மறுதலிப்பு

நீ
என்னை நிராகரித்ததும்
நான் மண்டியிட்டு வேண்டி நின்றதைத்
தர மறுத்து அவமதித்ததும்
நல்லதாகத்தான் போயிற்று

அதற்கான காரணம் எதுவென்று
இன்றுவரை சரியாகப் புரியவில்லை

அப்பெரும் பொருளுக்கு
நான் தகுதியற்றவன் என்று
கருதியிருக்கலாம்

தாமதித்துக் கொடுத்தால்தான்
அதன் தரமும் அருமையும் புரிபடும் என்று
எண்ணியிருக்கலாம்

நான் கேட்ட விதம்
மற்றவர்களுடையதைப் போல்
உன் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக
இல்லாமல் இருந்திருக்கலாம்

எது எப்படியோ
உன் முடிவு
நம் இருவருக்குமே
நல்லதாகத்தான் போயிற்று

தகுதியில்லாதவனுக்கோ
தராதரம் தெரியாதவனுக்கோ
தந்து விட்டோமோ என்ற
வாழ்நாட் கவலை
உனக்கும் இல்லாது போய்விட்டது

அதைவிடப்
பெரும் பெரும் பொருட்களையும்
அரும் பெரும் இடங்களையும்
அடையும் தகுதியும்
அதற்காகத் தவம் கிடக்க வேண்டிய
அவசியம் இல்லாத தராதரமும்
எனக்கு இருக்கிறது
என்பதைப் புரியாமலே
என் வாழ்வும் ஓடியிருக்கும்

நீ தர மறுத்தது
எனக்கு மட்டுமே உன்னால் தர முடியாத
இயல்பான இயலாமையாகக் கூட இருக்கலாம்

அல்லது
உன்னிடம் எப்படிப் பெற வேண்டும் என்ற
என் அறியாமையாகவும் இருக்கலாம்

உன் இயலாமைகள் யாவும்
உலகத்தின் இயலாமைகள் அல்ல என்றும்
உன்னிடம் பெற இயலாமை ஒன்றே
என்னுடைய முழு இயலாமை அல்ல என்றும்
உனக்கு வெளியே
உன்னிலும் அழகான உலகம் ஒன்று உள்ளது என்றும்
நானும் கூட
அந்த உலகத்துக்கு
உனக்கை விட அழகாகப் படுவேன் என்றும்
உணர்த்தித்தான் விட்டது
இந்த ஒற்றை மறுதலிப்பு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி