கொரோனா: முடிவு தெரியாத போரின் தொடக்கம்
புதிய கொரோனா நோய்க்கிருமி சீனாவின் உஹான் நகரத்திலிருந்து புறப்பட்டு உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. அதைவிடப் பற்பல மடங்கு வேகமாக அது பற்றிய புரளிகள் பரவிக்கொண்டிருக்கின்றன. இது போன்ற கொள்ளை நோய்கள் என்று மட்டுமில்லை, பரபரப்பாக நடப்புச் செய்திகளில் எதுவெல்லாம் புழக்கத்தில் இருக்கிறதோ அது பற்றி அலசி ஆராயும் அந்தந்தத் துறையின் வல்லுனர்களும் அந்தந்தப் பருவத்திற்கு ஏற்ப வல்லுனராகிக் கொள்கிறவர்களும் ஈசல் போலப் புறப்பட்டு வருவது நாம் அன்றாடம் காண்பதுதான். இதெல்லாம் செய்தால் அல்லது செய்யாவிட்டால் நோய் வேகமாகப் பரவும், இதெல்லாம் செய்தால் அல்லது செய்யாவிட்டால் அப்படி வேகமாகப் பரவுவதைத் தடுக்கலாம் என்பது போன்ற மருத்துவக் குறிப்புகளும் நோய்த் தடுப்பு ஆலோசனைகளும் நோயைவிட வேகமாகப் பரவுவது நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நல்லதுதான். அத்தோடு சேர்ந்து பல புரளிகளும் பரவுவதும் எவையெல்லாம் புரளிகள் என்று விளக்கங்கள் வலம் வருவதும் இயல்பானதுதான். அதுவே வாட்சாப் வந்த பிறகு ஒவ்வொரு மனிதனும் நூறு வாய்களும் இருநூறு காதுகளும் கொண்டவனாக மாறிவிட்டது போல் ஆகிவிட்டது. இது ஒருபுறம் என்றால், இப்படியான நடப்புச் செய்தி ஒவ...