செவ்வாய், மே 10, 2016

சக பயணி

தொடங்கிய இடத்திலேயே
உடன் தொடங்கி
முடிகிற இடத்திலேயே
உடன் முடிகிற
பயணத் திட்டத்தோடு வருகிற
சக பயணி என்று
எவருக்கும்
எவரும்
இருந்துவிட முடியாத பயணம் இது

உடன் தொடங்கி
பாதியில் பிரிந்து செல்கிறவர்களின்
பாதை மாற்றிக் கொள்ள வேண்டியவர்களின்
இடங்களை நிரப்ப
இடையில் இணைந்து
இறுதிவரை வரப்போகிறவர்கள் இருக்கிறார்கள்

தொடக்கத்திலும் இல்லாது
இறுதியிலும் இல்லாது
இடையிடையில் இணைந்து
இங்கொன்றும் அங்கொன்றுமாக உருவாகும்
இடைவெளிகளை நிரப்பி
உடனடியாகவும்
ஓரளவு உடன் பயணித்தும்
இடையிடையிலேயே பிரிகிறவர்கள்
எல்லோருமே
நிரப்ப முடியாத
நிரந்தர இடைவெளிகள்
உருவாக்கிச் செல்வதில்லை

அப்படிப் பிரிந்தும் பிரியாத
சக பயணியர் எல்லோருமே
கற்றுக் கொடுத்துவிட்டுப் போகும்
பாடம் ஒன்றுதான்

மற்றவர்களின் பயணத்தில்
குறைந்தபட்சம்
உற்றவர்களின் பயணத்தில்
அப்படியான ஒரு சக பயணியாக
இருந்து பிரிவது எப்படி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...