ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

வாசிப்பு குறைவுதான் எனினும் இதுவரை வாசித்த தமிழ் நூல்களில் சிறந்த நூல் இதுதான் என்று சொல்லலாம். இது எவ்வளவு சீக்கிரம் மாறும் என்று தெரியவில்லை. எவ்வளவு வேகமாக வாசிக்கிறோம் என்பதைப் பொறுத்து அது மாறும் என நினைக்கிறேன்.

ஜெயகாந்தன் தன் புதினங்களிலேயே தனக்கு அதிகம் பிடித்தது என்று சொன்னது இதைத்தான் என்பார்கள். ஜெயகாந்தனின் வாசகர்கள் நிறையப் பேரும் இதைச் சொல்வதுண்டு. ஓரளவுக்கு நகரப் பின்னணியில் இருந்து வருபவர்கள், பெண்களுக்கு 'சில நேரங்களில் சில மனிதர்கள்', ஊரகப் பின்னணியில் இருந்து வருபவர்கள், இளைஞர்களுக்கு 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' என்று மேலோட்டமாகச் சொல்லலாம்.

மொத்தக் கதையிலும் வரும் கதாபாத்திரங்கள் பத்துப் பேர்தான் இருக்கும். அவற்றில் ஒவ்வொரு கதாபாத்திரமும் செதுக்கிச் செதுக்கிச் செய்தது போல இருக்கிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் ஒரு கோட்டில் வந்து இணைத்த விதம் பிசிறில்லாமல் இருந்தது. தொடங்கிய சிறிது நேரத்திலேயே இதை எழுதும் போது ஜெயகாந்தன் ஏதோவொரு தேவபானம் அருந்திவிட்டுத்தான் இப்படியொரு கதையை எழுதியிருக்க முடியும் என்று தோன்றியது ("ஆமாமா... அவருக்கு அந்தப் பழக்கம் இருந்தது!" என்று குறும்பாக ஒரு குரல் சொன்னது!). அப்படி இந்தக் கதையின் சிறப்பு என்னவென்று ஒரு வரியில் சொல்வதென்றால், இது ஒரு கனவு வாழ்க்கையையும் கனவு மனிதர்களையும் நம் முன் கொண்டுவருகிறது. அதே வேளையில், அது நம்ப முடியாத வண்ணம் இல்லாமல், நம்மைச் சுற்றி இருப்பவர்களே அப்படியானவர்களாக அல்லது நாமே அப்படியான ஒருவராக இருப்பது போன்ற ஓர் உணர்வைக் கொடுக்கிறது. நம் ஆசைகளையும் ஏக்கங்களையும் தீர்த்துக்கொள்கிற மாதிரி இருந்தால் அது நம்ப முடியாத மாதிரி இருந்தாலும் அதை நம்பிக்கொள்ளத்தானே விரும்புவோம்! அதுதான் இந்தக் கதையிலும் நடக்கிறது.

கதையின் நாயகன் ஹென்றி அப்படியான ஓர் ஆள். அவன் யார்? பர்மாவிலிருந்து போரில் உயிர் பிழைத்துத் தப்பி வருகிற ஓர் ஆணும் பெண்ணும் வருகிற வழியில் கண்டெடுக்கிற ஒரு குழந்தை. அந்த ஆணும் பெண்ணும் யார்? அந்தப் பெண்ணின் கணவன் போரில் சாவதைக் கண் முன்னால் பார்க்கிற அவனின் நண்பன்தான் அந்த ஆண். தன் நண்பன் மறைவுக்குப் பின் நண்பனின் மனைவிக்கு உற்ற துணையாக இருக்க விரும்பி உடன் இருப்பவன். அது மட்டுமில்லை அவன் வாழ்வு. அதற்கு முன்பு, தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற கிருஷ்ணராஜபுரம் என்கிற கிராமத்தில் ஒரு பெரிய குடும்பத்தில் வளமான வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிற ஆனால் குழந்தை இல்லாத இந்த மனிதனின் மனைவி உள்ளூர்ப் பரியாரி (அதாவது நாவிதர்) ஒருவருடன் ஓடிவிடுகிறார். விடிந்து ஊர் அதைக் கண்டுபிடிக்கும் முன் தானும் தலைமறைவாகிவிட்டால், குழந்தை இல்லாத கவலையில் கணவனும் மனைவியும் காணாமல் போய்விட்டார்கள் என்று ஊரே எண்ணிக்கொள்ளும் என்று எண்ணி அவரும் விடியும் முன் ஊரைவிட்டு ஓடிவிடுகிறார். அத்தோடு அந்த வீடு இருபது - முப்பது ஆண்டுகளாகப் பூட்டியே கிடக்கிறது. இது போல நம் ஊரில் கூட ஒரு வீடு நாம் பார்த்திருப்போம். அதைப் பற்றிப் பல கதைகளும் கேள்விப்பட்டிருப்போம். தன் காலம் முழுக்கவும் இந்த வளர்ப்புப் பையனை தன் சொந்தப் பிள்ளையைக் கூடப் பார்த்துக்கொள்ளாத அளவுக்குச் செல்லமாகப் பார்த்துக்கொள்கிற அவர் (ஹென்றியின் 'பப்பா'), தன் காலத்துக்குப் பின் அவன் போய் வாழ்வதற்கு அந்த வீட்டைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டுச் சாகிறார். தன் பப்பா இறந்த மூன்றாம் நாள், அது வரை வெளி உலகமே தெரியாமல் செல்லமாக வளர்க்கப்பட்டுவிட்ட ஹென்றி பெங்களூரில் இருந்து புறப்பட்டு தமிழகத்தின் இந்தக் கிராமத்துக்கு வருகிறான். ஒரு கனவு மனிதனைப் போல இருக்கும் ஹென்றியை அந்த ஊர் எப்படி ஏற்றுக்கொள்கிறது என்கிற கனவுக் கதைதான் இது.

ஹென்றி நடந்து வந்துகொண்டிருப்பான். அப்போது ஒரு லாரி வந்து நின்று அவனை ஏற்றிக்கொள்ளும். அந்த லாரியின் ஓட்டுநர் பெயர் துரைக்கண்ணு. இந்தப் பெயர் ஜெயகாந்தனுக்குப் பிடித்த பெயராக இருக்க வேண்டும். 'உன்னைப் போல் ஒருவன்' கதையிலும் தொண்டர் துரைக்கண்ணு என்று ஒருவர் வருவார். இந்தத் துரைக்கண்ணுவைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னால் முக்கியமான பாத்திரமாக இருக்கப் போகிறவர். துரைக்கண்ணுவின் உதவியாளன் பாண்டு.

"துரைக்கண்ணு எப்போதும் கோபமாயிருப்பது போல் தோன்றுவான். ஆனால் பாண்டுவோடு திரும்பி லாரியில் வரும்போது அவனிடம் அன்பாகப் பேசுவான். தமாஷ் பேசுவான். அப்போது பாண்டு மட்டும் தனியாக இருக்க வேண்டுமென்பதில்லை. இவன் கோபித்துக் கொள்ளும்போது கூட இருந்தவர்களைத் தவிரப் புதிய மனிதர்களின் கூட்டம் எவ்வளவு இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் பாண்டுவைச் சமாதானம் செய்வான் துரைக்கண்ணு." - இதுதான் துரைக்கண்ணுவுக்கும் பாண்டுவுக்கும் இடையிலான உறவு பற்றிய ஆசிரியரின் விளக்கம். எந்த அளவுக்கு மென்மையான மனத்துக்காரன் துரைக்கண்ணு என்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். உதவியாளர்களைக் கெட்ட சொற்களில் திட்டுவதும் அடிப்பதும் பார்த்துப் பழகியவர்களுக்கு இதுவே பெரும் வியப்பாக இருக்கும்.

வரும் வழியில் ஒரு பைத்தியக்காரப் பெண் ஆடையில்லாமல் கடந்து போவாள். வண்டி அவளைக் கடந்து வந்துவிட்ட பின்னும் நீண்ட நேரம் ஹென்றி அவளையே பார்த்துக்கொண்டிருப்பது போல் இருக்கும். துரைக்கண்ணுவுக்கு அது பிடிக்காது. முதலில் நாகரிகமாக அவனைத் திசை திருப்ப முயல்வான். ஹென்றி திரும்ப மாட்டான். இன்னும் சிறிது கடுமையாக ஏதோ சொல்வான். அப்போதுதான் தெரியும். ஹென்றி வேறு எதையோ பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் என்று. இந்தக் காட்சியிலேயே ஹென்றி எவ்வளவு கனவான் என்பது சொல்லப்பட்டுவிடும். இந்தப் பைத்தியக்காரப் பெண்ணையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவளுக்கும் கதையில் ஒரு முக்கியப் பாத்திரம் இருக்கிறது.

துரைக்கண்ணு, பாண்டு தவிர்த்து லாரியில் முன்னால் உட்கார்ந்திருந்த இன்னொருத்தன் தேவராஜன். அவன்தான் ஹென்றிக்குக் கிடைக்கும் முதல் நண்பன். தேவராஜன் கிருஷ்ணராஜபுரத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவன். அதிகம் பிறரோடு பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ள மாட்டான். ஆனால் அவனுக்கு ஹென்றியைப் பார்த்த மாத்திரமே பிடித்துவிடுகிறது. கிருஷ்ணராஜபுரத்தில் தங்கக் கூட எந்த வசதியுமில்லாமல் வந்திருக்கிற ஹென்றியைத் தன்னுடனேயே தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்த் தங்க வைத்துக்கொள்வான். கதை முடியும் வரை ஹென்றிக்குத் துணையாகவே இருப்பான். தேவராஜன் போல நண்பர்கள் வாய்க்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள். உறவினர் - தெரிந்தவர் வீடுகளுக்கே போய்த் தங்குவது என்பது வெகுவாகக் குறைந்து வரும் காலத்தில் இந்த மாதிரி அறிமுகமே இல்லாத ஒருத்தனை அழைத்துக்கொண்டு போய் வீட்டில் தங்க வைத்துச் சோறு போடுவது என்பது நமக்குள்ளும் சில கேள்விகளைக் கேட்பதாக இருக்கும்.

தேவராஜன் வீட்டுக்கு வந்தால், அவனுக்கு ஒரு கதை இருக்கிறது. தாய் தந்தையை இழந்துவிட்ட தேவராஜனுக்கு, தன் மண வாழ்க்கையை இழந்துவிட்ட அவருடைய அக்காவே அம்மாவாக இருக்கிறார். அதனால் அவருக்குப் பெயரே 'அக்கம்மா' ஆகிவிடுகிறது. முதலில் தேவராஜனுக்கு மட்டும் அக்கம்மாவாக இருப்பவர் பின் ஊருக்கே அக்கம்மா ஆகிவிடுகிறார். தேவராஜனைக் கட்டிக்கொண்டு வந்த மனைவிக்கு அக்கம்மா மீது வெறுப்பு. அவள் தாய் வீட்டுக்கே திரும்பிப் போய்விடுகிறாள். அவ்வப்போது தேவராஜன் போய் அவளைப் பார்த்துவிட்டு வருவான். ஆனால் அக்கம்மாவைக் கைவிட்டுவிட வேண்டும் எனும் அவளுடைய நிபந்தனைக்கு அவன் ஒப்பவே இல்லை. வீட்டில் மண்ணாங்கட்டி என்றொரு சிறுவனும் இருப்பான். அவன் யார் என்றால், வீட்டில் வறுமை காரணமாகப் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகிப் போயிருந்த பக்கத்து ஊர்ச் சிறுவன். வீட்டு வேலைகள் அனைத்தையும் பொறுப்பாகச் செய்வான். அதற்குச் சம்பளமாக அவனுக்கு மூன்று வேளைச் சாப்பாடும் தொந்தரவு இல்லாமல் பள்ளிக்குச் சென்று படித்துவரத் தேவையான அளவுக்கு நிம்மதியான வாழ்க்கையும். அந்த வீட்டில் படுத்த படுக்கையாக ஒரு தாத்தாவும் இருக்கிறார்.

"விழிப்பு, உறக்கம் எல்லாமே அவருக்கு ஒன்றுதான். வெகு காலத்துக்கு முன்பே செத்துப் போனவர்களையெல்லாம் இப்போது கூப்பிட்டுப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு அவர் பேசுவார். யாரையோ நினைத்துக்கொண்டு அவர் பேசுவார். யாரையோ நினைத்துக்கொண்டு யாரிடமாவது அவர் பேசும்போது, இருக்கிற நிகழ்கால மனிதர்கள் அவருக்காக இறந்தகால மனிதர்களின் பாத்திரமேற்று நடிப்பார்கள்."

அந்த ஊர் பற்றிய விளக்கங்கள் நான் பிறந்து வளர்ந்த சிறுநகரம் போன்ற பேரூரோடு ஒத்துப் பார்த்துக்கொள்ள வசதியாக இருந்தன. சாலையோரத்தில் இருக்கும் கோயில், கடைத் தெரு, அதைக் கடந்து சென்றால் அந்த ஊரின் வசதியான குடும்பங்கள் மட்டும் வாழும் வீடுகள் உள்ள தெரு.

“நம்ப மீட் பண்ணி இப்போ மூணு மணி நேரம்கூட இன்னம் ஆகலே இல்லே?... ரெண்டு பேர் பிரெண்ட்ஸ் ஆகறதுக்கு நெறையப் பழக்கம் தேவை இல்லை…" என்று ஹென்றியும் தேவராஜனும் வியந்துகொள்கிறார்கள்.

ஹென்றி தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளும் விதமே பயங்கர சுவையாக இருக்கும்: "அவர் என்னெப் பெத்த அப்பா இல்லே – அண்ட் ஆல்ஸோ மை மதர் – எங்கம்மா கூட என்னைப் பெத்த அம்மா இல்லே…" இந்த அதிர்ச்சி முடியும் முன்பே அடுத்தது: "அன்ட்… தெ வெர் நாட் ஹஸ்பெண்ட் அண்ட் வய்ஃப்…" ("அவர்கள் இருவரும் கணவன் மனைவி அல்லர்..."). "நான் ஒரு foundling (அதாவது கண்டெடுக்கப்பட்ட குழந்தை). ரயில் காரேஜ்லே அனாதையாய்க் கெடந்தேனாம்.."

ஆங்கிலப் பயன்பாடு சற்று தூக்கலாகவே இருக்கிறது. இது ஜெயகாந்தன் கதைகள் அனைத்திலுமே இருப்பதுதான். இந்தக் கதையில் அதற்கான நியாயம், ஹென்றி பெங்களூர்க்காரன் என்பது. பெங்களூரில் இருபதாண்டு காலம் வாழ்ந்தவன் என்ற முறையில் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஹென்றி பேசும் பெங்களூர்த் தமிழுமே எனக்குப் பழக்கப்பட்டதுதான்.

ஹென்றியின் பப்பா சபாபதிப் பிள்ளை சுத்த சைவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவனுடைய மம்மா கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். பெயர் மட்டும் ஹென்றி என்று வைத்துக்கொண்டிருந்தாலும் அவனைச் சைவனாகவோ கிறிஸ்தவனாகவோ மாற்றவில்லை இருவரும். அதற்குக் காரணம் பப்பாதான்: "எனக்கு ‘பாப்டைஸ்’ பண்ணக் கூட அவர் சம்மதிக்கலே. ‘உன் மதம் எவ்வளவு உயர்வா இருந்தாலும் அதுக்காக இந்தக் குழந்தை தலையிலே அதைச் சுமத்த வேணாம்’னு சொல்லுவார். அவனுக்காகத் தோணிணா அப்புறமா கிறிஸ்தவனாகவோ, இந்துவாகவோ, முஸல்மானாவோ அவன் இஷ்டப்படி ஆகட்டும்… நாம்ப அவனை நல்ல மனுஷனா ஆக்குவோம் – அவன் வழிப்படி ஆக்குவோம்'" என்று சொல்லிவிட்டாராம். ஹென்றி ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மாவோடு சர்ச்சுக்கும் எப்போதாவது அப்பாவோடு கோவிலுக்கும் செல்லும் பிள்ளையாக வளர்ந்திருக்கிறான்.

ஹென்றி தன் பப்பா மீது தீராத காதல் கொண்டவன். எப்போதும் அவர் பற்றியே நினைக்கிறான்; பேசுகிறான். அதற்குக் காரணம் அவர் இவனை வளர்த்த விதம்.

"இங்கிலீஷ் பேசினால் அவருக்குப் புரியும். ஆனால் பேசத் தெரியாது. நானும் மம்மியும் அவரை எப்பவாவது இங்கிலீஷ் பேசவெச்சிச் சிரிப்போம்; நாங்க சிரிக்கறதுக்காகப் பேசுவார்! ஆனால் நாங்க பேசற தமிழுக்காக அவர் சிரிக்கவே மாட்டார். அவருக்கு இங்கிலீஷ் பேசத் தெரியாதே ஒழிய அவருக்கு அந்த வெள்ளைக்காரப் பண்புகள் நிறைய உண்டு. அவர் மற்றவர்கள் முன்னால் அழமாட்டார். ஏன்? மம்மியின் முன்னால்கூட அவர் அழமாட்டார்."

எப்போதும் குடித்துக்கொண்டே இருக்கும் பப்பாவுடனேயே இருக்கும் ஹென்றிக்குக் குடியில் ஆர்வமில்லை. வீட்டுக்கு வந்ததும் தேவராஜன் மது அருந்துகிறார். இவனையும் குடிப்பீர்களா என்கிறார். இவன் தனக்குக் குடிப்பதில் ஆர்வமில்லை என்றும் ஆனால் தேவராஜனுக்காகச் சிறிது குடிப்பதில் பிரச்சனை இல்லை என்றும் கூறுவான். அது தேவராஜனுக்கும் மகிழ்ச்சியளிக்கும். சொன்னது போலவே கடைசி வரை அரை டம்ளருக்கு மேல் குடிக்க மாட்டான்.

மம்மியின் கணவன் பெயர் மைக்கேல். அவர் பெங்களூர்க்காரர். அப்படித்தான் ஹென்றியும் பெங்களூர்க்காரன் ஆகிறான்.

மல்லாக்கொட்டை என்ற சொல் ஓரிடத்தில் வருகிறது. இது நிலக்கடலைக்கு வட மாவட்டங்கள் சிலவற்றில் பயன்படுத்தப்படும் சொல். அதனால் கிருஷ்ணராஜபுரம் வட தமிழகத்தில் உள்ள ஓர் ஊர்தான் என்று முடிவு செய்துகொள்ளலாம். அது மட்டுமில்லாமல், அவ்வூரில் பேசப்படும் மொழியும், கவுண்டர்-முதலியார்-நாயக்கர் என்கிற சாதிய அறிமுகங்களும் அப்படித்தான் இருக்கின்றன.

“மணிலாக் கொட்டைங்கறதுதான் மல்லாக்கொட்டைன்னு ‘கலோக்கிய’லா ஆயிடுச்சு. இது தென்னாப்பரிக்காவிலேருந்து இங்கே வந்திருக்கணும். மணிலாவிலேருந்து வந்ததனால் மணிலாக்கொட்டைன்னு பேரு" என்று வருகிறது. ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கும் மணிலாவுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.

அடுத்து தேவராஜன் தன் கதையைச் சொல்கிறான்: "இந்தக் குடும்பத்தையே ஏதோ சாபம் வந்து அழிச்ச மாதிரி செயலோட இருந்தவங்களையெல்லாம் பறிகுடுத்துட்டு வயசான அந்தக் கிழவரும், வயசு வராத வயசு விதவையுமா எங்க குடும்பம் நிர்க்கதியா நின்னிருக்கு…" 

"என்னைவிட உங்கக்கா முக்கியமாப் போச்சா?" என்று கேட்கும் மனைவிக்குப் பதில் சொல்லும் விதத்தில், "இருபத்தைஞ்சு வருஷத்துக்கப்புறம் என்னை இவ்வளவு பெரிய ஆண்பிள்ளையா மட்டும் பார்க்கறவங்களுக்கு எனக்குப் பின்னால இருக்கிற இந்த நியாய மெல்லாம் எப்படிப் புரியும்? நான் - இந்தச் சொத்து, எனக்கு மனைவியாயிட்ட உரிமை - இவ்வளவுதான் தெரியுது அதுக்கு – அதனாலே நியாயம் எனக்கும் தெரியாமல் போகலாமா?" என்பான்.

ஹென்றி மம்மியின் பெற்ற பிள்ளையாக இருந்தால் கூட பப்பா அவனை இவ்வளவு அன்போடு வளர்த்திருக்க மாட்டாரோ என்னவோ! இருவருக்கும் பிறக்காதவன் என்பதால் அவர் கூடுதல் பொறுப்பெடுத்திருக்கவும் கூடும் என்று தோன்றுகிறது. இவர்களுக்கு இடையிலான அன்பு மம்மியை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை என்பது பெரும் ஆறுதல். தன்னோடு இருக்கும் ஆடவன் தெருவில் எடுத்து வந்த பிள்ளையிடம் இவ்வளவு அன்போடு இருக்கிறானே என்று வெறுப்பாகவும் வாய்ப்பு இருக்கிறதே! 

"ஹென்றிக்குப் பப்பா சொல்கிற பல விஷயங்கள் ஏற்கெனவே அவளுக்குத் தெரிந்தவையென்றாலும், பல முறை பல சந்தர்ப்பங்களில் அவர் சொல்லக் கேட்டிருக்கிறாள் என்றாலும் இப்போது புதிதாக அவர் ஹென்றியிடம் சொல்வதை அவளும் புதிதாகவே ஒவ்வொரு முறையும் கேட்டாள். ஹென்றியுடன் சேர்ந்து கொண்டு – ஒப்புக்காக அல்ல – நிஜமாகவே சிரிப்பாள்; அழுவாள்."

“கடவுளே! எனக்குப் புதிதாக எதுவுமே வேண்டாம்; இருக்கிறதெல்லாம் இப்படியே நீடித்தால் போதும்…” என்று சொல்லிவிட்டுப் பப்பா சிரிப்பாராம். “இதைவிடப் பேராசை கிடையாது, தெரியுமா?" என்றும் சொல்வாராம். "அப்புறம் எதுக்கு அது வேணும், இது வேணும்னு கடவுளை வேண்டணும்? எதுவும் ஒரே மாதிரி எல்லாக் காலத்திலேயும் இருக்காது. முன்னெல்லாம் நீ, நான், உன் மம்மி மூணு பேரும் ஒரே கட்டிலில் படுத்துக்குவோம். இப்ப முடியுமா? உங்க மம்மிக்கே ஒரு கட்டில் போதாது. நானும் ரொம்ப ஊதிப் போயிட்டேன். மகனே, நீயும் வளர்ந்துட்டே... ஆனாலும் முன்னே மாதிரியேதான் நாம்ப மூணு பெரும் இப்பவும் ஒண்ணாவே படுத்துக்கறோம். இல்லையா, மகனே!... ஆனால் ஒரு வித்தியாசம். இப்ப ஆளுக்கொரு தனிக்கட்டில் போட்டு வரிசையா அதே மாதிரி நீ நடுவிலே படுத்துக்கறே. இருக்கிறது எதுவும் அப்படியே இருக்காது மகனே! வளரும், மாறும். நாம்ம மூணு பேரும் ஒண்ணாகவே இருக்கோம் - இதைத்தான் மகனே நான் கடவுள்கிட்ட வேண்டினேன். வேண்டறதுன்னா கேக்கறதில்லே மகனே; விரும்பறது-நீ சொல்றயே ‘ஐ விஷ்’னு…அதான்." இதைப் படிக்கும் போது நம் வீடுகளில் நாம் சிறுவனாக இருந்து வளர்ந்து உருவாகும் போது பெற்றவை, பிரிந்தவை, இழந்தவை பற்றிய நினைவுகள் வந்து செல்லும்.

"மைக்கேல் பெங்களுர்க்காரர். எனக்கு ஊர் தமிழ் நாட்டிலே ஒரு குக்கிராமம். மைக்கேலுக்குக் கொஞ்சம் தமிழ் தெரியும். அவ்வளவுதான் எங்களுக்குள் சொந்தம். அவர் சீட்டு விளையாடுவார். ஆனால் அதிகமாகக் குடிக்கமாட்டார். நான் குடிப்பேன், எப்பவும் குடிப்பேன். என்னை அதுக்காக அவர் கண்டிப்பார். புத்தி சொல்லுவார். நான் ரொம்பக் குடிச்சிடக்கூடாதுன்னு என் கூட வந்து அவரும் குடிப்பார். அவர் சீட்டு விளையாடும்போது என்னை வந்து பக்கத்திலே உக்காந்துக்கச் சொல்லுவார். அவருக்கு அப்பத்தான் அதிர்ஷ்டமாம். அவருக்கு அந்த மாதிரி நம்பிக்கையெல்லாம் அதிகம். கழுத்திலே சிலுவை போட்டிருப்பார். ஞாயிற்றுக்கிழமையிலே சர்ச்சுக்குப் போவார். ஒருநாள் என்னையும் கூப்பிட்டார். போனேன். அங்கேதான் நான் மம்மாவை முதல்லே பார்த்தேன். அவர் எப்போ முதல்லே பார்த்தாரோ எனக்குத் தெரியாது. மைக்கேல் உங்கம்மாவை அறிமுகம் செய்து வெச்சார்: ‘மீட் மிஸஸ் மைக்கேல்'னார்" என்று மம்மாவின் கணவன் - தன் நண்பன் பற்றி நினைவுகூர்கிறார் பப்பா. 

அதே மைக்கேல் உயிர் பிரியும் வேளையில், "‘தெரஸாவைப் பார்த்துக் கொள், அவளுக்கு உதவி செய். அவளும் விரும்பினா நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வாழறதுக்குக் கடவுள் ஆசீர்வதிப்பார்’னு எங்க ரெண்டு பேரையும் கையைச் சேர்த்து வெச்சார்" என்றும் சொல்கிறார்.

இது ஹென்றியின் கோணத்தில் பார்த்தால் பயங்கர இடியாப்பச் சிக்கல் உள்ள உறவு. மம்மாவைப் பெரிதாக நினைத்திருந்தால் பப்பாவைவிட அவனுக்கு மைக்கேல் பெரிதாக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால், அவர்தான் மம்மியின் முதல் இணை. ஆனால் இந்த மூன்று பேரோடுமே உயிரளவில் எந்த உறவும் இல்லாத ஹென்றிக்கு மம்மாவைவிடப் பப்பாதான் நெருக்கமான ஆள். அவரோடு வந்ததால்தான் மம்மாவுக்கே அந்த மரியாதை. ஒரு வேளை மைக்கேலோடு சேர்ந்து வாழும் போது கண்டெடுக்கப்பட்டிருந்தால் கதை வேறாகியிருக்கும். இந்தக் குழப்பங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க, இவை எதையுமே பொருட்படுத்தாமல் ஒரு மனிதன் நிறைவான மனிதனாக வாழ முடிவதைக் காட்டியிருப்பதுதான் இந்தக் கதையின் சிறப்பு. 

கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று எல்லாக் குற்றங்களுக்கும் நியாயப்படுத்த நம்மிடம் இருக்கும் காரணம் அவற்றைச் செய்தவர்களின் குடும்பப் பின்னணி, பிறப்பு, இளமைக் காலம் போன்றவையே. அப்படியானால் ஹென்றி சமூக விரோதி ஆகியிருக்க வேண்டுமே! ஏன் ஆகவில்லை? ஏனென்றால், நல்ல குடும்பப் பின்னணியில் நற்பிறப்பு பிறந்த குழந்தைகளுக்கே கிடைக்காத ஓர் இளமைக் காலமும் அன்பும் அவனுக்குக் கிடைத்தது.

தேவராஜனுடைய வீட்டுக்கு எதிரில் ஒரு பாழடைந்த வீடு பூட்டுப் போடப்பட்டு இருக்கிறது. ஆம், அந்த வீடுதான். அதைப் பார்த்த உடனேயே ஹென்றியின் மனம் பப்பாவிடம் செல்லும். அது பற்றியும் அடுத்து தேவராஜனிடம் ஹென்றி கேட்பான். அதைக் கேட்ட உடனேயே தேவராஜனுக்கு, 'இவன் தன்னுள் ஏதோ ஒரு பெரிய மர்மத்தை வைத்திருப்பவன்தான்' என்பது போலத் தோன்றும். பப்பா ஊரில் வாழ்ந்த காலத்தில் அவர் வாழ்ந்த இந்த வீட்டைப் பற்றிப் பேசும் போது கூட ஹென்றியிடம் "நம்ம வீடு" என்றுதான் சொல்வார். தன் மனைவி அதிகாலையில் எழுந்து பரியாரியோடு ஓடிய அந்தப் பொழுதில் அவர் எழுந்துவிடுகிறார். அதைத் தன் கண்ணால் பார்க்கிறார். "அந்த ரெண்டு பேரும் போறாங்க. தோட்டத்துக் கதவை இன்னும் தாண்டலே. ஒரு குரல் கொடுத்தா ஊர் திரண்டு வரும். ரெண்டு பேரையும் பிடிச்சு மரத்தோட மரம் கட்டி வைக்கலாம்."

இந்தச் சிந்தனையெல்லாம் அவன் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த வேளையில், தேவராஜன் அந்த வீட்டுக்கு முன்பு ஒரு பரியாரி தூக்கு மாட்டிச் செத்துப் போனான் என்பான். அப்படியானால் அவன் திரும்பி வந்துவிட்டான். அவன் மட்டும் திரும்பி வந்துவிட்டான் என்றால் அவனோடு ஓடிப்போன சபாபதிப் பிள்ளையின் மனைவி என்ன ஆனாள்? இது நம் கற்பனைக்கே விடப்படுகிறது. இறந்து போயிருக்கலாம், 'அவனை விட்டும்' ஓடிப் போயிருக்கலாம், அவர்களுக்குள் பிரச்சனை வந்திருக்கலாம்... என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். இதைக் கேள்விப்பட்டவுடன், ‘பப்பா… அந்தப் பரியாரி மறுபடியும் இங்கே வந்துட்டானாம், பப்பா' என்பான் ஹென்றி. இன்னும் பப்பாவுடன் தொடர்பில் இருந்துகொண்டே இருக்கிறான்! அதுதான் அழகு. அடுத்து, "பப்பாவுக்கு ஒரு ‘பாவம், பப்பா’ சொல்லிவிட வேண்டியது தான்" என்று ஒரு வரி!

பெங்களூர்க்காரனான ஹென்றிக்கு கவுண்டர் என்பது கவுடர் அல்லது கவுடா என்று புரிபடுகிறது. "அவர் கவுடரா!" என்று வியப்போடு கேட்பான். அதற்கு, தேவராஜன் சொல்வான்: "இவங்களுக்கு வேளாளக் கவுண்டர்னு பேரு. சில ஊரிலே பிள்ளை, சில இடத்திலே முதலியார் இன்னும் சில இடத்திலே செட்டியார்னுகூட இவங்களுக்குப் பட்டம் உண்டு…” 

இது நமக்குப் புதுத் தகவல். தென் தமிழகத்தில் பிள்ளையாக இருப்பவர்களை வட தமிழகத்தில் முதலியார் என்று சொல்வார்கள் என்று கேள்விப்பட்டதுண்டு. தென் தமிழகத்தில் முக்குலத்தோராக இருக்கும் அகமுடையார், வட தமிழகத்தில் முதலியார் என்பதையும் கேள்விப்பட்டதுண்டு. வேளாளக் கவுண்டருக்கும் செட்டியாருக்கும் கூட இந்தக் குழப்பத்துக்குள் இடம் உண்டு என்பது இப்போதுதான் கேள்விப்படுவது. ஆந்திர நாயுடு, கன்னட நாயக், தமிழக நாயக்கர் மாதிரித்தான் கேரள நாயர் என்று ஓரிடத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன். கர்நாடகத்தில் கூட தெலுங்கு ரெட்டிகள் தம்மைக் கவுடர்கள் போலத்தான் என்று சொல்லிக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். அது போல இருக்கிறது.

"நம்ம வீட்டுக்கு அடுத்த வீடு படையாச்சி வீடு. எல்லாம் நம்பகிட்டே வேலை செய்யறவங்க" என்று ஒரு வரி. "அந்தக் கடைசிலே இருக்கிறது அய்யர் வீடு. போஸ்ட் ஆபீசும் அதுதான். நம்ப பள்ளிக்கூடத்துக்கு அவங்க அப்பா, தாத்தா எல்லாம் வரிசையா வாத்தியாரா இருந்திருக்காங்க… அந்த ஐயிருதான் தபால் உத்தியோகத்துக்குப் போயிட்டாரு” என்று அந்தத் தெருவையே ஒரு சின்ன ‘சர்வே’ செய்து முடித்தான் தேவராஜன்."

நகர வீதிகளைப் போல முறையாகத் திட்டமிட்டுக் கட்டப்படும் தெருக்களைக் கொண்டவையல்ல கிராமங்கள்: "தத்தம் மனப்போக்கில் சுதந்திரமாகக் கட்டிக் கொள்ளப்பட்ட தங்களது இருப்பிடங்களுக்குச் செல்லும் வழியையே அவர்கள் தெருவென்று அழைத்து வந்திருந்தனர். எனவேதான் ஒரு வீடு மிகவும் உள்ளடங்கி, முன்புறத்தில் மாட்டுக் கொட்டகையும் வண்டிகள் நிறுத்தும் இடமுமாக இருக்கிறது. இன்னொன்று அதிகமாக முந்திக்கொண்டு வந்து அநாவசியமாக நடுத்தெருவில் நிற்கிறது. அப்புறம் இரண்டு வீடுகளுக்கிடையே ஒரு திடலில் ஒரே காடாய் மண்டிக் கிடக்கிறது. அப்புறம் ஆடாதொடைச் செடி அடர்ந்த வேலிக்குப் பின்னால் சிறிய நீர்க்குட்டை இருக்கிறது. அதை அடுத்து இன்னொரு வீடு. அந்த வீடு சின்னா பின்னமாய்ச் சிதைந்து கிடக்கிறது. இந்தப் பக்கம் - தேவராஜன் வீட்டுப் பக்கத்தில் நிரந்தரமாகவே அமைந்திருக்கிற இரண்டொரு குடிசைகள். அதன் பிறகு கொஞ்சம் வயல்வெளி. கடைசியில் அந்த ஐயர் வீடு." 

இடையில், "இப்போது கொஞ்ச காலமாக அவர் தன் பெயரோடு ‘அய்ய’ரைச் சேர்த்துக் கொள்வதில்லை", "ஆனால் இன்னமும் கூட ஹரிஜனங்களுக்கு என்று தனி கிளாஸ்கள் அதோ ஒரு மூலையில் மஞ்சள் பிடித்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன" என்பன போன்று சிறிது அங்கிருக்கும் சமூகக் கட்டமைப்பு பற்றியும் சில வரிகள். நாளைய தலைமுறைக்கு இது நாம் கடந்து வந்த பாதையைப் பற்றி ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும்.

"சின்ன வயதில் மம்மாவின் வீட்டில் பழங்கால குடும்பச் சொத்தான பியானோ ஒன்று இருந்ததாம். அதற்கு அப்புறம் ஒரு பியானோவை வைத்துக்கொள்வதற்கூட இடமில்லாத வீடும், அதையும் விற்றுச் சாப்பிட வேண்டிய வறுமையும் வந்து விட்டதையெல்லாம் அவள் தனது இளமைக் கால நினைவுகள் மாதிரி வருத்தமில்லாமல் சொல்லுவாள். மம்மாவும் பப்பாவும் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கியவுடன் இந்தப் பியானோவை ‘செகண்ட் ஹாண்டில்’ பப்பா வாங்கிப் பரிசாகத் தந்தாராம். அதனால் ஹென்றிக்கு நினைவு தெரிந்த நாளாய் அவர்கள் வீட்டில் பியானோ இருந்தது. மம்மா பியானோ வாசிக்கும்பொழுது பப்பா குடித்துக் கொண்டிருப்பார். ஹென்றி பப்பாவின் அருகில் உட்கார்ந்து கொண்டு மம்மாவையே பார்த்துக் கொண்டிருப்பான். அவள் கண்களை மூடிக்கொண்டு முகத்தில் ஒரு புன்னகையுடன் வாசிப்பாள். ஹென்றிக்கு அவள் பியானோ கற்றுத் தர எவ்வளவோ முயற்சி செய்தாள். இவனுக்கு அதெல்லாம் வரவில்லை. எப்போதாவது அதன் அருகே போய் நின்று ஏதாவது ஒரு கட்டையைத் தட்டி மகிழ்வான்."

தோட்டத்தில் போய்க் கிணற்றில் குளிக்கலாம் என்று சைக்கிளில் ஹென்றியை அழைத்துக்கொண்டு போகிறான் தேவராஜன். அந்தக் கிராமத்துக்குச் சற்றும் தொடர்பில்லாத பழக்கவழக்கங்களும் பேச்சும் உடைய மனிதனாக இருக்கிறான் ஹென்றி. வந்தது பெங்களூரில் இருந்துதான் என்றாலும் தற்போது வெளிநாட்டுக்காரர்கள் நம்மூரில் நடந்துகொள்வதை எப்படிப் பார்க்கிறோம், அப்படியான வேற்றாளாக இருக்கிறான் ஹென்றி அந்த ஊரில். போகிற வழியில் ஒரு கிழங்குக்காரியிடம் போய் வேடிக்கையாக ஏதோ பேசுகிறான். அவளுக்கு அவனைப் பிடித்துவிடுகிறது. ஓசியில் கடித்துக்கொள்ள ஒரு கிழங்கு கொடுக்கிறாள். தேவராஜன் வந்து அதற்குக் காசு கொடுக்கிறான். அவள் வாங்கிக்கொள்ள மறுக்கிறாள். அந்தப் பழக்கம் "கிழங்குக்காரிக்கு இவனோடு இன்னும் கொஞ்சம் பேச வேண்டும்போல் இருந்தது" என்பதில் முடிகிறது.

சிறு வயதில் ஊரில் மூக்குச்சளிப் பழம் என்றொரு பழம் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பழம் பற்றி ஒரு குறிப்பு வருகிறது: "அதன் ருசியே சிறுபிள்ளைத் தனமாயிருந்தது." ருசியில் கூட முதிர்ச்சி இருக்கிறதா என்று தோன்ற வைக்கிற வரி!

சைக்கிளில் போகும் போது இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டே போகிறார்கள்:
“எப்பவும் சந்தோஷமாக இருக்கணும்னா நாம்ப மனசாலே சின்னக் குழந்தையாயிருக்கணும்னு தெரியுது. சின்னப் பசங்களா இருந்தப்போ ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும் எவ்வளவு ஆச்சரியமா இருந்திச்சு? இப்ப உங்களோட நான் அப்படித்தான் இருக்கேன். நீங்க எப்பவுமே அப்படிதான் குழந்தை மாதிரி இருக்கீங்க போலிருக்கு" என்று சொல்லி, சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தவன், அப்படியே கழுத்தை மட்டும் திருப்பி ஒரு முறை ஹென்றியைப் பார்த்துச் சிரிப்பான். அப்போது ஹென்றி வேறெங்கோ பார்த்துக் கொண்டிருப்பான்.

“குழந்தைகள் மட்டும்தானா? இந்தப் பறவைகள், மிருகங்கள், வண்ணாத்திப் பூச்சிகள், தேனீக்கள், மலர்கள், செடி கொடி எல்லாமே சந்தோஷமாக மட்டும்தான் இருக்கின்றன” என்று ஆங்கிலத்தில் ஒரு கவிதையைச் சொல்வது போலக் கூறுவான் ஹென்றி. அதைக் கேட்கையில் தேவராஜனுக்கு ஒருவகைப் பரவசம் நேரும். இதற்கு முன்பு தினம் தினம் பார்த்துக் கடந்த பல காட்சிகளை ஹென்றி ரசித்து விவரித்த பின்பு அதற்குள் புதிய அர்த்தங்களைக் காண்பான் தேவராஜன். இப்படியெல்லாம் தனக்குத் தோன்றியதில்லையே என வியப்பான்.
 
அந்தக் கிராமத்தைச் சுற்றியிருக்கும் மலையையும் அதன் அழகையும் பார்த்து ரசிக்கும் ஹென்றிக்கு உடனே பப்பாவின் நினைவு வரும். அவனுக்கு மூன்று நாட்கள் முன்பு வரை அவர்தானே உலகமே! காதலர்கள் எந்த நேரமும் அழகாக எதைப் பார்த்தாலும் தன் காதலனையோ காதலியையோ நினைத்துக்கொள்வது போல், அவன் அவரை நினைத்துக்கொள்கிறான். 

மலையிலிருந்து வரும் எதிரொலிச் சத்தத்தைக் கேட்க விரும்பி மலையைப் பார்த்து இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு “பப்பா ஆ!” என்று கூவுவான். பதிலுக்கு மலை “பப்பா… பப்பா ஆ… ஆ!” என்று எதிரொலிக்கும். தேவராஜனுக்கு ஹென்றியின் அந்தக் குரல் வயிற்றைக் கலக்கி கண்களில் கண்ணீர் முட்டச் செய்துவிடும்.

இதெல்லாம் முடிந்து மறுநாள் கிராம முன்சீப் வீட்டுக்குப் போகிறார்கள். பூட்டிக் கிடக்கும் அந்த வீட்டுக்கு ஹென்றி உரிமை கோருகிறான். தன்னிடம் அதற்கான ஆவணங்களும் சாவியும் இருப்பதைத் தெரிவிக்கிறான். இப்போது துரைக்கண்ணுவையும் அழைத்துப் பேசுகிறார்கள். இதற்கு முன்பே துரைக்கண்ணுவின் பெயரை வைத்து ஹென்றி அவனை அடையாளம் கண்டுகொள்கிறான். ஏனென்றால் தன் தம்பி பற்றியும் பப்பா நிறையச் சொல்லியிருக்கிறார். தன் தம்பி தறுதலையாகத் திரிவது அவருக்கு வருத்தமே என்றாலும் ஒரு போதும் அவர் அவனுக்கு அறிவுரைகள் சொன்னதில்லை. ஏனென்றால் அவர் அறிவுரைகளில் நம்பிக்கை இல்லாதவர். அங்குள்ள தர்மகர்த்தா துரைக்கண்ணுவை விரட்டி விரட்டிச் சுற்றி வந்து அந்த வீட்டுக்கான உரிமையை அவன் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று மசிய வைக்கப் பார்க்கிறார். அத்தனையையும் மீறி அவன் தெளிவாக இருக்கிறான். தனக்கான சொத்தை அண்ணன் இருக்கும் போதே பிரித்துக் கொடுத்துவிட்டார். தான் அதையெல்லாம் அழித்துக் காலி செய்துவிட்டோம். இது அண்ணனின் சொத்து. எனவே அவர் விருப்பப்படிதான் அது உரிமை கொண்டாடப்பட வேண்டும். தர்மகர்த்தா இவ்வளவு நாட்களாக இவன் அவற்றைப் பராமரித்ததாலும் வந்திருப்பவன் சபாபதிப் பிள்ளையின் சொந்தப் பிள்ளை இல்லை என்பதாலும் அவனுக்கு அது போய்விடக் கூடாது என்று சொல்லி இவன் மனதைக் கெடுக்கப் பார்க்கிறார். 

ஹென்றியின் பிறப்பு பற்றிய பேச்சு நீளும் போது, துரைக்கண்ணு சொல்வான்: “எவன் எவனுக்குப் பொறந்தான்னு எவனுக்குங்க தெரியும்? மத்தவங்க சொல்றதை வெச்சுத்தானே எல்லாரும் நம்பறோம்.. அதுதான் எங்க அண்ணாரே எழுதிக் குடுத்து அனுப்பிச்சிருக்காரே – அதுக்கு மேலே என்னா ஆராய்ச்சி..? மேலே ஆக வேண்டியதைப் பார்ப்பீங்களா…?"

இந்தக் கதையில் நம்மை மீண்டும் மீண்டும் படுத்தி எடுப்பது மனிதர்களின் இந்த மேன்மைதான். எல்லோரிடத்திலும் அந்த மேன்மை திரும்பத் திரும்ப வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். ஜெயகாந்தன் வாழ்ந்த காலத்திலும் சரி, நாம் வாழும் இந்தக் காலத்திலும் சரி, ஹென்றி போன்ற ஒரு நல்லவன் சிக்கினால் அவனை ஏமாளியாக்கி - கோமாளியாக்கித் தெருவில் நிறுத்திவிடுகிற கூட்டமே நம்மைச் சுற்றிலும் இருப்பதாகத்தான் நாம் எல்லோரும் நினைக்கிறோம். உண்மை நிலவரம் அப்படி இருக்கையில் அல்லது அப்படித்தான் இருக்கிறது என்று பெரும்பாலானவர்கள் நம்புகையில் ஜெயகாந்தனுக்கு மட்டும் எங்கிருந்து இந்த எண்ணம் வந்தது! அவரைச் சுற்றி இப்படியான மனிதர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் அல்லது அவர் படித்த கதைகளில் இது போன்ற மேன்மைகளைக் கண்டு அவர் வியந்திருக்க வேண்டும். எதையும் வம்படியாக நேர்மறையாகப் பார்க்கிறேன் பேர்வழி என்று கேட்கவே நம்ப முடியாத மாதிரியான கதைகளைச் சொல்வதும் ஒரு வகைதான். ஆனால் அது சிறிது நேரத்திலேயே புளித்துவிடும். அந்தப் புளிப்பு இல்லாமல் ஒவ்வொரு மனிதனையும் உலாவவிட்டிருப்பதுதான் இந்தக் கதை காலம் கடந்து நிற்கப் போவதற்கான பெருங் காரணமாக இருக்கப் போவது.

பல தலைமுறைகள் கழித்து இந்தக் கதையைப் படிக்கும் அந்தக் காலத்து மனிதர்கள் தமிழ் மனங்களையும் வாழ்வையும் பற்றி எவ்வளவு பெரிதான எண்ணம் கொள்வார்கள்! இது வெறும் பொய்யோ பிரச்சாரமோ இல்லை. உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கிற ஒரு கதைதான்.

"அவனுக்குச் ‘சிவன் சொத்து’லே இருக்கிற நாட்டம் வேற எதிலேயும் இல்லீங்க… பீடியிலே வெச்சி சுத்திச் சுத்தி அதெ அடிச்சிக்கிட்டு டீ குடிச்சிக்கறான்." 

சிவன் சொத்துன்னா? கஞ்சா. யாரு? துரைக்கண்ணு. ஆசிரியருக்குக் கஞ்சாவில் அப்படி என்னதான் ஈடுபாடோ! அவருடைய கதைகள் பலவற்றில் வந்துவிடுகிறது!

காலையில் நடந்த பஞ்சாயத்து கலைந்து இடைவேளைக்குப் பின் மீண்டும் கூடும். திரும்ப வரும் போது ஐயர் வந்து ஓரிடத்தில் அமர்வார். அப்போதுதான் அவருக்கு நினைவுக்கு வரும்: "காலையில் அந்த இடத்தில்தான் கனகசபை முதலியார் உட்கார்ந்திருந்தார். ஐயருக்கு உட்கார்ந்த பிறகே அந்த நினைவு வந்தது. ஏதோ தான் செய்ததைத் தப்பிதம் மாதிரி உணர்ந்து, வெற்றிலைத் தட்டை எடுக்கிற சாக்கில் நகர்ந்து, காலையில் தான் உட்கார்ந்த இடத்திலேயே வந்து உட்கார்ந்து திண்ணைக்குக் கீழே காலைத் தொங்க விட்டுக்கொண்டார்."

அங்கு வாழ்ந்த மனிதர்கள் எப்படியானவர்கள், சிறிய சிறிய விஷயங்களில் கூட எப்படிப் பிறரைப் பற்றிச் சிந்திப்பவர்களாக - பிறர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுபவர்களாக இருந்தார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. எங்கள் ஊரும் எங்கள் ஊரைச் சுற்றியிருந்த பகுதியும் இது போன்ற ஏகப்பட்ட மென்மையான மனிதர்களைக் கொண்டிருந்தன. அங்கிருக்கும் போது அதிலும் பல குறைகளை உணர்ந்ததுண்டு. ஆனால் வெளியுலகுக்கு வந்த பின்பு மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அந்த வேறுபாடு நன்றாகப் புரிபட்டது. தைரியம், ஈகை, அறிவு என்று ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு பண்பு இருப்பது போல், நம் மண்ணின் தன்மை அந்த மென்மை என்று எண்ணிக்கொள்வேன். அப்படியான ஓர் ஊர்தான் கிருஷ்ணராஜபுரம். அப்படியான ஊர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதுதான் இந்தக் கதை. தலைப்பில் "ஒரு ஊர்" என்றும் சேர்த்து "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு ஊர் ஒரு உலகம்" என்று வைத்திருந்திருக்கலாம். மூன்று என்பது ஓர் இணையில்லா அழகு என்பதால், "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு ஊர்" என்று கூட வைத்திருந்திருக்கலாம். ஆனால் இது உலகத்துக்கான கதை என்பதால் உலகம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அப்படி வைத்திருக்கக் கூடும்.

"'ஓர் உலகம்'னு போடாமல் ஏன் 'ஒரு உலகம்'னு போட்டீர்கள்?" என்று கூட ஒரு பஞ்சாயத்தாம். நியாயமான பஞ்சாயத்துதான். உரிய விளக்கத்தோடு "வேண்டுமென்றுதான் போட்டேன்" என்கிறார் முன்னுரையிலேயே.

அவனைச் சுற்றியிருக்கும் மொத்த உலகமும் படு தீவிரமான சிந்தனைகளில் ஆழ்ந்திருக்கும் வேளையில், ஹென்றி ‘அம்பேல்’ ‘ஜஸ்பை’ என்ற வார்த்தைகளை மனசில் சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருப்பான். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. காத்திருங்கள். கதையின் பின்னால் வருகிறது.

"பாண்டு அவன் கூடவே எழுந்துபோய் அவன் கூடவே திரும்பி வந்து ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தான்" என்று ஒரு காட்சி. இதை ஒரு வரியாகப் படிக்காமல் ஒரு காட்சியாக நினைத்துப் பாருங்கள். பாண்டு பற்றி உங்களுக்கு ஒரு தெளிவான எண்ணம் கிடைக்கும். அவன் துரைக்கண்ணுவின் உதவியாளன். எந்த அளவுக்கு உதவியாளன் என்றால் இந்த அளவுக்கு. இது ஓர் இலட்சியவாதக் கதை என்பார்கள். அதுதான் பெரும்பாலான பாத்திரங்களில் வெளிப்படும். பாண்டுவும் அப்பாத்திரங்களில் ஒன்று.

இதுதான் கதையின் உச்சகட்ட நகைச்சுவையும் அதே வேளையில் மிக ஆழமான உரையாடலுமாக இருப்பது: “சபாபதிப்பிள்ளைக்கு மவனானப்பறம் மொட்டையா ஹென்றின்னு போட்டா எப்பிடிங்க…? ஹென்றிப் பிள்ளைன்னு போடுங்க.”

உடனே, "மிஸ்டர் ஹென்றிப் பிள்ளை” என்று ஒருமுறை சொல்லிப் பார்த்துக்கொள்வார் நடராஜ ஐயர். அடுத்து, தேவராஜன் பத்திர டிராஃப்டில் ஹென்றி என்று வருகிற இடங்களில் எல்லாம் ஹென்றிப் பிள்ளை என்று மாற்றுவான். இப்போது அது வேடிக்கையாக மட்டும் இல்லாமல் ஆவணமாகவும் ஆகிறது. இது ஹென்றியை சபாபதிக்கு மகன் என்று மட்டும் இல்லாமல், அந்த வீட்டின் உரிமையாளன் என்று மட்டும் இல்லாமல், அந்த மொத்தப் பரம்பரைக்கும் சொந்தக்காரன் ஆக்கிவிடுகிறது. அந்த ஊரில் ஒருவனாய் வாழ்வதற்கு உரிமையையும் அடையாளத்தையும் கொடுத்துவிடுகிறது.

நடராஜ ஐயர் அதுபற்றியே யோசித்துக் கொண்டிருப்பார்; தான், தன் பெயர்க்குப் பின்னால் ‘ஐயர்’ பட்டம் போட்டுக் கொள்வதைக் கைவிட வேண்டுமென்ற தீர்மானம் இல்லாமலேயே கொஞ்சம் கொஞ்சமாய்க் கைவிட்டு மொட்டையாக கே.எஸ். நடராஜன் என்று கையெழுத்திடுவதையும் ஆனால், ஊர் முழுக்கத் தன் பேரைக் கைவிட்டுப் ‘போஸ்ட்’ என்ற ஒரு வார்த்தையைச் சேர்த்துப் போஸ்ட் ஐயர் ஆக்கி விட்டதையும் அவர் யோசித்துக் கொண்டிருப்பார். “இந்தக் காலத்தில் ஜாதிப் பட்டத்தை எல்லாம் யார் மதிக்கிறா? பேருக்கு முன்னாடி ஒரு ‘மிஸ்டர்’ சேர்த்துண்டா மரியாதை. தமிழில் ஒரு ‘ஸ்ரீ’ இல்லேன்னா ஒரு திரு…” என்று எண்ணிக்கொள்வார். 

இதற்கிடையில் யாரோ ஏதோ சொல்வதற்கு, துரைக்கண்ணு சொல்வான்: “என் சம்சாரத்தை ‘ஏ கழுதை’னு கூப்பிட்டுத்தான் எனக்குப் பழக்கம். அதுக்காகப் பத்திரத்திலே எழுதலாங்களா?”

அது முடியும் போது, இது எதுவுமே புரியாத ஹென்றி, “தாங்க்யூ, மிஸ்டர் தேவராஜன் பிள்ளை” என்று கை குலுக்குவான். “நோ, நோ, ஐயாம் தேவராஜ நாயக்கர்” என்று தேவராஜன் அதைத் திருத்துவான். 

"தர்மகர்த்தா கண்களை மூடிக்கொண்டும், துரைக்கண்ணு ஒவ்வொரு வரிக்கும் தலையை அசைத்து அசைத்து ஆமோதித்தவாறும், போஸ்ட் ஐயர் தனது வலது பாதத்தின் ஆட்டத்தை நிறுத்தி, மார்மீது கைகளைக் கட்டிய வண்ணமாகவும், வேலுக்கிராமணி கண்களை விழித்துப் பார்த்து ஒரு காதையும் வலக்கரத்தால் மடக்கிக்கொண்டு உன்னிப்பாகவும், மணியக்காரர் பிரப்பம்பாயில் வெறும் விரலால் ஏதோ எழுத்தும் சித்திரமும் வரைந்துகொண்டும், ஒரு மூலையில் நின்றிருந்த பாண்டு அந்த வாசகங்களில் ஒன்றுமே புரியாமல் ஆனால் மிகுந்த மரியாதையோடும் - எல்லோருமே வெகு சிரத்தையுடன் தேவராஜன் படிப்பதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்." இந்தப் பத்தியில் எனக்கு மனக்கண்ணில் கிளர்ச்சியூட்டியது பாண்டுவின் முகபாவந்தான். உங்களுக்கு?

"ஹென்றிப் பிள்ளை மட்டும் தன் மனத்திற்குள் ‘அம்பேல் ஐஸ்பை… அம்பேல், ஐஸ்பை’ என்ற வார்த்தைகளை மனனம் பண்ணுகிற மாதிரி அலப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்." இப்போது ஆசிரியரே 'ஹென்றிப் பிள்ளை' என்று கூப்பிடத் தொடங்கிவிடுகிறார். முன்பே சொன்னேனே, அம்பேலையும் ஐஸ்பையையும் அப்படியே நினைவில் வைத்துக்கொளுங்கள். அது பற்றி ஒரு சுவையான விளக்கம் வரப்போகிறது.

"அவுரு எங்கெங்கேயோ வாழ்ந்திருக்கிறாரு… எங்கே வேணுன்னாலும் வாழறதுக்கு அவர் தயாரா இருந்திருக்காரு… டீரவ இந்த ஊருக்குத் திரும்பி வந்து வாழணும்னு மட்டும் அவர் நினைச்சதில்லே. யெட் ஹி லவ்ட் திஸ் லைஃப்.. இந்த ஊரையும் இந்த லைஃபையும் இங்கே உள்ள மனுஷாளுங்களையும், ஏன், மிஸ்டர் துரைக்கண்ணுவை…? அவர் இவரை எவ்வளவு பாசம் பண்ணினார்னு எனக்குத் தெரியும்… ஒருவேளை அவருக்கு அப்புறம் நான் இங்கே வந்து இருக்கணும்னு அவுரு ஆசைப்பட்டிருப்பாரோன்னு எனக்குத் தோணிச்சுது. அவுரு அப்பிடியெல்லாம் ஒண்ணும் சொல்லலே… அதுக்கோசரம்தான் நான் வந்திச்சுது. அவரொட மகனா இருக்கிறதுக்கு – தீஸ் ஆர் மை புரூப்ஸ்” என்று அந்தப் பத்திரங்களைச் சுட்டிக்காட்டுவான் ஹென்றி. "அந்த வீடே ஒரு ‘ஸிம்பல்’… எங்க பப்பாவுக்கும் எனக்கும் உள்ள ரிலேஷனுக்கு இந்த வீடு ஒண்ணு மட்டும் போதும்… அது கூட இல்லாட்டி இந்த ஊரே எனக்குப் போதும்."

"நிமிர்ந்து கண்களை மூடிக்கொண்டிருந்த தர்மகர்த்தா கண்களைத் திறந்தால் எங்கே மறைந்து நிற்கும் கண்ணீர் வெளிப்பட்டு விடுமோ என்று பயந்து மேல் துண்டால் முகத்தை மறைத்துத் துடைத்துக்கொண்ட பிறகு ஹென்றியைப் பார்த்தார்." இவர்தான் துரைக்கண்ணுவை மனம் மாற்ற முயன்றவர். எல்லோருக்குமே இவன் என்ன மாதிரியான ஆள் என்கிற பெரும் வியப்புதான். இதுக்கெல்லாம் பிறகு அந்தப் பத்திரமே வேண்டியதில்லை என்கிற மாதிரி வேறு பேசுவான். "எழுதிக்காம இருக்கறதுதான் ஒறவு" என்று ஒரு வரி வேறு. எழுத உட்காரும் போதுதானே உறவுகள் லோல் பட்டுப் போய்விடுகின்றன!

இத்தனைக்கும் பிறகு, துரைக்கண்ணுவுக்கு ஹென்றியைப் பார்க்கும்போது, அவனுடைய மூக்கைத் தவிர, அவன் அப்படியே தன் அண்ணனை உரித்து கொண்டு வந்திருப்பதாகத் தோன்றும். அதை அவன் வாய்விட்டுச் சொல்லும் போது, தேவராஜனும் ஹென்றியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்துகொள்வார்கள்.

அடுத்த சுவாரசியமாக, "என் பசங்களுக்கெல்லாம் அவங்க அண்ணனை இட்டுக்கினு போய்க் காட்ட வேண்டாமா?" என்று சொல்லிக்கொண்டு ஹென்றியிடம் திரும்பி, “அப்போ நம்ப வூட்டுக்குப் போலாமா?” என்று அழைப்பான் துரைக்கண்ணு. பின்னர் தேவராஜனிடம் அனுமதி கோருவது மாதிரி அவனைத் திரும்பிப் பார்ப்பான். என்னதான் நம் வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் அது அடுத்த வீட்டு ஆள் அறிமுகப்படுத்தி வைத்ததல்லவா!

அடுத்து இவ்வளவு நேரமாகத் தன் மண்டையைக் குடைந்துகொண்டிருக்கும் அம்பேலுக்கும் ஐஸ்பைக்கும் ஒரு விளக்கம் கொடுப்பான் ஹென்றி: “அம்பேல் என்பது (I am on bail) ஐ யாம் ஆன் பெய்ல் - வேகமாகச் சொல்லி பாருங்க ஐயம் ஆம்பேய்ல் அய்ம்பேல் - அம்பேல்." "‘ஐ ஸ்பை’ விளையாட்டும் இப்படித்தான் I Spy தான்…" பின்னால் ஓரிடத்தில் ‘கல்லா-மண்ணா’ விளையாட்டு பற்றி வரும்.

இப்போது தேவராஜனின் வாழ்க்கையில் நல்லது நடக்கத் தொடங்கும். “நீங்கள் ரொம்பவும் அதிசயமான மனிதர். நீங்கள் வந்த அன்றைக்கே சொன்னீர்கள், எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் என் குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவுமென்று…" என்று ஹென்றியிடம் சொல்லிவிட்டு அடுத்து கோபித்துக்கொண்டுப் பிறந்த வீட்டில் போய் உட்கார்ந்துகொண்டிருக்கும் மனைவியைப் பார்த்து அழைத்துவர விரும்பும் திட்டம் பற்றிச் சொல்வான். இதைக் கேட்டவுடன், "முதலில் அக்கம்மாளிடம் போய் இந்த மகிழ்ச்சிகரமான செய்தியைச் சொல்லுங்கள்” என்று அவனைப் பிடித்துத் தள்ளாத குறையாக அங்கிருந்து கிளப்புவான் ஹென்றி.

அக்கம்மாவும் தேவராஜனும் தெலுங்கிலேயே பேசிக்கொள்வார்கள். "அப்போது அவள் பேசியதில் ஹென்றிக்குப் புரிந்தது ‘வெங்கடாஜலபதி’ என்கிற ஒரு பெயர் மட்டும் தான்" என்பார் ஜெயகாந்தன். எங்கள் ஊரிலும் தெலுங்கு பேசும் மக்கள் நிறைய இருக்கிறார்கள். இப்படியான உரையாடல்களை பெப்பப்பேன்னு பார்த்துக்கொண்டிருந்த அனுபவம் நமக்கும் உண்டு.

இதெல்லாம் முடியும் போது, "என்னைப் பொறுத்தவரைக்கும் டுடே இஸ் எ க்ரேட் டே!" என்பான் ஹென்றி. வீட்டுப் பிரச்சனை முடிந்துவிட்டது. தேவராஜன் குடும்பப் பிரச்சனை கூட முடிந்துவிட்டது. இதெற்கெல்லாம் மேலாக, ஹென்றி ஹென்றிப் பிள்ளையாகி துரைக்கண்ணு குடும்பத்தில் ஒருவனாக ஆகிவிட்டான். படிக்கிற நமக்குமே அப்படித்தான் இருக்கும். 'அப்பப்பா, எவ்வளவு சாதித்து விட்டோம்!'

தேவராஜன் சொல்வான்: "நீங்க பெருந்தன்மையா இருந்ததுதான் இதுக்கெல்லாம் காரணம். சாதாரணமா ஒருத்தன் இந்த மாதிரி சொத்து மேலே சொந்தம் கொண்டாடிக்கிட்டு வரதுன்னா கோர்ட் மூலமாகத்தான் வருவான். அப்படி வந்தாலே மத்தவங்களுக்கு வரவன் மேலே ஒரு எதிர்ப்பும் வெறுப்பும் வந்துடும். நீங்க அப்படிச் செய்யாததுதான் உங்க பெருந்தன்மை."

"இங்கேயும் ஹரிஜன்ஸ் மத்தியில் ஜாதிப் பஞ்சாயத்துதான்" என்பான். அதாவது, அவர்களுக்கென்று தனிப் பஞ்சாயத்து. ஊர்ப் பஞ்சாயத்து மற்ற சாதியினருக்கு மட்டுமானது. இது போக, அவர்கள் காவல் துறைக்கோ நீதி மன்றத்துக்கோ போவதில்லை. ஊருமே அப்படித்தான். பின்னால் ஓரிடத்தில் 'சேரிகளில் வாழ்கிற பறைச்சனங்கள்' என்று வரும். இந்தக் கதையை இன்று எழுதினால் ஜெயகாந்தன் இப்படி எழுத மாட்டார் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியும். அதுதான் நாம் கடந்து வந்திருக்கும் பாதை. போக வேண்டிய தொலைவு இன்னும் நிறையவே இருக்கிறது என்றாலும்.

"ஆனால், நம்ப ஊரைப் பொருத்த வரைக்கும் இந்த ஊர்ப் பஞ்சாயத்தை மீறியோ எதிர்த்தோ இந்த ஊர்க்காரன் கோர்ட்டுக்குப் போறதில்லை. நீங்க இதெல்லாம் தெரியாமலேயே இந்த ஊர் வழக்கப்படி நடந்துக்கிட்டீங்க" என்பான். இதில் சிறப்பு என்னவென்றால், தேவராஜன் எப்போதுமே அதை "எங்க ஊர்" என்று சொல்வதில்லை, "நம்ப ஊர்"தான்.

ஹென்றிக்கு ஊரின் பஞ்சாயத்து வழக்கங்கள் பற்றிக் கேள்விப்படும் போது ஒரு வியப்பு: "“ஓ வாட் எ கல்ச்சர்! தப்புப் பண்ணினவனைக் கூட ஒரு நல்ல காரியம் செய்ய வைக்கிற தண்டனை ஒரு பெரிய நாகரிகம் இல்லியா!” என்பான். “ஆனால் எல்லா ஊரிலேயும் அப்படி நடக்கறதில்லை. சில ஊர்லே பஞ்சாயத்துக்காரங்களே அபராதத் தொகையைப் பங்கு போட்டுக்குவாங்க” என்று சிரிப்பான் தேவராஜன். கிருஷ்ணராஜபுரம் நிச்சயமாக எங்கள் ஊர் மாதிரியான ஊர்தான்.

இதெற்கெல்லாம் பிறகு இதுவரை தான் எவரிடமும் சொல்லாத தனக்கு மட்டுமே தெரிந்த சில விஷயங்களைச் சொல்லலாமா அல்லது அப்படியே விட்டுவிடலாமா என்று ஒரு குழப்பம் வரும்: 'உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமலிருப்பதே மிகவும் முக்கியம்’ என்று அப்படியே விட்டுவிடுவான். ஆகா! என்ன ஒரு சிந்தனை!

பஞ்சாயத்துக்குப் பின்பும் ஹென்றியின் மனதுக்குள் துரைக்கண்ணுவின் அந்தப் பேச்சு மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும்: “துரைக்கண்ணு பிள்ளை நல்லா கேட்டார் இல்லே? யார் யாருக்குப் பொறந்தான்னு யாருக்குத் தெரியும்? அதை பாலன்ஸ் பண்ணினாரே… ‘இன்னொருத்தர் சொல்றதை வச்சிதானே எல்லாம்’னு… எனக்குத்தான் அந்த இன்னொருத்தர் கூடக் கிடையாது” என்று சிரிப்பான் ஹென்றி.

துரைக்கண்ணு வீட்டில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு செல்லப் பெயர். ஒருத்தனை "டேய் கலப்பை" என்பான். நாலாவது பையனுக்குப் பெயர் சபாபதி. அதாவது, அண்ணனின் பெயர். ஹென்றியின் பப்பாவின் பெயர். கைக்குழந்தைக்குத் தன் அண்ணியின் பெயரை வைக்கப் போவதாகச் சொல்வான் துரைக்கண்ணு. ஹென்றிக்கு அவள் பெயர் தெரியாது. பப்பா அவள் பெயரைச் சொன்னதே இல்லை. இன்னும் துரைக்கண்ணுவுக்குத் தன் அண்ணி பரியாரியோடு ஓடிப் போனவள் என்று தெரியாது.

துரைக்கண்ணுவின் மனைவி ஹென்றியிடம் நடந்துகொள்ளும் விதம் இன்னும் சுவையாக இருக்கும். ஹென்றியை அவள் தனக்கு மகனாகப் பாவித்த போதிலும் வயது காரணமாக மரியாதை கருதி அவன் கண்ணில் அதிகம் படாமல் இருப்பாள்; கண்ணில் படுகின்றபோது பளிச்சென்று சிரித்துப் பேசுவாள்.

‘வெஜிடேரியன்’ உணவை ஒரு மதத்தின் பெயரால் ‘சைவம்’ என்று அழைக்கிற வழக்கம் இங்கு பரவராக இருப்பதை அறிந்து – அது ஏன் என்று தெரியாமல் - அவன் ஆச்சரியப்படுவான். இது பற்றி நானும் யோசித்ததுண்டு. அவர்கள் சைவம் மட்டுமே சாப்பிட்டதால் அந்த உணவு வகைக்கு அப்படி ஒரு பெயர் வந்ததா அல்லது சைவம் எனப்படும் உணவுப் பெயர் முதலில் வந்து சிவம் என்பது சைவம் என்றாகி இரண்டும் ஒரே கோட்டில் வந்து இணைந்ததா என்று. "அப்படியே ஒரு வாய் சாப்பிட்டுப் போங்க" எனும் போது, "இல்லை, நாங்க சைவம்!" என்று சொல்லித் தவிர்த்துத் தவிர்த்து அதுவே பின்னாளில், "வேண்டாம், விடுங்க, அவர் சைவம்!" என்று மாறிவிட்டதோ என்று தோன்றும்.

"துரைக்கண்ணு, வீட்டிற்கு வெளியே ‘அசைவ’ உணவுகள் சாப்பிடுவானாம்" என்ற வரியைப் படிக்கும் போது நமக்கும் பல துரைக்கண்ணுகள் பற்றிய நினைவு வரும். 

'இந்தச் சமூகத்தில் பிறந்து, இந்தச் சைவக் குடும்பத்தின் மரியாதைக்கும் வழிபாட்டுக்கும் உரியவரான பப்பா, எப்படி முழுக்க முழுக்க அந்த ஆங்கிலோ - இந்தியக் கலாசாரத்துக்கு ஆட்பட முடிந்தது?’ என்று அவன் நினைத்துப் பார்ப்பான்.

"உணவும் உடையும் பேதப்பட்டாலும் இந்தச் சக மக்களின் நல்ல குணங்கள் அனைத்திலும் பப்பாவுக்கு ஒற்றுமை இருந்ததை இவர்களோடு பழகிய இந்தச் சில நாட்களிலேயே அவனால் தன் மனத்துள் ஒத்திட்டு உணர முடிந்தது."

ஹென்றி பப்பாவைப் பற்றி நினைவுகூர்ந்து ஏதோதோ சொல்லிக்கொண்டிருப்பான். அப்போதும் துரைக்கண்ணு கேட்பான்: ‘இவர் நிஜமாகவே இறந்து போய்விட்டாரா? – பத்து நாளாச்சா?...’ துரைக்கண்ணுவும் தன் அண்ணன் பற்றி நிறைய நினைவுகூர்வான். துரைக்கண்ணு, பப்பாவைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் ஹென்றிக்கு சந்தோஷமாக இருக்கும்.

ஹென்றி பப்பாவும் மம்மாவும் இருக்கும் புகைப்படத்தைக் காட்டுவான். சிரித்துக்கொண்டே வந்து அந்தப் படத்தை வாங்கிப் பார்த்த நவநீதம் கண்கலங்கி அழுது முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு போவாள். அம்மா அழுததைப் பார்த்த பிள்ளைகளுக்கு முகம் மாறிப் போய்விடும். நாலு வயதான நடராஜன் மட்டும் சிரித்துக்கொண்டே, “அப்பா, அம்மா அழுவுது” என்பான்.

"நியாயமாகப் பார்த்தால் இந்தக் குடும்பமே இப்போது துக்கம் கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு வருஷத்திற்கு எந்த நல்ல காரியமும், பண்டிகை விசேஷங்களும் இந்த வீட்டில் கொண்டாடக்கூடாது. அவர் போன வாரம்தான் இறந்தார் என்ற செய்தியை அவன் சொன்னபோது வீட்டில் உள்ள எல்லோரும் தலை முழுகினார்கள்; வீட்டைக் கழுவி விட்டார்கள். அன்று மட்டும் துக்கம் அனுஷ்டித்தார்கள். கடைசியில் அன்று இரவு சாப்பிடப் போகுமுன் பப்பாவும், மம்மாவும் இருக்கிற அந்தப் படத்தை நடுக்கூடத்தில் வைத்து இரண்டு பக்கமும் குத்து விளக்குகள் ஏற்றி, பூ போட்டு அந்த வேளைச் சாப்பாட்டை நிவேதனம் பண்ணி, வீட்டில் உள்ள எல்லோரும் விழுந்து வணங்கினார்கள். கைக்குழந்தையைக் கூட நவநீதம் படத்தின் முன்னால் வந்து குப்புறப் படுக்க வைத்துத் தூக்கிக்கொண்டு போனாள்." 

இப்போது நவநீதத்தின் மேன்மையைப் பேசித்தானே ஆக வேண்டும்! அது சபாபதிப் பிள்ளையின் மேன்மை காரணமாக அவர் மீது அவளுக்கிருந்த மரியாதையாகவும் இருக்கலாம்.

வணங்குதலின் போது, ‘கல்லார்க்கும் கற்றவர்க்கும்’ என்கிற திருவருட்பா பாடல் பாடப்படும். ஹென்றி இதற்கு முன்னால் இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறான். பப்பா பாடுவார்.

"நம்பல்லாம் அவுங்க அப்பாரோட மனுஷாளு இல்லையா? நம்பளோட இருக்கிறதுக்காகத்தான் இங்கே வந்திருக்குது. அவுறு மேலே இருக்கிற ஆசையினாலே தானே… எனக்கு என்னமோ அண்ணாரு இல்லாத கொறையே இப்பத் தீந்த மாதிரி இருக்குது - இது வந்தப்பறம்…” என்பான் துரைக்கண்ணு.

சொந்த ஊரான கிருஷ்ணராஜபுரத்தை விட்டுவிட்டுப் பக்கத்து ஊரில் வந்து வாழ்வான். அவனோடுதான் அவனுடைய மாமியாரும் இருப்பார். “இந்தக் கெழவி ஏதாவது வெஷமம் பண்ணி வெக்கப் போவுது! யாராவது வந்தா மனசு தாங்காதே” என்று மாமியாரைப் பற்றி எச்சரிப்பான் தன் மனைவியிடம். இது மருமகன் மாமியார் பற்றி வைத்திருக்கும் எண்ணம். இது போன்ற பெரிசுகளை இப்போதும் பல வீடுகளில் பார்க்கத்தானே செய்கிறோம்! பிள்ளைகள் - பேரப் பிள்ளைகளின் சொத்தில் ஒரு சொட்டுக் காப்பி கூட எவருக்கும் கொடுத்துவிடக் கூடாது. மருமகனுக்கு மாமியார் மீது இருக்கும் மரியாதை போலவே மாமியாருக்கும் மருமகன் மீது இருக்கும் மரியாதையும் சிறிது நேரத்திலேயே வெளிப்படும். துரைக்கண்ணு வருகைக்காகக் குதிக்கும் அவன் பிள்ளைகளிடம், “ஆமாம் - உங்கப்பா ஆனை மேலே வரான்” என்று அவர் சலித்துக் கொள்வார். இதுதான் அவர்களின் பரஸ்பர மரியாதை! 

எல்லோரும் சபாபதிப் பிள்ளை படத்தை வணங்கியபோது தானும் விழுந்து வணங்கி நெற்றியில் விபூதி வாங்கி வைத்துக்கொண்ட ஹென்றியை நினைத்துக் கொண்டு, “இது நம்ப மதந்தான். கழுதை… நீ கவனிக்கலியா சாயங்காலம் - நெத்தியிலே துண்ணூறு வெச்சிக்கிச்சே” என்பான் துரைக்கண்ணு. ஹென்றி எனும் பெயரை வைத்துக்கொண்டிருக்கிற ஒருவன் எந்தத் தயக்கமும் இல்லாமல் இதெல்லாம் செய்வது நமக்கு வியப்பாக இருக்கும். அவர்களுக்கு அதுவே பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். எந்த இடத்திலும் எவரும் இவனுக்கு ஹென்றி என்று பெயர் இருக்கிறதே என்று வருந்தியதாகவே வராது. வாசிப்பவர்கள் சிலருக்கு வேண்டுமானால் வந்திருக்கலாம். "எனக்கு மதம் இல்லே” என்று அவனே ஒரு முறை சொல்லுவான். 'என்னடா இவன், ஹென்றின்னு பேர் வச்சிக்கினு துண்ணூறு வச்சிக்கச் சொன்னா அதையும் வச்சிக்கிறான், என்னன்னு கேட்டா மதம் இல்லன்றான்' என்று எல்லோரும் குழம்பிக்கொண்டிருக்கும் போது, அவன் வேறு விதமான குழப்பத்தில் இருப்பான்: "அதுக்கென்னா? சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்?” என்று கேட்பான்.

“நான் ஒரு ஹிந்து. என் மூதாதையர்கள் எல்லாம் சைவ மதத்தை நம்பி என்னென்ன மாதிரி வாழ்ந்து எப்படி சிவலோகப்பதவி அடைந்தார்களோ, அப்படியே போக விரும்பறவன் நான். நான் இறந்து போனால் ஹிந்து வைதிக முறைப்படி என்னைத் தகனம் செய்ய வேண்டியது. என் பேராலே ஒருபிடி சாம்பல்கூட இருக்கக்கூடாது. ‘நான்’ என்கிறது இந்த சபாபதிப் பிள்ளையோ இந்த உடம்போ இல்லை. அதனாலே இந்த சபாபதிப் பிள்ளைக்கு அல்லது எனக்குச் சொந்தம்னு இருக்கிற அப்படி யாராவது இருந்தால், அவுங்க அந்தச் சொந்தத்தை அவுங்க கையாலேயே அழிக்கறதுக்கு அடையாளமாக அவுங்க கையாலேயே கொள்ளி வைக்க வேண்டியது. இது ஒரு கட்டாயமோ என் இஷ்டமோ கூட இல்லை. இது ஒரு வழக்கம், இதைச் செய்ய வேண்டியவன் என் ஸ்வீகார புத்திரனான ஹென்றிதான்." - இதுதான் பப்பாவின் விருப்பம்.

அவருடைய உயிலில் இப்படி எழுதியிருப்பார்: "என்னோட வளர்ப்பு மகன் ஹென்றியை நான் என் மதத்துக்கும் என் நம்பிக்கைக்கும் பலவந்தமாகக் கொண்டு வர இஷ்டப்படலே. அவனுடைய வளர்ப்புத்தாய் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களா இருக்கிறதனாலே அவன் ஒரு வேளை கிறிஸ்தவ மார்க்கத்துக்குப் போனாலும் போகலாம். அப்படி நிலைமை ஏற்படுகிற பட்சத்தில் எனக்குச் செய்ய வேண்டிய ஈமக்கடன்களை ஹிந்துக்களின் சடங்குகளில் நம்பிக்கையுள்ள யாரேனும் ஒரு பரதேசியைக் கொண்டு செய்து இந்தக் கர்ம காரியத்துக்காக அவருக்கு ஆயிரம் ரூபாய் தரவேண்டியது.”

அதற்கு, “இதுக்கெல்லாம் ஒண்ணும் முக்கிய அந்தஸ்து கிடையாதுன்னு நான் அறிவேன். எங்கேயோ பர்மா யுத்த முனையிலே நான் செத்துப் போயிருந்தால் இதற்கெல்லாம் அர்த்தம் இல்லை. கடவுள் எனக்கு வாழ நல்ல சந்தர்ப்பமும் வசதியும் கொடுத்திருக்கிறதாலே இதையெல்லாம் எழுதி வெச்சிக்கிறேன். அதன் பிறகு எல்லாம் அந்தக் கடவுளின் சித்தம்னு அந்த உயிலைத் தனியாக எழுதினாரு பப்பா" என்று நினைவுகூர்ந்து சொல்வான் ஹென்றி.

கிருஷ்ணராஜபுரத்தில் வீட்டு வேலைகள் முடியும் வரை ஹென்றி தன் வீட்டிலேயே தங்கிக்கொள்ள வேண்டும் என்று விரும்புவான் துரைக்கண்ணு. தன் அண்ணன் இங்கே நிரந்தரமாக வராமலிருந்ததற்குக் காரணம் என்னவென்று அவனுக்குத் தெரியாது. "‘இவ்வளவு ஆசையை மனசிலே வச்சிக்கிட்டு இருக்கீங்களே. போயி உங்க தம்பியைப் பாருங்க’ன்னு சொல்ல உனக்கு ஏன் தொரை தோணலே?” என்று ஹென்றியிடம் கேட்பான். இதைப் பேசும் போது இருவரும் இருளில் உட்கார்ந்து இருப்பர். ஹென்றியின் குரல், தன் அண்ணனின் குரல் போலவே துரைக்கண்ணுவிற்குக் கேட்கும். "அவரைப் போல் இருக்கிறான்", "இவரைப் போல் இருக்கிறாள்" என்பதெல்லாம் மனிதர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ளப் பேசும் பேத்தல்கள் என்றும் இதைப் புரிந்துகொள்ளலாம். பப்பாவோடே இருந்து பழகியதில் ஹென்றி அவரைப் போல மாறியிருக்கிறான் என்றும் எடுத்துக்கொள்ளலாம். எந்த உருவில் தன் அண்ணனைப் பார்க்கப் போகிறோமோ என்று ஏங்கிக் கிடந்த தம்பிக்கு அவர் பெயரைச் சொல்லிக்கொண்டு வந்து நிற்கும் எதைப் பார்த்தாலும் அண்ணனைப் பார்த்தது போலத்தான் இருக்கும் என்றும் சொல்லலாம்.

துரைக்கண்ணுவின் மாமியார் இந்தப் புது விருந்தாளியைச் சந்தித்துவிட வேண்டும் என்று சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கிடப்பாள். சந்தித்ததும் அவளும் பப்பா பற்றிப் பெருமையாகவே பேசுவாள்: "அவருகொணம் வருமா?... இதோ இருக்குதே… என் மருமவப் புள்ளை… ஒரு கொரங்கு! ஆமா, கொரங்கு கொணம்." இது சபாபதிப் பிள்ளை மீதான மரியாதை பாதி தன் மருமகன் மீதான மரியாதையின்மை பாதியால் சொல்வது. ஹென்றியும் அந்தப் பாட்டியிடம் நன்றாக நடந்துகொள்வான். அதற்கும் தன் மருமகனைத் திட்டி இவனைப் பார்த்து மகிழ்ந்துகொள்ளும் அந்தக் கிழவி!

கதையின் முக்கியக் காட்சிகளில் ஒன்று, வீட்டின் கதவைத் திறப்பது. அது கற்பனை செய்து பார்க்கவே புல்லரிக்கும்: "செல்லரித்துப்போன அந்தக் கதவுகளை ஹென்றி விரியத் திறந்தபோது தெருப்பிள்ளைகள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். தேவராஜனும் கைதட்டினான்."

முன்பே சொன்னது போல, ஜெயகாந்தன் கதைகளில் கஞ்சா வருவது பெரிய அதிர்ச்சிக்குரிய சேதி ஒன்றுமில்லை. துரைக்கண்ணு அடிக்கடி கஞ்சா குடிப்பதாக வரும். அதில் அவன் கூட்டாளி டீக்கடை தேசிகர். அவர் வெளியூரிலிருந்து வந்து கடை போட்டுக் குடியேறியவர். கால் ஊனமுற்றவர். வீட்டு வேலை நடக்கும் போது நடக்கும் கஞ்சாக் குடியில் அவர்களோடு தேவராஜனும் சேர்ந்து கொள்வான். ஆனால் ஹென்றி கஞ்சா குடிக்க மாட்டான்.

ஒரு புறம், கஞ்சா குடிப்பதே இனிதாக நடந்தேறிக்கொண்டிருக்கும். இன்னொரு புறம், சாராயம் குடித்ததற்காக மணியக்காரரைப் போலீஸ் பிடித்துச் சென்று அடித்து அவமானப்படுத்தி அனுப்பிவிடுவார்கள். யாருக்கும் தொல்லை இல்லாமல் அவர் பாட்டுக்கு அமைதியாகக் குடித்துவிட்டு ஊரில் பெரிய மனிதர் என்ற மரியாதையோடு வாழ்ந்துகொண்டிருப்பார். புதிதாக வந்த போலீஸ்க்காரன் ஒருவன் தராதரம் தெரியாமல் அவர் மேல் கை வைத்துவிடுவான். அது பற்றிக் கேள்விப்பட்டதுமே அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும் நமக்கு. இப்படியான அவமானத்துக்குள்ளாகும் பெரிய மனிதர்கள் எல்லோரும் என்ன செய்வார்கள் என்றுதான் தெரியுமே நமக்கு. உடைந்து உருக்குலைந்து வீட்டுக்கு வந்தால் அவருடைய பேய் மனைவி அவரைக் கேடு கெட்ட கேள்வியெல்லாம் கேட்டு அவள் பங்குக்கு மேலும் சித்திரவதை செய்வாள். அப்படியே போய் மாட்டிக்கொள்வார். அப்படி இருந்த தமிழ் நாடுதான் இப்போது இப்படி ஆகி இருக்கிறது.

இப்போது கதையின் முடிவை நெருங்கப் போகிறோம். முதன் முதலில் ஹென்றி துரைக்கண்ணுவின் லாரியில் ஊருக்கு வந்த போது ஒரு ஆடையில்லாத பைத்தியக்காரப் பெண்ணைப் பார்த்தானே நினைவிருக்கிறதா? அவள் இப்போது ஊருக்குள் வந்துவிடுவாள். வீட்டு வேலை நடந்துகொண்டிருக்கும் இடத்துக்கு அருகில் ஓரிடத்தில் வந்து நின்றுகொண்டிருப்பாள். யார் சொல்லுக்கும் கட்டுப்படாதவள் போல இருப்பவள் - புரிந்துகொள்ளாதது போல நடந்துகொள்பவள், ஹென்றி சொல்வதற்கெல்லாம் கட்டுப்படுவாள். “பேபி… ஹேய்… பேபி” என்பான். அதுவே அவள் பெயராகிவிடும். ஹென்றி சிரிப்பது, அவனது வழக்கத்துக்கு மாறானதாக இருக்கும். அவன் சிரிப்பது பேபி சிரிப்பது போலவே இருக்கும்... அவனுக்குள்ளே இருந்து அவளே சிரிப்பது போலவும் இருக்கும்.

மண்ணாங்கட்டி பேபியைப் 'பைத்தியக்காரிச்சி' என்பான். அதற்கு, “பைத்தியக்காரிச்சினு சொல்லாதேடா, பாவம்!” என்பார் அக்கம்மாள். பேபியை ஒரு வேலைக்காரப் பெண்ணைக் கூட்டி வந்து நன்றாகக் குளிக்க வைத்துச் சுத்தம் செய்து அவளுக்கு ஏற்ற மாதிரி நல்ல உடையும் உடுத்த வைத்துத் தயார் செய்துவிடுவார். வீட்டு வேலை சிறப்பாக நடைபெறும். பேபியும் அந்த இடத்தில் ஒரு தேவதை போல வலம் வருவாள். அவள் வீட்டு வேலையே நடப்பது போல வேலைகள் செய்வாள்.

தேவராஜன் மனைவியைப் பிரிந்து வாழ்வது போலவே, மணியக்காரர் மகள் கிளியாம்பாள் அவளுடைய கணவன் வீட்டிலிருந்து பிரிந்துவந்து வாழ்ந்துகொண்டிருப்பாள். அவளுக்கு தேவராஜனிடம் ஓர் ஈர்ப்பு இருக்கும். மிக மென்மையானதும் நாகரீகமானதும். அக்கம்மாளும் கணவன் இல்லாமல் பிறந்த வீட்டில் இருப்பாள். ஆனால் யார் வீட்டுக்கும் போக மாட்டாள். அவளைப் பார்க்க வருகிற ஒரே ஆள் கிளியாம்பாள் மட்டுமே. தேவராஜன் பள்ளிக்குச் சென்றதும் வருவாள். தேவராஜன் வரும் நேரம் கிளம்பிப் போய்விடுவாள். அவள் அக்கம்மாளிடம் கேட்பாள்: "உன் தம்பி பொண்டாட்டி சேதி என்னா? 'வரேன் வரலே'ன்னு தபால் வந்திச்சா?" அப்படியே பேச்சின் போது, "அது எப்படி அக்கம்மா... அவுங்க கோவிச்சிக்கினு போனவங்க போன மாதிரி அவங்களே வரதுதானே நாயம்?..." என்பாள். அதற்கு அக்கம்மா, “அடியே ஆம்படையான், பொண்டாட்டிக்குள்ளே நாயம் என்னா? அநியாயம் என்னா?" என்பார்.

தேவராஜனின் பள்ளிக்கூடத்தில் இடைவேளை மணியடிக்கிறபோதெல்லாம் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் கும்பல் கும்பலாய் தேவராஜன் வீட்டுக்குத் தண்ணீர் குடிக்க வருவார்கள். எங்கள் வீடு பள்ளிக்கு அருகில் இருந்தது. எங்கள் வீட்டுக்கும் இது போல நிறையப் பிள்ளைகள் தண்ணீர் குடிக்க வருவார்கள். அதனால் இந்தக் காட்சி எனக்கு மிகவும் பழக்கப்பட்டதாகவும் கற்பனை செய்து பார்க்க எளிதாகவும் இருந்தது.

"நகரத்தைவிட மின்சாரம், ரோடு, டிரான்ஸ்போர்ட் எல்லாம் கிராமத்துக்குத்தாங்க ரொம்ப முக்கியம். பயிர்த்தொழில் முழுக்கவும நவீனமாகணும்… மில் தொழிலாளிங்க மாதிரி இவங்களுக்கு டிரஸ், எட்டு மணிநேர வேலை, குடியிருப்புக் காலனி, ஹாஸ்பிடல் வசதி, பென்ஷன், பிராவிடண்ட் பண்ட எல்லாம் குடுக்கணும்.. ‘கிராமத்து எளிமை’ அது இதுன்னு பேசி நகரமும் அங்கேயிருக்கிற ஆடம்பரமும் கிராமத்தை கொள்ளையடிக்குது" என்பான் ஹென்றி. அதெல்லாம் ஹென்றி போன்று நிறையப் பேர் நகரத்திலிருந்து கிராமம் வரும் போதுதான் சாத்தியமாகும். இல்லையா?

தேவராஜனும் ஹென்றியும் வீட்டுள் புகுவதற்கு நாள் குறிப்பதற்காகப் போஸ்ட் அய்யர் வீட்டுக்குப் போவார்கள். அப்போது அவர் செம்பில் தண்ணீரும் வெற்றிலைத் தட்டும் கொண்டு வந்து திண்ணையின்மீது வைப்பார். பஞ்சாயத்து கூடிய போது மணியக்காரர் வீட்டிலும் அதுதான் நடக்கும். இது அப்போதைய பழக்கம் போல. வீட்டுக்கு யார் வந்தாலும் தண்ணீரும் வெற்றிலையும் கொடுப்பது. வெற்றிலை ஒழிந்து போய்விட்டது.

வீடு புகுவதற்கு எல்லாம் கூடி வரும். தேவராஜன் மனைவியும் வீடு திரும்பிவிடுவாள். “நான் சொன்னேனே மிஸ்டர் ஹென்றிப் பிள்ளை மை ஃபிரண்ட், ஃபிலாசபர், அண்ட் கய்டு” என்று ஹென்றியை அறிமுகப்படுத்துவான். பேபியை வைத்துக் குத்துவிளக்கேற்றி வீடு புகலாம் என்று திட்டம் போட்டிருப்பான் ஹென்றி. எல்லோரும் கூடியிருப்பார்கள். எல்லாம் தயாரானதும் பேபியை அழைப்பான். அவள் அங்கிருக்க மாட்டாள். பின் பக்கம் சென்று பார்த்தால், அவள் உடுத்தியிருந்த அழகான சேலை அங்கே கிடக்கும். அதற்கு முன்பு கட்டியிருந்த பழைய துணியைக் கட்டிக்கொண்டு வெகு தொலைவில் போய்க்கொண்டிருப்பாள். அத்தோடு கதை முடியும். இதுவரை வெகு இயல்பாக ஓடிக்கொண்டிருந்த கதை இந்த இடத்தில் வேறொரு தளத்துக்குச் செல்லும்.

இது போக, கதையில் பல்வேறு இடங்களில் பிடித்திருந்த வரிகள்:
"அவன் முகம் கோபமாக இருந்தாலும், அவனுள்ளே எப்போதும் ஆனந்தமாகத்தான் இருக்கிறான். இரண்டுக்குமே காரணம் இல்லை."

"இப்போது சின்னான் ஓடிவந்த அவசரத்தில் எச்சில் துப்பி மண்ணைத் தள்ளாமல் வந்துவிட, பக்கத்தில் இருந்த ஒருவன் காலால் அதன் மீது மண்ணைத் தள்ளினான்."

ஓரிடத்தில் "நன்றி" சொல்வதற்குப் பதிலாக "நோ மென்ஷன்" என்று வரும். இது சென்ற தலைமுறை ஆங்கிலம். "வெல்கம்" வருவதற்கு முன்பு ஊரில் "நோ மென்ஷன்"தான் நீண்ட காலம் ஓடிக்கொண்டிருந்தது.

"அவர்களின் முன்னே ஒரு கிராமத்து நாய் ‘பைலட்’ மாதிரி ஓடி ஓடி நின்று திரும்பித் திரும்பி இவனைப் பார்த்துக் குரைத்தது."

"என்னைத் தவிர எல்லாவற்றின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.”

"மனுஷனைப் பத்தியோ, கடவுளைப் பத்தியோ முன் கூட்டியே தீர்மானம் ஒண்ணுமில்லாமல் - திறந்த மனசோட பார்த்தா எல்லா மனுஷன்லேயும் கடவுளைப் பார்க்கலாம்"

"வாழ்க்கையிலே துன்பப்படுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். துன்பப்படுத்துகிறவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்கிறவர்கள்தான் ரொம்பக் குறைவு. அந்தக குறைவானவர்களில் நீங்கள் ஒருவர்…"

"பாக்காத ஒறவும், கேக்காத கடனும் பாழாப் பூடும்னு சொல்லுவாங்க."

"எது ஒண்ணுமே அப்படித்தான் மகனே… சொல்ல வேண்டிய நேரத்திலே சொல்லிடணும்; புரியும்போது புரியும்."

"கோபம் வந்தவங்களெல்லாம் ஆசை உள்ளவங்களைக் கஷ்டப்படுத்துவாங்க."

"உயிர் பொழைச்சால் போதும்னு மனுஷங்க ஓடறப்போ அவன் எவ்வளவு நல்லவனா, அடக்கமானவனா, நெறைஞ்ச அன்பு உள்ளவனா இருக்கான் தெரியுமா…?"

"‘எல்லாவற்றுக்கும் முட்டுக் கொடுப்பது; எதிலும் ஒரு பழம்பெருமை பார்ப்பது; எல்லாவற்றையுமே எங்கள் சிறப்பு என்று கொண்டாடிக் கொள்வது’ என்ற ஒரு நினைப்பும், அதைத் தொடர்ந்து ‘ரிவைவலிஸம்’ என்கிற ஒரு வார்த்தையும் அவன் நினைவுக்கு வந்தன." இப்போது இந்தக் கட்டம் திரும்பத் தொடங்கியிருக்கிறது.

"ஒண்ணு நியாயமாகவும் இன்னொண்ணு அநியாயமாகவும் இருந்தாக்க தீர்ப்பு சொல்றது நமக்குச் சுளுவு. ரெண்டு நியாயத்துக்கு நடுவிலே போய்த் தீர்ப்பு சொல்லவே கூடாது."

‘சாவுன்னா என்னான்னு தெரியாமல் அதுக்கு நாம்ப என்னாத்துக்கு வருத்தப் படறது’

“ஒரு அனுபவம் இன்னொரு அனுபவத்திற்குத் தடையாகிப் போகும்.”

"மனுஷாள் தராதரம் தெரியலேன்னா என்னாடா, உங்க சட்டம்!"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி