகப் பார்ப்பதற்கான ஒப்பீடு இதுவல்ல. பாதிக்கப்பட்ட மனிதர்களின் நினைவுகளை எவ்வாறு பதிவு செய்து அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசெல்வது என்பது குறித்த ஒப்பீடு.
ஓர் எழுத்தாளரோ வரலாற்றாசிரியரோ சொல்லும் விவரங்களைத் தாண்டி, பாதிக்கப்பட்டவர்களே தங்களுடைய பாடுகளை தங்கள் சொற்களில் சொல்ல அனுமதிக்கிற அணுகுமுறை தமிழிலும் இன்னும் பெருமளவில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று.
அத்தகைய பணிக்கு இந்நூலின் உருவாக்க முறை நல்லதோர் எடுத்துக்காட்டாக அமையக்கூடும்.
போருக்குப் பிந்தைய வாழ்க்கை
இந்நூலின் இறுதிப் பகுதியில் இந்த ஆறு சிறார்களும் வளர்ந்த பிறகு என்ன ஆனார்கள் என்பதைக் காட்டும் குறிப்புகளும் அவர்களுடைய முதுமைக்கால ஒளிப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
நூல் முழுவதும் வரைபடங்களில் குழந்தைகளாக அறிமுகமானவர்கள் இறுதிப் பகுதியில் உண்மையான மனிதர்களாக நம்முன் நிற்கிறார்கள். அவர்களுடைய பிற்கால வாழ்க்கையையும் குடும்பங்களையும் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வரலாற்றுக் காலவரிசை, அருஞ்சொற்களுக்கான விளக்கங்கள், கூடுதல் வாசிப்புக்கான இணைய வளங்கள் ஆகியனவும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
ஒரு வகையில் இந்த இறுதிப் பகுதிதான் நூலின் மிக முக்கியமான பகுதியாக எனக்குத் தோன்றுகிறது.
ஆவணப் படங்களில் நிகழும் வாழ்க்கைக்கும் உண்மையான மனித வாழ்வுக்கும் இடையிலான தொடர்பை அந்த ஒளிப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அவர்கள் படக்கதை மாந்தர்கள் அல்லர். அவர்களுக்கு முதுமை வந்திருக்கிறது. குடும்பங்கள் உருவாகியிருக்கின்றன. குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் பிறந்திருக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைப் பருவத்தை அழிக்க முயன்ற ஓர் அரசின் தோல்வியை அவர்களுடைய பிற்கால வாழ்வும் நமக்குச் சொல்கிறது.
அதே நேரத்தில், அதற்காக அவர்கள் இழந்தவற்றின் மதிப்பு குறைந்துவிடுவதில்லை. உயிர் பிழைத்த ஒருவரின் பிற்கால மகிழ்ச்சியை முன்னிறுத்தி அவருடைய கடந்தகாலத் துயரத்துக்கு ஆறுதல் தேடுவது வாசகர்களாகிய நமக்கு எளிது. ஆனால் அந்தத் துயரத்தோடு வாழ வேண்டியிருந்தவர்கள் அவர்கள்.
அந்த வேறுபாட்டை நாம் மறந்துவிடக் கூடாது.
யாருக்கான நூல்?
யூதப்பேரழிப்பு பற்றிய அறிமுகம் இல்லாத இளம் வாசகர்களுக்கு இந்நூல் நல்லதொரு தொடக்கமாக இருக்கக்கூடும். குறிப்பாக வரலாற்றைப் பாடநூல்கள் வழியாக மட்டுமே அறிந்துகொள்கிற மாணவர்களுக்கு மனிதர்களின் பாடுகளின் வழியாக வரலாற்றைக் கற்றுக்கொள்கிற வாய்ப்பை வழங்குகிறது.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளோடு சேர்ந்து படித்து உரையாட வேண்டிய நூலாகவும் இதைக் கருதலாம். இனப்பாகுபாடு, அகதிகள், மதவெறி, மொழி, மனித உரிமைகள் போன்ற பல்வேறு பொருள்களில் உரையாடல்களைத் தொடங்குவதற்கு இதில் இடமிருக்கிறது.
யூதப்பேரழிப்பின் அரசியல், பொருளியல், வரலாற்றுக் காரணிகளை விரிவாக அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த 96 பக்க நூல் மட்டும் போதாது. அத்தகைய விரிவான வரலாற்றைச் சொல்ல முயல்வதும் இந்நூலின் நோக்கமல்ல.
வரலாற்றைச் சிறுவர்களிடம் எப்படிக் கொண்டுசெல்லலாம் என்று சிந்திக்கிற எழுத்தாளர்களுக்கும் ஓவியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் இந்நூலின் உள்ளடக்கத்துக்கு நிகராக அதன் வடிவமும் முக்கியமானது என்று நினைக்கிறேன்.
இறுதியாக
இனப்படுகொலைகள் பற்றிய வரலாற்றை நாம் ஏன் படிக்க வேண்டும்? இறந்தவர்களை நினைவுகூர்வதற்காகவா? உயிர் பிழைத்தவர்களின் துயரத்தைப் புரிந்துகொள்வதற்காகவா? மீண்டும் அத்தகைய கொடுமை நிகழாமல் பார்த்துக்கொள்வதற்காகவா?
மூன்றுமே முக்கியம்தான்.
ஆனால் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது என்பது நடந்த கொடுமைகளின் அளவைத் தெரிந்துகொள்வது மட்டுமல்ல. அக்கொடுமைகள் நிகழ்வதற்கு ஏற்ற குடிச் சூழல் எப்படி உருவானது என்பதைப் புரிந்துகொள்வதும்தான்.
ஒரு குடி ஒரே நாளில் கொடூரமான குடியாக மாறிவிடுவதில்லை. சில மனிதர்களை மற்ற மனிதர்களைவிடக் குறைவானவர்களாகக் கருதத் தொடங்குவதிலிருந்து அது உருவாகலாம். சிலருடைய உரிமைகள் பறிக்கப்படும்போது அதனால் தங்களுக்கு எந்தப் பாதிப்புமில்லை என்று மற்றவர்கள் அமைதியாக இருப்பதிலிருந்தும் அது வளரலாம்.
யூதப்பேரழிப்பு பற்றிய நூல்களைப் படிக்கும்போது ஹிட்லருடைய இடத்தில் தம்மை வைத்துப் பார்ப்பவர்கள் மிகக் குறைவுதான். பாதிக்கப்பட்டவர்களின் இடத்தில் வைத்துப் பார்ப்பவர்கள்தாம் நிறையப் பேர் இருப்பார்கள்.
ஆனால் இருவருக்கும் இடையில், நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டு எதுவும் செய்யாமல் இருந்தவர்களுடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்க்கிறோமா?
அதுதான் இத்தகைய நூல்களைப் படிக்கும்போது நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியாக இருக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக