தமிழகத்துப் பெயர்க் கூத்துகள்

நம்மை வெளியில் கோமாளிகளாக்கக் கூடிய பல குறைபாடுகளில் ஒன்று, நம்முடைய பெயரிடும் முறை. பெயரிடுவது தொடர்பாக பல்வேறு இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன நம் ஊரில். 

கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினருக்கு வைக்கக் கூடிய பெயர் வாயில் நுழையக் கூடாது என்கிற ஒரே கொள்கையோடு பெயர் தேடுபவர்கள் ஒருபுறம். எப்படி வேண்டுமானாலும் ஆரம்பிக்கட்டும், எப்படி வேண்டுமானாலும் முடியட்டும், பெயரின் ஏதாவதொரு பகுதியில் ‘ஷ்’ என்ற வடமொழி எழுத்து மட்டும் கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லித் தேடுபவர்கள் ஒருபுறம். இன்ன நட்சத்திரத்துக்கு இன்ன எழுத்தில் பெயர் ஆரம்பிக்க வேண்டும் என்று தேடுகிறவர்கள் ஒருபுறம். தனித்தமிழ் பெயர் தேடுபவர்களும் வைக்கப்பட்ட வடமொழிப் பெயர்களைப் பெரும் எண்ணிக்கையில் மாற்றிக் கொண்டிருக்கிறவர்களும் ஒருபுறம். 

சினிமா நடிகர் நடிகைகளின் பெயர்களைத்தான் என் பிள்ளைகளுக்கு வைக்கவேண்டும் என்று சின்ன வயதில் இருந்தே மிகவும் தெளிவாக இருக்கிறேன் என்று இருப்பவர்கள் ஒருபுறம். குறிப்பிட்ட சில திரைப்படங்களில் வருகிற கதாபாத்திரங்களின் பெயர்கள்தான் வைக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பவர்கள் ஒருபுறம். அதையே இலக்கியப் படைப்புகளில் இருந்து எடுத்துச் செய்பவர்கள் ஒருபுறம். பொன்னியின் செல்வன் வந்த காலத்தில் தமிழகம் முழுக்க நிறைய வானதிகள் பிறந்தார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். கடவுள் பெயர் மட்டும் வைப்போர் ஒருபுறம். பல தலைமுறைகளாகத் தாத்தா பாட்டிமார் பெயர்களை மட்டும் வைத்துக் கொண்டு வருவோர் ஒருபுறம். புரட்சியாளர்கள் மற்றும் மக்களுக்குப் பாடுபட்டு வாழ்ந்து சென்ற தலைவர்களின் பெயர்களை மட்டும் வைப்போர் ஒருபுறம். தன் கட்சித் தலைவனின் அம்மா, ஆட்டுக்குட்டி, வீட்டு நாய் ஆகியவற்றின் பெயரை மட்டும் அவர் வாயாலேயே சூட்டக் கேட்டுக் களிக்கிற வகையினர் ஓரினம். 

தான் கை பிடிக்க முடியாது போன காதலி மற்றும் காதலனின் பெயரை இடுவோர் ஒருபுறம். உயிர் நண்பனின் பெயரை இடுவோர் ஒருபுறம். அந்தச் சொல்லுக்கு எந்த மொழியிலும் பொருள் மட்டும் இருக்கக் கூடாது என்று பிடிவாதமாக சில எழுத்துக்களை மட்டும் கூட்டிப் போட்டுக் கூட்டுப் பொறியல் போலப் பெயரிடுவோர் ஒருபுறம். பிள்ளை பிறக்கிற நேரத்தில் செய்திகளில் அதிகம் அடிபடுகிற பெயராகப் பார்த்து இடுகிற கூட்டம் ஒருபுறம். இப்படி நீள்கிறது பட்டியல். மேற்சொன்ன சிலவற்றைப் பின்பற்றித்தான் எங்கள் வீட்டிலும் பெயர்கள் இடப் பட்டிருக்கின்றன. தாத்தாவின் விடுதலைப் போராட்டப் பின்னணி காரணமாக அளவிலாத தலைவர்களின் பெயர்கள் எங்கள் வீட்டில். பகத் சிங்கில் தொடங்கி உள்ளூர் இடது சாரித் தலைவர்கள் வரைப் பல்வேறு விதமான பெயர்கள். அதன் சில பிரச்சனைகளை அனுபவித்தவர்கள் என்ற முறையில் இந்தப் பெயரிடுதல் பற்றிக் கொஞ்சம் பேச விரும்புகிறேன். இதில் அதிகம் பாதிக்கப் பட்டவர் பகத் சிங்காகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

மேற்சொன்னவற்றில் எவை சிக்கலுக்குரியவை என்றால் குழப்புப் படியான பிற்பெயர் கொண்ட பெயர்கள் இடுவது. பிற்பெயர் என்பது என்ன? உலகம் முழுக்க உள்ள ஒரு பழக்கங்களில் ஒன்று, ஒரு மனிதரை அவருக்கு இடப்பட்ட பெயரை முற்பெயராகவும் இன, குடும்ப, கூட்ட, தொழில், ஊர், பரம்பரைப் பெயரைப் பிற்பெயராகவும் கொண்டு விளிப்பது. நம்மிலும் இது சில தலைமுறைகளுக்கு முன்பு வரை இருந்தது. இப்போதும் நம்ம ஊர்க் கிராமத்துப் பெருசுகள் இதை விட வில்லை. பிற்பெயர் பெரும்பாலான நேரங்களில் ஒருத்தருடைய சாதியைச் சுட்டுவதாக இருந்ததால் நம் முன்னோரில் சில நல்லவர்கள் அதைப் பயன்படுத்துவதை அநாகரீகமாகக் கருதிக் கழற்றி விட முடிவு செய்தார்கள். அதிலிருந்து நாம் நம் தந்தையின் பெயரையே பிற்பெயராகக் கொண்டு வாழ்க்கையை நடத்த ஆரம்பித்து விட்டோம். இந்தக் கதை நம்மில் பலருக்கு உருப்படியாக வந்து சேராததால் “ஏய், உனக்குப் பிற்பெயர் இல்லையா? அப்பா பெயர்தான் அதுவா?” என்று சில வெளிமாநிலத்துக் காரர்கள் கேட்டுச் சிரிக்கும்போது உடன் சேர்ந்து சிரித்து விட்டு நகர்கிறோம். இன்று முதல் இனி அப்படி ஒரு சூழ்நிலை வருமானால் இந்தக் கதையைச் சொல்லி “அட முட்டாப் பயகளா! நீங்கள் இன்னும் நாகரிகமடையவே இல்லையா?” என்று கேட்டுப் பதிலுக்குச் சிரித்து விடுங்கள். இன்று வட மாநிலங்களில் பல இயக்கங்கள் தமிழ் நாட்டைப் போல் அவர்கள் மாநிலத்திலும் இதை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால், சாதி வேரைக் கிள்ளி எறியும் முயற்சிக்கு இது சரியான முதல் படி.

அடுத்து நாம் செய்ய வேண்டிய முதல் வேலை, வட நாட்டுப் பிற்பெயர்களை இணைத்துக் கோமாளித்தனமான பெயர்கள் வைப்பது. சரியாகப் புரிந்து கொள்ளுங்கள், வடமொழிப் பெயர்கள் வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. வடநாட்டுக் காரர்களின் பிற்பெயர்களை வைக்காதீர்கள் என்றுதான் சொல்கிறீர்கள். அதாகப் பட்டது, உங்கள் பிள்ளைகளின் பெயரில் சிங், சர்மா, குப்தா, மேத்தா, கபூர், காந்தி, நேரு போன்ற பெயர்களைச் சேர்க்காதீர்கள். காந்தியைப் பிடித்தால் மோகன்தாஸ் என்று வையுங்கள். நேருவைப் பிடித்தால் ஜவகர் என்று வையுங்கள். பகத் சிங்கைப் பிடித்தால் பகத் என்று வையுங்கள். அவைதான் அவர்களின் முற்பெயர். அதை விடுத்து அவர்களின் பிற்பெயர் வைப்பது எப்படி இருக்கும் என்றால், வடநாட்டுக்காரன் அவன் பிள்ளைக்குத் தேவர், கவுண்டர், நாடார் என்று வைப்பது போல் இருக்கும். அப்படி ஒரு கோமாளித்தனத்தை அவர்கள் செய்வதில்லை. பின் ஏன் நாம் மட்டும் செய்ய வேண்டும்?!

அப்படிச் செய்தது போன தலைமுறை வரை ஓகே. ஏனென்றால், நம் பிள்ளைகள் பெரும்பாலும் வெளியேறவில்லை அப்போது. ஊர்க்காரன் மட்டும் “ஆகா, என்ன ஒரு புதுமையான பெயர்?!” என்று ஆச்சரியப்படுவான். நாமும் ரெம்பப் பெருமையாகப் பல்லைக் காட்டித் திரிவோம். இப்போது அப்படி இல்லை. பிள்ளை வெளியே பல இடங்களுக்குப் போகும்போது பலருடைய கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகும். வேடிக்கைப் பொருளாய் உடன் சிரிப்பது மட்டுமின்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மானத்தையும் இழக்க ஆரம்பிக்கும். எல்லாவற்றுக்கும் மேல் நான் இதை ஓர் அடிமைத்தனத்தின் சின்னமாக, தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாகப் பார்க்கிறேன். இப்படிப் பெயர்களிடம் மாட்டிக் கொண்டு புழுங்கிக் கொண்டிருப்போரையும் அறிவேன். அதனால் காமெடிப்பீஸ் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே பல்லைக் காட்டித் திரிவோரையும் அறிவேன். உங்கள் பிள்ளைகள் இரண்டில் எதுவுமே ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் கடமை.

கருத்துகள்

 1. Well said Raja. I used be mad at people when they name their kids based on "unique" name concept which is in one of your naming category. I see this crazy naming attitude more in Tamils. Don't know why. (by the way i named my kids good Tamil names :) ).

  பதிலளிநீக்கு
 2. Thanks Kavi. Good to see that there is someone who relates to my agony. Yes. It is only with our people. Good that you have named your kids with good Tamil names.

  பதிலளிநீக்கு
 3. பாராட்டுகள். இந்தியா முழுமையுமே சாதிப் பெயர்களை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க கவேண்டும். முதலில் அரசியல் தலைவர்கள் பெயர்களைச் சாதி அடிப்படையில் சுருக்கிக் குறிப்பிடுவதை நாடாளுமன்றத்தில் நிறுத்த வேண்டும். அடுத்து ஊடகங்களில் அவ்வாறு குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்!இனத்தைக் காப்போம்!

  பதிலளிநீக்கு
 4. நன்றி திரு. திரு அவர்களே. தங்கள் கருத்துரை இந்த இடுகைக்கு அழகு சேர்க்கிறது. அதற்குக் காரணம் உங்கள் பெயர். திருவள்ளுவரே வந்து சொன்னது போல் இருக்கிறது. :)

  உங்கள் கருத்துரைகளை தினமணியில் தொடர்ந்து படித்து வருகிறேன். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 5. /// வடநாட்டுக்காரன் அவன் பிள்ளைக்குத் தேவர், கவுண்டர், நாடார் என்று வைப்பது போல் இருக்கும். அப்படி ஒரு கோமாளித்தனத்தை அவர்கள் செய்வதில்லை. பின் ஏன் நாம் மட்டும் செய்ய வேண்டும்?!///


  Well said. இந்த கிறுக்குத்தனமான பழக்கம் தென் தமிழ் நாட்டில் அதிகம் உண்டு. சிங் என பெயர் முடியும் நெல்லை காரர்களை சென்னையில் நிறைய பார்க்கலாமே!

  பதிலளிநீக்கு
 6. நன்றி கக்கு அவர்களே. அதையெல்லாம் பார்த்து, நொந்து நூலாகித்தான் இப்படியொரு பதிவை எழுதினேன்.

  பதிலளிநீக்கு
 7. குழந்தையின் பெயர் வாழும் காலம் வரை நம் மொழியையும் இனத்தையும் கூறக்கூடிய ஒன்று என்று பலருக்கு தெரியவில்லை .நல்ல தமிழ் பெயர் வைப்பவர்கள் ஒரு சிலரே ,நல்ல பதிவு .

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி சீனிவாசன் அவர்களே. உண்மைதான். ஆனால், இந்த நிலை மாற வாய்ப்புள்ளது போலத் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்