கிரிக்கெட் - ஒரு காதற் தோல்வி!

அடுத்த சில நிமிடங்களில், பத்தாவது உலகக் கோப்பையின் முதல்ப் பந்து வீசப்படப் போகிறது. ஒரு கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக நீண்ட காலத்துக்குப் பின் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்திருக்கிறேன். நான் இதற்கு முன் கடைசியாகப் பார்த்தது ஐ.பி.எல்-1. ஆரம்பம் முதல் கடைசி வரை! வீட்டில் என்னைத் தனியாக விட்டு விட்டு, குழந்தை பெற்றுக் கொள்வதற்காக என் மனைவி ஊருக்குப் போயிராவிட்டால் அதுவும் நடந்திராது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு, எனக்கும் இந்த விளையாட்டுக்கும் இடையில் இவ்வளவு பெரிய இடைவெளி ஒன்று விழும் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டேன். இன்று அது எதார்த்தமாகி இருக்கிறது. சும்மா - அப்படியே என்ன நடக்கிறதென்று பார்க்கலாமென்று ஈ.எஸ்.பி.என். பக்கம் வந்தேன். என் பால்ய காலத்தில் உயிருக்கும் மேலாக நேசித்த இந்த விளையாட்டுடனான என் உறவைப் புதுப்பித்துக் கொள்ளப் போகிறேனா?

விளம்பர இடைவேளையின் போது கூட யாராவது சேனலை மாற்றினால் கிறுக்குப் பிடிப்பது போல் உணர்ந்த காலமொன்று உண்டு. பல சோலி பார்த்தலிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. இப்போது உணர்ந்திருப்பது என்னவென்றால், இது போன்றவைகளை எழுதுவதற்குப் பொருத்தமான நேரம் கிரிக்கெட் போட்டி நடக்கும் நேரம்தான். நேரமும் வீணாவதில்லை; மிகப் பிடித்த ஒரு விளையாட்டைப் பிரிந்திருக்கும் சமரச உணர்வும் இல்லை. பதினைந்து வருடங்களுக்கு முன்பு செய்தது போல், ஓர் ஒருநாள் போட்டியில் போடப்படும் எல்லா 600+ பந்துகளையும் பார்க்க வேண்டிய கட்டாயமும் இல்லை. விளையாட்டையும் மிஸ் பண்ணாமல் அந்த நேரத்தில் வேறொரு முக்கியமான வேலையையும் செய்ய முடியும். நல்லாருக்குல்ல?!

1987 என்று நினைக்கிறேன். நான் பள்ளி செல்லும் சிறுவனாக இருக்கும் போது, கிரிக்கெட் என்ற விளையாட்டு எங்கள் கிராமத்துக்குள் / நகரத்துக்குள் (இப்பவும் அதை என்னவென்று சொல்வதென்ற குழப்பம் தீர்ந்தபாடில்லை!) நுழைந்தது. ஒரு கோயிலுக்குள் இரண்டு மூன்று கூடைப் பந்தாட்ட மைதான அளவில் இருக்கும் இடத்தில் என்னைவிடப் பெரியவர்களான இளைஞர்கள் பலர் சேர்ந்து ஆட ஆரம்பித்தார்கள். பின்னாளில் எங்களைத் தேர்வுகளில் தோல்வியுறவும் விலை மதிப்பற்ற எங்கள் வேலை நேரத்தை அளவிலாமல் வீணடிக்கவும் போகிறது இந்த விளையாட்டு என்பதை உணராமல் என் வயது சேக்காளிகள் எல்லாம் மிகுந்த ஆர்வத்தோடு அந்தப் புதிய விளையாட்டை வேடிக்கை பார்ப்போம்.

ஏன் 87? 83 ஆக இல்லாமல்… 83 தான் உலகின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியான மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி உலகக் கோப்பையைக் கைப்பற்றிய வருடம் - அதுவும் நாம் கொஞ்சம் கூட எதிர் பார்த்திராத காலத்தில். அதுதான் அந்த விளையாட்டை நாடெங்கும் பரப்பியது. பம்பாய் மற்றும் சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்து எங்கள் சிறு நகரங்களுக்கு வந்து சேர நான்கு வருடங்கள் ஆயிற்று. எங்கள் ஊரில் இருந்து பெரு நகரங்களுக்குப் படிக்கச் சென்ற பெரிய பையன்கள் வார இறுதியில் ஊருக்கு வரும்போது கொண்டு வந்த விளையாட்டு.

அவர்கள் ஆரம்பித்த போது, ரப்பர் பந்தோடும் உள்ளூர் ஆசாரிகள் செய்த மரக்கட்டை மட்டையோடும் ஆரம்பித்தார்கள். டென்னிஸ் பந்துகள் கூடப் பார்த்ததில்லை நாங்கள் அப்போது. மற்ற எந்தத் துறையிலும் கண்டிராத மாதிரியான வேகமான வளர்ச்சியும் மாற்றமும் இந்த விளையாட்டில் காண முடிந்தது. ரப்பர் பந்தில் ஆரம்பித்து, அடுத்து ரப்பர் கார்க் (அதற்குப் பின் அதை நான் எங்குமே பார்த்ததில்லை) என்றொரு விதத்துக்கு மாறி, பின்பு கார்க் பந்துகளுக்கு மாறி, கடைசியில் சிவப்பு நிற லெதர் பந்துகளுக்கு மாறி விட்டார்கள். இது எல்லாமே மிகக் குறுகிய கால இடைவெளியில் நடந்து முடிந்தது. இன்னும் வெள்ளை லெதர் பந்துகள் அங்கு வந்து விட்டனவா என்று தெரியவில்லை. வந்திருக்க வேண்டும்!

எதிரே பாராத நேரத்தில் உலகக் கோப்பையை வாங்கிய இந்தியா, அடுத்த உலகக் கோப்பையின் போது வெற்றி பெற வாய்ப்புள்ள நாடாக எதிர் பார்க்கப் பட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும் அப்படி எதிர் பார்க்கப் பட்ட நாடுகள் என நினைக்கிறேன். அதுவும் இந்தியத் துணைக் கண்டத்தில் நடந்ததால் கூடுதல் எதிர் பார்ப்பு. அப்போதுதான் முதல் முறையாக இந்த மாபெரும் திருவிழா அந்த விளையாட்டின் பிறப்பிடமான - இப்போது செத்துக் கொண்டிருக்கிற - இங்கிலாந்துக்கு வெளியில் வந்திருந்தது. இறுதியில் எதிர் பார்ப்புகள் விண்ணை முட்டிக் கொண்டிருந்த போது, அரை இறுதியில் தோற்று வெளியேறினோம்.

எதிர் பார்த்திருந்த போது அரையிறுதியில் தோற்றதற்கு நாம் அதிகம் வருந்தியிருக்க வேண்டியதில்லை; ஏனென்றால் எதிரே பாராத போது (இருக்கிற சோப்ளாங்கி அணிகளில் நாமும் ஒன்று அப்போது) வென்றவர்கள் அல்லவா நாம்?! கண்டிப்பாக இருந்த அணிகளிலேயே சிறந்த அணி அல்ல நம்முடையது; ஆனாலும் வென்றோம். அதன் பிறகு என்ன நடந்தது? அந்த விளையாட்டை ஆடிய மிகப் பெரிய நாட்டில் பட்டி தொட்டிகள் எல்லாம் அது சனநாயகப் படுத்தப் பட்டது. போகிற போக்கில், அது நம்முடைய மற்ற எல்லா விளையாட்டுக்களையும் அழித்தும் ஒழித்தது. இன்று, அது ஒரு பெரும் கிறுக்காகவும் வியாபார வாய்ப்பாகவும் மாறியிருக்கிறது இங்கு. அது எங்கள் மதம் (மனிதர்க்குப் பிடிக்கும் மதமா, யானைக்குப் பிடிக்கும் மதமா, எந்த மதம் என்று தெரியவில்லை) என்கிறார்கள் சிலர். மதங்களோடு விளையாடும் நமக்கு ஒரு விளையாட்டு மதமாகத் தெரிவதில் எந்த வியப்பும் இல்லை. மதத்தை விட ஒரு விளையாட்டு நமக்கு பெரிதாகப் படுவது நம் தலைவர்களுக்குத்தான் புரிபடவில்லை என நினைக்கிறேன்.

சரி. எங்கள் ஊர்க் கோயிலுக்குப் போவோம் திரும்பி. எல்லோருமே இடது புறம் தான் நன்றாக ஆடுவர். வலது புறம் ஒரு சில ஓட்டங்கள் கிடைத்தாலே ஆச்சர்யம். சுற்றுச் சுவர்தான் எல்லைக் கோடு. ஆனால், சுவருக்கு வெளியே அடித்தால் அடித்தவர் ஆட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். பௌல்ட், கேட்ச், ரன்-அவுட், ஹிட்-அவுட் போல இது இன்னொரு விதமான அவுட். அதை ஈடு கட்ட, ரப்பர் பந்தில் ஆடிய ஆட்டங்களில் எல்.பி.டபுள்யூ கிடையாது. பின்னாளில் கார்க் பந்துகள் வந்தபோது தான் அதுவும் நுழைந்தது.

மைதானத்தில் எத்தனையோ இடைஞ்சல்கள் இருந்தன - மரங்கள், செடிகள், தூண்கள், மற்ற பல அமைப்புகள் மற்றும் கோயிலே கூட ஒரு பெரும் இடைஞ்சல்தான். அதில் பெரிய சுவாரசியம் மிட்-ஆபில் இருந்த கிணறு. மட்டைகள், பந்துகள், குச்சிகளோடு (பெயில்ஸ் கிடையாது அப்போது) சேர்த்து அவர்கள் கையில் எப்போதுமே ஒரு வாளியும் (நீளமான கயறு கட்டிய வாளி) இருக்கும். பந்து கிணற்றுக்குள் விழும் போதெல்லாம் எடுக்க. கிட்டத் தட்ட அடிக்கப் பட்ட நான்குகளின் அளவுக்கு கிணற்றில் விழுதல்களும் இருந்தன. நீர் இல்லாத காலங்களில் என்னைப் போன்ற சிறுவர்களும் (தைரியமும் சாகச உணர்வும் உள்ள சிறுவர்கள் மட்டுமே, நான் அல்ல) வாளியில் வைத்து அனுப்பப் படுவார்கள், பந்தை எடுப்பதற்கு. குறைவான சாகச உணர்வு கொண்ட என் போன்றோர் சுற்றுச் சுவருக்கு வெளியில் செல்லும் பந்தை மட்டுமே எடுக்கப் பயன் படுத்தப் பட்டார்கள். அந்தக் கோயில் ஒரு புறம் ஊராலும் மற்ற மூன்று புறமும் காடுகளாலும் மரம் செடி கொடிகளாலும் சூழப் பட்ட ஒரு தீப கற்பம்.

பின்பு, அதைப் பார்த்து அப்படியே நாங்களும் விளையாட ஆரம்பித்தோம். வெகு காலமாக நாங்களே செய்து கொண்ட மட்டைகளையும் ரப்பர் பந்துகளையும் கடந்து நாங்கள் போகவேயில்லை. கையில் கிடைக்கும் ஏதோவொரு மரக்கட்டையை வைத்து நாங்களே மட்டை செய்து கொள்வோம். அந்த நேரத்தில் அதுதான் கையில் காசில்லாமல் விளையாட்டைத் தொடர ஒரே வழியாக இருந்தது. சில நேரங்களில், உள்ளூர் ஆசாரிகளின் உதவியோடும் மட்டைகள் செய்து கொண்டோம். ஆசாரிகளின் பையன்களே (எங்கள் அணியில் அவர்களும் சிலர் இருந்தார்கள்) செய்து கொண்டு வரும்போது மட்டைகளின் தரம் மிகவும் நன்றாக இருக்கும். அவர்களுக்குத் தொழில் நுணுக்கங்கள் தெரிந்திருந்தன - கிரிக்கெட் மட்டைகளுக்கு எந்த மரம் ஒத்து வரும் என்கிற நுணுக்கங்கள்!

92-இல் அடுத்த உலகக் கோப்பை ஆரம்பித்தபோது, நான் அந்த விளையாட்டின் மீது பைத்தியம் போன்று காதலில் விழுந்திருந்தேன். அதற்கு சற்று முன்தான் ஆஸ்திரேலியா நம்மை அடித்துக் கொன்றிருந்ததால் (பென்சன் அண்ட் ஹெட்ஜெஸ் உலகக் கோப்பைக்கு முந்தைய பென்சன் அண்ட் ஹெட்ஜெஸ் மும்முனைத் தொடர்) நாம் இம்முறை வெல்லப் போவதில்லை என்பது தெரியும். ஆனால், அந்த உலகக் கோப்பை எங்களோடு விளையாடவும் விளையாட்டைப் பார்க்கவும் இன்னும் நிறையப் பேரைக் கொண்டு வந்தது. அப்போது, நாங்களே ஒரு தனி அணி அமைத்து அதில் நானும் இடையிடையில் சில முறை கேப்டன் ஆகி விட்டேன்.

அணியை மிகக் கட்டுக் கோப்பாக நிர்வகிக்கத் தொடங்கி விட்டோம். அணிக்கு ஒரு தனி நோட்டுப் போட்டு ஒவ்வொரு போட்டிக்குப் பின்பும் புள்ளி விபரங்களை எழுதி வைக்கத் தொடங்கினேன். தொலைக் காட்சித் திரைகளில் காணும் அத்தனை விதமான தகவல்களும் எங்களிடமும் இருந்தன. வரைபடங்கள் தவிர்த்து! இப்போது போல், அப்போது ஒரு லேப்டாப்பும் எக்செலும் இருந்திருந்தால் அதுவும் செய்திருப்பேன். அதிகமான பேட்டிங் சராசரி கொண்டிருப்பவர் சீக்கிரம் பேட்டிங் செய்யலாம்; குறைவான பவுலிங் சராசரி கொண்டிருப்பவர் சீக்கிரம் பவுலிங் செய்யலாம். ஆனால், நல்ல மட்டையாளர்கள் எல்லோருமே நல்ல பந்து வீச்சாளர்களாகவும் ஒன்றில் சரியில்லாதவர் இரண்டிலுமே சரியில்லாதவராகவும் தான் பெரும்பாலும் இருந்தோம். இதுவா அதுவா என்று தேர்ந்தெடுப்பது எல்லாம் சிறிது காலம் போன பின்பு நிகழும் வளர்ச்சிகள் என நினைக்கிறேன்.

எனக்குக் கிடைத்த மரியாதையெல்லாம் விளையாட்டைப் பற்றி எனக்கிருந்த அறிவுக்காகவும் சராசரிகள் கணக்கிடுவதற்கான சூத்திரங்கள் தெரிந்திருந்தமைக்காகவுமே ஒழிய என் விளையாட்டுத் திறனுக்காக அல்ல. நீண்ட நேரம் களத்தில் நின்றிருக்கிறேன். ஆனால் எப்போதுமே பெரிதாக எதுவும் அடித்ததில்லை. கிட்டத் தட்ட எல்லைக் கோட்டுக்கருகில் இருந்து ஓடி வருவேன். ஆனால் ஒரு போதும் நான் வேகப் பந்து வீசியதில்லை. ஒருவர் வேகப் பந்து வீச்சாளரா சுழற்ப்பந்து வீச்சாளரா என்பது பந்தின் வேகத்தைக் கொண்டு அல்லது அது எவ்வளவு சுழல்கிறது என்பதைக் கொண்டு அளவிடப் படுவதில்லை. அதற்கான ஒரே அளவுகோல் எவ்வளவு தூரம் ஓடி வந்து போடுகிறோம் என்பது மட்டுமே. அதன் படி பார்த்தால், நான் போட்டதுதான் அதி வேகப் பந்து வீச்சு. சில எட்டுகள் மட்டும் வைத்து வீசினால், சுழற்பந்து வீச்சாளர். என்னை விட வேகமாக வீசியபோதும் - அவர்கள் பந்து ஒருபோதும் சுழன்றதில்லை என்றபோதும் - எங்கள் அணியில் சில சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்ததாகவே கணக்கு. களத்தில் ஜாண்டி ரோட்ஸ் போல விழுவேன். ஆனால் ஒருபோதும் பந்தைப் பிடித்ததில்லை. இத்தனைக்கும் பின், நான் துவக்க ஆட்டக்காரராகவும் துவக்கப் பந்து வீச்சாளராகவும் அணியின் சிறந்த கீப்பராகவும் (பந்து வீச்சாளர்கள் கீப்பராக இருக்க எந்தத் தடையும் இல்லை!) இருந்து சாதித்து விட்டேன்.

எங்கள் அணியில் சில மிகச் சிறந்த ஆட்டக்காரர்களும் இருந்தனர். ஒருவன் கபில்தேவ் மாதிரியே ஆடுவான். அவன் என்னோடு பந்து வீச்சைத் துவங்குவான் (அவன் பந்து வீசும் விதம் கபில்தேவுடையதைப் போலவே இருக்கும்); அடியும் விட்டு விளாசுவான். அவன் மட்டையோடு உள்ளே வந்தால், நீண்ட நேரம் இருக்க மாட்டான். அப்படி இருந்தால், அன்று நாங்கள் கண்டிப்பாக வெல்வோம். அவன் எப்போதும் துவக்க ஆட்டக்காரனாக வருவதை விரும்பியதில்லை. ஒன்று, என்னைப் போன்ற மற்ற பையன்களை மகிழ்ச்சிப் படுத்திப் பார்க்கிற முதிர்ச்சி பெற்றிருந்தான் அல்லது அப்போது கபில்தேவ் செய்தது போலவே இக்கட்டான சூழ்நிலையில் உள்ளே வருவதை விரும்பினான். எப்படியோ, அந்த அரைகுறைத் திறமையை வைத்துக் கொண்டு என் ஆசைப்படி துவக்க ஆட்டக்காரனாகக் களமிறங்க உதவியது அது எனக்கு.

இம்ரான் கான் போல ஆட விரும்பிய இன்னொருவனும் இருந்தான் எங்கள் அணியில். அவனும் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலுமே கில்லாடி. இவர்கள் இருவரைத் தவிர வேறு நல்ல ஆட்டக்காரர்கள் யாரும் எங்களிடம் இருக்க வில்லை. ஒரு கபில்தேவும் ஒரு இம்ரான் கானும் இருந்தும் கூட, எங்கள் ஊரில் எங்கள் அணியை ஜிம்பாப்வே அணி என்றுதான் அழைப்பார்கள். ஏனென்றால், நாங்கள் இந்த இருவரை மட்டுமே சார்ந்திருந்தோம். ஒன்றில் வென்று பத்தில் தோற்போம். பல நேரங்களில், பதினொரு பேர் ஏற்பாடு செய்வதே பெரிய சவாலாக இருக்கும். எங்கள் மூவரைத் தவிர எங்கள் தெருவில் வேறு யாருக்கும் கிரிக்கெட்டில் அவ்வளவு கிறுக்கு கிடையாது. அப்போதெல்லாம் ஊக்கப்படுத்துதல் - வீக்கப்படுத்துதல் போன்ற நுட்பங்கள் தெரியாது எங்களுக்கு. தெரிந்திருந்தாலும் அவ்வளவு எளிதாக நாங்கள் விரும்பியதைச் சாதித்திருக்க முடியுமா தெரியவில்லை.

என் நண்பர்களெல்லாம் செய்தித் தாட்களில் வரும் சினிமாப் பட விளம்பரங்களை வெட்டி மின் கம்பங்களில் ஒட்டுவார்கள். அந்த நேரத்தில், நான் அப்படி வரும் கிரிக்கெட் செய்திகளையும் படங்களையும் வெட்டி அறிவிப்புப் பலகை போன்ற ஒன்று ஏற்பாடு செய்திருந்தேன். கிட்டத்தட்ட வாராவாரம், அப்போதைய ஆட்டக்காரர்கள் மற்றும் எல்லாக் காலத்தையும் சேர்ந்த ஆட்டக்காரர்கள் அனைவரிலிருந்தும் ஒரு கனவு அணியையும் இன்னொரு துணைக் கனவு அணியையும் பட்டியலிட்டு ஓட்டுவேன். உலக அணியும் உண்டு; இந்திய அணியும் உண்டு! எல்லாக் காலத்துக்குமான பட்டியல் அவ்வளவு அதிகமாக மாறாது.

அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகள், செய்தித் தாளைக் கையில் எடுத்தால் நேராகக் கடைசிப் பக்கத்துக்குத்தான் செல்வேன். கிரிக்கெட் செய்தி வாசிக்க. நாள் முழுக்க கிரிக்கெட் பார்ப்பதிலேயே கழியும். இங்கிலாந்தும் மேற்கிந்தியத் தீவுகளுமோ வேறு ஏதோ இரு அணிகளுமோ மோதினாலும் கூடப் பார்ப்பேன். ஐ.சி.சி.யின் அதிகார பூர்வப் புள்ளி விபரங்களுக்குப் போட்டியாக நான் ஒரு புள்ளிவிபரம் வைத்திருப்பேன். எது பற்றிக் கேட்டாலும் விரல் நுனியில் தகவல் இருக்கும். ஒரு காலத்தில், என் வாழ்க்கையின் ஒரே நோக்கம் கிரிக்கெட் பார்த்தல், கிரிக்கெட் சாப்பிடுதல், கிரிக்கெட் தூங்குதல் என்றிருந்தது. உண்மையிலேயே உயிரினும் மேலானது.

கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய செய்திகள் சூடு பிடித்தபோது, மொத்த தேசமும்  "இது எனக்குத் தெரியும்; நான் சந்தேகித்தேன்; இது ஒருநாள் வெளிவரும் என்று எதிர் பார்த்தேன்" என்றெல்லாம் சொல்லி அத்தோடு கிரிக்கெட் பார்ப்பதை - பேசுவதை நிறுத்தியது. ஆட்டத்தின் ஓர் உண்மையான ஆதரவாளனாக, அத்தனை கெட்ட பெயருக்குப் பின்பும் நான் அந்த ஆட்டத்தைத் தொடர்ந்து பார்த்தேன் - பேசினேன். பாகிஸ்தானுக்கு எதிரான சென்னை ஆட்டத்தில் (சயீத் அன்வர் 196 அடித்த ஆட்டம்) அஜய் ஜடேஜா வெளியேறிய விதம் எனக்குச் சந்தேகம் அளித்தது. ஸ்கொயர் லெக்கில் நின்ற பீல்டரிடம் ஏற்கனவே ஒரு பந்து அதே போலத் தூக்கிக் கொடுத்து, அதை அவன் விட்டு, மீண்டும் அதே மாதிரி அலேக்காகத் தூக்கிக் கொடுத்தபோது ஆட்டத்தை லயித்துப் பார்க்கும் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் அந்தச் சந்தேகம் வந்திருக்கும். 

எல்லாப் பிரச்சனைகளுக்கும் பின்பும் அதுதான் எனக்கு மிகவும் பிடித்த ஆட்டமாக இருந்தது. பெங்களூர் வந்தபோதும் நான் அந்த விளையாட்டுக்கு இன்னும் அருகில் வந்து விட்டது போல் உணர்ந்தேன். சின்னசாமி அரங்கத்தில் நேரில் போய்ப் பார்க்கலாம் என்றொரு நினைப்பு. பார்த்த வேலையின் மீது நான் காதலில் விழுந்தபோது அது எல்லாமே அமுங்கிப் போயிற்று. ஒரு நேரத்தில் வேலை எல்லாவற்றுக்கும் மேலானதாக மாறியது. எதன் மீது (அல்லது 'எவர் மீது') காதலில் விழுந்தாலும் மற்ற எல்லாமே மனசை விட்டு அழிந்து விடுவதுதானே இயற்கை?!

வேலைக்குச் செல்வோரும் சரி, மாணவர்களும் சரி, இந்த விளையாட்டின் மீதான கிறுக்கு காரணமாக அளவிலாத இழப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்ந்தேன். சம்பந்தப் பட்ட தனி மனிதருக்கும் சரி, அவர்கள் கொடுக்கும் நேரத்துக்குப் பதிலாக அவர்களுக்கு அள்ளி அள்ளிச் சம்பளம் கொடுக்கும் (நாம் செய்கிற வேலைக்கு நமக்குக் கிடைக்கும் சம்பளம் நிரம்ப அதிகம் என்று நான் இன்னமும் நினைக்கிறேன்!) நிறுவனங்களுக்கும் சரி, அவர்களுடைய நல்லதுக்கு இது கண்டிப்பாகத் தவிர்க்கப் பட வேண்டியது. ஒரு காலத்தில் இது என் வாழ்க்கையில் நடக்கவே முடியாத மாற்றம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உண்மையில் மனதை மாற்ற நான் எடுத்துக் கொண்ட நேரம் சில நிமிடங்களே.

இப்போது சந்திக்கும் பெரும்பாலான பள்ளி நண்பர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கத் தவறுவதில்லை - "ஏய், இன்னமும் தனியா நோட்டுப் போட்டு கிரிக்கெட் சம்பந்தப்பட்ட புள்ளி விபரங்கள் எழுதி வைக்கும் வேலையைச் செய்துக்கிட்டு இருக்கியா?". அது ஒரு பழைய காதல்த் தோல்வியைப் பற்றிப் பேசுவது போல இருக்கும். அப்படியே சிரித்து விட்டுப் போய் விடுவேன். பழசை மறப்பது அவ்வளவு கடினமா? பழைய உறவுகளைத் துண்டித்துக் கொள்வது அவ்வளவு பெரிய சிரமமா? எனக்கு அப்படித் தோன்றவில்லை! உங்களுக்கு?

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்