கண்
“உங்களுக்கு நன்றி” என்று ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டே இருக்கையை விட்டு எழுந்தேன். நேர்காணல்களுக்கென்றே வடிவமைக்கப்பட்ட அறை போல் இருக்கிறது. மொத்தமே மூன்று-நான்கு பேருக்கு மேல் கொள்ளாத அறை. அவர் புன்னகையோடு எழுந்து நின்று அவரது வலது கையை நீட்டிக் குலுக்கினார். புன்னகை எல்லாம் நல்லபடி முடிந்தது என்றே சொன்னது. திரும்பி மெதுவாக அறையின் கதவைத் திறந்து வெளியேறினேன். உள்ளே செல்லும் போது, “வாழ்த்துக்கள்” என்று புன்னகைத்துச் சொன்ன அதே அழகான மாநிறப் பெண் வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள். தமிழ்ப் பெண்ணாக இருக்க வேண்டும். பெங்களூரில் இருக்கும் மாநிறப் பெண்கள் எல்லோருமே தமிழ்ப் பெண்கள் என்றுதான் தோன்றுகிறது. அவளின் வாழ்த்தே ஒரு நல்ல சகுணமாகத்தான் இருந்தது. எல்லா நிறுவனங்களிலுமா நேர்காணலுக்கு உள் நுழைவோருக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்பிவைக்கப் போகிறார்கள். இப்படியான ஒரு நிறுவனத்தில்தான் பணி புரிய வேண்டும். இப்போதும் புன்னகைத்தாள். “எப்படிப் போனது?” என்றாள். இவ்வளவு நன்றாகப் பேசுகிறாளே! எல்லோரிடமும் இப்படித்தான் பேசுவாளா? வருகிற எல்லோரிடமும் இப்படித்தான் பேச வேண்டும் என்று பயிற்சி கொடுத்திருப்பார்களோ! “