அடுத்து?
தெற்குத்தெரு ஆவுடையம்மாள் தலையில் அடித்துக் கதறிக்கொண்டு எங்கள் வீட்டுக்குள் பாய்ந்தார். அவர் கதறிக்கொண்டு வந்த வேகத்தையும் சத்தத்தையும் பார்த்தால் பாட்டியை அடித்துக் கொல்லத்தான் போகிறார் என்று பட்டது. அடுத்த நிமிடமே அடுப்பு வீட்டிலிருந்த அம்மாவும் கதறிக்கொண்டு பாட்டியையும் ஆவுடையம்மாளையும் நோக்கிப் பாய்ந்து வந்தார். பாட்டியைக் காப்பாற்றத்தான் அம்மா ஓடி வருகிறார் போலிருந்தது. அம்மாவும் வந்து சேர்ந்துகொண்டதும் மூவரும் சேர்ந்து மரண ஓலம் போட்டார்கள். அப்படியானால் இது சண்டை அல்ல. ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளவில்லை. சேர்ந்துதான் கதறுகிறார்கள். நான்கு வயதுச் சிறுவனான எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏதோவொரு புது விதமான அனுபவம்… பீதி… அந்த நான்கு வயது உலக அனுபவத்தில் அதற்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியவில்லை. என்னை அப்படியே விட்டுவிட்டு பாட்டியும் அம்மாவும் தலையில் அடித்துக்கொண்டு இங்குமங்கும் ஓடினார்கள். சிறிது நேரத்தில் வீட்டைச் சுற்றிலும் பலத்த அழுகைச் சத்தம். ஊரே கதறியது. ஊர்ப் பெண்கள் எல்லோரும் வீட்டுக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். எப்போதும் போல் காலையில் பிஞ்சைப் பக்கம் போயிருந்த அப்பா வந்து...