கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 3/12
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடர்ச்சி... நாங்கள் சென்று சேர வேண்டிய இடத்தின் பெயர் - க்ராய்டன் (CROYDON). கிராய்டனில் ஹை ஸ்ட்ரீட் என்ற இடத்தில் போய், சாவியை வாங்கிக் கொண்டு அருகிலேயே வேறோர் இடத்துக்குச் செல்ல வேண்டும். இலண்டனில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ஹை ஸ்ட்ரீட் இருக்கிறது. அது இங்கிலாந்துக்கே உரிய ஒரு சொல்லாடல். பல நாடுகளில் மெயின் ஸ்ட்ரீட் என்பதை அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள். நம்ம ஊர்ப் பாணியில் சொன்னால் கடைத்தெரு. சென்னையில் சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கண்ணம்மாப் பேட்டை என்பது போல - பெங்களூரில் பொம்மனஹள்ளி, கம்மனஹள்ளி, மாரத்தஹள்ளி...