திங்கள், மே 30, 2016

மழைக் காதல்

மழைக்கும்
காதலுக்குமான
உறவுதான் என்ன?
ஜில்லென்ற சூழலும்
அது தரும்
ஜில்லென்ற உணர்வும்
அது போன்றதேயான
ஜில்லென்ற நினைவுகளைக்
கிளர்வது தவிர்த்து
வேறேதும் இருக்கிறதா?!
மழையில் நனைந்த
காதலர் மட்டுமா
மழை கண்டு
கிளர்ச்சியுறுகின்றனர்?!
காதலில் நனைந்த
எல்லோருந்தானே
மழை காணும் போதெல்லாம்
மீண்டும் ஒருமுறை
நனைந்து கொண்டாடிக் கொள்கின்றனர்!
மழை
மண் வாசத்தை மட்டுமா
கிளப்புகிறது?
கூடவே
அது போலவே
நெடுங்காலமாய்
அடங்கிக் கிடக்கும்
மன வாசங்களையும் அல்லவா
கிளப்பி விடுகிறது!
இந்தக் கிளப்பி விடுதலில்தான்
காதலரெல்லோரும்
மழை மீது
காதல்வயப்பட்டுவிடுகின்றனரோ?!
இங்கிருந்த நீர்தான்
இடையில் இல்லாமல் போயிருந்தது
அதை மட்டுமா இப்போது
மாரியாய் மாற்றி வந்து பொழிவிக்கிறது?
அது போலவே
கூடவே இருந்து
பின்னர்
இல்லாமல் போனவற்றையுந்தானே
நினைவுகளாய் மாற்றி வந்து பொழிவிக்கிறது!
இந்தப் பொழிவித்தலில்தான்
காதலரெல்லோரும்
மழை மீது
காதல்வயப்பட்டுவிடுகின்றனரோ?!
காய்ந்து கிடந்தவர்
நனைந்து களிக்கையில்
காய்ச்சல்தானே வரும்!
சிலருக்கோ
நனைந்த களிப்பினும் பெருங்களிப்பு
அதையடுத்து வரும்
காய்ச்சல் தரும் களிப்பு!
ஓய்வில்லாத உலகியல் ஓட்டம்
உயிர் வைத்திருக்கிற
ஒரு சில இன்பங்களில் ஒன்று
இக் காய்ச்சல்வயப்படல்!
இந்தக் காய்ச்சல்வயப்படுத்தலால்தான்
காதலரெல்லோரும்
மழை மீது
காதல்வயப்பட்டுவிடுகின்றனரோ?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...