உணர்ச்சிப் பெருநாள்!

என் வாழ்வில் முக்கியமானதொரு மைல்க்கல்லைக் கடக்கிறேன் இன்று. இப்போதுதான் என் மகளைப் பள்ளியில் சேர்த்து விட்டு வருகிறேன். இது ஒருவிதமான உணர்ச்சி மேலோங்கிய நாள். அவளை விட்டு விட்டு வெளியே வரும்போது அழுது விடுவேன் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக, என் மனைவியைச் சிறிது நேரம் அங்கு இருந்து கொள்ளலாம் என்று அனுமதித்தார்கள். அது கொஞ்சம் கதையின் போக்கை மாற்றி விட்டது. அடுத்த மைல்க்கல்லைக் கடக்கும் போது சிந்திக் கொள்வதற்காகச் சிறிது கண்ணீரைச் சேமித்துக் கொண்டேன். இன்று காலை, என் மகள் முதல் நாளாக வீட்டை விட்டுப் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பிய போது, மணப்பெண்ணாக வீட்டை விட்டுக் கிளம்பப் போகும் அந்த நாள் பற்றிய நினைவு திரும்பத் திரும்ப வந்து சென்றது. அந்த நாளை எப்படிக் கையாளப் போகிறேன் என்று தெரிய வில்லை. இப்போதே அது பற்றிச் சிந்திக்க விரும்ப வில்லை. அதே வேளையில், அது பற்றிச் சிந்திக்காமலே இருக்கவும் விரும்ப வில்லை. அவளுக்கு மூன்று வயதே ஆகும் இந்தப் பொழுதில் அது பற்றி எல்லாம் சிந்திப்பது பைத்தியக்காரத்தனமாகத் தெரிகிறது. ஆனால், அவள் பிறந்த நாளன்று இன்றைய தினம் பற்றிச் சிந்தித்தேன். பிறந்த அன்றைக்கே பள்ளிக்கு அனுப்புவது பற்றி யோசிப்பது கொஞ்சம் ஓவர்தான் என்பது உண்மைதான். ஆனாலும், இந்த நாளை எளிதாக எதிர் கொள்ளவும் மனதளவில் என்னைத் தயார் படுத்திக் கொள்ளவும் அது உதவியது. இந்த நாள் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நான் நினைக்கவே இல்லை.வந்து விட்டது. அது போல அந்த நாளும் சீக்கிரமே வந்து விடலாம் அல்லவா?!

இது போன்ற ஓர் உணர்ச்சியை உணர்வது இதுவே முதல் முறை அல்ல. வாழ்க்கை முழுக்க இது போலப் பல நாட்கள் இருந்திருக்கின்றன. உணர்ச்சிகள் வெவ்வேறு விதமானவையாக இருந்திருக்கலாம். ஆனால், இது போன்ற எல்லா நிகழ்வுகளுக்கும் பொதுவாகச் செல்லும் ஒரு பிணைப்புக் கயிர் எதுவென்றால், அது பிரிவுணர்ச்சி. முதல் நாள், அவளைப் பள்ளியில் விட்டு விட்டு, அலுவலகம் நோக்கி வண்டி ஓட்டிக் கொண்டு வந்த வேளையில், என் வாழ்வில் உணர்வு மேலோங்கி நடந்த எல்லாப் பிரிவுகள் பற்றியும் ஒரு நீண்ட சிந்தனையோட்டம். என் பதிவில் தடுக்கி விழுகிற உங்கள் எல்லோருக்குமே அது ஒரு சுவாரசியமான உரையாடலாக இல்லாமல் போகலாம். ஒரு காலத்தில் எனக்கும் நான் அனுபவிக்காத - அனுபவித்து உணராத எதுவுமே பற்றிப் பேசுவது சுவாரசியமாகப் பட்டதில்லை. ஆனால், இதை இப்போதே எழுதாவிட்டால், என் வாழ்வில் நான் அனுபவித்ததிலேயே கிளர்ச்சியூட்டும் மிக முக்கியமான ஓர் உணர்வைப் பதிவு செய்யத் தவறி விட்டவனாகி விடுவேன். எனவே, இதோ...

ஏழு வயதில், தாய் மாமாமாரின் அழைப்பை ஏற்று, கிராமத்தில் இருந்த பெற்றோரைப் பிரிந்து, வீட்டை விட்டுக் கிளம்பி, பக்கத்தில் இருக்கும் சிறு நகரத்துக்கு இடம் பெயர்ந்த போது, அது பெரிதும் சிரமமாக இல்லை. நான் புறப்பட்ட ஊரும் போய்ச் சேர்ந்த ஊரும் அருகருகில் இருந்தன. பெற்றோரை என்று பார்க்க விரும்பினாலும் அவர்கள் இருக்குமிடத்துக்கு ஒரு மணி நேரத்துக்குள் போய்ச் சேர்ந்து விடலாம். இன்றும் என் வாழ்வை மாற்றிய மிக முக்கியமான தருணங்களில் ஒன்று எனக் கருதும் பொழுது அது. அவ்வளவு சின்ன வயதில் தாயின் அன்பை விட்டுத் தொலைவில் வந்ததை இன்று நினைத்தாலும் வருந்தத்தான் செய்கிறேன். என்றைக்கும் இணைக்க முடியாத மாதிரியான ஓர் இடைவெளியை அம்மாவுடன் ஏற்படுத்தி விட்டது அந்த முடிவு. தாய் அத்தையைப் போலவும் அத்தைகள் தாயைப் போலவும் ஆனார்கள். தந்தை மாமா போலவும் மாமாமார் தந்தை போலவும் ஆனார்கள். அந்த மாற்றத்தால் பல ஆயுட்கால பலன்கள் கிடைத்தன. சிறிது மேம்பட்ட கல்வி கிடைத்தது! சிறிது மேம்பட்ட வெளியுலக அனுபவங்கள் கிடைத்தன! பின்னாளில் அதை விடப் பெரிய பிரிவுகளை எளிதில் சமாளிக்கக் கூடிய மாதிரியான வலிமையான மனம் கிடைத்தது! என்னைப் பற்றிக் கவலைப் படவும் கண்டு கொள்ளவும் எல்லோருக்கும் இருக்கும் இருவருக்கும் மேலாக எனக்குக் கூடுதலாகச் சிலர் கிடைத்தார்கள்!

வெற்றிகரமாக பத்தாம் வகுப்பு முடித்து, பதினொன்றுக்கு அந்தப் பகுதியில் இருந்த சிறந்த மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்றில் சேர்வதற்காக அந்த ஊரையும் விட்டுக் கிளம்ப நேர்ந்த போது அடுத்த பிரிவு நேர்ந்தது. நீண்ட காலமாக அது பற்றிப் பேசியிருந்த போதும், முதல் முறையாக விடுதியில் தங்கிப் படிக்க வேண்டிய நிலை வந்த போது அது ஒரு வேறுபட்ட அனுபவமாகவே இருந்தது. அப்பா இல்லை, அம்மா இல்லை, மாமாமார் இல்லை, அத்தைமார் இல்லை... எல்லாமே புது முகங்கள்! புது நண்பர்கள்! கையாள்வதற்குக் கடினமான அனுபவம். முதல் நாள் மாலை, உடன் இருந்த நிறையப் பையன்கள் முதல் முறையாக வீட்டை விட்டுப் பிரிந்து வந்திருப்பதற்காக அதை நினைத்து நினைத்து அழுதார்கள். முதல் நாள்ப் பகல்ப் பொழுது அதிகமாகக் கண்ணீரை வீணடிக்காமல் கழிந்தது. அழுகைக் காட்சிகள் மாலையில்தான் ஆரம்பித்தன. சுற்றியிருந்த பல பையன்கள் அழுத போதும், எனக்கும் அழ வேண்டும் போலத் தோன்றிய போதும், நான் அழ வில்லை. முதலில், நான் வீட்டை விட்டு வருவது இது முதல் முறையல்ல. இந்த முறை, என் இரண்டாவது வீட்டை விட்டு வந்திருந்தேன். அடுத்து, 15 வயது அழுவதற்கு  உகந்த வயதாகத் தெரியவில்லை. முதல் சில நாட்கள் (குறிப்பாக, மாலைப் பொழுதுகள்) வீட்டுக் காய்ச்சலில் கழிந்தன. பின்னர், விடுமுறைகளில் கூட விடுதியில் இருந்த நண்பர்களைப் பிரிந்து வருவது மிகச் சிரமமாக மாறியது.

பின்னர், அந்த நண்பர்களையும் ஆட்டோகிராப் கூட வாங்காமல் நிரந்தரமாகப் பிரிய நேர்ந்தது. ஒரே வளாகத்துக்குள் எத்தனை விதமான பிறவிகள்?! ஒவ்வொன்றுடனும் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்ள வேண்டியிருந்தது. வெவ்வேறு விதமான பிறவிகளிடம் வெவ்வேறு விதமாக நடந்து கொண்டு விட்டு பொழுது சாய்கையில் வீடு திரும்பி விடுவதாக இருந்தால் பிரச்சனையில்லை. அவர்களின் எல்லாப் பரிமாணங்களோடும் பரிமாற்றங்கள் நிகழ்த்த வேண்டியதில்லை. ஆனால், விடுதியில் தங்கும் போது, அதே ஆட்களுடன்தான் நாள் முழுக்கவும் இருக்க வேண்டும். இரவு-பகல் என்று மொத்த இருபத்தி நான்கு மணி நேரமும் அவர்களோடு இருக்க வேண்டும். எனவே, சண்டைகளும் சச்சரவுகளும் வருவதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் உண்டு. அவையெல்லாவற்றையும் கடந்து, ஒன்று கூடி வாழ ஆரம்பிக்கப் போகும் போது, அவர்களை விட்டுப் பிரிய வேண்டும். நிரந்தரமாக! அதில் ஓரிருவர்தாம் இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால், அன்றைய நாளில், அந்த "சரிடா, பார்க்கலாம்!" சொன்ன நேரத்தில், அது அவ்வளவு எளிதாக இருக்க வில்லை. அழ முயன்றேன்; ஆனால், தோல்வி அடைந்தேன். அதுதான் இயல்பாகவே வரவில்லையே. அப்புறம் ஏன் மெனக்கெட வேண்டும்?!

அடுத்து, கல்லூரியில் சேர வேண்டியிருந்தது. கல்லூரி சென்று படித்தவர்கள் எல்லோருக்குமே அவர்கள் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக இந்தக் கல்லூரியும் இருக்கும். முக்கியமான நினைவுகளில் முக்கால்வாசி நினைவுகள் அங்கிருந்து சுமந்து வருபவையாகத்தான் இருக்கும். ஒரு மணி நேரத் தொலைவில் இருந்த முந்தைய இடத்தைப் போலல்லாமல் இது வீட்டை விட்டுக் கிட்டத் தட்ட நான்கு மணி நேரத் தொலைவில் இருந்தது. அதாவது இரண்டாவது வீட்டை விட்டு. முன் அனுபவம் இருந்ததால் இந்த முறை அழ வேண்டும் போல் தோன்ற வில்லை என்றில்லை. தோன்றத்தான் செய்தது. கல்லூரியில் என்னைச் சேர்த்து விட்டுக் கிளம்பிய மாமாவை வழியனுப்பி வைத்த அந்தப் பின்மதிய வேளை எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. புதிய நண்பர்கள் அனைவரும் என்னைப் போலவே உணரத்தான் செய்வார்கள் என்று எண்ணினேன். ஆனால், அவர்களில் சிலர் குழந்தையைப் போல அழுதது கண்டு வியப்பான வியப்பாக இருந்தது எனக்கு. எனக்கும் அழ வேண்டும் போலத் தோன்றினாலும் அந்த வயதில் அழுவதென்பது மிகவும் வேடிக்கையாக இருந்தது. எனக்குத் தோன்றத்தான் செய்தது; அவர்களோ அழவே செய்தார்கள்! திரும்பவும், அடுத்த சில நாட்கள், அதுவும் மாலைப் பொழுதுகள் மிகச் சிரமமாக இருந்தன. எங்கள் விடுதி கடற்கரையோரம் இருந்தது. கடற்கரை மாலைப் பொழுதுகளை வீட்டுக் காய்ச்சலுக்கு மிக வசதியாக மாற்றியது. அதே கடற்கரைதான் கல்லூரி வாழ்க்கையைப் பின்னாளில் மேலும் சிறப்பாக்கியது. அந்த வாழ்க்கையையும் வெற்றிகரமாக நீந்திக் கடந்தோம் (கடற்கரையில் நீச்சல்!). ஆனால், எங்கள் உணர்ச்சித் திறனைச் சோதித்துப் பார்க்க இன்னொரு நாள் வந்தது. மீண்டும் ஒருநாள்!

எது அது? இன்னொரு பிரிவுபச்சார நாள்! முந்தைய பிரிவுபச்சார நாளை விட இந்த நாள் கடினமானதாக இருந்தது. இரண்டு காரணங்கள். ஒன்று, இந்த நண்பர்களோடு கூடுதற் காலம் உடனிருந்தது. இரண்டு, இந்த நட்பு கூடுதல் முதிர்ச்சி கொண்டிருந்தது. கூடுதலான காலம் தொடரவும் போகிறது. பெரும்பாலானவர்கள் இப்போதும் தொடர்பில் இருக்கிறார்கள். அதற்கொரு காரணம் - கணிப்பொறி சம்பந்தமாகப் படித்தோம், ஒரே மாதிரியான வேலைகள் வாங்கினோம், எப்போதும் தொழில் நுட்பத்தின் உதவியோடு இயங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த முறை, ஆட்டோகிராப்கள் வாங்கத் தவற வில்லை; தொலைபேசி எண்களும் முகவரிகளும் வாங்கத் தவற வில்லை. ஆனாலும், அந்த நாளில் அந்த இடத்தில் இருந்து சில ஆயுட்கால நண்பர்களை விட்டுப் பிரிவது அவ்வளவு எளிதாக இல்லை. பிரிந்து சென்ற பின்பு, சுமக்க வேண்டிய பொறுப்புகள் - காப்பாற்ற வேண்டிய வாக்குறுதிகள் - ஆற்ற வேண்டிய கடமைகள் என்று எத்தனையோ விஷயங்களைத் தனிக் கட்டையாகச் சமாளிக்க வேண்டுமே என்று எண்ணியபோது பிரிவு கூடுதல் வருத்தத்தைக் கொடுத்தது.

அடுத்து என்ன? படிப்புகள் முடிந்தன! தேர்வுகள் முடிந்தன! வேலை வாங்க வேண்டும். ஒரு மணி நேர தூரத்திலோ நான்கு மணி நேர தூரத்திலோ இருக்கிற ஊர்களில் எந்த வேலையும் இல்லை. பயந்து பயந்து இரவெலாம் பயணம் செய்து சென்னை என்றோர் ஊருக்கு வர வேண்டியானது. முழு நேர வேலையாக ஒரு வேலை தேடும் வேலையைச் செய்வதற்காக! வீட்டில் எல்லோருக்குமே பயம்; ஏனென்றால், சென்னையை விட்டுப் பன்னிரண்டு மணி நேரத் தொலைவில் இருந்த எங்களுக்கெல்லாம், முதல் முறை அங்கு தனியாகச் செல்வது என்பது ஒரு பெரிய வீர தீரச் செயல். ஏனென்றால், சென்னை சென்று வந்த எல்லோருமே, அந்த ஊர் வெளியூர்க் காரர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பற்ற ஊர் என்று விளக்குகிற மாதிரிப் பல கதைகள் கொண்டு வருவார்கள் (தமிழர்கள் எல்லோருக்குமே சென்னை மிகப் பாதுகாப்பான இடம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் மற்ற மொழிக் காரர்களுக்கு இதைச் சொன்னால் ஆச்சர்யம் அடைவார்கள்!). அப்படி ஒரு பயங்கரமான ஊராகத்தான் நம் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் உள்ளூர்ப் பத்திரிகைகளும் சென்னையை நமக்கு அறிமுகப் படுத்தி இருந்தன. அவையனைத்தும் கட்டுக் கதைகளும் அல்ல. அங்கே வாழ்கிறவர்களுக்கு அவை மிகச் சாதாரணமான அல்லது எங்கோ ஒரு மூலையில் நடக்கிற நிகழ்வுகள். ஆனால், முதல் முறை அங்கு செல்கிற நமக்கு, எதுக்கும் தயாராக இருக்கிற மாதிரித் திட்டமிட்டுச் செய்ய வேண்டிய மிகப் பெரிய ப்ராஜெக்ட் அது. இன்று போல், தகவல்த் தொடர்பு வசதிகள் அதிகம் இல்லாத அந்நாளில்,  அங்கிருந்த மாமா-சித்தப்பாக்களுக்குக் கடிதங்கள் போட்டு, எங்கெங்கோ இருந்த தரைவழித் தொலைபேசிகளில் அழைத்துச் சொல்லி, ஒவ்வொரு சின்னச் செயலையும் எப்படிச் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பல நாட்கள் பேசிப் பேசித் தைரியம் வரவழைத்துக் கொண்டு, ஓட்டுனரிடம் சிறப்பு விண்ணப்பங்கள் கொடுக்கப் பட்டு வண்டியேறினேன். இன்னொரு மறக்க முடியாத மாலைப் பொழுது! என் வாழ்வின் புதியோதொரு சகாப்தம் தொடங்குவதற்கு முந்தைய மாலை, எனக்குப் பாதி வயதுக்கும் குறைந்த (அப்போது) எங்கள் வீட்டுச் சிறுவர் கள் எல்லாம் வந்து என்னை வழியனுப்பி வைத்தார்கள்.

அதன்பிறகு நடந்ததெல்லாம் அதிசயம். வேலை தேடுவதைத் தவிர வேறொரு வேலை இல்லை அப்போது. வேலை தேடித் தேடி சென்னை மாநகரத்தின் ஒவ்வொரு சந்து பொந்துக்கும் சென்று வந்தேன். கிட்டத் தட்ட எல்லாப் பேருந்துகளின் எண்களையும் மனப்பாடம் செய்து விட்டேன். அத்தனை புதிராக இருந்த நகரம் ஆறே மாதங்களில் அத்துப் படியானது. ஆனால், இன்றும் நான் சென்னையில் சென்று இறங்கும் போது, முதல் நாள் அங்கு சென்று இறங்குவதற்கு முன்பாக எனக்கிருந்த சிந்தனைகள் பற்றிய மங்கலான நினைவுகள் மனதில் வருகின்றன. அதுதான் அந்த ஊருக்கு நான் சென்றிறங்கும் ஒவ்வொரு பயணத்தையும் சிறப்பானதாக்குகிறது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகராகவும் மிகப்பெரிய மாநகராகவும் இருப்பதால் நம் அரசாங்கம், ஊடகங்கள், பொழுதுபோக்குத் துறையினர் ஆகிய எல்லோருடைய முழு கவனத்தையும் பெறுகிற நகரமாக இருக்கிறது. நம் தலைவர்கள், நட்சத்திரங்கள், அறிஞர்கள்... எல்லோருமே இருக்கும் இடம் அதுதான். எல்லோரும் என்றில்லாவிட்டாலும், பெரும்பாலானோர்! எனவே, அது போன்றதோர் ஊரின் மீது அது போன்றதோர் ஈர்ப்பு வருவது இயல்பு தானே.

அடுத்து, ஆறு மாதங்களுக்குப் பின் தெளிவாகப் புரிந்தது, 'நான் தேடுவது சாப்ட்வேர் வேலை என்றால் அதற்கான இடம் சென்னை அல்ல; அந்த இடம் சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் - என் மாநிலத்துக்கு வெளியில் இருக்கிறது' என்று. பிறகென்ன? பெங்களூருக்குப் பயணப் பட நேர்ந்தது. இந்த முறை வந்திறங்கிய புது இடம் மேலும் பயமூட்டும் விதமாக இருந்தது. ஏனென்றால், நான் அது எல்லா வகையிலும் தெரியாத இடம். எல்லாமே தெரியாதவை... மக்கள், மொழி, உணவு, தட்பவெப்பம், பண்பாடு... எல்லாமே! இன்று, திரும்பிப் பார்க்கையில், எல்லாமே வேடிக்கையாக இருக்கிறது. வேறு எந்த இடத்தையும் விட அதிகமான காலம் (இன்றைய கணக்குப்படி) செலவிட்டுள்ள ஓர் இடத்துக்கு வர நான் இவ்வளவு பயந்திருக்க வேண்டியதில்லை. தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள்! வேறு எந்த இடத்திலும் இவ்வளவு வசதியாக இருக்க முடியுமா என்று என்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை. வேறு எந்த ஊரிலும் இல்லாத அளவு இங்கே எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். வேறு எந்த ஊரைப் பற்றியும் இல்லாத அளவுக்கு இந்த ஊரைப் பற்றிய நினைவுகள் இருக்கின்றன. வேறு எந்த ஊரிலும் இருந்ததை விட மேம்பட்ட வாழ்க்கையை இங்கு வாழ்ந்திருக்கிறேன். 2001-இலேயே வேலை நிமித்தமாக நாடு முழுக்கச் சுற்றும் ஒரு பயணத்தில் இருந்த போது, முதல் பத்து நாட்கள் சமாளிக்க முடிந்தது. பதினோராவது நாள், பெங்களூர் திரும்ப வேண்டும் போல் உணரத் தொடங்கி விட்டேன். நான் சொல்வது 2001-இல். கிட்டத் தட்டப் பத்தாண்டுகளுக்குப் பின்... இன்று... இந்த ஊர் எனக்கு அதற்கும் மேலாக எவ்வளவோ அர்த்தம் நிறைந்ததாக மாறி இருக்கிறது.

முதலில், ஒரு சாப்ட்வேர் அல்லாத நிறுவனத்தில் கணிப்பொறி சார்ந்த வேலை. சாப்ட்வேர் நிறுவனத்தில் சாப்ட்வேர் வேலை என்று இரண்டு கண்களும் குறி வைத்துக் கிடந்த காலத்தில், ஒன்றரை ஆண்டுகள் மின்னல் வேகத்தில் ஓடின. அது நடந்தது ப்ளூ சிப் கம்ப்யூட்டர் கன்சல்டண்ட்ஸ் என்கிற நிறுவனத்தில். இங்குதான் வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாத அளவு அதிக காலம் செலவிட்டிருக்கிறேன். இங்குதான் வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாத அளவு அதிகமான நண்பர்களைப் பெற்றேன். மற்ற எல்லா நிறுவனங்களும் கொடுத்ததை விட இந்த நிறுவனம் எனக்கு நிறையக் கொடுத்தது (பண நோக்கத்தில் பேச வில்லை). எனக்கொரு வேலை கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஒரு வேலையைக் கொடுத்தது. என்னை நானாகவே ஏற்றுக் கொண்டது. பின்னர் நான் சென்று சேர்ந்த எல்லா இடங்களிலும் என் திறமையைக் கொடுத்து ஊதியம் பெற்றேன். இங்குதான் இரண்டும் ஒரு சேரப் பெற்றேன். மற்ற நிறுவனங்களிலும் நான் திறமைகளை வளர்த்துக் கொள்ள வில்லை என்று சொல்ல வில்லை. ஆனால், ப்ளூ சிப்பில் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்தேன். எல்லாச் சாலைகளும் ரோமாபுரிக்குச் செல்பவை. ரோமாபுரிக்குச் செல்லும் எல்லாச் சாலைகளும் ரோமாபுரியில் முடிய வேண்டும். பின்பு, அங்கிருந்து புதியதொரு சாலையைப் பிடிக்க வேண்டும். ப்ளூ சிப்புடனான என் சாலையும் முடிவடைந்தது. அந்தக் கடைசி நாள் உண்மையாகவே உணர்ச்சி மேலிட்ட நாள். கடைசி நாள், திரும்பவும் மாலைப் பொழுதுதான், உடன் பணி புரிந்த சகாக்கள் ஒவ்வொருவருடனும் கை குலுக்கிய போது, அழுகைக்கு மிக அருகில் சென்று விட்டு வந்தேன் (இந்த முறையும் அழ வில்லை). அதன் பின்பும், அது போன்ற பல மாலைப் பொழுதுகள் பார்த்து விட்டேன். ஆனால், அந்த மாலைப் பொழுதைப் போன்றதொரு மாலை பொழுது அதன் பின் வரவேயில்லை. அன்று நான் எழுதிய நீண்ட மின்னஞ்சலை என் ஆங்கில வலைப்பதிவில் ஆரம்பத்தில் காணலாம். அது முதல்தான் பதிவுலகில் காலடி வைத்தேன்.

அடுத்து, எந்த மனிதனின் வாழ்க்கையிலும் நிகழும் உச்ச கட்டக் கிளர்ச்சி அனுபவமான திருமணம் நடந்தது. திருமணத்துக் கொஞ்சம் முன்பான அந்த நாட்களிலும் அதன் பின்பும், இந்த உலகில் உள்ள எல்லா அற்பமான விஷயங்கள் பற்றியும் அளவிலாமல் உரையாடியும் சண்டை போட்டும் கழித்த எத்தனையோ உறக்கமில்லா இரவுகள் உண்டு. ஆனால், இன்றும் உணர்ச்சி மேலோங்கிய பிரிவாக (அதைப் பிரிவு என்று சொல்வதற்காகவே நீங்கள் சிரிப்பீர்கள் என்று தெரியும்!) நான் நினைப்பது எதுவென்றால், வாழ்வின் மிகக் குறுகிய விடுமுறையான (சரியான நாள்க் கணக்குப்படி பார்த்தால் அதுதான் இதுவரை நான் பெற்ற மிக நீண்ட விடுமுறை; மூன்று வாரங்களும் நான்கு வார இறுதிகளும் அவ்வளவு குறுகியன அல்லவே!) திருமண விடுமுறைக்குப் பின்பு, ஊரிலிருந்து பெங்களூர் திரும்பி வந்து, முதல் நாள் புதுப் பொண்டாட்டியை வீட்டில் விட்டு விட்டு அலுவலகம் செல்ல நேர்ந்ததே அந்தப் பிரிவுதான். ஒவ்வொரு நாளும் தங்கள் கணவர்கள் பணிக்குச் செல்லும் போது கோடிக்கணக்கான பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள் என்று நன்கறிவேன். அவர்களெல்லாம் வீட்டில் தனியாக இருக்க முடியாது என்றோ அவர்கள் எல்லோருமே தனியாக இருக்கும் போது பாதுகாப்புப் பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள் என்றோ இல்லை. ஆனாலும், அந்தக் குளிர்ந்த காலைப் பொழுதில் எந்தக் கோளாறும் இல்லாமல் இருந்த என் பைக்கை ஸ்டார்ட் பண்ணுவது எனக்கு அவ்வளவு கடினமாக இருந்தது. 

திருமணத்துக்குப் பின்பு, எல்லா இணைப்புகளும் துண்டிக்கப் பட்டு எனக்கே எனக்கான ஓர் உலகுக்குள் போய் விட்டேன். முழுக்க முழுக்க இருந்த நேரத்தையெல்லாம் குடும்பத்துடன் செலவிட்டேன். அதுதான் முக்கியம் என்று மண வாழ்வில் வென்றோரும் சொன்னார்கள்; தோற்றோரும் சொன்னார்கள். அதன் பின்பு, முதல் முறை நாங்கள் பிரிய நேர்ந்தது, வளைகாப்புக்கு சில நாட்கள் முன்பு என் மனைவியை உறவினர் சிலரோடு எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த பிரிவு. அன்றிரவு வீடு திரும்பி பைத்தியம் போல் அழுதேன். முன்பெப்போதும் இல்லாத மாதிரி! முன்பெப்போதும் நான் இவ்வளவு பைத்தியமாக இருந்ததில்லை. அடுத்து, சில நாட்களுக்குப் பின்பு, நாங்கள் சந்தித்தோம், திட்டமிட்ட படி வளைகாப்பு நடந்தது. அதன் பின்பு, நாங்கள் நீண்ட காலம் பிரிந்திருக்க நேர்ந்தது. அதாவது, ஏழு மாதங்கள். அவளைச் சந்திப்பதற்காக, கிட்டத் தட்ட ஒவ்வொரு வாரமும் மேலும் கீழுமாக 700 கிலோ மீட்டர்கள் பயணப் படப் போகிறேன் என்று தெரிந்திருந்தும், அந்த நாள் - அந்த நிமிடம் அந்தப் பிரிவைக் கையாள்வது மிகச் சிரமமாகத்தான் இருந்தது. இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. என்ன சிறுபிள்ளைத் தனமாக... என்று!

அதன் பின்பு, சமீபத்தியது இன்று நிகழ்ந்தது. குழந்தை என்று ஒன்று வரும் முன், எவ்வளவு சிறிய பிரிவாக இருப்பினும், நாங்கள் பிரிந்த போதெல்லாம் என் மனைவியைத்தான் எப்போதும் பிரிந்துணர்ந்தேன். கு.பி.யில் (குழந்தை பிறப்புக்குப் பின்) பிரிவு நேரும்போதெல்லாம், என் மகளைத்தான் அதிகம் பிரிந்துணர்கிறேன் இப்போதெல்லாம். இப்போது கொஞ்ச காலமாகவே இது ஓடிக் கொண்டிருக்கிறது. இதைக் கேட்கும் போது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும் என்பதை நன்கறிவேன். ஏனென்றால், மற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக இப்படி எல்லாம் நடந்தது கொண்ட போது அப்படித்தான் நானும் உணர்ந்தேன். ஆனால், இப்போது, இதே பாதையில் முன் சென்ற கோடிக்கணக்கான தந்தைகளின் உணர்வை என்னால் புரிய முடிகிறது. அது ஒரு நல்ல உணர்வுதான் அல்லவா?!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்