சலுகை முதலியம் விவசாயிகளையும் நுகர்வோரையும் கூடச் சுரண்டும்: ரத்தன் கஸ்னபிஸ்
புகழ்பெற்ற மார்க்சிய - பொருளியல் பேராசிரியர் இந்த முரண்பாட்டை ஆராய்கிறார் சுபோரஞ்சன் தாஸ்குப்தா முதலாளித்துவத்தின் கோட்டைகளான அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் அவர்களின் விவசாயத் துறைக்குப் பெருமளவில் மானியமளித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ‘சந்தை-ஆதரவு’ (pro-market) ‘முதலிய-ஆதரவு’ (pro-capital) நரேந்திர மோதி ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’க்குக் (MSP) கூட சட்டப்படியான உத்தரவாதம் வழங்கத் தயாராக இல்லை. ஏன்? முன்னேறிய மேற்கத்திய முதலாளித்துவத்துக்கும் சலுகைசார் இந்திய முதலாளித்துவத்துக்கும் என்ன வேறுபாடு? இந்த முரண்பாட்டைப் புகழ்பெற்ற மார்க்சிய - பொருளியல் பேராசிரியர் ரத்தன் கஸ்னபிஸ், மானுட அறிவியல் பேராசிரியரான இக்கட்டுரையாளருடன் ஒரு நேர்காணலில் ஆராய்கிறார். கே: நம் நாட்டின் ஆளும் அரசு சந்தைப் பொருளாதாரத்தின் கொள்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு வலதுசாரிப் பழமைவாத அரசாங்கமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. அது உண்மை என்றால், ஏன் இந்தத் தே.ஜ.கூ. (NDA) அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவின் சந்தைக் கொள்கைகளைப் பின்பற்றி வேளாண்மைத் துறைக்குப் பெரிதும் மானியம் அளிக்கவில்...