ஷிரின் எபாடி - நேர்காணல்

 https://www.972mag.com/iran-women-protests-shirin-ebadi/ 

ஈரானுக்கு மக்களாட்சி பெண்கள் மூலம் வந்துசேரும்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடி, ஈரானில் நடைபெறும் பெண்கள் தலைமையிலான போராட்டங்கள் அங்கு நடைபெறும் இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சியின் தொடக்கத்துக்கான முன்னறிவிப்பு என்கிறார்.


மூலம்: ஓர்லி நோய் | அக்டோபர் 6, 2022


செப்டம்பர் 29, 2022 அன்று ஈரானிய எதிர்ப்புக்களுக்கு ஒற்றுமையாக நிற்க ஒரு வாரத்தில் இரண்டாவது பேரணிக்காக மெல்போர்னில் மக்கள் கூடுகிறார்கள். (Matt Hrkac/CC BY 2.0)

செப்டம்பர் 29, 2022 அன்று, மெல்போர்னில், ஈரானியப் போராட்டங்களுக்குத் துணை நிற்கும் வகையில் ஒரே வாரத்தில் இரண்டாவதாக இன்னொரு பேரணிக்காக மக்கள் ஒன்று கூடினார்கள். (Matt Hrkac/CC BY 2.0)


இந்த கட்டுரை லோக்கல் கால் (Local Call) இதழுடன் இணைந்து வெளியிடப்பட்டது.


சமீப வாரங்களில் ஈரானில் பொங்கி எழுந்துகொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் இருந்து வெள்ளம் போல் வெளிவரும் புகைப்படங்கள், காணொளிகளோடு சேர்ந்து எண்ணற்ற கொத்துக்குறிகளும் (hashtags) வந்துள்ளன. அவற்றுள் முதன்மையானது, #மஹ்சா_அமினி — 22 வயதான குர்தியப் பெண்ணின் பாரசீகப் பெயர் (அவரது உண்மையான குர்தியப் பெயர் ஜினா/ஜினா அமினி), அவர் செப்டம்பர் 14 அன்று "முறையற்ற வகையில் ஹிஜாப்" அணிந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு, பின்னர் ஈரான் அரசின் "அடக்கமிகு காவல்துறையால்" கொடூரமாகக் கொல்லப்பட்டார், அதுதான் தற்போதைய போராட்ட அலையைத் தூண்டியது.


மற்ற கொத்துக்குறிகளில் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது, "பெண், வாழ்க்கை, சுதந்திரம்" ("زن, زندگی, آزادی”), குர்தியப் பெண்ணிய இயக்கங்களால் முதன்முதலில் முன்வைக்கப்பட்ட இந்த முழக்கம், பின்னர் ஈரான் முழுவதும் போராட்டங்களின் பிரபல மந்திரமாக மாறியுள்ளது.


பெண்களின் உரிமைகளுக்கும் விடுதலைக்கான மக்கள் போராட்டத்திற்கும் இடையே உள்ள நேரடித் தொடர்பு ஈரானில் நடைபெறும் பொது உரையாடலில் புதிதல்ல. பல வழிகளில், பெண்களின் உரிமைகள் - மற்றும் அவற்றின் மீறல் மீதான அணுகுமுறை, பெரும்பாலும் - 1979-இல் அது தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இஸ்லாமியக் குடியரசுக்குப் பெரும் லிட்மஸ் சோதனையாகவே மாறியுள்ளது. அதே காரணத்திற்காகவே, இஸ்லாமியப் புரட்சிக்கு நீண்ட காலத்திற்கு முன்பே அந்நாட்டில் எழுந்த பெண்கள் இயக்கங்களின் வரலாற்று வேர்களிலிருந்து ஊக்கம் பெற்று நடைபெறும் ஈரானியப் பெண்களின் இப்போராட்டம், இந்த அரசின் கீழ் இது வரை நிகழ்ந்த மக்கள் போராட்டங்களிலேயே மிக உறுதியானதும் தைரியமானதுமாக இருக்கிறது, . 


பெண்களின் இப்போராட்டம், அச்சமின்மைக்கும் எதிர்ப்புணர்வுக்கும் அடையாளங்களாக விளங்கும் முன்மாதிரியான ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. நீண்ட காலச் சிறைவாசம் அனுபவித்த (இன்றும் சிறையில்தான் இருக்கிறார்), சிறையில் இருந்த ஒரு காலத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட, மனித உரிமை வழக்கறிஞரும், ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் கருத்துச் சுதந்திரத்துக்கான சகரவ் பரிசை வென்றவருமான நஸ்ரின் சொட்டூடே; 2009-ஆம் ஆண்டு "பசுமை அலை" போராட்டத்தின் போது கொல்லப்பட்ட இளம் பெண் நேதா ஆகா-சொல்டான், இவரின் சாவின் புகைப்படங்கள்தாம் இப்போதைய போராட்டங்களின் அடையாளமாக மாறியிருக்கின்றன; சிறையில் கணிசமான காலத்தைச் செலவிட்டு, பெண் அரசியல் கைதிகளைச் சிறைகளில் தனிமைப்படுத்தும் ஈரான் அரசின் கொள்கையை "வெள்ளைச் சித்திரவதை" என்ற புத்தகத்தில் எடுத்துரைத்த, பத்திரிகையாளரும் மனித உரிமை ஆர்வலருமான நர்கஸ் முகமதி ஆகியோர் இவர்களில் அடக்கம்.


இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்ட பிறகு ஈரானில் நடைபெற்ற பெண்ணியப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவருக்கு இந்தப் பெண்களும் இன்னும் பலரும் பெரும் கடன் பட்டிருக்கிறார்கள்: 2003 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடிதான் அவர்.


1979 புரட்சி வரை, அந்நாட்டில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதிகளில் ஒருவரான எபாடி, தெஹ்ரான் மாவட்ட நீதிமன்றத்தின் தலைவராகப் பணியாற்றினார். புரட்சிக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சி பெண்கள் நீதிபதிகளாக இருக்கும் தகுநிலையை நீக்கியது. அதிலிருந்து எபாடி ஈரானில் மனித உரிமைகள் பற்றிய புத்தகங்களை எழுதுவதிலும், ஆட்சியின் பல முக்கிய எதிர்ப்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞராகப் பணியாற்றுவதிலும் கவனத்தைத் திருப்பினார். நஸ்ரின் சொட்டூடே, எழுத்தாளர் அப்பாஸ் மரூஃபி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்காகத் தீவிரமாகச் செயல்பட்ட அவரின் மனைவியோடு சேர்த்து ஈரான் அரசின் உளவாளிகளால் கொல்லப்பட்ட தேசக் கட்சித் தலைவர் தரியுஷ் ஃபொரௌஹர் போன்ற அரசால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஆகியோர் அவரின் நுகர்வர்களாக இருந்தனர்.


ஈரானிய மனித உரிமை வழக்கறிஞரும் ஆர்வலருமான, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடி. (உபயம்)


2003-ஆம் ஆண்டில், எபாடி அமைதிக்கான நோபல் பரிசை வென்ற முதல் ஈரானியரும் முதல் முஸ்லீம் பெண்மணியும் ஆனார். இந்த விருது பின்னர் ஈரானிய அரசால் பறிமுதல் செய்யப்பட்டது, 2009-இல் எபாடி ஈரானை விட்டு வெளியேறி லண்டன் சென்றார், அங்கிருந்துதான் இன்றுவரை ஈரானின் மக்களாட்சிமயமாக்கலுக்காகப் பணியாற்றி வருகிறார்.


பெரிதாக நம்பிக்கை இல்லாமல்தான் எபாடிக்கு என் நேர்காணல் விண்ணப்பத்தை அனுப்பினேன்; இஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் என்பது ஈரானைவிட்டு வெளியேறியவர்களுக்கும் கூடச் சிறிய ஒன்றில்லை. வியப்பூட்டும் விதத்தில், 24 மணி நேரத்திற்குள்ளேயே அவரிடமிருந்து உடன்பாடு தெரிவித்து விடை வந்தது.


கரகரப்பான தொண்டையுடன்  செப். 30 அன்று உரையாடலுக்கு வந்தார் - "இருமிக்கொண்டே பேசுவதற்கு மன்னியுங்கள்," என்று தொடங்கியவர், "இது இன்று எனக்கு இடைவிடாத நான்காவது நேர்காணல்" என்றார். 75 வயதில், எபாடி ஈரானின் திருப்பங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார், நாடுகடந்து வாழும் நிலையிலும் தன்னால் முடிந்தவரை மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவளிக்க உழைக்கிறார். உறுதியாகவும் இருக்கிறார்: இதுதான் இந்த ஆட்சியின் முடிவுக்கான தொடக்கம். 


இப்போது ஈரானில் இருந்து வெளிவரும் புகைப்படங்களையும் காணொளிகளையும் பார்க்கும்போது, ​​உங்களுக்கு என்ன தோன்றுகிறது?


எம் தாயகத்தின் இளைஞர்களும் இளைஞிகளும் மிகவும் துணிச்சலாக, அச்சமின்றிச் சமரில் நிற்பது எனக்குப் பெருமிதத்தைத் தருகிறது, ஆனால் ஒரு வேதனையுணர்வையும் அளிக்கிறது. ஏற்கனவே 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இன்றுதான் [செப். 30], கிழக்கு மாகாணமான சிஸ்தன் மற்றும் பலுசெஸ்தானின் சஹீதான் நகரில், மக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அங்கிருந்து வரும் காணொளிகள் மிகுந்த வேதனையளிக்கின்றன.


சமீப ஆண்டுகளில், தொழிலாளர் உரிமைகள் முதல் விலைவாசி வரை பல்வேறு பிரச்சனைகளுக்காக ஈரானில் நடைபெறும் பல போராட்ட அலைகளை நாம் கண்டுவிட்டோம். தற்போதைய போராட்டங்கள் முன்பு நடந்தவற்றிலிருந்து அடிப்படையில் வேறுபட்டவை என்று நினைக்கிறீர்களா?


நிச்சயமாக, பல வழிகளில். முதலாவதாக, இப்போதைய போராட்டம் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை சமூகத்தின் அனைத்து அடுக்குகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இரண்டாவதாக, மிகவும் குறிப்பிட்ட விதத்தில் நடந்த முந்தைய போராட்டங்களைப் போலல்லாமல் - அதாவது, அவர்களுக்குக் கிடைக்காத குறிப்பிட்ட ஏதோவொன்றைப் பற்றி முழக்கம் எழுப்புவதற்காக அனைவரும் தெருக்களில் இறங்கினர் - இந்தப் போராட்டமோ அரசியல் ரீதியானது, பொது மக்கள் ஒற்றைக் கோரிக்கையின் பின்னால் ஒன்றுபட்டுள்ளனர்: இந்த ஆட்சியை அகற்றி, மதச்சார்பற்ற மக்களாட்சியை நிறுவல் என்பதே அது.

ஜூன் 15, 2009 அன்று ஈரானின் தெஹ்ரானில் உள்ள ஆசாடி மற்றும் எங்கெலாப் சதுக்கத்தில் ஈரானிய ஜனாதிபதி தேர்தல் பேரணி. (அராஷ் அஷூரினியா/சிசி BY-NC 2.0)

ஜூன் 15, 2009 அன்று ஈரானின் தெஹ்ரானில் உள்ள ஆசாதி மற்றும் எங்கெலாப் சதுக்கத்தில் நடைபெற்ற ஈரானிய அதிபர் தேர்தல் பேரணி. (Arash Ashoorinia/CC BY-NC 2.0)


மூன்றாவதாக, முந்தைய அலைகளில், மக்கள் ஓரிடத்தில் கூடுவார்கள், காவல்துறை எளிதாகச் சுற்றி வளைத்து, போராட்டத்தை அடங்கிவிடும். இன்று, மக்கள் தெளிவாகிவிட்டார்கள், ஒவ்வொரு நகரத்திலும், பல சிதறிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இது அடக்குமுறைச் சக்திகளை நீர்த்துப்போகச் செய்வதில் வெற்றி கண்டுவிட்டது.


அரசாங்கத்திடம் போதுமான படைகள் இல்லை, எனவே பாசிஜ் [இஸ்லாமியப் புரட்சிகரக் காவற்படைக்குக் கீழ்ப்பட்ட ஒரு தன்னார்வப் போராளிக் குழு] படைகளின் ஆதரவைப் பெறுகிறது, அவர்களில் பலர் 18 வயதுக்குட்பட்டவர்கள். ஆர்ப்பாட்டக்காரர்களை அடிக்கச் சம்பளம் கொடுத்து அழைத்துவரப்பட்டிருக்கும் குழந்தைகள் கையில் தடிகளுடன் திரிவதைப் புகைப்படங்களிலும் காணொளிகளிலும் நீங்கள் பார்க்கலாம். இது ஒரு சிறுவர் சுரண்டல், நான் இது பற்றி ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்துக்குப் (UNICEF) புகார் அளித்திருக்கிறேன். ஈரான்-ஈராக் போரின் போது (1980-88), ஈரானிய அரசாங்கம் போர்-வன்முறைச் சூழ்நிலைகளில் குழந்தைகளைப் பயன்படுத்தியது போன்றதுதான் இதுவும்.


மற்றொரு தனித்துவமான கூறு என்னவென்றால், போராட்டக்காரர்கள் தைரியத்தோடு தங்களைத் தற்காத்துக் கொள்கிறார்கள். கடந்த காலங்களில், தாக்கப்பட்டாலும் கைது செய்யப்பட்டாலும் வெறுமனே நிற்பார்கள், அதே நேரத்தில் காவல்துறையினரே சாளரங்களை உடைத்து அல்லது சில இருசக்கர வாகனங்களுக்குத் தீ வைத்துவிட்டுப் பழியைப் போராட்டக்காரர்கள் மீது போடுவார்கள். ஆனால் இம்முறை, மக்கள் போராடுவது தங்கள் உரிமை என்று உணர்ந்து போராடுகிறார்கள். இந்த உரிமை சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தங்கள், ஈரானியச் சட்டங்கள் ஆகிய இரண்டிலுமே உள்ளது. இது அடக்குமுறைச் சக்திகளை ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்க வைக்கிறது. சில இடங்களில், பொதுமக்கள் காட்டிய வலிமை, படைகளை ஓடச் செய்யும் அளவிற்கு இருந்ததைக் கண்டோம். அவர்கள் மக்களை எதிர்கொள்ளப் பயப்படுகிறார்கள்.


இவை அனைத்தும் இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சியின் தொடக்கம் இது என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.


வேறு சொற்களில் கூறுவதானால், இவை ஆட்சியைச் சீர்திருத்துவதற்கான அழைப்புகள் அல்ல, அதை அகற்றுவதற்கான அழைப்புகள், அப்படித்தானே?


அதேதான். ஏனென்றால் இஸ்லாமியக் குடியரசின் அரசியலமைப்பை வைத்துக்கொண்டு, ஈரானில் எந்தச் சீர்திருத்தமும் உண்மையான இயலுமை இல்லை. ஈரானிய மக்களுக்கு இது நன்றாகத் தெரியும், பல ஆண்டுகளாக அதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த போராட்ட அலையின் போது [இது டிசம்பர் 2017-இல் கொரசான் மாவட்டத்தில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, அப்போதைய அதிபர் ரூஹானியின் உள் அரசியலுக்கு எதிராகத் தொடங்கியது], மக்கள், "சீர்திருத்தவாதிகளே, பழமைவாதிகளே - கதை முடிந்துவிட்டது" என்று முழக்கம் எழுப்பினர். அந்த நிமிடம் முதல் அந்த முழக்கம் மக்களின் குரலில் நிரந்தரமானது. "சீர்திருத்தவாதிகள்" என்று கொடுக்கப்படும் விளக்கத்துக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள், ஆட்சியைக் கவிழ்ப்பதற்குக் குறைவான எதற்கும் நிறைவடைய மாட்டோம்.

ஈரானிய போராட்டங்களுக்கு ஆதரவாக ஒரு வாரத்தில் இரண்டாவது பேரணியாக மெல்போர்னில் மக்கள் கூடினர்.  (Matt Hrkac/CC BY 2.0)

செப்டம்பர் 29, 2022 அன்று, மெல்போர்னில், ஈரானியப் போராட்டங்களுக்குத் துணை நிற்கும் வகையில் ஒரே வாரத்தில் இரண்டாவதாக இன்னொரு பேரணிக்காக மக்கள் ஒன்று கூடினார்கள். (Matt Hrkac/CC BY 2.0)


'இந்த ஆட்சி ஹிஜாபைத் தனது கொடியாகப் பார்க்கிறது'

ஈரானில் அடக்குமுறைச் சாம்பலுக்குக் கீழே தொடர்ந்து எரியும் எதிர்ப்பின் கரிகள் இருந்துகொண்டே இருக்கின்றன என்ற உணர்வு உள்ளது, இது அவ்வப்போது மேற்பரப்புக்கு மேலே வெடிக்கிறது. அந்த நிலையான, துணிச்சலான எதிர்ப்புப் போராட்டம் பெண்களால் வழிநடத்தப்படுகிறது. இன்று நாம் காணும் புகைப்படங்களில், பெண்கள் புகைப்படக்கருவிகளுக்கு முன்னால் தங்கள் ஹிஜாபைக் கழற்றி, முகத்தைக் காட்டி, ஆட்சியை எதிர்த்துப் போராடுகிறார்கள். இது அவர்கள் பயத்தை வென்றுவிட்டார்கள் என்ற எண்ணத்தையே தருகிறது.


அதுவேதான். ஈரானியப் பெண்கள் புரட்சிக்குப் பிறகு முதல் நாளிலிருந்தே இஸ்லாமியக் குடியரசை எதிர்த்தனர், ஏனெனில் அவர்கள் முன்பு அடைந்திருந்த அனைத்து உரிமைகளையும் இழந்துவிட்டனர். இம்முறை அவர்கள் அச்சத்தை முற்றிலுமாகக் கைவிட்டு, ஒடுக்குமுறை சக்திகளின் வன்முறைக்கு எதிராகத் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.


பெண்ணிய எதிர்ப்போடு சேர்ந்து, இஸ்லாமிய ஆட்சியின் முதல் நாளிலிருந்தே ஈரானிய மக்களின் மேசையில் கட்டாய ஹிஜாப் பிரச்சினையும் உள்ளது. 2000-களின் முற்பகுதியில் "கட்டாய ஹிஜாபிற்கு எதிராக ஒரு மில்லியன் கையெழுத்து" என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தின் முதல் ஆதரவாளர்களில் நீங்களும் ஒருவர். தற்போது, ​​சவூதி அரேபியாவிலும் இந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டு விட்டதன் பின்பு, ஈரானில் மட்டுமே இது போன்ற சட்டம் இன்னும் உள்ளது. ஹிஜாப் இஸ்லாமியக் குடியரசின் இப்படியோர் அடிப்படைப் பிரச்சினையாக மாறுவதை நீங்கள் எவ்வாறு விளக்குகிறீர்கள்?


இந்த ஆட்சி ஹிஜாபைத் தனது கொடியாகப் பார்க்கிறது, ஹிஜாப் பிரச்சனையில் ஏதாவது விட்டுக்கொடுத்து விட்டால், மக்களுக்கு மற்ற உரிமைகளையும் வழங்க வேண்டியது வரும் என்று பலமுறை கூறியுள்ளனர். பொதுமக்கள் அதை நன்கு புரிந்து கொண்டுள்ளனர், அதனால்தான் இன்று பெண்களும் ஆண்களும் கட்டாய ஹிஜாபை நீக்க வேண்டும் என்கிறார்கள். பெண்கள் வெற்றி பெற்றால், அது ஈரானின் மக்களாட்சிமயமாக்கலுக்கான முதல் படியாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஈரானில் மக்களாட்சி பெண்கள் மூலம் வரும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை, அதனால்தான் இந்த போராட்டத்தில் திரளான பங்கேற்பைப் பார்க்கிறோம்.


நீங்கள் குறிப்பிட்டது போல் இன்று வரை இந்தப் போராட்டம் 70-க்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்திருக்கிறது. உங்கள் கருத்துப்படி, இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எந்தளவுக்கு இந்த ஆட்சி தனது வன்முறையில் ஈடுபடத் தயாராக உள்ளது?


கெடுபேறாக, இந்த ஆட்சி எவ்வளவு வன்முறையானது என்பதை ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட முறை நிரூபித்துள்ளது. எப்போதும் சிறைவாசம், துப்பாக்கிச் சூடு ஆகியவற்றின் மூலமே பொதுமக்களுக்குப் பதிலளித்தது. ஆனால், இம்முறை போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவர்களால் அனைவரையும் சிறையில் அடைக்க முடியாது. எங்கோ ஓரிடத்தில் நின்றுதானே ஆகும். அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, பல ஒடுக்குமுறைப் படைகள் வெவ்வேறு சாக்குகளைப் பயன்படுத்திக் கிளர்ச்சி செய்தன அல்லது வேலை செய்ய மறுத்துவிட்டனவாம். அவர்களில் பலர் பொதுமக்களுடன் மோத விரும்ப மாட்டார்கள், ஏனென்றால் பொதுமக்கள் வெற்றி பெற்றால், தனிப்பட்ட முறையில் இவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த ஆட்சி நல்ல நிலையில் இல்லை.

செப்டம்பர் 20, 2022 அன்று கேஷவர்ஸ் போல்வார்டில் ஈரானிய எதிர்ப்பாளர்கள். (Darafsh/CC BY-SA 4.0)

செப்டம்பர் 20, 2022 அன்று கெஷவர்ஸ் பெருஞ்சாலையில் ஈரானியப் போராட்டக்காரர்கள். (Darafsh/CC BY-SA 4.0)


இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சிக்கு அடுத்த நாளைப் பற்றி உங்களிடம் கேட்க விரும்புகிறேன். ஈரானிய நண்பர்களுடனான உரையாடல்களில், பல்லாண்டு அடக்குமுறை, உட்போராட்டங்களுக்குப் பிந்தைய ஈரானிய சமூகத்தின் சிதைவின் விலையைப் பற்றி அவர்கள் அதிகம் பேசுகிறார்கள். மறுபுறம், தெருக்களில் பெண்களுடன் ஆண்கள் போராட்டம் நடத்துவதையும், பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் பெண்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்தம் செய்வதையும் பார்க்கிறோம். ஈரானிய சமூகம் ஒரு புதிய எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளும் பொருட்டு உள் ஒற்றுமையைப் பற்றிக் கொண்டுள்ளதா?


நாம் பேசும் இவ்வேளையில், ஈரானிய மக்கள் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற ஒற்றை விருப்பத்தின் பொருட்டு ஒன்றுபட்டுள்ளனர். ஆட்சி கவிழ்ந்த பிறகு என்ன நடக்கும்? அது பல காரணிகளைப் பொறுத்ததாக இருக்கும். எடுத்துக்காட்டாக, இந்த ஆட்சியின் வீழ்ச்சிக்கு முன்னால் அது எடுக்கும் விலை என்னவாக இருக்கும், எத்தனை பேரைக் கொல்லும்? ஈரானின் பொருளாதார நிலை எப்படி இருக்கும்? இது அனைத்தும் உள்நாட்டு, பன்னாட்டு சூழ்நிலையுடன் தொடர்புடையது.


ஈரானியப் பெண்களுக்கு ஆதரவாக உலகெங்கிலும் போராட்ட அலைகளைக் காண்கிறோம். பன்னாட்டுச் சமூகத்தின் பங்கை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? இதில் இந்த உலகமே ஈடுபட வேண்டுமா? ஆம் எனில், எப்படி? 


மேற்கு நாடுகள் ஈரானிய மக்களுக்கு ஆதரவை அறிவித்தன, ஆனால் எங்களுக்குச் சொற்கள் தேவையில்லை - எங்களுக்குச் செயல்களே வேண்டும். இந்த ஆட்சியின் வன்முறை அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானியத் தூதர்களை வெளியேற்றுவது அல்லது அரசதந்திர உறவுகளைத் தூதரகங்களில் (embassy) இருந்து துணைத் தூதரகங்களுக்குத் (consulate) தரமிறக்குவது அல்லது ஈரானில் இருந்து அவர்களின் தூதர்களைத் திரும்பப் பெறுவது போன்ற நடவடிக்கைகள்.


வெளிநாட்டில் வாழும் ஈரானியர்கள் எப்படி? அவர்களுக்கும் இந்த மக்கள் போராட்டத்தில் பங்கு இருக்கிறதா?


நிச்சயமாக! ஆயிரமிருந்தாலும், நாங்கள் ஈரானியர்கள் - வெவ்வேறு காரணங்களுக்காக ஈரானை விட்டு வெளியேறினோம், ஆனால் நாங்கள் அனைவரும் ஈரானியத் தாயகத்தின் மகன்கள், மகள்கள். நற்பேறாக, வெளிநாட்டில் உள்ள ஈரானியர்கள் மிகச் சிறப்பாகவும் திறமையாகவும் பணியாற்றினார்கள். ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, கொரியா, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில், உலகெங்கிலும் நடைபெறும் போராட்டங்களில் அவர்களைப் பார்க்கிறோம். அந்தப் போராட்டங்களின் பலன் பல்வேறு நாடுகளின் குடிமக்களின் கவனத்தை ஈர்த்திருப்பது - அதாவது, ஏதோ நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதைப் பற்றிப் படிக்கச் செல்கிறார்கள். உள்ளூர் ஊடகங்களும் போராட்டங்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன, இது செய்திகளை ஈரானில் இருந்து உலகிற்குப் பரப்ப உதவுகிறது.     


வெளிநாட்டில் வாழும் ஈரானியர்கள் செய்யக்கூடிய இன்னொன்றும் இருக்கிறது: ஈரானில் இருந்து வெளிவரும் அறிக்கைகள், காணொளிகளை உங்கள் உள்ளூர் மொழியில் மொழிபெயர்த்து, அவற்றை ஊடகங்களுக்கும் தொலைக்காட்சி நிலையங்களுக்கும் அனுப்பிவையுங்கள். அவற்றை உங்கள் பணியிடத்தில், நண்பர்களிடம், அண்டை வீட்டாரிடம் பரப்புங்கள் - இதன் மூலம் ஈரானிய மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை உலகிற்குத் தெரியப்படுத்துவீர்கள்.


செப்டம்பர் 25, 2022 அன்று கனடாவின் ஒட்டாவாவில் ஈரான் எதிர்ப்பாளர்களுடன் ஒற்றுமை ஆர்ப்பாட்டம். (தைமாஸ் பள்ளத்தாக்கு/CC BY 2.0)

செப்டம்பர் 25, 2022 அன்று கனடாவின் ஒட்டாவாவில் ஈரான் போராட்டக்காரர்களுடன் ஆதரவு ஆர்ப்பாட்டம். (Taymaz Valley/CC BY 2.0)


உங்கள் பல்லாண்டுப் போராட்டத்திற்கு என்ன விலை கொடுக்கிறீர்கள்? உங்கள் உயிருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை அச்சுறுத்தல்கள் வந்துள்ளன, உங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக உங்கள் சகோதரி ஈரானில் பிடித்து வைக்கப்பட்டார். நீங்கள் இன்னும் அச்சுறுத்தலில் இருக்கிறீர்களா?


ஆம், அச்சுறுத்தல்கள் ஒருபோதும் நிற்பதில்லை. என் வாழ்க்கையைப் பற்றிய ஓர் ஆவணப்படம், "நாங்கள் விடுதலை பெறும் வரை" என்ற பெயரில், இந்த ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படத்தைத் திரையிடக் கூடாது என்று எச்சரித்து இயக்குனருக்கும், விழாவுக்கும், எனக்கும் மிரட்டல்கள் வந்தன. சொல்லவே வேண்டியதில்லை, அதற்கு நாங்கள் இணங்கவில்லை. அந்தத் திரைப்படம் ஆட்சி அதிகாரிகளை வெறி பிடிக்க வைத்தது என்ற போதும், நாங்கள் அவர்களுக்கு அஞ்சவில்லை.


எனது கடைசிக் கேள்வி, ஈரானுடன் தொடர்புடையதல்ல, ஆனால் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் உள்ள எங்கள் நிலவரத்துடன் தொடர்புடையது. பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து அவர்களின் முதலீடுகளைத் திரும்பப் பெறுமாறு கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டுக்கொண்ட போது அதை நீங்கள் ஆதரித்தீர்கள். பாலஸ்தீனியர்களின் மீதான அடக்குமுறையைப் பற்றி ஈரானிய மனித உரிமை ஆர்வலர்களும் இந்த ஆட்சியின் எதிர்ப்பாளர்களும் செய்யும் பொதுவான தவிர்ப்புகளுக்கு இடையே, இது ஒரு முன் நிகழ்ந்திரா நடவடிக்கை. அதை விளக்க முடியுமா?


உண்மை என்னவெனில், ஈரானில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்துகொண்டே இருக்கிறது, ஆனால் கவலைக்கிடமாக நாட்டிற்குள் நல்ல தகவல் ஓட்டம் இல்லை. ஈரானியர்களாகிய நாங்கள் உலகில் என்ன நடக்கிறது என்பதை மறந்துவிடக்கூடிய அளவுக்கு எங்கள் சொந்தப் பிரச்சனைகளில் மூழ்கிவிட்டோம். ஆனால் நான் ஒரு மனித உரிமை ஆர்வலர், உலகில் எங்கும் மனித உரிமைகள் மீறப்படுவதை நான் எதிர்க்கிறேன். யூதப் பேரழிப்புக்கும் அடையாளத்தைக் காரணமாக வைத்துப் பல மனிதர்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றங்களுக்கும் அஞ்சி நடுங்குவது போலவே, பாதிக்கப்பட்டிருப்பது போலவே, அதே காரணங்களுக்காக அப்பாவி மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக மாறுவதைப் பற்றியும் நான் அஞ்சி நடுங்கவும் வருந்தவும் செய்கிறேன். இது மத அடையாளம் அல்லது தேசியத்துடன் தொடர்புடையதல்ல, ஏனென்றால் மனித உரிமைகள் ஒரு பன்னாட்டுப் பிரச்சனை, உலகின் ஒவ்வொரு மூலையிலும் அவற்றை நாம் மதிக்க வேண்டும்.


* இந்தக் கட்டுரை முதலில் ஹீப்ரு மொழியில் லோக்கல் கால் (Local Call) இதழில் வெளிவந்தது.


ஓர்லி நோய், லோக்கல் கால் (Local Call) இதழில் ஆசிரியர், அரசியல் ஆர்வலர், பாரசீகக் கவிதைகளையும் உரைநடைகளையும் மொழிபெயர்ப்பவர். அவர் பிட்சேலம் (B'Tselem) மனித உரிமை ஆர்வலர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராகவும், பலாட் அரசியல் கட்சியின் செயல்பாட்டாளராகவும் உள்ளார். கீழையர் (மிஸ்ரஹி), பெண் இடதுசாரி, பெண், நிரந்தரக் குடியேறிக்குள் வாழும் தற்காலிகப் புலம்பெயரி, அவ்விருவருக்குமிடையேயான நிலையான உரையாடல் என்று அவரது அடையாளத்தை வரையறுக்கும், அவை ஒன்றோடொன்று வெட்டிச்செல்லும் கோடுகளை அவரது எழுத்து கையாள்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாத்திகம் - இன்னொரு மதம்!

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி