நாட்குறிப்பு - ஒரு நதிமூலம்!


மிகச் சிறிய வயதில் இலவசமாகக் கிடைத்த டைரிகள் அன்றன்றைய நிகழ்வுகளைப் பதிவு செய்து வைக்கும் ஆர்வத்துக்கு அடிக்கல் நாட்டின. நான் பார்த்தவரை, அப்படி இலவசமாக டைரி கிடைக்கப் பெற்ற எல்லோருமே செய்த வேலை முதல் சில நாட்களோ வாரங்களோ அதிக பட்சமாக ஒரு மாதமோ ஏதோதோ எழுதி விட்டு அத்தோடு அடுத்த புத்தாண்டு வரை அந்தப் பழக்கத்தை மறந்து விடுவார்கள். அப்படிச் செய்தவர்களில் ஒருவர் என் சின்ன வயது நாயகர்களில் ஒருவரான நடராச மாமா. அதை விடக் கூடுதலாக நாட்குறிப்புகளை நிரப்பியவர்கள் பெரும்பாலும் தம் வியாபாரக் கணக்குகளை எழுதி வைத்த சில மாமாக்களே. நடராச மாமா சொந்தக் கதைகளை எழுதிய நாட்குறிப்பை முதல் மாதத்திலேயே கை விட்டு விடுவார் என்றாலும் வியாபாரக் கணக்குகளை எழுதிய நாட்குறிப்புகளைக் கிட்டத் தட்ட ஆண்டு இறுதி வரை விடாமல் நிரப்புவார். 

இந்தப் பழக்கத்தை எனக்கு ஆரம்பித்து வைத்த அவருடைய நாட்குறிப்புகளில் ஒன்றில் அதன் முதற் பக்கத்தில் "தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் வாழ்க்கைச் சக்கரத்தின் இரு அச்சாணிகள்" என்று எழுதி வைத்திருந்தார். இன்றும் எந்த நாட்குறிப்பைத் திறந்தாலும் அதன் முதற் பக்கத்தில் அந்த வரியைத் தேடுவது அனிச்சையான ஒரு தேடல் ஆகி விட்டது. புதிதாகக் கிடைக்கும் எந்த டைரியிலும் அதே வரியை எழுதி ஆரம்பிக்க வேண்டும் போல ஓர் ஆசை வரும். அதே வரியை எழுதா விட்டாலும் அது போன்ற ஏதோ சில அச்சாணிகள் பற்றி எழுதியே ஆரம்பித்தேன் ஒவ்வோர் ஆண்டுமே. காலம் போகப் போக அச்சாணிகளின் எண்ணிக்கை அதிகமானதால் எதைத்தான் எழதுவது என்ற குழப்பத்திலும் எழுதுவதற்கு இடம் இன்றியும் அந்தப் பழக்கத்தை விட்டு விட்டேன். எதுவுமே இல்லையென்றால் நாட்குறிப்பு எழுதும் பழக்கத்திலாவது அந்த வரியைக் கடைப் பிடிப்போம் என்று ஆரம்பித்து, நீண்ட காலமாக விடாப் பிடியாகத் தொங்கினேன். அதற்கும் ஒரு முடிவு வந்தது. அது பற்றிப் பின்னர் பேசுவோம். 

இப்படிச் சில காலம் மட்டும் நாட்குறிப்போடு வாழ்ந்து விட்டு, நடு வழியில் தீர்ந்து விடுகிற ஆட்களுக்கு மத்தியில், விதி விலக்கு என்றால், இருவரைச் சொல்லலாம். ஒருவர் - தமிழே எழுதப் படிக்கத் ததுங்கினத்தோம் போடும் காலத்தில் சாகும்வரை விடாமல் சொந்தக் கதைகளையும் தன் அன்றாடச் செலவு கணக்குகளையும் ஆங்கிலத்தில் எழுதி வைத்த என் தாத்தா. அவர்தான் என் வாழ்க்கை முழுக்க என் மாறாத நாயகனாகத் தொடர்வார் என்று ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக நம்பி வருகிறேன். நேரமும் ஆர்வமும் இருந்தால், அவர் பற்றிய இடுகையை இந்த இணைப்பில் படியுங்கள் - வேயன்னா. எதைச் செய்தாலும் கணக்குப் போட்டுச் செய்ய வேண்டும் (போகிற போக்கில் ஒரு செய்தி - அவர் ஒரு வியாபாரி அல்ல!) என்பதை அவரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எல்லோருமே சொல்லக் கேள்விப் பட்டதால் இதை மட்டும் அவரிடம் இருந்து எடுத்துக் கொண்டேன்.

இன்னொருவர் - நடராச மாமாவுக்கு அடுத்த மாமாவாகிய சந்திர மாமா. அவரும் ஒருவகையில் அந்தக் குடும்பத்தில் முதற் தலைமுறை வெற்றியாளர். படிக்கும் காலத்தில் இருந்தே தொடர்ந்து நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டிருந்திருக்கிறார். அவர் எழுதியது எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு பாதிப்பை உண்டு பண்ணியதற்கான காரணம் - நான் பிறந்த நாள் மற்றும் நேரத்தையும் அவருடைய நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்தார். அதைப் பார்த்த நிமிடம் முதல், அவர் மேலும் அவருடைய அந்தப் பழக்கத்தின் மேலும் ஒரு கூடுதற் பாசம். அவரும் ஆங்கிலத்திலேயே எழுதியிருக்கிறார். அது அவருடைய ஆங்கில அறிவை மென்மேலும் கூர்மைப் படுத்த உதவியது என்றும் அவர் நம்பியிருக்கிறார். ஆனால், அவரும் பின்னாளில் அந்தப் பழக்கத்தை விட்டு விட்டார். குடும்பம் குட்டி என்று ஆகும் போது, எல்லோருமே பாதியில் விடும் பழக்கங்கள் ஏராளம். புதிதாய் ஒன்று வரும்போது பழையது ஒன்று போகத்தானே வேண்டும்.

அந்த வயதிலேயே எல்லாப் பக்கங்களையும் நிரப்பிய இன்னும் சில நாட்குறிப்புகளையும் பார்த்து விட வேண்டும் என்றொரு பேராசை எனக்கு. அது நடக்கவே நடக்காது என்று முடிவு கட்டி, நானே அப்படியொரு நாட்குறிப்பு தயாரிக்கும் வேலையில் இறங்கினேன். சரியாக நினைவில்லை. முறையாக நான் எழுதிய முதல் நாட்குறிப்பு என் பதினைந்தாவது வயதில் நடந்தேறியது என நினைக்கிறேன். பத்தாம் வகுப்புப் படிக்கும் போது எழுதி முடித்த 1992-ஆம் ஆண்டுக்குரிய நாட்குறிப்பாக இருக்க வேண்டும் அது. அப்போதே என் நண்பர்கள் அதைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். நான் இல்லாத நேரத்தில் எடுத்து வாசித்து விட்டுக் கிண்டல் அடித்துக் கடுப்பேற்றுவார்கள். மனதில் நினைப்பதை முழுமையாக வெளிப்படுத்தத் தாய்மொழிதான் சரியான வழி என்பதை முழு மனதாக ஏற்றுக் கொண்டு பெரும்பாலும் தமிழிலேயே எழுதினேன். அப்படியே, என்னுடைய ஆங்கிலத்தையும் வளர்த்துக் கொள்வதற்காக இடையிடையில் அதையும் செருகிக் கொள்வேன்.

இந்தப் பழக்கத்தால் கிடைத்த பலன்கள் என்ன? ஒன்று - இந்தப் பழக்கம் ஆரம்பித்த பின்பு, அன்றாட வாழ்க்கையின் கோபங்களை - வெறுப்புகளைக் கொண்டு சென்று கொட்ட ஒரு குப்பைத் தொட்டி கிடைத்தது. அதே தொட்டியை அப்புறம் கொஞ்ச காலம் கழித்துக் கிளறிப் பார்த்தால் அது ஒரு புதையல் போலவும் இருந்தது. அந்த வேலையைத்தான் இன்று வலைப்பதிவு செய்து கொண்டிருக்கிறது. நம் உணர்வுகளுக்கு அது ஒரு நல்ல வடிகால் என்று ஆரம்பத்திலேயே யாரோ சொன்னதைக் கவ்விப் பிடித்துக் கொண்டேன். வடிகால் வடிகால் என்று சொல்லிக் கொண்டே நீண்ட காலம் ஓட்டினேன். தேவையற்ற உணர்வுகளுக்கு அப்போதைக்கு வடிகாலாக இருந்தாலும், பின்னர் அதுவே அதே உணர்வுகளைச் சுத்திகரித்துக் கொண்டு வரும் வேறு ஏதோவொரு காலாகவும் தேவையான உணர்வுகளையும் நினைவுகளையும் சேமித்து வைக்கும் கண்மாயாகவும் இருப்பது கண்டு அதீத மகிழ்வுற்றேன்.

பொதுவாக யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் எப்போதும் பேசவே மாட்டேன் என்கிற வாழ்வியற் கொள்கை ஏதும் இல்லாத ஆள் நான். மனது வலிக்கிற மாதிரி யார் என்ன செய்தாலும் அதை இன்னொருவரிடம் போய்ச் சொல்லிப் புலம்புவது எனக்கு எப்பவும் பிடித்த வேலை. அது வலியைக் குறைக்கும் என்பதால். அதுவும், எதுவுமே அதிகமாக வலிக்கிற ஆளாக இருந்ததால் அதைத் தவிர்க்க முடியாது. என்னைப் பற்றி யாரும் இன்னொருவரிடம் போய்ப் புலம்பினாலும் அது பற்றிப் பின்னர் அறிய நேர்ந்தால் அதற்காக வருந்துவேனே ஒழிய, "அதெப்படி நான் இல்லாத இடத்தில் என்னைப் பற்றி இப்படியெல்லாம் பேசலாம்? என்னிடமே வந்து சொல்லியிருக்கலாமே!" என்று வாழ்வியல் நெறிமுறைகள் பற்றிப் பேசுவதும் இல்லை. நான் கொட்டிய குப்பையை என்னிடமே வந்து கொட்ட வேண்டியதில்லை; அதைப் போய் வேறொருவரிடம் கொட்டினாலும் தப்பில்லை - பரவாயில்லை என்கிற மாதிரியான எண்ணவோட்டம்.

இப்படி யாரையாவது தேடிப் பிடித்துத் தேடிப் பிடித்துப் புலம்புவதில் பல சிக்கல்கள் வந்தன. பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயங்கள் வந்தன. அதில் மென்மேலும் குப்பைகள் வந்து குவிந்தன. இதற்கெல்லாம் முடிவாக இந்த நாட்குறிப்பெழுதும் நற்பழக்கம் வந்து சேர்ந்தது. ஒரு சக மனிதனிடம் புலம்புவது போலவே ஒவ்வோர் இரவும் என் நாட்குறிப்போடு புலம்பினேன். அதுவும் நான் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொள்ளும். ஒரு நாளும் எதிர்த்துக் கேள்வி கேட்காது. "நீ என்ன யோக்கியமா?" எனாது. யாரிடமும் போய்ப் போட்டுக் கொடுக்காது. என்னைப் பார்த்துக் கை கொட்டிச் சிரிக்காது. 

நாள் முழுக்க எண்ணிலடங்காக் காட்சிகள் கண்டு, அவை ஒவ்வொன்றையும் பற்றி அவசியம் இல்லாத அளவுக்கு அளவிலாது சிந்தித்து, அவை அனைத்தும் பற்றி யாரிடமாவது பேசலாம் என்று போய் உட்கார்ந்தால் அது ஒரு பெரும் அறுவைக் கச்சேரி ஆகி விடும் எதிராளிக்கு. எதிராளி எதிரி கூட ஆகி விடுவார். இந்தப் பிரச்சனையும் தீர்ந்தது நாட்குறிப்பு வந்து சேர்ந்த போது. அது இது என்றில்லாது எது பற்றி வேண்டுமானாலும் பேசலாம் அதோடு. நீங்களும் வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன். நான் சொல்வதை ஒத்துக் கொள்வீர்கள். நாட்குறிப்பை மட்டும் சந்தித்திரா விட்டால் நானொரு மாபெரும் கிசு கிசுப் பேர்வழி ஆகி இருப்பேன். 

அடுத்து, சின்ன வயதில் இருந்தே எழுதுவதில் ஒரு தீராத ஆர்வம். நண்பர்களில் யாருக்குத் திருமணம் என்றாலும் கவிதையாக வாழ்த்தட்டை அடித்து வழங்குவார் நடராச மாமா. அவருக்கிருந்த எழுத்தார்வத்தைப் பட்டை தீட்டிக் கொள்ள அவருக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பு அதுதான். அப்படி அவர் கவிதைகள் எழுதும் போது சில நேரங்களில் வார்த்தைகள் எடுத்துக் கொடுப்பேன். பாராட்டுவார். தமிழ்ப் பாடத்தில் வரும் கதைகளில் ஆரம்பித்த ஆர்வம், நடராச மாமாவின் கவிதை எழுதல்களில் தட்டிக் கொடுக்கப் பட்டு, இளங்கோச் சித்தப்பா வந்து பேனா கொடுத்து விட்டுப் போன நாளில் இருந்து மூர்க்கம் பெற்றது. 

அடங்காத அலங்கால்லூர்க் காளையாக இருந்த அந்த ஆர்வத்துக்கும் களம் அமைத்துக் கொடுத்தது நாட்குறிப்பே. குளிக்கப் போகையில் பட்டுப் பூச்சி (பட்டாம் பூச்சி அல்ல, பட்டுப் பூச்சி! அது உண்மையான பட்டுப் பூசியும் அல்ல என்று பின்னாளில் பெரியவர்கள் சொல்லிப் புரிந்து கொண்டோம்!) பார்த்தது முதலான அத்தனை சின்னச் சின்ன நிகழ்வுகளையும் அந்த வயதுக்கே உரிய நடையில் - சொற்களுக்கு இங்கும் அங்கும் இடம் மாற்றி இடம் மாற்றி இருக்கை அமைத்துக் கொடுத்து, எனக்குள்ளேயே இலக்கியம் படைத்து விட்டதாக இறுமாந்து கொள்வேன்.

இதில் தாத்தா பாணியில் வரவு செலவுக் கணக்குகளும் அடங்கும். ஒவ்வொரு நாளும் கொடுக்கப் படும் ஐம்பது பைசாத் துளிகள் எப்படி ஓடையாகி - ஆறாகி - எந்தக் கடலில் கலந்தன என்கிற விபரம் இருக்கும். முஸ்மாள் கிரிக்கெட் அணிக்கான வரவு செலவு விபரங்களும் அதில் எழுதி வைக்கப்படும். அது மட்டுமில்லை. பின்னாளில் கிரிக்கெட் சார்ந்த கிறுக்கல்களுக்குத் தனி ஏடு போடும்வரை, முஸ்மாள் கிரிக்கெட் அணியின் மற்ற புள்ளி விபரங்கள், அனைத்து சர்வதேச அணிகளின் புள்ளி விபரங்கள், என் கனவு உலக அணி, என் ஆசை இந்திய அணி எல்லாவற்றுக்கும் அந்த நாட்குறிப்பே. 

அதென்ன முஸ்மாள்? முஸ்லிம் தெருவென்றும் பெருமாள் கோவில் தெருவென்றும் இரு பெயர்கள் கொண்டிருந்த எங்கள் தெருவில் இருந்து கிளம்பிய கிரிக்கெட் அணிக்கு இட்ட பெயர். நான் இட்டதென்பதால், அந்தப் பெயரை என்னைத் தவிர யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. என் நாட்குறிப்பைத் தவிர வேறெங்கும் அதற்கு இடம் இருந்ததா என்றும் தெரியவில்லை. அடுத்தடுத்து பெருமாள் கோயில், பள்ளி வாசல், தேவாலயம் என்று மூன்றும் ஒரே இடத்தில் அமையப் பெற்ற அருங்காட்சித் தெரு எங்களுடையது. 

அன்று முதல் இன்று வரை எங்கு போனாலும் இந்தக் கணக்குப் பார்க்கிற வேலை மட்டும் என்னுடையதாகவே இருக்கிறது. கொஞ்ச காலம் முன்பு வரை திருமண வீடுகளில் மொய் எழுதும் வேலையையும் என் தலையிலேயே கட்டிக் கொண்டிருந்தார்கள். வருவோரிடம் போவோரிடம் பார்க்க - பேச முடியவில்லை என்று வம்படியாக மறுத்து விட்டேன் ஒரு கட்டத்தில். கொஞ்ச காலம் மட்டும் கெட்ட பெயர். அவ்வளவுதான். மொய் வேலையைத் தொடர்ந்திருந்தால் அடைந்திருக்கும் இழப்பை விட அது குறைவுதான்.

அடுத்ததாக, படித்ததில் பிடித்ததெல்லாம் என் நாட்குறிப்புகளில் ஏறி விடும். கேட்டதில் பிடித்தவையும்! தத்துவங்கள், பொன் மொழிகள், சொலவடைகள், முக்கியமானவர்களின் கருத்துகள், அப்போதைய நாட்டு நடப்புகளில் என் பார்வை, வேண்டியவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் ஏனைய முக்கிய நாட்கள், மற்றும் இன்ன பிற குறிப்புகள் என எல்லா விதமான தகவல்களும் அவற்றில் இடம் பெறும். இதில் பிறந்த நாட்கள் குறித்து வைப்பது சந்திர மாமாவிடம் பழகியது. ஆரம்பத்தில் இருந்தே, தனிப்பட்ட முறையில் பிறந்த நாள் கொண்டாடும் பண்பாட்டில் எனக்கு ஈடுபாடே இருந்ததில்லை என்றபோதும், இப்போதும் மற்றவர்களின் பிறந்த நாட்களை வாழ்த்தி ஆரம்பித்து வைக்கும் சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறேன். கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். 'இதென்ன வேலையற்ற வேலையாக... உனக்கு மட்டும்?!' என்றோர் உட்கேள்வி அவ்வப்போது வந்து இம்சிக்கிறது.

யாரோ குழப்பிய குட்டையில் விழுந்து, இடையில் ஒரு வருடம் (1996) எழுத வேண்டாம் என முடிவு செய்து, அத்தோடு நிறுத்தாமல், எழுதி வைத்திருந்த எல்லா வருட நாட்குறிப்புகளையும் சேர்த்து எரித்து வேறு போட்டு விட்டேன். படித்துப் பார்க்கையில் சிறு பிள்ளைத் தனமாக இருக்கிறது என்றொரு கூடுதற் காரணம் வேறு. அப்போது என்னவோ பெரிய ஆள் ஆகி விட்டது போன்ற நினைப்பு. இப்போது நினைப்பது போல. ஆனால், இப்போது வருத்தமாக இருக்கிறது. ஒருவேளை, இப்போது படித்தால், நான் அந்த வயதிலேயே எவ்வளவு முதிர்ச்சி பெற்றிருந்தேன் என்று என்னையே பாராட்டி இருந்திருப்பேனோ என்றொரு நினைப்பு. அதன் பின்பு 1997-இல் இருந்து எழுதிய எல்லா நாட்குறிப்புகளும் என்னிடம் உள்ளன இப்போது. அவை அனைத்திலும் குறிப்பெடுத்து வைத்திருக்கும் எல்லாத்தையும் வலைப்பதிவில் ஏற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத ஆரம்பித்தது இப்படி வந்து நிற்கிறது (அல்லது நீள்கிறது!).

நாட்குறிப்பு எழுத எனக்கிருந்த மிகப் பெரிய உந்துதல்களில் ஒன்று - பெரிய பெரிய தலைகள் எல்லாம் சுயசரிதை எழுதுகிறார்களே, அது போல நானும் ஒரு நாள் எழுத வேண்டி வரும்; அப்போது தகவல்களுக்கு அல்லாடக் கூடாதே என்றொரு நினைப்பு வேறு. எவ்வளவு பெரிய மண்டைப் பார்ட்டியாக இருந்திருக்கிறேன் பாருங்கள். அதன் பிறகு ஒரு சிந்தனை வந்தது. அது என்ன சிந்தனை தெரியுமா? சுய சரிதை என்பது எதுவெல்லாம் காலம் கடந்து மக்களின் மனதில் (உரியவரின் மனத்திலும் சுற்றத்தார் மனத்திலும்) நிற்கின்றனவோ அவை மட்டுமே கொண்டிருக்க வேண்டுமே ஒழிய, எண்பது வருட நாட்குறிப்புகளில் இருந்து திரட்டி எழுதப் படக் கூடாது. 'அப்படி எழுதுவது எப்படி நிகழ்வுகள் நிறைந்த வாழ்க்கையாகும்?' என்றொரு கேள்வி. அதுவும் ஒரு காரணம் எரிப்பு விழாவுக்கு. எப்படி இருக்கிறது கதை? சரிதானே!

அதன் பின்பு, திருமணத்துக்குப் பின் ஓரீர் ஆண்டுகள் வரை அந்தப் பழக்கம் தொடர்ந்தது. தினமும் இரவு குறிப்பிட்ட நேரம் செலவழித்து எழுதிய பின்புதான் தூங்குவேன் என்கிற பிடிவாதம், மறுநாள் காலை நேரத்துக்கு எழுவது முதல் பயண நேரங்களில் எழுத முடியாமல் தவிப்பது வரை பல விதமான மன உளைச்சல்களைக் கொடுத்தது. எதையும் சுவைத்துச் செய்ய முடிந்தால் மட்டுமே அதைச் செய்ய வேண்டும்; இல்லையேல், அப்படியே விட்டு விட வேண்டும் என்கிற ஒரு தத்துவம் வேறு இடைக்காலத்தில் வந்து ஈர்த்தது. அதற்கு மடங்கி அப்படியே விட்டு விட்டேன். இப்போதைக்கு மீண்டும் எழுதத் தொடங்குவதாக எண்ணமேதும் இல்லை. காலம் கட்டளையிட்டால் பார்க்கலாம். அதைத்தான் வலைப்பதிவில் செய்கிறோமே! அப்புறம் என்ன வேண்டிக் கிடக்கிறது?!

வலைப்பதிவு செய்ய ஆரம்பித்த போது, ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் விழுந்தன. நாட்குறிப்பில் எழுதுவது போலவும் எழுதிக் கொள்ளலாம். பிடித்தவர் படிக்கட்டும்; பிடியாதவர் நடக்கட்டும் என்று எந்தக் கவலையும் இல்லாமல் எழுத முடிந்தது. "வெளியில் சொல்ல முடியாத அளவு சொந்தக் கதையெல்லாம் எப்படிச் சொல்லுவ? எப்படிச் சொல்லுவ?" என்கிறீர்களா? அப்படியொன்று அதிகமாக இல்லாத ஆள் நான். அதனால் பிரச்சனை இல்லை. 

இரண்டாவது மாங்காய் என்னவென்றால், எனக்குத் தான் எழுதுவது பிடிக்குமே. நிறைய எழுதப் பிடிக்குமே ஒழிய, புத்தம் புது வெள்ளைத்தாள் வாங்கி - அதில் எழுதி - உறை வாங்கிப் போட்டு - முகவரி தேடி - இதழ்களுக்கு அனுப்பி - வருமா வராதா என்கிற ரீதியில் போடுவார்களா போடமாட்டார்களா என்று நகத்தைக் கடித்து நகம் சார்ந்த சதையைக் கடித்து மண்டையைப் பிய்த்துக் கொண்டு திரிவதில் ஆர்வம் இல்லை. அதில் இன்னொரு பிரச்சனையும் உள்ளது. முதலில் அனுப்பிய சில படைப்புகள் சரியில்லாமல் போய், அவற்றை அவர்கள் நிராகரித்து விட்டால், வாழ்க்கை முழுமைக்கும் எழுதவே ஆர்வமும் நம்பிக்கையும் இல்லாமல் போய் விடக் கூடக் கூடும். இருக்கிற ஆட்கள் பற்றாதென்று அது எதற்கு இன்னும் நாலு பேரை நம் வாழ்க்கையைத் தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும் என்றொரு வறட்டுப் பிடிவாதம் வேறு. 

தேர்வு செய்தாலும் கூட நமக்கு முக்கியமாகப் படும் வரிகள் அவர்களுக்கு உப்புச் சப்பில்லாமல் இருக்கும். அதை நறுக்கி வீசுவார்கள். அதில் கொஞ்சம் மன உளைச்சல் ஏற்படும். அதையெல்லாம் தவிர்க்க விரும்பி, இப்போதைக்கு எழுத மட்டும் செய்யலாம் என்று நாட்குறிப்பிலும் ஒரு பக்கம் வீணாய்ப் போன வெள்ளைத் தாட்களிலும் எழுதி எழுதிக் கிழித்துக் கிழித்து எழுதி எழுதி என்று பிழைப்பை நடத்தினேன்.

இதெல்லாம் போக, எனக்கென்று சில வேடிக்கையான - குழப்பமான நம்பிக்கைகள் வேறு உண்டு. அவை யாவை? எடுத்துக்காட்டாக, எனக்கு அரசியல் மற்றும் இலக்கியத்தில் நிறைய ஆர்வம் உண்டு. அவற்றில் இரண்டிலுமோ அவற்றில் ஒன்றிலோ மிகப் பெரிய ஆளாகப் போகிறோம் என்றொரு நம்பிக்கையும் உண்டு. அப்படியானால், நான் என் மற்ற வேலைகளைப் போட்டு விட்டு, இவை இரண்டையும் அல்லது இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை நோக்கி என் பயணத்தைச் செலுத்த வேண்டுமா? இல்லை என்பது என் கருத்து. 

இவை இரண்டையுமே முழுக்க முழுக்க என் பிழைப்புக்காகவோ பெருமைக்காகவோ நான் செய்வதாக இருந்தால் அப்படிக் குறி வைத்து ஓடலாம். உண்மையிலேயே நான் அவற்றுள் நுழைவதற்கான காரணம் - சமூகத்துக்கு என்னை அர்ப்பணிப்பதாக இருந்தால், எனக்கான கடமையை நான் முதலில் ஒழுங்காகச் செய்ய வேண்டும். அதாவது, காலம் இப்போதைக்கு எனக்கென்று இட்டிருக்கும் பணியைத் திறம் படச் செவ்வனே செய்ய வேண்டும். ஏனென்றால், அதுதான் என் தகுதிக்கான வேலையாக இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்திருப்பது. போகிற போக்கில், என் நீண்ட காலக் குறிக்கோள்களையும் மனதில் வைத்து ஒவ்வொரு நாளும்  சிறிதளவு நேரம் செலவிட வேண்டும்.

அரசியலுக்கோ இலக்கியத்துக்கோ நான் தேவைப் பட்டால் அல்லது அதற்கு வேண்டிய அளவுக்கு என் திறமை வளர்ந்து விட்டதாக அங்குள்ளவர்கள் நினைத்தால், இயல்பாகவே நான் சென்று சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்வேன் என்பது என் நம்பிக்கை. அப்படியும் நான் போக முடியா விட்டால், ஒன்று - நான் அதற்கு லாயக்கில்லாதவன் அல்லது எந்தச் சமூகத்துக்கு நான் உழைக்க விரும்பினேனோ அந்தச் சமூகம் எனக்கு லாயக்கில்லாதது. இதில் ஆசை நிறைவேறாத ஏமாற்றத்துக்கும் இடம் இல்லாமல் போய் விடுகிறது.

இன்றைக்குத் தோற்றாலும் அதை வெற்றியாக மாற்றுவோர் அப்படிச் செய்வதன் நோக்கம் இரண்டில் ஒன்றுதான். ஒன்று - தன் சுய நலக் காரணங்களுக்காக எப்படியாவது அந்தப் பதவியை விடக் கூடாது என்பது. அல்லது - இந்த மக்களே என் சேவை வேண்டாம் என்றாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்; அவர்களுக்காகவே என்னை அர்ப்பணிப்பேன் என்பது. இரண்டாவது பிரிவில் இன்றைய சூழ்நிலையில் எவராவது இருப்பதாக நினைக்கிறீர்களா? அதாவது, சமூகம் என்னை நிராகரித்தால் அதைச் சரியென்றோ அல்லது அந்தச் சமூகத்துக்கு என்னைப் பயன் படுத்தும் தகுதி இல்லை என்றோ எண்ணிக் கொண்டோ என் அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும். அதுதான் முழுமையாக முதிர்ச்சியுற்ற சமூகத்துக்கும் பொது வாழ்க்கைக்கு வருவோருக்கும் அழகாக இருக்க முடியும்.

ஆகவே... பெரியோர்களே, தாய்மார்களே, கூடியிருக்கும் குலக் கொழுந்துகளே! நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், இப்போதைக்கு என் வலைப்பதிவைத் திண்ணையில் போடும் கட்டில் போல ஒரு திறந்த நாட்குறிப்பாக மட்டுமே பயன் படுத்துவேன் என்று கூறி, இத்தோடு என் உரையை முடித்துக் கொள்கிறேன். நாளை முதல், எதை எழுதுவதற்காக இந்த இடுகையைத் தொடங்கினேனோ அதைச் செய்ய ஆரம்பிக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி