கிரிக்கெட்: சில முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள்!
இவ்வளவு சூப்பரான ஒரு ஆட்டத்தைப் பார்த்து விட்டு (டை ஆன இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம்), அதைப் பற்றியே கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருப்பது என்பது இயல்பானதே. குறைந்த பட்சம் அடுத்த ஆட்டம் பார்க்கும் வரையாவது இது நீடிக்கும். கிரிக்கெட் என்பதே அதுதானே?! ஒரு நாள் முழுக்கப் பார்ப்பதில் வீணாக்குவது; அதன் பின்னர் பல நாட்களை அதைப் பற்றி விலாவாரியாகப் பேசுவதில் வீணாக்குவது. ஒரே ஆட்டத்தில் ஒரே நாளில் 676 ஓட்டங்கள் அடிப்பதைக் காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்த போதும், தொலை நோக்கில் அதுதான் இந்த விளையாட்டைக் குழி தோண்டிப் புதைக்கப் போகிறது என்று நினைக்கிறேன். ஆட்களை ஈர்க்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு மொத்த விளையாட்டையும் பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் T20 வந்த பிறகு இன்னும் கூடுதலாகி விட்டது. எல்லா நாடுகளிலுமே பந்து வீச்சாளர்கள் ஒன்னுக்கும் லாயக்கில்லாதவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள் கிரிக்கெட் என்னும் படிவம் உண்மையான கிரிக்கெட்டை - அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டைக் கொன்ற...