கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 3/12

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடர்ச்சி...

நாங்கள் சென்று சேர வேண்டிய இடத்தின் பெயர் - க்ராய்டன் (CROYDON). கிராய்டனில் ஹை ஸ்ட்ரீட் என்ற இடத்தில் போய், சாவியை வாங்கிக் கொண்டு அருகிலேயே வேறோர் இடத்துக்குச் செல்ல வேண்டும். இலண்டனில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ஹை ஸ்ட்ரீட் இருக்கிறது. அது இங்கிலாந்துக்கே உரிய ஒரு சொல்லாடல். பல நாடுகளில் மெயின் ஸ்ட்ரீட் என்பதை அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள். நம்ம ஊர்ப் பாணியில் சொன்னால் கடைத்தெரு. சென்னையில் சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கண்ணம்மாப் பேட்டை என்பது போல - பெங்களூரில் பொம்மனஹள்ளி, கம்மனஹள்ளி, மாரத்தஹள்ளி என்பது போல - இலண்டனில் உள்ள இடங்களின் பெயர்கள் நிறைய க்ராய்டன், கிங்க்ஸ்டன், கென்சிங்டன், விம்பிள்டன், ஆடிங்டன், பாடிங்டன் என்று 'டன்'னில் முடிகின்றன. DON அல்லது TON. இலண்டன் என்பதே ஒரு டன் தானே.

இரவு எட்டரை மணிப் போல் க்ராய்டன் ஹை ஸ்ட்ரீட்டில் சென்று இறங்கினோம். ஓட்டல் என்று எதையோ எதிர்பார்த்துப் போய் இறங்கிய எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நான்கைந்து பேருக்கு மேல் நிற்க முடியாத மாதிரியான வரவேற்பறை. கொஞ்சம் குண்டானவர் எளிதில் ஏற முடியாத - எதிரெதிரே வரும் இரண்டு பேர் விலகிச் செல்ல முடியாத மாதிரியான குறுகிய மாடிப் படிகள். நல்ல வேளை, ஓட்டலில் புக் பண்ண வில்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டேன். நாங்கள் தங்கப் போவது ஓட்டலில் அல்ல. ஓட்டல்காரர்களே நடத்தும் சர்வீஸ் அபார்ட்மென்ட் புக் பண்ணியிருந்தோம். சர்வீஸ் அபார்ட்மென்ட் என்பது பாத்திரங்கள் முதலான எல்லா வசதிகளும் இருக்கும் வீடு. குடும்பத்தோடு சென்றதால் ஓட்டல் அறையில் சமாளிப்பது ஆகாத காரியம் - தாமே வைத்திருக்கும் சர்வீஸ் அபார்ட்மெண்டில் இருப்பது நலம் என்று சொல்லி ஓட்டல்காரர்களே நல்லதொரு ஐடியா கொடுத்தார்கள். ஒரே அறை இருக்கும் ஓட்டல் அறைக்கும் மூன்று-நான்கு அறைகள் இருக்கும் சர்வீஸ் அபார்ட்மெண்டுக்கும் கட்டண வித்தியாசம் மிகக் குறைவு என்பதால் நானும் அதையே விரும்பி ஏற்றுக் கொண்டேன்.

இந்தியாவில் பணி நிமித்தமாக எங்கு சென்றாலும் அங்கே தங்கும் ஓட்டல்களின் தரம் சூப்பராக இருக்கும். அந்தத் தரத்தை விடக் குறைவான தரம் இலண்டன் போன்ற இடத்தில் இரவே இராது என்று நானே எண்ணிக் கொண்டது யாருடைய தவறு? சிங்கப்பூரில் தங்கிய ஓட்டல் கூட மிக அருமையாக இருந்தது. அதை விடவா இலண்டன் மோசம் என்று கேள்வி துளைக்க ஆரம்பித்தது. அது இலண்டனில் இருக்கும் எல்லா ஓட்டல்களின் பிரச்சனையாக இராது - இந்திய ஓட்டல் என்பதால் அது மட்டும் அப்படி இருந்திருக்கக் கூடும் என்று தேற்றிக் கொண்டேன். ஒரு பானைச் சோற்றுக்கு அந்த ஒரு சோறு பதம் ஆகாது என்று எண்ணிக் கொண்டேன்.

ஹை ஸ்ட்ரீட்டில் இருந்த கடைகள் அனைத்தும் அடைத்திருந்தன. அந்த நேரத்தில் எதுவுமே கிடைக்காது என்று சொல்லி, அருகில் திறந்திருந்த டெஸ்கோ கடையில் அவசரத்துக்கு வேண்டியதை மட்டும் வேக வேகமாக வாங்கிக் கொள்ள ஓட்டலில் பணி புரியும் இந்திய நண்பர் உதவினார். அவர் வெள்ளைக்காரர்களைப் போல ஆங்கிலம் பேசினார். அப்படி ஒருத்தர் நம்ம ஊரில் அப்படியொரு வேலையைப் பார்ப்பாரா? வாய்ப்பே இல்லை. ஆனால், அங்கே அது ஒரு சாதாரணமான பண்பாடு. மாணவ வயதில் நிறையப் பேர் கைக்காசுக்குக் கடைகளில் பணி புரிந்து சமாளித்துக் கொள்கிறார்கள். இதை இங்கிருக்கும்போதே நிறையக் கேள்விப் பட்டும் படித்தும் இருக்கிறேன். இருந்தாலும் நேரில் பார்ப்பது என்பது முற்றிலும் மாறுபட்ட உணர்வல்லவா? டெஸ்கோவிலும் இந்தியர்களே பணி புரிந்தார்கள். பெரும்பாலும் வட இந்தியர்கள். அரிசி, பருப்பு, பால் முதலான சாமான்கள் மட்டும் வாங்கிக் கொண்டு அபார்ட்மென்ட் நோக்கிக் கிளம்பினோம்.

ஓட்டல் நண்பரே வண்டி ஏற்பாடு செய்து உடன் வந்திருந்து பெட்டிகளை எல்லாம் இறக்கி ஏற்றிக் கொடுத்து உதவி விட்டுப் போனார். இறக்குவது எளிதுதான். ஏற்றுவது? அவ்வளவு எளிதல்ல. எங்கள் வீடு இருந்தது மூன்றாவது மாடி. லிப்ட் இல்லை. அதை முன்பே சொல்லியிருந்தார்கள். ஆனாலும் அதை நேரில் கண்டபோது கொஞ்சம் வெறுப்படித்தது. மூன்று மாடி வீட்டைக் கட்டி விட்டு அதில் லிப்ட் வைக்க வில்லையா? 'இந்தியாவில் கூட இது போல நடந்து கொள்வதில்லையேப்பா  நாங்கள்?!' என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டேன். படு சிரமப் பட்டு பல மாடிப்படிகளைக் கடந்து மூன்றாவது மாடிக்குப் போகும் முன் எத்தனையோ கேள்விகள். படிகளாவது நன்றாக இருந்திருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். மீண்டும் மிகக் குறுகலான படிக்கட்டுகள். இந்தியாவில் வாடகைக்கு வீடு பார்க்கும் போது கூட மாடிப் படிகளை வைத்து வீட்டின் தரம் பற்றி விமர்சிப்போம். இப்போதெல்லாம் இந்தியாவிலேயே நாம் நடமாடும் பெரும்பாலான பகுதிகளில் குறுகலான மாடிப்படிகள் காணாமல் போய்விட்டன. புதிதாகக் கட்டப் படும் வீடுகள் அனைத்துமே அகலமான மாடிப் படிகளோடு கட்டப் படுகின்றன. அப்படியிருக்கையில்... இங்கிலாந்தில்... அதுவும் இலண்டனில் எப்படி இப்படி ஒரு வீடு என்று குழப்பம்.

இலண்டனில் வீடு என்றால் அதற்கென்று ஒரு கற்பனை வைத்திருந்தேன். வீட்டுக்குள் நுழைந்ததும் அது அத்தனையும் நொறுங்கி விழுந்தது. அதற்கும் இந்தியாவின் மீது பழியைப் போட்டு விட்டு நகர்ந்தேன். அது இந்தியர்களால் நடத்தப் படும் அபார்ட்மென்ட் என்று முன்பே சொல்லியிருந்தேனே. கேட்டால், "நீயும் உன் கம்பெனியும் கொடுக்கும் காசுக்கு அதுவே அதிகம்!" என்று சொல்வார்கள். அதன் பின்பு அந்த வீட்டை வந்து பார்த்த எல்லோருமே அப்படித்தான் சொன்னார்கள். "இலண்டனில் இப்படியொரு வீடு கிடைப்பதே அரிது. கொடுத்து வைத்தவன் நீ!" என்று பொறாமைப் பட்டு விட்டுப் போனார்கள். எனக்கோ குழப்பம். யார் பக்கம் கோளாறு? நான் ஒன்றும் மாளிகைகளில் வளர்ந்த ஆள் இல்லை. பத்துக்குப் பத்து அறைக்குள் ஐந்தாறு பேர் படுத்துத் தூங்கி வாழ்ந்திருக்கிறோம். அது வேறு. அதன் பின்பு சொந்த மண்ணிலேயே அதை விடப் பல மடங்கு தரமான வாழ்க்கை வாழ ஆரம்பித்து விட்டோம். இன்றைக்கும் ஒவ்வொரு ரூபாயையும் கணக்குப் போட்டு செலவழிக்கும் ஆள்தான் நான். ஆனால் நல்ல வீடு என்பதற்கு எனக்கென்று ஓர் இலக்கணம் வைத்திருக்கிறேன். அதன்படி அந்த வீடு இல்லை. அப்படியிருக்கையில் அதை எப்படி அங்கிருக்கிற அவ்வளவு பேர் 'நல்ல வீடு' என்கிறார்கள் என்கிற குழப்பம்.

அவ்வீட்டின் ஒரு முக்கியமான பிரச்சனை - மரப்பலகைகளில் இருந்த தரை. மேற்கு நாடுகள் அனைத்திலுமே பலகைத் தரைகள்தாம் என்று பின்னர் கேள்விப் பட்டேன். பழக்கமின்மைதான் காரணம் என்று நினைக்கிறேன். சின்ன வயதில் எங்கள் ஊரில் பழைய கால வீடுகளில் மரப்பலகைகளில் கட்டப் பட்ட மாடிகளைப் பார்த்திருக்கிறேன். பின்னர் மக்கள் வசதியடைந்த போது அவற்றை மாற்றி கான்கிரீட் மாடிகள் கட்டினார்கள். இருபத்தைந்து வருடங்கள் கழித்து அதை விட முன்னுக்கு வந்த மண் என்று சொல்லப் படும் ஓரிடத்தில் மீண்டும் பலகை வீடுகளைக் காட்டியபோது (இந்தப் பலகைகள் வேறு மாதிரியானவை என்ற போதும்) எனக்கு வேறு விதமான சிந்தனையோட்டம் ஏற்பட்டது. இன்னொன்று - அது பழைய வீடு. எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் வசதியான வீடாக இருந்தாலும் பழைய வீடு என்றால் அதற்கென்று சில பிரச்சனைகள் இருக்கும். தரை விரிப்பெல்லாம் நிறம் மங்கி இருந்தது. வீட்டில் இருந்த பல பொருட்களில் பழமை தெரிந்தது. அவ்வளவுதான். மற்றபடி வேறு ஏதும் பெரும் கோளாறுகள் இல்லை.

சில நல்லவைகளும் இருந்தன. விளக்குகளுக்கான சுவிட்சுகள் எல்லாம் குழந்தைகளுக்கும் எட்டும் வகையில் தாழ்வாக அமைக்கப் பட்டிருக்கின்றன. இது போன்ற சின்னச் சின்ன வேலைகளுக்கெல்லாம் பெரியோரைத் தொல்லை செய்யக் கூடாது என்கிற எண்ணம் நல்ல எண்ணம்தானே. அது மட்டுமில்லை. மேற்கு நாடுகள் அனைத்திலுமே குழந்தைகளை மித மிஞ்சிய தற்சார்போடு வளர்ப்பார்கள். காரணம், எந்த நேரம் அவர்களுடைய தாயும் தந்தையும் அடித்துப் புரண்டு பிரிவார்கள் என்று யாருக்குமே தெரியாது. அவர்களுடைய பிரிவு ஒரு பாவமும் அறியாத அவர்களுடைய குழந்தைகளைப் பாதிக்கக் கூடாதே. அதனால்தான் பிஞ்சு வயதிலேயே படுப்பது கூட அக்குழந்தைகள் தனியறையில் படுக்க வேண்டும் என்று சட்டமெல்லாம் போடுகிறார்கள். வீடு பிடிக்கும் போது ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனியறை இருக்கிற மாதிரி வீடு பிடிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள்.

நாங்கள் சென்றிறங்கிய வீடு இருந்த இடம் கிராய்டனில் ஹோம் ஆபீசுக்குப் பின்னால். ஹோம் ஆபீஸ் என்பது அவர்களுடைய உள்துறை அலுவலகம் - வெளியோர் குடியேற்றம், பாதுகாப்பு, பாஸ்போர்ட் போன்ற வேலைகளைக் கவனித்துக் கொள்ளும் அலுவலகம். நம்முடைய விசா எல்லாம் அங்கு போய்த்தான் ஏற்றுக் கொள்ளப்படும். எந்த இடத்தில் 'இவனை விடலாம்!' என்று அனுமதி கொடுத்தார்களோ அந்த இடத்திலேயே போய் இறங்கினேன். ஒன்பது மணிக்கு மேலான அந்த வேளையில் சாலைகளில் ஈ-காக்கா கூடக் காண முடியவில்லை. சிங்கப்பூர் சென்று இறங்கிய போது பெற்ற முதல் உணர்வு - அந்த ஊர் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது என்பது. அந்த மாதிரி இலண்டன் சென்று இறங்கியதும் பெற்ற முதல் உணர்வு - அந்த ஊர் அவ்வளவு பாதுகாப்பானதில்லை என்பது. சென்றிறங்கிய முதல் நாள் முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை கேள்விப் பட்டோம். அதற்கொரு முக்கிய காரணம், நாங்கள் போய் இறங்கிய இடம். நாங்கள் போய் இறங்கிய இடத்தின் பெயர் க்ராய்டன் என்று சொன்னேனே. அது எப்பேர்ப் பட்ட இடம் என்று சொல்லி விட வேண்டும் அல்லவா?

க்ராய்டன் ஆங்கிலேயர் அதிகமில்லாத பகுதி. ஆப்பிரிக்கர்களும் ஈழத் தமிழரும் இந்தியர்களும் நிறைந்திருக்கும் பகுதி. சென்ற ஆண்டே அந்தப் பகுதியிலேயே தங்கியிருக்கும் நண்பர் ஒருவர் சொல்லியிருந்தார். "நாங்கள் இருக்கும் பகுதியில் இருக்கும் ரவுடிகள் எல்லாம் உங்கள் சொந்தக்காரர்கள்தாம். மற்றவர்களுக்குத்தான் பயம். நீயெல்லாம் அங்கு வந்தால் பயப்பட வேண்டியதில்லை!" என்று சொல்லிச் சிரித்து விட்டுப் போனார். சென்று இறங்கிய மறு நாளே பேசிய  நண்பர் ஒருவர் சொன்னார் - "சென்ற ஆண்டு நடந்த இலண்டன் கலவரத்தில் மிகப் பெரும் பாதிப்புகள் எல்லாம் நீ இருக்கும் பகுதியில்தான். கவனமாக இருந்து கொள்!". இது போதாதா நமக்கு?! பார்க்கிற ஆட்களிடம் எல்லாம் விசாரிக்க ஆரம்பித்து விட்டேன். "க்ராய்டன் முழுக்க அப்படியென்று சொல்ல முடியாது. மேற்குப் பகுதி மட்டும் கொஞ்சம் பிரச்சனைக்குரிய பகுதி. அந்தப் பக்கம் மட்டும் இருட்டிய பின் நடமாடாதே!" என்று இரண்டு-மூன்று பேர் ஒரே மாதிரியாகச் சொன்னார்கள். 'நல்ல ஊருய்யா!' என்று ஆகி விட்டது. அதற்கான அறிகுறிகளும் அந்தப் பகுதியில் நடமாடிய போதெல்லாம் தென்பட்டது. இரண்டு-மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஏதாவது வழிப்பறி - குற்றம் பற்றிக் கேள்விப் பட்டுக் கொண்டே இருந்தோம்.

வெள்ளைக்காரர்களின் முக இறுக்கம் கூட இதனால்தானோ என்று தோன்றுகிறது. தாம் பிறந்து வாழ்ந்த - நல்லா இருந்த - ஓரிடத்தை வெளியூர்க்காரர்கள் வந்து பாழ் பண்ணுவதைப் பார்த்தால் யாருக்குத்தான் தாங்கிக் கொண்டிருக்க முடியும்? ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் சந்தித்த ஒரு வெள்ளைக்காரர் மிக விரக்தியோடு பேசினார். "வருகிற எல்லோரையுமே உள்வாங்கிக் கொள்ளும் கலாச்சாரம் எங்களுடையது. ஆனால், வருபவர்கள் எங்கள் கலாசாரத்தையே சீரழிக்கும் வேலைகளைச் செய்யும் போது எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை!" என்றார். "அதென்னப்பா நிச்சயிக்கப் பட்ட திருமணம்? திருமணம் எப்படி நிச்சயிக்கப்பட முடியும்?" என்று கேட்டு மண்டையைக் குடைய வைத்து விட்டார். "சாப்பாட்டில் என்னப்பா அளவு சாப்பாடு? சாப்பாடு என்றால் வயிறு நிறையச் சாப்பிட வேண்டும். அதுதானே சாப்பாடு!? " என்று ஆந்திராக்கார நண்பன் ஒருவன் கேட்டான். அது போல இருந்தது இந்தக் கேள்வி. நமக்கு அந்தக் கேள்வி எவ்வளவு ஆச்சரியமோ அந்த அளவுக்கு அந்தப் பண்பாடு ஆச்சரியமாக இருக்கிறது அவர்களுக்கு.

ஏற்கனவே எளிதில் பிறரை மட்டமாக நினைக்கும் அவர்கள், குறிப்பாக இலண்டன் குண்டு வெடிப்புக்குப் பின் இன்னும் கொஞ்சம் வெறுப்பாகி இருப்பார்களோ என்று தோன்றியது. குண்டு வெடிப்பு நடந்த காலத்தில் அங்கிருந்த சகா ஒருவர், இந்தியர்களையும் சேர்த்தே குறி வைத்து வெறுப்பைக் காட்டினார்கள் என்று சொன்னார். வட இந்தியாவில் தென்னிந்தியர் அனைவரையும் மதராசி என்று சொல்வது போல இந்தியத் துணைக் கண்டத்தின் முகம் கொண்ட எல்லோரையுமே "பாக்கி" (PAKI) என்று சொல்லி வெறுப்பேற்றுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். "பாக்கி" என்றால் "பாகிஸ்தானி" என்பதன் சுருக்கம். அப்படிச் சொல்வதன் மூலம் ஒருவரை அவமதித்து விட்டதாக எண்ணிச் சொல்வது. அதாவது கேரளத்தில் மலையாளிகள் தமிழர்களைப் பாண்டி என்று சொல்லி மகிழ்வது போல. சென்னையில் தமிழர்கள் தெலுங்கர்களைக் கொல்டி என்று சொல்லி மகிழ்வது போல. இது போன்ற பண்பாடு எல்லா இடங்களிலுமே இருக்கிறது. பண்பட்ட சமூகம், புண்பட்ட சமூகம் என்று எவரும் விதி விலக்கல்ல என்பதைத்தான் இது காட்டுகிறது.

குளிரில் எட்டு மணிக்கே கடைகளை அடைத்து விட்டுத் தூங்கப் போய் விடுகிறார்கள் என்பதால், "வந்து சேர்ந்து விட்டோம்!" என்று ஊருக்கு அழைத்துச் சொல்ல சிம் கார்ட் கூட வாங்க முடியவில்லை. எந்த வெளிநாடு சென்றாலும் இது ஒரு பிரச்சனைதான். அதுவும் இரவில் போய் இறங்கினால் பெரும் பிரச்சனை. போய் இறங்கியதும் செய்ய வேண்டிய சில முக்கியமான வேலைகளைக் கூடச் செய்ய முடியாது. வீட்டிலாவது போன் வைத்திருப்பார்களா என்று பார்த்தால் அதுவுமில்லை. நல்லவேளையாக இண்டர்நெட் இருந்தது. ஓரிரு மின்னஞ்சல்களாவது அனுப்ப முடிந்தது. காலையில் எழுந்ததும் வேலைக்குச் செல்ல வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் முந்தைய இரவே செய்யா விட்டால் சிரமமாகி விடும் என்று, பெட்டிகளை இறக்கி வைத்து, முக்கியமான சாமான்களை மட்டும் பிரித்து எடுத்து வைத்து விட்டுத் தூங்கச் சென்றோம்.

இது எப்படி? முதல் நாள்த் தூக்கமே மூன்றாவது பாகத்தில்தான் வருகிறது. ஒரு மாதம் இருந்தோம். அப்படியானால், எத்தனை பாகங்கள்???!!! நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்! :)

-தொடரும்...

கருத்துகள்

  1. பண்பட்ட சமூகம், புண்பட்ட சமூகம் என்று எவரும் விதி விலக்கல்ல

    வருத்தமான வியப்பு..

    பதிலளிநீக்கு
  2. வாசிப்புக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே.

    பதிலளிநீக்கு
  3. கணக்குப் போட்டேன். செஞ்சுரி அடிப்பீர்கள் என்று தோன்றுகிறது. மாதம் ஒரு பதிவு என்றால் ஏறக்குறைய 8 வருடம் ஆகும்போல் தோன்றுகிறது. அதற்குள் நான் இவ்வுலகை விட்டுப் போகாமலிருக்கவேண்டும்.

    சொர்க்கம், நரகம் இவைகளில் எங்கு இன்டர்நெட் வசதி இருக்கும்?

    பதிலளிநீக்கு
  4. ஹாஹாஹா... அவ்வளவு நாட்கள் ஆகாது ஐயா. இன்னும் கொஞ்சம் வேகமாக எழுதி விடுகிறேன். உங்கள் பதிவுகளையெல்லாம் பார்த்தால் நீங்கள் எங்களை விட அதிக காலம் வாழ்வீர்கள் போலத் தெரிகிறது. அப்புறம் ஏன் இந்த வேண்டாத கவலை? :)

    பதிலளிநீக்கு
  5. உங்களின் படைப்பை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்துக் கருத்திடும்படி வேண்டுகிறேன்.

    http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_04.html

    பதிலளிநீக்கு
  6. தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி கணேஷ் அவர்களே. மிக்க மகிழ்ச்சியும் கூட.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்