சனி, மே 14, 2016

தேர்தல்

ஒவ்வொரு தேர்தலும் 
நம் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் 
அம்பலப்படுத்தியதைவிட
நம்மையும் நம்மைச் சுற்றியிருப்பவர்களையுந்தான் 
அதிகமாக அம்பலப்படுத்தி விடுகிறது

நாட்டு நலனோ 
வீட்டு நலனோ
பாதிக் கடவுளாகிவிட்ட யாரோ ஒரு தலைவர் மீதான 
நம் தகுதிக்கு மிஞ்சிய விருப்பும் வெறுப்பும் 
நம் இழிவான பல நியாய உணர்ச்சிகளுக்கு
வெளிச்சம் பாய்ச்சி விடுகின்றன

அரசியல் பேசி 
அடைந்த உறவுகள் எத்தனை
இழந்த உறவுகள் எத்தனை 
கூட்டிக் கழித்துப் பார்த்தால் 
எல்லோருக்குமே 
இழப்புக் கணக்காகத்தான் இருக்கிறது

இழிவான மனிதர்களை 
இனம் கண்டு கொண்டு விட்டதாக
வெளியில்  
நன்றி கூறி நகர்ந்தாலும் கூட
அந்த ஒரேயோர் உரையாடலை மட்டும் தவிர்த்திருந்தால் 
அன்று தவிர்த்து
என்றுமே வெளிவந்திட வாய்ப்பிராத
அவர்களின் இழிவான முகத்துக்கு 
மேடை அமைத்துக் கொடுத்த
இழிவில் இருந்து தப்பியிருக்கலாமோ என்று
ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்பும் வரும்
உணர்ச்சிகள் வடிந்த ஒரு பின்னிரவில்
தோன்றித்தானே தொலைக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...