அயோத்தி: நீதி மன்றத்திலிருந்து மக்கள் மன்றத்திற்கு...

அயோத்திப் பிரச்சனைக்கு இவ்வளவு எளிதான ஒரு தீர்வு இருப்பதாக நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஓரிரு சாரார் இதிலும் இன்பமடையவில்லை என்றபோதிலும் பிரச்சனைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொடுத்தல் என்பது 'எல்லோருக்கும் இன்பம்' என்கிற மாதிரியான தீர்வு. முதல் முறைத் தீர்ப்பைக் கேட்டவுடன் எனக்கு ஏற்பட்ட முதல் வியப்பு, பிரச்சனை இரு சமூகங்களுக்கு இடையில் எனும் போது "அது யார் மூவர்?" என்பது. சிலர் சொன்னார்கள் - "மூன்றில் ஒரு பகுதி இந்துக்களுக்கு, இன்னொரு பகுதி முஸ்லிம்களுக்கு, மற்றொன்று நிர்மோஹி அகாராவுக்கு" என்று. வேறு சிலர் சொன்னார்கள் - "மூன்றில் இரண்டு பகுதிகள் இந்துக்களுக்கு; ஒரு பகுதி முஸ்லிம்களுக்கு" என்று. கடந்த சில நாட்களில் நான் படித்த பத்து-இருபது கட்டுரைகளில் எந்தக் கட்டுரையிலும் நிர்மோஹி அகரா என்பது யார் என்பது தெளிவாக விளக்கப் பட வில்லை. வழக்கம் போல, அதைப் புரிந்து கொள்ள இணையத்திடம்தான் போக வேண்டியிருந்தது.  அதன் பின்பும், அவர்கள் ஏன் மூன்றாவது குழுவாக இருக்க வேண்டும்; ஏன் இந்துக்களிலேயே ஒரு பகுதியாக இருக்கக் கூடாது என்ற தெளிவில்லை. அப்படியானால், ஒரு மசூதிக்கு அருகில் இரண்டு பெரும் கோவில்கள் இருக்குமா?

"இந்தத் தீர்ப்பு 1992-இல் நடந்ததை நியாயப் படுத்துகிறதா?" என்றொருவர் கேட்டார். கண்டிப்பாக இல்லை என்றே நினைக்கிறேன். நீதித்துறையின் செயல்பாடு என்பது முழுக்க முழுக்க சுதந்திரமான ஒன்று. அது பாபர் இராமர் கோவிலை இடித்ததையோ இந்து மதவாதிகள் பாபர் மசூதியை இடித்ததையோ நியாயப் படுத்தாது. சமர்ப்பிக்கப் பட்ட ஆதாரங்களை ஆய்ந்து தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது. அவ்வளவுதான். மசூதி இடிப்பு பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அது பற்றிய குற்றவியல் வழக்கு இன்னும் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அது பற்றிய எந்த முடிவுக்கும் நாம் இப்போது வர முடியாது. இப்போது உரிமையியல் வழக்கில் வந்துள்ள தீர்ப்பு இந்துக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்பதால், குற்றவியல் வழக்கிலும் எந்தத் தீர்ப்பு வந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன். மொத்தத்தில், அவர்களுடைய உணர்வுகள் மதிக்கப் பட்டுள்ளன; அவர்களுடைய முக்கியக் கோரிக்கைக்கு (கோவில் கட்டுவது) பச்சைக் கொடி காட்டப் பட்டுள்ளது.

சரி. அப்படியானால், இந்து மதவாதிகள் தீர்ப்பு வரும்வரை காத்திருந்து சட்டத்தைத் தம் கையில் எடுக்காமல் அதன் பாதையில் சென்றிருந்தால் கண்ணியமாக இருந்திருக்கும் அல்லவா? ஆம். அப்படித்தான் நான் நினைக்கிறேன். தம் கருத்தை நிரூபிக்க அவர்களிடம் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன என்ற நம்பிக்கை இருந்திருந்தால், நாடு தழுவிய இயக்கம் ஒன்றை நடத்தி மசூதியை இடித்திருக்கவே வேண்டியதில்லை. எனவே, அவர்களிடம் வேறு ஏதோ ஒரு நோக்கம் இருந்ததாகச் சந்தேகிப்பதற்கு என்னிடம் எல்லாக் காரணங்களும் இருக்கின்றன. சட்டத்தின் பாதையில் சென்று வழக்கை வெல்வதில் சிலருக்கு நம்பிக்கை இருக்க வில்லை. அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்வதற்காக சிலருக்கு அதை அரசியலாக்க வேண்டியிருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறுபான்மையினருக்கு உறுதியான ஒரு கருத்தைத் தெரிவிக்க விரும்பினார்கள் சிலர். வேறு என்ன என்ன நோக்கங்கள் இருந்தன என்பது இராமபிரானுக்குத்தான் தெரியும்.

சரி. 92-இல் மசூதி இடிக்கப் படாமல் இருந்திருந்தால் இது போன்ற ஒரு தீர்ப்பை நீதிபதிகளால் கொடுக்க முடிந்திருக்குமா? சொல்ல முடியவில்லை. நல்ல நிலையில் இருந்த மசூதியின் ஒரு பகுதியைக் கோவில் கட்ட விட்டுக் கொடுக்குமாறு சொல்வது அவ்வளவு எளிதாக இருந்திராது. இப்போது இடிக்கப் பட்டு விட்டதால் - பிரச்சனைக்குரிய இடத்தில் பெரிதாக எதுவும் (அதாவது குவிமாடங்கள்) இல்லாததால், இது போன்ற தீர்ப்பை எளிதில் ஏற்றுக் கொள்ள எல்லோராலும் முடிகிறது. மசூதி இருந்த எந்த ஒரு இடத்தையும் யாரிடமும் கொடுக்கக் கூடாது என்று இஸ்லாம் மதத்தில் சொல்லப்பட்டு இருப்பதாக இப்போதும் சிலர் சொல்லிக்கொண்டு இருப்பதாகக் கேள்விப் பட்டேன். இஸ்லாம் மதத்தின் கோட்பாடுகளைக் கருத்தில் கொண்டு மசூதி கட்டப்பட வில்லை என்பது தீர்ப்பில் வந்த மற்றொரு சுவாரசியமான தகவல். முஸ்லிம்களும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வார்களேயானால், அது மிகச் சிறந்த முறையில் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கும்.

மிகப் பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், சம்பந்தப் பட்ட எல்லா அணியினரும் மிக முதிர்ந்த முறையில் நடந்து கொண்டார்கள். இருபது-முப்பது வருடங்களுக்கு முன்பு நிலைமை அப்படியில்லை. சராசரி இந்தியர்கள் வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகள் அளவுக்கு இது ஒரு முக்கியப் பிரச்சனை இல்லை என்று உணர்ந்து விட்டார்கள் என்பதே இதன் பொருளாகும். "கடந்த காலத்தின் கசப்புணர்வுகளை மறக்க வேண்டிய தருணம்" என்றும் "இது கொண்டாடுவதற்கான நேரமில்லை" என்றும் ஆர். எஸ். எஸ். தலைவர் சொன்னார். கேமராவின் முன் தன் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது வக்ப் வாரிய வழக்கறிஞர் திரு. கிலானி அவர்களும் மிகக் கண்ணியமான முறையில் நடந்து கொண்டார். பெரும்பாலான அரசியல்க் கட்சிகளும் பெருமளவில் நாகரிகம் காத்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களுக்கு இதை விட முக்கியமான வேலைகள் நிறைய இருப்பதை இரு சமூகங்களுமே உலகுக்கு உணர்த்தி விட்டன. இவையனைத்தும் நிறைய நிம்மதியைக் கொடுத்தன. இதன் பிறகு எல்லாமே இன்பமயம் என்று சொல்லி விடுவதற்கில்லை. நாம் நினைத்ததை விடச் சிறப்பாக உயர் நீதி மன்றம் அதன் பணியைச் செய்து விட்டது. வழக்கு உச்ச நீதி மன்றத்தின் பார்வைக்குச் செல்லும் போது அவர்களும் தங்களால் இயன்ற அளவு மிகச் சிறப்பான வேலையைச் செய்வார்கள். அது வரை இந்தச் சூழ்நிலையை எப்படி நிர்வகிக்க விரும்புகிறோம் என்ற கேள்வி நம்முடைய மன்றத்தில்தான் (சாமானியர்களாகிய நம் மக்கள் மன்றத்தில்) இருக்கும். எல்லாம் சரியாகிற மாதிரியான சூழ்நிலையில் தேச விரோதிகள் அவர்கள் வேலையை ஆரம்பிக்கக் கூடும். அடுத்து சுமார் ஒரு வருடத்துக்கு எந்த வேண்டாத சம்பவங்களும் நடந்து விடாத அளவுக்கு நம் அரசாங்கமும் நாமும் விழிப்போடு இருக்க வேண்டும். கண்டிப்பாகச் சில தரங்கெட்ட அரசியல்வாதிகள் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க முயல்வார்கள். மக்கள் அவர்களை நிராகரித்து முன் செல்ல வேண்டும். இதை விட முக்கியமான பல பிரச்சனைகளை நாம் தீர்க்க வேண்டியுள்ளது. கோவிலும் மசூதியும் வாழ்வில் எல்லாம் (அளவுக்கதிகமான நேரமும்) உடையவர்களுக்குத்தான் முக்கியம். தூங்கச் செல்லும் முன் வெகு தொலைவு செல்ல வேண்டிய நம் போன்றவர்களுக்கில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி