தீதும் நன்றும்

எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என்னை விடாது துரத்திக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி - "இது நல்லவர்களுக்கான உலகமா? கெட்டவர்களுக்கானதா?" என்பதே. வெற்றியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் இன்ன பிற நல்லவையும் இரு சாராருக்குமே கிட்டுகின்றன. கடைசிவரை நல்லவனாக இருந்து, தான் சொர்க்கத்துக்குப் போவேன் என்கிற நம்பிக்கை தவிர்த்து, கடைசிவரை எதையுமே அனுபவிக்காமல் வீண் போனவர்கள் நிறைய. அதே போல், உலகப் பிறவிகளிலேயே கேடு கெட்ட சில பிறவிகள் கூட எத்தனையோ இனபங்களை - நல்லவைகளை அனுபவித்துச் சென்றும் விடுகின்றன. இது போன்ற பல வாழ்க்கைகளைப் பார்த்து, "நல்லவனாக வாழ்வதாக இருந்தால் நீ இந்தச் சமூகத்தில் வாழவே முடியாது!" என்று என்னுடைய நலம் விரும்பிகள் பலர் என்னிடம் சொன்னது போல, நானும் நிறையப் பேரிடம் சொல்லியும் இருக்கிறேன்.

அதே வேளையில், நல்லவர்களுக்கு மட்டுமே வாழ்க்கை நல்லாயில்லை; கெட்டவர்களுக்கெல்லாம் எல்லாம் நன்றாக இருக்கிறது என்றும் சொல்வதற்கில்லை. இது போன்ற திருட்டுத் தனங்கள் செய்தால், என்னதான் அனுபவித்தாலும் ஒருநாள் மாட்டியே ஆக வேண்டும். அதற்கு நல்லவனாகவே இருந்து விட்டால், கொஞ்சம் சொகுசாக - விரும்பிய படியெல்லாம் வாழ முடியா விட்டாலும், அது போன்று மாட்டிக் கொள்ள - அவமானப் பட வேண்டியதில்லையே என்றும் தோன்றும். அதற்காக, கெட்டவர்கள் எல்லோரும் மாட்டிக் கொள்கிறார்கள் என்றும் சொல்வதற்கில்லை. கடைசிவரை எதிலுமே மாட்டாமல் வாழ்க்கையை அனுபவித்து விட்டுப் போய் விடுகிறவர்களும் இருக்கிறார்கள். மாட்டினாலும் அதை அவமானமாகவே நினைக்காமல் வாழ்வோரும் இருக்கிறார்கள். நல்லவர்களும் செய்யாத தப்புக்கு மாட்டுகிறார்கள்.

இந்த இடத்தில், "நல்லவர் - கெட்டவர் என்பது பார்ப்பவர் பார்வையைப் பொறுத்தது!", "எனக்கு நல்லவர் உனக்குக் கெட்டவர்; உனக்கு நல்லவர் எனக்குக் கெட்டவர்!" என்ற தத்துவங்கள் வேண்டியதில்லை. சராசரியாகத் தன் பிழைப்புக்காகப் பிற உயிரினங்களைத் துன்புறுத்தாமல் தன்னால் முடிந்த அளவு பிறருக்கு நல்லது மட்டும் செய்து மடிவோர் நல்லவர். கூடுதலாக, சட்ட திட்டங்களுக்குப் பயந்து, சமூகம் குற்றம் என்று வைத்திருக்கிற மிக அடிப்படையான சில வேலைகளைச் செய்யாதவர் என்றும் வைத்துக் கொள்ளலாம். கெட்டவர் என்போர், பிறர் பிழைப்பைக் கெடுத்துத் தன்னையும் தன் குடும்பத்தையும் வாழ்விப்போர். ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டுக் கிளம்பினால் அன்று வீடு திரும்பும் முன் சில குடும்பங்களின் வயிற்றில் அடித்துத் தன் வீட்டுக்கு எடுத்து வர வேண்டியதை எடுத்து வருபவர் கெட்டவர். சட்ட திட்டங்களைச் சற்றும் மதியாதவர். சராசரி மனிதர்கள் குற்றம் என்று சொல்பவற்றையெல்லாம் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் செய்து கொண்டு, அவற்றுக்கெல்லாம் நியாயங்களும் வைத்திருப்போர் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

அடிக்கடி எனக்கொரு கேள்வி வரும். இந்த உலகம் நல்லவர்கள் மட்டுமே நிறைந்ததாக ஆக வாய்ப்பென்று ஒன்று இருக்கிறதா? இல்லவே இல்லையா? இல்லவே இல்லை என்றுதான் இப்போது தோன்றுகிறது. காரணம்? நன்னடத்தை அல்லது நற்பழக்கங்கள் அல்லது நல்லெண்ணம் என்பது பிறப்பிலேயே வர வேண்டும் - பிறந்ததில் இருந்தே கற்றுக் கொடுக்கப் பட வேண்டும் என்று நம்புகிறேன். அப்படியானால், இப்போதிருக்கிற கெட்டவர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு நல்லவற்றைத் தம் உயிரணுக்களிலும் அனுப்பி வைக்கப் போவதில்லை; பிறந்த பின்னும் கற்றுக் கொடுக்கப் போவதில்லை. நல்லவனாக இருந்தால் பிழைக்க முடியாது என்றுதான் அவர்களும் அவர்தம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள்.

இன்றைக்கு வியாபாரங்களின் அளவு பெரிதாகப் பெரிதாக, வளர்ந்து வரும் சிந்தனைகளில் ஒன்று என்னவென்றால், நியாயமான முறையில் செய்யப் படும் வியாபாரங்களே நீடித்து நிலைக்கும்; திருட்டுத் தனம் செய்வோர் எல்லாம் விரைவில் வீழ்ந்து போவர் என்பது. உண்மையில் அது சரியா தவறா என்பது தெரியவில்லை. ஆனால், அப்படியே பேசுவதுதான் இந்த உலகத்தின் எதிர் காலத்துக்கு நல்லது. முதிர்ந்த சமூகங்களில் எல்லாக் கருத்துக்களுமே அதை அடிப்படையாகத்தான் சொல்லப் படுகின்றன. அதனால்தான் பல பெரும் நிறுவனங்கள் வெளியிலாவது அது போன்ற தத்துவங்களைச் சொல்லிக் கொண்டு உள்ளுக்குள் திருட்டுத்தனங்கள் செய்து வருகின்றன. நான் அடிக்கடிச் சொல்வது இதுதான். கெட்டவர்கள் கூட நல்லவர்கள் போல் நடித்தால்தான் வாழ்க்கை அவர்களுக்கு எளிதாகிறது. அதுவே போதும். கெட்டவனாய் இருப்பதை விட நல்லவனாய் இருப்பதே மேல் என்று நிரூபிக்க. இல்லையா?

இத்தகைய ஒரு சிந்தனையின் விளைவாக, வெளியில் நல்லவராக இருப்போர் மட்டுமல்லாமல், எதைச் சொன்னாலும் நம்பிக் கொள்ளும் நம் போன்ற நிறையப் பேர், உண்மையிலேயே நல்லவனாக இருப்பதே வெற்றிக்கு வழி என்று நம்பி, அப்படியே வாழவும் ஆரம்பித்து விட்டார்கள். இப்படியே அறிவியலும் தொழில்நுட்பமும் சிந்தனையும் கொஞ்சம் கொஞ்சமாக வளரும்போது என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது என்றால், இது போன்று நல்லவனாக வாழ்ந்து வளரலாம் என்று ஆசைப் பட்டு எல்லைக்கு இந்தப் பக்கம் வருவோர் எண்ணிக்கை கூடலாம். அது கூட வளர வாய்ப்புள்ளது என்பதற்காகத்தான் நல்லவனாக விருப்பம். எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் நல்லவனாகவே இருக்க நாம் என்ன ஈனா வானாவா? அப்படியே அது ஒரு வெற்றிக்கான சூத்திரம் என்று உறுதியாக நிரூபிக்கப் பட்டால் இந்த உலகம் பல நூற்றாண்டுகளுக்குப் பின் நல்லவர்கள் மட்டுமே நிறைந்ததாக மாற வாய்ப்புள்ளது.

இதையெல்லாம் மீறி நல்லவனாக இருப்பதில் இருக்கும் ஒரு மன நிம்மதிக்காகவே நல்லவனாக இருந்து மடிவோரும் நிறைய இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பொருத்த மட்டில், "நல்லவனாக இருப்பதால் வரும் பிரச்சனைகளைச் சமாளிக்கக் கூட என்னால் முடியும். கெட்டவனாக மாறி, அதனால் வரும் பிரச்சனைகளைச் சமாளிக்கும் திறமை எனக்கில்லை. எனவே, இப்படியே இருந்து விட்டுப் போகிறேன்!" என்கிறார்கள். அல்லது, "முடிவு என்ன? அதனால் கிடைக்கும் பலன் என்ன? என்பதையெல்லாம் விட்டு விட்டு, மனிதனாகப் பிறந்தவன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று எனக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது; அல்லது அப்படி நம்புகிறேன்; அதனால், அப்படியே இருந்து விடுகிறேனே!" என்கிறார்கள். இது ஒரு நல்ல சிந்தனையாக இருக்கிறதல்லவா?!

"என்றோ ஒருநாள் வரப்போகிற அல்லது வராமலே போய் விடப் போகிற ஒரு பிரச்சனையை நினைத்துக் கொண்டு எதற்காக நான் என் வாழ்க்கை முழுமையையும் வீணடிக்க வேண்டும்? வந்தால் அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம். அதுவும் அவமானம் என்று நினைத்தால்தானே அவமானம்? அதையும் வாழ்க்கையின் ஓர் அங்கமாகப் பார்க்கப் பழகி விட்டால், அதற்கான முதிர்ச்சியை (!) வரவழைத்துக் கொண்டால், அது ஒரு பிரச்சனையாகவே இராது!" என்கிறார்கள் இன்னொரு சாரார். அதுவும் எளிதில் ஈர்க்கும் சிந்தனையாகவே உள்ளது. 'நல்ல' சிந்தனை என்று சொல்ல முடியாது எனினும். "சில பிடிவாதங்களைத் தளர்த்திக் கொண்டால், சுக போகமாக வாழ முடியும் என்றால் அப்புறம் ஏன் பிழைக்கத் தெரியாதவனாக லோல் பட வேண்டும்?" என்கிறார்கள்.

இன்னொரு பிரச்சனையும் உள்ளது. கெட்டவர்கள் சூழ்ந்திருக்கும் போதுதான் நிறையப் பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் நல்லவர்களாக நிறைந்திருக்கும் இடத்தில் அதில் சிலர் கெட்டவர்களாகி விடுகிறார்கள். நிரம்ப நல்லவனாக இருப்பதே நிறையக் கெட்டவர்களை உருவாக்குகிற ஒரு கெட்ட பண்பு என்று சிலர் சொல்வார்களே. அதுவும் சரிதான். "அவன்தான் ஏமாளிப் பயலாக இருக்கிறானே. ஏமாற்றினால்தான் என்ன?" என்றும் தோன்ற ஆரம்பித்து விடும். அதைப் புரியும்போது ஏமாளி சுதாரிப்பான். அவனும் ஏமாற்ற ஆரம்பிப்பான். அப்படியே இது ஒரு வட்டமாகி விடும். "வாழ்க்கை ஒரு வட்டம்டா. இன்று ஏமாற்றுபவன் நாளை ஏமாறுவான். இன்று ஏமாறுபவன் நாளை ஏமாற்றுவான்!" என்று ஒரு திரைப்பட வசனம் கூட வந்து விடும். மொத்த உலகமும் நல்லவர்களின் உலகமாக மாறி வரும்போது இப்படியும் ஒரு பின்னடைவு ஏற்படலாம்.

எதையும் பொதுப் படையாகப் பேசுவதில் எனக்கு எப்போதும் ஈடுபாடு கிடையாது. ஆனாலும், ஒரு குறிப்பிட்ட வீட்டுக்குள் இருக்கும் மனிதர்களின் சராசரி நல்ல பண்புகளை விட இன்னொரு வீட்டுக்குள் இருக்கும் மனிதர்களின் சராசரி நல்ல பண்புகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கின்றன. அதுவே, ஒரு தெருவுக்கும், ஊருக்கும், பகுதிக்கும், மாநிலத்துக்கும், நாட்டுக்கும் கூடப் பொருந்தும். இந்த வீட்டு, தெரு, ஊர், மாநிலத்து, நாட்டு ஆட்கள் எல்லோருமே அந்த வீட்டு, தெரு, ஊர், மாநிலத்து, நாட்டு ஆட்கள் எல்லோரையுமே விட நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால், சராசரியாக ஒன்றை விட இன்னொன்றில் இருப்போர் கூடுதலாக நல்லவராகவோ கெட்டவராகவோ இருக்கிறார்கள் என்று கூறுவது சராசரிகளின் விதிப்படி (LAW OF AVERAGES) சரியே.

அதன் அடிப்படியில்தான் சிந்து சமவெளி நாகரிகம், மெசபடோமிய நாகரிகம், கிரேக்க நாகரிகம், மேற்கத்திய நாகரிகம், இந்த நாகரிகம், அந்த நாகரிகம் என்று பல விதமான நாகரிகங்களின் கதைகள் சொல்லப் படுகின்றன என்றெண்ணுகிறேன். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நாகரிகமாக இருந்த ஒரு பிரிவினர் இப்போது காட்டு மிராண்டிகளாகவும் அப்போது காட்டு மிராண்டிகளாக இருந்த ஒரு பிரிவினர் இப்போது நாகரிகமாகவும் கூட இருக்கிறார்கள். எல்லோரும் இப்படியே இருப்பார்களா என்றும் சொல்வதற்கில்லை. அப்படியெல்லாம் மாற்றங்கள் நிகழ முடியும் என்றால், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நல்லவர்களாக மாறி வருவோருமே கூட மீண்டும் பின்னோக்கிப் போகவும் வாய்ப்புள்ளதோ என்றும் பயமாக இருக்கிறது.

செவ்வாய் கிரகத்தில் வாழ வாய்ப்புள்ளது என்று உறுதி செய்யப் பட்டு விட்டால், அங்கே முதலில் குடியேறுகிறவர்கள், உடன் வருகிற எல்லோரும் நல்லவர்களா - அடுத்தடுத்து உள் வரப் போகிற அனைவரும் நல்லவர்களா - வேண்டிய அளவு நாகரிகம் பெற்றவர்களா என்று சோதித்து அனுமதித்தால், அவர்களுடைய கிரகமாவது பிரச்சனைகளும் குற்றங்களும் பாவங்களும் குறைவாக நடைபெறும் கிரகமாக இருக்க வாய்ப்புள்ளது. தீவிரவாத நடவடிக்கைகள் கூடி விட்ட இந்நாளில் பல மேற்கு நாடுகள் பாதுகாப்பு கருதி அதைத்தான் இன்று தம் நாட்டுக்கு உள்ளே வருவோர் எல்லோர் மீதும் விசா விசாரிப்பு என்ற பெயரில் செய்கின்றன. செவ்வாய்க்குப் போவோர் அப்படியெல்லாம் செய்து கொண்டு குடியேறினால், நல்லவனுக்கு நல்லவனாக கெட்டவனுக்குக் கெட்டவனாக தன்னை ஆளுக்கேற்ற மாதிரி மாற்றி மாற்றி வாழ வேண்டிய கட்டாயமெல்லாம் அங்காவது வராமல் இருக்கும்.

அப்படியில்லாவிட்டால், கெட்டவர்கள் எல்லோரையும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி விட்டாலும் சரிதான். இங்குள்ளவர்கள் நிம்மதியாக வாழ முடியும். அந்தக் காலத்தில் அந்தமானுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நாடு கடத்துதல் போல. இப்போதுதான் புரிகிறது. அந்தத் திட்டத்திலும் எவ்வளவு பெரிய சிந்தனை இருந்திருக்கிறது என்று. சராசரி மக்களின் வாழ்க்கை முறைக்கு மாற்று வாழ்க்கை முறை கொண்ட அனைவரும் வேற்று இடங்களில் வைக்கப் படுவது பெரும்பான்மையாக இருக்கும் சராசரிகளுக்கு அளவிலாத பாதுகாப்புணர்வும் நிம்மதியும் அளிக்கிறது. நரகத்தைப் பார்க்க ஒருவன் சாக வேண்டியதில்லை. இந்த உலகத்திலேயே அது வெவ்வேறு பெயர்களில் இருக்கின்றன என்பதை நிரூபிப்பதுதான் அது. சிறைச்சாலைகள் கூட அத்தகைய ஓர் அமைப்புதானே.

"இந்த உலகம் வேறு ஏதோவொரு கிரகத்தின் நரகமோ?!" என்று பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த ஹக்ஸ்லியின் வரிதான் நினைவுக்கு வருகிறது இந்தப் பொழுதில்.

கருத்துகள்

  1. //கெட்டவர்கள் கூட நல்லவர்கள் போல் நடித்தால்தான் வாழ்க்கை அவர்களுக்கு எளிதாகிறது. //

    இது உண்மைதான்..

    பதிலளிநீக்கு
  2. வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் பெயரைப் பார்த்தவுடனே, பாரதி .. பாரதத் தீ என்று 40 ஆண்டுகளுக்கு முன் படித்த கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன. சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த உள்ளத்தை வாழ்த்துவது தார்மீகக் கடமையாகின்றது. நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி ஐயா. தங்கள் கருத்துரை படித்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. A software professional, who doesn't write software என்று நீங்களே சொல்லிக் கொண்டாலும் கூட, ‘மென்பொருள் எழுதத் தெரியாவிட்டால் என்ன? தமிழில் சுய சிந்தனையோடு பொருள் பொதிந்த எளிய நடையில் எழுதத் தெரிகிறதே என்று மகிழ்ந்து, நிறைய எழுதலாம். எழுதுங்கள்.
    குப்பைகளும் கழிவுகளும் மலிந்து கிடக்கும் இணைய வெளியை உங்களைப் போன்றவர்களின் தளங்கள் சுத்தப் படுத்தட்டும்.
    வுhழ்த்துகளுடன்.
    நா.முத்துநிலவன்
    புதுக்கோட்டை.
    எனது வலைப்பூ:
    www.valarumkavithai.blogspot.com

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி ஐயா. தங்களைப் போன்றவர்களின் வாழ்த்துக்கள்தான் எனக்கு மென்மேலும் எழுத உற்சாகம் அளிக்கின்றன. அதுவும் தங்களிடம் இருந்தே ஒரு கருத்துரை என்பது கண்டு மட்டிலா மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்ந்து வாசித்து வாழ்த்துங்கள்... :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி