கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 12/12

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

அதற்கடுத்த வாரமே ஊரைக் காலி செய்து கிளம்ப வேண்டியதாகி விட்டதால் அருங்காட்சியகத்துக்குப் பிறகு வேறெங்கும் செல்லத் திட்டமிடவில்லை. அலுவலகமும் வீடும் மட்டும்தான். அலுவலகத்திலும் சில விஷயங்களைக் கண்டு வியக்க முடிந்தது. சாப்ட்வேர் துறையில் இந்தியர்களே மிகுந்திருப்பதால் நிறைய வெள்ளைக்காரர்களுடன் பேசிப் பழகவெல்லாம் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருக்கிற இந்தியர்களையாவது வேடிக்கை பார்க்கலாம் என்று கவனித்துப் பார்த்ததில் சில சிறு சிறு சுவாரசியங்களை உணர முடிந்தது. அப்படியான ஒன்று, நம்ம ஊர்ப் பெண்களில் ஒரு பெண் கூட தலையில் சடைப் போட்டுப் பார்க்க முடியவில்லை. வெளிநாடு போனாலே தன்னைப் போலவே தன் தலைமுடியையும் சுதந்திரமாகப் பறக்க விட்டு விட வேண்டும் என்பது எழுதப் படாத சட்டம் போலும். ஆனால், வேடிக்கை என்னவென்றால், சடைப் போட்ட வெள்ளைக்காரப் பெண்கள் பல பேரைப் பார்க்க முடிந்தது அங்கே. எங்கள் அலுவலக நுழைவிலேயே மிக அழகாக ஒரு வெள்ளைக்காரப் பெண் தினமும் - ஒரு நாள் இரு நாள் என்றில்லை - தினமும் - சடைப் போட்ட தலையோடு உட்கார்ந்து வரவேற்றுக் கொண்டிருப்பாள்.

அது மட்டுமில்லை, சென்ற முதல் வாரத்தில் கிராய்டனில் பார்த்த சுடிதார் அணிந்த ஓர் ஈழப் பெண் தவிர்த்து, இந்தியப் பெண்களில் ஒருத்தர் கூட சுடிதாரோ சேலையோ அணிந்து பார்க்க முடியவில்லை. வேட்டி கட்டிய தமிழரையும் பார்க்கவில்லை. இதில் வியப்பேதும் இல்லை என்பதை நான் அறிவேன். அப்படியும் ஒருவரையாவது பார்த்து விட வேண்டும் என்று நான் பேராசைப் பட்டதுதான் வியப்பு. ஒருவேளை அங்கேயே ஏதாவது பண்டிகைகள் கொண்டாடும் போது அல்லது கோவிலுக்குப் போகும் போது அதெல்லாம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

தமிழர்க்கு ஈஸ்ட் ஹாம் போல குஜராத்தியருக்கு பஞ்சாபியருக்கு என்றும் நிறைய இடங்கள் இருப்பதாகக் கேள்வி. ஈஸ்ட் ஹாமில் கூடப் பாகிஸ்தானியரும் வங்க தேசத்தவரும் அதிகம் என்று கேள்விப் பட்டேன். அதெல்லாம் பெரிதில்லை. சைனா டவுண் என்றோர் இடம் வேறு இருக்கிறது. அந்தப் பகுதிக்குள் நுழைந்தால் ஒரே சீன முகங்கள்தாம்.

சனிக்கிழமை பெட்டியைக் கட்டவும், ஊருக்கு வந்ததும் விநியோகம் செய்ய வேண்டிய அளவுக்கு சாக்லேட்டுகள் வாங்கவும் நேரம் சரியாயிருந்தது. இரவெல்லாம் விழித்துக் கூட பெட்டி கட்டும் வேலை செய்து தீர்த்தோம். ஞாயிற்றுக் கிழமை காலை நண்பன் ஒருவனால் ஏற்பாடு செய்யப் பட்ட டாக்சியில் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டோம். இந்திய முகமும் முஸ்லிம் தாடியும் பெயரும் கொண்ட ஓட்டுனரிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் போல் இருந்தது. "எந்த ஊர்?" என்றதும், ஒரு மாதிரியாக முகத்தை வைத்துக் கொண்டு, "பாகிஸ்தான்!" என்று சொல்லி உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வை, 'இந்தியா என்று சொல்வேனென்று எதிர் பார்த்து ஏமாந்து விட்டாயா?!' என்று கேட்கிற மாதிரி இருந்தது. அவர் சற்றும் எதிர் பாராத விதமாக, "வாவ்! பாகிஸ்தானில் எந்தப் பகுதி?" என்றேன். மகிழ்ச்சியாகி விட்டார். 'உங்கள் அனைவரையும் வெறுக்கும் எங்களவர்களும் எங்கள் அனைவரையும் வெறுக்கும் உங்களவர்களும் முட்டாள்கள் என்று நிரூபிப்பதற்காக இதெல்லாம் சிலர் செய்யத்தான் வேண்டியதிருக்கிறது' என்று எண்ணிக் கொண்டேன்.

அடுத்ததாக, "இந்தியாவுக்கு வந்திருக்கிறீர்களா?" என்றொரு கேள்வியைப் போட்டேன். இன்னும் பிரகாசமாகி, "எனக்கு இன்னும் இந்தியாவில் உறவினர்கள் எல்லாம் இருக்கிறார்கள். என் மாமா வீட்டுக்கு வந்திருக்கிறேன்!" என்று நீண்ட கதைகள் சொன்னார். எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியெல்லாம் இங்குமங்கும் உறவுகள் இருக்கிற - எப்படியெல்லாமோ இருந்திருக்க வேண்டிய - இரு பிரதேசங்கள் எப்படி இரு வேறு தேசங்கள் ஆயின என்ற கேள்வி கொஞ்சம் அறுத்தது. ஒரே காரணம் - ஒரு சிலரில் ஆரம்பித்து எல்லோரையும் பீடித்த பிரிவினை உணர்வு.

ஒரு வளைவில் வண்டியோடு சேர்ந்து எங்கள் உரையாடலும் திசை மாறியது. அடுத்த கேள்வி - "இங்கே பாதுகாப்பில்லை... பாதுகாப்பில்லை... என்று நிறையப் பேர் சொல்கிறார்களே! அது எந்த அளவு உண்மை? உண்மையிலேயே உண்மையா?". அதற்குப் பதில் (கொஞ்சம் கோபமாக!) - "இங்கிருப்பவர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதே பெரிதாக இருக்கிறது. அதனால் அதைப் பெரிது படுத்துகிறார்கள். அது அவர்களுக்குத்தான் பெரிது. நமக்கெப்படிப் பெரிதாக முடியும்? இது எனக்குப் புரியவில்லை. நம்ம நாடுகளில் இருந்து வந்தவர்கள் எல்லாம் இது பற்றிப் பேசவே கூடாது. அங்கே வாழ்வதை விடவும் இங்கொன்றும் குறைந்து போய் விடவில்லை!". அந்த "நம்ம", "அதெப்படிய்யா உன் நாடும் என் நாடும் ஒன்றாகும்?" என்று தோன்ற வைக்கவில்லை. மாறாக, இப்படிப் பேச்சுகளிலாவது நம் ஒற்றுமை இருக்கிறதே என்று மகிழ்ச்சிதான் அடைந்தேன்.

'இந்தா... அடுத்த கேள்வி...' என்று இன்னொன்றைப் போட்டேன் - "இங்கே இனவெறி அதிகம் என்கிறார்களே! உண்மையா?". ஒரு வெறுப்புக் கலந்த புன்னகை முதலில் வந்தது. 'ஏன் என் வாயைக் கிளறுகிறாய்?' என்பது போல் இருந்தது அந்தப் புன்னகையின் பொருள். "ம்ம்ம்... கடினமான கேள்வி..." என்று ஆரம்பித்துப் பொரிந்து தள்ளினார். கடினமான கேள்வியில்லை... வில்லங்கமான கேள்வி என்பதால் அப்படிச் சொன்னார் என்றும் புரிந்தது. "ஐரோப்பாவிலேயே இங்குதான் அது அதிகம். சிலர் ஜெர்மனியில்தான் என்பார்கள். அதெல்லாம் இல்லை. இங்குதான் அங்கை விட அதிகம்!" என்று முடித்தார். அப்படியானால், உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று தலையை ஆட்டிக் கொண்டேன். கடைசியில், "இந்த ஊரில் கட்டுபடியாகவில்லை. கூடிய விரைவில் துபாய் போய் விடலாமென்றிருக்கிறேன்!" என்று வருத்தத்தோடு தன் வாழ்க்கைத் திட்டத்தையும் திறந்த மனதோடு பகிர்ந்து கொண்டார்.

தாங்க முடியாத குளிரில் இறங்கி விமான நிலையத்துக்குள் நுழைந்தோம். எத்தனை நாட்கள் என்று தெளிவாகத் தெரியாமல் வந்திறங்கிய பயணம் ஒரு மாதத்துக்குள் முடிந்தது. முதல் முறை சிங்கப்பூர் வந்து திரும்பிய போது, "மீண்டும் வருவேன். அப்போது இதை விடக் கூடுதல் காலம் இருந்து விட்டுத்தான் போவேன்!" என்று தொடையில் தட்டிச் சபதம் செய்து விட்டுப் போனேன். அது போலவே ஆகியும் விட்டது. ஆனால் இலண்டனில் அப்படித் தோன்றவில்லை. பிற்காலத்தில் பல முறைகள் வரலாம். ஆனால் நீண்ட காலம் தங்கியிருந்து வாழ்ந்து செல்லும் வாய்ப்பெல்லாம் கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைத்தால் ஓகே. கிடைக்காவிட்டால் ஒன்றும் கவலைப் படுவதற்கில்லை. அம்புட்டுதேன்!

இலண்டனில் விமானம் ஏறும் போது, வாசலுக்கருகில் இருந்த இருக்கையில் இருந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி, "உன் மகள் மிகவும் அழகாக இருக்கிறாள்!" ("YOU HAVE A BEAUTIFUL DAUGHTER!") என்றார். 'ஓ, அந்த அளவுக்கு அழகாக இருக்கிறாளா?!' என்று மகிழ்ச்சியோடு நன்றி சொல்லி விட்டு, இலண்டனுக்கும் டாட்டா சொன்னோம். ஒருவேளை, முன்பொரு முறை ஸ்பானிய நண்பன் சொன்னது போல, போகிற போக்கில் நம் முகத்தில் மகிழ்ச்சியைக் காண்பதற்காக மட்டுமே சொன்னதாகக் கூட இருக்கலாம் என்றாலும், காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சுதான் என்றொரு மகிழ்ச்சி. உண்மையிலும் காக்கைதான் காக்கை. குஞ்சு பொன்தான்!

இலண்டனில் இருந்து வருவதால் விமானத்தில் எல்லோரும் நாகரிகமாக இருப்பார்கள் என்று எண்ணாமலே எண்ணிக் கொண்ட எங்களுக்கு ஓர் ஆப்புக் கிடைத்தது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த வங்க தேச மண்டையன் ஒருவன் என் நாலரை வயது மகளை முறைத்துக் கொண்டும் ஏதோ சொல்லிக் கொண்டும் வந்தான். அவள் கால் இருக்கையின் பின் பகுதியில் படுவது அவனுக்குத் தொல்லையாக இருந்ததாம். மன்னிப்புக் கேட்டு மகளைக் கண்டித்துப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கையில், மீண்டும் திரும்பினான். எனக்குப் பயமாகி விட்டது. இந்த முறை அவளோடு நட்புறவோடு விசாரணைகள் போட்டான். சரி, கோளாறு நம்ம பக்கம் இல்லை என்று உறுதியானது. இவன் முறைப்பும் வேண்டாம் சிரிப்பும் வேண்டாம்; விட்டால் சரி என்று எண்ணித் தப்பிக்க முயன்றோம். சிறிது நேரத்தில் தப்பியும் விட்டோம். அதன் பிறகு சம்பந்தமில்லாமல் எழுந்து இங்கும் அங்கும் நடமாடிக் கொண்டிருந்தான். இதில் மொடா மொடாவாகக் குடி வேறு இடையிடையில்!

துபாய் வந்து விமானம் தரையிறங்கியதும் பின்னால் இருந்து பலத்த சப்தம். மண்டையன்தான்! நமக்கு முன்னால் இருந்தவன் பின்னால் எப்போது போனான் என்று யோசித்து முடிப்பதற்குள் சத்தத்தை மென்மேலும் ஏற்றி எல்லோரையும் பதற வைத்தான். வெள்ளைக்காரப் பெரியவர் ஒருவரை, "வழி விடுய்யா...", "உன்னைக் கொல்லப் போகிறேன் பார்..." என்று மீண்டும் மீண்டும் கெட்ட வார்த்தைகள் போட்டுத் திட்டித் தீர்த்தான். துபாய் என்பதால் பெரியவரும் பயந்து போயிருக்க வேண்டும். தாங்க முடியாத அவமானத்தில் தலையைக் குனிந்து கொண்டே சமாளித்துப் பார்த்தார். அவன் விடுவதாயில்லை. கையை ஓங்குவது போல் பாவனை செய்தார். அதற்காகவே காத்திருந்தது போல அடிக்கப் பாய்ந்து விட்டான். உடனடியாக விமானப் பணியாளர்கள் வந்து விலக்கி விட்டு மன்னிப்புக் கேட்டார்கள். "சார், அவன் ஓவராகக் குடித்து விட்டான். மன்னித்து விடுங்கள்!' என்று அவரிடம் பேசிச் சரிக்கட்டினார்கள். இத்தனையையும் பார்த்து, பயத்தில் தலையை இருக்கையில் கவிழ்த்து காதைப் பொத்திக் கொண்டு கத்தினாள் என் மகள். 'இவர்கள் எல்லோரும் வாழும் உலகத்தில்தான் நீ வாழப் போகிறாய் மகளே! இது ஆரம்பம்தான். எல்லாத்துக்கும் மனத்தைத் தயார் படுத்திக் கொள். நல்ல வேளை உன்னை அத்தோடு விட்டான் என்று மகிழ்ந்தும் கொள். உன்னை இந்த உலகுக்கு அறிமுகப் படுத்தியமைக்காக மீண்டுமொரு முறை மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்!' என்று என் மனம் அல்லாடியது.

கண்டிப்பாக இன்று வரை அந்தப் பெரியவர் நிம்மதியாகத் தூங்க மாட்டார். ஒரு குட்டி நாய் இப்படி நம்மைக் குதறி விட்டதே என்ற வேதனை விடாமல் துரத்திக் கொண்டுதான் இருக்கும். அவனை ஏன் பிடித்துப் போலீசில் ஒப்படைக்காமல் விட்டார்கள் என்று புரியவில்லை. இறங்கிய பின்னும் ஊசி போடப் பட்ட குரங்கு போலக் குதித்துக் குதித்துக் கத்திக் கொண்டிருந்தான். அவர் அவனை இந்தியன் என்று நினைத்தாரோ என்ன நினைத்தாரோ! ஊர் திரும்பியதும் இந்தக் கோபத்தை எத்தனை இந்தியர்களிடம் எப்படியெல்லாம் காட்டப் போகிறாரோ! இந்த மண்டையன் ஏன் இப்படி நடந்து கொண்டானோ! இலண்டனில் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட சில அவமானங்களை மனதில் வைத்துக் கொண்டு, அந்த ஊரை விட்டு வெளியேறியதும் இப்படி நடந்து கொண்டானோ அல்லது இயற்கையாகவே கொஞ்சம் கோளாறு இருப்பதால்தான் இலண்டனில் இருந்து திருப்பி அனுப்பி விட்டார்களோ!

துபாயில் இருந்து மாறி, காலை பத்து மணிப் போல் பெங்களூர் வந்திறங்கினோம். இயல்பாகவே சூடு மண்டையைப் பிளந்தது. ஒரு மாத காலம் குளிரில் நடுங்கிப் பழகி விட்டதால் வெயிலின் கொடுமை கூடுதலாகவே பட்டது. இரண்டு மூன்று நாட்களில் அதுவும் பழகி விட்டது. இங்கிருந்து போனவர்கள்தானே! அதுவும் ஒரு மாதத்துக்கு முன்புதானே போனோம்! :)

முற்றும்!

கருத்துகள்

  1. பயண கட்டுரை மிக அருமை... அடுத்த ஊரை பற்றி பற்றி தெரிந்து கொள்ள, அதுவும் உங்கள் அனுபவத்தில், உங்கள் உரை நடையில் தெரிந்து கொள்ள ஆவல்.. by sivachalam marimuthu

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி, சிவாச்சலம் அவர்களே. அடுத்தது சிங்கப்பூர் பற்றி ஏற்கனவே ஒன்றை ஆரம்பித்து வைத்து விட்டேன். அதைத் தொடரலாம். :)

    பதிலளிநீக்கு
  3. @பழனி.கந்தசாமி, தங்கள் தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி ஐயா. உண்மையில் நல்ல அனுபவம்தான்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி