இடுகைகள்

ஜூன், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மொழித்தாய்

வெளியூர்க்காரியே ஆனாலும் வென்றவளைத் தாயாக்கிக் கொளல் வெகு எளிது என்றாகிவிட்ட பின் எவர் உழைப்பார் வீட்டுக்குள் மாட்டிக்கொண்ட சொந்தத்தாயை வெல்விக்க? வேண்டுமானால் பிடிவாதக்காரர் நீர் உழைத்து வெல்வித்துவிட்டு வந்து சொல்லுங்கள் உறவு கொண்டாட வருகிறோம்!

மேதாவியர்

எம்மிடமில்லாத உம் அறிவும் ஆற்றலும் உம் மீது எப்போதும் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன ஆனால் பிழைப்புக்காகக் குற்றங்கள் இழைக்கும் எளியவர் எம்மிலும் இழிவாக உம் மேலான வாழ்வுக்காக உலக நியாயங்களையெல்லாம் உம் வசதிக்கேற்றபடி வளைத்துப் போட்டுக் கொள்ளும் உம் அறவுணர்வும் உம் அறிவையும் ஆற்றலையும் எவ்வளவோ பயன்படுத்தியும் உம் உள்நோக்கங்களை ஒளித்து வைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறித் தவிக்கும் வேளைகளில் வெளிப்பட்டுவிடும் உம் இயலாமையும் போதும் எம் மீதேறி எம்புட்டு மேலே தாவிப் போனாலும் மேதாவியர் உம்மைக் கீழே வீழ்த்த

காதல் முட்டை

காதலிப்பது உண்மையானால் அதைக் காட்டிக்கொள்வதில் என்ன தயக்கம் என்று கூறுகெட்ட கேள்விகள் கேட்கும் கூமுட்டைக் காதல் குஞ்சும் பொறிக்காது குழம்புக்கும் உதவாது ஒன்று உடனடியாக உடைத்து வீசப்படும் அல்லது வீசப்பட்டு வேறொரு வேளையில் உடைபட்டு நொறுங்கும் காதலும் அதற்கான காலம் கனியும்வரை அதீத கவனத்தோடு அடைகாக்கப்பட வேண்டிய உடைபொருள் என்ற பண்பாட்டுச் சூட்சுமமறிந்த பண்பட்ட காதல்தான் காலங்கடந்து வாழும் இனம் வளர்க்கும்

வெளிச்சத்தின் இழப்பு

சுற்றிலும் இளைஞர்களையே வைத்துக் கொண்டாலும் சுற்றுவதெல்லாம் இளைஞர்களோடே என்றமைத்துக் கொண்டாலும் முயன்றோ முயலாமலோ உணர்விலும் உருவிலும் இளைஞனாகவே இருந்துவிட இயன்றாலுங்கூட உள்ளுக்குள் ஓடும் கடிகாரம் மட்டும் அணு அணுவாய்க் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இளமையின் இழப்பை நினைவுறுத்தி நினைவுறுத்தித் துன்புறுத்திக்கொண்டேதானிருக்கிறது உச்சி வேளைக்குப் பிந்தைய வெயில் உச்சிவெயிலினும் பிரகாசமாயிருந்தாலுங்கூட மாலை நெருங்குகின்றதென்ற கவலையே அதை அனுபவிக்க விடாமல் ஆக்கிவிடுகிறதே! ஆக்கி எங்கே விடுகிறது? அழித்தல்லவா விடுகிறது! அந்திதான் அழகென்றும் வெயிலுக்குப் பிந்தையதுதான் விளையாடப் பொருத்தமான பொழுதென்றும் ஆயிரந்தான் ஓதினாலும் வெயிலோடு போய்விட்ட வெளிச்சத்தின் இழப்பு பற்றிய கவலைதானே மாலையையும் பாழாக்கி விடப் போகிறது!

நாய்கள் மட்டுமா?

ஊரெல்லாம் வெள்ளம் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும் என்கிறீர்களே உங்களுக்கு நன்றாகத் தெரியுமா? அங்கே நக்கிக் குடித்துக் கொண்டிருப்பவை அனைத்தும் நாய்கள்தாம் என்று நக்கிக் குடிப்பதனாலேயே அவை நாய்கள்தாம் என்று உறுதியாகச் சொல்கிறவர்களே! ஒருமுறை உற்றுப் பாருங்கள் அவற்றுள் பசித்தாலும் புல் தின்ன மாட்டோம் என்று சொல்லிக் கொள்ளும் புலிகளும் சிங்கங்களும்கூட நாய்களைவிட நன்றாகவே நக்கிக் குடித்துக் கொண்டிருக்கின்றன!

கடைசி விடை

மனிதனுக்கு பிரபஞ்சத்தைப் பற்றி ஏகப்பட்ட வினாக்கள் தன்னைப் பற்றி அதை விட அதிகமான வினாக்கள் விடையளிக்கப்படாத வினாக்களுக்கெல்லாம் ஒரே விடையாய் உயர்ந்து நிற்கிறார் கடவுள் வந்து சேரும் ஒவ்வொரு விடையும் அவரின் உயரத்தைக் குறைக்க முயல்வதும் எழுப்பப்படும் ஒவ்வொரு புது வினாவும் மீண்டும் அவரை மேலே ஏற்றுவதுமாக நீண்டுகொண்டே இருக்கிறது விவாதம் கடைசி வினாவும் எழுப்பப்பட்டு அதற்கான விடையும் விளக்கப்படும் வேளையில்தானே கடவுளுக்கும் அறிவியலுக்கும் வேலை முடியும் அதற்குப் பின்னும் மனிதனுக்கு மட்டுமா வேலை இருந்துவிடப் போகிறது பிரபஞ்சத்தில்!

வரலாறு

உன் முன்னோர்கள் எல்லோரும் நான் படித்த வரலாற்றில் நாயகர்கள் அவர்களை அப்படிக் காட்டிய பெருமை உன்னையே சேருமென்றார்கள் அது எனக்குப் புரியவில்லை நான் பார்த்த வரலாற்றில் பலருக்கு நீ நாயகன் பலருக்கு நீ பாவி உன் காலம் முடிந்தபின் என் பிள்ளைகள் படிப்பதற்காக எழுதப்பட்ட வரலாற்றில் நீயும் கேள்விகட்கப்பாற்பட்ட நாயகனாக உயர்ந்து நிற்கிறாய் அவர்கள் படிக்கும் வரலாற்றை நான் பார்த்த வரலாறு கொண்டு கேள்விக்குட்படுத்த விரும்புகிறேன் ஆனாலும் அதற்கெல்லாம் எங்கே நேரமிருக்கிறது? இருந்தாலும் இதெல்லாம் நான் படித்த வரலாற்றையும் கேள்விக்குட்படுத்த உதவியிருக்கிறது நன்றி நாயகா!

பலசாலி

தனி ஆளாக நாலு பேரைக் கூடச் சாய்த்து விடுவார் கருப்புச் சித்தப்பா எவருக்கும் பயப்படாத ஏட்டையா கூட அவரைக் கண்டால் பயப்படுவார் அவரைவிடப் பலசாலி எவரையும் நான் இதுவரையும் கண்டதில்லை முரட்டுப் பூனைக்கு மணி கட்டப் போகும் மணிகண்டன் யாரோ என்று ஊரே காத்துக் கிடந்தது சித்தப்பா இன்று வீடு திரும்பி வந்து கதவைப் பூட்டிக் கொண்டு கதறிக் கதறி அழுகிறார் போன வருடம் வெளியூரிலிருந்து வேலைக்காக வந்து குடியேறிய ரமேஷ் சார் தன்மையானவர் பயந்த சுபாவம் எப்போதும் சிரித்த முகம் யாரோடும் அதிர்ந்துகூடப் பேச மாட்டார் எங்கோ ஏதோ எழுதிப் போட்டு இவருக்கும் இவர் போலப் பலருக்கும் வேலையே இல்லாமல் செய்து விட்டாராம்... தனி ஆளாக...