கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (6/6)
விடுதி-வெளி மாணவர்கள் பொதுவாகவே எல்லா வகுப்புகளிலும் விடுதி மாணவர்கள் ஒரு குழுவாகவும் வீட்டிலிருந்து தினமும் வந்து செல்லும் வெளி மாணவர்கள் ஒரு குழுவாகவும் இருப்பர். இந்தக் குழுவுணர்வுதானே மனித இனத்தையே துண்டாடிப் போட்டுக் கொன்று குவித்துக் கொண்டு இருப்பது. சிலர் மட்டுமே இந்த எல்லைகளைக் கடந்து பழகுவது. எண்ணிக்கையில் குறைவு என்பதால் எங்கள் வகுப்பில் இது சிறிது பரவாயில்லை. சொந்த ஊர் அருகிலேயே இருக்கும் சிலர் சில காலம் இதுவாகவும் சில காலம் அதுவாகவும் இருப்பார்கள் (அதாவது விடுதி மாணவனாகவும் வெளி மாணவனாகவும்). சில விடுதி மாணவர்கள் எப்போதுமே வெளி மாணவர்களோடு சுற்றுவார்கள். அவர்களுடைய வீடுகளிலேயே கிடப்பார்கள். திருச்செந்தூரைச் சொந்த ஊராக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் தெரிந்த உள்ளூர்ப் பெண்கள் எல்லோரையுமே இவர்களுக்கும் தெரிந்திருக்கும். அது போலவே வெளி மாணவர்கள் நிறையப் பேர் எங்களுடனே கிடப்பார்கள். உள்ளே இருக்க முடிந்த நேரம் முழுக்க எங்களுடனே இருப்பார்கள். வார்டன்கள் அழைத்து சிலரைக் கண்டிக்கவும் செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒன்னு மண்ணாய் இருப்பார்கள். அப்படி எங்களுடனேயே வந்து...