இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காக்கைகள்

எங்கள் வளமனைத்தையும் கொள்ளை கொண்டு போன கழுகுகளும் கள்ளப் பருந்துகளும் அவர்களுக்குள் அடித்துக் கொண்டால் சிதறி விழும் சில்லுகள் நாலு நமக்கும் வந்து விழுமென்ற நம்பிக்கையில் காக்கைகள் காத்துக் கிடக்கிறோம்

விதி

இரண்டு கண்களுமிழந்த மூன்று குழந்தைகள் கதறிக் கொண்டிருக்கின்றன முதற் குழந்தையின் தந்தை தன் கண்ணொன்றைக் கழற்றி வைத்து இதனை என் பிள்ளைக்கு இப்போதே பொருத்துங்கள் என்று கதறுகிறான் தன்னால் தன் தந்தை கண்ணிழக்க நேரிடுகிறதே என்று கதறுகிறது குழந்தையும் தந்தையில்லாத இரண்டாம் குழந்தையும் கதறுகிறது தனக்கும் இப்படிக் கண்ணைக் கழற்றிக் கொடுக்க ஒரு தந்தையில்லையே என்று விதியை நொந்து ஒன்றும் பேசாமல் ஊமைக் கொட்டானாய் நிற்கும் தன் தந்தை என்னதான் எண்ணிக் கொண்டிருக்கிறானோ என்று புரிந்து கொள்ள முடியாத மூன்றாம் குழந்தையும் கதறுகிறது இதற்குத் தந்தையில்லாமலே இருந்திருக்கலாமே என்று தலையிலடித்துக் கொண்டு

காதற்கவிதை

அழகு தோற்றம் தோல் தோள் முகம் வாய் உதடு புன்னகை கன்னம் கண்கள் கூந்தல் நெற்றி கழுத்து உடல் இடை தொடுதல் கெடுதல்... இவை எதுவுமற்ற காதற்கவிதை எப்படியிருக்குமென்று படித்துப் பார்க்க வேண்டும் முதலில்...

தளர்பிடி

நீ வசம்மாக மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் ஏதோவொன்றை உளறித் தப்பிக் கொள்கிறாய் அது உளறல் என்று எனக்குப் புரியவில்லை என்று எண்ணியும் கொள்கிறாய் அல்லது அது பற்றி அதிகம் எண்ணவே வேண்டியதில்லை என்று எண்ணிக் கொள்கிறாய் இறுக்கிப் பிடித்தால் மூச்சுத் திணறிச் சாகப் போவது நீ மட்டுமல்ல நாம் இருவருமே என்பதால் நானும் உன் உளறல்களை நம்பிக் கொள்வதாய் நம்ப வைத்து நகர்ந்து விடுகிறேன் எனக்குத் தெரியும் எனக்காக இப்படித்தான் நீயும் எத்தனையோ முறை பிடி தளர்த்திப் பின் வாங்கியிருக்கிறாய்... உறவு பிழைக்க உண்மைகள் அவ்வப்போது செத்துத்தானே ஆக வேண்டும் குறைந்த பட்சம் உறங்கியாவது போக வேண்டுமே...

கொல்லான்

பக்கத்து நாட்டை வரைபடத்திலிருந்தே நீக்க வேண்டும் என்பவன் சைவமாயிருந்தால் என்ன? அசைவமாயிருந்தால் என்ன??

காதலித்துப் பார்

காதலித்துப் பார் கண்மூடித்தனமாக ஆதரிக்கக் கற்பாய் கேள்வி கேட்காமல் வழிபடப் பழகுவாய் மக்களாட்சியில் மரியாதை குறையும் மனிதன் தெய்வமாகத் தெரிவான் குறைகளே காணாத மேன்மகனாவாய் எல்லாவற்றிலும் நல்லது காண்பாய் வேலை மறந்து விளம்பரம் செய்வாய் வழக்காடுவதில் வல்லவனாவாய் நடிப்பு உரைகள் மேல் பிடிப்பு வந்திடும் பித்தலாட்டங்களைச் சாணக்கியம் என்பாய் அட்டகாசங்களைத் தலைமைத்துவம் என்பாய் உலக அரசியலில் பண்டிதம் பெறுவாய் பொருளியல் மேதையாவாய் பொய்யையும் புரட்டையும் புகழப் பழகிடுவாய் எல்லாக் கேள்விக்கும் ஒற்றைப் பதிலளிக்கும் வித்தை கற்பாய் ஆகா ஓகோவென்று அடிக்கடிக் குதிப்பாய் கூடச் சேர்ந்து குதியாதோரை வெறுத்துப் பேசி விலக்கி விடுவாய் சென்ற ஆண்டின் நியாயம் இந்த ஆண்டு அநியாயமாகும் சென்ற ஆண்டின் அநியாயம் இந்த ஆண்டு நியாயமாகும் காதலித்துப் பார் தலைவன் ஒருவனைக் காதலித்துப் பார்

வைகோ - அம்புட்டுத்தேன்

சுற்றியிருந்த எல்லோரும் நிராகரித்த பின்னும் கூட என்னால் ஒரு சிலரை அப்படி எளிதில் புறந்தள்ள முடிந்ததில்லை. அப்படியான ஒருவர் சிதம்பரம் முதலில். அவருடைய அரசியலை மிகச் சிறிய வயதில் இருந்து கவனித்து வருகிறேன். அவரைப் போன்ற தலைவர் கிடைக்கத் தமிழர்கள் தம் தகுதியைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்று கூட எண்ணியதுண்டு. வயிற்றுப் பிழைப்புக்காக அரசியலில் இருக்கும் ஆள் அல்ல அவர் என்று எண்ணினேன். மூப்பனாரின் மறைவுக்குப் பின் - தன்னை ஒரு தேசியத் தலைவர் போல வளர்த்தெடுத்துக் கொண்டிருந்த வேளையில் தன் தொகுதி மக்களே தன்னை மண்ணைக் கவ்வ வைத்த பின் அவரின் அரசியல் வெகுவாக மாறியது. மண்ணுக்கேற்ற அரசியலைப் பழக முயன்றார். அதற்கும் கூட மக்களையும் சேர்த்தே குற்றவாளியாக்கினேன். ஆனால் பின்னாளில் அவரும் ஒரு பெரும் கொள்ளைக்காரனைப் போல் - கூட்டம் சேர்ப்பவனைப் போல் அரசியல் செய்யத் தொடங்கி, முழு நம்பிக்கையையும் இழந்து விட்டார். அப்படியான இன்னொருவர் வைகோ. இவரையும் மிகச் சிறிய வயதிலிருந்து கவனித்து வருகிறேன். அப்போதிருந்தே அவரைக் கொண்டாடியவர்களும் உண்டு; முழுமையாக வெறுத்தவர்களும் உண்டு. இரண்டுமே தவறான காரணங்களுக்காக. எல்லோருமே

குழி

சாமி உன் பக்தர்கள் தோண்டும் பல குழிகளில் ஒன்று உனக்கானது போல் தெரிகிறதே

ஆண்டவரே

ஆண்டவரே மற்ற கடவுளரை அழிக்க மனிதர்களை ஏன் அனுப்பி வைக்கிறீர்?

நம்பினார்

நம்பினார்க் கெடார். கெடுவோம் என்று நம்பினார்?

இருப்போம்

புலியும் இருக்கும் மானும் இருக்கும் புலியாகவும் மானாகவும் மாறி மாறி நடிக்கும் மனிதனும் இருப்பான்

வட்டத்துக்கு வெளியே

உங்கள் வட்டத்துக்குள் வந்து வாழ்ந்து பார்த்தால்தான் உங்கள் நியாயங்கள் புரிபடும் என்பது புரிகிறது ஒவ்வொரு வட்டத்துக்கும் தனித்தனி நியாயங்கள் இருக்கின்றன என்பதால் ஒரு வட்டத்துக்குள் வந்து சிக்கிக் கொண்டு விட்டால் பிற வட்டங்களின் நியாயங்கள் புரிய முடியாது போய்விடும் என்பதால் நாளை நானும் பிற வட்டங்களை இருக்க விடுவதே தவறு என்று கூட நியாயம் பேசத் தொடங்கி விடுவேன் என்பதால் வட்டங்களுக்கு வெளியிலேயே வாழ்ந்துவிட்டுப் போகிறேன் விடுங்கள்

திருமண நாள் ஞானோதயம்

உன் பிறந்த நாளுக்கும் அன்பளித்து தன் பிறந்த நாளுக்கும் அன்பளிக்கும் ஏமாளியா உன் காதல் இணை? உன் காதல் வென்று விடும்! தன் தவறுக்கும் மன்னிப்புக் கேட்டு உன் தவறுக்கும் மன்னிப்புக் கேட்கும் கோமாளியா உன் வாழ்க்கைத் துணை? உன் திருமணம் வென்று விடும்! :P

கெடுவான் கேடு நினைப்பான்

கெடுவான் கேடு நினைப்பான் என்பதன் பொருள் என்ன? முதலில் கெடுவான், அப்புறம் பிறருக்குக் கேடு  நினைப்பான் என்பதா? அல்லது, இப்போது பிறருக்குக் கேடு நினைப்பவன் நாளை கெட்டு அழியப் போகிறவன்தான் என்பதா? அல்லது, கெட்டுச் சீரழியப் போகிறவனால் பிறருக்குக் கேடுதான் நினைக்க முடியும், அதற்கு மேல் அவனிடம் எதிர்பார்க்காதீர்கள் என்பதா? அல்லது, கேடு நினைப்பவனைப் பற்றி அதிகம் கண்டுகொள்ளாதீர்கள், அவனே அழிந்து நாசமாப் போவான் என்பதா? எல்லாத்துக்குமே எடுத்துக்காட்டு இருந்தால் இப்படித்தான். குழம்பித் தொலைய வேண்டும்! :)

சிறப்பு

பெற்றோர்க்குச் சென்றவிடமெல்லாஞ் சிறப்பு பணம் பெற்றோர்க்கு பலம் பெற்றோர்க்கு அழகு பெற்றோர்க்கு!

கண்கள்

காண மட்டுமா செய்கின்றன கண்கள்? காண்பிக்கவுந்தானே செய்திடுகின்றன!

தேடு

எனக்குப் பசிக்கிறது சோறு வேண்டும் என்று ஒருவன் வந்தான் எனக்குப் பசிக்கிறது செத்துப் போவேன் என்று ஒருவன் வந்தான் அவனுக்குச் சோறு கிடைத்தது இவனுக்குச் சாவு கிடைத்தது

உடல் வலி

மனவலி பகிர்ந்து கொள்ள வழியிருக்கிறது மனிதர்களிடத்தில் உடல்வலி பகிர்ந்து கொள்ள உதவும் தொழில்நுட்பம் ஒன்று வருமா? அன்று முதல் உறவுகள் ஒன்றையொன்று மென்மேலும் இறுகப் பற்றிக் கொள்ளுமா? அல்லது ஓடி ஒளியத் தொடங்குமா?

தத்துவானந்தம்

உடலுக்கு வெளியே அரித்தால் தோல்நோய்! மண்டைக்கு உள்ளே அரித்தால் மனநோய்!!

எர்னஸ்டோ சே குவேரா - ஐ. லாவ்ரெட்ஸ்கி

கிட்டத்தட்ட முப்பதாண்டு காலமாக மீண்டும் மீண்டும் கண்ணில் பட்டுக்கொண்டு பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த ஐ. லாவ்ரெட்ஸ்கியின் ‘எர்னஸ்டோ சே குவேரா’ ஒருவழியாக முடிவுக்கு வருகிறது. சந்திரகாந்தன் என்பவரின் தமிழ் மொழிபெயர்ப்பு. இடையில் இரண்டு-மூன்று முறை படிக்கத் தொடங்கிப் பாதியிலும் விட நேர்ந்தது. அப்படிப் பாதியில் விட நேர்ந்ததற்கு முக்கியக் காரணம், நடையில் இருக்கும் மொழிபெயர்ப்பின் தாக்கம். இம்முறையும் அது படிப்பதற்குப் பெரும் இடையூறாகவே இருந்தது. அது மட்டுமில்லாமல் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள் வேறு. தொழில்நுட்பம் பெரிதும் வளராத அன்றைய காலத்தில், எந்தக் காலத்திலும் நிதி வசதி அதிகம் இல்லாத இடதுசாரிகளின் வெளியீட்டில் வரும் ஒரு நூலில் இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். பின்னர் வெளிவந்த அடுத்தடுத்த பதிப்புகளில் இவை களையப்பட்டிருக்க வேண்டும் என்று நம்புவோம். சே குவேரா மீதான ஈர்ப்பின் காரணமாக அனைத்தையும் மீறி இம்முறை நூலை முடித்துவிட வேண்டும் என்று பிடிவாதமாக வாசித்து முடித்தேன். நூலெங்கும் வாசகனைத் தக்க வைத்துக்கொள்ளும் நடை இல்லாததை அடிக்கடி உணர முடிந்தது. இந்தப் பிரச்சனை கண்டிப்பாக ஆங்கி

பாதுகாப்பு

அன்னியர் நிறைந்த தொடர்வண்டியில் இரவெல்லாம்  தனியாகப் பயணிக்கப் போகும் மகளின் பாதுகாப்பு பற்றி எப்போதும் போல் கவலையில் ஆழ்ந்திருந்தார் தந்தை வண்டியேறும் வேளை வந்தேறிய தோழனின் வருகை எதிர்பாராமல் நிகழ்ந்தது எனினும் மகளுக்குப் பாதுகாப்புக் கூட்டியிருப்பதாக எண்ணி வழக்கத்துக்கு மாறான நிம்மதியோடு வழியனுப்பி வைக்க உதவியது வழியனுப்பி விட்டுத் திரும்புகையில்தான் புதிதாக ஏதோ உரைத்தது அன்னியர்களோடு பயணித்த நாட்களைவிட அதிகம் பயப்பட வேண்டியது இன்றுதானோ?!

மேலானவன்

நான் குறைபாடுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அப்பாற்பட்டவனல்லன் என்பதை நன்கறிந்தவனே உங்கள் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றிற்கும் விளக்கமளிக்க வேண்டிய கடமை எனக்கிருப்பதையும் அதற்குரிய இடத்தில் நான்  அமர்ந்திருப்பதையும் நன்கறிவேன் ஆனாலும் குற்றஞ்சாட்டும் ஒவ்வொருவரும் குறைகளுக்கு அப்பாற்பட்டவர்களில்லை என்பதாலே என் வேலை  எனக்கு எளிதாகிடுகிறது பெரிய இடத்தில் அமர்ந்துகொண்டு பெரும்பெருங் குற்றங்கள் புரிபவன் நான் சிறிய இடத்தில் இருந்துகொண்டு சிற்சிறு குற்றங்கள் புரியும்  உம்மை அம்பலப்படுத்துவதற்கும் உமக்கு என்னைப் பற்றிச்  சிந்திக்க நேரமில்லாமல் செய்து உம்மைக் காத்துக் கொள்ளவே போராடும் வகையில் பார்த்துக் கொள்ளவும் என் ஊழியர்களே போதும் எனும்போது எதற்காக நான் என் மேலான நேரத்தை உமக்காக விளக்கமளிப்பதில் வீணடித்துக்கொள்ள வேண்டும்?!

கடனாளியாக்கல்

நீ என்னவெல்லாம் எதிர்பார்த்தாய் என்று எனக்குத் தெரியாது ஆனால் ஒருபோதும் ஒன்றும் வாய் விட்டுக் கேட்டதில்லை நான்தான் உன்னைக் கடனாளியாக்க ஆசைப்பட்டு அத்தனையும் செய்தழிந்தேன் கேட்காமல் வந்தது என்பதாலோ என்னவோ நீ கடன்பட்டதாகவே கருதுவது போற் தெரியவில்லை கட்டியெழுப்பிய கோட்டைகள் உடைய உடைய பாதிக் கடனாவது அடைபடாதோவென்று  பரிதவிக்கத் தொடங்கினேன் எல்லாம் தரைமட்டமானபின் இப்போது உன்னைக் கடனாளியென்று உணரவாவது வைத்துவிட வேண்டுமென்று உழைத்துக் கொண்டிருக்கிறேன்

சரி

எப்போதும் நான் நினைப்பதே சரியென்று நம்புகிறேன் குறைந்த பட்சம் மற்றவர்களைவிடச் சரிக்கு அருகாமையில் இருப்பதாக நம்புகிறேன் அவ்வப்போது முன்பைவிட மேலும் சரிக்கு அருகே நெருங்கிவிட்டதையும் உணர முடிகிறது அப்படிச் சரி நோக்கி நகர்கையில் எல்லாம் என்னை விடச் சரியைவிட்டு விலகி நிற்பவர்கள் என்று  நான் எண்ணிக்கொண்டிருந்தவர்கள் பலரையும் கடந்து தான் முன்னேறுகிறேன் ஆனாலும் இப்போதைக்கு நானே சரிக்கு மிக அருகாமையில் இருப்பதாக உணர்கிறேன் சரியுமே கூட அவ்வப்போது இடம் மாறித்தான் விடுகிறது முன்பை விட இப்போதெல்லாம் வேகவேகமாகவே இடம் மாறி விடுகிறது

பட்டுக் கற்றல்

மீன் தராதே தூண்டில் கொடு என்றான் முதல் ஞானி தூண்டிலும் கொடாதே பிடிக்க மட்டும் கற்றுக்கொடு என்றான் அடுத்த ஞானி எவருக்கும் இழப்பில்லாமல் கற்று மட்டும் கொடுக்க முயன்றபோது... இலவசக்கல்வி உன்னைத்தான் இளக்காரமாக்கும் பட்டுக் கற்றலினும் சிறந்த பாடமில்லை ஒதுங்கிக் கொள் என்றான் இன்னொரு ஞானி போங்கடா ஞானிகளா நானும் பட்டே கற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு மீன்களை வாரிப் பங்கு போடத் தொடங்கிவிட்டேன்!

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் சுஜாதா ஒருவர். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றவர்களுக்குக் கிடைத்த இடம் அவருக்குக் கொடுக்கப்படாவிட்டாலும் அவர்களைவிட அதிகம் பேரால் போற்றப்பட்டவர். சுஜாதாவை ஏன் அவருடைய வாசகர்கள் போற்றும் அளவுக்கு இலக்கியவாதிகள் போற்றுவதில்லை என்ற கேள்வி எப்போதும் இருந்து வருகிறது. அதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுவது, அவர் ஜெயகாந்தனைப் போல சமூகத்தின் மீது அக்கறையும் கோபமும் கொண்டு அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை அதிகம் எழுதாமல், சிக்கலான சமூக-அரசியல் பிரச்சனைகளுக்குள் தலையைக் கொடுக்காமல், தன் தனிப்பட்ட மனநிறைவுக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் பெரும்பாலும் நடுத்தர மற்றும் மேல்நடுத்தர வர்க்க - ஓரளவு படித்த மக்களுக்காகவும் அவர்களுடைய வாழ்க்கையையே அதிகம் எழுதியவர் என்பதாக இருக்கலாம் என்பது (இது போக நம் சிற்றறிவுக்குப் புலப்படாத பல்வேறு மற்ற காரணங்களும் இருக்கக் கூடும்). ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ படித்தபோது அதுவே மேலும் உறுதிப்பட்டது. இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் பதினான்கு கதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம்மை ஈர்க்கும். அடித

வலியின் வலி

வலிபடுதலினும் பெருவலியல்லதான் வலிபடுதலை அருகிலிருந்து காண்தலும் காணச் சகியாமல் துடித்தலும் படுபவருக்கு படுவலி உடல்வலி பக்கத்திலிருந்து பார்ப்பவருக்கு? வலியின் வலியை உணர்ந்திடப் போராடும் பாடும் வலி போக்க முடியாத வழிப்போக்கனாக உடன் கிடந்து வாடும் ஆற்றாமையும் உயிர்வலி அல்லவா?

மொழித்தாய்

வெளியூர்க்காரியே ஆனாலும் வென்றவளைத் தாயாக்கிக் கொளல் வெகு எளிது என்றாகிவிட்ட பின் எவர் உழைப்பார் வீட்டுக்குள் மாட்டிக்கொண்ட சொந்தத்தாயை வெல்விக்க? வேண்டுமானால் பிடிவாதக்காரர் நீர் உழைத்து வெல்வித்துவிட்டு வந்து சொல்லுங்கள் உறவு கொண்டாட வருகிறோம்!

மேதாவியர்

எம்மிடமில்லாத உம் அறிவும் ஆற்றலும் உம் மீது எப்போதும் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன ஆனால் பிழைப்புக்காகக் குற்றங்கள் இழைக்கும் எளியவர் எம்மிலும் இழிவாக உம் மேலான வாழ்வுக்காக உலக நியாயங்களையெல்லாம் உம் வசதிக்கேற்றபடி வளைத்துப் போட்டுக் கொள்ளும் உம் அறவுணர்வும் உம் அறிவையும் ஆற்றலையும் எவ்வளவோ பயன்படுத்தியும் உம் உள்நோக்கங்களை ஒளித்து வைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறித் தவிக்கும் வேளைகளில் வெளிப்பட்டுவிடும் உம் இயலாமையும் போதும் எம் மீதேறி எம்புட்டு மேலே தாவிப் போனாலும் மேதாவியர் உம்மைக் கீழே வீழ்த்த

காதல் முட்டை

காதலிப்பது உண்மையானால் அதைக் காட்டிக்கொள்வதில் என்ன தயக்கம் என்று கூறுகெட்ட கேள்விகள் கேட்கும் கூமுட்டைக் காதல் குஞ்சும் பொறிக்காது குழம்புக்கும் உதவாது ஒன்று உடனடியாக உடைத்து வீசப்படும் அல்லது வீசப்பட்டு வேறொரு வேளையில் உடைபட்டு நொறுங்கும் காதலும் அதற்கான காலம் கனியும்வரை அதீத கவனத்தோடு அடைகாக்கப்பட வேண்டிய உடைபொருள் என்ற பண்பாட்டுச் சூட்சுமமறிந்த பண்பட்ட காதல்தான் காலங்கடந்து வாழும் இனம் வளர்க்கும்

வெளிச்சத்தின் இழப்பு

சுற்றிலும் இளைஞர்களையே வைத்துக் கொண்டாலும் சுற்றுவதெல்லாம் இளைஞர்களோடே என்றமைத்துக் கொண்டாலும் முயன்றோ முயலாமலோ உணர்விலும் உருவிலும் இளைஞனாகவே இருந்துவிட இயன்றாலுங்கூட உள்ளுக்குள் ஓடும் கடிகாரம் மட்டும் அணு அணுவாய்க் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இளமையின் இழப்பை நினைவுறுத்தி நினைவுறுத்தித் துன்புறுத்திக்கொண்டேதானிருக்கிறது உச்சி வேளைக்குப் பிந்தைய வெயில் உச்சிவெயிலினும் பிரகாசமாயிருந்தாலுங்கூட மாலை நெருங்குகின்றதென்ற கவலையே அதை அனுபவிக்க விடாமல் ஆக்கிவிடுகிறதே! ஆக்கி எங்கே விடுகிறது? அழித்தல்லவா விடுகிறது! அந்திதான் அழகென்றும் வெயிலுக்குப் பிந்தையதுதான் விளையாடப் பொருத்தமான பொழுதென்றும் ஆயிரந்தான் ஓதினாலும் வெயிலோடு போய்விட்ட வெளிச்சத்தின் இழப்பு பற்றிய கவலைதானே மாலையையும் பாழாக்கி விடப் போகிறது!

நாய்கள் மட்டுமா?

ஊரெல்லாம் வெள்ளம் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும் என்கிறீர்களே உங்களுக்கு நன்றாகத் தெரியுமா? அங்கே நக்கிக் குடித்துக் கொண்டிருப்பவை அனைத்தும் நாய்கள்தாம் என்று நக்கிக் குடிப்பதனாலேயே அவை நாய்கள்தாம் என்று உறுதியாகச் சொல்கிறவர்களே! ஒருமுறை உற்றுப் பாருங்கள் அவற்றுள் பசித்தாலும் புல் தின்ன மாட்டோம் என்று சொல்லிக் கொள்ளும் புலிகளும் சிங்கங்களும்கூட நாய்களைவிட நன்றாகவே நக்கிக் குடித்துக் கொண்டிருக்கின்றன!

கடைசி விடை

மனிதனுக்கு பிரபஞ்சத்தைப் பற்றி ஏகப்பட்ட வினாக்கள் தன்னைப் பற்றி அதை விட அதிகமான வினாக்கள் விடையளிக்கப்படாத வினாக்களுக்கெல்லாம் ஒரே விடையாய் உயர்ந்து நிற்கிறார் கடவுள் வந்து சேரும் ஒவ்வொரு விடையும் அவரின் உயரத்தைக் குறைக்க முயல்வதும் எழுப்பப்படும் ஒவ்வொரு புது வினாவும் மீண்டும் அவரை மேலே ஏற்றுவதுமாக நீண்டுகொண்டே இருக்கிறது விவாதம் கடைசி வினாவும் எழுப்பப்பட்டு அதற்கான விடையும் விளக்கப்படும் வேளையில்தானே கடவுளுக்கும் அறிவியலுக்கும் வேலை முடியும் அதற்குப் பின்னும் மனிதனுக்கு மட்டுமா வேலை இருந்துவிடப் போகிறது பிரபஞ்சத்தில்!

வரலாறு

உன் முன்னோர்கள் எல்லோரும் நான் படித்த வரலாற்றில் நாயகர்கள் அவர்களை அப்படிக் காட்டிய பெருமை உன்னையே சேருமென்றார்கள் அது எனக்குப் புரியவில்லை நான் பார்த்த வரலாற்றில் பலருக்கு நீ நாயகன் பலருக்கு நீ பாவி உன் காலம் முடிந்தபின் என் பிள்ளைகள் படிப்பதற்காக எழுதப்பட்ட வரலாற்றில் நீயும் கேள்விகட்கப்பாற்பட்ட நாயகனாக உயர்ந்து நிற்கிறாய் அவர்கள் படிக்கும் வரலாற்றை நான் பார்த்த வரலாறு கொண்டு கேள்விக்குட்படுத்த விரும்புகிறேன் ஆனாலும் அதற்கெல்லாம் எங்கே நேரமிருக்கிறது? இருந்தாலும் இதெல்லாம் நான் படித்த வரலாற்றையும் கேள்விக்குட்படுத்த உதவியிருக்கிறது நன்றி நாயகா!