ஆதலினால் எழுதித் தள்ளுவீர் உலகத்தீரே!

எல்லாத் துறைகளிலும் வென்றவர்களும் தோற்றவர்களும் இருக்கிறார்கள். இது தவிர்த்து இன்னொரு பிரிவினரும் இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட துறையில் வெல்வதற்குரிய அனைத்துத் திறமைகளும் தகுதிகளும் இருப்பினும் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் விட்டு விடுவோர். அப்படி விடுவதற்குப் பல காரணங்கள். ஒன்று சோம்பல். இன்னொன்று நேரமின்மை. மற்றொன்று தனக்குள் அப்படியொரு மிருகம் உறங்கிக் கொண்டிருப்பதை உணராமலேயே வாழ்க்கையை ஓட்டிவிடுவது. அப்படிப் போய் விடுவதற்குக் காரணம், அன்றாடப் பிழைப்பைப் பார்ப்பதிலேயே வாழ்க்கை முழுக்கக் கழிந்து விடுவது. பல வளர்ந்த நாடுகளில் உள்ளது போல, நம்ம ஊரில் நம் படிப்பும் நாம் செய்யும் தொழிலும் நம் திறமை மற்றும் ஆர்வத்தை அடிப்படையாக வைத்து முடிவு செய்யப் படுவதில்லை. அதற்குக் காரணம் நம் பொருளாதார சூழ்நிலை.

இப்படி முயலாமல் விட்டு விட்ட பலருடைய வெற்றியைத்தான் முயன்று பார்த்து வென்றவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முயலாதது எந்த வகையிலும் முயன்று வென்றவர்களின் வெற்றியைச் சிறுமைப் படுத்தக் கூடாது. அது அவர்கள் முயலாமைக்குக் கொடுத்த விலை. இது இவர்கள் முயன்றதற்குக் கிடைத்த பரிசு. நாம் இங்கே செய்ய முயல்வதெல்லாம் முயலாதவர்களை எழுப்பி விட வேண்டும் என்ற முயற்சியே ஒழிய, முயன்றவர்களின் வெற்றியை இழிவு படுத்துவதல்ல. அது மட்டுமல்ல, முயலாதிருப்போர் அனைவரும் போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் போட்டியின் தரத்தைப் பெருமளவு கூட்ட முடியும். இன்று வென்றிருப்பவர்கள் இதனினும் பெரிதாய் வென்றிருக்கவும் கூடும். சரியான போட்டியின்மையின் ஒரே காரணத்தால் அவர்கள் சிறிது மெத்தனமாக இருந்திருக்கக் கூடும். நுகர்வோர் கோட்பாட்டுப் படி, இப்படிப் பலருடைய பங்களிப்பு இராததால் – போட்டி இல்லாமல் போனதால் - இழந்தது இறுதிப் பயனாளிகள்தான். எல்லோரும் கலந்து கொள்ள முடிந்திருந்தால் இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்குப் பின் கிடைக்கப் போகிற நன்மைகளை – புதுமைகளை இப்போதே அனுபவித்திருக்க முடியும். எவ்வளவு அற்புதமானது அது?

இந்த நியதிக்கு எழுத்துலகமும் விதிவிலக்கல்ல. இன்றைக்கு வலைத்தளங்களில் அவரவர் ஆசைக்கேற்ற படி பதிவுகள் செய்துகொள்ளும் வசதி வந்து விட்ட பிறகு, எழுத்துலகத்தின் மீதான பார்வையே புரட்டிப் போடப் பட்டிருக்கிறது. “எங்கே போயிருந்தார்கள் இவர்களெல்லாம் இவ்வளவு காலமாக?” என்றொரு வேதனையான கேள்வி எழுகிறது, இவ்வளவு காலத்து இழப்புகளைத் தாங்க முடியாமல். “இப்போதும் இவர்கள் ஏன் வெளிச்சத்தை விட்டு விலகி இருக்கிறார்கள்? எது அவர்களை ‘எழுத்தாளன்’ என்ற பட்டத்தினின்று தொலைமைப் படுத்தி இருக்கிறது?” என்ற கேள்விகளுக்கான விடை தேடல் அவசியமாகப் படுகிறது. ஒரு சாரார் தான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தன் முக்கியத் தொழிலைத் தவிர வேறு எதையுமே தொழிலாகச் சிந்தித்தும் பார்க்க முடியாதவர்கள். அல்லது, அதற்கு நேரம் கிடைக்காதவர்கள். நேரம் கிடைக்கிற போதெல்லாம் எழுதுவதெல்லாம் தன் மன திருப்திக்காகவும் தனக்கு மிக நெருங்கிய சிலரிடம் மட்டும் படித்துக் காட்டிப் பாராட்டுப் பெறுவதற்காகவும் மட்டுமே.

அடுத்தது, “நாம் எழுதுவதெல்லாம் பெரிய எழுத்தா?” என்ற அவநம்பிக்கையோடே நிறைய அழகழகாய் எழுதிக் குவித்துக் கொண்டிருப்போர். இவர்கள்தாம் உடனடியாக உள்ளிழுத்து வரப்பட வேண்டியவர்கள். நம்பிக்கை தவிர எல்லாம் இருக்கிற இடத்தில் அதை மட்டும் வர வைப்பது ஓரளவு எளிதாகத்தான் படுகிறது. அதன் பயனோ மலையளவு பெரியது.

மற்றொரு சாரார், எல்லோரும் வாசிக்கும் படி அல்லாமல் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் வாசிக்கும் வகையில் எழுதுவோர். அப்படிப் பட்ட எழுத்தை விரும்பி வாசிப்போர் எங்கிருக்கிறார் என்று தெரியாமலேயே, தவறான கைகளிடம் சிக்கி, தக்க ஆதரவின்றி, நம்பிக்கை இழந்து கை விட்டு விடுபவர்கள். இவர்கள் நம்பிக்கை இழக்கும் முன்பு, இவர்களுடைய எழுத்துக்களை விரும்பிப் படிக்கும் ஒருத்தராவது சிக்கி விட்டால் போதும். பிழைப்பு ஓடி விடும்.

ஒரே ஒரு டிப். பிறருடைய எழுத்துக்களைப் படிக்கும் போது, ‘இவனெல்லாம் என்ன எழுதுகிறான்? சுத்தப் பேத்தல்!’ என்று அடிக்கடித் தோன்றினால், கண்டிப்பாக அதை விடச் சிறப்பாக எழுதும் திறமை உங்களிடம் இருக்கிறது என்பதை மட்டும் உங்கள் மனதில் அழுத்தமாக இட்டுக் கொள்ளுங்கள். ஏனையவை இயல்பாகவே வரும்.

“வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து பத்தி பத்தியாய் எழுதுகிற பொறுமையெல்லாம் எவனுக்குய்யா இருக்கு?” என்று கோபப் படுபவராக இருந்தால் உங்களுக்குச் சொல்வதற்கு என்னிடம் அதிகம் எதுவுமில்லை. நீங்கள் வாசிக்கிற எழுத்துக்களை சில வரிகளில் மட்டும் விமர்சிக்க முயற்சியுங்கள். முடியாவிட்டால், சில வார்த்தைகளில். அதுவே உங்களை எங்காவது கொண்டு போய் விடலாம்.

எனவே, நான் ஆசைப்படுவதெல்லாம் என்னவென்றால், வாசிப்பவர் எல்லோருமே வாசகராக மட்டும் இருந்து விடாமல், மனதில் தோன்றுவதையெல்லாம் கிறுக்க வேண்டும். புதிதாக எதுவுமே இல்லாவிட்டாலும், வாசிக்கிற கருத்துக்கள் பற்றியாவது தத்தம் எழுத்துக்களில் வாதிடலாம். அது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும். தினமும் டைரி எழுதலாம். அப்படி ஏதோ ஒரு வகையில் எது பற்றியாவது எழுதுவதில் கிடைப்பது இரண்டு மாங்காய்கள். ஒன்று, உங்கள் எழுத்தாற்றல் கூர்மையடையும். “அதில் என்ன கிடைக்கப் போகிறது” என்கிறீர்களா? சரி, விடுங்கள். மற்றொன்று, சிந்தனையே கூர்மையடையும். சிந்தனை கூர்மையடைவதை விரும்பாத ஆள்தான் உண்டா நம்மில்? எனவே, இந்தப் புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று உங்களுக்கொரு விண்ணப்பம் வைக்கிறேன் - “ஆதலினால் எழுதித் தள்ளுவீர் உலகத்தீரே!”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி