கலாச்சார வியப்புகள் - மும்பை



கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

இந்தியாவின் தலைநகரம் டெல்லியாக இருந்தாலும் இந்தியாவிலேயே மிகப்பெரிய நகரம் – இந்தியாவின் வணிகத் தலைநகரம் எனப்படுவது மும்பைதானே. இந்தியா வருகிற பயணி ஒருவர் ஒரேயொரு நகரத்தைத்தான் பார்க்க முடியும் என்றால் அவர் பார்க்க வேண்டியது மும்பைதானே. சிறு வயது முதலே மும்பை (அப்போது பம்பாய் அல்லது பாம்பே) என்றால் நமக்கொரு பிரம்மாண்டம் இருக்கும். வேலைக்கு வந்த பின்பு மும்பையில் இருந்து பணி நிமித்தமாக பெங்களூர் வரும் சகாக்கள் அனைவரும் பெங்களூரை மும்பையோடு ஒப்பிட்டுச் சொல்லும் பல கருத்துகள் மும்பை மீதான ஆர்வத்தை மேலும் கூட்டத்தான் செய்தன. பணியிடங்களில் அங்கிருக்கும் தொழிற் பக்குவம் (PROFESSIONALISM) முதல் மும்பைக்காரர்களின் நேரத்தின் மீதான மரியாதை முதல் அவர்கள் ஒவ்வொரு நாளும் பணிக்கு வரப் பயணத்தில் செலவிடும் நேரம் முதல் மும்பை வீதிகளில் சாமானிய மனிதர்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் பாதுகாப்பு முதல் வேலு நாயக்கரான வரதராஜ முதலியார் முதலான நிழல் உலக தாதாக்கள் பற்றிய கதைகள் முதல் அவர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதம் வரை எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறோம். அவற்றைப் பார்க்காமல் விடக் கூடாது என்றும் வாழ்வில் சிறிது காலமாவது மும்பையிலும் பணி புரிந்து விட வேண்டும் என்றும் நிறைய ஆசைப் பட்டிருக்கிறேன்.

2001-ஆம் ஆண்டில் பணி நிமித்தமாக இந்தியாவில் உள்ள அனைத்துப் பெருநகரங்களுக்கும் சென்று வரும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் விடுபட்ட இரு முக்கியமான நகரங்கள் மும்பையும் ஆமதாபாத்தும். அதற்காக அடிக்கடி வருத்தப் பட்டுக் கொள்வேன். இடையில் பலமுறை மும்பை வழியாக இலண்டன் செல்லும் வாய்ப்புகள் கிடைத்தன. விமானம் தரையிறங்கும் நேரத்திலோ மேலெழும்பும் நேரத்திலோ மும்பையின் கட்டடங்களைப் பறவைப் பார்வை பார்த்துக் கொள்ளவும் ஒரு விமான நிலையத்தில் இருந்து இன்னொரு விமான நிலையம் மாறிச் செல்லும் வழியில் ஒருசில சாலைகளை மட்டும் பார்த்துக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது என்றாலும், அம்மாம்பெரிய ஓர் ஊரை இப்படியெல்லாம் ‘பிச்சைக்காரத்தனமாக’ அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்தல் எப்படிச் சரியாகும்?! நாம் தினமும் கண்டு கடந்து செல்கிற ஒரு கல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து இன்னொரு இடத்துக்குச் செல்லக் கூட ஒரு நேரம் வர வேண்டும் என்பார்கள். அந்த நேரம் வரும் போதுதான் அதைக் கையால் எடுத்து இன்னோர் இடத்தை நோக்கி வீசவோ, காலால் ஓர் எத்து விட்டு நகர்த்தவோ, காலைப் பெயர்த்துக் கொள்ளவோ, எல்லாத்துக்கும் அந்த நேரம் வந்தால்தான் நமக்கும் அப்படிப் பண்ணத் தோணுமாம். அப்படி மும்பையைப் பார்ப்பதற்கும் இப்போதுதான் நேரம் வந்தது. அதுவும் மகள் புண்ணியத்தில்.

சர்வதேச அளவிலான ‘ஸ்பெல்லிங் பீ’ எனப்படும் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தாள். சென்ற ஆண்டு துபாயில் நடந்த இறுதிப் போட்டி இந்த ஆண்டும் அப்படியே மத்தியக் கிழக்கில் எங்காவது நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். நல்ல வேளையாக மும்பையில் என்று அறிவித்தார்கள். சர்வதேச அளவிலான போட்டி என்றாலும் கலந்து கொள்ளும் குழந்தைகள் அனைவரும் பெரும்பாலும் இந்தியர்களே. துபாயில் இருந்தும் அபுதாபியில் இருந்தும் வரும் குழந்தைகளும் கூட இந்தியர்களே. ஒரு சில குழந்தைகளே மற்ற ஆசிய முகங்கள் கொண்டிருந்தன. அந்த வகையில் மற்ற பெற்றோருக்கும் இது ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏப்ரல் 24-ஆந் தேதி ஞாயிற்றுக்கிழமை போட்டி. இத்தோடு சேர்த்து ஒரு சுற்றுலாவும் திட்டமிடலாம் என்றால் மனைவியின் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்காது. காரிலேயே சென்று வரும் அளவுக்குப் பக்கமாகவும் இல்லை. வான்வழிப் பயணம் கையைக் கடிக்கும். அதனால் இரயில் வண்டியிலேயே போய் வந்து விடலாம் என்று திட்டமிட்டோம். இதுவரை சென்ற இரயிற் பயணங்களிலேயே இதுதான் நீண்ட தொலைவாக இருக்க வேண்டும். நம் பயணங்கள் எல்லாம் பெரும்பாலும் பெங்களூருக்கும் சென்னைக்கும் ஊருக்கும் இடையிலானவையே.

ஒருநாள் போக, ஒருநாள் அங்கிருக்க, ஒருநாள் திரும்பி வர என்று இறுக்கமான ஒரு மூன்று நாள் பயணத் திட்டத்தோடு ஏப்ரல் 22-ஆந் தேதி இரவு பெங்களூரில் இருந்து புறப்பட்டோம். 23-ஆந் தேதி மாலை பொழுது சாயும் வேளையில் மும்பைக்குள் நுழைந்த வண்டி, சின்ன வயதில் இருந்து கேள்விப் பட்ட கல்யாண், மாதுங்கா வழியாக இரவு தாதர் சென்று சேர்ந்தது. போய் இறங்கினோம். போகும் வழியிலேயே தண்டவாளங்களுக்கு இருபுறமும் இருக்கும் சேரிக் குழந்தைகளின் டாட்டாக்களையும் வாங்கிக் கொண்டு, பாட்ஷா படத்தில் பார்த்த மும்பையைப் பார்க்கும் ஆர்வத்தோடு போய் இறங்கினோம். மும்பையின் டாக்சிவாலாக்கள் சென்னை – பெங்களூர் டாக்சிக்காரர்களைப் போல் பேராசை பிடித்தவர்கள் அல்லர், மீட்டர்படி கழித்துக் கொண்டு சரியாகச் சில்லறை திருப்பிக் கொடுக்கும் நல்லவர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம் என்றாலும், ரிஸ்க் எடுக்க ஆர்வம் இல்லை. உடன் வந்த இளைஞர் ஒருவரிடம் அது பற்றி விசாரித்தோம். அவரும் நினைத்த படியே கருப்பு-மஞ்சள் டாக்சிகளை விட ‘உபர்’தான் நல்லது என்றார். அது படியே ஓர் ‘உபர்’ வண்டிக்கு அழைப்பு விடுத்துக் காத்திருந்தோம். சிறிது நேரத்திலேயே வந்து சேர்ந்தது. ‘துமாரா நாம் க்யா ஹே’ தவிர இந்தியில் ஒன்றுமே ஒழுங்காகத் தெரியாத நம்மை ஒருநாள் முழுக்க இந்தியிலேயே பேச வைக்கப் போகிறார்களா என்று எண்ணும் போதே கண்ணைக் கட்டியது. ஆனாலும் மும்பை மற்ற வட இந்திய நகரங்களைப் போல இந்தி இல்லாது வாழ முடியாத நகரம் இல்லை என்கிற சிறிய ஆறுதல் இருந்தது.

தங்கல் சாந்தாக்ரூசில். சின்ன வயதிலேயே கேள்விப்பட்ட சாந்தாக்ரூஸ் விமான நிலையம் அருகிலேயேதான். தாதரில் இருந்து சாந்தாக்ரூஸ் பத்துக் கிலோ மீட்டர் தொலைவுதான் இருக்க வேண்டும். மொத்தப் பத்துக் கிலோ மீட்டரும் நகரத்துக்குள்ளேயேதான் பயணித்தோம். அதிலேயே மும்பை எவ்வளவு பெரிய நகரம் என்று புரிந்து விட்டது. நம் பெருநகரங்களில் பத்துக் கிலோ மீட்டர் என்றால் அதில் ஒரு முனை ஊருக்கு வெளியே வந்துவிடும். அங்கே அப்படியில்லை. சாலைகளும் தூய்மையாக இருந்தன. சாலைகளுக்கு இருபுறமும் பெரும் பெரும் பழைய அடுக்கு மாடிக் குடியிருப்புகளும் உள்ளன; சேரிகளும் உள்ளன. ஆனால் சேரியின் அசுத்தம் சாலைக்கு வந்திருப்பது போலத் தெரியவேயில்லை. அடுக்கு மாடிக் குடியிருப்புகள் யாவும் நம் ஊரில் ஓட்டு வீடுகள் வருவதற்கு முன்பே வந்துவிட்டவை போன்று பழைமையாக இருந்தன. மற்றொரு வியப்பான காட்சி – என்னதான் வணிகத் தலைநகரமாக இருந்தாலும், பெயர்ப் பலகைகள் அனைத்திலும் ஆங்கிலத்தைவிட மராத்திதான் (அல்லது இந்தியாக இருக்க வேண்டும்) அதிகம் இருப்பது போலத் தெரிகிறது. மும்பையே அப்படி இருக்கும் போது நமக்கென்ன நோக்காடு? நாமும் அதையே கடைப்பிடித்து விட்டுப் போக வேண்டியதுதானே!

பெரும்பாலும் விரிவான சாலையிலேயே சென்று, சாந்தாக்ரூஸ் போனதும், ஒரு சந்துக்குள் போய், ஒரு பழைய-பரவாயில்லாத ஓட்டலில் போய் இறங்கினோம். நம் பெருநகரங்களில் நல்ல வசதியான ஆடம்பரமான ஓட்டலில் தங்க முடிகிற காசில் அங்கே சாதாரணமான ஓர் ஓட்டலில்தான் தங்க முடிகிறது. ஒட்டுமொத்த விலைவாசி எப்படியோ, தங்கும் வசதி என்று வந்து விட்டால் மும்பைக்கு அருகில் கூடச் செல்ல முடியாது நம் நகரங்கள். இடந்தானே ஓர் ஊரின் விலைவாசிக்கான முதற் குறியீடு.

மறுநாள், அதிகாலையே எழுந்து தயாராகிப் புறப்பட்டோம். மீண்டும் உபர். சாந்தாக்ரூசைக் காலி செய்து மலாட் நோக்கி. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலை நெருக்கடி இல்லாமல் இருந்தது. அந்தப் பயணமும் அழகாகவே இருந்தது. பெரும்பாலும் அகலமான சாலை. இருபுறமும் பழைய பழைய அடுக்குமாடிக் குடியிருப்புகள். மகளை உள்ளே விட்டு விட்டுக் காத்திருந்தோம். போட்டி முடிந்து வெளியே வந்ததும், இரவு வண்டியேறும் முன் ஒரு சுற்று சுற்றி விட வேண்டும் என்று திட்டமிட்டோம். அதன்படியே போட்டியும் மதியமே முடிந்து, முடிவுகளும் மதியமே அறிவித்து விட்டார்கள். பெரிதும் எதிர்பாரா விதமாக முதல் இருபது போட்டியாளர்களில் ஒருவராகப் பரிசுக்கோப்பையும் உதவித் தொகையும் பெற்றாள். அந்த மகிழ்ச்சியோடு ஊரையும் சுற்றி விடலாம் என்று புறப்பட்டோம். மீண்டும் உபர்.

முதலில் ‘ஜூகு’ கடற்கரை பார்க்க வேண்டும் என்று திட்டம். அங்கே விடச் சொன்னோம். நம் மெரீனா கடற்கரை அளவு பிரபலம் என்றாலும், அதை விடப் பெரிதான கவர்ச்சியும் உடைய கடற்கரை அது. அமிதாப் பச்சன் முதற்கொண்டு பல பாலிவுட் நட்சத்திரங்களும் பிரபலங்களும் வாழும் பகுதி அதுதான். போகிற வழியில் மெதுவாக ஓட்டுனரிடம் பேச்சைப் போட்டோம். கடற்கரையில் எங்காவது பெட்டியை வைத்துவிட்டு ஒரு சுற்று சுற்றி விட்டு வந்து எடுத்துக் கொள்ளும் மாதிரியான வசதிகள் ஏதும் இருக்கின்றதா என்று கேட்டோம். “அப்படியெல்லாம் வசதிகள் எதுவும் இல்லை. நீங்களேதான் இழுத்துக் கொண்டு அலைய வேண்டும்” என்றார். இது ஒத்துவராத வேலை என்று அவரையே காத்திருக்க முடியுமா என்று கேட்டோம். “எவ்வளவு நேரம்?” என்றார். “இது மட்டுமில்லை. மும்பையில் உள்ள எல்லா இடங்களையும் பார்க்க வேண்டும். எங்கும் அரை மணி நேரத்துக்கு மேல் இருக்க வேண்டியிராது. இரவு வரை நேரம் இருக்கிறது” என்றோம். சரி என்று ஒத்துக் கொண்டார். அப்படியாகத் தொடங்கியது எங்கள் இன்பச்சுற்றுலா!

முதலில் ஜூகு கடற்கரை சென்றோம். அது இருப்பது சாந்தாக்ரூஸ் விமான நிலையம் அருகில். அவ்விமான நிலையத்தின் இரு ஓடுபாதைகளில் இருந்து மேலெழும்பும் விமானங்கள் கடல் மேலேயே எழும்புமாம். அப்படியும் ஓரிரு விமானங்கள் மேலெழும்புவதைப் பார்த்தோம். மெரினா கடற்கரையை விடச் சுத்தமாக இருப்பது போல் தெரிந்தது. மணலும் கூட வெளேர் என்று வேறொரு நிறத்தில் இருந்தது. இந்த வெள்ளை மணல்தானே கோவாவிலும் இருக்கும்! கிழக்குக் கடற்கரைப் பக்கம் செல்லும் போதெல்லாம் சுனாமி பயத்தோடே கடலைத் திரும்பித் திரும்பிப் பார்ப்பேன். அந்த பயம் அங்கே இல்லை. அரபிக் கடலில் எப்போதும் சுனாமி வந்ததே இல்லை என்ற தைரியந்தான். எல்லோரும் கடல் நீரிலும் மணலிலும் காலை நனைத்துக் கொண்டு வண்டிக்குத் திரும்பினோம். அருகில்தான் இஸ்கான் கோயில் இருக்கிறது என்று கூகுள் மேப்பும் டாக்சி ஓட்டுனரும் சொன்னார்கள். ஆனாலும் பெரிதாக ஆர்வம் இல்லை. நேரம் நிறைய விரயமாகிவிடும் என்கிற பயம் ஒருபுறம். கோயில் என்பது அப்படி அவசர அவசரமாகப் பார்க்கிற இடமாக இருக்கக் கூடாது என்கிற எண்ணம் ஒருபுறம். முன்பொருமுறை கூட்டத்தோடு கூட்டமாக பெங்களூர் இஸ்கான் கோயிலுக்குப் போய் எதிர்பார்த்த அளவு திருப்தி இல்லாமல் வணிகமயமாகிப் போன அதன் புதுமைக்காக வருத்தப் பட்டுத் திரும்பினோம். அந்த நினைவுதான் வந்தது.

முக்கியமாகப் பார்க்க விரும்பும் இரண்டு-மூன்று இடங்களின் பெயர்களைச் சொல்லி, டாக்சி ஓட்டுனரிடமே முழுப் பயணத் திட்டத்தையும் ஒப்படைத்தோம். அடுத்ததாக பாந்த்ரா-ஒர்லி கடல் இணைப்பைக் காணப் புறப்பட்டோம். அதற்கு ராஜீவ்காந்தி பெயர் வைத்திருக்கிறார்கள். அருமையான பாலம். பாந்த்ராவுக்கும் ஒர்லிக்கும் நடுவில் ஒரு சிறிய வளைகுடா இருக்கிறது. அந்த வளைகுடாவின் ஒரு முனை பாந்த்ரா. மற்றொரு முனை ஒர்லி. பாந்த்ராவில் இருந்து ஒர்லிக்கு சாலைவழி வர வேண்டும் என்றால் ஒரு சுற்றுச் சுற்றி வளைந்து வர வேண்டும். தொலைவு அதிகம். கடல்வழி வந்தால் மிகவும் அருகாமையில் இருக்கிறது. அதனை ஓர் அழகான பாலம் கட்டி இணைத்திருக்கிறார்கள். அழகென்றால், சாதாரண அழகில்லை. பிரம்மாண்ட அழகு! இலண்டனில் பார்த்த இலண்டன் பாலத்தை விட இது அழகாக இருப்பது போல் தெரிந்தது. இதைப் பார்த்த பின்புதான் மும்பையைப் பற்றிய பார்வை முற்றிலும் மாறுகிறது. உலகத் தரம் உலகத் தரம் என்பார்களே, இதுதானா அது என்று புரிபடுகிறது. அப்படியே இறங்கினால், இந்தியாவின் வணிகத் தலைநகரத்தின் முக்கியக் கட்டடங்கள் அனைத்தும் நிறைந்த தெற்கு மும்பை வருகிறது. அதற்குப் பின்பு எல்லாமே பிரம்மாண்டம்தான்.

தெற்கு மும்பைதான் பழைய மும்பை. பம்பாயாக இருந்த மும்பை. அங்குதான் அனைத்து முக்கிய வணிகக் கட்டடங்கள் அனைத்தும் இருக்கின்றன. பழைய பிரிட்டிஷ் காலத்துக் கட்டடங்களும் ஒழுங்கும் இருக்கின்றன. எங்கும் அகலமான சாலைகள். வீடுகள் நிறைய இல்லை. சேரிகள் இல்லவே இல்லை. ஒருவேளை நாங்கள் பார்க்கவில்லையோ என்னவோ. தெற்கு மும்பை மூன்று பக்கம் நீட்டிக் கொள்ள முடியாமல் கடலால் அடைக்கப்பட்டுக் கிடக்கும் ஒரு தீபகற்பம். வடக்கே மட்டுமே நீட்டிக் கொள்ள முடியும். அதனால்தான் வடக்கு மும்பைப் பக்கமே அனைத்துப் புறநகரப் பகுதிகளும் வந்திருக்கின்றன. இங்கே பணிபுரிகிறவர்கள் எல்லோரும் அங்கேதான் வசிக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் தினமும் பல மணி நேரம் பயணத்தில் கழிக்க வேண்டியுள்ளது. தெற்கு மும்பையை மட்டும் பார்த்து விட்டுத் திரும்பும் ஒருத்தர் இந்தியாவை ஏழை நாடு என்றோ வளரும் நாடு என்றோ சொல்லவே மாட்டார். ஒரு வளர்ந்த நாட்டுக்குரிய அத்தனை கூறுகளும் அங்கே இருக்கின்றன. சென்னையில் இருக்கும் கிழக்குக் கடற்கரைச் சாலையைப் போல, அங்கே ‘மெரைன் டிரைவ்’ என்றொரு மேற்குக் கடற்கரைச் சாலை இருக்கிறது. அது இன்னொரு வளைகுடாவை ஒட்டி அடிக்கப்படும் அரைவட்டம். சரியான அந்தி வேளையில் அதைக் கடக்கும் போது நாம் நியூ யார்க் என்று இணையத்தில் பார்க்கும் படங்களுக்கு இணையான அழகுக் காட்சிகள் பல கிடைக்கின்றன. சுதந்திர தேவி சிலை மட்டுந்தான் விடுபடுகிறது. மற்ற எல்லாம் அப்படியே இருக்கிறது.

இதற்கிடையில் ஹாஜி அலி தர்கா என்று ஒன்று வந்தது. தர்கா கடலுக்குள் சில நூறு கிலோ மீட்டர்கள் தள்ளி இருக்கிறது. தரைக்கும் அதற்கும் ஒரு பாலம் இருக்கிறது. சில நேரங்களில் கடல் நீர் மேலெழும்பி பாலத்தை மட்டும் மறைத்து விடுமாம். ஆனால் தர்காவுக்குள் நீர் வராதாம். அப்போது மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப் படுமாம். நமக்கு வழிகாட்டியாகவும் ஆன ஓட்டுனர் முழுக்க முழுக்க இந்தியில் பேசியதால் நம்மால் ஒரு குத்துமதிப்பாகத்தான் புரிந்து கொள்ள முடிந்தது. பின்னால் அமர்ந்திருக்கும் குடும்பத்துக்கு அதைத் தமிழில் வேறு மொழி பெயர்த்துச் சொல்லும் கடும் பணியையும் திறம்படச் செய்ய வேண்டியிருந்தது. வீட்டுக்காரருக்கு இம்புட்டு இந்தி தெரியுதேன்னு வீட்டுக்காரிக்குப் பூரிப்பான பூரிப்பு! நமக்குத் தானே தெரியும் நம்ம பாடு!! அடுத்து வான்கடே ஸ்டேடியம் வந்தது. நாம் சின்ன வயதில் இருந்து பார்த்த பல டெஸ்ட் போட்டிகளையும், பகலிரவு-ஒருநாள் இறுதிப் போட்டிகளையும், அரையிறுதிப் போட்டிகளையும் நடத்திய ஆடுகளம். அடுத்து தீபகற்பத் தெற்கு மும்பையின் தென்கோடி இரயில் நிலையமான சர்ச்கேட். அதற்குத் தெற்கேயும் சிறிது நிலம் இருக்கிறது. அது இராணுவத்துக்குச் சொந்தமான இடமாக இருக்கும் போலத் தெரிகிறது. சர்ச்கேட்டை ஒட்டியே அவர்களின் மராட்டிய சட்டமன்றக் கட்டடமான மந்த்ராலயம் மற்றும் மராட்டிய உயர்நீதி மன்றம் ஆகியவை உள்ளன. இதுவே நரிமன் பாயிண்ட் என்றழைக்கப்படும் பகுதி.

முன்மாலைப் பொழுதில் ‘மெரைன் டிரைவ்’ வழியாகப் பயணித்து இந்தியாவின் நுழைவாயில் (‘GATEWAY OF INDIA’) போனோம். அந்த நுழைவாயிலில் என்ன எழுதியிருக்கிறது என்பது பற்றிய விபரங்களை மகள் தெரிந்து கொள்ள விரும்பினாள். படித்துப் பார்த்த போதுதான் தெரிந்தது. அதுவும் இந்தியாவின் அடிமைக் காலச் சின்னங்களில் ஒன்றுதான் என்று. அப்போதைய பிரிட்டிஷ் மன்னரின் வருகையை ஒட்டி அவரை மகிழ்விக்கக் கட்டப்பட்டதாம். இதில் இந்திய அடிமைத்தனத்தின் சின்னம் என்று சொன்ன தகவல் மகளுக்கு வெகுவாகப் பிடித்து விட்டது. அதன் பின்பும் அது பற்றியே அடிக்கடிப் பேசினாள். அதற்கு எதிரிலேயே அதை விட முக்கியமான இடமாகி விட்ட தாஜ் ஓட்டல் இருக்கிறது. அதன் முன்பு நின்று குடும்பத்தோடு படம் எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்தப் பயணமே பொய்யாகி விடுமே! நாங்களாகவே பல படங்களும் முப்பது ரூபாய் கொடுத்து அங்கிருந்த பல புகைப்படக்காரர்களில் ஒருவரிடம் ஒரு படமும் எடுத்துக் கொண்டோம். அந்த இடத்தை விட்டு அகலும் வரை (அதற்குப் பின்பும் கூட) தாஜ் ஓட்டல் பயங்கரவாதிகளால் முற்றுகையிடப்பட்டுத் தாக்கப்பட்ட நிகழ்வுகள் மனதுக்குள் ஓடித் துன்புறுத்தின. அவ்வளவு பெரிய சேதத்தில் இருந்து அந்த ஓட்டலை சில மாதங்களிலேயே மீண்டும் சரி செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்டது வியப்புக்குரியதுதான். வெள்ளைக்காரர்கள் நிறையத் தங்குகிறார்கள் அங்கே. அப்படித் தங்குபவர்கள் எப்படி அந்த நினைவுகளை வெல்கிறார்கள் என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் இங்கு செலவிட்டு விட்டு மீண்டும் ‘மெரைன் டிரைவ்’-இல் பயணித்தோம். இப்போது நல்ல அந்தி வேளை. இன்னும் அழகாக இருந்தது. அந்தப் பகுதி முழுக்கவும் நல்ல சுத்தம். இப்போது வளைகுடாவுக்கு அந்தப் பக்கம் இருக்கும் முனையில் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டது குடும்பம். அங்கே விடச் சொன்னோம்.

தீன் பத்தி என்ற மும்பையின் மிகப் பணக்காரத்தனமான பகுதிகளில் ஒன்றான அங்கே சென்றோம். அங்குதான் முனையில் கடலை ஒட்டி அவர்களின் ஆளுநர் மாளிகை (ராஜ் பவன்) இருக்கிறது. தொங்கும் தோட்டம் ஒன்று உள்ளது. எங்கும் இறங்கவில்லை. அப்படியே ஒரு சுற்றுச் சுற்றித் திரும்பினோம். வழியில் அம்பானியின் ஒலகமகா வீடு வந்தது. நன்றாகப் பார்க்க முடியவில்லை. நம்ம ஊர்க் காசுக்கடை பஜார் போல, நகைக்கடைகள் நிறைந்த பஜார் ஒன்று வந்தது. நல்ல வேளை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் எல்லாம் பூட்டிக் கிடந்தன. அடுத்து, மும்பையின் முக்கிய இடங்களில் ஒன்றான சித்திவிநாயகர் கோயில் வந்தது. அங்கும் இறங்கவில்லை. திருப்பதி வெங்கடேசர் அளவுக்கு அளவிலாத பணம் புரளும் இடமாம். வண்டியில் அமர்ந்தபடியே பார்த்துக்கொண்டோம். அடுத்ததாக, வழியில், ஆசைப்பட்ட படியே, சச்சின் டெண்டுல்கரும் வினோத் காம்ப்ளியும் உருவான சிவாஜி பார்க்கைக் காட்டினார். அதைக் காட்டி, கூடுதலாக ஒரு தகவலையும் கொடுத்தார். அங்குதான் பால் தாக்கரே அடக்கம் செய்யப்பட்டிருக்கிறாராம். நல்லது! அடுத்து ஓரிடத்தில் (பாந்த்ரா என நினைக்கிறேன்) சலசலப்பான ஒரு கடைத்தெருவில் குடும்பத்துக்குத் துணிமணிகள் வாங்கிக் கொள்ள நிறுத்தினார். இருட்டிவிட்டது. பொறுப்போடு ஓரிரு துணிகள் மட்டும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு குர்லா லோக்மானிய திலக் இரயில் நிலையம் வந்தோம். அடுத்த சில மணி நேரங்களில் பெங்களூர் நோக்கிப் பயணம்.

என்னே ஒரு சுற்று! அரை நாளில் ஒரே டாக்சியில் மொத்த மும்பையையும் – அங்கே பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் அனைத்தையும் பார்த்து விட்டோம். நமக்குத் தெரியாத இந்தியில் பேச வேண்டியதிருந்தது என்பது தவிர்த்துப் பார்த்தால் நல்ல ஓட்டுனர். அவரும் இந்தப் பயணத்தின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணம் என்று சொல்ல வேண்டும். இன்னொன்று, அங்குள்ள எல்லா ஒட்டுனர்களையும் போலவே, அவரும் ஒவ்வொரு சிக்னலிலும் கதவைத் திறந்து கதவைத் திறந்து பான் பீடா எச்சிலைத் துப்பினார். அதனாலேயே ஏகப்பட்ட விபத்துகள் நடக்கும் போலத் தெரிகிறது. வலது புறம் வேகமாக வருகிற வண்டிகளைக் கவனியாமல் கதவைத் திறக்கும் போது எப்படி இடிக்காமல் இருக்க முடியும்! நாங்கள் ஒரு நாள் இருந்ததிலேயே இரு இடியையும் பல இடிக்குப் பக்கத்தில் சென்று வந்த காட்சிகளையும் பார்த்தோம். அதற்கும் சேர்த்தே அவர்களும் பழகியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். மற்றபடி, முன்பு பெங்களூர் வந்த மும்பை நண்பர்கள் சொன்னது போல, அங்கிருப்பவர்களின் சாலை ஒழுக்கம் நம்மை விடப் பரவாயில்லைதான் என்றாலும் பெரிதாக ஒன்றும் வேறுபாடில்லை. அங்கும் லூசுத்தனமாகக் குறுக்கே விழுவதை நிறையப்  பார்க்க முடிந்தது.

எல்லாத்துக்கும் மேல், மும்பையில் கொஞ்ச காலமாவது வாழ்ந்து விட வேண்டும் என்ற ஆசை இன்னும் அப்படியே இருக்கிறது அல்லது கூடியிருக்கிறது என்று சொல்லலாம். ஒரு நாள், அதுவும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில், டாக்சியில் வசதியாகச் சுற்றி விட்டு வருதல் என்பது வேறு; அங்கேயே குடியிருந்து வாழ்தல் என்பது வேறு. அதில் இருக்கும் சவால்கள் எதுவுமே இந்த ஒருநாளில் அனுபவிக்கவில்லை என்றே நினைக்கிறேன். மும்பை என்றாலே அதன் உள்ளூர் இரயில் வண்டிப்பயணம் முக்கியமானது. கரும்பு போல் கலையாத தலையோடு உள்ளே நுழைந்து, சாறு பிழிந்தெடுக்கப்பட்டபின் வெளியேறும் சக்கை போல் நைந்து வெளியேறுதல் பற்றி எவ்வளவோ கேள்விப் பட்டிருக்கிறேன். அதையும் ஒருமுறை அனுபவிக்க வேண்டுமே! சரி, வேண்டாம்! அதெதுக்குப் போட்டுக்கிட்டு... இப்படியே இருந்துட்டுப் போகட்டுமே! அதுதான் நமக்கும் மரியாதை... மும்பைக்கும் மரியாதை... மும்பையிலேயே பிறந்து வளர்ந்து அந்த அனுபவங்கள் கிடைக்கப் பெறாத பணக்காரப் பிள்ளைகள் இல்லாமலா இருப்பார்கள்! அவர்களில் ஒருவர் போல எண்ணிக் கொள்வோம்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி