கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (2/6)

இதர சோலிகள்
நான் முன்பு சொன்னது போல, எங்கள் கல்லூரி படிப்பில் மட்டுமல்லாது எல்லாத்திலும் பட்டையைக் கிளப்பும் கல்லூரி. விளையாட்டிலும் நிறைய வீரர்களை உருவாக்கிய கல்லூரி. பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உருவாக்கியிருக்கிறது. அதற்கென்று ஒரு மன்றம் இருக்கிறது. இலக்கிய ஈடுபாடுகள் உள்ளோருக்கும் ஓரளவு தீனி போடும் சூழல் அங்கிருந்தது. எனக்கும் கொஞ்சம் கவிதை - கதை எழுதும் வேலைகளில் ஆர்வம் இருந்தது. இது போன்ற வேலைகளில் ஆர்வம் இருக்கும் எல்லோருமே எங்கு சென்றாலும் எடுத்தவுடனேயே தன் திறமையை எல்லோருக்கும் காட்டி விட வேண்டும் என்று வாய்ப்புக்காகக் காத்திருப்பார்கள். வந்தவுடன் கவ்விப் பிடித்துத் தான் யார் என்பதைக் காட்டி விடுவார்கள். அப்படி வாய்ப்பு வராவிட்டாலும் எல்லோரிடமும் தன் திறமை பற்றி ஊதி ஊதிப் பெரிதாக்கிப் பேசிக் கொண்டிருப்பார்கள். நானும் அதைச் செய்தேன்.

பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் போது கவிதை என்ற பெயரில் நாலு வரியில் எதையோ எழுதிக் கொடுக்க அதைப் பள்ளியின் ஆண்டிதழில் வெளியிட்டு விட்டார்கள். நாலு வரி எழுதிய நாமே இந்த ஆட்டம் போட்டோமே, நாற்பது வரிகள் எல்லாம் எழுதியவர்கள் எவ்வளவு ஆட்டம் போட்டிருப்பார்கள்; சினிமாவில் பாட்டெழுத வாய்ப்புக் கேட்டு நேராகச் சென்னைக்கே சென்றிருப்பார்களோ என்று தோன்றும். அந்தப் பள்ளி ஆண்டிதழை கையிலேயே வைத்துக் கொண்டு, இருந்த இரண்டு மாத விடுமுறையில் எல்லோரிடமும் அதைக் காட்டுவதே ஒரு முக்கியப் பணியாகச் செய்து கொண்டிருந்தேன். கல்லூரியில் சேர வரும்போதும் அதைக் கையிலேயே எடுத்துக் கொண்டு வந்திருந்தேன். முதல் நாள் முதல் அது பற்றி அறிமுகம் செய்து கொண்ட எல்லோரிடமும் சொல்லிக் கொண்டும் இருந்தேன். சிலர், "ஓ! நீ அந்தக் க்ரூப்பா?" என்பது போல நோக்கி விட்டு ஒதுங்கிக் கொள்வார்கள். சிலர் "ஏய், இவன் திறமைசாலியாம்ப்பா..." என்று அங்கங்கே அறிமுகம் செய்து வைப்பார்கள். அவர்களை நம்பித்தானே நாம் கடை விரித்ததே. அதில் ஒரு முக்கியமான ஆள் என் வகுப்புத் தோழன் மதுசூதனன்.

அந்த அறிமுகம்தான் அடுத்து முதல் வாய்ப்பை வாசல்ப் படிக்குக் கொண்டு வரும். அப்படி வந்த முதல் வாய்ப்பு - கல்லூரியில் வந்தது. தற்காலிகமாகப் பணியாற்ற வந்திருந்த ராஜேஷ் எனும் ஆசிரியர் ஒருவர் தன் பணிக்காலம் முடிந்து விடை பெற்றார். கணிப்பொறியியல்த் துறை சார்பாக அவருக்குப் பிரிவுபச்சார விழா ஏற்பாடு செய்தார்கள். அதில் மாணவர்கள் சார்பாக நாலு பேர் பேச வேண்டும் என்று சொல்லி முதலாமாண்டு மாணவன் ஒருவனும் வர வேண்டும் என்றார்கள். மதுசூதனன் பட படவென வேலையை ஆரம்பித்தான். "ஏய், இவன் கவிதையெல்லாம் எழுதுவாம்ப்பா... மேடையில் எல்லாம் பேசுவானாம்..." என்று சுற்றியிருந்த நாலு பேரிடம் சொன்னான். அப்ப, இவன்தான் முதலாமாண்டு சார்பாகப் பேசப் போவது என்று முடிவு செய்தார்கள். "வேண்டாம்... வேண்டாம்..." என்று வெளியில் சொல்லிக் கொண்டு, "வேண்டும்... வேண்டும்..." என்று உள்ளே சொல்லிக் கொண்டு, பேச ஒத்துக் கொண்டேன். பேசி முடித்ததும் எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி. "கணிப்பொறித் துறையில் பொதுவாகப் படிப்பாளிகள் தான் வருவார்கள். இந்த மாதிரி ஆட்கள் கிடைப்பது அரிது!" என்று எல்லோருமே பெருமைப் பட்டுக் கொண்டார்கள். எல்லோரும் பட்டார்களோ இல்லையோ, நான் பட்டேன். என்னை விடப் பெருமை மதுசூதனுக்குத்தான். அவனும் ஓரிரு மாதங்களிலேயே பொறியியல் சீட் கிடைத்துப் போய் விட்டான். திருவில்லிப்புத்தூர்க்காரன். இப்போது எங்கிருக்கிறானோ தெரியவில்லை. இதெல்லாம் அவனுக்கு நினைவிருக்குமா என்றும் தெரியவில்லை. அது போல நிறையப் பேர் பாதியிலும் போனார்கள். அப்படிப் போனவர்கள் கிட்டத்தட்ட பத்துப் பேர் இருக்கும். இந்த அறிமுகத்தோடு அடுத்து கல்லூரிக்குள் நடந்த எல்லா இலக்கிய விழாக்களிலும் முதல் ஆளாகப் போய் நின்றேன். எங்கும் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

திருவள்ளுவர் மன்றம், காந்தியச் சிந்தனை மன்றம், எழுத்தாளர் மன்றம் (தமிழுக்குத் தனி; ஆங்கிலத்துக்குத் தனி!), இரத்ததானக் கழகம், மதிப்பீட்டுக் கல்விக்கென்று ஒரு சங்கம் (VALUE EDUCATION CLUB) என்று பல கழகங்கள் - சங்கங்கள். எல்லாத்திலும் எழுதிப் போட்டு உறுப்பினர் ஆகி விட்டேன். இரண்டாம் ஆண்டில் துணைச் செயலராகவும் மூன்றாம் ஆண்டில் செயலராகவும் ஆக வேண்டுமே. அதன்படியே சில கழகங்களில் நடக்கவும் செய்தது. காந்தியச் சிந்தனை மன்றத்தில் பல கருத்தரங்கங்களும் பேச்சுப் போட்டிகளும் கட்டுரைப் போட்டிகளும் நடத்தப் படும். எங்கள் முன்னாள் முதல்வர் முனைவர். கனகசபாபதி அவர்களும் எங்கள் காலத்தில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற முனைவர் மா. பா. குருசாமி அவர்களும் தீவிர காந்திய வாதிகள். காந்தி பற்றி பல நூல்கள் எழுதியவர் இரண்டாமவர். மொத்தம் நூறு நூல்களுக்கும் மேல் எழுதியவர். இருந்த இரண்டு விடுதிகளில் ஒன்றின் பெயர் காந்தி விடுதி. இன்னொன்று மெயின் விடுதி - நாங்கள் இருந்தது.

மதிப்பீட்டுக் கல்வி என்பது வாரம் இரண்டு நாட்கள் (புதன், வியாழன் என்று நினைக்கிறேன்) காலையில் கல்லூரி ஆரம்பிக்கும் முன் ஒரு மணி நேரம் பேச்சாற்றல் மிக்க பேராசிரியர் ஒருவரை அழைத்து வந்து உரையாற்ற வைப்பார்கள். சில நேரங்களில் வெளியில் இருந்தும் யாராவது அழைத்து வரப்படுவதுண்டு. ஆண்டில் ஓரிரு வாய்ப்புகள் மாணவர்களில் சிலருக்கும் வழங்கப் படுவதுண்டு. அந்த வாய்ப்பும் ஒரு முறை கிடைத்தது. இதில் வாழ்க்கைக்குத் தேவையான ஏதாவதொரு கருத்தை எடுத்துக் கொண்டு உரையாற்ற வேண்டும். எது பற்றிப் பேசினேன் என்று நினைவில்லை. எப்படியும் ஆண்டுக்குப் பத்துப் போட்டிகள் நடக்கும். எல்லாத்திலும் கலந்து கொண்டு இரண்டாவது வந்தால்தான் அடுத்த போட்டி வரை தூக்கம் வரும். நமக்கு முதலிடம் மட்டும் எப்போதுமே கிடைக்காது. இரண்டாமிடத்துக்கே பிறந்தோமோ என்று தோன்றும். முதலிடத்துக்கு மட்டும் வெவ்வேறு ஆட்கள் புதிது புதிதாக வருவார்கள். அவர்களே மூன்றாம் இடத்துக்கும் கூடப் போவார்கள். அந்த மூன்று ஆண்டுகளும் இரண்டாம் இடம் மட்டும் எனக்காகவே இருந்தது போல இருந்தது. நம்ம வாழ்க்கையும் நெடுஞ்செழியன்-அன்பழகன் மாதிரியே வீணாய்ப் போய் விடுமோ என்று கூடச் சில நேரங்களில் வருத்தப் பட்டிருக்கிறேன்.

கல்லூரியில் 'கேம்பஸ் நியூஸ்' என்ற அரையாண்டிதழ் ஒன்று வெளிவரும். அதன் ஆசிரியர் குழுவிலும் இடம் பிடித்து விட்டேன். "இதே வேலையாக அலைந்தான் என்பது அப்போதே தெரியும்; ஆனாலும் இவ்வளவு கிறுக்காகவா திரிந்தான் மனுஷன்!" என்று இப்போது இதைப் படிக்கும் என் நண்பர்கள் ஆச்சரியப் படுவார்கள் என்றே நினைக்கிறேன். ஒவ்வொருத்தருக்கு ஒரு கிறுக்கு. நமக்கு இந்தக் கிறுக்கு. பின்னர் ஒரு காலத்தில் அதை எல்லாம் அப்படியே மறந்து விட்டு ஒரு வாழ்க்கை வாழவும் நேர்ந்தது பத்து வருடங்களுக்கு. இதில் ஒரே ஒரு குறை என்னவென்றால், நமக்குக் காதல்க் கவிதையெல்லாம் வரவே வராது. அதற்கான தேவையும் இருக்கவே இல்லை. தீவிர சமூகச் சிந்தனையாளன் என்று பறை சாற்றிக் கொள்வதிலேயே பெரும் பெருமை. அன்றைய நிலையில், 'கவிஞர்கள்தாம் இந்த உலகத்திலேயே சிறந்த அறிவாளிகள்; நாட்டையும் உலகையும் நல்வழியில் நடத்திச் செல்லக் கூடிய ஒரே தகுதியாளர்கள் அவர்களே!' என்று தீவிரமாக நம்பினேன். இப்போதுதான் புரிகிறது - அவர்களிடம் பேனா - பேப்பர் தவிர வேறு எதையும் கொடுத்து விடக் கூடாது என்று. இது போன்ற சோலிகளில் தீவிரமாகத் திரிந்ததால் கணிப்பொறித் துறையில் இருந்த பேராசிரியர்களை விட தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் எல்லோருமே எனக்கு மிக நெருக்கம். என் மீது நிறையப் பாசமாக இருப்பார்கள். 

இப்போது தமிழ்த் துறைத் தலைவராக இருக்கும் கண்ணன் சார் ஒருநாள் வகுப்பிலேயே வைத்துச் சொன்னார் - "மூன்றாமாண்டு முடிந்ததும் உனக்கு எங்கு வேலை கிடைக்குதோ இல்லையோ நாங்கள் ஒரு கடிதம் கொடுத்தால் தினத்தந்தியில் உனக்கொரு வேலை உறுதி!" என்று. அப்போது தமிழ்த் துறைத் தலைவராக இருந்த பண்பாளர் அப்துல் ரசாக் சார் (அவர் இறந்து போய் விட்டதாகக் கேள்விப் பட்டேன்!) எங்கள் வகுப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லாதவர். ஆனால், என்னோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பார். கல்லூரியில் நடந்த ஒரு பெரும் விழாவில் ஒரு நீண்ட கவிதையை வாசித்து, "ஒவ்வொருவருக்கும் ஒரு கவிதை பிடிக்கும். இதுவரை நான் படித்த கவிதைகளிலேயே எனக்குப் பிடித்த கவிதை இதுதான். இதை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?" என்று கேட்டு நிறுத்தினார். எல்லோரும் விழித்தார்கள். "அவர் இங்குதான் இருக்கிறார்... பாரதிராஜா! எழுந்திரியுங்கள்!" என்று என்னை உணர்ச்சிக் கடலில் தொபுக்கடீன்னு குதிக்க வைத்துத் திண்டாட வைத்தார் ஒருநாள். அவருடைய பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். மனிதர் மணிக்கணக்காகக் கட்டிப் போடும் மாதிரிப் பேசுவார். எல்லாவற்றுக்கும் மேல், ஒரு பரிசுத்தமான பிழைப்புவாதியாக இல்லாமல், இடையில் ஏற்பட்ட பத்து வருட இடைவெளியையும் தாண்டி, கொஞ்சம் கொஞ்சம் எழுத்திலும் பேச்சிலும் அரசியலிலும் பொதுச் சோலிகளிலும் இன்று இருக்கும் ஆர்வம் அங்கே பெருமளவில் நீரூற்றி வளர்க்கப் பட்டது. அதை ஆயுள் முழுக்கவும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

இரத்ததானக் கழகம்
இரத்ததானம் என்பது அவ்வளவாக எல்லோரும் முன்வந்து செய்கிற வேலையாக இல்லாத காலத்திலேயே அதற்கென்று ஒரு கழகம் அமைத்து, முதலாண்டில் பத்துப் பதினைந்து பேரில் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, நான் மூன்றாம் ஆண்டு படித்த ஆண்டில் இருநூறு பேராக ஆகி இருந்தது. இப்போது ஆயிரத்தைத் தாண்டி இருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அந்தப் பகுதியில் மூன்று மாவட்டங்களில் (தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள்) எங்கு யாருக்கு இரத்தம் தேவைப் பட்டாலும் அங்கே இருந்துதான் ஓரிரு மாணவர்கள் போவார்கள். சில நேரங்களில் அம்மாவட்டங்களுக்கு வெளியிலும் சென்று அளித்து வருவார்கள். கேரளாவுக்கும் பலர் சென்று வந்திருக்கிறார்கள். நானும் ஒருமுறை நாகர்கோவில் போய் வந்தேன். அந்தப் பகுதியிலேயே இரத்ததானம் என்கிற ஓர் அருமையான பணியை எளிதாக்கிக் காட்டிய பெருமை எங்கள் கல்லூரிக்கே சாரும் என்றெண்ணுகிறேன்.

இரண்டாம் ஆண்டில் இருக்கும்போது இந்தக் கழகத்துக்கு ரூபஸ் அண்ணன் (அவர் பற்றி பல பத்திகள் பின்னர் எழுத இருக்கிறேன்!) செயலராக இருந்தார். அவருடனேயே திரிந்து, மூன்றாம் ஆண்டில் அந்தப் பொறுப்பை அப்படியே கவ்விக் கொண்டேன். மற்ற எல்லாக் கழகங்களை விடவும் இதில் ஒரு கூடுதல்க் கண் இருந்தது. இப்படியொரு புனிதமான பணியில் இணைத்துக் கொள்வது எவ்வளவு புண்ணியம்? விடலாமா? வழக்கமாக விடுதியில் தங்கிப் படிக்கும் ஆங்கில இலக்கிய மாணவர்களே அந்தப் பொறுப்புக்கு வருவார்கள். அந்த ஆண்டு என் மிதமிஞ்சிய ஆர்வம் காரணமாக ஆங்கில இலக்கிய வெளி மாணவன் ஒருவனும் நானும் அதைப் பகிர்ந்து கொண்டோம்.

இப்படி இரத்ததானம் செய்வதில் பல்வேறுபட்ட அனுபவங்களும் எங்களுக்குக் கிடைத்தது. ஒரு பெரியவர் வந்து தன் சாதிப் பையன் ஒருவனை அனுப்ப முடியுமா என்று கேட்டார். "யோவ், உனக்கு இரத்தம் கொடுக்க ஆள் கிடைப்பதே பெரிய விஷயம். இதில் இது வேறயா?" என்று எங்கள் பேராசிரியர் கிழித்த கிழியை வாங்கிக் கொண்டு அனுப்பிய பையனை அழைத்துக் கொண்டு போனார். அப்புறம் சில மாதங்கள் கழித்து வந்து, "என் தம்பியைப் பார்க்க வேண்டும்!" என்றாராம். அதையெல்லாம் கேள்விப் பட்டபோது 'அடப்பாவிகளா, இப்படியும் ஆட்கள் இன்னும் திரிகிறீர்களா?' என்று ஆச்சரியப் பட்டிருக்கிறேன். அப்படி இரத்தம் கொடுக்க வரும் பையனுக்கு, பயணச் செலவு போக, ஒரு பைசா கூட கையில் கொடுக்கக் கூடாது என்பது நாங்கள் கறாராகச் சொல்வது. "நல்ல சாப்பாடு வாங்கிப் போடுங்கள், ஹார்லிக்ஸ் மாதிரி ஏதாவது வாங்கிக் கொடுங்கள், அவ்வளவுதான்!" என்று சொல்லியே அனுப்புவோம். மாணவர்களும் அதை அவ்வளவு ஆர்வமாகச் செய்வார்கள். அதனாலேயே வெளியில் எங்களவர்கள் அப்படி-இப்படி ஏதாவது சலம்பல் செய்தாலும் மக்கள் எளிதாக எடுத்துக் கொள்வார்கள். அன்றைய காலகட்டத்தில் இரத்தம் கொடுத்தல் உயிர் கொடுத்தல் போல.

அது தவிர, இரத்தம் கொடுத்தால் ஆண்டிறுதியில் ஒரு சான்றிதழ் கொடுப்போம். அரை நாள் விடுப்பு கிடைக்கும். கல்லூரியில் வரும் பத்திரிகைகளில் பெயர் வரும். அதைத் தவிர வேறு எதுவுமே கிடையாது. இது எதுவுமே அப்படி இரத்தம் கொடுக்கப் போனவர்களுக்கு ஒரு பெரிய விஷயமாக இருந்திராது. ஒரு மகிழ்ச்சி - திருப்தி - பெருமை. அவ்வளவே. அதிலும் சிலர் ஒவ்வொரு முறையும் சரியாக மூன்று மாதம் முடிந்ததும் தயாராக உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். "அடுத்து எப்பப்பா? நம்ம ஊர்ப்பக்கம் ஏதாவது வந்தால் சொல்லு மக்கா!" என்பார்கள். மூன்று வருடத்தில் பத்துமுறை கொடுத்தவர்களும் உண்டு. அதில் ஒரு சுகம். கொடுத்தலும் சுகம்! நல்லவர்-கெட்டவர் எல்லோருமே இந்த விஷயத்தில் நல்லவர்களாக இருப்பார்கள். அந்தப் பழக்கத்தைக் கல்லூரியை விட்டு வெளியேறிய பின்பும் அவர்கள் சென்று சேரும் இடங்களில் பரப்பியிருப்பார்கள் - பரப்புவார்கள் என்றே நம்புகிறேன். அதென்ன சாதாரணப் பணியா என்ன?

அக்காக்களும் அண்ணன்களும்
எங்கள் கல்லூரி ஓர் ஆண்கள் கல்லூரி. முழுக்க முழுக்க ஆண்கள் கல்லூரி என்று சொல்ல முடியாது. கொஞ்சம் அக்காக்கள் இருந்தார்கள். அக்காக்கள்? முதுகலை பொருளியல் (M.A. ECONOMICS), முதுகலை ஆங்கிலம் (M.A. ENGLISH) மற்றும் முதுமறிவியல் கணிதம் (M.SC. MATHEMATICS) ஆகிய மூன்று முதியோருக்கான(!) வகுப்புகள் இருந்தன. அவ்வகுப்புகளில் மட்டும்  பெண்கள் உண்டு. பெண்கள் இல்லாத வாழ்க்கை கண்கள் இல்லாத வாழ்க்கை என்று நம்பும் எம்மவர்கள் மட்டும் அக்காக்களை எப்படியும் பேசிப் பழகி விடுவார்கள். 'யாருக்காவது (பெண்களுக்குத்தான்) தம்பியாக இராவிட்டால் என்னால் மூச்சே விடமுடியாது' என்பவர்கள் அவர்கள். ராக்கி காட்டப்படும் நாட்களில் இவர்கள் நாயகர்களாக வலம் வருவார்கள். 'இருந்திருந்தும் தம்பியாகவா இருப்பது? கருமம்!' என்று கோபப் படுபவர்களுக்கு இருக்கிறது திருச்செந்தூர் பேருந்து நிலையம், செந்திலாண்டவன் கோவில் மற்றும் கோவிலுக்கு முன்னால் இருக்கும் கடற்கரை. ஒரு சாரார் ஒருநாள் கூட விடாமல் தினமும் மாலை ஒருமுறை போய் இந்த மூன்று இடங்களிலும் இருக்கிற வெளியூர்ப் பிள்ளைகளுக்கு முகத்தைக் காட்டாமல் விட்டு விட்டால் அன்று இரவெல்லாம் தூங்க முடியாமல் துடித்துக் கொண்டிருப்பார்கள்.

எழுதுவது நானாக இருப்பதால் என்னை நல்ல பையனாகக் காட்டிக் கொள்ள இருக்கும் வாய்ப்பை விடக் கூடாதல்லவா? இருந்த மூன்று வருடத்தில் ஒரு நாள் கூட செந்திலாண்டவனைப் போய்ப் பார்த்ததில்லை. மொத்தம் பத்துத் தடவை கூடக் கோயில் முன்னால் இருக்கும் கடற்கரைக்குப் போனதில்லை. ஊருக்குப் போகும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் பேருந்து நிலையத்தை எட்டிக் கூடப் பார்த்ததில்லை. முக்கியமாக, எனக்கு அக்காக்களும் இருக்க வில்லை. அதில் ஒரு கூச்சம். அந்தக் கூச்சத்தை விரட்டிய பெருமை பெங்களூரையே சேரும். அண்ணன்கள் மட்டுமே. அண்ணன்கள்? ஆம். சீனியர்களை "அண்ணே!" என்றுதான் அழைக்க வேண்டும். பல நேரங்களில் இது ஒரு பெரிய பிரச்சனையாகவே இருக்கும். முக்கியமாக இந்தச் சென்னைப் பக்கம் இருந்து வரும் பையன்கள் மறந்து மறந்து பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு மாட்டிக் கொள்வார்கள். 

இப்போது பெரியப்பா வயதுப் பெரியவர்களையே பெயர் சொல்லிக் கொண்டிருக்கும் பண்பாட்டுக்குள் நுழைந்து விட்டபின்பு அதெல்லாம் கொடுமையாகத் தெரிகிறது. ஆனால், இன்னமும் அந்தப் பண்பாடு பிடிக்கத்தான் செய்கிறது. அது அந்த மண்ணின் பண்பாடு. அங்கே இருக்கும்போது அப்படி இருப்பதுதான் சரியாகப் படுகிறது. இங்கே வந்து எங்கள் மேனேஜரை "அண்ணே!" என்றால் அது எவ்வளவு விகாரமாக இருக்குமோ அவ்வளவு விகாரமாக இருக்கும் அங்கே உள்ள சீனியரைப் பெயர் சொல்லி அழைப்பது. இதில் கொடுமை என்னவென்றால், பள்ளி வாழ்க்கையில் ஒரு பிடிப்பு காரணமாக ஓரிரு வருடங்கள் கூடுதலாக ஓட்டி விட்டவர்கள், வயதில் சிறியவர்களைக் கூட கல்லூரியில் சீனியர் என்ற ஒரே காரணத்துக்காக "அண்ணே!" என்றழைக்க வேண்டும். அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எல்லோருமே அந்தப் பண்பாட்டுக்குக் கட்டுப் படுவதுதான் அதிலிருந்த அழகு.

இதில் எனக்கு மனதில் நின்ற அண்ணன்மார் இருவர். இப்போதும் தொடர்பில் இருப்பவர்கள். இருவருமே நீதித் துறையோடு தொடர்பு கொண்டவர்கள். ஒருவர் அண்ணன் மாரியப்பா. இவர் ஒரு நீதிபதியின் கணவனாக இருக்கிறார். இன்னொருவர் ரூபஸ் அண்ணன். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். இருவருமே மோகன் ராம் அண்ணனின் நெருங்கிய நண்பர்கள். அதில்தானே எல்லாம் ஆரம்பம். மாரியப்பா கணிப்பொறியியல் சீனியர். தென்காசிக் காரர். முதலாண்டு முதலே இரண்டு ஆண்டுகள் முழுக்க முழுக்க ஒன்றாகவே அலைந்து திரிந்தோம். காலையிலும் மாலையிலும் கடற்கரையோரம் வேலிக்காட்டுப் பக்கம் நடைப் பயணம் செல்வது முதல் சனி-ஞாயிறுகளில் வெளியில் சுற்றுவது வரை எல்லாமே இவரோடுதான். பேசாத பேச்சில்லை; கதைகள் இல்லை. 

இன்னொருவர்? அவரைப் பற்றி நிறையவே பேச வேண்டியுள்ளது. எனவே, அடுத்த பாகத்தில் விரிவாகப் பேசுவோம். :)

-தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்