அரசாங்க வேலை: கடமையும் உரிமையும்!
இங்கே உழைப்புக்கு மதிப்பில்லை. முதலாளிகள் சுரண்டிச் சுரண்டி நாட்டைச் சுடுகாடாக்கி விட்டார்கள். ஆனால், சுரண்டப் படும் உழைப்பாளிகளின் வர்க்கத்தை உய்விக்க வந்த மகான்கள் நிறையப் பேர், முதலாளிகளிடம் திருட்டுத் தனமாகப் பணம் வாங்கிக் கொண்டு, இரட்டை வேடத்தில் பட்டையைக் கிளப்புகிறார்கள். அவர்களின் வாழ்க்கையோ சுகமோ சுகம்!
ஆசிரியர்கள் பலரின் அநியாயமோ அதை விடப் பெரிது. சக ஆசிரியர்களுக்கு வட்டிக்குக் கொடுத்தல், சீட்டு நடத்துதல், மற்றும் பல சீரிய தொழில்கள் செய்தல் ஆகியவை எல்லாம் முதன்மைப் பணி ஆகி விட்டதால், பாடம் நடத்துதல் பக்கத் தொழில் (சைடு பிசினஸ்) ஆகி விட்டது. இதற்காகவே தினசரி தவறாமல் வேலைக்குச் செல்கிற வாத்தியார்களும் நிறைய உண்டு.
வங்கிகளிலும் அஞ்சலகங்களிலும் மற்றும் பல மக்கட் தொடர்பு அலுவலகங்களிலும் பணி புரியும் பல ஊழியர்களின் அதட்டலும் மிரட்டலும்... அப்பப்பா முதலாளிமாரை விட மோசம். ஏதோ அவங்க அப்பன் வீட்டுத் துட்டைக் கேட்கப் போனது போல மூஞ்சியை மாற்றிக் கொண்டு பேசுகிறார்கள்.
காலம் செல்லச் செல்ல ஊதியம் உயரும். பணி நிரந்தரம். எவரும் கேள்வி கேட்க முடியாது. எனவே என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலை. எல்லாத்துக்கும் இரண்டு மூன்று தொழில்கள் செய்யலாம்.
ஒரு காலத்தில் அரசுப் பேருந்துகளில் ஆட்கள் அதிகம் ஏறினால் நடத்துனர்கள் பலர் நாயாய்க் குரைப்பார்கள். ஓட்டுனர்களும் கூட்டத்தைப் பார்த்தாலே நிறுத்தாமல் விரட்டுவார்கள். இப்போது, ஏறும் ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து - அதாவது வருமானத்தைப் பொறுத்து - ஊக்கத் தொகை உண்டென்று சொல்லி விட்டதால், எல்லாமே தலை கீழாக மாறி விட்டது. இது போல ஏதாவது செய்து எல்லோரையுமே வழிக்குக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
இதில் வாத்தியார்களுக்கு ஊக்கத்தொகை கணக்கிடும் முறைதான் மிகச் சிக்கலானது. மாணவர்களின் மதிப்பெண்ணுக்கு ஏற்ப அவர்களின் ஊதியம் என்றால் எப்படி இருக்கும்? அப்பப்பா... நினைத்தே பார்க்க முடியவில்லை. சின்னஞ் சிறுசுகளைக் கொன்று கருவாடாக்கி விடுவார்கள். அது மட்டுமில்லை, அதிலும் ஊழல் நுழைந்து விடும் அப்புறம். வேண்டுமானால், இப்படிச் செய்யலாம் - ஒரு வாத்தியாரிடம் படிக்கும் மாணவர்கள் அவர்தம் வாழ்வில் அடைகிற வெற்றியைப் பொறுத்து, அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த வாத்தியார்களுக்கு எல்லாம் அந்த மாணவர்களின் சம்பளத்தில் இருந்தே ஒரு தொகை கொடுக்கிற மாதிரியான ஒரு முறைமை இருந்தால் எப்படி இருக்கும்? சூப்பர் இல்லையா?! சம்பந்தப் பட்டவர்கள் யோசித்துச் சொல்லட்டும்...
* என்னடா இவன், எல்லோரையும் தரக் குறைவாகப் பேசுகிறானே என்று நினைக்க வேண்டாம். அதனால்தான் கவனமாக பலர்-சிலர் என்றெல்லாம் பல இடங்களில் போட்டிருக்கிறேன். இது போன்றெல்லாம் நடந்து கொள்ளாத நல்லவர்கள், 'இது எனக்கில்லை!' என்று பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் மக்கள் எங்களின் மரியாதை என்றென்றும் உண்டு.
* 1998 நாட்குறிப்பில் இருந்து...
* 1998 நாட்குறிப்பில் இருந்து...
கருத்துகள்
கருத்துரையிடுக