எர்னஸ்டோ சே குவேரா: ஐ. லாவ்ரெட்ஸ்கி (தமிழாக்கம்: சந்திரகாந்தன்) - 1/2

இந்தப் புத்தகம் நான் தமிழ் வாசிக்கப் பழகிய நாள் முதலே கண்ணில் பட்டுக் கொண்டு இருந்தது. பொதுவுடைமைப் பின்னணியில் பிறந்து வளர்ந்ததால் புரட்சியாளர்கள் பற்றிய புத்தகங்களுக்குப் பஞ்சமிருக்க வில்லை. மற்ற பெயர்கள் கேள்விப் பட்டவை. இந்தப் பெயர் கேள்விப் படாதது. இப்போது சீமான் புண்ணியத்தில் தமிழ் நாட்டில் பனியன்களில் எல்லாம் எல்லோரும் அவருடைய படத்தைப் போட்டுப் புகழ் பரப்பிக் கொண்டிருப்பது புரட்சியின் ஆரம்பமோ என்று யாரும் தவறாக நினைத்து விட வேண்டாம். எனக்குத் தெரிந்த ஒருவர் அவர் யாரென்றே தெரியாமல் கூடத் தன் பனியனில் அவரை வைத்துக் கொண்டிருந்தார். சரி, அது கிடக்கட்டும். கதைக்கு வருவோம். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் 'புதிய தமிழகம்' கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி (புரட்சியாளனாக வாழ்வைத் துவங்கி, இடதுசாரியாக இருந்து, அரசியல்வாதியாகி, ஒடுக்கப் பட்ட மக்களின் தலைவனாகி, இன்று வெறும் ஜாதி அரசியல்வாதியாக மட்டும் பார்க்கப் படும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்!) அவர்களின் பேட்டி ஒன்றில், அவருக்குப் பிடித்த புத்தகம் எது என்ற கேள்விக்கு "எர்னஸ்டோ சே குவேரா" என்றிருந்தார். அப்போதுதான் மணி அடித்தது. 'ஆகா! அவ்வளவு நல்ல புத்தகமா அது? அதையா இவ்வளவு நாட்களாகக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டோம்!' என்று மிகவும் வருந்தி அப்போதே அந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். அதுவும் கடைசி வரை செல்ல வில்லை. நடு வழியில் ஆர்வக் குறைவில் நிறுத்தி விட்டேன். பின்னர் பெங்களூர் வந்து ஓரளவு வாசிப்புக் கூடிய வேளையில் மீண்டும் அதைக் கையில் எடுத்துப் படித்தேன். அதுவும் முழுசாக முடிக்க வில்லை. அப்போது எடுத்த குறிப்புகளின் தொகுப்பே இவ்விடுகை. முந்தைய இடுகையான 'சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள்' போலவே, இதுவும் குறிப்புகளின் தொகுப்பு மட்டுமே; நூல் விமர்சனம் அல்ல. இடையிடையில் என் கருத்துரைகளும் சேர்க்கப் பட்டுள்ளன. அவ்வளவே. சரி. மேட்டருக்குள் செல்வோம் ('மேட்டருக்குள் செல்வோம்' என்றடித்தால் 'மீட்டருக்குள் செல்வோம்' என்றாகிறது! கொடுமை தமிழ்த்தாயே!)...

"மிக அருகில், எங்கோ பீரங்கிகள் வெடிப்பது போல் இடி கர்ஜித்து முழங்கியது" என்றொரு வரி ஆரம்பித்தவுடனேயே வருகிறது. "இடி முழங்குவது போல் பீரங்கிகள் வெடித்தன" என இயற்கையை உவமைக்குப் பயன்படுத்துவதுதானே நம்ம ஸ்டைல். அதைத் திருப்பிப் போட்டிருப்பது மேற்கத்தியப் பாணியா (நமக்கு ஸ்டைல்; மேற்கத்தியருக்கு பாணி!) அல்லது புரட்சிக்காரர்களின் பாணியா அல்லது வாசகர்களுக்குக் கதையின் களம் பற்றிய சரியான அறிமுகத்தைக் கொடுக்க முயன்ற ஆசிரியரின் வார்த்தை விளையாட்டா எனத் தெரியவில்லை.

"இந்தச் 'சே' என்ற சொல்லை அர்ஜெண்டைனர்கள் குவேரனி இந்தியர்களிடமிருந்து பெற்றார்கள் என்றும், குவேரனி இந்தியர்கள் இதை 'எனது' என்ற பொருளில் பயன்படுத்தினர் என்றும் பண்டிதர்கள் கூறுவர். ஆனால் தென் அமெரிக்கப் பம்பாஸ் புல்வெளி வாழ்வோருக்கு, அந்தச் 'சே' எனும் சொல் - பயன்படுத்தப் படும் இடத்தாலும், உச்சரிக்கப் படும் முறையாலும் - ஆச்சரியம், ஆனந்தம், வருத்தம், நாணயம், அங்கீகாரம் அல்லது ஆட்சேபம் போன்ற மானுட உணர்சிகளின் ஒட்டு மொத்த பல வண்ணச் சித்திரத்தை வெளிப்படுத்தும் ஒரு சொல்லாகும்." என்றொரு அறிமுகப் பத்தி வருகிறது. இதில் ஆச்சரியப் படும் ஒரு விஷயம் என்னவென்றால், சே என்கிற ஓரெழுத்துச் சொல்லை நாமும் கூடத் தமிழில் மேற்சொன்ன மாதிரியான உணர்ச்சிகளை வெளிப்படுத்தப் பயன்படுத்துகிறோம். 'சே... என்ன கொடுமை சார் இது...' என்பது போல.

"என்னைப் பொருத்தவரை 'சே' எனது வாழ்க்கையில் மிக மதிப்பு வாய்ந்த அதி முக்கியமான விஷயங்கள் அனைத்தையும் குறிக்கிறது. அங்ஙனமின்றி, அது வேறு எப்படியும் இருக்க முடியாது. எனது முதற்பெயரும், குடும்பப் பெயரும் சிறியதான, தனிப்பட்டதான, முக்கியத்துவமற்ற சில விஷயங்களை மட்டுமே குறிக்கின்றன" என்று சே ஒருமுறை சொல்லியிருக்கிறார். ஆக, சே என்பது அவரே இணைத்துக் கொண்ட ஒரு பகுதி போல்த் தெரிகிறது.

"என்னால் எப்போதும் வெற்றியை எட்ட முடிந்ததே இல்லை. என்னைப் பயன்படுத்தி மற்றவர்கள் லாபம் அடைந்ததுபோல், மற்றவர்கள் உழைப்பில் என்னால் லாபம் காண முடியவில்லை. ஆனால், கேவலம் - பணமா முக்கியம்? தூய்மையான மனோபாவம்தான் முக்கியம் என்று கருதியதால் அது குறித்து நான் வருத்தமுற்றதில்லை. எனது நிதி நிலைமை செழிப்பானதாக இல்லாதபோதும் நான் எனது எல்லாக் குழந்தைகளையும் - அவர்கள் ஐவர் - உயர்கல்வி பெறச் செய்து வெற்றி பெறச் செய்தேன். ஆனால், அவர்களுள் உண்மையாகவே எர்னஸ்டோ குறித்தே நான் பெருமிதம் கொள்கிறேன். அவன் நேர்மையான மனிதன்; உண்மையான போராட்ட வீரன்." என்று செயின் தந்தை கூறுவதாக ஒரு பத்தி வருகிறது. இதில் இருந்து எனக்குப் புரிகிற சில விஷயங்களில் ஒன்று - அவர் நம்மில் பலரைப் போல ஓர் ஏமாளி மனிதனாக - தன் இயலாமையை நினைத்து நினைத்து வருந்தும் சுயபரிதாபியாக - அன்றாடப் பிழைப்புக்காக முட்டி மோதிக் கொண்டிருக்கும் - ஆனாலும் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி மிகுந்த அக்கறை கொண்ட சராசரி மனிதராக இருந்திருக்கிறார். அந்தப் பின்னணிதான் சேயை ஒரு சுயநலமற்ற நல்லவராக உருவாக்கியிருக்க வேண்டும். இதே இடத்தில் எல்லோரையும் தூக்கி விழுங்கி முன்னுக்கு வந்த ஒரு வெற்றியாளரை வைத்துப் பாருங்கள். அவருடைய மகன் அப்படியொரு புரட்சியாளனாக வாய்ப்பு இருக்கிறதா? இருக்கலாம். ஆனால், குறைவு. இல்லையா? இன்னொன்று தன் எல்லாக் குழந்தைகளையும் விடச் சே பற்றியே அதிகம் பெருமிதமடைவதாகக் கூறி இருக்கிறார். அது உண்மையாகவும் இருக்கலாம். அல்லது, உலகப் புகழ் பெற்று விட்ட ஒரு மாபெரும் புரட்சியாளனின் தந்தை இப்படித்தான் பேச வேண்டும் என்று முடிவு செய்தும் பேசியிருக்கலாம். இடைப்பட்ட காலத்தில் தன் மகன் பட்ட துயரங்கள் குறித்துக் கேள்விப் பட்ட வேலைகளில் ஒரு தந்தைக்கே உரிய அத்தனை துயரங்களையும் அவரும் அடைந்திருக்கத்தான் செய்வார். ஒருமுறையாவது, 'எல்லோரையும் போல இவனும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு மருத்துவர் வேலையைப் பார்த்திருக்கலாமே!' என்று நிச்சயம் எண்ணியிருப்பார். பெத்த மனம் பித்து இல்லையா?

"அவன் தன்னை ஓர் அர்ஜெண்டைன் என்று கூறிக் கொண்டு கபடநாடகமாடுகிற ருஷியன் என்று கூடச் சிலர் வாதித்தனர். ஆனால், நாங்கள் அர்ஜெண்டைனர்கள். எமது நாட்டு மக்களில் பலர் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கே குடியேறிய காலத்தில் குடியேறாமல் பின்னர் வந்து குடியேறியவர்கள். சே, எனது வழியில் பனிரெண்டாம் தலைமுறை அர்ஜெண்டைன். அவனது அம்மா வழியில் எட்டாவது தலைமுறை." என்று சேயின் தந்தை கூறுவதாக இன்னொரு விளக்கம் வருகிறது. இந்தப் பழக்கம் எல்லா நாடுகளிலுமே இருக்கும் போல்த் தெரிகிறது. நமக்காகப் போராட வரும் யாரையுமே அவருடைய பின்னணி பற்றிக் கொச்சைப் படுத்திப் பேசி அமைதிப் படுத்துவது. உனக்காகப் போராட வந்திருப்பவன் எந்த ஊர்க்காரனாக இருந்தால் என்ன? போராட வந்திருக்கிறானா - உழைக்க வந்திருக்கிறானா அல்லது வேறு நோக்கத்தோடு வந்திருக்கிறானா என்பதைக் கண்டறிய முயல்வது தவறில்லை. நோக்கம் சரியாக இருக்குமாயின் நமக்காக உழைக்க வரும் எவரையும் அதிகம் பேசாமல் ஏற்றுக் கொள்வதே பண்பட்ட சமூகங்களின் பண்பாடு.

"ஸ்பானிய முறைப்படி எங்களுக்கு இரண்டு குடும்பப் பெயர்கள் உண்டு. நான், எனது தந்தை வழியில் குவேரா என்றும், தாய் வழியில் லின்ச் என்றும் அழைக்கப் படுகிறேன். எனது தந்தையின் ஸ்பானிய மூதாதையர்கள் காலனி ஆதிக்க காலத்தில் அர்ஜெண்டைனாவுக்கு வந்தவர்கள்." என்று சேயின் தந்தை டான் எர்னஸ்டோ குவேரா லின்ச் கூறுகிறார். இரண்டு குடும்பங்களின் பெயர்களையும் பின்னால் இணைத்துக் கொள்வதும் நல்ல பழக்கம்தான். சில நண்பர்கள் தந்தை, தாய் ஆகிய இருவருடைய முதல் எழுத்தையும் பெயருக்குப் பின் அல்லது முன் போட்டுக் கொள்கிறார்கள். அதுபோல, பெண்ணிய முற்போக்குச் சிந்தனை இது. எல்லாச் சமூகங்களிலும் எல்லோருமே இந்தப் பழக்கங்களைக் கடை பிடிக்க ஆரம்பிக்க வில்லை இன்னும். குறிப்பாக, நம் சமூகத்தில் இன்னும் கொஞ்ச காலம் ஆகும்.

சேயின் தாயார் பெயர் அன்னா லின்ச். அவருடைய (அதாவது சேயின் தாயாருடைய) தந்தை பெயர் பிரான்ஸிஸ்கோ லின்ச்; தாய் பெயர் எலோசியா ஒர்டிஸ்ஸின். சேவுக்குத் தாய் வழி வந்த குடும்பப் பெயர் (லின்ச்), அவருடைய தாயின் தந்தை வழி வந்தது. அப்படியானால் தாயின் தாய் வழிக் குடும்பப் பெயர்? அதுதான் ஓட்டையில் விழுந்து விடுவது. எப்படியிருந்தாலும் தந்தைதான் பிரதானம். எவ்வளவு என்பதில்தான் வேறுபாடு. தமிழகத்தின் பெயரிடுதல் பற்றிய இடுகையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள் - 'தமிழகத்துப் பெயர்க் கூத்துகள்'.

"தனது பாரம்பரியம் குறித்து சே முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது பற்றி அவர் ஏதாவது குறிப்பிட்டிருந்தால் அது விளையாட்டுக்காகத்தான் இருக்கும். சேவின் பூர்விகம் குறித்து விவவிய காசாபிளாங்கா என்ற இடத்தைச் சேர்ந்த சீனோரா மரியா ரோசாரியோ குவாரா என்பவருக்கு 1964-ஆம் ஆண்டில் பதில் எழுதுகிறபோது சே எழுதினர்: "தோழரே; பட்டவர்த்தனமாகச் சொல்வதென்றால் ஸ்பெயினின் எப்பகுதியிலிருந்து எனது மூதாதையர்கள் வந்தனர் என்பதை நான் அறியேன். நீண்ட காலத்திற்கு முன்னமேயே அவர்கள் தங்கள் பூர்வ வீட்டை விட்டு, 'பிறந்த மேனி' உடையோடு வெளியேறி விட்டனர். மேலும், நான் வசதியாக இல்லை என்ற ஒரே காரணத்துக்காக அங்ஙனம் சுற்றக் கிளம்ப மாட்டேன். நாம் நெருங்கிய உறவினர்கள் அல்லர் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிறபோதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள். அதுதான் முக்கியமான விஷயம்." என்றொரு பத்தி வருகிறது. மிக முக்கியமான பத்தி. கொட்டெழுத்தில் கொடுத்துள்ளதைத்தான் இன்று புரட்சியாளர்கள் எல்லோரும் உலகெங்கும் தம் மந்திரமாகப் பயன்படுத்துகிறார்கள். சண்டை போட்டுக் கொண்ட இருவர் ஒரே சாதி என்றோ உறவினர் என்றோ தெரிந்தவுடன் சமாதானமாகி விடுவது கண்டு எனக்கு வேடிக்கையாக இருப்பதுண்டு. உறவினர் என்றால் ஏதோ சண்டையே போடக் கூடாது என்பது போல. அண்ணன்-தம்பிகளே வெட்டிக் கொள்கிறார்கள். அப்புறம் என்ன? இதில் உள்ள தர்க்கம் என்னவென்றால், அடுத்தவனைத் துன்புறுத்தலாம்; நம்மவர்கள் என்றால் விட்டு விடலாம். என்ன கொடுமையான தர்க்கம் பாருங்கள். எனக்குப் பொது இடங்களில் ஒவ்வொரு மனிதரையும் பார்க்கையில் அடிக்கடித் தோன்றும் - "ம்ம்ம்... இவனும் என் உறவினனாகத்தான் இருந்திருப்பான். எத்தனை தலைமுறைக்கு முன்பு என்றுதான் தெரியவில்லை!" என்று. அதுதான் வேறுபாடு. நம்மோடு இருப்போரும் சரி. நமக்கு எதிரணியில் இருப்போரும் சரி. எல்லோருமே நமக்கு உறவினர்தான். எத்தனை தலைமுறைகள் முன்பு என்பது மட்டும்தான் வெவ்வேறு. இந்தக் கோணத்தில் பார்க்க ஆரம்பித்து விட்டால் வாழ்க்கையே வேறு மாதிரித் தெரியத் தொடங்கும். இல்லையா? எல்லோரும் உறவினர் என்றால், எல்லா அநீதிகளையும் கண்ணை மூடிக் கொண்டு விட்டு விடலாமா? முடியாது. அப்போதுதான் சிறிது - பெரிது வேறுபாடு வருகிறது. சிறிய அநீதி செய்தோரை ஏற்றுக் கொள்ளலாம். பெரிதான ஒன்றைச் செய்தோரைத் தண்டித்தாக வேண்டும். முதலாமவர் இருக்கட்டும். இரண்டாமவர் எதிரிகளாவர். இந்தக் கணக்குப் படிதான் சே பேசுகிறார்.

குறை மாதத்திலேயே பிறந்தோருக்கு ஒரு முக்கியக் குறிப்பு - சேயும் உங்களைப் போலவே கருவுற்ற ஒன்பதாவது மாதத்திலேயே பிறந்த ஒரு குறை மாதக் குழந்தை.

சேயின் சகோதர, சகோதரிகட்கு அவருடைய தாத்தா, பாட்டிகளின் பெயரை இட்டிருக்கிறார் அவரின் தந்தை. ஆக, இந்தக் கலாச்சாரம் அங்கேயும் இருந்திருக்கிறது.

"தனது நான்காவது வயதிலேயே படிக்கத் துவங்கினான் என்று நான் உறுதியாகக் கூற முடியும். அந்தக் காலத்திலிருந்து தனது வாழ்வின் இறுதிவரை அவன் படிப்பதில் பேரார்வம் மிக்கவனாக விளங்கினான். பொலிவியாவில் போராடுகிற போதும் எதிரிகளால் தேடப்பட்ட போதும் ஆஸ்துமாவால் அவதிப்பட்ட போதும் எதையேனும் அவன் படித்துக் கொண்டே இருந்தான் என்று என்னிடம் கூறினார்கள்." என்று சேயின் தந்தை கூறுவதாக ஒரு கூற்று வருகிறது. வாசிப்பு ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் அல்லது அவனுடைய வளர்ச்சியில் எவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைப் பற்றி இங்கே பேசி விடுவோம். வளர்ச்சி என்பது பொருளியல் வளர்ச்சி என்று மட்டும் வைத்துப் பார்த்தால் படித்தவர்கள் மட்டுமே சம்பாதிக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. அதற்கு மேல் ஏதோ தேவைப்படுகிறது. ஆனால், சராசரியாகப் பார்த்தால் படித்தவர்கள் படிக்காதவர்களை விட நன்றாக இருக்கிறார்கள். படித்தவர்கள் எனும்போது பள்ளியில் படித்தது மட்டுமின்றி கூடுதலாகப் பல விஷயங்களைப் படிப்போர் இன்னும் சிறப்பான வாழக்கையைப் பெறுகிறார்கள். இங்கும் விதிவிலக்குகள் உண்டு. ஆனால், பெரும்பாலும் அப்படித்தான் நடக்கிறது. மற்ற எந்த வெற்றியையும் விட, புரட்சியாளர்களும் இதுவரை நிறையப் பேர் செய்திராத சாதனைகளைச் செய்வோரும் பெறும் வெற்றிகளுக்கு அவர்களுடைய வாசிப்பில்தான் அளவிலாத எரிபொருள் கிடைக்கிறது.

"குழந்தைப் பருவத்திலிருந்தே அவன் கவிதைகளை நேசித்தான்" என்றும் "பாப்லோ நெருடாவின் கவிதைகளை அவன் நேசித்தான். அவன் பல கவிதைகளை மனனம் செய்து வைத்திருந்தான். மேலும் அவன் சொந்தமாகக் கவிதைகள் எழுத முயற்சி செய்தான். ஆனால் அவன் தன்னை ஒரு கவிஞன் என்று கருதியதில்லை என்பதை நான் இங்கு கூற வேண்டும். ஒரு சமயம் அவன் தன்னை 'ஒருபோதும் கவிஞனாக முடியாத புரட்சிக்காரன்' என்று அழைத்துக் கொண்டான்." என்றும் சேயின் தந்தை கூறுவதாக வருகிறது. கவிதைக்கும் புரட்சிக்கும் இருக்கும் நெருக்கம் நாம் அறியாததல்ல. புரட்சித்தீ அடங்க விடாமல் பார்த்துக் கொள்வதில் கவிஞர்களுக்கு மிகப் பெரும் பங்கு இருக்கிறது. மொத்த இலக்கியத்துக்கும் பங்கு இருக்கிறது எனினும் எல்லோரையும் தட்டி எழுப்பும் சக்தி மற்ற எல்லா இலக்கிய உருக்களையும் விட கவிதைக்குத்தான் அதிகம். இந்திய விடுதலைப் போரில் தாகூரும் பாரதியும் போல ஒவ்வொரு விடுதலைப் போரிலும் ஒரு பெருங்கவிஞன் உருவாகியிருக்கிறான். விடுதலைத் தீயை கவிநெய் ஊற்றி வளர்த்திருக்கிறான். வெற்றிக்கே வித்திடும் கவிஞர்கள் வென்றவர்களின் பக்கம் சாயும் கேவலம் தமிழ் நாட்டின் அவலம். அது கவிதை எழுதுவோரைக் கவிதை மட்டுமே படைக்கப் பயன்படுத்தாமல் தலைவனாக்கிப் பார்த்த நம் வரலாற்றுப் பிழையின் நீட்சி.

"அவனுக்கு இசைத் துறையில் அவ்வளவு ஆழ்ந்த ஞானம் இருந்ததில்லை. இசையைப் பொறுத்தவரை அவன் காது கேளாதவன் போலவே நடந்து கொண்டான்." என்றும் சேயின் தந்தை குறிப்பிட்டுள்ளார். கவிதைக்கும் இசைக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது. இசைக் கலைஞர்களும் விடுதலை வேள்வியில் பெருமளவில் பங்கு பெறுகிறார்கள். ஆனாலும் எனக்கு இசை என்பது பெரும்பாலும் அமைதிப் பூங்காக்களில் அதிகம் வாசிக்கப் படுகிற ஒன்று போலத் தோன்றுகிறது. என் புரிதல் தவறெனில் சரி செய்யுங்கள். குறிப்பாக, இசைக்கும் புரட்சியாளர்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்றே தோன்றுகிறது. அதற்கொரு காரணம் எனக்குப் புரட்சி பிடித்த அளவு - கவிதை பிடித்த அளவு, இசை பிடித்ததில்லை என்பதாகக் கூட இருக்கலாம். ஆனால், புரட்சி பிடிக்கும் என்பதைத் தவிர எனக்கும் புரட்சிக்கும் எள்முனையளவும் தொடர்பில்லை. புரட்சிக்குச் சற்றும் ஒத்து வராத கோழை மனப்பான்மை கொண்ட கோடானு கோடிப் பேரில் நானும் ஒருவன். எனவே, அது ஒரு புத்திசாலித் தனமான கருத்தாகாது என நினைக்கிறேன்.

"தனது குறைகளை சுட்டிக்காட்ட அவன் ஒரு போதும் அஞ்சியதில்லை. மற்றவர்களை நையாண்டி செய்வதை விரும்பிய அவன் தன்னையே நையாண்டி செய்யவும் தயங்கியதில்லை. அவன் ஒரு உறுதியான சுய விமர்சகன்." என்றும் சே பற்றிச் சில வரிகள் வருகின்றன. நான் எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இப்படி இருப்போரை எனக்கு மிகவும் பிடிக்கும். நையாண்டி செய்வோர் - அதுவும் எல்லோரையும் சமமாக நையாண்டி செய்வோர் (நையாண்டியில் சமத்துவம்!) - அதில் தன்னையும் சேர்த்து நையாண்டி செய்து கொள்வோர்... இப்படிப் பட்டோரை நிறையப் பார்க்க முடிவதில்லை. தன்னடக்கத்தோடு பேசினால் கூடுதல் மரியாதை கிடைக்கும் என்ற சூட்சுமம் தெரிந்து பேசுவோரைப் பற்றிப் பேசவில்லை இங்கே. உண்மையாகவே தன்னையும் ஒரு கேலிப் பொருளாக்கிப் பேசும் தைரியம் படைத்தவர்களைப் பற்றிப் பேசுகிறேன்.

"குவேராவைப் போன்ற இளைஞர்கள், தம்மிடமிருந்து இயல்பாலும் மனோபாவத்தாலும் முற்றிலும் மாறுபட்டவளான காதலியொருத்தியை, தம்மைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வளையத்தைக் கடந்து வர அனுமதிப்பார்கள் அல்லது தமது அந்தரங்க உலகத்தில் தலையிடாத, 'உனது ஆன்மிக ஆலோசகனாகவும் பாதுகாவலனாகவும் நானே விளங்குவேன்' என்று உரிமை கொண்டாடாத, நட்புக்குப் பதிலாகக் கண்மூடித்தனமான பணிவையும், நிபந்தனையற்ற அர்ப்பணிப்பையும் பலிகேட்கிற ஆதிக்கக் காரனாகவும் இல்லாத ஒரு நண்பனை - தமக்கும் அவனுக்கும் பாலாடைக் கட்டிக்கும் சுண்ணாம்புக் கட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு இருந்தபோதும் அந்தத் தடையைக் கடந்து வர அனுமதிப்பார்கள்." என்றொரு அருமையான தத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது. புரட்சியாளர்கள் இங்குதான் பெரும்பாலும் கோட்டை விட்டு விடுவார்கள். பெரும் பெரும் புரட்சிகள் இங்குதான் மண்ணைக் கவ்வி மறைந்து போய் விடுவன. பெண் என்று வந்து விட்டால் அவள் எப்படிப் பட்டவளாகவும் இருக்கலாம். ஒருவனின் வாழ்க்கையில் நுழைந்து புரட்சி பற்றிப் பேசிக் கொண்டிருந்தவனை பூ வாங்கி வர மறந்ததற்காக அழுது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கவும் வைக்கலாம். அவனோடு அணி சேர்ந்து புரட்சியை அதை விடப் பெரும் பூகம்பமாக ஆக்குபவளாகவும் இருக்கலாம். இரண்டாவது விதம் நடந்தால் அது வரலாறாகும். வெளியில் வரும். முதலாவது விதம்தான் நம்பிக்கையோடு துளிர் விட்டு - பின் கருகி மட்கிப் போன ஏராளமேராளம் புரட்சிகளின் கதி. நண்பர்கள் விஷயத்தில் பெரும்பாலும் புரட்சியாளர்கள் கோட்டை விடுவதில்லை. புரட்சிக்கு ஒத்துவராத ஆட்கள் அருகிலேயே இல்லாதபடிப் பார்த்துக் கொள்வார்கள். அருகில் இருந்தவர்கள் துரோகியாவது வேண்டுமானால் நடக்கலாம். அதற்கென்று அவர்களிடமும் நியாயங்கள் இருக்கலாம். எல்லாப் புரட்சிக் கதைகளிலும் இது உண்டுதானே. 'துரோகிகள், காட்டிக் கொடுத்தல்கள் மற்றும் சகோதர யுத்தம்' பற்றியும் ஓர் இடுகை இட்டிருக்கிறேன். அது பற்றிப் படிக்க மேலே அடிக்கோடிட்ட இணைப்பின் மீது சொடுக்குங்கள்.

* 2005 நாட்குறிப்பில் இருந்து...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி