நடு நிலைமை

இன்றைக்கு அரசியலிலும் சரி, அது சார்ந்த பொது வாழ்விலும் சரி, அடிப்படை அறிவு படைத்த எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத மாதிரியான எத்தனையோ கருத்துக்களை கூச்சமில்லாமல் உரக்கப் பேசுகிறார்கள் பலர். அதற்கான ஒரே காரணம். கூட்டிக் கழித்து அதில் எனக்கென்ன இருக்கிறது என்று பார்க்கும் வியாபார மனப்பான்மை. வியாபாரத்தைக் கூட நிறைய நேர்மை உணர்ச்சியோடு செய்கிறார்கள் சிலர் இந்தக் காலத்தில். தன்னுடைய சுயநலம் மற்றும் தன்னைப் போன்றே சுயநலம் கொண்டோருடைய ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இந்த இரண்டும்தான் அத்தகைய மனோபாவத்தை நீரூற்றி வளர்த்துக் கொண்டு இருக்கிறது. நடு நிலைமை காப்பது எவ்வளவு முக்கியம் என்பதில் நம்பிக்கையின்மையே அதன் மூல காரணம்.

"அரசியல் என்றால் ஒருவரை ஆதரித்து இன்னொருவரை எதிர்ப்பதுதான் இயற்கை. அரசியலில் நடு நிலைக்கு இடம் இல்லை." என்று அரசியல் மேதாவி சோ ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அது அவர் வாழ்க்கை முறையைச் சரியாகவே நமக்குப் படம் போட்டுக் காட்டுகிறது. அப்படித்தான் அவர் ஒவ்வொரு தேர்தலிலும் செயல் படுகிறார். ஒரே ஒரு முறை தவிர்த்து ஜெயலலிதா அரசியலுக்கு வந்த பின்பு அவரையே எல்லாத் தேர்தல்களிலும் ஆதரிப்பவர் அவர். ஒரு பத்திரிகையாளனுக்கு அது சரியான நியதியா என்று தெரியவில்லை. கேட்டால், "எழுதுவதற்கு மேல் ஏதாவது செய்ய வேண்டும் என்று தமிழக அரசியலில் கூடுதல் அக்கறை கொண்ட ஒரே பத்திரிகையாளன் நான்தான்" என்றொரு விளக்கம் கொடுப்பார். எதிலும் துணிந்து மனதில் பட்டதைப் பேசும் தைரியசாலி சில பிரச்சனைகளில் உண்மையை மறைத்துப் பொய் பேசுகிறாரோ என்று தோன்றும் அளவுக்குப் பேசுவார். அதற்குக் காரணம் மனசே ஒரு பக்கம் சாய்வதுதான்.

கேப்டன் அவரது வேட்பாளரை அடித்தது தப்பில்லை என்று இவர் வியாக்கியானம் பேசியபோதே இவருடைய புத்திசாலித்தனம் புரிந்து விட்டது. இன்னும் ஒருநாள் பொறுத்திருந்து விட்டு எல்லோரையும் போல அவர் அடித்தது வேட்பாளரை அல்ல என்று சரியான விளக்கம் கொடுத்திருந்தால் கூடப் பரவாயில்லை. அடித்திருந்தாலும் தப்பில்லை என்று தமிழக அரசியலுக்குப் புதியதொரு முற்போக்குப் பாதையைக் காட்டியவர் இவர்தான். புலிகளையும் அப்பாவிகளாகப் பார்க்கச் சொல்லும் நண்பர்கள் ஒருபுறம் என்றால், பெண்கள்-குழந்தைகள்-முதியோர் உட்பட ஈழ மண்ணில் பிறந்த எல்லோரையுமே புலிகளாகப் பார்க்கச் சொல்கிறார் இவர். அவர்கள் எவ்வளவு பேர் கொல்லப் பட்டாலும் மகிழ்ச்சி அடைகிறார். அங்கு நடந்தது இனப் படுகொலையே அல்ல என்று அடித்துச் சத்தியம் செய்கிறார். அப்படியென்ன அவர்கள் மீது கோபம் அவருக்கு என்றுதான் புரியவில்லை. 

சரி, இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஒரு சனநாயக அமைப்புக்கு எது நல்லது? வெறித்தனமாகத் தனக்குப் பிடித்த கட்சியையும் தலைவனையும் கண்ணை மூடிக் கொண்டு, கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் தன் வீட்டில் புகுந்து செய்யும் வரைத் தப்பில்லை என்று ஆதரிப்பது நல்லதா? அல்லது, எல்லோர் செய்யும் தவறுகளையும் நடு நிலையில் நின்று சீர் தூக்கிப் பார்த்து ஆதரவு - எதிர்ப்பு பற்றி முடிவு செய்வது நல்லதா? கொஞ்சமாவது மண்டையில் மசால் இருந்தால் எவரும் முதலாவதுதான் நல்லது என்று சொல்ல மாட்டார். அப்படியிருந்தால் ஆட்சி மாற்றங்களே நடக்காதே. தலைவனும் அவனுடைய பிள்ளைகளும் அடுத்து அவனுடைய பேரப்பிள்ளைகளும் அல்லவா தொடர்ந்து மண்ணைக் குத்தகைக்கு எடுத்துக் கொள்வர்? அதுவா முதிர்ந்த சனநாயகம்?

முதலாவதே சரி என்போர் கேட்கும் ஒரு கேள்வி - எல்லோரும் நடு நிலையாளராகி விட்டால் கட்சி எப்படி நடத்த முடியும்? அதுவா உன் கவலை? கட்சி நடத்த வேண்டியது அதை நடத்துபவன் கவலை. அவன் உண்மையிலேயே அக்கறை உள்ளவனாக இருந்தால் நடு நிலையாளர்களைத் தன் பக்கம் இழுக்கும் விதமாக அரசியல் செய்யப் பழகி விடுவான். ஆனால் குருட்டுத் தொண்டர்கள் அதிகமாக இருந்தால் என்ன நடக்கும்? தலைவன் ஒருக்காலும் உருப்படும் விதமான வேலைகள் செய்ய மாட்டான். நம்மை மேலும் குருடாக்கும் அல்லது கண்ணைத் தோண்டும் வேலையைத்தான் விரும்பிச் செய்வான். முதிர்ந்த சனநாயகம் என்பது நடு நிலையாளர்கள் நிறையக் கொண்டதேயன்றி கொடி பிடிப்போர் கூடுதலாகக் கொண்டதல்ல.

சரி, அடுத்த கேள்வி... நடு நிலையென்பது நல்லவன் - கெட்டவன் இருவரையும் சமமாக ஆதரித்து சமமாகத் திட்டுவதா? அதெப்படி நடு நிலையாகும்? இருவரில் ஒருவர் நல்லவராகவும் இன்னொருவர் கெட்டவராகவும் இருப்பதுதான் சராசரி விதி. அதாவது, இருவருமே சமமான அளவில் நல்லவராகவோ கெட்டவராகவோ இருக்க முடியாது. ஒருவர் கூடுதல் நல்லவராக அல்லது கெட்டவராக இருப்பதுதானே இயற்கை. அப்படியிருக்கையில் இருவரில் யார் கெட்டவரோ அவரை அதிகமாகத் திட்டுவதுதானே சரி? ஆம். ஆனால், என்ன ஆகிவிடுகிறது என்றால், ஒருவர் அப்படிச் செய்யும் போதும் கெட்ட பெயர் தான் கிடைக்கும். ஒருவரை மட்டும் அதிகமாகத் திட்டுகிறான் என்று. அதுதான் பல நேரங்களில் நடுநிலையாளர்களை இக்கட்டில் இட்டு விடுகிறது. இன்னொருவரையும் திட்டுவதற்குக் காரணங்களைத் தேடிப்பிடித்துத் திட்ட வேண்டியாகி விடுகிறது. அவ்வேளைகளில்தான், அந்த இன்னொருவர் எளிதில் பற்றிப் பிடித்துக் கொள்ளும் படியாகத் தானே வலிய வழிய வந்து வாய்ப்புகள் கொடுக்கம் போது விமர்சிப்பவர்களுக்கும் வேலை எளிதாகி விடுகிறது. தன்னுடைய நடுநிலையை நாட்டுக்கு உணர்த்துவதற்காகவே வலிய வழிய வந்து வாய்ப்புக் கொடுக்கிறாரே என்று அவருக்காக மகிழ்ச்சி மடை திறந்து கொள்கிறது. மற்றபடி, வெறுப்பு பெரிய கெட்டவன் மீதுதான் அதிகம் இருக்கும்.

சரி, ஒருத்தர் எனக்கு மன்னிக்க முடியாத அளவு தீங்கொன்று இழைத்து விட்டார் ஏற்கனவே. நான் எப்படி அவரை ஆதரிக்க முடியும்? அவருடைய எதிரியைத் தானே ஆதரிக்க முடியும்? மிக நியாயமான கேள்வி. இத்தருணங்களில் நீங்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். உங்களுக்குப் பிடிக்காதவரைப் பிடிக்காதென்று சொல்லுங்கள். அதே வேளையில் அந்த இன்னொருவரையும் எல்லோரையும் போலவே திட்டுங்கள்.  இறுதியில், "என்னைப் பொருத்த மட்டில், இவர்தான் ஆகக் கொடுமை!" என்று முடிவுரை வாசியுங்கள். ஆனால், எந்தக் காரணம் கொண்டும் அந்த நேரத்தில் ஒருவர் மீதான வெறுப்புக்காக இன்னொருவரை வெறுக்க மாட்டேன் என்றோ அவரை ஆதரிப்பேன் என்றோ அடம் பிடிக்காதீர்கள். இருவரையும் வெறுப்பது தப்பே இல்லை. ஒருத்தரை நியாயப் படுத்த இன்னொருத்தரை எதிர்க்க வேண்டியதில்லை. ஒருத்தரை எதிர்க்க இன்னொருத்தரை நியாயப் படுத்த வேண்டியதில்லை. இதைத்தான் நாம் நிறையப் பேர் நம் தமிழக அரசியல்ச் சீர்தூக்கல்களில் செய்து கொண்டிருக்கிறோம்.

சுய லாபங்களைக் கணக்குப் போடுபவர்களால் துளியும் நடு நிலை காக்க முடியாது. சாதி, மத, இன, மொழி மற்றும் பிராந்திய ஒற்றுமைகளையோ வேற்றுமைகளையோ மனதில் வைத்துக் கொண்டு நடு நிலை காக்கவே முடியாது. அந்தக் காலத்தில் இருந்து எங்க வீட்டில் நாங்க எல்லோருமே இவரைத்தான் ஆதரிப்போம் என்போரால் அது முடியாது. ஒரு முறை ஒன்றைச் செய்து விட்டால் காலமெலாம் அதையே செய்வேன் என்கிற மனம் மாறா மன நோயால் அது முடியாது. முகத்தைப் பார்த்து ஒருவரைப் பிடிப்பவர்களுக்கு அது முடியாது. எதற்காக ஒருத்தரைப் பிடிக்க வேண்டுமோ அதற்காக அல்லாமல் வேறு எது எதற்காகவோ எல்லாம் ஒருத்தரைப் பிடிப்பவர்களுக்கு அது முடியாது. அது ஒருவரின் பேச்சுக்கோ நடிப்புக்கோ எழுத்துக்கோ தமிழுக்கோ திமிருக்கோ நரித்தனத்துக்கோ நாய்த்தனத்துக்கோ... எதற்காகவோ இருக்கலாம்! அதற்கென்று உங்களிடம் ஒரு நியாயம் இருக்கலாம். அது ஒரு போதும் உலகத்துக்கு நியாயம் ஆகவே ஆகாது.

நீங்கள், "நான் ஏன் நடு நிலை காக்க வேண்டும்? அது ஒரு பைத்தியக்காரத்தனம் இல்லையா?" என்று கேட்பவராக இருந்தால், மன்னிக்கவும். இது உங்களுக்கான பகுதியில்லை. இந்த உலகம் கூடக் கொஞ்ச காலம் கூடக் கொஞ்சம் நிம்மதியோடு இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்றொரு பைத்தியக்காரத்தனமான தலைப்பில் பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம் இங்கே. நடு நிலை காப்போரின் எண்ணிக்கை கூடக் கூட 2012-இல் அழியப் போவதாகச் சொல்லப் படும் இந்த உலகின் ஆயுட்காலமும் கூடும் என்று நம்பும் சில கோமாளிகளின் கூட்டம் இது. தப்பான அறைக்குள் வந்து விட்டீர்கள். தயவு செய்து தப்பித்துக் கொல்லுங்கள் (எனக்குத் தெரிந்த வரை, கடைசிச் சொல்லில் எழுத்துப் பிழையோ பொருட் பிழையோ இல்லை என்றே நினைக்கிறேன்!).

பின் குறிப்பு: நீ வரி கட்டினாயா? வாக்களித்தாயா? மத்தியான வெயிலில் சாக்கடை அள்ளினாயா? மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? உனக்கென்ன யோக்கியதை இருக்கிறது இது பற்றிப் பேச? என்றெல்லாம் சம்பந்தம் இல்லாமல் புத்திசாலித் தனமான பதில்க் கேள்விகள் கேட்டு யாரும் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். "விமர்சிப்பது மிகவும் எளிது" என்று கூறும் புதுவித விமர்சன யுத்திகளுக்கு இடமில்லை இந்தப் பகுதியில். எது பற்றிப் பேசினாலும் அதெப்படி நீ பேசலாம்? உனக்கென்ன தகுதி இருக்கிறது? என்ற கேள்விகளோடு கிளம்பி வந்து விடுகின்றன சில ஈசல்கள். முக்கிய அறிவிப்பு - அடுத்த சில நிமிடங்களில் அழிந்து விடப் போகும் ஈசல்களுக்கல்ல இந்த இடுகை. 

கருத்துகள்

  1. சகோ. சோ மட்டுமல்ல நம்மில் பலரும் பக்கசார்புள்ளவர்களே, அதிலும் பிறப்பால் வந்த அடையாளங்களின் பால் சார்ந்துக் கொண்டு நியாயங்களை குழி தோண்டிப் புதைப்பதிலும், அநியாயங்களை அநியாயமாக நியாயப்படுத்திக் கொள்வோருமே ஜாஸ்தி பேர். அதற்காக எந்தளவுக்கேனும் மடத்தனமாக பேசுவதைக் கூட பெருமையாக நினைப்பவர்கள்.

    என்ன செய்ய சோ மாதிரி ஆளுங்களை எல்லாம் பொது சபையில் உட்கார வைத்த நாதாரிக் கூட்டம் நம் மக்கள் கூட்டம், விஜயகாந்தையும் அந்தக் கேடுக் கெட்ட கட்சியைக் கூட் எதிர்க்கட்சியாக்கியுள்ளோம் .. என்னவோ போங்க.. எனக்கு வர வர வெறுப்புத் தான் அதிகரிக்கின்றது ................


    ******************************'

    குற்றம் செய்த பிள்ளைகளை போலிசில் கொடுத்த பெற்றோர்கள்

    பதிலளிநீக்கு
  2. //ஒருவர் மீதான வெறுப்புக்காக இன்னொருவரை வெறுக்க மாட்டேன் என்றோ அவரை ஆதரிப்பேன் என்றோ அடம் பிடிக்காதீர்கள். இருவரையும் வெறுப்பது தப்பே இல்லை. ஒருத்தரை நியாயப் படுத்த இன்னொருத்தரை எதிர்க்க வேண்டியதில்லை. ஒருத்தரை எதிர்க்க இன்னொருத்தரை நியாயப் படுத்த வேண்டியதில்லை. //

    வாவ் அருமையான வரிகள். அனாமிகா சுவாமினி சொல்லுவதும் அது தான். ஒருத்தன் நல்லவன் என்றால அவன் நல்லவன் என்று சொல்லுங்கள். அதற்காக மற்றவர்களை கெட்டவன் என்று கூறுபோடாதீர்கள். ஹி ஹி.

    //அதற்கென்று உங்களிடம் ஒரு நியாயம் இருக்கலாம். அது ஒரு போதும் உலகத்துக்கு நியாயம் ஆகவே ஆகாது.//
    தெய்வமே எங்கேயோ போய்விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. சோ ஒரு காமடி பீஸ் என்பது தெரியாதா? ஸப்பா. அவங்கள எல்லாம் கண்டுக்காதீங்க. பீ.பி எகிறும். ஆமா, ஓடி ஓடி எக்சர்சைஸ் பண்ணினாலும் எனக்கே நிறைய பீப்பி மாத்திரை தேவைப்படுது. நீங்க எப்படி சமாளிச்சுக்கிறீங்க. டவுட்டு தான்.

    பதிலளிநீக்கு
  4. வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி இக்பால். உண்மை. இந்தக் கொடுமையின் ஆரம்பம்தான் என்ன என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. @அனா- எழுதும் போதே நான் என்னைத் தட்டிக் கொடுத்துக் கொண்ட வரிகள் அவை. வேறு எவரும் அதைச் செய்வார்களா என்ற ஐயமும் இருந்தது. நீங்கள் வந்து அந்தப் பணியைச் செய்வதில் பெருத்த மகிழ்ச்சி. நீங்களே முன்பொரு முறை சொன்னது போல, எழுதுவது கூட எனக்கு ஒரு வகையில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைதான். :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்