சாதிவாரிக் கணக்கெடுப்பும் அதன் இறுதி நோக்கமும்

இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்பவர்களும் சரி - கூடாதென்று சொல்பவர்களும் சரி - அதன் காரணம் மற்றும் பின்னணி பற்றி எந்த விபரங்களையும் அறிய முயலாமல், தன்னுடைய நலனுக்கு அது உதவுமா அல்லது ஊறு விளைவுக்குமா (நேரடியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ) என்பதை மட்டுமே கணக்குப் போட்டுக் கண் மூடித் தனமாக ஆதரிக்கிறார்கள் அல்லது எதிர்க்கிறார்கள். நம் வாதங்களில் இத்தகைய போக்கு தொடரும்வரை இது ஓர் உணர்வு பூர்வமான பிரச்சனையாகத்தான் இருக்கும். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தன் சாதியைச் சொல்லித் தன் உயர்நிலையைக் காட்டிக் கொள்ள முயலும் நம் உயர்சாதி நண்பர்கள் இட ஒதுக்கீடு வரும்போது மட்டும் அதை எதிர்ப்பது அவர்களின் மனப்பான்மையைச் சரியாகக் காட்டுகிறது. தனக்கு மட்டும் சலுகை கிடைத்தால் சந்தோஷப்படும் - சமூக நீதி பற்றிப் பேசும்... ஆனால் தனக்கும் கீழே இருக்கும் சகோதரர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளை எதிர்க்கும் இடை மற்றும் கடை நிலைச் சாதியரின் மனப்பான்மையும் சரியானதாய் இல்லை.

எனவே, இப்பிரச்சனையில் இருக்கிற உணர்வு பூர்வமான சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இந்த இலக்கற்ற உரையாடலின் (காதல்ப்பேச்சுகளில் 'இனிமையான ஒன்றுமில்லைகள்' போல எழுதுவதில் இது போன்ற இலக்கற்ற உரையாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது) எல்லையை சாதிவாரிக் கணக்கெடுப்பு மற்றும் அதன் இறுதி நோக்கமான சாதியற்ற சமுதாயம் ஆகியவற்றோடு நிறுத்திக் கொள்கிறேன். "முதலில் உங்கள் எல்லோருடைய சாதியையும் கண்டுபிடிப்பேன்; அப்புறம் உங்கள் அனைவருடைய மனங்களிலும் இருந்து சாதியை அறவே நீக்குவேன்!" என்பது கேலிக்கூத்தாக இல்லையா? இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதிலும் இதை விட நிலைமையைப் பரவாயில்லாமல் ஆக்கவேண்டும் என்ற ஒரு திட்டம் இருப்பது போல்த் தெரிகிறது. உண்மையான உணர்வோடு செயல்பட்டால் அதுவும் சாத்தியமே. அப்படியே நடத்தப்படும் என நம்புவோம்.

எல்லாவற்றுக்கும் முதன்மையாக, இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு இந்த நாட்டின் ஒரு பெரும் பைத்தியக்காரத்தனத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும். அதன் பின்பாவது எல்லா சாதிக்காரனும் சரியான நம்பரைச் சொல்வான். இன்றைக்கு, இந்தியாவில் இருக்கிற ஒவ்வொரு சாதிக்காரனும் சொல்கிற நம்பரைக் கூட்டினால் அது உலக மக்கள்தொகையை விட அதிகமாக இருக்கிறது. ஒவ்வொருத்தனும், "மூன்று கோடி மக்கட்தொகை கொண்ட எங்கள் இனம்..." என்றுதான் ஆரம்பிக்கிறான். கணக்கெடுப்புக்குப் பின் பலபேர் நம்பர்களைப் பயன்படுத்துவதையே விட்டுவிடக் கூட வாய்ப்பிருக்கிறது. தவறான நம்பர்களைச் சொல்வதற்காக யாரும் சிறையிலடைக்கப்படுவதில்லை. சும்மா போகிற போக்கில் பெங்களூரில் 90% தமிழர்கள்தாம் என்றும் சென்னையில் 60% தெலுங்கர்கள்தாம் என்றும் புள்ளி விபரங்களை அள்ளி விடுவார்கள். அதன் பொருள் என்னவென்றால், "இங்கே நாங்கள் அதிகமாக இருக்கிறோம்!" என்பது மட்டுமே. அதற்கு மேல் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. யாரோ ஒருவர் சொன்னது - "95% நேரங்களில் சதவீதங்கள் எந்த அடிப்படைத் தகவல்களும் இல்லாமல் அப்போதே உருவாக்கப் படுபவை!". எவ்வளவு பெரிய உண்மை!

கணக்கெடுப்பின் மற்றொரு பயனாளிக் கூட்டம் அரசியல்வாதிகள். அவர்களின் வியூகங்கள் வேறு விதமாக மாறி விடும் அதன் பிறகு. புதிய நம்பர்களை வைத்து வேட்பாளர்களை முடிவு செய்யத் தொடங்கி விடுவார்கள். அதை வைத்தே சில கூட்டணிக் கட்சிகளின் (சாதிக் கட்சிகள்) தொகுதி எண்ணிக்கையையும் முடிவு செய்வார்கள். இப்போது நம்பப் படுவதை விட முற்றிலும் வேறுபட்டிராது. ஆனாலும், நமக்குச் சில வியப்புகள் இருக்கலாம். பல தொகுதிகளில் கடந்த பல தேர்தல்களில் ஏன் தோற்றோம் என்பதற்கான சரியான காரணங்களோடு பத்திரிகை அறிக்கைகள் வெளியிடப்படலாம். எந்தெந்த சாதிகள் மக்கட்தொகைக் குறைப்பில் அரசாங்கத்துக்கு உதவியிருக்கின்றன மற்றும் எந்தெந்த சாதிகள் இன்னும் கொஞ்சம் அரசாங்கத்திடம் பிடுங்குவதற்கு வசதியாக எண்ணிக்கையைக் கூட்டியிருக்கின்றன என்ற விபரமும் தெரிய வரும். அதற்காக அரசாங்கம் ஒன்றும் அப்படிக் கூட்டியவர்களைத் தண்டிக்காது. மாறாக, அவர்களின் ஆதரவை அள்ளிக் கொள்ள வேண்டி மேலும் மேலும் அவர்களுக்கே அள்ளி அள்ளிக் கொடுக்கப் படும். அந்த வகையில், தற்போதைய மக்கட்தொகைப்படி நாடெங்கும் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யாதது எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இல்லாவிட்டால், மரியாதையாகச் சொன்னபடி கேட்டு மக்கட்தொகையைக் கட்டுப்படுத்தியவர்களுக்கு அது ஒரு தண்டனை போல் ஆகியிருக்கும்.

கூடுதலாக, ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் சாதிகளின் எண்ணிக்கையையும் கணக்கிடலாம் அரசாங்கம். கடந்த ஐம்பது ஆண்டுகளில் பெரும்பாலான சாதிகள் தங்கள் தராதரத்தில் குறைந்து விட்டன. ஐம்பதுகளின் உயர்சாதிகள் இப்போது பிற்படுத்தப்பட்டும் பிற்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டும் என்று ஏகப்பட்ட மாற்றங்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர் தாழ்த்தப்பட்டோராக அறிவிக்கப்பட்டார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. நம்மைப் போன்ற வளர்ந்து வரும் ஒரு நாட்டில் இத்தனை சாதிகள் நலிந்து வருகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து. ஆனால், ஒருபுறம் பட்டியல்களில் தம்மைத் தாழ்த்திக் கொள்ள நடைபெறும் முயற்சிகள் நடந்தாலும், வேறு எல்லா இடங்களிலும் மற்றொருவரை விடத் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்ள நடக்கும் முயற்சிகளும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஒவ்வொரு சாதியும் எந்தப் பிரிவில் வரவேண்டும் என்பதை வரையறுக்கத் தெளிவான - வெளிப்படையான வரையறைகள் இருக்க வேண்டும். கவலை என்னவென்றால், பல மாநிலங்களில் ஒடுக்குகிறவர்களும் ஒடுக்கப்படுகிறவர்களும் (அவர்களின் பெயர்களைச் சொல்ல விரும்ப வில்லை) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஒருங்கே இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வரையறைகளை வரையருப்பதற்குப் பாராளுமன்றத்தில் எத்தனை கூட்டத்தொடர்களை வீணாக்கினாலும் பரவாயில்லை. அதன் பின் எல்லாத் தலைவர்களின் கையெழுத்தும் வாங்கி விட வேண்டும் (எப்படி வரையறுத்தாலும் கையெழுத்துப் போட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் ஒரு சிறு கூட்டம் இருக்கத்தான் செய்யும்!). அதன் பின்பு சொல்லுங்கள் - யார் எந்தப் பிரிவில் வருகிறார்கள் என்று. வரையறைகளைப் பொறுத்து கணிப்பொறிகளே இன்னின்ன சாதி இன்னின்ன பிரிவில் வரவேண்டும் என்று சொன்ன பின்பும் கூடப் பல அரசியல் அயோக்கியர்கள் தங்கள் இனத்தையோ அல்லது தமது கொள்ளைகளுக்கு எல்லாம் உறுதுணையாக இருக்கும் ஒரு பெரும்பான்மை இனத்தையோ கீழே இறக்கி அறிவிக்குமாறு தெருவில் இறங்கிக் கூச்சல் போடுவார்கள். அவர்களைக் கண்டு கொள்ளக் கூடாது. அது ஒன்றும் நம் அரசாங்கத்துக்குத் தெரியாத உத்தி இல்லை.

சாதி வேற்றுமையை ஒழிப்பதுதான் நம் ஒரே நோக்கமென்றால் இன்னொரு திட்டமும் இருக்கிறது. சாதி விட்டுச் சாதி மாறிச் செய்யும் மற்றும் பிரிவு விட்டுப் பிரிவு மாறிச் செய்யும் கலப்புத் திருமணக் குழந்தைகளுக்கென்றொரு தனிப் பிரிவு இருக்க வேண்டும். சாதி விட்டுச் சாதி மாறிச் செய்வதை விட பிரிவு விட்டுப் பிரிவு மாறிச் செய்யும் திருமணங்கள் கூடுதலாக ஊக்குவிக்கப் படவேண்டும். தேவையைப் பொறுத்து இதற்குள்ளும் பல பிரிவுகள் வைத்துக் கொள்ளலாம். சாதி வேற்றுமைகளை நீர்க்கச் செய்ய விரும்பினால் இத்தகைய பிரிவினர் அதிகம் கொடுக்கப்பட வேண்டும். நகரமயமாக்கலைப் போலவே, நாம் வம்படியாகத் திணித்துக் கொண்டுவர விரும்பும் ஒரு மாற்றத்தை இயல்பாகவே கொண்டு வரத்தக்க மற்றொரு செயல் இது.

இறுதியாக, மொத்தத் தமிழகமும் தென்னிந்தியாவின் சில பகுதிகளும் மற்ற பகுதியினருக்குக் கற்றுக் கொடுக்க ஒரு விஷயமிருக்கிறது. சாதிகளை நம் மனங்களில் இருந்து முழுமையாக அகற்றி விடாவிட்டாலும் நம் பெயர்களில் இருந்து பெயர்த்தெறிந்து விட்டோம். இன்று, நம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் பின்பெயர் (SURNAME) என்னவென்று கேட்டால், நாமெல்லாம் சொல்வது நம் தந்தையின் பெயரையே. நம்மிடம் பின்பெயரெல்லாம் இல்லை; அதனால்தான் தந்தை பெயரைச் சொல்கிறோம் என்று நினைக்கலாம் நீங்கள். அப்படி நினைத்தால், நீங்கள் நினைப்பது தவறு நண்பரே! திராவிட இயக்கத்தின் ஒரு பகுதியாக, சில தலைமுறைகளுக்கு முன்பே அப்படிப் பின்பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது என்று மெனக்கெட்டுத் தவிர்த்தார்கள் நம் முன்னோர். இப்போதெல்லாம் யாராவது அப்படிப் பின்பெயர் சேர்த்தால் ஒரு பட்டிக்காட்டானைப் போல்தானே பார்ப்போம் நாம். ஏதோவொரு வகையில் அவை சாதியைச் சுட்டுவதால் நம் முன்னோர் (உயர்சாதி முன்னோரும்தான்) அதை முழுமையாக விட்டெறிய விழைந்தார்கள். எல்லோருக்குமே சாதிப்பெயர்தான் பின்பெயர் என்று தவறாக எண்ணி விடாதீர்கள். நம்மிடம் பட்டம் என்றும் ஒன்றிருந்தது. அது சாதியைக் குறிப்பதாகவும் இருக்கலாம்; குறிக்காமலும் இருக்கலாம். அதையும்தான் விட்டெறிந்து விட்டோம். இன்று, மூன்று நான்கு தலைமுறைகள் கழிந்த பின்பு, சாதி என்பது புரிந்தாலும் பின்பெயர் என்ற கருத்தாக்கம் நமக்குப் புரிவதில்லை. அது ஒரு விதத்தில் பாதி வெற்றிதான். ஏனென்றால், இறுதி நோக்கம் இன்னும் வெல்லப்படவில்லை. ஆனால், மற்ற இடங்களைப் போல் இங்கே முதல் சந்திப்பிலேயே ஒருவரின் முழுப்பெயரைக் கேட்டு சாதியைக் கண்டு பிடிக்கும் அவலம் இல்லை.

முன்பே வெளியேறிவிட்ட ஒரு சிலர்தான் தங்கள் அடையாளத்தை இழக்காமல் இருப்பதற்காக அதைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் இன்னமும். இந்தப் பிரச்சனை நாம் வெளியே வரும்போது மட்டும்தான் நமக்கு வருகிறது. நாம் அவர்களைக் கண்டு சிரிப்பதற்குப் பதிலாக பின்பெயர் இல்லாமைக்காக அவர்கள் நம்மைக் கண்டு சிரிக்கிறார்கள். பெங்களூரிலும் சென்னையிலும் இருக்கும் நம் இளைய தலைமுறைகள் சாதியைப் பற்றித் துளியும் கவலைப்படுவதில்லை. நாட்டுப்புறத்தில் இருந்து வந்த ஆரம்பத்தில் அது ஒரு பெரிய வியப்பாக இருந்தது எனக்கு! நகரமயமாக்கல் சாதியை அதி வேகமாக நீர்க்கச் செய்து வருகிறது (சென்னையிலும் சங்கம் வைத்துச் சாதி வளர்க்கும் ஒரு கூட்டம் இருப்பது உண்மைதான் என்பதை ஒத்துக் கொள்கிறேன் இவ்வேளையில்; ஆனால் அதுவும் நாட்டுப் புறத்திலிருந்து வந்த கூட்டமே!). எனவே நகரமயமாக்கலையும் ஊக்குவிப்போம். இங்கிருக்கும் உயர்சாதிப் பையன்களுமே கூட சாதி பற்றிப் பேசுவதை அசிங்கமாகத்தான் நினைக்கிறார்கள். ஆனால், பிற பகுதிகளில் இருந்து வந்திருக்கும் என் நண்பர்கள் நிறையப்பேர் அப்படியில்லை. இங்கே நான் சொல்ல வருவது என்னவென்றால், சாதி சார்ந்த பின்பெயர்களைத் தூக்கி எறியத் தயாராக இருப்போரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஏதாவது திட்டமிட வேண்டும். தேவைப்பட்டால், ஊர்ப் பெயரையோ தந்தை பெயரையோ சாதி பற்றி மூச்சுக்கூட விடாத வேறு ஏதாவது பட்டத்தையோ பயன்படுத்திக் கொள்ளட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி