இந்தியாவின் முப்பெரும் பிரச்சனைகள்

நம்மிடம் பிரச்சனைகளுக்குப் பஞ்சமில்லை. நம் பிரச்சனைகளைக் கொண்டு ஓர் அட்டவணை போடச் சொன்னால் அதற்காக அதிக நேரம் செலவிட்டு வித விதமாக யோசிக்க வேண்டியதில்லை. நான் அவை பற்றிச் சொன்னாலும் சொல்லா விட்டாலும் - பேசினாலும் பேசாவிட்டாலும் நம் பிரச்சனைகள் நம் பிரச்சனைகளே. இது போன்ற எல்லாக் கட்டுரைகளிலும் கருத்துக் கணிப்புகளிலும் அவை இடம் பெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. இது போன்ற உரையாடல்களில் - எழுத்துக்களில் ஒவ்வொருவரும் ஒரு பிரச்சனையை எப்படிப் பார்க்கிறோம் அல்லது அதற்காக எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது மட்டுமே மாறுகிறது. "எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று உணர்ந்து அதன்படி ஒழுங்காக வரிசைப் படுத்தினாலே போதும். நம் பிரச்சனைகள் ஓரளவு கையாள எளிதாயிருக்கும்!" என்றும் சொல்கிறார்கள் அறிஞர்கள் பலர். அதாவது, எதை முதலில் சரிப்படுத்த வேண்டுமோ அதை விடுத்து வேறொன்றைச் சரிப் படுத்த நாம் செலவிடும் நேரம் அனைத்தும் வீணாய்ப் போவதற்குச் சமம் என்கிறார்கள். அதுவும் ஓரளவு சரிதான். எல்லோரும் எல்லாப் பிரச்சனைகளையும் ஒரே நாளில் சரி செய்து விட முடியாது. ஆனால், எது முதலில் - எது கடைசியில் என்கிற தெளிவு இருந்தால், செலவிடப் படும் நேரம் மற்றும் ஆற்றல் முழுக்க முழுக்கப் பயனுள்ளவையாக இருக்கும்.

இருக்கிற பிரச்சனைகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், சென்ற இடுகையில் சொன்னது போல, என் இடுகைகளின் அளவைக் குறைக்க முடியுமா என்று தெரியவில்லை. பல ஒன்றோடொன்று தொடர்புடைய பிரச்சனைகளை வகைப் படுத்தி ஒரே பெயரில் போட்டு, அதில் இருந்து மூன்று தலையாயப் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேச முயல்வோம்.

அப்படிப் பேசப் போகிற ஒவ்வொரு பிரச்சனைக்கும் என்னிடம் தீர்வு இருக்கிறதா? இல்லை. இருக்கிறதென்று சொன்னால் அதன் பெயர் பைத்தியக்காரத்தனம் என்றாகி விடும். பெங்களூரின் புற நகர்ப் பகுதியில் ஒரு மூலையில் கிடக்கும் ஒரு சாமானியனிடம் ஒரு நாட்டின் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு இருந்தால், நமக்கெதற்கு அரசாங்கங்கள், தேர்தல்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் லட்சோப லட்சம் ஏனைய பெரிய மனிதர்கள் - எடுபிடிகள்? அதுவும் அந்த வேலைகளை அவர்களுக்கே உரிய முறையான முறையில் செய்வதற்காகவே படைக்கப் பட்டவர்கள் அல்லவா அவர்கள்? அவர்கள் முன்பு நாமெல்லாம் எம்மாத்திரம்?

அதிக பட்சம் நாம் என்ன செய்ய முடியும் என்றால், இவையெல்லாம் கூடத் தீர்வுகளாக இருக்கலாம் என்கிற ரீதியில் அவை பற்றிப் பேச முடியும். அவ்வளவுதான். ஆனால், உங்களையும் என்னையும் போன்ற சாமானியர்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலை என்னவென்றால், அப்பிரச்சனைகள் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பது. அவை பற்றி மென்மேலும் புரிந்து கொள்ள அது உதவும். இந்த உரையாடல்கள்தாம் நம்மை இந்த அளவுக்காவது வைத்திருப்பவை. புரிந்து மட்டும் வைத்துக் கொண்டிருப்பதில் என்ன பிரயோசனம்? அது நம்மை ஒரு குழுவாக அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். அது கண்டிப்பாகப் பல வழிகளில் உதவத்தான் செய்யும்.

அதன் முதல்ப் பயன் - நம்மால் முடிந்த இம்மியளவு பங்களிப்பை நம் சமூகத்துக்கும் நாட்டுக்கும் செய்ய அது உதவுகிறது. அல்லது, ஒட்டு மொத்த சமூக நலனுக்கு எதிராகவாவது செயல்படாமல் இருக்கத் தேவையான அறிவை அளிக்கிறது. அடுத்த பயன் - சரியான ஆட்களை அடையாளம் காணவும் அவர்கள் பின்னணி மற்றும் பிரச்சனைகளில் அவர்களின் நிலைப்பாடுகளைப் பொறுத்து அவர்களைத் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது. நடைமுறைக்குப் பெரிதும் சாத்தியமில்லாத - ஆனால் முழுக்கவும் ஒதுக்கித் தள்ளி விட முடியாத இன்னொரு பயன்பாடு இருக்கிறது. அதாகப் பட்டது - இது போல மொத்தச் சமூகத்துக்கும் அதன் பிரச்சனைகளைப் பற்றித் திரும்பத் திரும்ப நினைவு படுத்துவதன் மூலம், எங்கோ ஒரு மூலையில் இருக்கும் யாரோ ஒரு ரமேஷோ சுரேஷோ (குப்பன் சுப்பன் என்பதெல்லாம் பழைய பாணி!) திடீரென எதிர் பாராத ஒரு தீர்வோடு வந்து நிற்க வாய்ப்பிருக்கிறது. இப்படித்தானே எல்லாக் கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்திருக்கின்றன இதுவரை?!

"உன்னால் தீர்த்து வைக்க முடியாது என்றால், அது பற்றிப் பேசாதே; அதற்கான தகுதி உனக்கில்லை!" என்று சொல்லும் புத்திசாலிகள் புரிந்து கொள்ள வேண்டிய ஓர் உண்மை என்னவென்றால், அப்படியே எல்லாத்தையும் விட்டு விட்டால், ஒரு பிரச்சனையும் ஒரு நாளும் எவராலும் தீர்த்து வைக்கப் பட மாட்டாது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும் என்னால். நாம் எல்லோருமே நம் தினசரிக் கடமைகளையும் வார இறுதி ஊர் சுற்றல்களையும் பற்றி மட்டுமே கவலைப் பட வேண்டும் என்று சொல்லி விட்டால், ஒரு சமூகமாக நாம் ஓர் அங்குலம் கூட முன் செல்ல முடியாது. பிரச்சனைகள் பெரும் பிரச்சனைகள் ஆகும். பிறகொருநாள், எல்லா வேலைகளையும் நிறுத்தி வைத்து விட்டு, பேசாமல் விட்ட இந்த எல்லாம் பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்துக்குள் ஆக வேண்டியதாகி விடும்.

சரி. நம் உரையாடலை ஆரம்பிப்போம்...

ஊழல்
நாம் எந்தப் பிரச்சனையைச் சரி செய்ய முயன்றாலும் அதற்கான மிகப் பெரும் தடை இதுவே. ஊழலின்மை நம் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்திராது. ஆனால், குறைவான ஊழல் நம் பிரச்சனைகளை இதை விடப் பரவாயில்லாமல் கையாள உதவியிருக்கும். நம் வரிசைப் படுத்தல் சரியாக இருந்திருக்கும். செய்த வேலைகள் முறையாகச் செய்யப் பட்டிருக்கும். இது மனித உடலில் உள்ள நரம்புக் கோளாறு போல - மின்சார இணைப்புகளில் செய்யப் படும் குறுக்குச் சுற்று போல - நம் நெடுஞ்சாலைகளில் உள்ள பெருங்குழிகள் போல - பெரிய மீன்கள் உணவுக்குச் சிறிய மீன்களைத் தின்பது போல ஒரு பிரச்சனை. ஊழல் நம் ஆயுள் ரேகையில் உள்ள கீறல். எதுவுமே சென்று சேர வேண்டிய இடம் போய்ச் சேராது. வேறு எது பற்றியும் பேசும் முன் சரி செய்யப் பட வேண்டிய உடனடிப் பிரச்சனை இதுவே.

ஊழல் உலகெங்கும் நடக்கிறது. உலகில் உள்ள எல்லா அரசாங்கங்களிலும் அது இருக்கிறது. ஆனால், அது எவ்வளவு இருக்கலாம் என்பதே கேள்வி இப்போது. பாலில் நீர் கலக்கலாம். ஆனால், நீரில் பால் கலக்கும் அளவுக்குப் போகக்கூடாதே. அப்படிச் செய்தால் அதற்கான விலையைக் கொடுப்போமா? உண்மையில், கலப்பவர்தான் அதற்கான விலையை ஒருநாள் கொடுத்தாக வேண்டும். இதை எப்படிச் சரி செய்வது? எல்லாமே வாக்களிப்போரின் கையில்தான் இருக்கிறது. படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்கிற பேச்சுக்கெல்லாம் இங்கு இடமில்லை. அவர்களால் வரத்தான் முடியும். வாக்குகள் யார் அளிப்பது? முதலில் இருப்பதிலேயே மோசமானவர்களையாவது நிராகரிக்க வேண்டும். அப்படிச் செய்தால் அடுத்து வருவோருக்காவது பயம் இருக்கும். சனநாயகத்தின் மீது கொஞ்சம் மரியாதை வரும்.

வட இந்திய அரசியல்வாதியும் தென் இந்திய அரசியல்வாதியும் பேசிக் கொண்டதாகச் சொல்லப் படும் கதைதான் என் நினைவுக்கு வருகிறது. நம்ம ஆள் நடத்திய புது மனைப் புகு விழாவுக்கு வந்திருந்த வடக்கர், கண்ணுக்குத் தெரியும் தொலைவில் அரைகுறையாக முடிக்கப் படாமல் இருக்கும் பாலம் ஒன்றைக் காட்டிக் கேட்கிறார் - "ஏய், ஏம்பா இந்தப் பாலம் முடிவடையாமல் கிடக்கிறது?" என்று. அதற்கு நம்ம ஆள் சொன்னது - "மிச்சப் பாலம்தான்யா இந்த வீடு!". அடுத்த முறை நம்ம ஆள் அங்கு போகும் போது, இவர் எதுவும் கேட்கும் முன்பே வடக்கர் கேட்கிறார் - "பக்கத்தில் பாலம் ஏதாவது கண்ணுக்குத் தெரியுதாய்யா?". நம்ம ஆளுக்குக் குழப்பம். ஒன்றும் புரியாமல், "இல்லையே. அப்படி எதுவும் என் கண்ணுக்குத் தெரியவில்லையே. என் கண்ணில் எதுவும் கோளாறோ?!" என்கிறார். வடக்கர் பல்லைக் காட்டிக் கொண்டு ஒரு பதில் சொல்கிறார் - "அதை நீர் பார்க்க முடியாது நண்பா. ஏனென்றால், அதுதான் இந்த அழகான வீடு!" என்று. இங்கே வடக்கு-தெற்கு பிரச்சனைக்கு ஏற்பாடு செய்வதல்ல என் நோக்கம். நாம் சொல்ல முனைவதெல்லாம், அரை குறைப் பாலங்களைக் கூட நாம் ஏற்றுக் கொள்ளலாம். முழுப் பாலத்தையும் முழுங்கும் ஆட்களைக் காலி செய்வது வரை. சாதி, சினிமாக் கவர்ச்சி, பணம் போன்ற காரணங்களுக்காகத் தொடர்ந்து அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தால் நாம் உருப்பட வழியே இல்லை.

ஏழ்மை, பசி மற்றும் வேலையின்மை
எந்த அரசாங்கமும் முக்கியத்துவம் கொடுத்துச் செயல்பட வேண்டிய அடுத்த சில பிரச்சனைகள் இவைதான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், பொருளியல்ப் பிரச்சனைகள்! மெதுவாகச் சென்று கொண்டிருக்கிறோம் எனினும் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். சென்ற தலைமுறையை ஒப்பிட்டுப் பார்த்தால், இப்போது இப்பிரச்சனைகள் குறைந்து கொண்டுதான் வருகின்றன. குறைந்த பட்சம், நம் பகுதிகளிலாவது குறைந்து வருகின்றன என்று சொல்லலாம்.

சிறு வயதில் மூன்று வேளையும் சாப்பிட முடியாத மாதிரியான குடும்பப் பின்னணியில் இருந்து வரும் நண்பர்கள் பலரோடு விளையாடிய அனுபவம் எனக்கு உண்டு. தங்கள் கனவை நனவாக்க தம் கனவு நகரங்களுக்குச் சென்று ஆரம்ப காலத்தில் கஞ்சிக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்ட தொழிலதிபர்கள் சொன்ன பல கதைகள் கேள்விப் பட்டிருக்கிறேன். அது போன்ற அனுபவங்கள் - கதைகள் பற்றி இப்போதெல்லாம் கேள்விப் படுவதே இல்லை. என்னுடைய இடமோ நண்பர்களோ மாறி விட்டார்கள்; அதனால்தான் எனக்கு அப்படித் தோன்றுகிறது என்று மட்டும் சொல்வதற்கில்லை. கடந்த பத்து இருபது ஆண்டுகளில் என்னுடைய இடமும் என் நண்பர்களும் கூட மாறி விட்டார்கள். அதாவது, கடந்த பத்து - இருபது ஆண்டுகளில் அவர்களுடைய வாழ்க்கையும் மாறி விட்டது என்கிறேன். உபயம் - உலகமயமாக்கல். தம் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள எவ்வளவோ வாய்ப்பு வசதிகள் வந்து விட்டன. இன்று, ஏழையும் பணக்காரரும் அவர்களால் அனுபவிக்க முடிந்த அல்லது முடியாத சொகுசுகளை வைத்து வகைப் படுத்தப் படுகிறார்கள்; முன்பு போல அவர்களின் அடிப்படை வசதிகளை வைத்து அல்ல.

இருப்பினும், பொருளியல்தான் நம் பெரும் பிரச்சனை என்பதை மறுப்பதற்கில்லை. பரந்து விரிந்த ஏழ்மை, பசி மற்றும் வேலையின்மை காரணமாகத்தான் அனைத்து விதமான தீவிரவாதங்களும் வேகமாகப் பரவி வருகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. எல்லோர் கையிலும் வேலை இருந்தால், தீவிரவாதக் குழுக்களுக்கு ஆள் எடுப்போருக்கு அது சிறிது மேலும் சிரமமாக இருக்கும் அல்லவா (முடியவே முடியாது என்று சொல்ல முடியாது எனினும்)? எனவே, ஏழ்மை என்பது ஒரு பிரச்சனை மட்டுமல்ல. பல பிரச்சனைகளின் மூல காரணம். அதையெல்லாம் வைத்துப் பார்த்தால், அதற்கு உடனடி கவனம் செலுத்தப் பட வேண்டும்.

நம் நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வரலாம். ஆனால், அதனால் நாட்டுப் புறத்தில் உள்ள நம் உறவினர்களுக்கு எந்தப் பயனும் இருக்கிறதா என்றால்... உறுதியாகச் சொல்வதற்கில்லை. வளர்ச்சி எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும். அதுதான் உலகமயமாக்கலின் பெரும் சவால். அதை நாம் முறையாகக் கையாளா விட்டால், நமக்குப் பெரும் பிரச்சனை காத்திருக்கிறது. ஆனால், நாம் நினைப்பதை விட வேகமாக இப்பிரச்சனைகள் தீர்க்கப் படும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. குறைந்த பட்சம், இதற்கு முந்தைய பிரச்சனையையும் இதற்கு அடுத்து நாம் பேசப்போகும் பிரச்சனையையும் விட வேகமாக!

உள்நாட்டு மற்றும் வெளிவழிப் பாதுகாப்பு
சமீப காலங்களில் உள்நாட்டு மற்றும் வெளிவழிப் பாதுகாப்புப் பிரச்சனைகள் (அரசாங்கங்களாலும் மற்றவர்களாலும் செய்யப் படுபவை) இரண்டுமே பெரும் கவலை அளிப்பதாக உள்ளன. அதை விடக் கவலை அளிப்பது தீவிரவாதத்தால் பாதிக்கப் படுவோரே கூட அவர்களுக்கு அளவிலாத இடம் அளிப்பது (பதுங்கிக் கொள்ளவும் பயிற்சி பெறவும்!).

மத அடிப்படையிலான வெளிவழிப் பாதுகாப்பு (மத அடிப்படையிலான உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சனைகளும் பெரிதளவில் வளர்ந்துள்ளன எனினும் எளிதான புரிதலுக்காக அவற்றையும் வெளிவழிப் பாதுகாப்புப் பிரச்சனையாகவே கொள்வோம்!) என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல; ஒட்டு மொத்த உலகுக்குமே பிரச்சனையாகத்தான் இருக்கிறது. நம் பெரும்பான்மை உலகுக்கு சிறுபான்மையாகவும் உலகின் பெரும்பான்மைகள் நமக்கு சிறுபான்மைகளாகவும் உள்ளன. நாம் ஒரு மதச்சார்பற்ற நாடு வேறு. எனவே, நாம் தொடர்ந்து தாக்கப் படத்தான் செய்வோம். அதற்காக நாம் மத அடிப்படையில் அணி சேரவும் முடியாது. என்ன விலை கொடுத்தேனும் நாம் மதச் சார்பற்றவர்களாகவே தொடர வேண்டும். இரண்டு பெரும் பிரச்சனைகள் தவிர்த்து, மதச்சார்பின்மையைப் பொருத்த மட்டில் மதச் சார்பற்றோர் என்று சொல்லிக் கொள்ளும் எல்லோரையும் விட நாம் சிறப்பாகவே நடந்து கொண்டிருக்கிறோம் பெரும்பாலான நேரங்களில்.

ஆனால், அவர்கள் ஆசைப்படுவதைப் போல இந்த நாட்டை நடத்த வேண்டும் என்றால், அது முடியவே முடியாது. அதற்கு அவர்கள் தேர்தலில் நின்று வெல்ல வேண்டும் இங்கே. முடியுமா அவர்களால்? ஈவிரக்கமற்ற தேச விரோத, மக்கள் விரோத, மத விரோதக் குற்றங்களில் ஈடுபடும் அவர்களால் அதெப்படி முடியும்? அரசாங்கத்துக்கு எதிரான போரில் அப்பாவிக் குழந்தைகளையும் பெண்களையும் கொல்வதற்கு எந்த மதத்திலும் இடம் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு.

அரசாங்கமோ ஒரு குறிப்பிட்ட பிரிவினரோ உனக்குப் பிரச்சனை கொடுத்தால், அதற்குப் பதிலடியாக அவர்களைத் தாக்குவதென்பது புத்தியுள்ள எவருக்கும் தவறாகப் படாது. மாறாக, எதற்காகக் கொல்லப் படுகிறோம் என்று கூடப் புரியாமல் உயிரை விடும் அப்பாவி மக்களைக் குறி வைத்துத் தாக்கும் உங்கள் பதிலடிகள் எந்த வகையிலும் நியாயப் படுத்தத் தக்கதாக இல்லை. அது ஓர் உண்மையான கோழைத்தனம். அதற்கு முடிவும் இல்லை. அவர்களோடு எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது. அரசியல்ப் பிரச்சனைகளுக்கு அரசியல்த் தீர்வு காண வேண்டும் என்பது மிக அடிப்படையான சிந்தனை. அவற்றுக்கு அரிவாளோ துப்பாக்கியோ ஒருபோதும் தீர்வாகாது. ஆனால், அவர்களுக்கு எப்படி அதைப் புரிய வைப்பது? என்னால் இதற்கு மேல் யோசிக்க முடியவில்லை.

உலகெங்கும் தீவிரவாத இயக்கங்கள் அரசாங்கங்கள் போல நடத்தப் படுகின்றன (சில இடங்களில் அரசாங்கங்களை விடவும் சிறப்பாக என்றும் சொல்லலாம்!). அவர்கள் எது பற்றியும் பேசத் தயாராக இல்லை. இவர்களிடம் பேசிப் பிரயோசனம் இல்லை என்று எண்ணக் கூடும் அவர்கள். ஆனால், அப்பாவி மக்களைக் கொல்வதன் மூலம் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறுகின்றனவா? ஆம் என்று கூடச் சொல்லலாம் அவர்கள். உயிர்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும் என்று அவர்களின் கடவுள் வந்து சொன்னால்கூட அவர்கள் கேட்க மாட்டார்கள். எல்லாத்தையும் விட உயிர்களைக் கொன்று குவிப்பதில் ஒருவித இன்பம் கிடைக்க ஆரம்பித்து விட்டது அவர்களுக்கு. அதை விரும்பிச் செய்யும் கொடூரர்கள் அல்லது ரசித்துச் செய்யும் வக்கிரர்கள் (இதை விடச் சிறந்த வார்த்தை என்னிடம் இல்லை!) ஆகி விட்டார்கள் அவர்கள். அவர்களிடம் கோரிக்கைகள் என்று எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அவர்களுடைய ஒரே கோரிக்கை மென்மேலும் அப்பாவி உயிர்களைக் கொன்று குவித்து அவர்களின் இரத்தத்தைக் குடிப்பது மட்டுமே என்று கூடத் தோன்ற ஆரம்பித்து இருக்கிறது.

அதற்கொரு முடிவு கட்ட முடியுமா? சந்தேகம்தான். அப்படியானால், எதுதான் முடிவு? உலகம் அழிவதுதான் அதற்கான ஒரே முடிவோ என்று கூடத் தோன்றுகிறது எனக்கு. இரவும் பகலும் போல, இருட்டும் வெளிச்சமும் போல, கெட்டதும் நல்லதும் போல, இந்தப் புது விதத் தீமையும் வரப்போகும் காலங்களில் நம்மோடும் நம் நன்மைகளோடும் வாழப்போகிறது என்றுதான் தோன்றுகிறது. நம்மால் செய்ய முடிந்ததெல்லாம், தேவைக்கேற்ப அவற்றைக் கையாள நாம் பழகிக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே. அதை முழுமையாக அழித்தல் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை. ஒன்றை அழித்தல் என்றால் அதன் பொருள் அதனை முழுமையாக அடையாளமே இல்லாமல் செய்தல். அப்படியொன்று நடக்க வேண்டும் என்றால், இரண்டு பக்கமும் பெரும் இழப்புகள் நேரிடும். அதாவது, உலகப் போர் போலொன்று!

அவர்களை விட உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பிரச்சனையாக இருக்கும் மாவோயியர்களைக் கையாள்வது ஓரளவு எளிதோ என்று படுகிறது. அவர்களிடம் தெளிவான கோரிக்கைகளாவது உள்ளன. நல்ல பேச்சுவார்த்தைக்குத் தகுந்த ஆள் (அவர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட) ஒருவரிடம் பணியை ஒப்படைத்தால், அது எங்கோ ஒரு புள்ளியில் கொண்டு சென்று நிறுத்தலாம். எங்கும் போக முடியாது என்கிற நிலையில் இருந்து எங்கோ ஓர் இடத்தில் போய் நிற்கலாம் என்கிற நிலைக்குச் செல்வது முன்னேற்றம்தானே. முன்பு பேசிய பிரிவைப் போல் அல்லாமல், இவர்கள் நிறையச் சிந்திப்பவர்கள் - ஓரளவு தர்க்க ரீதியாக விவாதிக்கும் ஆற்றல் படைத்தவர்கள். கடுமையாக முயற்சித்தால், பேச்சுவார்த்தை மேசைக்கு வருவார்கள். ஆரம்பத்தில் ஓர் அங்குலம் கூட அசையாமல் அடம் பிடிக்கக் கூடும். பேச்சைக் கேட்கத் தயாராக இல்லாத அல்லது கேட்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டு வரும் ஒருவரை எப்படிக் கேட்க வைக்க முடியும்? அவர்களிடம் இல்லாமல் இருப்பது நம் மீதான நம்பிக்கையாக இருக்கலாம். அரசாங்கம் அதை வரவழைப்பதற்கான வழிகளைக் காண வேண்டும்.

ஆனால், அவர்களுடைய கொலை வெறியாட்டங்களும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகின்றன. குறிப்பிட்ட சில வருடங்களில் நாட்டைப் பிடிப்பதற்கான தெளிவான திட்டம் அவர்களிடம் கைவசம் இருப்பதாக அடிக்கடிக் கேள்விப் படுகிறோம். ஒரு பெரும் பகுதியை ஏற்கனவே பிடித்து விட்டார்கள். அப்படியானால், இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது?

நம்மை எல்லாத் திசையிலும் சுற்றி வளைத்து வரும் நம் அண்டை நாட்டவர் அவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து வருவதாகவும் கேள்விப் படுகிறோம். சீனாவின் ஒரே தேவை இந்தப் பிராந்தியத்தின் பெரும்புள்ளி என்ற முதல்நிலை மரியாதை மட்டுமே என்றால், அதை எப்படிச் சமாளிப்பது? நம் வெளியுறவுக் கொள்கைகளிலும் நடத்தையிலும் பெரும் பெரும் மாற்றங்கள் நிகழ வேண்டும். ஆனால், அது கண்டிப்பாகப் பிரச்சனையைக் குணப்படுத்துமா? உறுதியாகச் சொல்வதற்கில்லை.

கருத்துகள்

  1. congress govt il muthal mattrum moondram prichinaikalukku theervu kaaana siru thuli vaaippu kooda illai.... congress govt needikkum varai atharkaana arikurihalum kooda thenbada povathum illai...

    பதிலளிநீக்கு
  2. Thanks for reading and the comment. Unmai. I don't think it would ever happen with these kind of guys in place.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி