இடுகைகள்

சொந்தக்கதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடிதங்கள் கழிதலும்

எனக்குச் சிறு வயது முதலே கடிதம் எழுதுவதில் ஓர் ஈர்ப்பு இருந்தது. அது என் முன்னோர்களிடமிருந்து எனக்கு வந்தது. என் தாத்தா முதலில் காந்தியடிகளையும் பின்னர் நேதாஜியையும் பின்பற்றி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். காந்தியைப் போலவே அவரின் தொண்டர்களும் கடிதம் எழுதுவதில் ஆர்வமுடையவர்கள் என்பார்கள். சிறு வயதிலிருந்தே தாத்தா எழுதிய பல வரலாற்றுச் சிறப்பு மிக்க கடிதங்கள் பற்றி வீட்டில் அடிக்கடிப் பேசக் கேள்விப்பட்டது மட்டுமில்லாமல், தாத்தாவின் சீடர்களான சித்தப்பாக்கள் சிலரும் அப்படியே கடிதங்கள் எழுதுபவர்களாக இருந்தது, எனக்கும் கடிதங்கள் மீது அளவில்லா ஈடுபாட்டைக் கொடுத்தது. ஆண்டுக்கு ஒரு முறையோ அதைவிடவும் குறைவாகவோ சந்திக்கும் சில உறவினர்களோடு பேசும் போது, அவர்களுடனேயே இருந்து அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கும். அவர்களின் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நமக்கும் படிக்க எவ்வளவோ கொட்டிக் கிடப்பது போல இருக்கும். ஏனென்றால் அவர்கள் வேறு யாரோ அல்லர்; நம்மில் ஒருவர் - நம்மைப் போன்ற பின்னணியிலேயே பிறந்து வளர்ந்து சாதித்திருப்பவர்கள். அவர்களின் சாதனைக் கதைகளைக் கேட்கும் போது நா...

உங்கள் ஊர்

வணக்கம். என் ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் நாகலாபுரம் என்னுமொரு செம ஊர். என் ஊரைப் பற்றிப் பேசுவதென்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். எங்கள் ஊரைவிட நல்ல ஊர் இந்த உலகத்தில் இருக்குமா என்றொரு சந்தேகம் கூட எனக்கு உண்டு. உங்கள் ஊர் எப்படி? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன். ஊர் என்றதும் உங்களுக்கு எந்த ஊர் நினைவுக்கு வருகிறது? நீங்கள் பிறந்த ஊரா? வளர்ந்த ஊரா? உங்கள் தந்தையின் ஊரா? தாயின் ஊரா? சொந்தமாக வீடு கட்டிய/வாங்கிய ஊரா? இது எல்லாமே ஒரே ஊர்தான் என்றால் நீங்கள் பாக்கியவன்தான். எனக்குத் தெரியும். நீங்கள் 5 வயதுக்கும் 20 வயதுக்கும் இடையில் அதிக காலம் வாழ்ந்த ஊர் எதுவோ அதைத்தான் சொல்வீர்கள். சிலர் ஒவ்வோர் ஆண்டும் கோடை விடுமுறைக்குச் சென்ற பாட்டி ஊரைச் சொல்வார்கள். நீங்கள்? உங்கள் ஊர் கிராமமா? நகரமா? இரண்டுக்கும் இடையிலா? உங்கள் ஊரில் உள்ள எல்லோருக்குமே எல்லோரையும் தெரியுமா அல்லது பக்கத்து வீட்டுக்காரர் பெயர் கூடத் தெரியாதா? இந்த ஊர் இதைவிடச் சிறிதாகவோ பெரிதாகவோ இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்திருக்கிறீர்களா? ஒவ்வோர் ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்குமே! அப்படி உங்...

யாதும் ஊரே: அமேரிக்கா 4

முதல் பாகம் அமேரிக்கா பற்றி, இரண்டாம் பாகம் கலிஃபோர்னியா மாநிலம் பற்றி, மூன்றாம் பாகம் லாஸ் ஏஞ்சலஸ் பற்றி என்றால், நான்காம் பாகம் எது பற்றி இருந்துவிடப் போகிறது! அதேதான். லாஸ் ஏஞ்சலசில் எந்தப் பகுதியில் வாழ்கிறோம் என்பது பற்றிப் பேசிவிடுவோம் இப்போது. அத்தோடு பொதுவாகவே அமேரிக்காவில் வாழும் இந்தியர்கள் பற்றி நிறையக் கதைகள் உண்டு. அவை பற்றியும் பேசிவிடுவோம். நாங்கள் வீடு பிடித்துத் தங்கி இருக்கும் இடத்தின் பெயர் 'டாரன்ஸ்'. டாரன்ஸ் என்பது லாஸ் ஏஞ்சலசில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்று. இது போலப் பல பகுதிகள் இருக்கின்றன. பொதுவாகவே இங்கே இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி எல்லாமே நல்ல பள்ளிகளைக் கொண்டிருக்கின்றன. நம்மவர்கள் நல்ல பள்ளிகள் உள்ள இடங்களைத் தேடி அடைவதும் உண்டு. நம்மவர்கள் குடியேறிய உடனேயே பள்ளிகளின் தரம் கூடிவிடுவதும் உண்டு. இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு நம்மூரில் கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தோமா என்று தெரியவில்லை. ஊருக்கு இரண்டு வீடுகளோ சிறிது பெரிய ஊராக இருந்தால் ஓரிரு தெருக்களோதான் நன்றாகப் படிக்கும் பிள்ளைகள் கொண்டிருக்கும். ஆனால் ஒழுங்கா...

யாதும் ஊரே: அமேரிக்கா 3

முதல் பாகத்தில் அமேரிக்கா பற்றியும் இரண்டாம் பாகத்தில் கலிஃபோர்னியா மாநிலம் பற்றியும் பார்த்தோம். அதிலேயே நாங்கள் வந்திறங்கியிருக்கும் நகரமான லாஸ் ஏஞ்சலஸ் பற்றியும் ஓரளவு பார்த்தோம் எனினும், இந்தப் பாகத்தில் அது பற்றி இன்னும் விரிவாகப் பார்த்துவிடுவோம். ஆங்கிலப் பெயர்களைத் தமிழில் வேறு மாதிரி எழுதும் பழக்கம் இருப்பது இதற்கும் பொருந்தும். தமிழில் எழுதுகிற எல்லோருமே இந்த நகரத்தை 'லாஸ் ஏஞ்சல்ஸ்' என்றுதான் எழுதுகிறோம். சொல்வதும் கூட அப்படியே. அது 'ஏஞ்சல்ஸ்' அல்ல, 'ஏஞ்சலஸ்'. 'ல்' அல்ல, 'ல'. இங்கே உள்ள எல்லா மாநிலங்களுக்குமே இரண்டெழுத்தில் ஒரு சுருக்கப் பெயர் இருக்கும். 'நியூ யார்க்' என்றால் 'NY'. 'நியூ ஜெர்சி' என்றால் 'NJ'. 'கலிஃபோர்னியா' என்றால் 'CA'. இப்படி ஐம்பது மாநிலங்களுக்கும் ஒவ்வொரு சுருக்கப் பெயர் உண்டு. நம்மூரில் வாகனப் பதிவு எண்ணுக்கு முன்னே TN, KA, KL என்று இருப்பது போல். ஆனால் இங்கே அஞ்சல் துறை உட்பட எல்லோராலும் முழுமையாக இந்த இரண்டெழுத்துச் சுருக்கப் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில்...

யாதும் ஊரே: அமேரிக்கா 2

சென்ற பாகத்தில் அமேரிக்கா பற்றிய அறிமுகத்தையே முடிக்கவில்லை. அதை முடித்துவிட்டுத்தானே அமேரிக்காவில் எங்கே வந்து இறங்கினோம் என்பதைப் பற்றிப் பேச முடியும்! அமேரிக்கா என்றாலே நமக்கு முதலில் கண்ணில் வருவது அந்தச் சுதந்திர தேவி சிலையும் அங்கே தென்படும் குளிருக்கான பல அறிகுறிகளுமே, இல்லையா? பனி சொட்டும் மரங்கள், குளிருக்கு உடலை முழுக்க மறைத்து உடையணிந்து நடமாடும் மனிதர்கள், அவர்களின் தலைகளில் இருக்கும் குல்லா ஆகியவைதானே! ஆனால் அது மட்டும் அமேரிக்கா இல்லை. அமேரிக்கா என்பது ஒரு பரந்து விரிந்த பெரும் நிலப்பரப்பு. இந்தியாவை எப்படித் துணைக்கண்டம் என்கிறோமோ அது போலவே இதுவும் ஒரு துணைக்கண்டம்தான். நிலப்பரப்பில் இந்தியாவைவிடப் பல மடங்கு பெரிய நாடு. பருவநிலைகளும் நில அமைப்பும் கூட இந்தியாவைவிடப் பல மடங்கு விதவிதமானது. ஆனால் இந்தியா போல் பரந்த பண்பாடுகளைக் கொண்ட நாடு என்று சொல்ல முடியாது. அதனால் அமேரிக்கா ஒரு துணைக்கண்டம் என்று சொல்வதைத் தாங்கிக்கொள்ள முடியாது போகலாம் உங்களுக்கு. இங்கேயும் உலகெங்கும் இருந்து வந்து வாழும் பல்வேறு இனக்குழுவினர் - மொழியினர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நம்மைப் போ...

யாதும் ஊரே: அமேரிக்கா 1

இவ்வளவு நாட்களாக பயணக்கட்டுரைகளை 'கலாச்சார வியப்புகள்' என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தேன். அவற்றையெல்லாம் தொகுத்து மின்நூலாகவும் வெளியிட்டாகிவிட்டது. காலம் கடந்து, அந்தப் பெயர் சலித்துப்போய் இருக்கிறது இப்போது. அதனால் இதுமுதல் பயணக்கட்டுரைகளுக்கு 'யாதும் ஊரே' என்று பெயர் மாற்றிக்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். நூலின் அடுத்த பதிப்புக்கும் இதே பெயரை இட்டுக்கொள்ளலாம் என்றும் எண்ணுகிறேன். எப்படி இருக்கிறது புதிய பெயர்? 'அமெரிக்கா'வை எல்லோரும் சொல்வது போல 'அமெரிக்கா' என்று சொல்லாமல் ஏன் 'அமேரிக்கா' என்று சொல்ல வேண்டும்? உண்மை என்னவென்றால், தமிழில்தான் அப்படி 'அமெரிக்கா' என்று எழுதுகிறோம். எழுதுவது மட்டுமே அப்படி. பேசும்போது கூடப் பெரும்பாலானவர்கள் 'அமேரிக்கா' என்றுதான் சொல்கிறோம். சிறு வயதில் 'அமேரிக்கா' என்று சொல்வது சிறிது பட்டிக்காட்டுத்தனமாக இருக்கிறது என்று எண்ணி, எழுதுவது போலவே 'அமெரிக்கா' என்று கவனமாக மாற்றிச் சொல்லப் பழகிக்கொண்டோம் என்கிற நினைவும் வருகிறது இந்த வேளையில். பின்னர் அதையே 'யூ. எஸ்.' என்...

நல்ல வறட்சியை எல்லோருக்கும் பிடிக்கிறது

சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஜீவ கரிகாலன் என்ற காளிதாசனும் நானும் ஒருவரை ஒருவர் கண்டெடுத்தோம். ஆனால் எங்கள் உறவு கிட்டத்தட்ட எண்பதாண்டுப் பழமை (!) வாய்ந்தது. ஒவ்வொருத்தருக்கு ஒரு கிறுக்கு. சாதி, மதம், மொழி, இனம், நாடு, ஊர் என்று ஏதோவொன்றின் மீது ஏற்படும் கிறுக்கில் இருந்து நம் எவருமே தப்பியதில்லை என்றே நினைக்கிறேன். அப்படியான ஒரு கிறுக்கு சொல்லி வைத்தாற்போல் எங்கள் ஊர்க்காரர்கள் எல்லோருக்குமே எங்கள் ஊரின் மீது உண்டு. அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்திக் கொண்டே வருகிறோம். எங்கள் ஊர்க்காரர்கள் எல்லோருமே இணையத்தில் தேடிய முதற் சில சொற்களில் ஒன்று எங்கள் ஊரின் பெயராகத்தான் இருக்கும். நானும் இன்றுவரை அதைப் பல முறை செய்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஏதோவொன்று புதிதாய்க் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அப்படியான ஓர் ஊர் அது. அப்படியான ஒரு தேடலின் போது நான் எங்கள் ஊரைப் பற்றி எழுதியிருந்த கட்டுரை ஒன்றைக் கண்டு தொடர்பு எல்லைக்குள் வந்தார் காளிதாசன். காளிதாசன் மட்டுமல்ல, அது போலப் பல பழைய உறவுகளை மீட்டுக் கொடுத்த கட்டுரை அது. அப்போது நான் சிங்கப்பூரில் இருந்தேன். இருவர...