அறிஞத் தமிழ்

ஒவ்வொரு மொழியிலும் ஏகப்பட்ட கிளைமொழிகளும் வட்டார வழக்குகளும் உள்ளன. தமிழிலும் அப்படிப் பல தமிழ்கள் இருக்கின்றன. சென்னைத் தமிழ், மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், தஞ்சைத் தமிழ், நெல்லைத் தமிழ், குமரித் தமிழ் போன்று பல தமிழ்கள். இவை தவிர்த்து, சில இனத்தவருக்கென்று ஒவ்வொரு தமிழ் இருக்கிறது. நெல்லை-குமரித் தமிழ்களுக்குள்ளேயே நாடார்களுக்கு என்று சில தனித்துவமான வட்டார வழக்குகள் இருக்கின்றன. கொங்குத் தமிழுக்குள்ளேயே கவுண்டர்களுக்கென்று ஒரு வட்டார வழக்கு இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க இருக்கும் பிராமணர்களுக்கென்று ஒரு கிளைமொழி இருக்கிறது. பாலக்காட்டு ஐயர்களுக்கென்று வேறொரு கிளைமொழி இருக்கிறது. தமிழக-கேரள எல்லைக்கோடு கிழிக்கப் பட்ட பின் பாலக்காட்டு ஐயர்கள் பேசும் தமிழ் மென்மேலும் மலையாளப் பட்டு விட்டது. அது போலவே மைசூர்-மண்டியம் பகுதிகளில் இருக்கும் ஐயங்கார்கள் ஒரு கன்னடம் கலந்த தமிழ் வைத்திருக்கிறார்கள். அவர்களும் முடிந்த அளவு வேகமாகத் தம்மைக் கன்னடப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். எல்லைக்கு அந்தப் பக்கந்தான் எதிர்காலம் என்று உறுதியாகி விட்டபின் அதற்கேற்றபடி மாறிக்கொள்வதுதானே மனித இயல்பு. இதெல்லாம் ஒரு புறம் இருக்க, தமிழ் அறிவாளிகளுக்கென்று ஒரு தமிழ் உருவாகி வருவது போலப் படுகிறது.

இதுவும் எல்லாக் காலத்திலும் எல்லா மொழிகளிலுமே இருக்கிற ஒரு அம்சமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இதை நீண்ட காலமாகவே கவனித்துக் கொண்டும், வியந்து கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும், சில நேரங்களில் சகிக்க முடியாமல் துடித்துக் கொண்டும் இருந்து வருகிறேன். சில நேரங்களில் (குறிக்க-பல நேரங்களில் அல்ல, சில நேரங்களில்!) என் மீதும் இந்தக் குற்றச்சாட்டு வைக்கப் படுகிறது. "ஏன்யா, நீ பேசுறதெல்லாம் ஒனக்கே புரிஞ்சுதான் பேசுறியா? இல்ல, இப்பிடிப் பேசணும்னு யாராவது ஒனக்குச் சொல்லிக் குடுத்தாங்களா?" என்று கேட்பவர்களின் நியாயத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, இது பற்றி விரிவாகப் பேச வேண்டும் என்ற ஆசை ஒன்று இருந்து கொண்டே வந்தது. அது இன்று நிறைவேறுகிறது.

இதை யார் யார் பேசுகிறார்கள் என்று பார்த்தால், பெரும்பாலும் எழுத்தாளர்களும் அதீத வாசிப்பனுபவம் உடையவர்களும் பேசுகிறார்கள். எதையும் புரியாத மாதிரிப் பேசுவது ஒரு திறமையாகப் பார்க்கப் படுகிறது என்கிற குற்றச்சாட்டு ஒருபுறம் வைக்கப்பட்டாலும், எளிய மொழியில் சொல்ல முடியாத அளவுக்கு 'விஷயங்கள்' இருக்கின்றன என்ற உண்மையும் புரியத்தான் செய்கிறது. குறிப்பாக, நவீன உலகத்தின் மாற்றங்களில் இந்தியர்கள் அல்லது தமிழர்களாகிய நாம் முன்னின்று எதையும் வழிநடத்தவில்லை. ஏற்கனவே மேற்குலகம் கண்டு-காய்ச்சி-உண்டு-உறுதிப் படுத்தியவற்றைத்தான் நாம் மறுபயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

சமயம், வாழ்வியல் போன்றவை நாம் உலகுக்குச் சொல்லிக் கொடுத்தவை. அதனால் அவற்றை எளிமையாகப் பேச முடிகிற மொழி நம்மிடம் இருந்தது. மாறாக, இன்றைய பெரும்பாலான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் நம்முடையவை அல்ல. அதனால் அவர்களுடைய மொழியில் சொல்லப்படுபவற்றை நம் மொழிக்கேற்ற மாதிரி மாற்றிக் கொண்டு வந்து இறக்க வேண்டியுள்ளது. அப்படி இறக்குகையில் சிலர் அந்தந்த மொழியின் (பெரும்பாலும் ஆங்கிலம்) மூலச் சொற்களை அப்படியே பயன்படுத்தி விடுகிறோம்; வேறு சிலர் அதற்கான புதிய சொற்களைத் தமிழில் கண்டு பிடித்து அல்லது உருவாக்கி அல்லது உருமாற்றி அறிமுகப் படுத்துகிறார்கள். அதையே ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது அமைப்பு செய்வதில்லை. அப்படியொன்று இருந்தால் நல்லது. பலர் தத்தமக்குப் பிடித்த மாதிரிச் செய்து கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக, திராவிட இயக்கத்தினர், அவர்களுடைய தலைவர் கட்சி இதழ்களில் என்ன சொல்லைப் பயன்படுத்துகிறாரோ அதைப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். முற்போக்குவாதிகள், அவர்கள் தொடர்ந்து வாசிக்கும் எழுத்தாளர்களின் சொற்களைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். சில சமயத்தவர்கள் அவர்களுக்கென்று ஒரு விதம் வைத்திருக்கிறார்கள். இப்படிப் பல்வேறு சாராரால் வேற்று மொழிச் சொற்கள் தமிழ்ப்படுத்தப் படும் வேளைகளில் ஏற்படுகிற தாக்கங்களால் உருவான மொழிதான் இந்த அறிஞத் தமிழ்.

பணக்காரன் ஆக விரும்புபவன், தன் கண் முன்னால் இருக்கும் பணக்காரன் எப்படியெல்லாம் பணத்தைப் பயன்படுத்துகிறான் என்று பார்த்துப் பழகிக் கொள்வதைப் போல, பெரும் பெரும் அறிஞர்களாக விரும்பும் எல்லோரும், தம் கண் முன்னால் இருக்கும் அறிஞர்கள் எப்படி அவர்களுடைய அறிவைப் பயன்படுத்துகிறார்கள், எப்படிப்பட்ட சொற்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று உற்று நோக்கி அது போலவே அறிவையும் சொற்களையும் பயன்படுத்தத் தொடங்குகிறோம். இது சிலருக்குத் தெரியாமல் நடக்கும் மாற்றம். சிலர் வலிந்தே முயன்று கொண்டு வருவது. எடுத்துக்காட்டாக, OBSERVATION என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான எளிய-ஒற்றைத் தமிழ்ச் சொல் நம்மிடம் இல்லை. சிலர் உற்று நோக்கல் என்றும், சிலர் கூர்ந்து நோக்கல் என்றும், சிலர் கவனித்தல் என்றும் ஆளுக்கொரு விதமாகச் சொல்லி வந்தோம். சமீப காலமாக அவதானிப்பு என்றொரு சொல்லை நிறையப் பேர் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இது வடமொழியில் இருந்து கூட்டிக் கொண்டு ஓடி வந்தது போலத் தெரிகிறது.

தமிழர்கள் நம்மிடம் இருக்கும் ஒரு பெரும் வசதி - வடமொழி போன்ற ஒரு வளமான மொழியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பது (அதைச் சகோதர மொழி என்கிறோமா, சக்களத்தி மொழி என்கிறோமா என்கிற சண்டைக்குள் இப்போது போக வேண்டியதில்லை!). ஆத்திர அவசரத்துக்கு, சரித்திரம், பூகோளம், இரசாயனம், பௌதீகம் என்று அள்ளிக் கொண்டு வந்து விடலாம். பின்னர், ஆற அமர உட்கார்ந்து அவற்றை ஒரு குழு அமைத்துத் தூய தமிழ்ப் படுத்திக் கொள்ளலாம். வரலாறு, புவியியல், வேதியியல், இயற்பியல் என்று. இன்னொரு குழுவினர், கோடிக் கணக்காகச் செலவழித்துக் குழு அமைத்து எல்லாத்தையும் தமிழ்ப் படுத்திய பின்னும், பழைய வடமொழிச் சொற்களையே பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் இரு சாரார். ஒன்று, 'பழக்கக் கோளாறு' காரணமாகத் தொடர்வோர் (அதையும் கூடப் 'பழக்க தோஷம்' என்றுதானே சொல்லி இருக்க வேண்டும் என்று வியப்பார்கள்!). அடுத்தது, இது போன்ற தமிழ்ப் படுத்தலை முழுமூச்சாகச் செய்த திராவிட இயக்கத்தவரை வேறு காரணங்களுக்காக வெறுத்தவர்கள், அவர்கள் ஈடுபட்ட-ஆதரித்த எல்லாத்தையும் வெறுக்கக் கிளம்பியவர்கள். அப்படித்தான் அவர்கள் விரும்பிய அல்லது விரும்பியது போலக் காட்டிக் கொண்ட தமிழையும் கூட வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். கருணாநிதியைப் பிடிக்காவிட்டால் அந்தக் கோபத்தைத் தமிழைத் திட்டிக் கழித்துக் கொள்வதும், சோவைப் பிடிக்காவிட்டால் அந்தக் கோபத்தை இந்து மதத்தையோ - பார்ப்பனர்களையோ திட்டிக் கழித்துக் கொள்வதும் தமிழ் நாட்டில் நீண்ட நெடுங்காலமாகவே நடந்து வருகிற கொடுமைதானே!

அது மட்டுமல்லாது, தமிழின் போக்கை நிர்ணயிக்கிற வேலையை, தமிழ்நாடு என்று பெயர் வைத்துக் கொண்டு அதற்குள் வாழும் தமிழர்களை விட ஈழத் தமிழர்கள் அதிகம் செய்கிறார்கள். அதற்குக் காரணம், மொழி சம்பந்தப் பட்ட விசயத்தில் நம்மை விட ஒருபடி மேலே அவர்கள் இருப்பதாக இருக்கலாம். அதனால், அவர்கள் நடையில் இருந்தும் பல சொற்கள் நமக்கு வந்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வழக்கம் என்று சொல்லிக் கொண்டிருந்த நிறையப் பேர் இப்போது வழமை வழமை என்று சொல்ல ஆரம்பித்து விட்டது கூட அப்படித்தான் என்று நினைக்கிறேன். இதில் வழக்கம் என்கிற சொல்லே தவறா? வழமைதான் சரியான சொல்லா? அல்லது வழக்கம் என்று சொன்னால் அவருக்கு அறிவாளித் தகுதி இல்லாமல் போய்விடுமா? ஒன்றும் புரியவில்லை. பழமைக்கும் பழக்கத்துக்கும் இருக்கிற வேறுபாடு வழமைக்கும் வழக்கத்துக்கும் இல்லையா?

அப்புறம், இந்த 'விஷயம்'கிற விஷயம். தமிழின் ஆகச் சிறந்த அறிவாளிகள் எல்லோருமே, "நீ நான்கு நாட்களுக்கு வாயையே திறக்கக் கூடாது!" என்றால் கூடச் சமாளித்துக் கொள்வார்கள் போல. ஆனால் 'விஷயம்' என்கிற சொல்லைச் சொல்லாமல் ஐந்து நிமிடங்கள் பேச வேண்டும் என்று சொன்னால் அவர்களால் முடியுமா என்று தெரியவில்லை. "இது ஒரு விஷயம்", "அது ஒரு விஷயம்", "அப்டின்னு ஒரு விஷயம்", "இப்டின்னு ஒரு விஷயம்"... அப்பப்பா... முடியலப்பா! நமக்கும் 'விஷயம்' இல்லாமல் ஒரு விஷயம் கூடப் பேச முடியவில்லை. இந்தச் சொல் தமிழ்ச் சொல்லாக இருக்க வாய்ப்பில்லை. அதை விடயம் என்று சொல்கிறார்கள். அதுவும் கூட வம்படியாகத் தமிழ்ப் படுத்திய சொல் போலத்தான் இருக்கிறதே ஒழிய, அத்தனை இயல்பாக இல்லை. இது வடமொழியிலோ பாரசீகத்திலோ இருந்து வந்திருக்கலாம் என்றாலும் இதன் பயன்பாடு நாம் ஆங்கிலம் அதிகம் பேசத் தொடங்கிய கடந்த இருபது-முப்பது ஆண்டுகளிற்தான் கூடியிருக்க வேண்டும் போற் தெரிகிறது. ஆங்கிலத்தில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் 'THING'-க்கான தமிழ்ச் சொல்தான் விஷயம். ஆங்கிலத்தைத் தழுவிய அறிவுப் புரட்சியாளர்களால் ஆரம்பித்து வைக்கப் பட்டு, அவர்களைப் பார்த்துத் தலையெடுக்கும் மொத்தச் சந்ததியும் இப்போது 'விஷய'த்துக்கு அடிமையாகிக் கிடக்கிறது என்பதே இப்போதைய விஷயம். இதுவரை இதைக் கவனித்திராவிட்டால், இன்று முதல் கவனிக்கத் தொடங்குங்கள். நான் சொல்ல வருவது புரியும்!

அது போலவே, அளவு என்பதை அளவீடு என்பதும், மதிப்பு என்பதை மதிப்பீடு என்பதும், காலம் என்று சொல்லத்தக்க இடங்களில் எல்லாம் காலகட்டம் காலகட்டம் என்றும் எளிமையான சொற்களைக் கூட முடிந்த அளவு கடுமையாக்கிக் கொடுமைப் படுத்துகிறார்கள் இந்த அறிஞர்கள்.

இவ்வறிஞர்களின் கொடுமைகளில் இன்னொரு முக்கியக் கொடுமையானது என்னவென்றால், எல்லாத்தையும் பன்மையிலேயே பேசுவது. அவர்கள் எப்போதும் தனியாகவே இருக்க மாட்டார்களோ என்னவோ. இந்த உலகத்தில் எதுவுமே தனிமையில் இல்லாதது போலப் பேசுவது. "பாவங்கள் செய்யக் கூடாது", "வாசிப்புகள் முக்கியம்", "கவலைகள் அதிகமாகி விட்டன", "கொண்டாட்டங்கள் கூடி விட்டன" என்று கள் அடித்து விட்டுப் பேசுவது போல எல்லாத்துக்கும் 'கள்' போட்டுப் பேசுகிறார்கள். தேவைப்படுகிற போது எவ்வளவு 'கள்' போட்டாலும் நமக்குப் பிரச்சனையில்லை. வெறும் போதைக்காகப் போடும்போதுதான் இடிக்கிறது.

அது போல, நல்ல தமிழில் மக்கள் என்று சொல்லாமல் ஜனங்கள் என்று சொல்வதைக் கேட்டாலே எனக்குக் காதே ஒரு மாதிரி வலிக்கும்.  ஜனங்கள் என்பது என்னவோ ஜந்துகள் என்று சொல்வது போல இருக்கிறது. நாடு என்ற சொல்லையே இல்லாமல் பண்ணுகிற மாதிரி தேசம், தேசம் என்று மோசம் செய்பவர்கள் ஒருபுறம். தமிழ் தேசியம் என்கிற சொல்லாடலே முழுமையாகத் தமிழா என்று தெரியவில்லை. தமிழ் நாட்டியம் என்றால் அதற்குப் பொருளே வேறு விதமாக வருகிறது. தமிழ் நாடியல் என்று சொல்லலாமோ?

இது போல ஏகப்பட்ட சொற்கள். சாதாரணமாக நினைப்பதைக் கூட அபிப்ராயம் என்பதும், தொலைக்காட்சிச் சேனல் ஒன்றில் ஒரு நாளைக்கு நான்கு தடவைகளாவது அமானுஷ்யம் அமானுஷ்யம் என்று போட்டுக் கொல்லுவதும், அப்பப்பா... முடியலப்பா! அதை மாயமான என்றோ புதிரான என்றோ முடியவே முடியாத பட்சத்தில் அமானுடம் என்றோ சொல்ல வேண்டியதுதானே!

நமக்குத்தான் ஒருவேளை இந்த 'ஷ்'களின் மீதான ஒவ்வாமை காரணமாக இப்படியொரு மனக்கோளாறோ என்றும் சந்தேகம் வருகிறது. எண்ணிலடங்கா ரமேஷ்களையும் சுரேஷ்களையும் கணேஷ்களையும் ராஜேஷ்களையும் கொண்டிருந்த தலைமுறையில் பிறந்து வளர்ந்ததாலும், 'ஷ்'-இல் முடிகிற பெயர்தான் வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்து 'ஷ்'-இல் ஆரம்பிக்கிற பெயர்தான் வேண்டும் என்று பரிணாம வளர்ச்சியடைந்த வேடிக்கைகளை எல்லாம் பார்த்து வளர்ந்ததாலும் ஏற்பட்ட ஒவ்வாமையாக இருக்கக் கூடும்!

கடைசியாகக் கடந்த இருபது ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிற மிகப் பெரும் மாற்றம், அறிவார்ந்த உரையாடல் என்றாலே அதில் அப்போதைக்கப்போது ஓரிரு வரிகள் ஆங்கிலத்தில் எடுத்து விட்டால்தான் அவரை நாமெல்லாம் ஏற்றுக் கொள்வோம் என்கிற மாதிரியான ஒரு மனவோட்டம் பலரிடம் இருப்பது போற் தெரிகிறது. பல 'விஷய'ங்களைத் தமிழில் சொல்வதை விட ஆங்கிலத்தில் சொல்வதுதான் எளிதாக இருக்கிறது என்பதும் புரிகிறது. ஆங்கில நூல்களில் படித்து அல்லது தமிழர் அல்லாதோரிடமும் உரையாடிப் பெற்ற அறிவென்பதால் இயல்பாகவே அதுதான் வருகிறது என்பதும் புரிகிறது. ஆனால் எது நெருடுகிறது என்றால், இயல்பாகவே நல்ல தமிழில் பேசும் அறிஞர் பெருமக்கள் கூடப் பலர், வலிந்து முயன்று ஆங்கிலம் கலந்து பேச வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டு விட்டார்களோ என்று தோன்றும்படியாகப் பேசுவதுதான்.

அறிஞர் ஒருவர், எளிமையான மொழி பேசுவோரையும் தன் பக்கம் - தன் சிந்தனையின் பக்கம் - தன் மொழியின் பக்கம் - இழுத்து வருகிற மாதிரிப் பேச முடிந்தால் பிரச்சனையில்லை. அது நல்லதே. ஆனால், அந்த மொழி ஒன்றே எளிய மனிதர்களைத் தன்னை விட்டுத் தூர விரட்டும் ஆற்றல் படைத்ததாய் இருந்தால், எளிய மனிதர்களோடு உரையாடும் வாய்ப்பைத் தன்னிடம் இருந்து பறிப்பதாய் இருந்தால், இழப்பது பிறர் அல்ல, தானே என்பதை மட்டும் உணர்ந்து ஒவ்வொரு அறிஞரும் தம் மொழியை ஊட்டி வளர்த்தால் அறிஞர்க்கும் அவர் சார்ந்த சமூகத்துக்கும் நலம்! சரிதானே?!

கருத்துகள்

  1. சரிதான், ஆனால் முழுமையாக தமிழிலும் பேசமுடியாமல் ,முழுமையான ஆங்கிலத்திலும் பேசமுடியாமல் திண்டாடுகிற இன்றைய தலைமுறைக்கு என்ன பதில்,யார் பொறுப்பு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ ஒரு பக்கம் முழுமையாகப் போயாக வேண்டிய கட்டாயம் ஒருநாள் வரத்தான் செய்யும். அதுவே பதில். யார் பொறுப்பு? விதிதான். வெள்ளைக்காரர்கள் வந்து அடிமைப் படுத்தி விட்டுப் போனதும், அடிமைகள் இன்னும் அதிலிருந்து மீளாமல் இருப்பதும் யார் குற்றம்? அவர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்கள் மொழியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். காலந்தான் பதில் சொல்ல வேண்டும் இதற்கெல்லாம்.

      நீக்கு
  2. பாரதீச்சுடர் - அறிஞத் தமிழ் - தமிழின் போக்கை நிர்ணயிக்கிற வேலையை, தமிழ்நாடு என்று பெயர் வைத்துக் கொண்டு அதற்குள் வாழும் தமிழர்களை விட ஈழத் தமிழர்கள் அதிகம் செய்கிறார்கள். அதற்குக் காரணம், மொழி சம்பந்தப் பட்ட விசயத்தில் நம்மை விட ஒருபடி மேலே அவர்கள் இருப்பதாக இருக்கலாம். = அருமையான பதிவு. மிகவும் யோசிக்க வைக்கும் பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Bharathiraja R

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாட்களுக்குப் பின் வருகை தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி, ஐயா.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி