அ.தி.மு.க.அமைச்சர்கள் யார் யார்?
1. ஜெயலலிதா - இவர் தான் முதல்வர். ஐந்து வருடமும் கண்டிப்பாக நீடிப்பார் என்று என்னால் உத்திரவாதம் கொடுக்க முடிந்த ஒரே ஆள். எத்தனை பேர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்தான் எல்லாமுமாக இருப்பார். காவல் துறை கண்டிப்பாக இவர் கையில் இருக்கும். நிதித் துறையும் இருக்க வாய்ப்புண்டு. கொள்ளை அடித்ததைப் பிடுங்கி அரசுடைமையாக்கும் ஒரு துறை அமைக்கப் பட்டாலும் நல்லது. கேபிள் டி.வி. களை அரசுடைமையாக்குவதும் இத்துறைக்குக் கீழேயே வர வேண்டும்.
2. பன்னீர் செல்வம் - முன்னாள் முதல்வர். அவர் முன்னால் இதைச் சொன்னால் மகிழ்ச்சியடையாமல் கோபப் படுவார் - பயப் படுவார். கண்டிப்பாக நிதித் துறை இவருக்கில்லை. அதற்கான விபரம் இவருக்கு இருக்கிறது என்று யாராவது கவனித்திருந்தால் கருத்துரை இடுக. கண்டிப்பாக வெளியிடப்படும். பொதுப் பணித் துறையில் உள்ள நிதிகளை மட்டும் கவனிக்கும் பணி கிடைக்கலாம். சென்ற முறை அந்தப் பதவியில் இருந்தபோது நன்கு கவனித்து விட்டதாக நெருங்கிய தகவல்கள் நிறையக் கிடைத்தன. ஆனாலும், மிகவும் நல்லவர். அதிர்ந்து பேச மாட்டார். அரசியல்வாதிக்குரிய வேறு எந்தக் குறியீடும் தெரியாது. மற்றபடி, அ.தி.மு.க.வில் அம்மாவுக்கு அடுத்த படியாக, முதலமைச்சர் ஆகும் தகுதியுடையவர் இவர்தானாம்.
3. செங்கோட்டையன் - வேறென்ன... போக்குவரத்துத் துறைதான். தலைமைக்கே போக்குவரத்துத் துறை சார்ந்த பணிகளைப் பார்த்துக் கொள்பவர் தமிழ்நாட்டுக்குப் பார்ப்பதா கடினம்? இருப்பதிலேயே சீனியர். எம்.ஜி.ஆர். காலத்து ஆள் (பண்ருட்டி இராமச்சந்திரன் இருக்க வேண்டிய இடம். காலம் செய்த கோலம். இன்று எதிர்க்கட்சி வரிசையில் அமரப் போகிறார்!). காமராஜர் காலத்திலிருந்து நம்ம ஊரில் யாரையாவது ஒருத்தரை "தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா ஏரி - குளங்கள் பற்றியும் இவருக்கு அத்துப் படி" என்றோ "தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா சந்து - பொந்துகள் பற்றியும் இவருக்கு அத்துப்படி" என்றோ சொல்லிக் கொள்வது நமக்கு "வருங்கால முதலமைச்சர்" என்று கோசம் போடுவது போல ஜகஜமான பழக்கம். கடந்த ஐந்தாண்டுகளில் துறைமுருகனுடைய ஏரி - குளங்கள் பற்றிய அறிவைப் போற்றியது போல இவருடைய சந்து - பொந்துகள் பற்றிய அறிவைப் போற்றுவார்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு.
4. பொள்ளாச்சி ஜெயராமன் - எல்லாப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொண்டு டீ-வடை சாப்பிட்ட மூவரில் இவரும் ஒருவர் என்பதால் இவருக்கு வெய்ட்டாக எதாவது கிடைக்கும் என்று எல்லோரும் போல் நானும் நம்புகிறேன். ஒருவேளை, டீ-வடைக்கு மட்டும்தான் பொருத்தம் என்று தலைமை கருதினால் அதையும் ஏற்றுக் கொள்ளத் தயார்தான். பெரியார் வழி வந்த பகுத்தறிவு இயக்கத்தில் எப்போதும் பொட்டு வைத்துக் கொண்டு அலைவதால் இவருக்கு அறநிலையத்துறை என்கிறார்கள். நல்ல லாஜிக் தான். பார்க்கலாம். ஆனால், உங்க கட்சீல ரெம்பப் பேர் பொட்டு வச்சிக்கீறாங்க சார்.
5. ஜெயக்குமார் - தலைமை வேண்டியபோதெல்லாம் உடனிருந்த - அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரப்பட்ட ஓரளவு பழைய ஆள். அவர் வீடு மற்றும் தொகுதி கடற்கரையோரம் இருப்பதால் மீண்டும் மீன் வளத்துறையாம். பொருத்தமான ஆள்தான். மீனவர் நலமும் பேணினால் நன்றாக இருக்கும். உங்கள் அம்மாவுக்கு வேண்டிய பத்திரைக்காரர் "அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை" என்று சொல்லியனுப்புவார். அதையும் மீறி உங்கள் பணிகளைப் பண்ணப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் பேராசை.
6. நத்தம் விசுவநாதன் - முன்பு மின்சாரத்துறை வைத்திருந்தவர். இப்போது மீண்டும் அதே கிடைக்கலாம். ஆனால், முன்பை விட ஒப்போது இது சிரமமான துறை என்பதால் இன்னும் திறமையான வேறு யாருக்காவது கொடுக்கவும் படலாம். ஒருவேளை இவரே இப்போது இருந்து சென்றவரை விடத் திறமையான ஆளாகவும் இருக்கலாம். அதையும்தான் பார்த்து விடுவோமே.
7. சி.வி. சண்முகம் - நான் ஆசைப் பட்ட படி பொன்முடியைத் தரையில் பிடித்துத் தள்ளியவர். பா.ம.க. தலைமைக்கு சுத்தமாகப் பிடிக்காத திண்டிவனத்துக் காரர்.
8. பழ. கருப்பையா - பெரும் பேச்சாளர். சபாநாயகர் ஆகலாம் என்றும் சொல்கிறார்கள். இவர் திருநீறு பூசுவதால் இவருக்கும் அறநிலையத்துறை என்கிறார்கள்.
9. கு.ப.கிருஷ்ணன் - தே.மு.தி.க. சென்று திரும்பி வந்தவர். தே.மு.தி.க. ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வந்து விடும் என்று நம்பி ஏமாந்தவர். எப்படியும் பதவியில் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுபவர் போலத் தெரிகிறது. திரும்ப தே.மு.தி.க. வளர்ந்தால் அங்கு போனாலும் போவார் என்று நினைத்து அதனால் "போப்பா கிருஷ்ணன்" என்றும் சொல்லலாம்.
10. நயினார் நாகேந்திரன் - சென்ற முறை வென்றபோது நல்ல பதவியில் இருந்தவர். அதனால் இந்த முறையும் நல்லதாக ஏதாவதொன்று கிடைக்கும் என எதிர் பார்க்கலாம்.
11. சங்கரன்கோயில் கருப்பசாமி - நல்ல மனிதர். ஆதி திராவிடர் நலத்துறை கிடைக்கலாம்.
12. வளர்மதி - நகரத்தில் இருந்து கொண்டு ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சராக இருந்து தன்னை மட்டும் வளர்த்துக் கொண்ட வளர்மதி. பின் ஊழல்க் குற்றச் சாட்டுகளில் சிக்கித் தேய்மதியானவர். சென்ற முறை ஓரங்கட்டப் பட்டவருக்கு, இந்த முறை ஏன் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும், மேலும் கொடுப்பார்கள் என்றே தெரிகிறது. காசு அடிக்க முடியாத துறை ஏதாவது கொடுக்க வேண்டும்.
13. மடத்துக்குளம் சண்முகவேலு - அமைச்சர் சாமிநாதனைத் தோற்கடித்தவர். முன்னால் அமைச்சர். என்ன அமைச்சர் என்று தெரியவில்லை. தேர்தலின் போது தாக்கப் பட்டவர். அடி பட்டதற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமல்லவா?
14. கே.பி. அன்பழகன் - இவரும் முன்னாள் அமைச்சர். எங்களூர் பெங்களூர் அருகில் வரும் பாலக்கோட்டில் வென்றவர். அவ்வளவுதான் தெரியும்.
15. பாப்பா சுந்தரம் - இவரும் முன்னாள் அமைச்சர். கரூர்ப் பக்கம் உள்ளவர்.
16. கோகுல இந்திரா - அண்ணா நகரில் இருந்து வென்ற அண்ணா தி.மு.க. அம்மணி. மாநில மகளிர் அணிச் செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர். அது போதாதா?
17. ஜே.சி.டி. பிரபாகரன் - முன்னாள் அமைச்சரும் "எனக்கு வரவேண்டியதை எப்படிப்பா உன் மகனுக்குக் கொடுக்கலாம்?" என்று கேட்கப் பயந்து எந்நாளும் நம்பர் 2-ஆகவே இருக்கப் பிறந்த இனமானப் பேராசிரியருமான அன்பழகனை வீழ்த்தியவர். இவருக்கு இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நிறையக் கேள்வி.
18. செல்லூர் ராஜு - அடுத்த வருபவரைப் போலவே கடந்த அஞ்சு வருசமாக மதுரையில் இயக்கத்தை ஓரளவு உயிரோடு இருக்க உதவியவரில் ஒருவர். மாவட்டச் செயலாளர் ரேங்கில் இருப்பவர். எனவே, அமைச்சராக அதிக வாய்ப்பிருக்கிறது.
19. முத்துராமலிங்கம் - அழகிரியை எதிர்த்து மதுரையில் அரசியல் பண்ணத் தெம்பு இருந்த ஒரே ஆம்பளை. அது மட்டுமில்லை. தா.கிருட்டிணன் கொலை வழக்கில் நூற்றுக் கணக்கான சாட்சிகளில் கலைக்க முடியாமல் போன ஒரே சாட்சி இவர்தான். திருமங்கலத்தில் இடைத்தேர்தலில் தோற்று இம்முறை வென்றிருப்பவர். அஞ்சா நெஞ்சரின் கூடவே இருந்ததால் பாம்பின் கால் அறிந்த பாம்பு.
20. தங்க தமிழ்செல்வன் - 2001-இல் ஆண்டிபட்டி தொகுதியை அம்மாவுக்கு விட்டுக் கொடுத்தவர். அதன்பிறகு அதற்காகவே, மாநிலங்களவை உருப்பினராக்கப் பட்டவர். மீண்டும் ஆண்டிபட்டியை ஆள வந்திருக்கிறார்.
21. ஆர்.பி.உதயகுமார் - கழக மாணவர் அணி மாநிலச் செயலாளர். சட்டத்துறை கிடைக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள். இவரும் அடுத்தவரும் ஒரே மாவட்டம் (விருதுநகர் மாவட்டம்) என்பதால் ஒருவருக்குக் கிடைக்காமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. தி.மு.க. காலத்தில் இந்த மாவட்டத்தில் அமைச்சர்கள் இருவர் இருந்தனர் (ஒருவரை அந்த அமைச்சரவையிலேயே சிறந்த அமைச்சர் எனலாம். இன்னொருவரை அதற்குத் தலைகீழ் எனலாம்!) அதே பெயர்களைக் கொண்ட தொகுதிகளில் இம்முறை வென்றிருக்கிறார்கள் இவர்களிருவரும்.
22. வைகைச் செல்வன் - கழக இலக்கிய அணி மாநிலச் செயலாளர். அம்மாவுக்குப் பேச எழுதிக் கொடுக்கும் வேலையை புலமைப் பித்தனுக்கு அடுத்த படியாக இவர்தான் செய்கிறாராம். நல்ல பேச்சாளர். பேசத் தெரியும் என்பதால் பேரவைத் தலைவர் வேலைக்கு இவருடைய பெயர் பரிசீலிக்கப் படுவதாகப் பேச்சு. அதுவும் தெரியாவிட்டால் அமைச்சர் ஆக்கலாம்! அது தெரிந்திருப்பதால், இவர் பேரவைத் தலைவர் ஆகி விட்டால், முந்தியவர் அமைச்சராவது உறுதி.
23. இசக்கி சுப்பையா - பார்க்க பயமுறுத்துகிற மாதிரி இருந்தாலும் நல்லவர் என்று கேள்விப் பட்டேன். அப்டின்னா வரட்டும். அதுவும் பார்க்கக் கெட்டவர் மாதிரி இருந்து பழக நல்லவராக இருந்தால் கண்டிப்பாக வர வேண்டும். வரட்டும். இரண்டுமாகவும் இருக்க வாய்ப்புண்டு. அதாவது... நல்லவனுக்கு நல்லவன்... :)
24. விஜயலட்சுமி பழனிச்சாமி - சேலத்து சிங்கத்தைச் சங்ககிரியில் வீழ்த்திய அவருடைய உறவினர். முன்னால் சமூக நலத்துறை அமைச்சர். மீண்டும் வாய்ப்புள்ள பெண் உறுப்பினர்களில் ஒருவர்.
25. கே.பி.முனுசாமி - 1991-இலேயே உறுப்பினரான பழையவர். அதனால் அமைச்சராக வாய்ப்புள்ளது.
26. ஒரத்தநாடு வைத்திலிங்கம் - 2001-இலிருந்து வென்று வருகிறார் என்பதைத் தவிர இவரைப் பற்றி ஒன்றும் தெரியாது. அதனாலேயே இம்முறை அமைச்சராகலாமாம்.
27. கிணத்துக்கடவு தாமோதரன் - அதே பாயிண்ட் தான். 2001-இலிருந்து வென்று வருகிறார் என்பதைத் தவிர இவரைப் பற்றி ஒன்றும் தெரியாது. அதனாலேயே இம்முறை அமைச்சராகலாமாம்.
சைதை துரைசாமி வென்றிருந்தால் கல்வித் துறைக்கு நல்ல பொருத்தமாக இருந்திருக்கும். விதிதான் வலியதே. சரத் குமார் ஏதாவது கிடைத்தால் நல்லதென்று பார்ப்பார். முடிந்தால், மீண்டும் ஒருமுறை அதற்காக அ.தி.மு.க.வோடு இணையக்கூட வாய்ப்பிருக்கிறது.
அதென்ன 25-ம் இல்லாமல் 30-ம் இல்லாமல் 27? கூட்டினால் ஒன்பது வரவேண்டும் என்று பெரியார் சொல்லி இருக்கிறாரே! இதில் குறைந்த பட்சமாக 26 பேருக்கு வாய்ப்பு அளிக்கப் படா விட்டாலும் வருந்த மாட்டேன் - ஏமாற மாட்டேன். வைகோவைப் போல் உண்மையை ஒத்துக் கொண்டு (தன்னைப் பற்றி அல்ல; ஏமாற்றியவரைப் பற்றி!) அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவேன்.
இதில் சோ என்ன சொல்லப் போகிறார் - விஜய் மல்லையா என்ன சொல்லப் போகிறார் - இராஜபக்சே என்ன சொல்லப் போகிறார் - ஸ்டெர்லைட் ஆலையினர் என்ன சொல்லப் போகிறார்கள் - ஜோதிடர் என்ன சொல்லப் போகிறார் என்பதெல்லாம் பற்றித் தெரியாமல் எழுதியது. எனவே கணிப்பில் தவறுகள் ஏதாவது ஏற்பட்டால் மன்னித்து விடுங்கள். இதெல்லாம் போக, இன்னொரு பெரும் பிரச்சனை இருக்கிறது. "எனக்குத் தெரியாமல் தோழி வீட்டு ஆட்கள் காசு வாங்கி விட்டார்கள்" என்று சொல்லி வாங்கிய காசுக்கு துரோகம் செய்யாமல் யாருக்கும் தெரியாத இருபத்தைந்து பேர் கடைசி நேரத்தில் பதவியேற்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. "காசு வாங்கினால் என்ன? நீங்கள் போடுவதைப் போட்டுக் கொள்ளுங்கக்கா!" என்று பச்சைக் கோடி காட்டப் பட்டால், அதிலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
யார் யார் எத்தனை நாட்கள் வைத்துக் கொள்ளப் படுவார்கள் என்பது பற்றியும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான். ஆனால், எனக்கு ஜோதிடத்தில் தேர்ச்சி இல்லாததால், ஒன்றும் சொல்லாமல் விட்டு விடுவது நல்லதென்று விட்டு விட்டேன்.
நாளை காலை தெரிந்து விடும் எனக்கு எத்தனை மதிப்பெண்கள் என்று... பார்க்கலாம்...
நல்ல அலசல். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
பதிலளிநீக்குThis is called or named as oxymoron ? :))
பதிலளிநீக்குஎது கக்கு? "அ.தி.மு.க. அமைச்சர்கள்"?
பதிலளிநீக்குஇத கணிக்க எவ்வளவு நேரமாச்சு சார். ஒரு நாள் வெயிட் பண்ணி இருந்தால் வேலை மிச்சமாகி இருக்கும். ஹி ஹி. இருங்க, எத்தனை மார்க்குனு லிஸ்டப் பார்த்திட்டு சொல்லறேன்.
பதிலளிநீக்குபதிவுக்கு சம்மந்தமில்லாதது. டெவில்ஸ் அட்வகேட்லில் இவங்களோட பேட்டி பார்க்கனும் நீங்க. பழசு தான். யூ ட்யூப்ல இருக்கு.
கணிக்கக் கொஞ்ச நேரந்தான் ஆச்சு. ஆனால், எழுத ஏகப்பட்ட நேரம் ஆயிடுச்சு.
பதிலளிநீக்குஅது நான் பாத்துருக்கேன். நான் இந்த இடுகையில் போட்டிருக்கும் படம் கூட அவருடைய அந்தப் பேட்டில காட்டின பல்வேறு முக பாவங்கள்தாம். :)
தமிழக அமைச்சர்களைப் பற்றிய மே 13 வாக்கில் நீங்கள் எழுதியதாக நான் கருதும் தொகுப்பு. அனேகமாக உங்கள் கணிப்பு பெருவாரியாக உண்மையாகி இருக்கும், ஒரு சிலரைத் தவிர, குறிப்பாக பழ.கருப்பையாவுக்கு ஒரு துறையும் கொடுக்காமலே அம்மா 3 மாதம் கடத்திவிட்டார். ஒருவேளை அவரது வயது காரணமாக அவரை ரொம்பத் தொந்தரவுக்கு ஆளாக்காமலிருக்க அம்மாவின் யோசனையாக இருக்கலாம். அவர்தம் அறிவு, அனுபவம் இத்யாதிகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு தமிழகத் திட்டக்கமிஷனில் ஒரு உறுப்பினராகவாவது சேர்த்திருக்கலாம். உங்கள் ப்ளோக் பக்கங்கள் பார்த்தேன், ரசித்தேன். என் பக்கத்திற்கும் நேரம் கிடைக்கும் சமயம் வரலாமே?
பதிலளிநீக்குhttp://solaiyooran.blogspot.com/
நன்றி சோலையூரான் அவர்களே. அவர் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாதே. நாம் என்ன சொல்ல? :(
பதிலளிநீக்குகண்டிப்பாகச் செய்கிறேன்.