அடுத்து?

தெற்குத்தெரு ஆவுடையம்மாள் தலையில் அடித்துக் கதறிக்கொண்டு எங்கள் வீட்டுக்குள் பாய்ந்தார். அவர் கதறிக்கொண்டு வந்த வேகத்தையும் சத்தத்தையும் பார்த்தால் பாட்டியை அடித்துக் கொல்லத்தான் போகிறார் என்று பட்டது. அடுத்த நிமிடமே அடுப்பு வீட்டிலிருந்த அம்மாவும் கதறிக்கொண்டு பாட்டியையும் ஆவுடையம்மாளையும் நோக்கிப் பாய்ந்து வந்தார். பாட்டியைக் காப்பாற்றத்தான் அம்மா ஓடி வருகிறார் போலிருந்தது. அம்மாவும் வந்து சேர்ந்துகொண்டதும் மூவரும் சேர்ந்து மரண ஓலம் போட்டார்கள். அப்படியானால் இது சண்டை அல்ல. ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளவில்லை. சேர்ந்துதான் கதறுகிறார்கள். நான்கு வயதுச் சிறுவனான எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏதோவொரு புது விதமான அனுபவம்… பீதி… அந்த நான்கு வயது உலக அனுபவத்தில் அதற்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியவில்லை. என்னை அப்படியே விட்டுவிட்டு பாட்டியும் அம்மாவும் தலையில் அடித்துக்கொண்டு இங்குமங்கும் ஓடினார்கள். சிறிது நேரத்தில் வீட்டைச் சுற்றிலும் பலத்த அழுகைச் சத்தம். ஊரே கதறியது. ஊர்ப் பெண்கள் எல்லோரும் வீட்டுக்கு வரத் தொடங்கிவிட்டார்கள்.


எப்போதும் போல் காலையில் பிஞ்சைப் பக்கம் போயிருந்த அப்பா வந்து சேர்ந்தார். “பெரிய தாத்தா இறந்துட்டார்” என்று அவர்தான் எனக்குப் புரிகிற மாதிரிச் சொன்னார். பெரிய தாத்தா என்பது அப்பாவின் அப்பா. சின்னத் தாத்தாவும் இருந்தார். அவரும் அப்பாவின் அப்பாதான். ஆனால் சித்தப்பா. அவரோடு சேர்ந்து கண்மாய்க்கரைக்குப் போனேன். கண்மாய்க்கரைதான் எங்கள் ஊரில் பேருந்து வந்து நிற்குமிடம். எங்கள் ஊரில் மட்டுமல்ல. அந்தப் பகுதியிலுள்ள எல்லா ஊர்களிலும் கண்மாய்க்கரையில்தான் பேருந்து நிறுத்தம். அதனால் அந்த வயதில் சென்னையிலும் மதுரையிலும் கூட பேருந்து நிலையங்கள் கண்மாய்க்கரையில்தான் இருக்க வேண்டும் என்று கூட எண்ணியதுண்டு. கண்மாய்க்கரைக்குப் போனால், அங்கும் ஒரே களேபரம். கண்மாய்க்கரை அதன் வாழ்நாளில் ஒருமுறைதான் இது போன்ற ஒரு காட்சியைக் காணமுடியும் என்பதால் நகரவேண்டியவை எல்லாமே நிலைகொண்டு நிற்பது போலவும் அசைவற்றிருக்க வேண்டிய எல்லாமே ஆட்டமான ஆட்டம் கண்டுகொண்டிருப்பது போலவும் இருந்தது. அந்நேரம் திரும்பிப் புறப்பட்டிருக்க வேண்டிய ஒன்பதரை அன்று இன்னும் அங்கேயே நின்றுகொண்டிருந்தது.


ஒன்பதரை என்பது ஒன்பதரைக் கார். ஒன்பதரைக் கார் என்பது ஒன்பது மணிக்கு வரும் பேருந்து. பேருந்தைக் கார் என்றும் அது வரும் நேரத்தையே அரை மணி நேரமாக ரவுண்டாஃப் செய்து அதன் பெயராக வைத்துக்கொள்வதும் எங்கள் ஊரிலும் எங்கள் ஊரைச் சுற்றியுள்ள பகுதியிலும், அதாவது கண்மாய்க்கரையில் பேருந்து நிறுத்தம் இருக்கும் ஊர்களில், உள்ள பழக்கம். முறையே காலை ஒன்பது, மதியம் பன்னிரண்டரை, மாலை நான்கு, மாலை ஆறே முக்கால் மணிகளுக்கு வரும் பேருந்துகளை ஒன்பதரை, பன்னிரண்டரை, நாலரை, ஆறரை என்று அழைப்பதே எங்கள் பெயரியல். அதனால் “ஒன்பதரைக்கு வந்தேன்”, “நாலரைக்கு வந்தேன்” என்றும் சொல்லப்படும்; “ஒன்பதரையில் வந்தேன்”, “நாலரையில் வந்தேன்” என்றும் சொல்லப்படும். எங்கள் ஊருக்குப் பத்து நிமிடம் முன்பாகவும் பின்பாகவும் வரும் ஊர்களிலும் கூட இதே பெயர்தான்.


பெரிய தாத்தா ஊரிலும் விளாத்திகுளத்திலும் மாற்றி மாற்றி இருப்பார். கடந்த சில நாட்களாக விளாத்திகுளத்தில் பெரியப்பா வீட்டில் இருந்தார். அதிகாலையில் பாத்ரூம் செல்லும் போது தடுக்கி விழுந்து இறந்துவிட்டாராம். ஒன்பதரையில் செய்தி வந்து சேர்ந்தது. உடல் பிளசரில் (பேருந்தைக் கார் என்னும் ஊரில் காருக்கு இதுதான் பெயர்) வந்துகொண்டிருக்கிறது என்றார்கள். பத்துப் பதினைந்து பெண்கள் சேர்ந்து, சங்கிலியாகக் கைகோத்து, ஒப்பாரி வைத்துக் கதறி அழுதபடியே கண்மாய்க் கரையிலிருந்து வீட்டை நோக்கி ஊர்வலம் புறப்பட்டார்கள். பெரிய தாத்தாவுக்காகவே அவரைப் பற்றிய பாடல்கள் எல்லாம் உண்டு என்பதும் அன்றுதான் தெரிந்தது. அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, தெற்குத் தெரு குமராயி நடந்து நான் பார்த்ததே இல்லை. அவரும் தன் இளமைக்காலத்தில் எல்லோரையும் போல ஓடியாடித் திரிந்தவர்தான் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எப்படியோ கால்கள் செயலிழந்துவிட்டன. நான் பார்க்கும் போதெல்லாம் வீட்டுக்குள்ளேயேதான் இருப்பார். அமர்ந்தபடியே முன்னே பின்னே நான்கைந்து அடிகளுக்கு மேல் அவர் நகர்வதே இல்லை. அன்று இழுத்துக்கொண்டே அவரும் கண்மாய்க்கரை வரை வந்திருந்தார். பெரிய தாத்தா பற்றிய பாடல்களை இயற்றியவர் அவர்தானாம். பெண்கள் கூட்டத்தினூடே அவர்தான் இழுத்து இழுத்து நகர்ந்துகொண்டே பாடல்களைப் பாடி வந்தார். அந்தக் கூட்டமும் வந்து வீடடைந்த போது ஏற்கனவே வீடு வந்து சேர்ந்துவிட்ட பெண்களின் அழுகையோடு சேர்ந்து இரைச்சல் பன்மடங்கானது.


அது ஒரு வாழ்நாள் அனுபவம்தான். அப்படியொரு சாவை அதன்பின்பு நான் நேரில்  பார்த்ததே இல்லை. தொலைக்காட்சியில் காணும் தலைவர்களின் சாவு விதிவிலக்கு.


அடுத்த சில மணி நேரங்களில் வடக்கு வாசலில் பெரிய தாத்தாவைச் சாத்தியிருந்தார்கள். கூட்டமான கூட்டம். அவ்வப்போது ஊருக்குள் நடமாடிப் பார்த்திருக்கும் பக்கத்து ஊர்க்காரர்களும் இதற்கு முன்பு பார்த்தேயிராத பல அசலூர்க்காரர்களும் கண்ணில் பட்டார்கள்.


அதிகமான பிள்ளைகள் இருந்ததாலும் வீட்டிலிருந்து பொறுப்பாக விவசாயத்தைப் பார்த்துக்கொண்டதாலும் பாகப்பிரிவினையில் வடக்கு வாசல் இருந்த காரை வீடும் தெற்கு வாசலில் இருந்த கூரை  வீடும் சின்னத் தாத்தாவுக்குப் போயிருந்தது. காரை வீட்டு அளவுக்கு வசதியாகவும் இல்லாமல் கூரை வீட்டு அளவுக்கு எளிமையாகவும் இல்லாமல் இருந்த தெற்கு வாசல் ஓட்டு வீடுதான் பெரிய தாத்தாவுக்கு வந்திருந்தது. குமராயி நடந்து பார்த்ததில்லை என்பது போல், தாத்தாவை நான் காரை வீட்டில் பார்த்ததேயில்லை. ஆனால் பாகப்பிரிவினைக்கு முன்பு வரை அவர் அங்கிருந்துதான் ஆட்சி செலுத்தினார் என்று சொல்வார்கள். ஆனால் அந்த நேரம் எது பற்றியும் எவரும் யோசித்திருப்பார்களா என்று தெரியவில்லை. நேரடியாக உடலைக் கொண்டுவந்து வடக்கு வாசலில் இறக்கிவிட்டார்கள். வழக்கமாக அடுத்த நாள் எடுத்துவிடுவார்கள். பெரிய தாத்தாவை மூன்றாம் நாள்தான் எடுத்தார்கள். எங்கெங்கிருந்தோ ஆட்கள் வர வேண்டியிருந்தது என்பதால் காலில் ஒரு குண்டாஞ்சட்டி நிறையப் பெரிய பனிக்கட்டியை வைத்துக் காத்தார்கள். கடைசிக் காலத்தில் மாத்திரைகள் நிறையச் சாப்பிட்ட உடல் என்பதால் தாங்காது என்று பேசிக்கொண்டார்கள். 


பெரிய தாத்தாவின் பிள்ளைகள், சின்னத் தாத்தாவின் பிள்ளைகள் என்று பாகுபாடெல்லாம் இல்லை. எல்லோரும் நீர் எடுத்தார்கள். அவர்களுடைய எல்லோருடைய நண்பர்களும் வந்து குவிந்தார்கள். அதுதான் அந்த ஊர் அதன் வாழ்நாளில் கண்ட அதிகபட்ச மக்கட்தொகையாக இருக்க வேண்டும். பெரிய தாத்தாவை எடுத்த பின்பும் கிட்டத்தட்ட ஒரு வாரம் உறவினர்களும் நண்பர்களும் கட்சிக்காரர்களும் அங்கேயே கிடந்தார்கள். ஒவ்வொருத்தரும் எக்கச்சக்கமான கதைகளைச் சொன்னார்கள். நாளிதழ்களில் தாத்தாவின் மரணம் பற்றி வந்திருப்பதைப் பெருமையாகப் பேசிக்கொண்டார்கள். வெங்கட்ராமனுக்குச் சொல்லி ஆயிற்றா என்பது பற்றிப் பெரிதாகப் பேசிக்கொண்டார்கள். அவர் தாத்தாவுடன் சிறையில் ஒரே அறையில் இருந்தவராம். அடுத்த சில ஆண்டுகளில் அவர் குடியரசுத் தலைவர் ஆன போதுதான் தெரிந்தது - அவர் ஏன் அவ்வளவு முக்கியமானவர் என்பது.


அந்த ஒரு வாரமும், மனிதர்கள் எல்லோருமே நல்லவர்கள், பாசம் மட்டுமே அவர்களுக்குத் தெரிந்த உணர்வு என்கிற மாதிரி இருந்தது. பெரியப்பா - சித்தப்பாக்கள், அத்தை - மாமாக்கள், தாத்தா - பாட்டிகள் என்று எல்லோரும் ஒன்றாகவே இருந்து துன்பத்தைப் பகிர்ந்துகொண்டார்கள். அவர்கள் எல்லோருமே தத்தம் வாழ்க்கையில் பல சாவுகளைப் பார்த்தவர்கள் எனினும், இதுதான் முதன்முறையாக அவர்கள் வீட்டுக்குள் விழுந்திருக்கும் பெரிய சாவு. அதுவும் அவர்கள் எல்லோருக்குமே அவர்தான் குடும்பத் தலைவர். அவர்கள் ஒவ்வொருவரும் என்னவாக வேண்டும், என்னவாகக் கூடாது, எங்கே இருக்க வேண்டும், எங்கே இருக்கக் கூடாது என்பதையெல்லாம் முடிவு செய்தவர். “இனி நீ இந்த ஊர்ப் பக்கமே தலை வைத்துப் படுக்கக் கூடாது” என்று அவர் சென்னைக்கு விரட்டிவிட்டிருந்த அவரின் மகன்களில் ஒருவர் - தம்பி மகனும் மகன்தான் - அதன் பின்பு பல ஆண்டுகள் கழித்து தன் பெரியப்பனின் பிணத்தைப் பார்க்கத்தான் ஊர் திரும்பியிருந்தார். இழவு வீட்டில் அழுவது பெண்களுக்கு மட்டுமான வேலை என்றிருந்த ஊரில் - காலத்தில், ஆண்களும் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் ஏதாவது ஒரு கதையை நினைவு கூர்ந்து அழுதுகொண்டே இருந்தார்கள்.


கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருத்தராக அவரவர் ஊருக்குப் புறப்பட்டார்கள். ஒரு மாதத்தில் வீடு பழையபடி அமைதியானது. அப்போதும் ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவர் துக்கம் விசாரிக்க வந்துகொண்டுதான் இருந்தார்கள். ஒவ்வொருவரும் வந்து பெரிய தாத்தாவோடு அவர்களுக்கு இருந்த நினைவைப் பகிர்ந்தார்கள். வெள்ளைக்காரனின் சிறையில் பட்ட துன்பங்களிலிருந்து, காங்கிரஸ்காரனின் சிறையில் பட்ட துன்பங்கள் வரை, வெள்ளைக்காரக் கலெக்டரிடம் பேசிய ஆங்கிலத்திலிருந்து உள்ளூர் தாசில்தார்களுக்கும் வருவாய் அலுவலர்களுக்கும் எதிராக மனு எழுதிப் போட்டு விரட்டி அடித்தது வரை அம்புட்டுக் கதைகள். அதன் பின்பு ஒவ்வொரு கதையும் பல முறை மீண்டும் மீண்டும் கேட்டுத்தான் மனதில் நன்றாகப் பதிந்தது.


இந்த அனுபவம் மனதில் ஒரு தீராத ஏக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருந்தது. மீண்டும் எப்போது இப்படி உறவினர்களும் நண்பர்களும் சூழ அவர்களின் அன்பிலேயே திளைக்கும் வாய்ப்புக் கிடைக்கப் போகிறதோ என்ற ஆசை அடிக்கடி வந்துகொண்டே இருக்கும். வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல் ஒரு நாள் அம்மாவிடம் அதைக் கேட்டே விட்டேன். 


“எப்பம்மா இப்பிடி எல்லாரும் திரும்ப ஒன்னு கூடுவாக?”


“ஆக்கங்கெட்ட மாதிரிப் பேசாதே அறிவுகெட்ட மூதேவி" என்றதோடு விட்டிருக்கலாம். "பேசுவியா? பேசுவியா?” என்று வாயிலேயே சப்புச் சப்பென்று அடித்தார்.


அதுவரை அம்மா என்னை அடித்ததே இல்லை. அதிர்ச்சியில் ஒன்றும் புரியவில்லை. கத்து கத்தென்று கத்தி ஊரைக் கூட்டிவிட்டேன்.


"ராசால்ல... இங்க வாப்பா" என்று பாட்டிதான் என்னை இழுத்து அணைத்துக்கொண்டு அம்மாவை வைதார்.


“இந்தப் பச்ச மண்ணப் போட்டு இப்பிடி அடிக்கிறியே! இந்த வயசுல என்ன புரியப் போகுது! தெரிஞ்சுக்கிட்டா இப்பிடிலாம் பேசுறான்!”


அடுத்த சில மாதங்களாக எனக்கொரு புதிய விளையாட்டு தொற்றியிருந்தது. அந்தக் காலத்தில் நியாய விலைக் கடையில் மண்ணெண்ணெய் வரும் தகரக் கேன் ஒன்று இருந்தது. அதைக் கொல்லரிடம் எடுத்துக்கொண்டு போய் இரண்டு பக்கம் ஓட்டை போட்டு, காது மாட்டி, வளைந்த இரும்புக் கம்பியைப் பிடியாகச் செருகி நீர் இறைக்கும் வாளி செய்துகொள்வார்கள். பிடி மாட்டாமல், அரிசி, பருப்பு போட்டுக்கொள்ளும் வகையில் வெறும் பாத்திரம் போலவும் பயன்படுத்திக்கொள்வார்கள். வீட்டில் அப்படியொரு வாளி பழையதாகிப் போய்க் கிடந்தது. பிடியில்லை. அதற்கான ஓட்டைகள் இரண்டும் இருந்தன. அதில் ஒரு கயிற்றைக் கட்டி, அதைக் கொட்டு போலக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, “டவுன் டவுன் டக்… டவுண்டனக்கர…” என்று சொல்லிக்கொண்டே கொட்டுக்காரர்களைப் போலவே மண்டையைச் சிலுப்பிக்கொண்டு இழவுக் கொட்டு அடிப்பேன். கொட்டுக்காரர்களைப் போலவே முடியும் முன்னால் நீண்டு வளர்ந்திருந்ததால் நல்ல வசதியாக இருந்தது. வயதொத்த சிறுவர்களைச் சுற்றி நிற்க வைத்து, ஒவ்வொருத்தர் முன்பும் போய் இரண்டு நிமிடம் நின்று அவர்களுக்காகவே மண்டையைச் சிலுப்பி “டவுன் டவுன் டக்… டவுண்டனக்கர…” என்று தொடர்ந்து அடிப்பேன். அவர்கள் கையிலிருந்து நான் கிழித்துக் கொடுத்திருந்த தாளில் ஒன்றைக் கொடுப்பார்கள். ரூபாயத் தாளைத் தொட்டு வணங்கிவிட்டு, அடுத்து அடுத்த சிறுவன் முன்பு போய் நின்று அடிப்பேன். இது பெரிய தாத்தா சாவில் கொட்டடிப்பதைப் பார்த்து வந்த வினை. அதுவும் அந்த உறுமி மேளம்... அப்பப்பா! இந்த உலகத்தில் அதுவரை நான் வாழ்ந்த நான்கு ஆண்டு கால வாழ்க்கையில் பார்த்திருந்த ஆகப் பெரும் கேளிக்கை அதுதான். அதை விட்டுவிட்டு வேறென்ன விளையாட முடியும்!


இதைப் பார்க்கும் போதெல்லாம் அம்மாவுக்குக் கோபம் கோபமாக வரும். 


“கொட்டடிச்சுக் கொட்டடிச்சுத் தாத்தாவத் தூக்கிட்ட. அடுத்து யாரத் தூக்கப் போறானோ!” என்று கத்துவார். 


எனக்கு ஒரு கருமமும் புரியாது. நாம பாட்டுக்கு நமக்குப் பிடிச்ச மாதிரி விளையாடுற இந்த விளையாட்டைப் பார்த்துப் பாட்டிக்கும் அம்மாவுக்கும் ஏன்தான் இப்படிக் கோபம் வருகிறதோ என்று ஆத்திரம் ஆத்திரமாக வரும். அதுவும் பெரிய தாத்தா சாவில் கொட்டடிப்பதைப் பார்த்துத்தான் இந்த விளையாட்டையே கண்டுபிடித்தேன். அது கூடப் புரியாமல் நான் கொட்டடித்துக் கொட்டடித்துத்தான் பெரிய தாத்தாவைத் தூக்கிவிட்டேன் என்று அபாண்டமாகப் பழியைத் தூக்கி என் மேல் போடுவது எதனால் என்றும் எனக்குப் புரியவில்லை.


கடைசியில் ஒரு நாள், “சொல்லச் சொல்லக் கேக்காம…” என்று ஒரு குச்சியை எடுத்து அப்பா அடித்த அடியோடுதான் அதை விட்டேன். நான் கொட்டடிப்பதை நிறுத்தியதும் வீட்டில் சாவு விழுவது ஒன்றும் அப்படியே நின்றுவிடவில்லை.


அடுத்த ஓரீர் ஆண்டுகளில் சின்னத் தாத்தாவின் மூத்த மனைவியான சீதைப் பாட்டி இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அதற்கு நான் அடித்த கொட்டும் ஒரு காரணம் என்றார்கள். அதெல்லாம் வேண்டாம் என்றுதானே நான் முழுக்கவும் ஒதுங்கிவிட்டேன். இன்னமும் எதற்காக என்னைப் போட்டு இப்படிக் குற்றவாளியாக்குகிறார்கள்!


சீதைப் பாட்டி நீண்ட காலமாகவே பழையனூரில்தான் இருந்து வந்தார்.


"பெரிய தாத்தா சாவுக்கு வந்திருந்தாரே, நினைவில்லையா?" என்றார்கள்.


ஒரு பாட்டி தண்ணீர் மோந்து வரச் சொன்னார். அதுதான் அதற்கு முன்பு பார்த்து நினைவில்லாத ஒரே பாட்டி முகமாக இருந்தது. எனவே அவராகத்தான் இருக்க வேண்டும். ஏழு பாட்டிகளில் அவர்தான் ஆகச் சிறந்த நல்ல மனுசி என்று எல்லோரும் சொன்னார்கள். அப்படிச் சொல்லாதவர்களில் அதை ஒத்துக்கொள்ள விரும்பாத ஒரு சிலரும் இருந்திருக்கக் கூடும் என்பது பெரியவனானதும்தான் புரிந்தது.


வீட்டில் ஆடு-மாடுகள் இருப்பதால் எல்லோரும் போக முடியாது என்று சொல்லி வைகைச் சித்தியையும் என்னையும் மட்டும் ஊரில் விட்டுவிட்டு எல்லோரும் பழையனூர் சென்றார்கள். பெரிய தாத்தா இறந்த போது போலவே எல்லோரும் கூடியிருப்பார்கள். துக்கத்தோடு துக்கமாக மகிழ்ந்தும் இருந்திருப்பார்கள். என்னை மட்டும் இப்படி விட்டுவிட்டுப் போய்விட்டார்களே என்று கோபம் கோபமாக வரும். போய் வந்த  எல்லோரும் சொன்ன பழையனூர்க் கதைகளை எல்லாம் கேட்டு மனம் பொருமும். அதைச் சரி செய்து கொள்வதற்காக அடுத்த முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக்கு ஒரு முறை பழையனூர் சென்றுவிட்டு வந்தேன். அந்த ஊரும் அங்கு பாட்டி வீட்டினர் அப்போது வாழ்ந்த வாழ்க்கையும்... அது ஒரு விதமான அனுபவம். ஆனாலும் சாவு வீட்டில் எல்லோரும் கூடியிருக்கிற போது கிடைக்கிற இன்பம் வேறல்லவா! சரி, போகட்டும். இன்னும் ஒரு தாத்தாவும் மூன்று பாட்டிகளும் மிச்சம் இருக்கிறார்களே! அடுத்து ஒரு சாவு நிகழ்ந்துதானே ஆக வேண்டும். அப்போது சேர்த்துப் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.


ஆசைப்பட்ட படியே, அடுத்த சில ஆண்டுகளில் பெரிய பாட்டி லைனுக்கு வந்தார். அவர் ஓர் ஆறு மாத காலத்துக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். பெரிய பாட்டி நீண்ட காலம் படுக்கையில் கிடந்ததால் ஒன்று கூடலும் கொண்டாட்டமும் அவர் சாவுக்கு முன்பே தொடங்கிவிட்டது. கடைசி ஓரிரு மாதங்களில் எந்நேரமும் வீடு திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. எந்நேரத்திலும் உயிர் போகலாம் என்பதால், அந்நேரத்தில் விழித்திருந்து வழியனுப்பி வைக்க வேண்டும் என்று எந்நேரமும் யாராவது பாட்டியைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருப்பார்கள். ஊரில் உள்ள இளவட்டங்கள் எல்லோரும் ஷிஃப்ட் போட்டு சீட்டாடினார்கள். தினமும் இருபத்தி நாலு மணி நேரமும் கடுங்காப்பி விநியோகம் நடந்துகொண்டே இருக்கும். பாட்டியைக் கடைசிவரை பீ-மூத்திரம் அள்ளித் தன் தாய் போலப் பார்த்துக்கொண்டார் அம்மா. வருகிற ஒவ்வொருவரிடமும் பேச முடிகிற இரண்டு வார்த்தைகளைக் கூட அம்மாவைப் பாராட்டிப் பேசப் பயன்படுத்திய பாட்டியை எல்லோரும் ஆச்சரியமாகவே பார்த்தார்கள். பாட்டிக்குச் செய்த பணிவிடைகள் போக, ஊர்க்காரர்களுக்கும் கடுங்காப்பி போட்டு விநியோகித்துக்கொண்டே இருந்த அம்மாவைப் பற்றியும் ஊர்க்காரர்கள் பெருமையாகப் பேசிக்கொண்டார்கள். அதன் விளைவாக, தன் தாயையோ மாமியாரையோ சரியாகப் பார்க்காத பெண்கள் கூட பாட்டிக்குப் பணிவிடை செய்து அம்மாவுக்கு உதவினார்கள். உலகம் சுற்றி அயர்ந்து ஊர் திரும்பிக் கடை போட்டு செட்டில் ஆகிக் கொண்டிருந்த வேல்சாமிச் சித்தப்பா தினமும் இரவு வந்துவிடுவார். பாட்டியின் நிலைமை மோசமாக இருக்கிறது என்று கேள்விப்பட்ட அமாவாசை நாட்களில் எல்லாம் விளாத்திகுளத்திலிருந்து அஜய் அண்ணன் வந்துவிடுவான். அவன் இருக்கிற இரண்டு - மூன்று நாட்களும் வீடு கலகலப்பாக இருக்கும். அவன் ஊருக்கு வந்துவிட்டால் ஊரில் உள்ள இளவட்டங்கள் - சிறுவர்கள் எல்லோரும் அவனையே சுற்றிச் சுற்றி வருவார்கள். ஆளும் செக்கச்செவேர் என்று சினிமா நடிகர் மாதிரி இருப்பான். பேச்சும் கேலியும் கிண்டலுமாக எல்லோருக்கும் பிடித்த மாதிரிப் பேசுவான். அதனால் அஜய் என்றால் அந்த ஊருக்கே அப்படியொரு கிளுகிளுப்பு. அதற்கு முன்பு வரை இருப்பவர் ஒருவரின் சாவு பற்றிப் பேசுவது பெரும் தவறாக இருந்தது. இப்போது அஜய் அண்ணன் புண்ணியத்தில் அது நிறையவே தளர்ந்திருந்தது. பாட்டியின் சாவு பற்றி அவன் நிறையவே கேலி பேசுவான். இப்படியாகப் பல முறை போக்குக் காட்டி, கடைசியில் ஒரு நாள் பாட்டியும் இறந்தே போனது. இம்முறை பாட்டி இப்படியே இழுத்துக்கொண்டு இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்றிருந்தது. அடுத்து ஒரு வாரமோ என்னவோ கடுங்காப்பியும் சீட்டாட்டமும் கும்மாளமும் தொடர்ந்தது. அடுத்து, வழக்கம் போல எல்லோரும் ஒவ்வொருவராக வயிற்றுப் பாட்டைப் பார்க்க ஊர் திரும்பினார்கள்.


கடைசியாக, ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, ஊரில் உள்ள எல்லா இளவட்டங்களும் சிறுவர்களும் வழியனுப்பி வைக்க, ஆறரை வண்டியில் அஜய் அண்ணன் புறப்பட்டான். 


“அடுத்த விக்கெட்டுக்கு இன்னும் எத்தனை வருசம் காத்திருக்கணுமோ! அதனாலென்ன, கொஞ்ச நாளைக்கு நான் மட்டும் வாராவாரம் ஊருக்கு வந்துட்டுப் போலாம்னு இருக்கேன். நம்ம சொந்தக்காரய்ங்க இருந்தா மட்டுந்தானா ஊரு! யாரு இருந்தாலும் இல்லாட்டாலும் ஊரு அப்பிடியேதான இருக்கும்! நமக்கு என்னைக்கும் வெளியூர்ல இருக்குற இரத்த சொந்தத்த விட உள்ளூர்ல இருக்குற மத்த சொந்தந்தான் முக்கியம்!” என்று எதையோ உதிர்த்தான். 


அதைக் கேட்டு, சுற்றியிருந்த அவன் இரசிகர்களுக்கு அம்புட்டு மகிழ்ச்சி. சொன்னபடியே ஓரிரு வாரங்கள் ஞாயிற்றுக்கிழமை ஒன்பதரையில் வந்துவிட்டு ஆறரையில் போய்விடுவான். அதன் பிறகு அது அப்படியே நின்று போனது. ஊரில் உள்ள இளவட்டங்களும் ஓரிரு வாரங்கள், “எங்கப்பா, அசாயக் காணோம்!” என்று கேட்டுவிட்டு அப்படியே மறந்து போனார்கள்.


அடுத்து, சின்னத் தாத்தா லைனுக்கு வந்தார். பெரிய பாட்டியும் சின்னத் தாத்தாவும் ஒரே வயசாம். அதனால் அவர்தான் அடுத்த ஆள். ஆனால் அவர் தெம்பாக இருந்தார். காட்டுக்குப் போய் உழைத்த உடம்பு. சிலம்பாட்டம், வர்மம் எல்லாம் கற்றுத் தேர்ந்தவர். பேய்க்கு மை வைப்பது, மஞ்சள் காமாலை, நாள்பட்ட காய்ச்சல், நாய்க்கடி போன்றவற்றுக்கு வைத்தியமும் பார்ப்பார். அவர் இருக்கும் வரை வீட்டில் ஆள் நடமாட்டம் இருந்துகொண்டே இருந்தது. பெரிய தாத்தா இருக்கும் வரை, வடக்கு வாசலை படித்தவர்கள் நிறையப் பார்க்க வரும் அண்ணனுக்கு விட்டுவிட்டு அவர் தெற்கு வாசலில்தான் கட்டில் போட்டு அமர்ந்திருந்தார் என்பார்கள். அது பற்றி எனக்கு அவ்வளவாக நினைவில்லை. இப்போது வடக்கு வாசலில் எந்நேரமும் எங்கெங்கோ இருந்து ஏதேதோ நோய்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக ஆட்கள் வந்துகொண்டே இருந்தார்கள். சின்னத் தாத்தா சிறிது தவங்கத் தொடங்கியதும் உள்ளுக்குள் இருந்த அரக்கன் வாயைப் பிளந்துகொண்டு அடுத்த காவுக்குத் தயாராகத் தொடங்கிவிட்டான். அவரும் பெரிய பாட்டி போல நீண்ட காலம் இழுத்துத்தான் இறந்தார். அப்போதும் ஆசைப்பட்ட படியே உறவினர்கள் எல்லோரும் கூடி ஒரு வாரம் கொண்டாடித் தீர்த்தோம். பிள்ளைகள் தந்தையின் சாவுக்காகக் கவலைப்பட்டார்கள். பேரப்பிள்ளைகள் தாத்தாவின் சாவை வைத்துக் கூடிய கூடலைக் கொண்டாடினோம். எதிர்பாராத சாவு இல்லையென்பதால் கொண்டாட்ட மனநிலையைக் கண்டு பெரியவர்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.


இம்முறையும் வழக்கம் போலவே, அஜய் அண்ணன்தான் கடைசியாகப் புறப்பட்டான். அதே போல ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆறரையில். பிரிவுக்கு அது மிக மோசமான நேரம். மாலை ஆறே முக்காலுக்கு இருட்டி அடங்கும் நேரத்தில் ஒருவரை வழியனுப்புவது கொடுமையான அனுபவம். வண்டி புறப்படும் வரை கீழே நின்று நண்பர்களோடு பேசிக்கொண்டிருப்பான்.


“அடுத்து, கந்தம்மாத்தாதான். அது இன்னும் பத்து வருசம் ஓடும். அது நம்மளையெல்லாம் தூக்கி அமுக்கிட்டுத்தான் போகும்டோய்!” என்றான். 


கந்தம்மாத்தா என்பது சின்னப் பாட்டி. சின்னப் பாட்டி சின்னப் பிள்ளைகளின் பாட்டி. சின்னப் பாட்டிக்குக் குழந்தைகள் இல்லை. நோயாளி வேறு. சின்னப் பிள்ளைகள் மீது நிறையப் பாசத்தைப் பொழிவார். நிறையக் கதைகள் சொல்வார். அவ்வப்போது தன் சேமிப்பில் இருந்து காசெடுத்துக் கொடுப்பார். அதனால் சின்னப் பிள்ளைகள் அவர் நீடித்து வாழ்வதையே விரும்புவர். நானும் சின்னப் பிள்ளைதான். எனக்கும் சின்னப் பாட்டியை நிறையப் பிடிக்கும். சின்னப் பாட்டி நீண்ட காலம் வாழ்ந்தால் நன்றாகத்தான் இருக்கும். அப்படியானால், உறவுகளை எப்படிச் சந்திப்பது? கலியாணம், காதுகுத்து, கிடா வெட்டு, சடங்கு, பிள்ளை பிறப்பு என்று நல்லது எதற்குமே இப்படி ஒன்று கூடுவதில்லை. யாராவது இறந்தால்தான் எல்லோரும் அவரவர் வேலையை அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓடிவருகிறார்கள்.


“நல்லத விடப் பொல்லதுக்குத்தான் எல்லாம் ஒன்னு சேரணும்” என்று இது பற்றி அடிக்கடி அம்மா மட்டும் வேத வாக்கியம் போலச் சொல்லிக்கொள்வார்.


அவர் அப்படிச் சொல்லும் போதெல்லாம், ‘அதனால்தான் எனக்கு நல்லதை விடப் பொல்லது நிறையப் பிடிக்கிறது’ என்று மனசுக்குள் சொல்லிக்கொள்வேன். இப்படியாக, ‘மனிதர்கள் சாகாமலே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்ற ஆசை போய், ‘அடிக்கடி இப்படி யாராவது செத்துக்கொண்டே இருந்தால் நன்றாக இருக்குமே!’ என்று தோன்றியது.


சின்னப் பாட்டியும் தாத்தா போலவே விளாத்திகுளத்துக்கும் ஊருக்கும் மாறி மாறிப் போய் வந்துகொண்டிருப்பார். தாத்தா போலவே அவருக்கும் விளாத்திகுளத்தில் வைத்து உயிர் பிரிந்துவிட்டது. ஆனால் திடீர் மரணம் இல்லை. நீண்ட காலம் படுக்கையில் கிடந்து, இழுவாய் இழுத்துத்தான் இவரும் போய்ச் சேர்ந்தார். இப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். இறந்த மறுநாள்தான் செய்தியே கிடைத்தது. வருவதற்குள் எடுத்துவிட்டார்கள். அதற்குப் பிறகான சடங்குகளில் மட்டும் கலந்துகொண்டிருந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆறரையில் கல்லூரி நோக்கிப் புறப்பட்டேன். அஜய் அண்ணனும் அதே வண்டியில் விளாத்திகுளம் வரை உடன் வந்தான்.


“வைராத்தா போக இன்னும் பத்து வருசம் ஆனாலும் ஆகும். இருபது வருசம் ஆனாலும் ஆகும். ஆள் எப்பிடிச் சிட்டு போல பாஞ்சு திரியுது பாத்தல்ல! அது வரைக்கு நம்ம இருப்பமான்னு தெரியல!” என்று அவனுக்கே உரிய பாணியில் சொன்னான்.


வைராத்தா என்பது கடைசிப் பாட்டி. எனக்கு என் கவலை. அவர் ஒருத்தர்தான் இருக்கிறார். அத்தோடு வீட்டில் சாவுகள் முடிந்துவிடும். அடுத்து மீண்டும் கணக்குத் தொடங்க இருபது - முப்பது ஆண்டுகள் ஆகலாம். இவரையும் சின்னப்பாட்டி போலவே சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நன்றாகக் கதைகள் சொல்வார். சிறுவர்களுக்குப் பிடித்த மாதிரிப் பேசுவார். இப்போது வேறு மாதிரித் தோன்றியது. இந்தக் குடும்பம் தொடர்புகள் அறுந்துவிடாமல் இருக்க இவர் இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகள் இருப்பது முக்கியம் என்று பட்டது. நாம் நினைக்கிற படியேவா எல்லாம் நடந்துவிடுகிறது. அடுத்த இரண்டே ஆண்டுகளுக்குள் பாட்டி திடீரென்று இறந்துவிட்டார். இப்போதும் தகவல் கிடைத்து வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. ஊருக்குப் போய்ப் பார்த்தால் முதல் சாவுக்குக் கொண்டாடிய அளவு கொண்டாட்டங்கள் இல்லை. எல்லோரும் குடும்பத்தோடு வந்து ஒரு வாரம் தங்கவில்லை. பல வீடுகளில் வீட்டுக்கு ஒருவர்தான் வந்திருந்தார்கள். அப்படி வந்தவர்களும் அடுத்தடுத்த நாட்களில் அவசர அவசரமாகப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். மனிதர்கள் சாவுகளுக்கு வந்தே களைத்துப் போய்விட்டது போலத் தெரிந்தது. சாவின் மீதான முக்கியத்துவமும் குறைந்துவிட்டிருந்தது போல இருந்தது. மூன்றாம் நாள் காரியங்கள் முடிந்து, நான்காம் நாள் காலையே எல்லோரும் அவசர அவசரமாகப் புறப்பட்டார்கள். அஜய் அண்ணனும் அதில் அடக்கம். கூடுதலாக இரண்டு நாட்கள் இருக்க வேண்டும் என்றால் கூட உடனிருந்து பேசிக்கொண்டிருக்க ஆள் இல்லை. என்ன செய்வது! எல்லோரோடும் சேர்ந்து நானும் வண்டியேறிவிட்டேன். ஒன்பதரையில்! அன்று ஒன்பதரைக் கார் முழுவதுமே எங்கள் குடும்பம் மட்டுமே இருந்தது. எப்போதும் போல் அஜய் அண்ணன் மட்டும் சத்தமாகக் கத்திப் பேசிக்கொண்டிருந்தான்.


“அவ்ளதாண்டா. இத்தோட எல்லாம் முடிஞ்சது. இனி இந்த ஊருக்கும் நமக்கும் என்ன இருக்கு! அடுத்த விக்கெட்…” 


பட்டென நாக்கைக் கடித்தான். 


முன் இருக்கையில்தான் பெரியப்பா - பெரிய பெரியப்பா - அஜய் அண்ணனின் அப்பா அமர்ந்திருக்கிறார். இடது புறம் லேசாகத் தலையைத் திருப்பிவிட்டு மீண்டும் முன்னால் திரும்பிக்கொண்டார். அதன் பிறகு வண்டியில் இருந்த யாருமே எதுவும் பேசவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள்!

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 4/6