இந்தியாவைக் கற்பனைத்தல் (IMAGINING INDIA)
இதுவும் முன்னொரு நாளில் ஆங்கிலத்தில் எழுதிய இடுகையின் தமிழாக்கமே. IMAGINING INDIA என்பதற்கு இந்தியாவைக் கற்பனைத்தல் என்பதே சரியான தமிழாக்கம். இந்தியச் சிந்தனை, இந்தியக் கற்பனை, இந்தியக் கனவுகள், இந்தியா பற்றிய சிந்தனை / கற்பனை / கனவுகள் என்றும் இதை வெவ்வேறு விதமாக பல்வேறு சாரார் மொழிபெயர்த்துள்ளார்கள். ஒவ்வொரு விதத்தில் எல்லாம் சரியே. அது ஒரு பெரிய விஷயமில்லை. எது பெரிய விஷயமோ அதற்குள் செல்வோம் இப்போது. :)
இந்த நாட்டின் முக்கியமான பிரச்சனைகள் பற்றிய இந்த இடுகையை நான் எழுதுவதற்குக் காரணம் இரு முன்னாள் இன்போசிஸ் ஊழியர்கள்.
1. திருவாளர். நந்தன் நிலேகனி அவர்கள், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை நிர்வாக அலுவலர்.
2. என் நண்பன் சம்பு நஷிப்புடி (என்ன பதவியில் இருந்தான் என்பது அவ்வளவு முக்கியமில்லை!), இன்போசிஸ், விப்ரோ மற்றுமொரு சிறிய நிறுவனத்தின் முன்னாள் ஊழியன்.
நந்தன் நிலேகனி எப்படி? இப்போதுதான் அவருடைய நூல் இந்தியாவைக் கற்பனைத்தல் (IMAGINING INDIA) படித்து முடித்தேன். ஒருநாளைக்கு ஐந்து பக்கங்களுக்கு மேல் படிக்கும் பழக்கம் இல்லாததால் படித்து முடிக்கப் பல மாதங்கள் ஆனது. அது ஒரு கனமான நூல் - எடை கருத்துகள் இரண்டிலுமே. சிறிது வரலாறோடு ஆரம்பித்து இந்த நாட்டின் அனைத்துப் பெரிய பிரச்சனைகள் பற்றியும் அவருக்கே உரிய கார்பொரேட் நடையில் பேசுகிறார். உலகமயமாக்கலின் புண்ணியத்தில் எதையும் ஒரு புது விதமாகப் பார்க்கும் தன்மை வந்திருக்கிறது. கார்பொரேட் உலகம்தான் அதைக் கொண்டு வந்திருக்கிறது. உணர்ச்சி வசப்பட்டுக் கூப்பாடு போடக்கூடிய விஷயங்கள் பற்றி அதிகம் பேசவில்லை. அத்தகைய சில பிரச்சனைகள் பற்றியும் கவனமான தொனியில் பேசுகிறார். தவறாக அரசியலாக்கப் பட்டுவிடுவோமோ என்கிற பயத்திலேயே பிரச்சனைக்குரிய எதைப் பற்றியுமே பேச விரும்பாத ஒரு கூட்டத்துக்கு நாம் பழக்கப் பட்டு வருகிறோம். அல்லது இன்னொரு புறம் எல்லாவற்றையுமே அரசியலாக்கப் பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது (இப்படி மொட்டையாகவே சொல்லி விடுகிறேன்; பன்றிக் கூட்டம் என்றெல்லாம் சொன்னால் தன்னைத்தான் சொல்கிறானோ என்று கோபப்பட்டு யாராவது விளக்கம் கேட்கக் கூடும்). எனவே, எல்லாவற்றையுமே (முக்கியமாக மக்கள் பிரச்சனைகளை) நாம் பழக்கப் பட்டிராத ஒருவித போர்ட்ரூம் தொனியில் பேசியிருக்கிறார்.
யுத்த அறைகளில்தான் வியூகங்கள் வகுக்கப் பட்டன. ஆங்கிலத்தில் WAR ROOM (யுத்த அறை) மற்றும் STRATEGY (வியூகம்) என்று இரு சொற்கள் இருக்கின்றன. அவ்விரு சொற்களுமே ராணுவ உலகில் பிறந்தவை. அதற்குப் பின்பு இப்போது அவ்விரு சொற்களுமே அதிகம் பயன்படுத்தப் படுவது வணிக உலகில்தான். அதுவும் கார்பொரேட் என்று சொல்லும் பெருவணிக உலகங்களில். வணிகம்தான் யுத்தம் போல் செய்யப்படுகிறது இப்போது. ஒவ்வொரு நாளும் பிழைப்பு கேள்விக்குறியாக்கப் படும் சூழலில் எல்லாமே போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்கப் படவேண்டும். உங்கள் களத்தை இழக்காமல் இருக்க நீங்கள் தொடர்ந்து வியூகங்கள் வகுத்துக் கொண்டே இருக்க வேண்டும். நம் அரசுகளும் (அரசியல் அல்ல) அதே அளவு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
காலப்போக்கில் வணிக நிறுவனங்களின் பாத்திரம் எப்படி நம் நாட்டில் மாறிவிட்டது என்பது பற்றியும் பேசியிருக்கிறார். அந்தக் காலத்தில் மற்ற எல்லாத் தொழில்களையும் போலவே வியாபாரமும் (பெருவணிகங்கள் உட்பட) ஒரு குறிப்பிட்ட இனத்தவர் மட்டுமே செய்யக்கூடியதாக இருந்தது. இன்றோ, அது இனம் - மொழி - பின்னணி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு எல்லா விதமான திறமைசாலிகளையும் உள்வாங்கிக் கொண்டு வருகிறது. அதுவும் ஒருநாள் முழுமையாக சனநாயகப் படுத்தப்பட்டு விடும். அவருடைய எல்லையத்துக்கு அப்பாற்பட்ட துறைகளில் அவர் செய்திருக்கும் கவனிப்புகள் என்னை மிரள வைக்கின்றன. அவரே அது பற்றியும் சொல்லியிருக்கிறார். வணிகத் தலைவர்களை நாம் எப்படிப் பார்க்கப் பழகியிருக்கிறோம் என்பது பற்றி. அவர்களில் சிலர் நம்முடைய அபிப்பிராயங்களை எல்லாம் பொய்ப்பித்திருப்பதும் - சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளை அதைச் செய்வதற்காகவே நாம் இட்டிருக்கும் ஆட்களை விடச் சிறப்பாகச் செய்ய முடிவதும் நல்ல மாற்றம்தானே.
அவருக்கும் அரசியல் ஆர்வம் இருந்திருக்கும் போலும். சரியான நேரத்தில் அது அவருக்கான குட்டையில்லை என்பதையும் அதில் சேராமலேயே அதில் சேர்ந்திருப்போர் செய்வதை விட அதிகம் செய்ய முடியும் பிற்காலத்தில் என்பதையும் உணர்ந்திருக்க வேண்டும். இன்று, அவர் இருக்க விரும்பிய இடத்தில் இருக்கிறார் என நினைக்கிறேன். நம்மை உருவாக்கிய இந்தச் சமூகத்துக்கு உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படும் நம் போன்றோருக்கு நல்லதொரு வழியையும் காட்டியிருக்கிறார். நாராயண மூர்த்தியாகவோ நந்தன் நிலேகனியாகவோ வரவேண்டுமென்று போன தலைமுறையில் நடுத்தர வர்க்கத்தினர் இத்தனை பேர் ஆசைப்பட்டிருக்க மாட்டார்கள். இன்று, நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைப்போர் கூட அவர்களைத்தான் முன்மாதிரியாக நினைக்கிறார்கள். நாட்டுக்கு உழைப்பதில் இது ஒரு புது விதம். ராபின் சர்மா சொல்லும் 'பட்டமில்லாத தலைவன்' (LEADER WITHOUT TITLE) போல.
'பத்து இருபது ஆண்டுகளுக்குப் பிடித்த தலைவனின் பின்னால் கலர்க் கலராய்க் கொடி பிடித்தலைந்து இளமையை வீணடிக்க வேண்டியதில்லை; குடும்பத்தை நடுத்தெருவில் விட்டுவிட்டு அரசியல் எதிரிகளிடமோ ஊழல் ஒப்பந்தக்காரனிடமோ உயிரை இழக்க வேண்டியதில்லை; சினிமாவிலிருந்து ஓய்வு பெரும் காலத்தில் அரசியல் கட்சி ஆரம்பிப்பதை மனதில் வைத்து சினிமாவில் சேர்ந்து மக்களைக் கவரும் வகையில் நடிக்கச் சிரமப்பட வேண்டியதில்லை; கொல்லை வாசல் வழியாக உள்ளே வருவதற்கு கொள்ளைக்கார அரசியல்வாதியின் வீட்டில் வாரிசாகப் பிறந்திருக்க வேண்டியதில்லை; அரசியல் வாரிசுகளை மனம் மயக்கவோ மணம் முடிக்கவோ வேண்டியதில்லை; உன் வேலை எதுவோ அதை ஒழுங்காகச் செய்து வெற்றி பெறு - அப்படியே சுற்றி நடக்கும் எல்லாத்தையும் உண்மையான அக்கறையோடு கவனித்துக் கொண்டு வா - டவுசர் போடும் காலத்திலிருந்தே இந்தச் சமூகத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டவன் என்று சொல்வோர் கூடச் செய்ய முடியாத அளவுக்குச் செய்யக் கூடிய நாள் ஒன்று உன் கைக்கு வரும்!'. இதுதான் இந்த நூலைப் படித்து முடித்த போது எனக்குக் கிடைத்த மறைமுகமான புத்திமதி.
இப்போதுதான் அவருடைய நூலைப் படித்து முடித்திருக்கிறேன் என்பதால் என்னுடைய சிந்தனையிலும் அவருடைய தாக்கம் நிறைய இருக்கும். பரவாயில்லை. அதை அவருடைய நூலின் சாராம்சமாகக் கொண்டாலும் ஒன்றும் தவறில்லை.
சம்பு எப்படி? ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள சில தலைகளைப் பற்றிய சென்ற இடுகையைப் படித்து விட்டு, "இந்த நாடு எதிர் நோக்கியிருக்கும் இன்றைய பிரச்சனைகள் பற்றி ஏன் ஓர் இடுகை இடக்கூடாது?!" என்றான். அதன் விளைவே இது.
விளைவு எங்கே?
அது அடுத்த இடுகையில் வரும்.
விளைவு எங்கே?
அது அடுத்த இடுகையில் வரும்.
good one
பதிலளிநீக்குNandri nanba!
பதிலளிநீக்கு