நாகலாபுரம் - என் மால்குடி!

மிக நீண்ட இடைவெளிக்குப் பின் சமீபத்தில் சொந்த ஊருக்குச் சென்று வரும் வாய்ப்புக் கிடைத்தது. சொந்த ஊர் என்றால் என் பூர்வீகக் கிராமம் அல்ல. என் இளமைக் காலத்தின் பெரும்பான்மையான பகுதியைச் செலவிட்ட என் அம்மாவின் ஊர். உண்மையான சொந்த ஊரில் வளராத பெரும்பாலான மனிதர்களுக்குச் சொந்த ஊர் என்றாலே அப்படிப் பட்ட ஓர் ஊர்தான் நினைவுக்கு வருகிறது. தந்தை – தாத்தன் காலத்துப் பரம்பரை மண் எது என்று யோசித்தெல்லாம் அவர்கள் யாரும் சொல்வதில்லை. அப்படிப் பட்ட அனைவருமே, தந்தையுடனோ தாத்தாவுடனோ உடன் பிறந்த ஒரு பிடிவாதப் பேர்வழி நினைவு படுத்திக் கொண்டே இருந்தால் ஒழிய, தன் இளமைக் காலத்தின் அதிகப் பகுதியைச் செலவிடும் ஊரைத்தான் சொந்த ஊர் என்று சொல்கிறோம் அல்லது சொல்ல விரும்புகிறோம்.

அப்படிப் பெரும்பாலானவர்களுக்கு அமைகிற ஊர் அம்மாவின் ஊர் அல்லது அம்மாவின் அம்மாவுடைய ஊர். நமக்கு நேர்ந்ததே அம்மாவுக்கும் நேர்ந்திருக்குமல்லவா?! சிலருக்கு குடும்பத்தோடு பஞ்சம் பிழைக்கப் போன ஊராக இருக்கும் அது. இதில் அரசுப் பணி காரணமாக அடிக்கடி ஊரை மாற்றும் பெற்றோருடைய பிள்ளைகளின் சொந்த ஊர்களும் அடக்கம். அப்படித்தான் நிறையப் பேர் சம்பந்தமே இல்லாமல் சென்னை – பெங்களூர் போன்ற ஊர்களைக் கூடத் தன் சொந்த ஊர் என்று கூச்சமில்லாமல் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். அம்மா கை ஓங்கிய வீட்டில் மட்டும்தான் பிள்ளைகள் அம்மா ஊர் மீது காதல் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. அம்மாவின் வீடு அப்பா வீட்டை விட வசதியானவர்களாகவோ அம்மாவின் ஊர் அப்பாவின் ஊரை விடப் பெரியதாகவோ இருந்தால் கூட இதெல்லாம் நேரலாம்.

அம்மாவின் கையும் ஓங்கியதில்லை; அவர்களுடைய வீட்டின் கையும் ஓங்கியதில்லை; ஆனால் எனக்கு அம்மாவின் ஊர்தான் அதிகப் படியான சொந்த ஊர் ஆகிப் போனது. காரணம், அம்மாவின் ஊர் அப்பாவினுடையதை விடப் பெரிது. அதனாலும் வேறு சில காரணங்களாலும் அங்கு போய்ப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. வாழ்வை மாற்றிய சில முடிவுகள் என்று ஒவ்வொருவர் வாழ்விலும் சில இருக்கும். எனக்கு அப்படி ஒரு முடிவு அது. நீண்ட நாட்களாகத் தாத்தாவின் தம்பி (சின்னத்தாத்தா) எதிர்த்ததை மீறி எடுத்த முடிவு. முடிவு என்கிற சொல் கொஞ்சம் இந்த இடத்தில் இடி இடியென இடிக்கிறது. புதிய தொடக்கத்தை அல்லவா கொடுத்தது அந்த முடிவு?! வேறு நல்ல சொல் இல்லையா என் இனிய மொழியில்? சரி, தீர்மானம் என்று வைத்துக் கொள்வோம்.

அந்த ஊர் நாகலாபுரம். அம்மா ஊரும் அப்பா ஊரும் அருகருகில் கிடைக்கப் பெற்ற பாக்கியவான்களில் நானும் ஒருவன். அப்பா ஊருக்குப் பெயர் பூதலப்புரம். முதல் ஏழு வருடங்கள் பூதலப்புரத்திலும் அடுத்த எட்டு வருடங்கள் நாகலாபுரத்திலும் வாழ்ந்தேன். உண்மையாகவே வாழ்ந்தேன். அருகருகில் அமையப் பெற்ற பாவத்துக்காக முதல் ஏழு வருடங்கள் அடிக்கடி நாகலாபுரத்துக்கும் அடுத்த சில வருடங்கள் அடிக்கடி பூதலப்புரத்துக்கும் போய் வந்து போய் வந்து போய் வந்து கொண்டிருந்தேன். எனவே இரண்டு ஊர்கள் மீதுமே ஒரு பற்று உண்டு. பிறந்ததும் நாகலாபுரம்தான். அளவிலும் சரி, தரத்திலும் சரி, அதிகமாக வாழ்ந்ததும் நாகலாபுரத்தில்தான். முதல் ஏழு வருடங்களில் இருந்ததைவிட அடுத்த எட்டு வருடங்களில் கூடுதல் முதிர்ச்சி இருந்ததால் கூடுதலான நினைவுகளும் உண்டு.

எல்லா ஊர்களையும் போலவே எங்கள் ஊருக்கும் சில சிறப்புகள் உண்டு. அது பற்றியெல்லாம் கண்டிப்பாகப் பேச வேண்டும். ஒழுங்காகச் சொல்லப்படும் காதல் கதைகளுக்கு (அல்லது காதல்ப் படங்களுக்கு) அடுத்த படியாக மக்களைக் கடுமையாக ஈர்ப்பவை ஒழுங்காகச் சொல்லப்படும் ஊர்க்கதைகள் (அல்லது ஊர்ப் படங்கள்). அதன் காரணம் நம்மைப் போன்று அளவிலாத ஊர் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அரை வேக்காட்டுப் பெருநகர வாசிகள். தன் இளமைக் காலத்தை நினைவு படுத்துகிற எல்லாமே மனிதர்களுக்கு ஒருவிதக் கிளுகிளுப்பை உண்டு பண்ணுகின்றன. காதலும் ஊரும் அப்படித்தான். அந்த ஊரில் ஒரு காதல் அனுபவம் இருந்திருந்தால் ஊர் மீது இன்னும் கொஞ்சம் கூடுதல்க் காதல். பெரும்பாலும் இருந்திருக்கும். ஊரை வெறுத்து ஓடுவோருக்கும் ஓட்டப்பட்டோருக்கும் கூட அது போன்ற கிளுகிளுப்புக்குரிய நினைவுகளும் பற்றுதலும் சட்டையில் உள்ள காலர் அழுக்கு போல ஓரத்தில் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் என நினைக்கிறேன்.

சொந்தக் கதையை எழுதுவது படிக்கிற எல்லோருக்கும் இனிக்காது. அப்படி எழுதும் போதெல்லாம், ‘இவன் என்னடா பெரிய வெண்ணெய் போல அடிக்கடி இப்படி ஏதாவது ஆரம்பித்து விடுகிறானே!’ என்று யாராவது கடியாகி விடுவார்களோ என்ற பயத்திலேயேதான் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. ஆனால் அப்படி விசயங்களைப் பேசும்போது நிறையப் பேருக்கு அவர்தம் இளமைக் காலத்தையும் நினைவு படுத்திக் குதூகலப் படச் செய்யும் அரும்பணி (‘அடப்பாவிகளா, இதைக்கூட அரும்பணி என்று நினைத்துக் கொள்வீர்களா?!’ என்கிறீர்களா? கோடி கோடியாய்க் கொள்ளை அடிப்பவனே கூச்சமில்லாமல் அப்படியெல்லாம் பேசும்போது நான் எதற்குக் கூச்சப்பட வேண்டும்?!) செய்வது போல உணர்கிறேன்.

அது மட்டுமில்லை, என் எழுதுபொருட்களில் நான் தலையாயனவையாக இன்றும் வைத்துக் கொண்டிருப்பவற்றில் நாகலாபுரமும் ஒன்று. நாளை நான் ஒரு நல்ல எழுத்தாளனாக ஆனால் நாகலாபுரம் கண்டிப்பாக என் முக்கியக் கதைக்களமாக இருக்கும். ஆர். கே. நாராயணின் மால்குடி படிக்கும் போதெல்லாம் நாகலாபுரம் பற்றிய நினைவுகள் என்னைப் பாடாய்ப்படுத்தும். நானும் ஒருநாள் அது போன்ற நினைவுகளையெல்லாம் கதைகளாக்க வேண்டும் என்றோர் அவசரத் துடிப்பு வரும். பார்க்கலாம்.

சரி, விசயத்துக்கு வருவோம். நாகலாபுரத்தில் அப்படி என்னவெல்லாம் சிறப்பு என்று கேளுங்கள். கேட்டீர்களா? கேட்காவிட்டாலும் பரவாயில்லை. நான் இன்றைக்கு உங்களை விடுவதாயில்லை. பல சிறப்புகள். முதல் சிறப்பு – அது ஒரு கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத பேரூர் அல்லது சிறுநகரம். அதில் இருக்கிற வசதி என்னவென்றால் கிராமம், நகரம் இரண்டிலும் கிடைக்கிற அனுபவங்கள் கிடைக்கும். இரண்டிலும் இருக்கிற பிரச்சனைகளும் இருக்கும் என்பது வேறு கதை. எல்லோருக்கும் எல்லோரையும் தெரியாது; அதேவேளை, யாருக்கும் யாரையும் தெரியாது என்றும் சொல்ல முடியாது. இதைவிட ஒரு சுகம் மனிதனுக்கு வேண்டுமா?

மாநகரங்களில் சில மாநகரங்களை மட்டும் நாம் பெருமையாகப் பேசுவதுண்டு. பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்று சேர்ந்து சண்டை போடாமல் சுமூகமாக வாழ்கிற ஊர்களுக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டு. அவற்றைத்தான் பொதுவுணர் (அப்பா, நானும் தமிழுக்கு ஒரு சொல் கண்டு பிடித்துக் கொடுத்து விட்டேன்!) நகரங்கள் என்கிறோம். ஆங்கிலத்தில் காஸ்மோபாலிடன் என்பார்களே! அதுதான். பெங்களூர் போன்ற ஊர்கள். அப்படிப்பட்ட ஊர்கள் சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களிலும் உண்டு.

அத்தகைய ஊர்களுக்கான பொதுக் குணாதிசயங்கள் யாவை?

1. அவ்வூர்களில் மற்ற கிராமங்களைக் காட்டிலும் பல்வேறு பட்ட இன மக்கள் வாழ்வார்கள். கிராமங்கள் என்றாலே குறிப்பிட்ட சில இனத்தவரே பெருகிக் கிடப்பர். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சாதி அடையாளம் கொடுக்கலாம். அவற்றுக்கு மத்தியில் நாகலாபுரம் போன்ற ஊர்கள் அப்படி எந்த வட்டத்துக்குள்ளும் சிக்காமல் அருகில் இருக்கிற எல்லா ஊர்களிலும் காண முடியாத பல இனத்தவர்களையும் உள்ளடக்கி ஒருவிதப் பரந்த மனப்பான்மையோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. சராசரிக் கிராமங்களில் காண முடியாத இனங்கள் பல உண்டு. பெரும்பாலும் வியாபாரம் மட்டும் செய்து வாழும் மக்களைக் கிராமங்களில் காண முடியாது. விவசாயம் மட்டும் செய்வோர் உண்டு. ஆனால் ஐயர், ஐயங்கார், முதலியார், செட்டியார், ஆசாரியார், முகமதியர், கிறித்தவர் என்று எல்லா விதமான சிறுபான்மை மக்களும் தத்தமக்கென்று ஒரு பெரிய தெருவோடு வாழ்கிற நாகலாபுரம் போன்ற ஊர்கள் நான் அதிகம் பார்த்ததில்லை.

அதைவிட என்ன சிறப்பென்றால், நகரங்களில் போல மற்றொருவர் என்ன இனத்தவர் என்றே தெரியாமல் பழகுதல் எங்கள் ஊரிலும் உண்டு. இவர் இதுவா அதுவா என்று கடைசி வரை கண்டு பிடிக்கவே முடியாமல் போன கதைகளும் உண்டு. இன்று கூட நான் எது என்று தெரியாதவர்கள் எங்கள் ஊரிலேயே நிறைய உண்டு. என் நெருங்கிய நண்பர்களே பலர், “நீ இதுவா?! நான் அதுவென்று நினைத்தேன் இவ்வளவு நாட்களாக...” என்று இதையும் அதையும் எதை எதையுமோ போட்டு, பெரும் பெரும் கேள்விக் குறிகளையும் ஆச்சரியக் குறிகளையும் சேர்த்துப் போட்டு விழித்திருக்கிறார்கள். பல ஊர்களில் இவர்களும் அவர்களும் தொட்டுக் கொள்ளவே மாட்டார்கள் என்று சொல்லப்படுபவர்களே எங்கள் ஊரில் முறை போட்டுப் பேசிக் கொள்வதைக் கூடக் காணலாம். இதுதானே காஸ்மோபாலிடன்?! என்ன சொல்கிறீர்கள்?!

2. அவ்வூர்களில் நாம் முன்பு பேசியது போல பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் நிறைய இருப்பார்கள். பூர்வீக ஊர் என்பது அருகிலோ தொலைவிலோ இருக்கும் வேறோர் ஊராக இருக்கும். ஆனால் சில பல தலைமுறைகளாக இதுதான் எங்கள் சொந்த ஊர்; வேறெந்த ஊரும் எங்களுக்குத் தெரியாது என்று சொல்லுமளவுக்கு அவர்களுடைய பிள்ளைகள் வளர்ந்திருப்பார்கள். என்னைப் போல அம்மா ஊரைச் சொந்த ஊராக்கிக் கொள்ளும் ஆசையை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டவர்கள் நிறைய இருப்பார்கள். நாகலாபுரத்தில் பல தலைமுறைகளுக்கு முன்பே என்னைப் போல ஒண்டிப் பிழைக்க வந்து ஒட்டிக் கொண்டு விட்டவர்கள் நிறைய உண்டு. அவர்களுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களுடைய சொந்த ஊர்ப் பெயர்களை அவ்வப்போது வீட்டில் வாசிக்கப் படும் வரலாற்றுக் கதைகளில் மட்டும் கேட்டுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வந்து குடியேறியவர்களை விடுங்கள். எந்த நிமிடத்திலும் வெளியூர்க்காரர்கள் ஒரு பெரிய எண்ணிக்கையில் எங்கள் ஊரில் இருப்பார்கள். சந்தைப் பேட்டையிலோ (இந்த சந்தைப் பேட்டை ஒரு முக்கியமான இடம்; இது பற்றிப் பின்பொரு நேரம் விரிவாகப் பேசுவோம்)... சரக்கு வாங்கிக் கொண்டோ... ஏதோவொரு கூலி வேலை செய்து கொண்டோ... சினிமாக் கொட்டகையிலோ... கடைசி பஸ்ஸை விட்டு விட்டு மறுநாள் காலை முதல் வண்டியில் சென்று விடலாமென்றோ...! அடுத்து அவற்றையெல்லாம் விட முக்கியமாக, எந்தக் காலத்திலும் ஒரு சிறிய எண்ணிக்கையில் வெளியூர்ப் பிச்சைக்காரர்களும் வெளியூர்ப் பைத்தியக்காரர்களும் எங்கள் ஊரில் முகாம் இட்டிருப்பர். இதையெல்லாம் எத்தனை கிராமங்களில் பார்க்க முடியும்?

3. அது வந்தேறிகளைப் பற்றி. இப்போது சென்றேறிகள் பற்றியும் பார்ப்போம். எங்கள் ஊரிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் சென்று வாழ்வில் வென்றவர்கள் நிறைய உண்டு. கிராமங்களில் அந்தக் காலத்தில் பெரும்பாலும் ஓரிரு பட்டதாரிகளே இருப்பர். அதுவும் குறிப்பிட்ட சில குடும்பதினராக இருக்கும். எங்கள் ஊரிலோ அந்தக் காலத்திலேயே பெரும் பெரும் படிப்புகள் படித்து முன்னுக்கு வந்தோர் நிறைய உண்டு. சென்னையில் – பெங்களூரில் – பல வெளி மாநிலங்களில் – வெளி நாடுகளில் எல்லாம் எங்கள் ஊர்க்காரர்கள் நிறையப்பேர் உண்டு. எந்த ஊரைப் பற்றிப் பேசினாலும் அங்கே யாரோ ஒருத்தர் இருப்பார். இங்கிருந்து யார் சென்றாலும் அவருடைய முகவரி கொடுத்து அனுப்புவர். ஆரம்ப காலங்களில் வேண்டிய உதவிகள் கிடைக்கும். சில நேரங்களில் சென்ற இடத்தில் கவனிப்பு சரியில்லை என்று ஊரில் வந்து பெயரைக் கெடுக்கும் வேலைகளும் நடக்கும்.

சென்னையில் ஓர் ஊர் நண்பனின் திருமணத்துக்குப் போயிருந்த போதுதான் புரிந்தது – அங்கே நம்ம ஊர்க்காரர்கள் எல்லாம் மிக ஒற்றுமையாக அடிக்கடிச் சந்தித்துக் கொண்டு – அளவளாவிக் கொண்டு – பழம் கதைகள் பேசிக்கொண்டு – வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று. சின்ன வயதில் ஊரில் பார்த்த சில இளைஞர்கள் நரை முடியோடு வந்திருந்தார்கள்.

4. “எங்கள் குடும்பத்துக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது; அதனால் நான் பெரிய பருப்பு” என்று நினைக்கும் மனிதர்களைப் போல எங்கள் ஊருக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. அதனால் எங்கள் ஊர் ஓர் பருப்பு என்று நினைப்பவர்கள் எங்கள் ஊர்க்காரர்கள். அங்கே ஒரு நானூறு ஆண்டு காலப் பழைய சிவன் கோயில் இருக்கிறது. அதற்கொரு கதை இருக்கிறது. கதைக்குத் தொடர்புடைய பெயர் கொண்டிருக்கிறது ஊர்.

சமீபத்திய வரலாறு என்றால், முகமதியர்களின் முக்கியமான தமிழ்ப் படைப்புகளில் ஒன்றான சீறாப்புராணம் இயற்றிய உமறுப்புலவர் என்பார் (ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளிக்காலம் முழுக்க அடிக்கடி மனப்பாடம் செய்ய வேண்டிய ஒரு பெயர்; ஆனாலும் நீங்கள் மறந்திருப்பீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்; மரிக்கத்தானே வாழ்க்கை! மறக்கத்தானே படிப்பு!!) பிறந்த ஊர். தமிழ்நாடு முழுக்கப் போகிற ஒரு புத்தகத்தில் நம்ம ஊர்ப் பெயர் வருகிறது என்று பெருமையான பெருமைப்பட்டு நாங்களெல்லாம் அதை அழுத்தி அழுத்தி அடிக்கோடிட்டு வைப்போம். ஆசிரியர்களும் அளவிலாத பெருமை கொள்ளும் பகுதி அது.

அது மட்டுமில்லாது, கட்டபொம்மனோடு தொடர்புடைய சில நிகழ்வுகளும் உள்ளன. எங்கள் ஊரில் வேலை பார்க்கும் வெளியூர்க்காரத் தமிழ் ஆசிரியர் ஒருவர் ஊரின் பெருமையை எல்லாம் ஒரு சிறிய புத்தகமாகப் போட்டு விட்டதால் அது பற்றி விரிவாகப் பேச வேண்டாமென்று நினைக்கிறேன். அப்புறம் அவர் கோபப் படுவார்.

5. அங்கிருக்கிற அல்லது அங்கிருந்த வசதி வாய்ப்புகள். ஒரு மெட்ரிக் பள்ளி (நான் படிக்கும்போது அது இல்லை; இருந்திருந்தாலும் அதில்தான் படித்திருப்பேனா என்பது வேறு கதை!), ஒரு மேனிலைப் பள்ளி, ஒரு உயர்நிலைப் பள்ளி (அதில்தான் அடியேன் படித்தது), இரு நடுநிலைப் பள்ளிகள், சின்னச்சின்னதாய் நான் கணக்கில் சேர்க்காமல் விட்ட சில பள்ளிகள் என மித மிஞ்சிய கல்வி வாய்ப்புகள் இருக்கின்றன.

பெரும் சுற்றளவு மக்களுக்குப் பெரிய அளவில் சேவை செய்து கொண்டிருந்த ஆரம்ப சுகாதார மையம், அதாவது அரசு மருத்துவமனை ஒன்று இப்போதும் இருக்கிறது. தனியார் மருத்துவமனைகள் பெருத்து விட்டமையால் மரியாதை சிறிது குறைந்து! அந்தப் பகுதியில் பிறந்த பெரும்பாலான குழந்தைகள் (அதில் நானும் ஒருவன்) அங்கு பிறந்தவர்கள்தாம். எத்தனை டாக்டர்கள் பிறந்திருப்பார்களோ!

சாத்தூரில் இப்போதிருக்கிற கல்லூரி அந்தக் காலத்திலேயே எங்கள் ஊரில் ஆரம்பிக்கப் பட்டதுதான். ஏதோ காரணத்தால் தப்பி ஓடி விட்டது. அந்தக் கல்லூரி மட்டும் இருந்திருந்தால் ஊரின் கதையே மாறியிருக்கும். அடுத்தடுத்து எதுவுமே நிலைக்கவில்லை. வாழ்ந்து கெட்ட மனிதர் போல் வாழ்ந்து கெட்ட ஊராகி விட்டது.

இந்த முறை சென்றபோது கேள்விப் பட்ட ஒரு நற்செய்தி – இந்த ஆண்டு முதல் எங்கள் ஊரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கவிருக்கிறது என்பது. அருகில் இதை விடச் சில ஊர்கள் பெரிதாகி விட்ட போதிலும், இன்னமும் ஊர் மணம் குறைந்து விடாமல் இருக்கும் – காரியம் சாதிக்கும் வல்லமை படைத்த பெரியவர்கள் சிலருடைய முயற்சியால் எங்கள் ஊரில் வந்து இறங்கியிருக்கிறது கல்லூரி. இழந்த ஒன்றைப் பெறப் போகிற மகிழ்ச்சியில் திழைக்கிறது ஊர். சொந்த ஊரில் சைக்கிளில் போய்க் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு இருந்திருந்தால் அந்த ஊர் மீதான காதல் இன்னும் கடுமையாக இருந்திருக்கும் (ஒரு சில காதல் வாய்ப்புகளும் கிட்டியிருக்கலாமல்லவா?!). இருக்கட்டும்; பரவாயில்லை; அடுத்த தலைமுறைச் சிறார்களுக்காவது அது கிட்டியுள்ளதே என்று மகிழ்ந்து கொள்ள வேண்டியதுதான்.

அப்புறம்... பல குளங்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக சந்தைப்பேட்டை... அதைப்பற்றி ஒரு தனிப் பத்தியில் எழுதினால்தான் எனக்கு இன்று தூக்கம் வரும். எனவே...

6. ஊரின் மத்தியில் சந்தைப்பேட்டை ஒன்று இருக்கிறது. இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதிருப்பது பேட்டை மட்டும்தான். சந்தை பாவம் டரியல் ஆகிவிட்டது. ஒவ்வொரு போகிப் பண்டிகைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக எரிக்கப்பட்டு இன்று இல்லாமல் போயிருக்கும் பழைய பண்பாட்டு எச்சங்களில் எங்க ஊர்ச் சந்தையும் ஒன்று. நான் படிக்கிற காலத்தில் கூட வியாழக்கிழமை பள்ளிக்கூடம் விடப்போகிற நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற சந்தைச் சத்தம் கேட்கும்.

வாத்தியார் இல்லாத நேரத்தில் நாங்கள் கசகசவென்று பேசிக் கொண்டிருந்தால், வாத்தியார் வந்ததும் இப்படித்தான் கேட்பார் அப்போதெல்லாம் – “என்ன இது சந்தைக் கடை மாதிரி” என்று. மற்ற எந்த ஊரில் வேண்டுமானாலும் வாத்தியார் இந்த மாதிரிப் பேசலாம். ஆனால் எங்க ஊரில் இனி அப்படிப் பேசக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக... கொஞ்சம் கொஞ்சமாக... அப்படியே அடங்கி விட்டது சந்தையும் அத்தோடு சேர்ந்து ஊரும். வெள்ளைக்காரன் காலத்தில் தமிழகத்தின் தலை சிறந்த சந்தைகளில் ஒன்றாக விளங்கியது என்பது செவி வழிச் செய்தி. எங்கள் காலத்தில் (அதாவது, நான் அங்கே இருந்த ஆரம்ப காலத்தில்!) எங்களுக்குத் தெரிந்த சந்தைகளில் தலை சிறந்ததாக விளங்கியது என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

வியாழன் தோறும் சந்தைக் கண்காணிப்புக்கென்று அருகில் இருக்கும் புதூரிலிருந்து போலீஸ்காரர்கள் வருவார்கள். கொடுமை என்னவென்றால் அவ்வளவு முக்கியமான ஊரில் காவல் நிலையம் கிடையாது. ஏதோ குழறுபடியில் தன் பல உரிமைகளை பக்கத்துக்கு ஊர்களிடம் இழந்திருக்கிறது எங்கள் ஊர். வியாழக்கிழமை இன்னும் முடியவில்லை. அது பற்றிப் பேசுவோம். பெரும்பாலும் எல்லா வீட்டிலும் வியாழக்கிழமை கடையிலிருந்து பலகாரங்கள் வரும் என நினைக்கிறேன். இன்னமும் எந்த ஊர் போனாலும் வியாழக்கிழமை பஜ்ஜி சுவையைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைத்த பாடில்லை. வார நாட்கள் ஐந்தில் எனக்குப் பிடித்தது வியாழக்கிழமையாகத்தான் இருந்தது நீண்ட காலமாக.

இத்தனை சிறப்புகள் ஒரு பக்கம் இருக்க, எனக்கும் அந்த ஊருக்குமான உறவு பற்றிச் சிறிது பேசித்தான் ஆக வேண்டும். முதல் இரண்டாண்டுப் படிப்பைச் சொந்த ஊரில் (உண்மையான சொந்த ஊரில்) படித்து விட்டு தாய்வழித் தாத்தா – பாட்டி – மாமாமார் புண்ணியத்தில் இங்கு வந்து சேர்ந்தேன் மூன்றாம் வகுப்பில். ஒரு வகுப்பில் ‘அ’, ‘ஆ’ என்று இரண்டு பிரிவுகள் இருக்கலாம் என்ற சமாச்சாரம் அப்போதுதான் புரிந்தது. அதை ஆங்கிலத்தில் A, B என்றும் அழைக்கலாம் என்றும் புரிந்தது. ஒரே வகுப்பில் இத்தனை மாணவர்கள் படிக்கலாம் என்பதும் புரிந்தது. சந்தைச் சத்தம் கேட்கிற தொலைவில் (13 கி.மீ.) அப்பா அம்மா இருந்ததால் பெரிதாகப் பிரச்சனை எதுவும் இல்லை. பெரும்பாலான சந்தை நாட்களிலும் இதர சில நாட்களிலும் அப்பா இங்குதான் இட வலமாக வலம் வந்து கொண்டிருப்பார். வாராவாரம் ஊருக்கும் போய் வரலாம். வாழ்க்கை நகர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குப் போய் வரும் ஆர்வம் குறைந்தது. நாகலாபுரம் சொந்த ஊர் ஆகிற அளவு புகுந்த வீட்டுப் பற்று கூடியது.

கணிப்பொறி பற்றிய கனவுகள் கூட வராத காலத்தில் அந்த ஊரில்தான் வாத்தியார் வேலையோ – கடை முதலாளி வேலையோ பார்க்க வேண்டி வரும் என்றும் எப்படியாவது உலக சரித்திரத்தில் முதன்முறையாக (உலக சரித்திரம் தெரியாதவன் இப்படித்தான் பேச வேண்டும்) அம்மாவுடைய அப்பா கட்டிய வீட்டில் காலமெலாம் வாழலாம் என்றும் திட்டம் போட்டுக் கொண்டிருந்தேன். பிற்காலங்களில் உலகையே வெல்லப் போகும் வல்லமை கொண்டவன் போலவெல்லாம் யோசித்திருக்கிறேன் என்றாலும் நாகலாபுரத்தில் இருந்து நாலடி தொலைவில் இருக்கிற பள்ளிவாசல் பட்டியில்கூட (நாகலாபுரத்தின் இரண்டு பகுதிகளில் ஒன்று பள்ளிவாசல் பட்டி! அப்படியானால், மற்றொன்று? அதற்குப் பெயர் நாகலாபுரம் தான்! எப்படி இந்தக் காமெடி?! நாகலாபுரத்தின் மேட்டுக்குடி மக்கள் வசிக்கும் பகுதி என்றும் சொல்லலாம்!) வாழ்வது பற்றி யோசித்திராத காலமும் உண்டு.

அந்த ஊரின் சந்தை, மந்தை, சந்து, பொந்து என எல்லாப் பகுதிகளிலும் கிட்டி, கிரிக்கெட், தேன் தட்டு எடுத்தல், வெள்ளரிக்காய் பறித்தல், புளியங்காய் அடித்தல் என சகல விதமான – ஒலிம்பிக்கில் அங்கீகரிக்கப் பட்ட மற்றும் படாத விளையாட்டுகளை அரைக்கால்ச்சட்டை அணிந்து கொண்டு ஆடிக் கொண்டிருந்தேன். அந்தப் பொழுதுகளில் எத்தனையோ பேரை – புதிய மனிதர்களை – அவர்களுடைய குடும்பங்களை எங்கள் தெருக்களில் நடந்து செல்லும்போது வேடிக்கை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் நினைத்துப் பார்த்திராதது – நானும் ஒருநாள் அதே மண்ணில் அது போல வேடிக்கை பார்க்கப் படுவேன் என்பது. ஊருக்குள் புதிதாக வரும் கார்களை வேடிக்கை பார்த்திருக்கிறேன். ஒரு போதும் நானும் ஒருநாள் அப்படி ஒரு காரை ஓட்டிக் கொண்டு அந்த ஊருக்குள் நுழைவேன் என எண்ணியதில்லை.

நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த முறை சென்றபோது – அதுவும் முதன்முறையாகக் காரில் சென்றபோது, ஊரை நெருங்கும் போது ஒருவிதப் படபடப்பு. யாருக்கும் சொல்லிப் புரிய வைக்க முடியாத – இனம் புரியாத படபடப்பு. ‘ஏன்டா இந்த வேலை? இதெல்லாம் பக்கத்து ஊரோடு நிறுத்திக் கொண்டு பஸ்ஸில் வந்து இறங்கலாமில்லே!?’ என்றோர் உட்கேள்வி. ‘என்ன பைத்தியக்காரத்தனம்!?’ என்றுதானே தோன்றுகிறது? எனக்கே அப்படித்தானே தோன்றியது. ஆனால், காரில் சென்றபோது நான் அந்த ஊரை விட்டுப் பல மைல் தொலைவு அன்னியப்பட்டுத்தான் போனேன். அதற்கொரு முக்கியக் காரணம் – கால இடைவெளி. அடிக்கடி போய் வந்திருந்தால் எல்லோரிடமும் தொடர்பு இருந்திருக்கும்; ஊருக்கு வந்த புதியவர்களும் கொஞ்சம் அறிமுகமாகியிருப்பார்கள்; உருவ மாற்றங்கள் பெரிதாக அன்னியப்படுத்தியிரா; சொந்தக் காரில் போய் இறங்கும் முன் ஓரிரு ஓசிக் கார்கள் ஓட்டியிருப்பேன்; கூச்ச உணர்வும் இருந்திராது; வேடிக்கையும் கொஞ்சம் குறைந்திருக்கும். திடீரென ‘எல்லாமே’ மாறி ஒருத்தன் வந்து இறங்கினால் - இளவட்டமாய்ப் பார்த்த ஆள் குழந்தை குட்டியோடு போய் இறங்கினால் எப்படி அதைச் சாதாரணமாகப் பார்க்க முடியும்?

நாங்கள் விளையாண்ட புழுதிகள் எங்கே? ஊரெல்லாம் எல்லாத் தெருக்களிலும் சிமெண்ட் சாலைகள் போட்டு விட்டார்கள். ஊரின் அழகு கொஞ்சம் கூடித்தான் போயிருக்கிறது. ஆனால், தெருவில் எப்படிப்பா இப்பல்லாம் கபடி ஆடுகிறீர்கள்? ஆடுகிறீர்களா கபடி இப்போதெல்லாம்? அல்லது, அதுவும் போகியில் போய்விட்டதா? தெருக்கள் எல்லாம் மிக மிகச் சிறிதாகி விட்டது போல் தெரிந்தது. நீளத்தையும் சொல்கிறேன். கண்டிப்பாக உலகம் எங்க ஊரில் மட்டும் சுருங்கியிருக்க வாய்ப்பில்லை. ஒன்று, நான் பெரிய ஆளாக (உடல் வளர்ச்சியை மட்டுமே சொல்கிறேன்!) ஆன காரணமாக இருக்கலாம். அல்லது, பெரும் பெரும் சாலைகளைப் பெருநகரங்களில் கண்டு விட்டதன் விளைவாக இருக்கலாம். உடன் வந்த சகோதரனும் இதே உணர்வைப் பகிர்ந்து கொண்டதில் ஒரு நிம்மதி. நல்ல வேளை – எனக்கொன்றும் கோளாறு ஆகிவிடவில்லை என்று உறுதிப் படுத்திக் கொள்ள முடிந்தது.

ஒரு சாலை முனையில் போக்குவரத்து சிக்னலைப் பார்த்தபோது எங்களூர் பெங்களூர் ஆகிவிட்டது போல உணர்வு. ‘நம்ம ஊரிலெல்லாம் எப்பவாவது ஆட்டோ வருமா? பக்கத்து நகரத்தில் இருந்தாவது ஒரு நாள் ஆட்டோ வருமா’ என்று யோசித்த நாள் ஒன்று உண்டு. நன்றாக நினைவிருக்கிறது. இந்த முறை போனபோது அளவிலாத ஆட்டோக்கள். ‘எங்கயோ போயிருச்சப்பா எங்க ஊரு! நாந்தான் இந்த ஊர்க்காரனா அடையாளம் காட்டிக்கொள்ள முடியாமப் போயிருச்சு!’ என்று வருந்திக் கொண்டேன்.

புதுப்பித்துக் கொள்ளலாமா? லாம். ஆனால், எப்படி? எதற்கு? கொஞ்சம் கொஞ்சமாக ஊரை விட்டும் நிறையப் பேர் போய் விட்டார்கள். நான் வாழ்ந்த வீட்டை விட்டும் எல்லோரும் வெளியேறி வேறு ஊர் போய் விட்டார்கள். ஒரே ஒரு பாவம் செய்த மாமா மட்டும் அட்டைப் பூச்சியாய் ஒட்டிக் கொண்டு கிடக்கிறார் அந்த வீட்டில். நான் ஒட்டிக் கொள்ளலாம் என்று ஐடியா போட்ட வீட்டில். காரைக் கொண்டு போய் அந்த வீட்டின் முன் நிறுத்தினேன். வேடிக்கை கொஞ்சம் பார்த்தார்கள். ஆனால், என்னுடைய நாட்களில் இப்படி ஒரு கார் (நீங்கள் நினைக்கிற மாதிரி கார் எதுவும் இல்லை; தமிழ்நாடு முழுக்கத் தேடிக் கண்டுபிடித்த பழைய – ஆயுள் முடிந்த – பைக் விலைக்கு வாங்கிய ஓட்டைக்கார் என்னுடையது!) வந்திருந்தால் நாங்கள் கூட்டம் கூடிப் பார்ப்போம். அது இப்போது இல்லை. நல்ல முன்னேற்றம்.

சரி, காரை நிறுத்தினேன். எல்லோரும் எழுந்து வீட்டுக்குள் நுழைந்தோம். என் மூன்று வயது வாயாடி மகள் மட்டும் வர மறுத்துக் கதறிக் கதறி அழுதாள். எனக்கும் அழுகையே வந்து விடும் போல் இருந்தது. ‘இந்த வீட்டில் அல்லவா நீ வளர்ந்திருப்பாய்?! இப்போது அந்த வீட்டுக்குள் வருவதற்கே மறுக்கிறாயே!?’ என்று மனதுக்குள் கணக்குகள் போட்டுக் கொண்டு அவளிடம் போய்ப் பேசினேன். “உன்ன மாதிரி சின்னப்பிள்ளையா இருக்கும்போது அப்பா இந்த வீட்லதாம்மா வளர்ந்தேன்; இந்தத் தெருவுலதான் விளையாடுனேன்; இதோ விளையாடிக்கிட்டு இருக்காங்களே பசங்க... இது மாதிரித்தான் நானும் இருப்பேன்!” என்று விக்கிப் போய் அவளுக்குப் புரிகிற மாதிரியும் புரியாத மாதிரியும் பேசினேன். முகத்தை ஒரு விதமாக யோசிப்பது போல் மாற்றி விசயத்தை மட்டும் உள்வாங்கிக் கொண்டு கொள்கையில் மாற்றமில்லை என்பது போல் காருக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டாள்.

எப்படி இருந்தாலும் அவள் வரத் தயாரில்லை. யாரும் கட்டாயப்படுத்தி அழைக்கவும் தயாரில்லை. வேறொரு வேலையாகப் போகும் வழியில் விலகிப் பார்த்தல் என்ற மரியாதை நிமித்தமான பார்வையிடல் மட்டுமே என்பதால். ‘அவள் வர வேண்டாம். வந்தால் கதை சாதாரணமாய் முடிந்து விடும். வர வேண்டாம். அப்போதுதான் இதை வைத்து ஏதேதோ யோசிக்க வேண்டியிருக்கும் – பேச வேண்டியிருக்கும் – எழுத வேண்டியிருக்கும்’ என்றெண்ணி விட்டு விட்டேன். என்ன கொடுமை? என் பெரும் பகுதி வாழ்க்கையைச் செலவிட்ட ஓர் இடம் என் மகளுக்குப் பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. நாளை இங்கே வாழ்ந்த வாழ்க்கை பற்றி நான் ஏதாவது பேசும்போது “கடுப்படிக்காதப்பா, நல்ல கதையா ஏதாவது சொல்லு” என்று காமெடி அல்லவா செய்வாள்? அதையும் தமிழில் சொல்வாளா என்று கூடத் தெரியவில்லை இப்போதைக்கு. என் மகளாக இருப்பதால் குறைந்த பட்சம் அந்த உத்திரவாதமாவது உண்டு என நினைக்கிறேன்.

வீட்டுக்குள் போய்ப் பார்த்தால் வேதனையைக் கூட்டுகிற மாதிரி ஒரு படம். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம். அச்சு அசலாய் இப்போது என் மகள் இருப்பது போலவே நான் இருக்கும் படம். ஏற்கனவே பல முறை பார்த்த படம்தான். ஆனால் இந்த முறை வேறுபட்ட உணர்வு. என் மனைவி மீண்டும் ஒரு முறை சொன்னாள், “அப்டியே இருக்கிங்களே!?” என்று ஆச்சரியமாக. ‘அதைப் பார்க்கக் கூட நீ பெற்ற பிள்ளை உள்ளே வர மாட்டேங்குதே’ என்று சபித்துக் கொண்டேன்.

‘இந்த வீட்டில் அத்தனை பேர் இருந்தோமா? அதெப்படி சாத்தியம்? நம்பவே முடியவில்லை அல்லவா? வாய்ப்பே இல்லை!’ என்று நடந்த ஒன்றைப் பற்றி நடக்காததைப் பற்றிப் பேசுவது போலவே எல்லோருமே கருத்து வேறுபாடு இல்லாமல் பேசிக்கொண்டோம்.

அடுத்து, நாங்கள் எதற்காக அங்கு சென்றோமோ அந்த வேலை காரணமாக வீட்டுக்குப்பின் சிறிது நடந்து சென்றால் வருகிற காட்டுப் பகுதிக்குப் போனோம். ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் நான் ஒருமுறையாவது நடமாடிய பகுதி. கிட்டி, கிரிக்கெட், கபடி, வேறு சில பெயர் மறந்த விளையாட்டுகள், வெறும் நடை, ஓட்டம் என எவ்வளவோ நினைவுகள்.

இதில் ஒரு துளியைக் கூட என் மகளால் உணர முடியாதா? பகிர்ந்து கொள்ள முடியாதா? எனக்குக் கிறுக்கே பிடித்து விடும் போல் இருந்தது. எழுபது - எம்பது வயதில் (நான் கொஞ்சம் பிறவியிலேயே பேராசைக்காரன்! மன்னித்தருளுங்கள்!) இப்போதிருப்பதைவிட இவையெல்லாம் பற்றி திரும்பத் திரும்ப நிறையப் பேசத் தோன்றும் போது யாரிடம் போய்ப் பேசுவேன்? இப்போதே அதற்கு ஆள் கிடைக்க மாட்டேங்குது! பார்க்கலாம்... இன்னும் என்ன என்ன மாற்றங்கள் எல்லாம் பார்க்க வேண்டி வருமோ?!

கருத்துகள்

  1. varthai varalai.romba nalla irunthathu.pala vishayangal sinthikka vendiyavai.sonth ooor sontha oor thaan.

    பதிலளிநீக்கு
  2. மிக நன்றாக தமிழில் எழுதுகிறீர்கள். மென்பொருள் வல்லுநர் என்பதை நம்பவே முடியவில்லை. எங்க ஊருப் பக்கம் (துறையூர் பக்கம்) ஒரு நாகலாபுரம் இருக்கு. அந்த ஊருப் பெறக் கேட்டாலே எனது மூத்த சகோதரி பயப் படுவார்.

    கை, கால் முறிந்தால் கட்டுக் கட்டும் ஊர் அது . கத்தினால் கிணற்றில் தூக்கி வீசி விடுவேன் என்று மிரட்டி வைத்தியம் பார்ப்பார்கள்.

    ஆர்வமாகப் படிக்கத் தூண்டும் பதிவுகள். தொடருங்கள்!!

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி நண்பரே. மேலும் மேலும் எழுதத் தூண்டும் உற்சாக வார்த்தைகள். இந்த நாகலாபுரம் அப்படியல்ல. இது நல்ல நாகலாபுரம். :)

    பதிலளிநீக்கு
  4. இன்றுதான் முதன்முதலாக உங்கள் எழுத்தைப் படிக்கிறேன். நன்றாக எழுதுகிறீர்கள். ஆனால் கொஞ்சம் எடிட் பண்ணவேண்டியிருக்கிறது. சிலவற்றைக் குறைத்து எழுதினால் சுவாரஸ்யம் கூடும். அதுவும் நாகலாபுரம் என்று இருந்ததால் பதிவு பக்கம் வந்தேன். ஏனெனில் நான் பெரிதும் மதிக்கும் திரு பி.எஸ்.மணி அவர்களின் ஊர் இது.இங்கே பெங்களூரில் தினச்சுடர் என்ற பத்திரிகை மூலமாக ஐம்பது வருடங்களாய் தமிழ் வளர்த்துக்கொண்டிருப்பவர் அவர். யுனானி மருத்துவத்தில் புகழ் பெற்றவரான அக்பர் கவுசரின் ஊரும் நாகலாபுரம்தான் என்று திரு மணி அவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஐயா. உங்களைப் போன்ற பெரியோர் கருத்துரைகள் நிறைய உற்சாகமும் வழிகாட்டுதலும் கொடுக்கும். எங்கள் ஊருக்குக் கல்லூரி கொண்டு வந்தோரில் தாங்கள் குறிப்பிடும் மணி அவர்களும் முக்கிய பங்காற்றியவர். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவருக்கு என்னைக் கண்டிப்பாகத் தெரியாது. என் தாத்தா ஒருவர் (கனி) சிறு வயதில் அவருடன் படித்தவர். இன்னொரு தாத்தா (பொன்னுசாமி) அவருடன் இணைந்து ஊருக்கு வேண்டிய பல தொண்டுகளைச் செய்பவர். எனவே அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் பற்றிச் சொல்லுங்கள். அவருக்கு நன்றாகத் தெரியும். அக்பர் கவுசர் எங்கள் ஊர்க்காரர் அல்ல. பல்வேறு விழாக்களுக்கும் சேவைப்பணிகளுக்கும் திரு. மணி அவர்களால் எங்கள் ஊருக்கு அழைத்து வரப்பட்டவர். மீண்டும் என் தாழ்மையான நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  6. தமிழ்சல்வனைப் பற்றிய உங்கள் கட்டுரையை வாசிக்க ஆரம்பித்து, நாகலாபுரம் எனும் லின்கைப் பார்த்ததும் தொற்றிக் கொண்டேன் வாசிக்க என் சொந்த ஊரும் இதுவே, நானும் எட்டு வருடங்கள் மட்டுமே வாழ்ந்திருக்கிறேன் இந்த மண்ணில்(பள்ளிவாசல் பட்டி). நீங்கள் கல்லூரி பற்றி எழுதும் போது மிகுந்த உவகையுற்றேன். என் பெரியப்பாவும்(பொறியாளர்.சுபாஸ் சந்திரபோஸ்)அந்தக் கல்லூரிக்கான உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். என் தாத்தாவின் பெயரும் அந்த ஊர் பேருந்து நிறுத்த நிழற்குடையிலும், ரெட்டியபட்டி போகும் வழியில் இருக்கும் தண்ணீர் தொட்டியிலும் இருக்கிறது. நான் மட்டும் வருடம் ஒரு முறை வந்து போகும் அந்நியனாக இருக்கிறேன். உங்கள் பதிவில் இருக்கும் வலி, இழப்புகள் நானும் உணர்ந்திருக்கிறேன். அனேகமாக நாம் கூட பஜாரிலோ, பேட்டையிலோ, இல்லை பள்ளிவாசல்பட்டி என்றால் ஒகடை கடையிலோ இல்லை வேறு எங்கேயாவதோ சந்தித்திருக்கலாம், இல்லை இதே இலக்கியத்தில் கரிசல் மண்ணின் வாசம் வீசும் எழுத்துகளில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டலாம். உங்கள் எழுத்து மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ஜீவ கரிகாலன், உங்கள் கருத்துரை கண்டு மிக்க மகிழ்ச்சியுற்றேன். நீங்கள் பேசுவதையெல்லாம் பார்க்கும் போது நாம் மிகவும் நெருங்கி விட்டோம் என நினைக்கிறேன். உங்கள் தந்தை பெயர் என்ன? தாத்தா பெயர் என்ன? சொல்லுங்கள். அதன் பின்பு நான் நிறையச் சொல்ல முடியும் என நினைக்கிறேன். ஜீவானந்தம், குருசாமி பிள்ளை ஆகிய பெயர்கள் உங்களுக்குத் தொடர்புடையவையா? சுபாஸ் சந்திர போஸ் பற்றிக் கேள்விப் பட்ட பின் அப்படித்தான் தோன்றுகிறது. :)

      நீக்கு
  7. உலகம் இவ்வளவு சிறியது தானா ? ஆம் நான் ஜீவானந்தம் அவர்களின் மகன் தான்?

    என் பெயர் காளிதாசன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா! நினைத்தபடியே ஆகி விட்டதா! அப்பாவுக்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சின்ன வயதில் பெரியவர்கள் பேசும்போது மூக்கை நுழைத்துக் கவனிப்பதால் அவர் போன்ற பெரியவர்கள் பற்றி நிறையத் தெரிந்து வைத்திருக்கிறேன். கீழே கொடுக்கப் பட்டிருக்கும் இடுகையைப் படியுங்கள். இவர் என் தாத்தா. இவரும் உங்கள் தாத்தாவும் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நெருக்கமான நண்பர்கள். உங்கள் தாத்தாவை நேரில் பார்த்திருக்கிறேன். உங்களையும் நேரில் பார்த்தால் நினைவு வரலாம். நிழற்குடையிலும் தண்ணித் தொட்டியிலும் அவர் பெயர் இருக்கிறது என்று சுருக்கி விட்டீர்கள் என்றே நினைக்கிறேன். அவர் அதற்கெல்லாம் மேல். அந்தக் காலத்தில் அந்த மண்ணில் அவர்களால் இயன்ற அளவுக்குப் பெரும் பெரும் புரட்சிகள் செய்தவர்கள். அவர்களுடைய கதையெல்லாம் நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். நான் உங்கள் தாத்தா பற்றிக் கேள்விப் பட்டிருப்பது போலவே நீங்களும் என் தாத்தா பற்றிக் கேள்விப் பட்டிருக்கலாம். என் தந்தை ஊர் பூதலப்புரம். தாய் ஊர் நாகலாபுரம். என் பெற்றோரின் திருமணத்தில் உங்கள் தாத்தாவுக்கும் முக்கியப் பங்குண்டு. உங்க பெரியப்பா பெயர் போன்றதொரு பெயர்தான் என் அப்பாவின் பெயர். இவர் பெயர் இராமச்சந்திர போஸ். அப்பாவிடம் கேட்டுப் பாருங்கள். எல்லாம் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் பெருமாள் கோவில் தெருவில் நடராஜன் தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். அவர் என் மாமா. உங்களுக்குக் கூடத் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அவர் பள்ளிவாசல் பட்டியில் நீண்ட காலம் இருந்திருக்கிறார். இன்னும் எழுதக் கோடி இருக்கிறது. முதல் சுற்றை முடியுங்கள். அடுத்துத் தொடர்ந்து தொடர்வோம். :)

      http://bharatheechudar.blogspot.sg/2011/03/blog-post_21.html

      நீக்கு
  8. இந்த நாள் தொடங்கும் பொழுது இத்தனை ஆச்சரியம் தர இருக்கிறது என்று நம்பவில்லை, என் தந்தையிடம் பேசிய பொழுது(அவர் இப்பொழுது திருப்பூரில் இருக்கிறார், நாங்கள் சென்னையில்)பெருமாள் கோயிலிலிருந்து மூன்றாம் வீடா? என்று விசாரிக்க சொன்னார், நாகலையில் இருக்கும் என் சித்தப்பாவிடம் பேசும் போதும் அதையே தான் கேட்டார், சரியாக நான் அவரை அழைத்த பொழுது இந்த பதிவில் இருக்கும் படத்தில் வரும் கட்டடத்தின் முன் தான் அவர் நின்றுக் கொண்டிருந்தார். அந்தச் சங்கக் கட்டிட்டத்தில் தங்களுடைய மாமா ஏதும் கடை வைத்திருக்கிறார்களா??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்... நானும்தான்!

      ஆமாம். அதே வீடுதான். அதே கடைதான். இவை அனைத்தையும் விட முக்கியமானது நம் தாத்தாக்களின் நட்பு. அது பற்றியும் விசாரியுங்கள். பூதலப்புரம் என்று மட்டும் சொன்னால் போதும். வேறெதுவும் வேண்டியதில்லை. :)

      நீக்கு
  9. இல்லை முடிந்தால் பேசிவிடுவோம் - என் நம்பர் 9042461472

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளை கண்டிப்பாகப் பேசி விடுவோம். இங்கே இரண்டு மணியாகப் போகிறது. நடு இரவில் குடும்பம் விழித்து விடும். :-D

      நீக்கு
  10. இன்னொரு முக்கியமான தகவல்: பெருந்தலைவர் காமராஜரே நாகலாபுரம் பற்றிச் சொன்னதாக வரும் வரிகளை இந்த இணைப்பில் போய்ப் பாருங்கள்:
    http://www.perunthalaivar.org/special-pages/education/

    “நான் சொல்லுகிற நாகலாபுரம் கோயில்பட்டி தாலுகாவில் இருக்கிறது. அந்த ஊர்க்கார்ர்கள் சொன்னதைச்சொன்னபடி முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள்!" என்று சொல்லியிருக்கிறார்.

    இது யாருடனான உரையாடல் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பெரும்பாலும் அப்போது பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த என்.டி.சுந்தரவடிவேலு அவர்களுடனாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. இரு நண்பர்கள் இப்பதிவின் வழியாக சந்தித்துக்கொள்வது மனதுக்கு மிக இனிமையாக உள்ளது... தங்களின் நட்பு தொடரட்டும்.....

    பதிலளிநீக்கு
  12. உங்கள் வாசிப்புக்கும் நல்லெண்ணத்துக்கும் மிக்க நன்றி நல்லுள்ளமே!

    பதிலளிநீக்கு
  13. என்ன ராசா
    பாரதி ராசா
    நலமா
    பாரதி என்ற பெயரை கேட்கும் ோது எல்லாம் என் நினைவுக்கு வருவது கவிஞன் பாரதி மட்டுமல்ல என் கண்மனி பாரதி நீயும் தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கருத்துரையைப் பார்த்துவிட்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. மகிழ்ச்சி மட்டுமல்ல. ஏதோதோ உணர்வுகள்... நினைவுகள்... இந்தக் கட்டுரையை எழுதும் போதும் வேறு பல வேளைகளிலும் தங்களைப் பற்றிப் பலமுறை நினைத்திருக்கிறேன். பள்ளிக்கு வெளியே என்னைச் செதுக்கிய என் பிஞ்சுப் பருவத்து ஆசான்களில் நீங்கள் ஒரு முக்கியமான ஆள் என்பதை என்றும் மறக்க முடியாது. இந்த இணையந்தான் எத்தனை தொலைந்த உறவுகளைத் தேடிப்பிடித்துக் கொடுத்திருக்கிறது. அருமை! அருமை!!

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்