அதே இடம்
எது எங்கள் குலத்தொழில்? என் தொழில் கட்டடம் கட்டுவது. எங்கள் சொந்தக்காரர்களில் எல்லோரும் கட்டடம் கட்டுபவர்கள் இல்லை. எங்கள் பெரியப்பா வீட்டில் எல்லோரும் படித்து நல்ல பணிகளில் இருக்கிறார்கள். அதில் கட்டடம் கட்டும் இஞ்சினியர் வேலைக்குப் படித்த அண்ணன் ஒருத்தனும் உண்டு. சின்ன வயதில் இஞ்சினியர் என்றாலே கட்டடமும் பாலமும் கட்டுபவன் என்றுதான் சொல்லிக் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட அந்த வயதில் கேள்விப்பட்ட எல்லாமே தவறாகித்தான் போனது. பெரியப்பா மகனும் கூட கட்டடம் எல்லாம் கட்டுவதில்லையாம். கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தினுள் உட்கார்ந்து கம்ப்யூட்டரில்தான் வேலை செய்கிறானாம் இப்போது. பிள்ளைகள் எல்லாம் படித்து விட்டதால் பெரியப்பாவும் பிள்ளைகளும் ஊர்ப்பக்கமே எட்டிப் பார்ப்பதே இல்லை. தாத்தாவும் தாத்தாவுக்குத் தாத்தாவும் விவசாயம்தான் செய்திருக்கிறார்கள். அதனால் விவசாயம்தான் எங்கள் குலத்தொழில் என்றும் சொல்லலாம். ஆனால் அவர்களின் பெரிய மீசைகள் எப்போதும் நாங்கள் மன்னர் பரம்பரையின் வழித்தோன்றல்கள் என்பதை மறந்து விடாமல் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. அதனால் அரசாள்வதே எங்கள் குலத்தொழிலாக இருந்திருக்க வேண்டும...