எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எண் என் பணியில் கிடைக்கும் சம்பளம். எழுத்து என் வேட்கை. எண் ஈட்டி வருவதும் எழுத்து படைப்பதும் செய்து கொண்டே இருப்பேன். என்னால் முடியும் வரை. எண் என் குடும்பத்துக்காகவும் எனக்காகவும். எழுத்து எனக்காக மட்டும். என் சமூகத்துக்காகவும் எண் ஈட்டி வரும் ஆற்றல் கிட்டுமானால், என் சமூகத்துக்காகவும் என் எழுத்து பயன்பட முடியுமானால் அதை விடப் பேருவகை ஒன்று இருக்க முடியாதெனக்கு. என் பிறவிப் பெரும்பயன் எய்தி விட்டதாகக் கூடக் கொள்ளலாம். இல்லையேல், என் குடும்பத்துக்கும் எனக்குமாகவாவது எண் ஈட்டிக் கொண்டு வருவேன்; எனக்கு மட்டுமாகவாவது எழுதிக் கொண்டிருப்பேன்.

சம்பளம் எவ்வளவு வந்தாலும் பற்றாதுதான். சமாளித்து வென்றே தீர வேண்டும். எழுதி எழுதி பூமியின் சுழற்சிப் பாதையை மாற்றிய எழுத்தாளர் எவருமில்லைதான். சினிமா பார்த்துத் திருந்தி விடுகிற நல்லவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிற நம் மண்ணில் எழுத்தைப் படித்துப் பயனடைகிற பெருமக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எழுத்து படிப்பவரையும் எழுதுபவரையும் சிந்தனையைப் பட்டை தீட்டப் பணிக்கிறது. என்னுடையது அதற்கும் பயன்படாத எழுத்தாகுமானால் குறைந்த பட்சம் பொழுதுபோக்குக்காகவாவது பயன்படுகிற மாதிரி எழுதிக் தள்ளுவேன்.

எதற்கும் பயன்படாது போனாலும், எனக்குத் தெரிந்து கண்டிப்பாக ஒரு பயன் இருக்கும். என் வயிற்றெரிச்சலையெல்லாம் அள்ளி அள்ளிக் கொட்ட ஒரு இடமாவது கிடைக்கும். சும்மா இருந்த காலத்தைவிட டைரி எழுதும் காலத்தில் அதற்கொரு வடிகால் கிடைத்ததை நன்றாக உணர முடிந்தது. எதுவுமே செய்ய முடியாத பல பிரச்சனைகளுக்குத் தீர்வு அவை பற்றி இன்னொரு சக மனிதனிடம் போய்ச் சொல்வதன் மூலம் கிடைப்பதை உணர்ந்திருக்கிறேன். அந்தச் சகா காது கொடுத்துக் கவனிக்கக் கூடப் பொறுமை இல்லாதவராக இருந்தாலும். எழுதுவதென்பது அதையே பலரிடம் போய்ச் சொல்கிற உணர்வைக் கொடுக்கிறது. யாருமே அதைப் படிக்க மாட்டார்கள் என்றாலும் கூட. எனவே அதைச் செய்து கொண்டே இருப்பேன்.

எண்ணையும் எழுத்தையும் கலக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை. அதாவது, எழுத்தையே முழு நேரத் தொழிலாகக் கொள்வது பற்றிச் சொல்கிறேன். அது பற்றியெல்லாம் பேச இது அதி சீக்கிரம் என்றாலும், திட்டமிடுவதொன்றும் குற்றமில்லையே. அப்படிச் செய்வதன் மூலம் இரண்டுமே மேன்மையடையும் வாய்ப்பு ஒரு வேளை கிட்டுமானால் அதைக் கொலைக் குற்றம் போல்க் கருதி ஒதுங்கி ஓட மாட்டேன். கண்டிப்பாகக் கையிலெடுத்துச் செய்வேன். நன்றாகப் படித்துப் புரிக. “இரண்டுமே மேன்மையடையும்” என்கிற சூழ்நிலையில் மட்டுமே.

எழுத்தை முழு நேரத் தொழிலாகச் செய்வதில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை இப்போதைக்கு. எழுதுபவர்கள் அவ்வளவு மதிக்கப் படும் இடமாக நம் இடம் இல்லை என்பது ஒன்று. எழுத்து தவிர்த்து வேறு ஏதாவது சாதித்துக் கொண்டும் வந்து எழுதினால் எழுத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக மதிப்பார்களே என்றும் ஒரு நம்பிக்கை. “அதிக பட்சம் உன்னால் என்ன பண்ண முடியும்? உன் மச்சு வீட்டுக் கதவை மூடிக் கொண்டு மூலையில் போய் உட்கார்ந்து எழுதத்தானே முடியும்?” என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்ல மெனக்கெட வேண்டியதில்லையே.

எழுத்தை மட்டுமே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது மட்டுமில்லை. இயற்கையாகவே வேறு ஏதாவதொரு சாதனையும் செய்ய வாய்ப்பு இருக்கிற ஒரு துறையில் வந்து சேர்ந்து விட்டதாலும் அந்தத் துறை வெறுக்கும் அளவுக்கு வேலைகள் கொண்டு இல்லாததாலும் இதையும் தொடரலாமே என்றொரு எண்ணம். ஆனால், ‘இந்த வேலையைச் செய்யத்தான் நிறையப் பேர் இருக்கிறார்களே; நீ முழுமையாக எழுத்தில் இறங்கினால் என்ன?’ என்றொரு உட்கேள்வி வரும். அன்று எடுக்கலாம் அந்த முடிவை.

முழு நேர எழுத்தாளர்களுக்கு இருக்கிற முக்கியப் பிரச்சனை – மாபெரும் சவால், அடுப்பில் பூனை வந்து வீடு கட்டி விடும்; பிள்ளைகளின் பள்ளிக்கூடப் பையில் கரையான்கள் வீடு கட்டி விடும். வேறு ஏதாவது வசதி வாய்ப்புகள் இல்லாத பட்சத்தில் அப்படி ரிஸ்க்கை எடுப்பது நம்மைப் போன்றவர்களுக்கு நல்லதில்லை. புத்தன் வாழ்க்கையில் நடந்தது போல, அப்படியெல்லாம் ஒரு குடும்பத்தை நடுத்தெருவுக்குக் கொண்டு வருவதன் மூலம் கோடானு கோடிக் குடும்பங்களை நடுத்தெருவில் இருந்து நடு வீட்டுக்கு இட்டுச் சென்று விட முடியுமானால் பரவாயில்லை. அதுவும் எழுதிச் சாதித்தல்... அப்படித்தான் இதுவரை யாரும் எழுத வில்லையே.

முழு நேர எழுத்தாளராக வாழ்க்கையை ஆரம்பித்த பலர் பின்னாளில் ஏதாவதொரு வேலை கிடைத்தால் பரவாயில்லை என்று தேடும் கதைகளையும் பார்க்கிறோம். சினிமாவுக்குக் கதை, வசனம், பாடல்கள் எழுத வருவதையும் பார்க்கிறோம். அதைப் பதவி உயர்வாக நாம் பார்க்கையில் கோணங்கி போன்ற எழுத்தாளர்கள் அதை ஒரு தரம் தாழ்கையாகப் பார்க்கிறார்கள். இன்று வரை அது ஏன் என்று மட்டும் எனக்குப் புரியவில்லை.

பொருளாதாரம் இன்றும் ஓர் உலகளாவிய பாடம்தான். உலக மாந்தரின் நல்வாழ்வை அதுவும் பேரளவு தீர்மானிக்கிறது. அதனால்தான் அமெரிக்காவைத் தலை சிறந்த நாடு என்கிறோம். அது இல்லாதவர்களைப் பார்த்துப் பாவப் படுகிறோம். வாழ்வும் நல்வாழ்வும் அதற்கெல்லாம் அப்பாற்பட்டது. அது சிற்றின்பம். பொருளியளைத் தாண்டி வருவோருக்குத்தான் பேரின்பம் கிட்டும் என்று பேசிக்கொண்டிருப்பவர்கள் எல்லோரும் அறிவாளிகள் என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் அவர்கள் கருத்தில் மட்டும் இன்னமும் முழுசாய் நம்பிக்கை வர மறுக்கிறது. அதுவரை எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றே இருக்கட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்