செவ்வாய், மே 17, 2016

வெறுப்பு விளையாட்டு

இருந்ததே ஐவர்தாம்
அதற்குள்ளும் எதற்கு வெறுப்பு வந்தது?

நீங்கள் நால்வரும்
நிம்மதியாக இருந்த என்னை
ஒன்று கூடி வெறுத்திராவிட்டால்
ஒதுக்கியிராவிட்டால்...

நான் ஏன்
உங்களுக்குள்
சண்டை மூட்டியிருக்கப் போகிறேன்!

முதன்முதலில்
இருப்பதிலேயே பலவீனமான
ஐந்தாமவரை
அடித்துத் துரத்தத்தான்
உணர்வாளர்கள் நாம்
நால்வரும் ஒன்றிணைந்தோம்
கூட்டு முயற்சியில்
அதை வெற்றிகரமாகச் செய்தும் முடித்தோம்

அடுத்ததாக நால்வர்தாம் நாம்
அதற்குள்ளும் எதற்கு வெறுப்பு வந்தது?

அப்போது
எளிதில் வீழ்த்த முடிந்த
நான்காமவரைத்தான்
நாம் எல்லோரும் இணைந்து அழித்தோம்!

ஆயிரம் இருந்தாலும்
நாம் மூவரும்
ஒருதாய் மக்கள் இல்லையா?

முடிவில் மூவர்தானே இருக்கிறோம்?
அதற்குள்ளும் எதற்கு வெறுப்பு வருகிறது?

வராமல் எப்படி இருக்கும்?
யாருக்கு மறந்தாலும்
முதன்முதலில்
உங்களின் வெறுப்பு விளையாட்டுக்கு
இரையான என்னால்
எப்படி எதையும் மறக்க முடியும்?

அப்படியே நான் மறந்தாலும்
உணவு, உடை, உறைவிடம் போல்
வெறுப்பும் அடிப்படைத் தேவையாகிவிட்ட
வாழ்வைப் பழகிவிட்ட நீங்கள்
மறந்து விடவா போகிறீர்கள்?

ஒன்றுபடுவோம்!

ஒவ்வொருவராக வெறுத்தழிப்போம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...