கலாச்சார வியப்புகள்: சிங்கபுரம் (சிங்கப்பூர்)
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! அந்தக் காலத்தில் பயணக் கட்டுரைகள் எழுதுவது பலருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். அப்போது வெளிநாடு சென்றோரும் குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு வாழ்க்கை முழுமையையும் அந்நாடுகளில் பணி செய்வதிலேயே அர்ப்பணித்தார்கள். அதனால் அவர்களுக்குப் பயணம் பற்றிய அனுபவங்களை எழுதும் வாய்ப்பெல்லாம் கிட்டியிராது. பெரும்பாலும் அப்போது கூலி வேலைக்குப் போன நம் மக்கள்தாம் - அவர்களுடைய சந்ததியர்தாம் இன்று பல நாடுகளில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். சுற்றிப் பார்க்கப் போவோர் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்திருப்பர். அப...